பாட்டி சொன்ன கதைகள்பவள சங்கரி

குழந்தையும், தெய்வமும் கொண்டாடுமிடத்தில் என்பார்கள். குழந்தைகளிடம் உண்மையான அன்பைக்கொண்டு மட்டுமே நெருங்கி உறவாட முடியும். அவர்களுக்குப் பிடித்த சாக்லேட், ஐஸ்கிரீம், தின்பண்டங்கள் என அனைத்திற்கும் மேலாக அவர்களுக்கு மிகவும் பிடித்த விசயம் என்னவென்றால் கதை கேட்பதுதான். கதைகள் மூலமாக வெகு எளிதாக அவர்தம் மனதில் பதியக்கூடிய பல அறிவுரைகளை வழங்க முடியும். 1627ம் ஆண்டில் பிறந்த சத்திரபதி சிவாஜியை உருவாக்கிய அன்னை ஜீஜாபாய் இளம் வயதிலேயே தம் மகனுக்கு சதுரங்கம் விளையாடக் கற்பித்தாராம். அப்போது வேண்டுமென்றே மகனிடம் தோற்றுப்போவாரம். காரணம் மகனுக்கு வெற்றியின் சுவையை உணரச் செய்து அந்த வெற்றிக்கான ஆசையை ஊக்குவிப்பதற்காக. வழிவழியாக சொல்லப்பட்ட பாட்டி கதைகள் எத்தனையோ குழந்தைகளை நல்வழிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இன்றைய அவசர உலகத்தில் குழந்தைகளுக்குக் கதை சொல்லும் அந்தக் கலாச்சாரமே மறைந்துகொண்டு வருகிறது. . நினைவில் நிற்கும் கதைகளை பதிந்து வைப்போமே.1. சிவா, சத்திரபதி சிவாஜியான கதை

ஒரு ஊரில சிவா அப்படீன்னு ஒரு குட்டிப் பையன் இருந்தானாம்.  அவன் பிறந்தப்பவே அவன்கிட்ட நிறைய அரச குணங்கள் இயற்கையாவே அமைஞ்திருந்துதாம்.. அவங்க அம்மா பேரு ஜீஜாபாய். அவன் சின்னப் பையனா இருந்தப்பவே அவங்க அம்மா அவனுக்கு நிறைய கதைகள் சொல்லுவாங்களாம். சிவாவும் அதை அப்படியே கேட்டு மனசில பதியச் செய்துக்குவானாம்.

ஒரு நாள் அவனுக்கு ரொம்ப பசியா இருக்குறப்ப அவனோட அம்மா ஜீஜாபாய் ரொட்டி கொடுத்தார்களாம். சிறுவன் சிவா சாப்பிட ஆரம்பிச்சப்ப, ‘ரொம்ப சூடா இருகும்மா.. எனக்கு நீயே ஊட்டி விடேன்னு’ கேட்டானாம். அதுக்கு அவங்க அம்மா, ‘கண்ணா, உன் வேலையை நீயேதான் செய்துக்கணும். நீயே சாப்பிடு’ என்றார்களாம்.

”கை சுடுதே.... நான் எப்படி சாப்பிட முடியும்?”

”அதுக்கு எளிமையா ஒரு வழி இருக்கே. நீ அதன்படி செய்தால் சீக்கிரம் சாப்பிடலாம். நாக்கையும்  சுட்டுக்கொள்ள வேண்டாம்” அப்படீன்னு சொன்னாங்களாம். அதுக்கு சிவா, “சீக்கிரமா எப்படின்னு சொல்லுங்கன்னு”  சொன்னப்ப,  ஜீஜாபாய்,

“முதல்ல ரொட்டியின் சுத்தி இருக்கற பகுதியை கொஞ்சம், கொஞ்சமா பிய்த்து சாப்பிட்டால், சூடும் தெரியாது, சுவையும் குறையாது, சீக்கிரமா முழுசும் சாப்பிடலாம். இப்படித்தான் நாளை நீ பெரிய ராஜாவா ஆனப்பறம், இந்து சாம்ராஜ்யத்தை உருவாக்கும்போது, இதே முறையை நீ அதுக்கும் பின்பற்றலாம். சுற்றி இருக்கிற பகுதிகளை கொஞ்சம், கொஞ்சமாக ஆக்கிரமித்துக் கொண்டே வந்தால், மையப்பகுதியை எளிதாக அடைந்து, அதையும் கைப்பற்றலாம். “ என்றாராம்.

இதைக்கேட்டவுடன் சிவா நீண்ட யோசனையில் ஆழ்ந்து போனானாம். பிற்காலத்தில் சிவா, மிகப்பெரிய மராட்டிய வீரனாக சத்திரபதி சிவாஜியாக உருவாகி, மிகப்பெரும் இந்து சாம்ராஜ்யத்தை உருவாக்கிக் கொண்டிருந்தபோது மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டிருந்த அம்மா சொன்ன இந்தக் கதை மிகவும் பயனுள்ளதாக இருந்ததாம். தன்னோட பதினாலாவது வயசிலேயே அவருக்கு அந்த எண்ணம் வந்துடுச்சாம். 20வது வயசிலேயே இராணுவப் போர் மூலமாக பீஜப்பூர் கோட்டையைப் பிடித்து முதல் வெற்றிவாகை சூடினாராம்!

எந்த ஒரு காரியத்தையும் ஒட்டு மொத்தமாக அணுகாமல், அதைக் கொஞ்சம், கொஞ்சமாகப் பிரித்துச் செய்ய முயன்றால் எளிதாக, முழுமையாக முடித்து விடலாம்னு சிவாஜி கதையிலிருந்து புரிகிறதா குட்டிம்மா?

சரி திரும்ப கதை பேசலாம்.


நன்றி : வல்லமை - செல்லம்

Comments

  1. தமிழ் இணையதளம், ஆன்மிகம், சித்தர்கள் கதை, மருத்துவ குறிப்புகள், குறுங்கதைகள், சமையல் குறிப்புகள் - பற்றிய மனிதனுக்கு தேவையான
    அனைத்தும் ஒரே இணையத்தில்....
    www.tamilkadal.com

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

'இலைகள் பழுக்காத உலகம்’

கடல் கால் அளவே............

உறுமீன்