Monday, July 26, 2010

ஓர வஞ்சனை

"ஏண்டா, கோபி, என்னடா குழந்தையை கவனிக்கிறீங்க? அவன் என்ன படிக்கிறான்னு, அவனோட பள்ளிக்குப் போய் விசாரிக்கிறீங்களா, இல்லையா? கான்வென்ட்டுல படிக்கிறான்னு பேரு. நாலு வார்த்தை சேர்ந்தா மாதிரி இங்கிலீசுல பேசத் தெரியல. இப்படியே போனா பின்னால மேற்படிப்பு, இண்டர்வியூன்னு வரும் போது ரொம்ப சிரமப் படுவான்"

" சரிப்பா, இனிமேல் சரியா கவனிச்சுக்கிறேன்".

அடுத்த வாரம் கோபியின் தங்கை அமெரிக்காவிலிருந்து தன் 2 வயது குழந்தையுடன் முதன் முறையாக வந்ததால் வீடே விழாக் கோலமாக இருந்தது.

"ப்ரீதி, தாத்தாவுக்கு வணக்கம் சொல்லும்மா".

குழந்தையும் அழகான மழலையில் வணக்கம் சொல்ல, தாத்தா குழந்தையை எடுத்து, அணைத்து , முத்தமிட்டு,

"அட, குழந்தை, எவ்வளவு அழகாத் தமிழ் பேசறா. ரொம்ப சந்தோசம்மா. எங்கே தமிழே தேரியாம வளர்ந்துடுவாளோன்னு பயந்துட்டிருந்தேன்.," என்று பாராட்டியதைப் பார்த்த மருமகளுக்கு ஆத்திரம் தாங்கவில்லை.

உடனே வெடுக்கென்று முகத்தைத் திருப்பிக் கொண்டு ,கணவனிடம் சென்று, "உங்கப்பாவிற்கு இந்த ஓரவஞ்சனை ஆகாது. நம்ம பையனை மட்டும் தமிழ்லயே பேசறான்னு எப்படி திட்டினார். தான் மகள் வயத்து பேத்தி மட்டும் வணக்கம் சொன்னதற்கே அவ்வளவு சந்தோசப் படறாரு."

மருமகள் முனகுவதைப் பார்த்த மாமனார்,

"ஏம்மா, திரும்பிய பக்கமெல்லாம் ஆங்கில மொழியையே கேட்டு பழகிப்போன குழந்தை அழகான தமிழ்ல வணக்கம் சொல்லறது பாராட்டப் படவேண்டிய விசயமல்லவா?", என்றார்.

1 comment: