Thursday, August 8, 2013

பாட்டி சொன்ன கதைகள்! (13)


உள்ளதைச் சொல்லி நல்லதைச் செய்வோம்!
ஹாய் குட்டீஸ் நலமா?
Giampietrino-Last-Supper
Giampietrino-Last-Supper

லியோனார்டோ தானே தன்னை வரைந்த ஓவியம்
லியோனார்டோ தானே தன்னை வரைந்த ஓவியம்
லியோனார்னோ டா வின்சி பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா?  அவர் ஒரு மிகப்பெரிய ஓவியர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இன்றுவரை தன் மந்திரப் புன்னகையால் உலகையே மயக்கிக் கொண்டிருக்கும் மோனலிசா ஓவியம் வரைந்தவர் இவர்தான். ஆனால் அவர் புத்துணர்வை ஏற்படுத்தக்கூடிய ஒரு சிறந்த மனிதாபிமானி, விஞ்ஞானி மற்றும் இயற்கை ஆய்வாளர் என்பதும் நாம் அறிந்துகொள்ள வேண்டிய தகவல். அவர் ஒரு நாத்திகர் என்பதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை. ஆனாலும் விஞ்ஞானம் மற்றும் கலையாற்றல் தொடர்பான பிரச்சனைகளுக்கு, இயற்கை ஆய்வு மற்றும் சந்தேகவாத முன்னோக்கில் எதிர்கொள்வதில் தீர்வு கிடைக்கும் என்று சொல்லி அதற்கான ஒரு சிறந்த முன் மாதிரியாகவும் இருக்கிறார். நாத்திகர்கள், கலை மற்றும் தத்துவம் அல்லது சிந்தனையியல் இடையேயான தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதற்கு இவரும் ஒரு காரணம். லியோனார்டோ, ஒரு நல்ல ஓவியர் இயற்கையை உணர்ந்து கொண்டாடக்கூடிய ஒரு நல்ல விஞ்ஞானியாகவும் இருக்க வேண்டியது அவசியம் என்று நம்பினார்.
லியோனார்டோ டா வின்சி இத்தாலியின் டஸ்கனியில், வின்சி என்னும் ஒரு கிராமத்தில், 1452ல் ஏப்ரல் 15ம் நாள் பிறந்தார். அவர் ஒரு முறை2annunc2 இயேசு கிறித்துவின் வாழ்க்கை வரலாற்றை ஓவியங்களாகத் தீட்ட விரும்பினார். அதற்கான கருணை ததும்பும் ஒரு நல்ல மனித உருவத்தை பல நாட்களாகத் தேடிக்கொண்டிருந்தார். ஒரு நாள் திடீரென்று ஒரு மரத்தடியில் ஒரு துறவி தியானத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டார். இயேசு கிறித்துவின் ஓவியம் வரைவதற்கான ஒரு நல்ல உருவம் கிடைத்ததில் அவருடைய உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளியது. அவரும் அந்தத் துறவியை வைத்து மிக அழகான இயேசு கிறித்து ஓவியத்தை வரைந்து முடித்து அதற்கான சன்மானத்தையும் அவருக்குக் கொடுத்துவிட்டுக் கிளம்பினார். பின்பு தன்னுடைய உதவியாளர்களைக் கொண்டே அவருடைய 11 சீடர்களையும் வரைந்து முடித்தார். அடுத்து இயேசு கிறித்துவைக் காட்டிக் கொடுத்த யூதாசை வரைய மட்டும் அவருக்குச் சரியான மாதிரி கிடைக்கவில்லையாம். திரும்பவும் தேட ஆரம்பித்தார். சில காலம் கழித்து ஒரு முறை ஒரு இடத்தில் பயணக் களைப்பில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது அவர் தம்மிடம் வைத்திருந்த பணத்தை ஒரு திருடன் திருடிக்கொண்டு ஓடுவதைப் பார்த்த பொது மக்கள் அவனை துரத்திப் பிடித்தனர். அவனைக் கண்ட அந்த அற்புதமான ஓவியருக்குத் தன் பணம் திரும்பக் கிடைத்த மகிழ்ச்சியைவிட, தன்னுடைய இயேசு கிறித்து வாழ்க்கை வரலாறு ஓவியத்திற்கான யூதாசு கிடைத்துவிட்டான் என்று பெரிதும் மகிழ்ந்தாராம்.. அவனுடைய முகத்தில் தெரிந்த குரூரமும், கள்ளத்தனமும் தன்னுடைய ஓவியத்திற்கான மாதிரியாக இருக்க சரியான ஆள் இவன் தான் என்று முடிவு செய்தார். அப்படியே வரைந்தும் முடித்தார். இறுதியில் சன்மானம் கொடுத்து அனுப்பும் போது அவன், தன்னை அடையாளம் தெரியவில்லையா என்று கேட்டான். யோசித்துக் கொண்டிருந்த லியானார்டோவிடம், சில காலம் முன்பு இயேசு கிறித்து ஓவியத்திற்கு மாதிரியாக நின்றதும் இதே தன்னுடைய உருவம்தான் என்று அவன் சொன்னபோது அதிர்ச்சியில் உறைந்து போனார் அவர். காரணம் புரிகிறதா உங்களுக்கு?
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்!
சரி கதைக்கு வருவோம். நம்ம ஊரிலும் ஒரு நல்ல ஓவியர் இருந்தார். அவர் ஒரு அழகான குழந்தை ஓவியம் வரைய வேண்டும் என்று விரும்பினார். அதற்கு மாதிரியாக அழகான, கள்ளமற்ற குழந்தையைத் தேடிக் கொண்டிருந்தார். ஒரு நாள் ஒரு பூங்காவில் ஒரு பெற்றோரின் மடியில் ஒரு அழகான 5 வயது சிறுவன் கொஞ்சிக் கொண்டிருப்பதைக் கண்டார். அந்தக் குழந்தையைக் கண்டவுடன் தன்னுடைய ஓவியத்திற்கான சிறந்த மாதிரி உருவம் கிடைத்துவிட்டது என்று மகிழ்ந்த ஓவியர், அந்தக் குழந்தையை வைத்து மிக அழகிய ஓவியத்தை வரைந்து முடித்தார். அடுத்து தீய பழக்கம் உள்ள ஒரு சிறுவனை வரைய முடிவெடுத்தார். அதற்கான வேட்டையை ஆரம்பித்தார். மனதிற்கு ஏற்ற ஒரு மாதிரிச் சிறுவன் கிடைக்க பெரும்பாடாகி விட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் ஒரு பூங்காவில் அசந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ஓவியரிடமிருந்து அவர் தன் தலைமாட்டில் வைத்திருந்த கைப்பையை எடுத்துக் கொண்டு ஒரு சிறுவன் ஓடினான். அதனைக் கண்ட ஓவியர் ஓடிச் சென்று அவனைத் துரத்திப் பிடித்தார். அவனைப் பார்த்தவுடன் தன்னுடைய ஓவியத்திற்கு சரியான மாதிரி கிடைத்துவிட்டதாக மகிழ்ந்து அவனை உட்கார வைத்து சாப்பாடு வாங்கிக் கொடுத்து பின்பு ஓவியம் வரைந்து முடித்தார். அவனுக்கு பணமும் கொடுத்தார். அப்போதுதான் அவனிடம் அவனுக்கு ஏன் இந்த திருட்டுப் பழக்கம் வந்தது என்று இரக்கப்பட்டுக் கேட்டார். அதற்கு அந்தச் சிறுவன் சொன்ன பதில் அவருக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. ஆம், சில காலம் முன்பு மிக அழகான கள்ளமற்ற பார்வையும், அழகான தோற்றமும் கொண்ட குழந்தை என்று யாரை முன் மாதிரியாக வைத்து வரைந்தாரோ அவனேதான் இவனாம்.. பெற்றோர் இருவரும் ஒரு விபத்தில் இறந்துவிட, உறவினர் அனைவரும் கைவிட, வேறு வழியில்லாமல் வயிற்றுப்பாட்டிற்காக திருட வேண்டி வந்தது என்று சொல்லியிருக்கிறான். மனம் நொந்து போன ஓவியர் அச்சிறுவனை அழைத்துச் சென்று தனக்குத் தெரிந்த ஒரு அனாதை இல்லத்தில் சேர்த்துவிட்டார். அந்தச் சிறுவனும் இன்று ஓரளவிற்குப் படித்து நல்ல பணியில் இருக்கிறான்..
குழந்தைகளே, இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி என்ன? மனதில் கள்ளத்தனமும், கபடமும் புகுந்துவிட்டால் முகத்தில் குரூரமும் அவலட்சணமும் தானே வந்துவிடும். வாழ்க்கையில் யாருக்கு வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். எது நடந்தாலும் ஏதோ ஒரு காரணம் சொல்லிக் கொண்டு தீய வழியில் செல்லக் கூடாது. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு அல்லவா. நேர்மையும், சத்தியமும் நம் உயிர் மூச்சாகக் கொள்ளவேண்டும். அந்த எண்ணத்தில் உறுதியாக இருந்தோமானால் எப்படியும் ஒரு நல்ல வழி பிறக்கும் என்ற நம்பிக்கை கொள்ள வேண்டும்! அதற்கான முயற்சியையும் செய்ய வேண்டும். அதற்கு முன்னுதாரணமாக எத்தனையோ தலைவர்களும், சாமானியர்களும் வாழ்ந்து காட்டியிருக்கிறார்களே. அவர்களைப் பற்றியெல்லாம் இன்னும் நிறைய தெரிந்து கொள்ளலாம்.
மீண்டும் சந்திப்போம்.
படங்களுக்கு நன்றி:

நன்றி : வல்லமை - செல்லம்

1 comment:

  1. மனதில் கள்ளத்தனமும், கபடமும் புகுந்துவிட்டால் முகத்தில் குரூரமும் அவலட்சணமும் தானே வந்துவிடும்.

    நேர்மையும், சத்தியமும் நம் உயிர் மூச்சாகக் கொள்ளவேண்டும். அந்த எண்ணத்தில் உறுதியாக இருந்தோமானால் எப்படியும் ஒரு நல்ல வழி பிறக்கும் என்ற நம்பிக்கை கொள்ள வேண்டும்! அதற்கான முயற்சியையும் செய்ய வேண்டும். //

    உண்மை நீங்கள் சொல்வது. கதை மிக அருமை.

    ReplyDelete

சித்தார்த்தா பள்ளி நிகழ்ச்சி!

நேற்று சித்தார்த்தா பள்ளி மாணவச் செல்வங்களுடன் மிக இனிமையாகக் கழிந்த பொழுதுகள்! சிறார்கள் என்ற கணிப்புடன் நம் சொற...