Friday, December 13, 2013

பாட்டி சொன்ன கதைகள் 21


பவள சங்கரி

ஹாய் குட்டீஸ் நலமா?


கூடி வாழ்ந்தால் கோடி நன்மை! 


ஐந்தறிவு படைத்த மிருகங்கள் ஆறறிவு படைத்த நமக்கு பல வகையில் பாடம் புகட்டுகின்றன.  பறவைகள், மிருகங்கள் என ஒவ்வொன்றையும் கூர்ந்து நோக்க ஆரம்பித்தால், அவைகள் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளவும், தம் குட்டிகளைக் காக்கவும் தன்னால் இயன்றவரை எத்துனை வீரத்துடனும், விவேகத்துடனும் நடந்துகொள்கின்றன என்பது புரியும்.  ஒரு காட்டில் நான்கு மாடுகள் நண்பர்களாக வாழ்ந்து வந்தது. நான்கு மாடுகளும் என்றும் இணை பிரியாமல் ஒன்றாகவே மேய்ந்து கொண்டிருந்தன. அந்தக் காட்டில் ஒரு கொடிய சிங்கம் உலவிக்கொண்டிருந்தது. அதற்கு கொழுகொழுவென்றிருந்த இந்த மாடுகளின் மீது ஒரு கண். ஒவ்வொரு முறை இந்த மாடுகளை அடித்துத் தின்பதற்காக வரும்போதெல்லாம், இந்த நான்கு மாடுகளும் ஒன்றாகச் சேர்ந்துகொண்டு அந்த சிங்கத்தை வெகு சுலபமாக விரட்டிக்கொண்டிருந்தன. அந்த சிங்கத்திற்கு எப்படியும் அந்த மாடுகளை தன் உணவாக்கிக்கொள்ள வேண்டுமென்ற ஆசை. அதையேச் சுற்றி சுற்றி வந்தும் கொன்று தின்ன முடியவில்லையே என்று வருத்தமாக இருந்தது. இதைக் கண்ட ஒரு நரி, சிங்க ராஜாவின் வருத்தம் போக்க வேண்டும் என்று முடிவு செய்து, அந்த சிங்கத்திடம் சென்று, அந்த மாடுகளை மடக்கி இரையாக்கிக்கொள்ள,  தான் ஒரு யோசனை சொல்வதாகக் கூறியது. அந்த சிங்கமும் ஆவலுடன் கேட்டது. அப்போது அந்த தந்திரமான குள்ளநரி,

“சிங்க ராஜா, அந்த மாடுகள் நான்கும் ஒன்றாக இருப்பதால்தான் உங்களால் அதை அடித்துத் தின்ன முடியவில்லை.  நாம் அவைகளைப் பிரித்துவிட்டால், எளிதாக கொன்று விடலாம்” என்றது.

உடனே சிங்கமும், “ஆகா, நல்ல யோசனையாக இருக்கிறதே. அதை நீயே உடனே நிறைவேற்றிவிடு,” என்று கட்டளையிட்டது.அந்த நரி உடனே தன் வேலையை ஆரம்பித்துவிட்டது. ஒவ்வொரு மாட்டிடமும் சென்று அடுத்த மாட்டைப் பற்றி இல்லாததும், பொல்லாததும் சொல்லி அவர்களுக்குள் சண்டை மூட்டி பிரித்துவிட்டது. நான்கு மாடுகளும் தனித்தனியாக ஆளுக்கொருபுறம் மேய ஆரம்பித்தது. இது அது சிங்கத்திற்கு ரொம்ப வசதியாகப் போய்விட்டது. ஒவ்வொரு மாடாக அடித்து தின்றுவிட்டது. இறுதியாக ஒரு நாள் அந்த குள்ள நரியையும் விட்டு வைக்கவில்லை அது. அதுதானே அந்த சிங்கத்தின் குணம். இப்படித்தான் நிறைய குள்ளநரிகள் மனித வடிவிலும் நாட்டிலும் இருப்பார்கள். நம்மை தங்கள் தந்திரத்தால் வீழ்த்த நினைப்பார்கள். நாம்தான் மிக ஜாக்கிரதையாக இருந்துகொள்ள வேண்டும். 
சரி நம்ம கதைக்கு வருவோம்.

ஒரு ஊரில் ஒரு தந்தையும்,நான்கு மகன்களும் இருந்தனர். தந்தை வாழ்க்கையில் மிகவும் சிரமப்பட்டு பல சொத்துகளை சேர்த்து வைத்திருந்தார். தாயும் பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட, நான்கு மகன்களையும் ஒழுக்கமாக வளர்க்க மிகவும் பாடுபட்டு அதில் வெற்றியும் கண்டார். ஆனால் நான்கு பேரும் வளர்ந்து பெரியவர்கள் ஆன பின்பு  ஒருவருக்கொருவர் போட்டி, பொறாமை என்று சண்டைபோட ஆரம்பித்து இறுதியாக ஆளுக்கொரு பக்கம் திருப்பிக்கொள்ளும் வகையில் பிரிந்து கிடந்தனர். இதே கவலையில் தந்தையும் நோய்வாய்ப்பட்டார். எவ்வளவு சொல்லியும் கேட்காத மகன்களால் வியாபாரமும் ஆட்டம் காண ஆரம்பித்தது. நான்கு மகன்களும் தங்கள் பங்கை பிரித்துக் கொடுத்து விடும்படி வாதிட்டனர். தந்தையின் அறிவுரையைக் கேட்கும் நிலையில் ஒருவரும் இல்லை. அப்போது திடீரென்று ஒரு நாள் தந்தைக்கு உடல் நலம் மிகவும் மோசமாகிப்போனது. யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் அவர் உயிரும் பிரிந்தது. ஈமச் சடங்குகள் அனைத்தையும் அழுதபடியே செய்து முடித்த மகன்கள், தந்தையின் வழிகாட்டுதல் இல்லாமல் அவ்வளவு பெரிய வியாபாரத்தை எப்படி நடத்துவது என்று அச்சம் கொண்டனர். சொத்தைப் பிரித்துக்கொண்டால் போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டனர் நால்வரும். அப்போது தங்கள் குடும்ப நண்பரும், வக்கீலுமான தினகரன் என்பவர்மீது நால்வரும் மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தனர். அவரிடம் தங்கள் தந்தை எல்லா விசயங்களையும் பகிர்ந்துகொள்ளும் வழக்கம் இருந்ததும் அவர்களுக்குத் தெரியும் என்பதால், அவரிடம் சென்று தங்கள் பிரச்சனைக்கு ஒரு முடிவு வேண்டும் என்று கேட்டனர் நால்வரும். 

தினகரன் அதற்காகவே காத்திருந்தவர் போல,“நீங்கள் சொல்வதும் சரிதானப்பா. இனிமேலும் அவரவர் வழியை அவரவர்கள் பார்த்துக்கொள்வதும் நல்லதுதான். ஆனால் உங்கள் அப்பா, இறக்கும் போது உங்களிடம் ஒற்றுமை இல்லையே அதனால் எவ்வளவு பெரிய இழப்பு என்று வேதனைப்பட்டார். ஒரு பெரிய கட்டிடத்தைத் தாங்கும் நான்கு தூண்கள் போல இந்த வியாபாரம் இப்போது நிமிர்ந்து நிற்கிறது. அதில் ஒரு தூண் விலகினாலும் அந்தக் கட்டிடமே சரிந்து விழுந்துவிடுமே. பின் தூக்கி நிறுத்துவது என்பது மிகவும் சிரமமான காரியமாகிவிடுமே. என்னதான் புதிதாக தொழில் தொடங்கினாலும், வளர்ந்த இந்த நிலைக்கு வர இன்னும் பல காலங்கள் பிடிக்கலாமே என்று மிகவும் வருந்தினார். அது மட்டும் இல்லை இறுதியாக உங்களுக்கு சில சோதனைகள் வைத்து அதற்கான ஒரு பெட்டியை என்னிடம் கொடுத்திருக்கிறார். நீங்கள் அதனைப் பார்த்துவிட்டு, அதற்குப் பிறகும் பிரிந்து செல்ல விரும்பினால் உங்களுக்கு இந்த சொத்தை பிரித்துக் கொடுக்கும் திட்டமும் வகுத்துக் கொடுத்திருக்கிறார். அதனால் நீங்கள் முதலில் இந்தப் பெட்டியைப் பாருங்கள். தேவையென்றால் அடுத்த பெட்டியை பிறகு எடுத்துக் கொள்ளலாம்” என்றார். 

நான்கு மகன்களும் அப்பா அப்படி என்னதான் அதில் புதிதாக சொல்லியிருக்கப் போகிறார், இதுவரை சொல்லாத ஒன்றை என்று சற்று அசட்டையாகத்தான் பார்த்தார்கள். எது எப்படியோ அப்போதைக்கு அதைவிட்டால் வேறு வழியுமில்லையே என்று அமைதியாக ஒத்துழைத்தனர் நால்வரும். தினகரன் பெட்டியைத் திறந்து காட்டியபோது நால்வருக்கும் ஒன்றும் புரியவில்லை. காரணம் அதனுள் இருந்தது ஒரு கட்டு சுள்ளிக் கட்டும் மற்றும் ஒரு சிடியும் தான். அவர் எழுதி வைத்திருந்த ஒரு சிறு குறிப்புச் சீட்டை எடுத்து வாசித்தவாறு, அவர் அந்த சுள்ளிக்கட்டை ஒவ்வொருவரிடமும் கொடுத்து அப்படியே முறிக்கச் சொன்னார். ஆனால் ஒருவராலும் அதை முறிக்க முடியவில்லை. பின் அதைப் பிரித்து ஒவ்வொரு சுள்ளியாகக் கொடுத்து உடைக்கச் சொன்னபோது எளிதாக அனைத்தையும் உடைத்துப் போட்டுவிட்டார்கள் அனைவரும். ஓரளவிற்கு புத்தி தெளிந்தாலும் வெளிப்படையாக அவர்களிடம் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. ஆனால் அடுத்து அவர் தன் காணொளிப் பெட்டியில் அந்த சிடியைப் போட்டு காட்டியவுடன், அவர்கள் நான்கு பேர் கண்களிலும் கண்ணீர் துளிகளுடன், மனதில் தெளிவும் ஏற்பட்டது. அப்படி என்னதான் இருந்தது அந்த காணொளியில்? உங்களுக்கும் தெரிய வேண்டுமா? சொல்கிறேன் கேளுங்கள்:


 தென் ஆப்ரிக்கக் காட்டில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம் பற்றிய பதிவுதான் அது.  அதில் கதாநாயகர்கள் நம் மனித இனம் இல்லை. அதற்கும் மேலான மிருக இனங்கள்!  யூட்யூப் தளத்தில் பதிவான அந்த காணொளி இதோ இங்கே: http://www.youtube.com/watch?v=LU8DDYz68kM பார்க்கலாம் நான்கு கோடிக்கும் மேலானவர்கள் இந்த காணொளியைக் கண்டு களித்துள்ளனர் என்ற குறிப்பையும் தந்தை கொடுத்திருந்தார். யூட்யூபில் இதுவரை அதிகம் பார்க்கப்பட்ட காணொளிகள் வரிசையில் இது 35 வது இடத்தில் உள்ளதாம். இதையெல்லாம் கேட்டவுடன் மிக ஆர்வமாக அந்த காணொளியை பொறுமையாகப் பார்க்க ஆரம்பித்தனர் நால்வரும்.


காட்டின் ஒரு ஆற்றின் கரையோரமாக சில எருமை மாடுகள் மேய்ந்து கொண்டு இருக்கின்றன. அவற்றில் இரண்டு மாடுகள் மட்டும் தன் கன்றுடன் தனியே வருகின்றன. உடனே அதன் வருகையை எதிர்பார்த்து, பதுங்கி இருக்கும் சிங்கங்கள்  அவற்றின் மீது பாய்கின்றன. அனைத்து எருமைகளும் சிதறி ஓடுகின்றன. ஒரு எருமைக்கன்று மட்டும் அந்த சிங்கங்களிடம் சிக்கி விடுகிறது. சிங்கங்களின் துரத்தலில் பாவம் அந்த கன்று  ஆற்றில் விழுந்து விடுகிறது. விடாமல் அந்த சிங்கங்கள் அதனை ஆற்றிலிருந்து வெளியே இழுத்துக் கொண்டிருக்கிறது. அதோடு இல்லாமல், ஆற்றினுள் இருந்த முதலை ஒன்று அந்த எருமைக் கன்றைக் கவ்வி இழுக்கிறது. இரண்டிடமும் மாட்டிய கன்று ஓலமிடுகிறது. ஆனால் இறுதியில் அந்த சிங்கங்கள் கன்றை மீட்டு  வெளியே இழுத்துப் போட்டு சுற்றி நின்று கடித்துக் குதற தயாராகின்றன. திடீரென்று நம்ப முடியாத ஒரு திருப்பம். தப்பிச் சென்ற இரண்டு பெரிய எருமைகளும் சும்மா இருக்கவில்லை. ஓடிப்போய் தன் கூட்டத்தை திரட்டி வந்து விடுகின்றன. எந்த மொழியில் என்ன சொல்லி அவைகளுக்குப் புரிய வைத்து எப்படி கூட்டி வந்ததோ தெரியவில்லை! ஆரம்பத்தில் தைரியமாக எதிர்த்து நின்ற சிங்கங்கள், அந்த  எருமைகளின் கோபாவேசமான தாக்குதலால் தூக்கி வீசப்படுகின்றன. அலறியபடி சிங்கங்கள் சிதறி ஓடுகின்றன.என்ன ஆச்சரியம்! எத்துனை பலசாலியான சிங்கக் கூட்டம், ஒற்றுமையுடன் கூடிய  எருதுகளின் எதிர்ப்பைத் தாங்க முடியாமல் ஓடுகின்ற காட்சி. எட்டு நிமிடங்களில் ஒரு வாழ்க்கைத் தத்துவத்தையே அவர்களுக்குப் புரியவைத்துவிட்ட பதிவு!

பின் என்ன. இதற்கு மேலும்  பிரிந்து செல்ல அவர்கள் முட்டாள்களா என்ன. அடுத்த பெட்டி பற்றி எதுவுமே கேட்காமல் அனைவரும் புன்னகையுடன், தினகரன் ஐயாவிற்கு நன்றி கூறிவிட்டு ஒன்றாக கிளம்பிச் சென்றார்கள். வெகு சீக்கிரமே அவர்களுடைய வியாபாரம் இந்திய அளவில் மிக உயர்ந்து நின்றதை சொல்லவும் வேண்டுமோ? அவர்கள் தந்தையின் ஆன்மாவும் சாந்தியடைந்திருக்கும் என்றும் நம்பினார்கள் அவர்கள்.

5 comments:

 1. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்ற நீதிக்கதைகள் எல்லாமே மிக அருமையாக உள்ளன. பாராட்டுக்கள். பாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 2. ’காணொலி’ என்று கொடுத்துள்ள இடங்களிலெல்லாம் ’காணொளி’ என்று இருந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிங்க வை.கோ. சார். திருத்திவிட்டேன். முழுவதும் பொறுமையாக படித்துள்ளமைக்கு மனமார்ந்த நன்றி.

   அன்புடன்
   பவளா

   Delete
  2. மிக்க நன்றி. இன்னும் ஓர் இடத்தில் மாற்ற வேண்டியது உள்ளது.

   //தென் ஆப்ரிக்கக் காட்டில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம் பற்றிய பதிவுதான் அது. அதில் கதாநாயகர்கள் நம் மனித இனம் இல்லை. அதற்கும் மேலான மிருக இனங்கள்! யூட்யூப் தளத்தில் பதிவான அந்த கா ணொ லி இதோ இங்கே //

   என் முதல் பின்னூட்டத்தில் ’வாழ்த்துகள்’ என்ற வார்த்தை அவசரத்தில் தவறுதலாக ‘பாழ்த்துகள்’ என்று விழுந்துள்ளது.

   வருந்துகிறேன். மன்னிக்கவும்.

   வா ழ் த் து க ள்.

   Delete
 3. கதை மிகவும் அருமை...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete