Monday, May 6, 2013

பாட்டி சொன்ன கதைகள்! (7)
பவள சங்கரி
இரண்டு நண்பர்கள்!
ஹாய் குட்டீஸ் நலமா?
கரடியைப் பார்த்திருக்கிறீர்களா? கரடி கனமான உருவமும், உடல் முழுவதும் அடர்ந்த முடியும், குண்டு கால்களும் கொண்ட பாலூட்டும் வகையைச் சார்ந்த மிருகம். இது மிக வேகமாக ஓடக்கூடியது. இதற்கு சிறுத்தை, புலி மற்றும் பூனையைப் போல மரத்தின் மீது ஏற முடியாது. பொதுவாக நாயைப் போன்று நல்ல மோப்ப சக்தி கொண்டது. மனிதர்களை அதிகமாக விரும்பக்கூடியது இந்தக் கரடிகள். மனிதர்களை வெகு எளிதாக மோப்பம் பிடித்து நெருங்கி வந்துவிடும். குகைகளிலும், பதுங்கு குழிகளிலும் தங்கும் குணமுடைய கரடிகள் வேகமாக நீந்துவதிலும் கெட்டிதான். சரி நம்மோட நண்பர்கள் கதைக்கும் இந்தக் கரடிக்கும் என்ன சம்பந்தம்னு பார்க்கலாமா?
ஒரு கிராமத்தில் ராமு, சோமு என்ற இரண்டு நண்பர்கள் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வந்தார்கள். இருவரும் ஒன்றாகவே விளையாடுவது, பள்ளிக்குச் செல்வது என்று இணை பிரியாமல் இருந்தார்கள். ராமு எப்பொழுதும் அமைதியான குணமுடையவன். பயந்த சுபாவமும், நல்ல மனதும் கொண்டவன். சோமு அதற்கு நேர்மாறாக துணிச்சலும், சமயோசித புத்தியும் கொண்டவன். அதனாலேயே ராமு, சோமுவுடன் இருக்கும் போது மிகவும் பாதுகாப்பாக உணருவான். அவர்கள் பள்ளிக்குச் செல்வதற்கு வெகு தூரம் நடக்க வேண்டும். இடையில் ஒரு காட்டைக் கடந்துதான் செல்ல வேண்டும். எப்பொழுதும் இருவரும் ஒன்றாகவேச் செல்வதால் ராமு தைரியமாக சோமுவுடன் செல்வான்.

அன்று பள்ளியில் ஆண்டு விழா தினம். அதற்கான விசேச நிகழ்ச்சிகள் எல்லாம் முடிந்து வீடு திரும்ப சற்று நேரமாகிவிட்டது. காட்டைக் கடக்கும் போது சூரியன் மறையும் நேரமாகிவிட்டதால், லேசாக இருட்டாக ஆரம்பித்துவிட்டது. ராமுவிற்கு பயத்தில் நாவெல்லாம் வரண்டுவிட்டது. சோமுவின் கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டே நடந்தான். நடுக்காட்டிற்குள் வந்தவுடன் நடைபாதையின் அருகில் இருந்த புதரில் ஏதோ சலசலப்பு தென்பட்டது. உற்று நோக்கியவர்கள் பளிச்சென்று மின்னிய கண்களைக் கண்டு அதிர்ந்துப் போனார்கள். அடுத்த நொடி கருகருவென ஒரு பெரிய உருவம் அசைந்து, அசைந்து வெளியில் வர, 50 அடி தூரத்தில் அத்தனைப் பெரிய கரடியை முதன் முதலில் கண்டவுடன் இருவருக்கும் அதிர்ச்சியில் ஒன்றும் புரியவில்லை. கால்களெல்லாம் துவண்டு விட்டது. ஓடினாலும் அந்தக் கரடி வெகு எளிதாகப் பிடித்துவிடும் என்று புரிந்ததால் வேறு என்ன செய்வது என்று யோசிக்கக்கூட நேரமில்லாமல், கரடி அவர்களை நெருங்க ஆரம்பித்துவிட்டது.
சோமு சட்டென ராமுவின் கையை உதறிவிட்டு, அவனைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் சரசரவென அருகில் இருந்த மரத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டான். இதைச் சற்றும் எதிர்பார்க்காத ராமுவிற்கோ என்ன செய்வதென்றே புரியவில்லை. சட்டென தங்கள் ஆசிரியை ஒரு முறை சொன்னது நினைவிற்கு வந்தது. ஆம், கரடி இறந்த உடலை சாப்பிடாதாம். உயிரோடு இருப்பதைத்தான் அடித்து உண்ணுமாம். உடனே ராமு அதே மரத்தின் கீழ் அப்படியே ஆடாமல், அசையாமல் நீட்டிப் படுத்துக் கொண்டு மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டான். அருகில் வந்த கரடி அவனை நெருங்கி மோப்பம் பிடித்து சுற்றிச் சுற்றி வந்தது. அவன் காதருகில் நெருங்கி ஏதோ சத்தம் செய்தது. இவை அத்தனைக்கும் ராமு சற்றும் அசராமல் தன்னுடைய விருப்பமான ஆஞ்சநேயரை நினைத்து வேண்டிக்கொண்டே மூச்சை இன்னும் பலமாக இழுத்துப் பிடித்துக் கொண்டான். சற்று நேரம் சுற்றி வந்த கரடி ராமுவை ஒன்றும் செய்யாமல் அமைதியாக காட்டிற்குள் ஓடி மறைந்து விட்டது. உடனே இருவரும் ஒரே ஓட்டமாக கிராமத்திற்குள் வந்து சேர்ந்து விட்டார்கள். வீட்டின் அருகில் வந்தவுடன், அதற்கு மேல் பொறுக்க முடியாதவனாக சோமு, ராமுவிடம் அந்தக் கரடி அவன் காதில் வந்து என்ன சொல்லியது என்று கேட்டான்.
ராமு அதற்கு உடனே, “ஆபத்துக் காலத்தில் இப்படி விட்டுவிட்டு ஓடும் ஒருவனை என்றும் நம்பாதே. உயிர் கொடுப்பான் தோழன். இவனைப் போல உயிர் போக வேடிக்கைப் பார்ப்பவன் எல்லாம் தோழனே அல்ல.. அதனால் அவனிடமிருந்து இனி நீ விலகியே இரு அதுதான் உனக்கு நல்லது” என்று கூறியதாகச் சொன்னான்.
சோமுவிற்கு உடனே தன் தவறு புரிந்துவிட்டது. தன்னுடைய சுயநலத்தால் நல்லதொரு நட்பை இழந்துவிட்டோமே என்று வேதனைப்பட்டான். இருந்தாலும் உடைந்த கண்ணாடிப் பாத்திரத்தைப்போல் உடைந்த மனதும், உறவும் என்று பழைய மாதிரி ஒட்ட முடிவது இயலாத காரியம் அல்லவா.. நல்ல நட்பை இழந்த சோகத்தில் சோமு இன்றும், ராமு என்றாவது மனம் மாறி தன் நட்பை மீண்டும் ஏற்றுக்கொள்வான் என்று காத்திருக்கிறான்.
நல்ல நட்பு என்பது அன்றாடம் மலரும் மென்மையான மலரைப் போன்றது. அதனை வெகு சாக்கிரதையாக காப்பாற்றிக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் சட்டென்று வாடி, உதிர்ந்துவிடும் அது! வாழ்க்கையில் நல்ல நட்பு அமைவதென்பது ஒரு வரம். அதனைத் தக்க வைத்துக்கொள்வது நம் கையில்தான் இருக்கிறது அல்லவா?
படங்களுக்கு நன்றி:

1 comment:

  1. அருமையான கதை...

    /// நல்ல நட்பு என்பது அன்றாடம் மலரும் மென்மையான மலரைப் போன்றது... ///

    சிறப்பான வரிகள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete

கலாச்சார மாற்றங்களின் பாதிப்பா? – ADHD (Attention deficit hyperactivity disorder)

கலாச்சார மாற்றங்களின் பாதிப்பா? – ADHD (Attention deficit hyperactivity disorder)