Friday, November 22, 2013

பாட்டி சொன்ன கதைகள் 19
ஹாய் குட்டீஸ் நலமா?


‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடி நின்றேன்’ என்று சொன்ன வள்ளலார் பற்றி தெரியுமா உங்களுக்கு? பிற உயிர்களையும் தம் உயிர் போல் எண்ணும் கருணை உள்ளம் கொண்டவர் வள்ளலார்.அது மட்டுமன்றி ஓருயிர் உள்ள பயிர்களின் மீது கூட அன்பு செலுத்தி ,வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் தானும் வாடியதாகக் குறிப்பிடுவார். வள்ளலார் அருளிய  பசித்திரு, தனித்திரு, விழித்திரு என்கிற தாரக மந்திரங்கள், ஆன்மீக ஞானிகளுக்காக மட்டுமல்லாது, சாமான்ய மனிதருக்கும் நன்மையளிப்பதாகும். வள்ளலார் தோற்றுவித்த சன்மார்க்க இயக்கங்கள் மூலம் இன்றும் அவருடைய சன்மார்க்கத் தத்துவங்கள் பரவலாகப் போற்றப்படுகின்றன. இன்றும் வடலூரில் அன்னதானங்கள் வள்ளலார் சோதியில் ஐக்கியமான தினத்தன்று பெரிய அளவில் நடை பெறுகின்றன. வள்ளலார் அண்மைக் காலத்தில் தோன்றியவராயினும், அவ்ர்தம் ஞானக்குரு திருவாதவூரர், மாணிக்கவாசகர் ஆவார். அவர் மூலமாகவே ஆன்மீக ஞானத்தைப் பெற்றவர்.

 வள்ளலார் வழங்கிய அறிவுரைகள்:

தந்தை தாய் மொழியைத் தள்ளி நடக்காதே.
குருவை வணங்கக் கூசி நிற்காதே.
நல்லோர் மனதை நடுங்க செய்யாதே.
வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே
ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே.
பொருளை இச்சித்து பொய் சொல்லாதே.
பசித்தோர் முகத்தைப் பாராதிராதே.
இரப்போர்க்கு பிச்சை இல்லை என்னாதே.
தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதே.
மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே.

வள்ளலார் 1867, மே 23ல் வடலூரில்  தருமச்சாலை அமைத்து அன்னதானத்தை துவக்கிவைத்தார். இதற்காக அவர் ஏற்றி வைத்த அடுப்பு, 146 வருடங்களாக, தற்போது வரையில் அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது. இந்த அடுப்பு  21 அடி நீளம், 2.5 அடி அகலம் மற்றும் ஆழம் கொண்டது.இந்த அடுப்பை அணைக்கவே கூடாது என்பதற்காக,  இரவு நேரம் சமையல் செய்யாத வேளையிலும் கூட, நெருப்பு அணையாமல் இருக்க, பணியாளர் ஒருவர் விறகுகளை இடுவார்.  அன்னதானம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து, 146 ஆண்டுகளாக தொடர்ச்சியாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. கருங்குழியிலிருந்து மேட்டுக்குப்பம் செல்லும் வழியில் தீஞ்சுவை  என்ற நீரோடை இருக்கிறது. நாட்டில் தண்ணீர் பஞ்சம் இல்லாதிருக்க வேண்டும் என்பதற்காகவே  வள்ளலார் உருவாக்கிய ஓடை இது. இங்கும் எந்த நேரத்திலும், எவ்வளவு நபர்கள் வந்தாலும் தொடர்ச்சியாக அன்னம் பரிமாறப்படுகிறது. அப்படிப்பட்ட மாமனிதர் வள்ளலார்.


சரி கதைக்கு வருவோமா?

முன் காலத்தில், ஒரு ஊரில் ஒரு திருடன் வாழ்ந்து வந்தானாம். அவன் தொழிலே திருடுவது மட்டும்தான். தினந்தோறும் ஒரு காட்டு வழியாகப் போய்தான் அவன் ஊருக்குள் திருடப்போக வேண்டும். அந்த காட்டில் ஒரு பிள்ளையார் கோவில் இருக்கும். தினமும் அதைக் கடந்து போகும்போது, அன்றைக்கு கிடைக்கும் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட பங்கை சாமிக்குக் காணிக்கையாக உண்டியலில் போடுவதாக வேண்டிக்கொண்டு போவான். அதேபோல திரும்பி வரும்போது கிடைத்தவற்றில் பிள்ளையாருக்கு உரிய பங்கை உண்டியலில் போட்டுவிட்டுப் போவான். அப்படி ஒரு நாள் அரண்மனையின் அந்தப்புறத்தில் ஒரு குளத்தின் அருகில் இளவரசி குளிப்பதற்காக கழட்டி வைத்திருந்த நகைகளைத் திருடிவிட்டு வரும்போது சேவகர்களிடம் மாட்டிக் கொள்கிறான். சேவகர்கள் அவனை விரட்டிக்கொண்டு பின்னாலேயே ஓடி வருகிறார்கள். வரும் வழியில் அந்த வனத்தைக் கடக்கும் போது, ஓடிக்கொண்டே பிள்ளையாருக்குச்சேர வேண்டிய பங்கான ஒரு முத்து மாலையைத் தூக்கி வீசி விட்டுச் சிட்டாகப் பறந்து சென்றுவிடுகிறான். அப்போது அங்கு ஒரு ஓரமாக ஒரு முனிவர் தியானத்தில் அமர்ந்திருக்கிறார். அந்தத் திருடன் தூக்கி வீசிய முத்து மாலை சரியாக அந்த முனிவர் கழுத்தில் போய் விழுந்தது. அவர் அதைப்பற்றிய எந்த உணர்வும் இல்லாமல் ஆழ்ந்த தியானத்திலேயே இருக்கிறார். திருடனை விரட்டிக்கொண்டு வந்த சேவகர்கள், அவனைத் தேடிக்கொண்டு கோவில் பக்கம் வருகிறார்கள். அங்கு தியானத்தில் கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருக்கும் பெரியவரின் கழுத்தில் கிடக்கும் இளவரசியின் முத்துமாலையைக் கண்டவுடன், அந்த சேவகர்கள், அந்த முனிவரை நெருங்கி, தியானத்தைக் கலைக்கிறார்கள். ஒரு சேவகன், ‘அடேய், இவரு பெரிய மகான் போல இருக்காரு. வாங்கடா போயிடலாம். முத்து மாலையை கழட்டி எடுத்துக்கிட்டுப் போயி அரசர்கிட்ட கொடுத்திடலாம்’ என்றான்.அடுத்தவனோ, ‘அடப்போடா, அந்தத் திருடனே இவன் தான். நம்மளை ஏமாத்தறதுக்குதான் இப்படி மாறு வேடத்தில உட்கார்ந்திருக்கான்’ என்றான்.இன்னொருவனோ சட்டென்று அந்த மகானை கையைப் பிடித்து தர தரவென இழுத்துக்கொண்டு அரண்மனைக்குக் கிளம்பினான். அரசவையில் கொண்டுபோய் நிறுத்திய பின்பும், அந்த மகானுக்கு ஒன்றுமே புரியவில்லை.  தன்னை எதற்கு இப்படி இழுத்து வந்துள்ளார்கள், அதுவும் இளவரசியின் ஆபரணத்தை தன் கழுத்தில் ஏன் போட்டார்கள் என்று ஒரு உணர்வும் இல்லாமல் அதே  அமைதியுடன் அப்படியே நின்று கொண்டிருந்தார். அரசரும் பலவிதமாக அவரை கேள்வி மேல் கேள்வி கேட்டபோதும் அவருடைய பதில், ‘நான் ஏதும் அறியேன்’ என்பதுதான். முகத்தில் புன்னகை தவழ்ந்து கொண்டிருக்க  அச்சம் என்பதே கொஞ்சமும் இல்லாததைக் கண்ட மன்னருக்கு ஆச்சரியத்துடன், கோபமும் சேர்ந்து கொண்டது. எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும் இந்த பெரியவருக்கு என்று கோபத்தின் உச்சத்தில், அவரை கழுமரத்தில் ஏற்றச் சொன்னார். அதற்கும் அவர் எந்த உணர்ச்சியும் காட்டவில்லை.  அதே புன்னகையுடன் கழுமரம் ஏற போய்க்கொண்டிருந்தார். கழுமர பீடத்தில் நிற்கும்போது கூட அரசன், “இப்போதாவது நீர் திருடியதை ஓப்புக்கொள்ளும். உம்மை மன்னித்து விட்டுவிடுகிறேன்” என்றார். அப்பொழுதும் புன்னகையுடனே நின்று கொண்டிருந்தார் அவர். தண்டனையை நிறைவேற்ற உத்தரவிட்டார் அரசர்.  உடலைப் பிளந்து கொண்டு செல்ல வேண்டிய அந்த கூர்மையான ஆயுதம், அப்படியே பாதியிலேயே நிற்கிறது. நாட்கள் உருண்டோடிக்கொண்டிருக்கிறது. உயிரும் போகவில்லை.  உடலின் சித்திரவதையை துளியும் சட்டை செய்யாமல் அமைதியாக ஏற்றுக்கொண்டிருந்தார் அந்த மகான். அப்போதுதான் அரசர் அவர் உண்மையிலேயே ஏதோ சக்தி பெற்றவர்தான் என்பதை உணர்ந்து,  அவரிடம் சென்று, “ஐயா உங்களிடம் ஏதோ சக்தி இருப்பது நன்கு தெரிகிறது.  நீங்கள் நினைத்தால் நொடியில் இதிலிருந்து மீள முடியுமே, ஏன் அத்தனையும் தாங்கிக்கொண்டு இருக்கிறீர்கள்”, என்றார். 

அந்த மகான் அமைதியாக,  அதே புன்னகையுடன், தான் சிறுவனாக இருந்தபோது தட்டான் பூச்சியைப் பிடித்து அதன் இறகுகளைக் கட்டி, அதைத் துடிக்க வைத்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்ததாகவும்,  தனக்கு அப்போது அது விளையாட்டாக மட்டுமே தெரிந்தது. ஆனால் அந்த உயிர் பட்ட வேதனைக்கான தண்டனைதான் இப்போது அனுபவிப்பது. இன்னும் இரண்டு நாளில் அந்த பாவம் தீர்ந்தவுடன் தன் உயிர் இறைவனடி சேர்ந்துவிடும் என்றும் அதற்காக அரசர் வருந்த வேண்டியதில்லை, எல்லாம் விதிப்படிதான் நடந்திருக்கிறது. அரசன் அதற்கான ஒரு கருவி மட்டுமே என்று கூறி அரசரின் குற்ற உணர்வையும் போக்கினார். அதே போல இரண்டு நாளில் அந்த மகான் இறைவனடி சேர்ந்தார்.

இதிலிருந்து நாம் அறிந்துகொள்ள வேண்டிய பாடம் என்ன என்பது தெரிகிறதா செல்வங்களே? ஆம், எந்த உயிருக்கும் வேதனை கொடுப்பது பெரும்பாவம். அதற்குரிய தண்டனையை அந்த பாவம் செய்தவர் அடைந்தே தீர வேண்டும் என்பதும் விதி. ஆகவே எல்லா உயிர்களையும் நம் உயிர் போல எண்ணி மதிக்க வேண்டும். 

முற்றும்.

நன்றி : வல்லமை - செல்லம்

2 comments:

  1. சிறப்பான கதை... வரும் பதிவில் இக்கதையை பயன்படுத்தலாம் என்றிருந்தேன்... நன்றி....

    ReplyDelete
  2. //ஆம், எந்த உயிருக்கும் வேதனை கொடுப்பது பெரும்பாவம். அதற்குரிய தண்டனையை அந்த பாவம் செய்தவர் அடைந்தே தீர வேண்டும் என்பதும் விதி. ஆகவே எல்லா உயிர்களையும் நம் உயிர் போல எண்ணி மதிக்க வேண்டும்.//

    அழகானதோர் நீதி. அற்புதமானதோர் கதையாகக் கொடுத்துள்ளது சிறப்பு. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete