Tuesday, March 18, 2014

பாட்டி சொன்ன கதைகள் - 24

மனு நீதிச் சோழன்

ஹாய் குட்டீஸ் நலமா?


இன்று நம் நாட்டில் இருக்கும் ‘ஜனநாயகம்’ எனும் அரசியல் முறை, மக்களுடைய மக்களுக்கான ஆட்சி. ‘மக்களால் மக்களுக்கான மக்களின் ஆட்சியே ஜனநாயகம்’, என ஆபிரகாம் லிங்கன் குறிப்பிட்டுள்ளார்.  நம் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன் அந்நிய தேசத்தவர் நம்மை அடிமைப்படுத்தியிருந்தனர். அவர்களிடமிருந்து நம் நாட்டை மீட்டு நம்மையெல்லாம் சுதந்திரமாக வாழ வழி செய்த, ஜான்சி ராணி, வேலு நாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன், மகாத்மா காந்தியடிகள், நேரு, வ.வு.சிதம்பரனார், கோகலே, நேதாஜி போன்ற பலர் தம் இன்னுயிரையும் அளித்துள்ளனர். நம் நாட்டிற்கு வியாபாரம் செய்ய வந்த வெள்ளையர்களிடம்  அடிமைப்பட்டுக் கிடந்த ஆட்சிக்கு முன்னால் நம் நாட்டில் மன்னர் ஆட்சி இருந்தது.  பெரும்பாலான மன்னர்கள் மக்கள் நலனுக்காகவே பல்வேறு தியாகங்கள் செய்து அரசாட்சி செய்து வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட மண்னர்களில் குறிப்பிடத்தக்கவர் நீதி தவறாத ஒரு அரசன் என்று வரலாற்றில் நினைவுச் சின்னமாக இன்றுவரை இடம் பிடித்திருக்கும் மனுநீதிச் சோழன் என்பவன். அப்படி என்ன அவன் சாதித்துவிட்டான் என்று கேட்கிறீர்களா? இதோ கேளுங்கள் அவன் கதையை!
காவிரி பாயும், ‘சோழவள நாடு சோறுடைத்து’ என்பது ஆன்றோர் வாக்கு! நீர் வளமும், நில வளமும் சேர்ந்து மன்னனையும், மக்களையும் மகிழ்ச்சியுற ஒன்று கலந்து வாழ வைத்திருந்தது என்றால் அது மிகையாகாது. இப்படிப்பட்ட சோழ நாட்டை மனுநீதி என்னும் அரசன் ஆட்சி புரிந்து வந்தான். நீதி நெறி தவறாது ஆட்சி புரிந்து வந்த மன்னனை மக்கள் தெய்வமாகப் போற்றி வாழ்ந்தனர். பல காலம் குழந்தைப்பேறு இல்லாமல் வாழ்ந்த மன்னனுக்கு வெகு நாட்களுக்குப் பிறகு ஆண்டவன் அருளால் அற்புதமான ஒரு குழந்தை பிறந்தது.  மன்னனும், மக்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி, அக்குழந்தைக்கு வீதி விடங்கன் என்று அருமையாக பெயரிட்டு, அன்பாக வளர்த்து வந்தனர். ஊர் மக்கள் அனைவரும் வீதி விடங்கன் மீது அளவற்ற அன்பு கொண்டவர்களாக இருந்தனர். தந்தையைப் போலவே அறிவிலும், நற்பண்புகளிலும் சிறந்தவனாகவே விளங்கினான் அவன். அத்தோடு, குதிரை ஏற்றம், யானை ஏற்றம், வாட்பயிற்சி, தேர் ஓட்டம் போன்ற அனைத்துக் கலைகளிலும் மிகச் சிறந்து விளங்கினான் அந்த இளவரசன். 


மக்களின் நலம் விரும்பியான, எளிமையான மன்னனாக, தம் குடிகளின் நன்மையைக் கருதி ஒவ்வொரு செயலும் பார்த்துப் பார்த்து செய்து வந்தான் மனுநீதிச் சோழன். மக்களும் மன்னன் மற்றும் இளவரசனின் மீது மாறாத அன்பு கொண்டவர்களாக இருந்தனர். மக்கள் தங்களுக்குத் தேவையான எந்த நேரமும் மன்னனைச் சந்தித்து முறையிட்டு, தம் துயர் துடைத்துக்கொள்ளும் பொருட்டு, ஒரு ஆராய்ச்சி மணியையும்  அரசவையின் வாயிலின் முன்பு கட்டி வைத்திருந்தான். மணியை ஒலித்தால் அரசர் நேரில் வந்து குறையைக் கேட்டறிந்து அதற்கான தீர்வும் சொல்வார். இதனால் மக்களுக்கு பெரும் நம்பிக்கையும் பிறந்தது. ஆண்டுகள் பல கடந்தும் ஆராய்ச்சி மணியை அடிப்பார் இல்லை. காரணம் மக்களுக்கு எந்த குறையுமே இல்லாததால் அதற்கான தேவை ஏற்படவேயில்லை. ஆனால் ஒரு பெரும் சோதனை ஏற்பட்டது மன்னன் மனுநீதிச் சோழனுக்கு! 

ஒரு நாள், இனிய மாலைப்பொழுதில் இளவரசன் வீதிவிடங்கன், உல்லாசமாகத் தன் தேரில் ஏறி நகர் வலம் வந்தான். அதே வேளையில் ஒரு கன்றும் தன் தாய்ப்பசுவை விட்டு துள்ளிக் குதித்தபடி தெருவில் ஓடிவந்தது.  இளவரசனின் தேர் வரும் அதே பாதையில் அந்தக் கன்றும் கவலையில்லாமல்  துள்ளிக் குதித்தபடி ஓடி வர.. அந்தோ பரிதாபம்! அந்த இளவரசனின் தேர்க்காலில் சிக்கி அந்த இடத்திலேயே மாண்டது அந்த கன்றுக்குட்டி. அதிர்ச்சியில் உறைந்தவனாக இளவரசன் வீதிவிடங்கனும் அதன் அருகிலேயே உட்கார்ந்து என்ன செய்வது என்று புரியாமல் கதறி அழ ஆரம்பித்தான். மக்களும் தெரியாமல் ஏற்பட்ட இந்த விதியின் விளையாட்டை எண்ணி நொந்து, செய்வது அறியாது, மக்களும் மயங்கி நின்றனர். தவம் இருந்து பெற்ற ஒரே வாரிசான இளவரசன் தண்டனை பெறுவதை நினைத்தும் பார்க்க முடியாதலால் மன்னனிடம் ஒருவரும் இச்செய்தியைச் சொல்ல விரும்பவில்லை. ஆனால் அந்த தாய்ப்பசுவோ, நேரே அரண்மனை வாயிலில் உள்ள ஆராய்ச்சி மணிக்குச் சென்று அதனை பலம் கொண்டமட்டும் இழுத்து ஒலி எழுப்பியது. சத்தம் கேட்டு ஓடி வந்த அரசரும், கண்ணீர் மல்க துவண்டு கிடக்கும் பசுவைக் கண்டு மனம் பதறி அதனை தடவிக் கொடுத்தவாறு, காரணம் அறியத் துடித்தார். அதற்குள் அந்த பசுவும் மன்னரின் முகத்தை பரிதாபமாகப் பார்த்துவிட்டு நகர ஆரம்பித்தது. தன்னைத் தொடரும்படி கூறியது போலிருந்தது அதன் செயல். மன்னர் சற்றும் தயங்காமல் அதன் பின்னால் செல்வதைக் கண்ட மக்களும் அவர் பின்னாலேயே சென்றனர். தன் நாட்டு மக்களுக்கு எந்த ஒரு குறையும் இல்லை என்ற மகிழ்ச்சியில் பெருமை கொண்டிருந்த மன்னனுக்கு ஒரு பசுவின் குறை கண்டு அதிர்ச்சி மேலிட, பலவிதமான குழப்பங்களுடன் அதன் பின்னால் சென்று கொண்டிருக்கிறான்.


அந்தப் பசு நேரே தன் கன்று அடிபட்டு மாண்டு கிடந்த இளவரசனின் தேர் இருந்த பக்கம் வந்து நின்று தன் நாவால் கன்றை நக்கியவாறு கண்ணீர் பெருக்கியது. மன்னனின் உள்ளத்தை உருக்கியது இக்காட்சி. கண்கள் சிவந்து, உள்ளம் நெகிழ்ந்து மந்திரியை அழைத்து, அப்படி ஒரு பாவத்தைச் செய்தவனை உடனடியாக அழைத்து வரும்படி ஆணையிட்டான். அருகில் இருந்த மக்கள் அனைவரும் வாய்மூடி மௌனமாக இருந்தனர்.  தான் நீதி தவறிய மன்னனாக இருக்க விரும்பவில்லை என்று மக்களிடம் மன்றாடிக் கேட்டும், ஒருவரும் இளவரசனை காட்டிக்கொடுக்கத் தயாராக இல்லை. உண்மையைச் சொல்லாவிட்டால், நானே என்னுயிரை மாய்த்துக் கொள்வேன் என்று மன்னன் வாளை உயர்த்திய மறுநொடி, இளவரசன் வீதிவிடங்கன் தலை குனிந்தவாறு தந்தையின் முன் வந்து நின்றான். தான் தெரியாமல் தப்பு செய்துவிட்டதாக வருந்தினான்.  ஆனால் அரசர் இந்த தாய் படும் துயரம் இந்த குற்றம் செய்தவனின் தாயும் படவேண்டியதுதான் நியாயம் என்று சொல்லி, சேவகரை அழைத்து, தேரைப் பூட்டி, கன்று அடிபட்ட அதே இடத்தில் வீதிவிடங்கனை நிறுத்தி, அவன் மீது தேரை ஏற்றச் சொல்லி ஆணையிட்டார். தவறு செய்தவன் கட்டாயம் தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும் என்றார் மன்னர். ஆனால் இந்தக் கொடுமையைச் செய்ய எவரும் முன்வரவில்லை. இளவரசரைக் கொல்ல ஒருவருக்கும் மனம் வரவில்லை. நீதி தவறாத மன்னர் மனுநீதி சோழர், தானே தேரின்மீது ஏறி அமர்ந்து, வீதிவிடங்கனை தேர்க்காலில் இட்டு, தேரை செலுத்தத் தொடங்கினார். தேர் விரைவாக ஓடத் தொடங்குகிறது. மந்திரி மன்னரை தடுத்து நிறுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார். மக்களோ இளவரசரை விடுவிக்கச் சொல்லி மன்றாடிக்கொண்டிருந்தனர். ஆனால் மன்னரோ எதையும் காதில் வாங்காமல் தேரை வேகமாக செலுத்திக் கொண்டிருந்தார். அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது.

ஆம், வீதிவிடங்கனின் அருகே வந்தவுடன், அந்த தேர் அப்படியே நிலைத்து நின்றது. அதற்குமேல் நகர மறுத்தது. உடனே இரத்த வெள்ளத்தில் கிடந்த கன்றும், கன்றை இழந்த சோகத்தில் துடித்துக் கொண்டிருந்த பசுவும் மாயமாய் மறைந்தன. மக்கள் அனைவரும் இந்தக் காட்சியை திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது வானத்திலிருந்து ஒரு அசரீரி வந்தது. தேவேந்திரனின் அரசவையில் மனுநீதிச் சோழனின் நீதி நெறி பற்றிய சர்ச்சை எழுந்ததால், அதன் சிறப்பு பற்றி அறியவே தேவேந்திரன் பசுவாகவும், எமதர்மன் கன்றாகவும் வந்ததாகச் சொன்னார் தேவேந்திரன். மன்னரின் நேர்மையையும், நீதி வழுவாத தன்மையையும் கண்டு மனம் மகிழ்ந்து வாழ்த்திவிட்டுச் சென்றனர். தன் மகனை மகிழ்ச்சியுடன் அணைத்து உச்சி முகர்ந்த மன்னர் இறைவனுக்கு நன்றி சொல்லி வாழ்நாள் முழுவதும் நீதி தவறாமல் ஆட்சி புரிந்து வந்தார். 

சரி நம்ம கதைக்கு வருவோமா?

குரங்கும், ஏமாந்த பூனைகளும்!


ஒரு ஊரில் இரண்டு பூனை நண்பர்கள் இருந்தனர்.  அவர்கள் தினமும் சுற்றித் திரியும் வீதியில் ஒரு மூலையில் ஒரு பாட்டி அப்பம் சுட்டு விற்றுக் கொண்டிருப்பார். இந்தப் பூனைகளுக்கு அந்த அப்பம் சாப்பிட வேண்டும் என்பது நீண்ட நாளைய ஆசை. அதற்கான தருணம் பார்த்து காத்துக் கொண்டிருந்தன அந்த பூனைகள். ஆனால் அந்த பாட்டி அந்த இடத்தைவிட்டு நகருவதே இல்லை என்பதால் பாவம் அந்த பூனைகள் அப்பத்திற்காக ஏங்கிக் கொண்டிருந்தன, ஒரு நாள் அதற்கான வாய்ப்பு கிடைத்தது.  அந்த இரண்டு பூனைகளில் ஒரு பூனை, பாட்டி எழுந்து அந்தப் புறம் சென்றதைப் பார்த்து மற்றொரு பூனையிடம் சொல்ல, அதுவும், “அண்ணாச்சி, நான் இங்கன நின்னு பாட்டி வறாகளான்னு பாத்துக்கறேன். நீனு போய் அப்பத்தை எடுத்துக்கிட்டு ஓடியாந்துடு. நாம பங்கு போட்டு திங்கலாம்” என்றது.

அந்த இன்னொரு பூனை “ஆகா, நல்ல யோசனை தம்பி, அப்படியே செய்யலாம்” என்று உடனே சம்மதித்து ஓடிப்போய் பாட்டி வருவதற்குள் ஒரு அப்பத்தை எடுத்துக்கொண்டு, அழகிகள் போல வெற்றி நடை போட்டுக்கொண்டு வந்தது. பல நாளைய ஆசை நிறைவேறிய கொண்டாட்டத்தில் இரு நண்பர்களும்,  சாப்பிட நினைத்தபோது, ஒரு அப்பத்தை எப்படி இரண்டு பேரும் சாப்பிடுவது என்று நினைத்து, ஆளுக்குப் பாதி வைத்துக் கொள்ளலாம் என்றால் யார் பங்கிடுவது என்ற விவாதம் வந்தது. இருவருக்கும் ஒருவர் மேல் ஒருவருக்கு நம்பிக்கை வரவில்லை. இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த மரத்தின் மேல் இருந்த குரங்கு ஒன்று, மெல்ல இறங்கி வந்ததோடு, இவர்களுடைய சூழ்நிலையை உணர்ந்து,  அந்த அப்பத்தை தானே இருவருக்கும் சரி பாதியாகப் பங்கிட்டுக் கொடுப்பதாக நல்லவனைப்போல  சொல்லியது. இதனை அப்படியே நம்பிக்கொண்டு அந்த அப்பத்தை அந்த குரங்கிடம் கொடுத்தன அந்த அப்பாவி பூனைகள். 

குரங்கும் இதுதான் சமயம் என்று மகிழ்ந்து, அந்தப் பூனைகளிடம் தராசு கொண்டுவரச் சொன்னது. தராசிற்கு நாங்கள் எங்கே போவது என்று சொல்லிவிட்டது அந்த பூனைகள். உடனே அந்த குரங்கு, ‘அப்படியா, அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை. இதோ என் கைகளையே தராசக்கி உங்களுக்கு சரி சமமாகப் பங்கிட்டுக் கொடுக்கிறேன் பாருங்கள்’ என்று பெருமையாகச் சொன்னதை நம்பிக் கொண்டு வாயில் உமிழ் நீர் சுரக்க அந்த அப்பத்திற்காகக் காத்துக்கொண்டிருந்தன அந்த இரண்டு பூனைகளும். 


குரங்கு முதலில் அப்பத்தை இரண்டாகப் பிட்டு அதை இரண்டு கைகளிலும் வைத்து கனம் பார்த்தது. ஒரு கை சற்று தாழ்ந்து, அந்தப் பகுதி பெரிதாக இருப்பது போல காட்டியது. உடனே சற்றும் தயங்காமல் அதிகமாக இருந்த அந்தப் பகுதியில் கொஞ்சம் பிய்த்து தன் வாயில் போட்டுக்கொண்டது. அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்த பூனைகள், சரி மீதமுள்ளதையாவது தங்களுக்கு கிடைத்துவிடும் என்று ஆவலாகப் பார்த்துக்கொண்டிருந்தது. ஆனால் அந்தக் குரங்கு மீண்டும், மீண்டும் இதே முறையில் அப்பத்தை பெரிதும், சிறிதுமாகவே பிய்த்து, அதிகமாக இருப்பதை தானே சாப்பிட்டு, இறுதியாக இருந்த சிறிய துண்டையாவது தங்களுக்குக் கொடுக்காதா என்று பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அந்த கடைசி துண்டு அப்பத்தையும் வாயில் போட்டுக்கொண்டு ஓடி மரத்தின்மீது ஏறிக்கொண்டது. ஏமாந்து போன பூனைகள் ஒன்றை ஒன்று வருத்தமாகப் பார்த்துக்கொண்டு அடுத்த வாய்ப்பு எப்போது கிடைக்கும் என்று தெரியாமல், செய்வதறியாது நின்று கொண்டிருந்தன. 

இப்படித்தான் குழந்தைகளே இன்று பலர் வரப்புத் தகராறு, வாய்க்கால் தகராறு என்று சின்ன சின்ன விசயங்களுக்கெல்லாம், தம் சகோதரர்கள் அல்லது  சக மனிதர்களிடம் சண்டை போட்டுக்கொண்டு, நீதிமன்றம், வக்கீல் என்று வருடக் கணக்காக அலைந்து கடைசியில் தம் சொத்தில் பெரும் பகுதியை அதற்காகவே செலவும் செய்துவிட்டு ஏமாந்துபோய் நிற்பவர்களுக்கும் இந்த பூனைகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்பது புரிகிறதல்லவா? வாழ்க்கையில் கொஞ்சம் விட்டுக்கொடுத்துப் போவதால் பல இழப்புகளை தவிர்ப்பதோடு, சில நன்மைகளையும் பெற முடியும் என்பதை உணருகிறீர்கள்தானே?


1 comment:

  1. சிறப்பான கதை... இன்றைய நிலைக்கு மிகவும் தேவையான கதையும் கூட...!

    ReplyDelete