Tuesday, February 12, 2013

பாட்டி சொன்ன கதைகள் (2)


பவள சங்கரி

ஒன்னா இருக்கக் கத்துக்கணும்!


ஹாய் குட்டீஸ்… நலமா?


இன்னைக்கு நாம பார்க்கப்போற கதை மிக முக்கியமானது. ஏன்னு கடைசீல சொல்றேன். சரியா…? கவன்மா கேளுங்க செல்லங்களா..


ஒரு பெரிய காடு. அங்கே நிறைய மிருகங்களெல்லாம் இருந்துச்சாம். காட்டுக்கு ராஜா சிங்கம்தானே..? அந்த சிங்க ராஜா ரொம்ப வயசான கிழட்டுச் சிங்கமாம். ஓடியாடி இறை தேட முடியலையாம். சிங்கம் வரச் சத்தம் கேட்டாலே எல்லா மிருகங்களும் ஓடி ஒளிஞ்சிக்குமாம்.ஆனா நாலு எருது நண்பர்கள் மட்டும் தைரியமா சுத்திக்கிட்டிருந்திக்கிட்டிருந்துகளாம். காட்டெருமையானாலும், சிங்க ராஜாகிட்ட யாரும் தப்பிக்க முடியாதுல்ல.. ஆனா இந்த நாலு எருதுகளும் எப்பவும் ஒனனாவே  சுத்திக்கிட்டிருப்பாங்களாம். சிங்கம் வந்தால் நாலும் சேர்ந்து வந்து பயங்கரமா சண்டை போட்டு விரட்டியடிச்சுடுவாங்களாம்.. சிங்க ராஜாவுக்கு கோபம், கோபமா வருமாம்.. நம்மளையே இதுங்க இப்படி கேலி செய்யுதுங்களே.. இதுங்களை எப்படியாவது கொன்னு சாப்பிடனும்னு கங்கணம் கட்டிக்கிட்டு அலைஞ்சுக்கிட்டிருந்துச்சாம். ஆனா அதுனால ஒன்னுமே செய்ய முடியலையாம்.


ஒரு நாள் ஒரு நரி சிங்க ராஜாவைப் பார்க்க பரிசுகளோட வந்துச்சாம். அந்த நரி ராஜாவுக்கு எப்பவும் ஆலோசனை சொல்லற மந்திரியாட்டம் இருக்குமாம். அந்த நரிக்கிட்ட சிங்க ராஜா,

“நான் இவ்ளோ பெரிய ராஜாவா இருந்தும், இந்த சாதாரண எருமைகளை என்னால கொல்ல முடியல.. நினைக்கவே அவமானமா இருக்கு. இதுக்கு ஏதாவது வழி இருந்தா சொல்லு” அப்படீன்னுச்சாம்.

அதுக்கு அந்த நரி, “இது ரொம்ப சாதாரணம் சிங்க ராஜா.. நான் போய் அந்த நாலு எருமைங்களுக்குள்ள சண்டை மூட்டி விட்டுடறேன். அப்ப எல்லாம் பிரிஞ்சு தனித்தனியாப் போயிடும் இல்லையா.. நீ ரொம்ப எளிமையா அதைக் கொன்னு சாப்பிடலாம்” என்றதாம்.

“ஆகா, நல்ல யோசனையா இருக்கே.. சீக்கிரம் அப்படியே செய்” என்றதாம் மகிழ்ச்சியாக,

உடனே தன் தந்திர வேலையை ஆரம்பிச்சுதாம் அந்த நரி. ஒவ்வொரு எருதையும் தனித்தனியா போய் சந்திச்சு, மற்ற மூன்று எருதுகளைப் பற்றி அவதூறா பேசிச்சாம்…. உன்னை சிங்கத்துக்கிட்ட புடிச்சிக்கொடுக்கப்போறாங்க மூனு பேரும் சேர்ந்துக்கிட்டுன்னு சொல்லி பயமுறுத்திச்சாம். எல்லா எருதையும் கிட்டத்தட்ட சம்மதிக்க வைச்சு, விரோதத்தை மனசுல விதைச்சுட்டுதாம் அந்த நரி. ஆனா அந்த கடைசி எருது மட்டும் கொஞ்சம் புத்திசாலித்தனமா யோசிச்சுதாம். நம்மளை காப்பாத்துறதுல இந்த குள்ள நரிக்கு என்ன ஆதாயம்..  இது எப்பவுமே தந்திரக்கார பிறவியாச்சே. இதை நாம எப்படி நம்பறதுன்னு யோசிக்க ஆரம்பிச்சப்பதான் அந்த நரியோட திட்டம் அதுக்கு பளிச்சுன்னு புரிஞ்சுதாம். 

‘ஓ.. இந்தக் குள்ள நரி நாம ஒத்துமையா இருக்கறதை பிரிச்சு நாம ஒவ்வொருத்தரையா சிங்கத்துக்கு இறையாக்க திட்டம் போடுது’ அப்படீன்னு நல்லா புரிஞ்சு போச்சு. அப்பவும் அது நரியோட திட்டத்தை புரிஞ்ச மாதிரி காமிச்சுக்காம, நம்பிட்ட மாதிரியே நடிச்சு அனுப்பிடுச்சாம். அப்பறமா ஒவ்வொரு எருதுகிட்டயும் போயி நரியோட திட்டத்தைப் பத்தி சொல்லிச்சாம். ஆனாலும் மற்ற எருதுகளுக்கு அதுல பெரிசா நம்பிக்கை வரலையாம். பொறுத்திருந்து பார்க்கலாம்னு அமைதியா இருந்திச்சாம். அப்பதான் நரி திரும்ப வந்து ஒரு எருதை மட்டும் தனியா கூட்டிக்கிட்டுப் போச்சாம். அப்பதான் மற்ற மூன்று எருதுகளுக்கும் சந்தேகம் வந்து சத்தமில்லாம பின்னாலேயே போய்ப் பார்த்தா, அங்கே சிங்க ராஜா ஆசையா நாக்கைத் தொங்கப் போட்டுக்கிட்டு காத்திருக்குதாம். நரியும் போனவுடனே,

“அரசரே, பார்த்தீங்களா, நான் சொன்ன மாதிரியே ஒரு எருதை தனியா கூட்டிட்டு வந்திருக்கேன். இனிமே உங்களுக்கு கொஞ்ச நாளைக்கு உணவுக்குப் பஞ்சமில்லை. கொண்டாடுங்க.. “ என்று எக்காளமிட்டு சிரிச்சுதாம்.

அப்பதான் அந்த எருதுக்குப் புரிஞ்சுதாம் இந்தக் குள்ள நரியோட திட்டம். ஐயோ .. கடவுளே காப்பாத்துன்னு வேண்டிக்கிச்சாம். இந்த நரிப் பேச்சைக் கேட்டு நல்ல நண்பர்களை இழந்துட்டோமே. இனி நம்ம சாவு நிச்சயம்னு அதிர்ச்சியில அப்படியே நின்னுகிச்சாம்.


அப்பதான் ஒளிஞ்சி நின்னு பார்த்துக்கிட்டிருந்த, இந்தக் குள்ள நரியைப்பத்தி தெரிஞ்சிக்கிட்ட மற்ற எருதுகளும் ஒரே பாய்ச்சலாப் போய் அந்த சிங்கம் மேல பாய்ந்ததோட, அதிர்ச்சியில நின்னுக்கிட்டிருந்த அந்த எருதுக்கும் தன் நண்பர்களைப் பார்த்தவுடன் தெம்பு வந்துவிட, முதல் வேலையா அந்த நரி மேல பாய்ஞ்சு, அதை அடித்து, கிழித்துப் போட்டுவிட்டதாம்.. சிங்க ராஜாவும் பயந்து, இதுங்ககிட்டயிருந்து தப்பிச்சாப்  போதும்னு அந்த இடத்தைவிட்டே ஓடிப்போச்சாம்..


இதிலிருந்து என்ன தெரியுது செல்லங்களா… “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு” அப்படீங்கறது புரிஞ்சுதா.. நாட்டுல இது போல தந்திரசாலி மனிதர்களும் நிறைய சுத்திக்கிட்டுதான் இருப்பாங்க. நாமதான் சூதானமா இருக்கனும். இல்லேனா, நம்மளை எளிதா ஏமாத்தி வலையில சிக்க வச்சி, நம்ம வாழ்க்கையையே பாழாக்கிடுவாங்க. புரிஞ்சுதா செல்லங்களா? இந்தக் கதையை என்னைக்குமே மனசுல வச்சுக்கோங்க. சரியா,
திரும்ப அடுத்த கதையோட சந்திக்கலாமா…


படங்களுக்கு நன்றி :




No comments:

Post a Comment