Tuesday, May 28, 2013

பாட்டி சொன்ன கதைகள்! (9)


பவள சங்கரி
ஹாய் குட்டீஸ் நலமா?
சர் ஐசக் நியூட்டன் பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா?  மரத்திலிருந்து விழுந்த ஆப்பிள் பழத்தை வைத்துக்கொண்டு, உயிரினங்களின் அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவிற்கும் மூல காரணம் கண்டுபிடித்தவர். ஆம். ஒரு ஆப்பிள் மரத்தடியில் இளைஞன் நியூடன் ஆச்சரியமான உலகத்தைப்  பற்றி சிந்தித்துக்  கொண்டிருக்கும் வேளையில் அந்த மரத்திலிருந்து ஒரு ஆப்பிள் பழம் அவர் தலையில் ‘டங்’ என்று விழுந்ததாம். அந்த நொடியில் அவருக்கு உதித்ததுதான் புவியீர்ப்பு விசை குறித்த கீழ்கண்ட மிகப்பெரிய தத்துவங்கள். நாம் இன்று பயன்படுத்தும் அத்தனைப் பொருட்களும் இவருடைய கண்டுபிடிப்பின் ஆதாரங்கள். அவருடைய மிக முக்கியமான மூன்று விதிகள் என்னன்னு பார்க்கலாமா?
நியூட்டன் விதி 1 :
எந்த ஒரு பொருளும் அதன் மீது ஒரு விசை செயல்படாத வரையில் , தன் நிலையிலிருந்து மாறாது.
நியூட்டன் விதி 2 :
ஒரு பொருளின் மீது விசை செயல்படும் போது , அப்பொருளின் முடுக்கம் அந்தப் பொருள் செல்லும் திசையிலேயே செயல்படும் .

நியூட்டன் விதி 3 :
ஒவ்வொரு வினைக்கும் அதற்கு இணையான எதிர் வினை உண்டு.
இதில் இந்த மூன்றாம் விதியான, ‘எந்த ஒரு வினைக்கும் அதற்கு இணையான எதிர்வினை உண்டு’ என்பது நாம் தினமும் காணக்கூடிய பலவற்றிற்கு விஞ்ஞானப்பூர்வ விளக்கம் அளிக்கக்கூடியது. சுவற்றில் அடிக்கும் பந்து திரும்பி வருவது போல.. உதாரணமாக பறவைகளின் பறக்கும் தன்மையைப் பார்ப்போம். பறவை எப்படி பறக்கிறது தெரியுமா? தன் சிறகுகளை விரித்து அதன் உதவியால் பறக்கிறது. பறவைகளின் இறகுகள் காற்றை கீழ்நோக்கி அழுத்துகிறது. பறவையின் சிறகும், காற்றும் என இரண்டும் மோதிக்கொள்வதில் ஏற்படும் விசையால் காற்று அந்தப் பறவையை மேல்நோக்கித் தள்ளுகிறது. காற்றின் விசையின் அளவு பறவையின் விசையின் அளவிற்குச் சமமாக இருக்கிறது. காற்றின் மீதான விசையின் கீழ்நோக்கிய திசை, பறவையின் மீதான விசைக்கு எதிர்ப்பதமாக மேல்நோக்கி இருக்கிறது. அதாவது ஒவ்வொரு வினைக்கும் இணையான (அளவில்) மற்றும் எதிரான (திசையில்) வினை உண்டு. வினை மற்றும் எதிர்வினையின் விசை பறவைகளை பறக்கச் செய்கிறது. இதே போலத்தான் மீன் தண்ணீரில் நீந்துவதும். கார் , பேருந்து சைக்கிள் போன்ற வாகனங்கள் ஓடுவதும்.
இதை எளிமையாகப் புரிந்துகொள்ள ஒரு காணொலி பாருங்கள்.
வாழ்க்கையிலும் இப்படித்தான் இல்லையா. நாம் நல்லதை நினைத்தால் நமக்கு நல்லதே நடக்கும். ஒருவருக்கு நன்மையைச் செய்யும் போது திருப்பி நமக்கு நன்மையே வருவது போல தீய எண்ணத்தை வளர்த்துக்கொண்டால் நமக்கு நடப்பதெல்லாம் தீமையாகத்தானே நடக்கும்? அதனால் நாம் நல்லதை மட்டுமே நினைத்து, நல்ல செயல்களை மட்டுமே செய்ய வேண்டும்.
சரி இதுக்கு ஒரு கதையும் பார்ப்போம்.. குரங்கிலிருந்து பிறந்தவன் தான் மனிதன். சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை போல செய்வதைச் செய்யும் குரங்கு. ஒரு ஊரில் ஒரு தொப்பி வியாபாரி இருந்தான். அவன் தொப்பி விற்பதற்காக காடு, மேடெல்லாம் அலைந்து திரிந்து, அலுத்துப் போய் ஒரு மரத்தினடியில், சுகமான நிழலில் அப்படியே படுத்து தூங்கிவிட்டான். கொஞ்ச நேரத்தில் கண் விழித்துப் பார்த்தவன் அதிர்ச்சியில் அப்படியே நின்றான். காரணம், அவன் பையில் வைத்திருந்த தொப்பிகளையெல்லாம் அங்கிருந்த குரங்குகள் அனைத்தும் எடுத்து தலையில் போட்டுக்கொண்டு மரத்தில் உட்கார்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது. அந்த தொப்பி வியாபாரி தன் பிழைப்பே கெட்டுவிடுமே என்று அஞ்சினான். அப்போதுதான் அவனுக்கு ஒரு வழி தோன்றியது. நாம் செய்வதையெல்லாம் குரங்கு அப்படியே திருப்பிச் செய்யும் என்று கேள்விப்பட்டிருந்ததால், உடனே தன் தலையில் போட்டிருந்த தொப்பியை எடுத்து வீசினான். இதைக்கண்ட குரங்குகளும் உடனே அதனதன் தலையிலிருந்த தொப்பிகளை கழட்டி வீசியது. அடுத்த நொடி அவன் மளமளவென எல்லாவற்றையும் பொறுக்கி பையில் அடைத்துக் கொண்டு ஓடிவிட்டான்.. நல்ல வேளையாக அவன் பிழைப்பும் தப்பித்தது!
நல்ல விசயங்கள் யார் சொன்னாலும் அதை உள்வாங்கி சேமித்து வைத்துக்கொண்டோமானால் அது என்றாவது ஒருநாள் நம்முடைய அவசர காலத்தில் கட்டாயம் கைகொடுக்கும் என்று புரிகிறது அல்லவா?
தொடருவோம்
படங்களுக்கு நன்றி :
நன்றி : வல்லமை - செல்லம்

8 comments:

 1. மிகவும் அழகான பயனுள்ள பதிவு. பாராட்டுக்கள். படங்கள் எல்லாம் அருமையான தேர்வு. பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. அன்பின் திரு வை.கோ.,

   தங்களுடைய வாசிப்பிற்கும், மனம் திறந்த பாராட்டிற்கும் மனமார்ந்த நன்றி.

   அன்புடன்
   பவள சங்கரி

   Delete
 2. /// நாம் நல்லதை மட்டுமே நினைத்து, நல்ல செயல்களை மட்டுமே செய்ய வேண்டும்... ///

  அருமையான கருத்துக்கள் பல... கதையும் அருமை...

  வாழ்த்துக்கள்... நன்றி...

  ReplyDelete
 3. அன்பின் திரு தனபாலன்,

  தங்களுடைய அன்பான வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றி பல.

  அன்புடன்
  பவள சங்கரி

  ReplyDelete
 4. முதல் விதிக்கான வாழ்க்கை நெறி உதாரணம் ரசனைக்குரியது.

  ReplyDelete
  Replies
  1. அன்பின் திரு அப்பாதுரை சார்,

   தங்களுடைய ஆழ்ந்த ரசனை எப்பொழுதும் அடுத்தவரையும் தொற்றிக்கொள்ளச் செய்யக்கூடியது. தங்களுக்கும் வாழ்த்துக்கள்.நன்றிங்க.

   அன்புடன்
   பவள சங்கரி

   Delete
 5. வணக்கம்

  உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  ReplyDelete
 6. அன்பின் திரு தனபாலன்,

  தகவலுக்கு மிக்க நன்றி. உடனே சென்று பார்க்கிறேன். மிக்க மகிழ்ச்சி.

  அன்புடன்
  பவள சங்கரி

  ReplyDelete