பாட்டி சொன்ன கதைகள் (8)பவள சங்கரிநன்றியுள்ள ஜீவன்!

ஹாய் குட்டீஸ் நலமா?

மனிதர்களின் தோழன் என்று அழைக்கப்படும் அன்பான ஜீவன் நாய். இது பாலூட்டி வகையைச் சார்ந்த மாமிசபட்சினி.  ஓநாய் வகையைச் சார்ந்த பிராணி என்றாலும் இது ஓநாயைப் போல இல்லாமல்,  வீட்டைக் காப்பதிலிருந்து, தன் மோப்ப சக்தியால் காவல்துறையினருக்கு உதவுவது, இராணுவத்தில் பேருதவி புரிவது, வேட்டையாடுதல், ஊனமுற்றோருக்கு  உதவுவது என மனிதர்களுக்கு பல வகையிலும் உதவக்கூடிய உற்ற நண்பனாக இருக்கக்கூடியது. சில நாடுகளில் இயன்ற அளவு பாரம் சுமப்பதற்கும் நாய்களை பயன்படுத்துவதுண்டு. ஆனால் நாய்களிடம் எவ்வளவுதான் நண்பராகப் பழகினாலும், நாயின் பல் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஆம், நாயின் பல் மிகவும் விசம் உடையது. அதனால் ரேபீஸ் என்னும் உயிர் கொல்லி நோய் வரும். அந்த நோய் வந்தவர்கள், இறுதியில் நாய் போன்ற சுபாவங்களுடன் மாறி, இறந்தே போய்விடுவார்கள். நாயிடம் மிகவும் ஜாக்கிரதையாக பழக வேண்டும். ஒரு வேளை பல் பட்டுவிட்டால் உடனே வீட்டில் உள்ள பெரியவர்களிடம் சொல்லி மருத்துவமனைக்குச் சென்று தடுப்பு ஊசி போட்டுக் கொள்ள வேண்டும். சரி கதையைப் பார்ப்போமா?


ஒரு ஊரில் ஒரு அம்மாவும், அப்பாவும் இருந்தார்கள். அவர்களுக்கு ஒரு அழகான குழந்தை பிறந்து 9 மாதங்களே ஆகியிருந்தன. ஒரு நாள் அப்பா அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் போது ஒரு  ‘டாமி’ என்ற நாயுடன் வந்தார். அம்மாவிற்கு நாயைக் கண்டவுடன் ஒரே கோபம். வீட்டில் நாய் வளர்ப்பது சுகாதாரம் இல்லை என்பதால் நாயை வீட்டில் வைக்கக் கூடாது என்று பிடிவாதமாக இருந்தார். நாயின் முடி காற்றில் பறந்து குழந்தையின் மூக்கில் சென்றால் குழந்தைக்கு அலர்ஜி என்ற ஒவ்வாமை நோய் வரும் என்று ஏதேதோ காரணங்கள் சொல்லி மறுத்துக் கொண்டே இருந்தார். ஆனால் அப்பாவோ, அது தன் நண்பனின் செல்லப் பிராணி என்றும், அவர்கள் திடீரென்று வெளிநாடு செல்ல வேண்டியிருந்ததால் நாயை வேறு எங்கும் விட மனமில்லாமல் தங்களிடம் விட்டுச் சென்றிருப்பதால் தாங்களே பார்த்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறினார். ஆனாலும் அம்மாவின் பிடிவாதம் அதிகமாகி நாயை வேறு எங்காவது கொண்டு விட்டேயாக வேண்டும் என்று கட்டாயப்படுத்திக் கொண்டே இருந்தார். அப்பாவும்   ‘கொஞ்ச நாட்கள் பொறு, ஏதாவது தகுந்த இடமாகப் பார்த்து விட்டுவிடலாம்’ என்று சொல்லி சமாதானப்படுத்தினார். 


அம்மாவிற்கு ஏனோ அந்த டாமி மீது ஒரு வெறுப்பும், பயமும் இருந்து கொண்டே இருந்தது. குழந்தையைக் கூட அதிகம் கீழே விடாமல் பார்த்துக் கொண்டிருந்தார். அன்று குழந்தையை தொட்டிலில் தூங்கச் செய்துவிட்டு, குளித்துவிட்டு வந்துவிடலாம் என்று சென்றார். டாமி தோட்டத்தின் பக்கம் விளையாடிக் கொண்டிருந்ததால் கவலையில்லாமல் குளிக்கச் சென்றார். ஆனாலும், வேகவேகமாக குளித்துவிட்டு ஓடி வந்தார். டாமி குழந்தையை ஏதாவது செய்துவிட்டால் என்ன செய்வது என்று ஒரு பயம் இருந்து கொண்டேயிருந்தது. அதற்கு தகுந்தார்போலவே நடந்துவிட்டது... ஆம், குளியலைறையிலிருந்து வெளியில் வந்தவுடன், வாசலில் நாய் நிற்பதையும் அதன் வாயெல்லாம் ஒரே இரத்தமாக இருப்பதையும் பார்த்து அதிர்ச்சியாகிவிட்டார் அம்மா. ‘ஐயோ குழந்தையை கடித்து விட்டது போலிருக்கிறதே’ என்ற ஆத்திரத்தில் அருகில் இருந்த வாளியை எடுத்து நாயின் தலையில் அடித்து விட்டு கத்திக் கொண்டே குழந்தையைக் காண ஓடினார்.  பாவம் டாமி கத்திக் கொண்டே சுருண்டு விழுந்தது. அங்கு குழந்தை அமைதியாக தூங்கிக் கொண்டிருந்தது. கீழே பார்த்தால் ஒரு பாம்பு கண்டந்துண்டமாகக் கடிக்கப்பட்டு கிடந்தது. அப்போதுதான் அவருக்குத் தெரிந்தது. குழந்தையை பாம்பிடமிருந்து டாமிதான் காப்பாற்றியிருக்கிறது என்று. அடுத்த நொடி ‘டாமி’ என்று கத்திக் கொண்டே குழந்தையையும் தூக்கிக் கொண்டு ஓடினார். அங்கு டாமி மயங்கிக் கிடந்தது. உடனே ஒரு ஆட்டோவைப் பிடித்து டாமியை விலங்குகள் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று சிகிச்சை செய்து நல்ல வேளையாகக் காப்பாற்றி விட்டார். தேவையில்லாமல் சந்தேகப்பட்டு ஒரு நல்ல ஜீவனை கொல்லப் பார்த்தோமே என்று மனம் நொந்து போனார்.. அன்றிலிருந்து டாமியிடம் அன்பாக பழக ஆரம்பித்தார்.

இதிலிருந்து நாம் அறிய வேண்டியது என்ன தெரிகிறதா..  ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு. தேவையில்லாமல் யாரையும் வெறுக்கக் கூடாது. சந்தேகம் ஒரு கொடிய வியாதி. உண்மையான அன்பை உணரக் கற்றுக் கொள்ள வேண்டும். 

மீண்டும் சந்திப்போமா..

நன்றி ; வல்லமை (செல்லம்)

Comments

 1. அருமையான கதையுடன் சிறப்பான கருத்து... நன்றி...

  தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க திரு.தனபாலன்.

   அன்புடன்
   பவள சங்கரி

   Delete
 2. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு. தேவையில்லாமல் யாரையும் வெறுக்கக் கூடாது. சந்தேகம் ஒரு கொடிய வியாதி. உண்மையான அன்பை உணரக் கற்றுக் கொள்ள வேண்டும்.

  அருமையான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. அன்பின் இராஜராஜேஸ்வரி,

   வணக்கமும், நன்றியும்.

   அன்புடன்
   பவள சங்கரி

   Delete

Post a Comment

Popular posts from this blog

'இலைகள் பழுக்காத உலகம்’

கடல் கால் அளவே............

உறுமீன்