Saturday, May 24, 2014

பாட்டி சொன்ன கதைகள் - 28
பவள சங்கரி


ஹாய் குட்டீஸ் நலமா?

வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும்!


சிரிப்பு என்றால் என்ன? இதைக்கேட்டவுடன் சிரிப்பு வருகிறதா? ஆமாம், இந்த உலகில் உள்ள பல கோடி உயிரினங்களில் மனிதனால் மட்டுமே சிரிக்க முடியும் தெரியுமா? .  மனிதரோடு உடன் பிறந்த உணர்வுகள் பல. அதில் மிகவும் முக்கியமானது சிரிப்பு.  நாம் ஒரு முறை சிரிக்கும் போது நம் உடலின் 300 தசைகள் அசைகின்றன என்கிறது விஞ்ஞானம்.   இந்த சிரிப்பு, உடல் ஆரோக்கியமாக இருக்கக்கூடிய  மனிதர்களிடமிருந்து வித விதமான சந்தர்ப்பங்களிலும் இயல்பாகத் தானாக வெளிப்படக்கூடிய ஒன்று. சிரிப்பு மட்டுமே நம் மனதையும், உடலையும் வலிமைப்படுத்தி  புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கக்கூடியது என ஆய்வுகள் கூறுகின்றன.   மனம் விட்டு, வாய்விட்டுச் சிரித்தால் நம்  உடலிலும், மனதிலும் உள்ள அழுத்தங்களும், கவலைகளும் வெளியேறுகின்றன.  முகத்திலுள்ள தசைகளும், நெஞ்சுத் தசைகளும் பலம் பெற்று ஆரோக்கியத்தைத் தருகின்றன. நோய் எதிர்ப்பு சக்தியும் கூட  அதிகமாகின்றதாம். சிரிக்கும் போது கவனித்துப் பாருங்களேன். மூச்சை நம்மால் ஆழமாக இழுக்க முடியும். அதனாலேயே தேவையான ஆக்சிஜனை எளிதாக உள்வாங்கிக் கொள்ள முடிகிறது. மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடிய ஹார்மோன்களை இந்த சிரிப்பின் மூலம் மூளை உடலுக்கும் பரவச்செய்வதால், உடலும் நல்ல ஆரோக்கியமாக ஆகிறது. கபடமற்ற  குழந்தைகள் கண்டதற்கெல்லாம்  சிரித்து மகிழ்வார்கள். அவர்கள் நாளொன்றுக்கு சராசரியாக 400 முறைகள் சிரிக்கிறார்கள் என்றும் , பெற்றோர்கள் 15 முறைகள் மட்டுமே  சிரிக்கிறார்கள் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. சிரிப்பு என்பது ஒரு தொற்று வியாதி போல. ஆமாம், கூட்டமாக இருக்கிற ஒரு இடத்தில் ஒருவர் சிரிக்க ஆரம்பித்தால் அது மளமளவென்று அங்கிருக்கும் அனைவரையும் தொற்றிக்கொள்ள ஆரம்பித்துவிடும். சிரிப்பில்,  புன் சிரிப்பு அசட்டுச் சிரிப்பு, ஆணவச் சிரிப்பு,  ஏளனச் சிரிப்பு, சாகசச்  சிரிப்பு, நையாண்டிச் சிரிப்பு என பலவகை உண்டு. 


 பெருந்தலைவர்கள்,  சொற்பொழிவாளர்கள் போன்ற பலர் இயல்பாகத் தங்கள் நகைச்சுவையை வெளிப்படுத்தி சபையோரை சிரிக்கவும் சிந்திக்கவும்  வைப்பார்கள். சில கலைஞர்களைப் பார்த்தவுடன் பொத்துக்கொண்டு சிரிப்பு வரும். அவர்களுடைய ஒவ்வொரு நடவடிக்கையும் , கண்களை உருட்டிப் பார்க்கும் ஒரு பார்வை கூட, அப்படி ஒரு சிரிப்பை வரவழைத்துவிடும், சார்லி சாப்ளின் படம் பார்த்திருப்பீர்கள் இல்லையா. அதுபோல இன்றும் கூட பல திரைப்பட நடிகர்கள் மற்றும் நாடக நடிகர்களென பலர் இருக்கிறார்கள்.  

மிகப்பெரும் தத்துவ அறிஞரான பெர்னாட்ஷா, ஒரு முறை அழைப்பின் பேரில்  ஒரு வயலின் கச்சேரிக்குச் சென்றிருந்தார். கச்சேரி முடிந்தவுடன், அங்கிருந்த பெண் நிர்வாகி ஒருவர் இவரிடம் வந்து,  வயலின் வாசித்த அந்த கலைஞரைப் பற்றி தான் நினைப்பதைக் கூறும்படி கேட்டார்.

அதற்கு ஷா சற்றும் தயங்காமல், " பாதரவ்ஸ்கியை (பாதரவ்ஸ்கி இன்னொரு இசைக் கலைஞர்) நினைவூட்டுகிறார்" என்று பதில் அளித்தார்.

அந்த நிர்வாகிக்கு இந்த பதில் மிகவும் ஆச்சரியமாகிவிட்டது.  "பாதரவ்ஸ்கியா..? அவர்  ஒரு வயலின் கலைஞர் இல்லையே." என்று இழுத்தார்.

அதற்கு ஷாவும் முகத்தில் எந்தவிதமான உணர்வையும் காட்டாமல், "இவர் மட்டும் என்னவாம்?!" என்றாராம்.

அந்த நிர்வாகியின் முகத்தில் ஈயாடவில்லையாம், வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல மெதுவாக..  யார் மனதும் புண்படாமல், சிரித்துக்கொண்டே,  தான் சொல்ல வந்த கருத்தை உறுதியாக,  தெளிவாக எப்படிச் சொல்கிறார் பாருங்கள். இதெல்லாம் ஒரு கலை இல்லையா? 


இதேபோல கிருபானந்த வாரியார் சுவாமிகள் ஒரு முறை, சென்னையில் உள்ள ஒரு  கோவிலிற்கு சொற்பொழிவிற்காக வந்திருந்தார். வாரியார் சொற்பொழிவு என்றால் கூட்டத்திற்குக் கேட்கவா வேண்டும். மக்களெல்லாம் அடித்துப் பிடித்து இடம் பார்த்து உட்கார்ந்துவிட்டார்கள். வாரியார் சுவாமிகள் வரும் நேரமும் ஆகிவிட்டது.  இந்த நேரம் பார்த்து திடீரென்று மழை வந்துவிட்டது. எப்படியிருக்கும் மக்களுக்கு, உடனே அனைவரும் மளமளவென்று கோவிலுக்குள் சென்று நெருக்கமாக உட்கார்ந்து கொண்டார்கள்.  வாரியார் சுவாமிகளும் உள்ளே வந்து சொற்பொழிவாற்ற  ஆரம்பிக்கும் போது, மிக நகைச்சுவையாக, கந்தபுராண சொற்பொழிவு என்று நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அன்பர்கள் பெரியவால் போஸ்டராக  வருணலோகம் வரையிலுமே ஒட்டிவிட்டார்கள். வருணபகவானின் கண்ணில் பட்டுவிட்டது அந்த போஸ்டர்.  “ஆகா, நம்மையே சூரபத்மனின் சிறையிலிருந்து விடுவித்த முருகனின் கதையாச்சே இது. நாம் போகாவிட்டால் நல்லாயிருக்காதே என்று தாமும் வந்துவிட்டார் பாருங்கள்” என்று சொன்னபோது மக்கள் அனைவரும் வாய்விட்டு, கைதட்டி மனமாரச் சிரித்தார்கள். அதோடு விடவிவில்லை அவர். கைதட்டல் அடங்கியவுடன் மீண்டும், ”பார்த்தீர்களா உங்களையெல்லாம் எப்படி ஒற்றுமையுடன், நெருக்கமாக உள்ளே வந்து உட்காரவைத்துவிட்டார்” என்று அழகாகப் பேசி, அப்படி ஒரு இறுக்கமான சூழலை  சிரிப்பும், கைதட்டலுமாக மாற்றிவிட்டார் பாருங்கள். இது அவருக்கு முழுமையான வெற்றி அல்லவா!

நன்றாக சிரிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அடுத்தவரை சிரிக்க வைக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும்.  நாமெல்லாம் மனிதரை சிரிக்க வைக்கவே பெரும்பாடு படவேண்டியதாக இருக்கிறது. ஒரு சிறுவன், சாமியையே, அதுவும் கோபக்காரியான அந்த மாகாளியையே சிரிக்க வைத்த கதை தெரியுமா?


சுமார் 480 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது இது. ஆந்திர மாநிலத்தில் இருக்கும் ஒரு சிற்றூர். அங்கு மிகவும் ஏழ்மையான ஒரு அந்தணர் குடும்பம். அங்கு ராமன் என்று ஒரு சிறுவன் இருந்தான். இளமையிலேயே தந்தையை இழந்தவன் அவன். அதனால் தெனாலி எனும் ஊரில் இருந்த தன் தாய்மாமனின் ஆதரவில் தங்க வேண்டிய சூழ்நிலை தாய்க்கும், மகனுக்கும் ஏற்பட்டது. பள்ளி சென்று படிப்பது அவனுக்குப் பிடிக்காத விசயமாக இருந்தது. ஆனால் நல்ல அறிவுக் கூர்மையும், நகைச்சுவை உணர்வும் கொண்டவனாக இருந்தான் அவன். தன் தாயைக் காப்பாற்ற வேண்டிய நிலையில் இருந்தான்.  காட்டிற்குச் சென்று ஏதாவது கூலி வேலை செய்யவோ அல்லது விறகு வெட்டி வந்து விற்றோ பிழைப்பு நடத்தலாம் என்று நினைத்து காட்டிற்கு வந்தான்.  பிழைப்பதற்கு ஏதாவது வழி வேண்டுமே என்று யோசித்தபடி ஒரு மரத்தின் அடியில் சாய்ந்து உட்கார்ந்திருந்தான். பசியும், களைப்பும் பாடாய்ப்படுத்தியது அவனை.  அப்போது அந்தப் பக்கமாக ஒரு முனிவர் அருகில் இருந்த ஆற்றங்கரையிலிருந்து குளித்துவிட்டு வந்தவர், சோர்ந்து கிடக்கும் ராமனைப் பார்த்து, பரிதாபம் மேலிட,“மகனே, யாரப்பா நீ? இந்த அடர்ந்த காட்டிற்குள் என்ன செய்கிறாய்?” என்று கேட்டார்.

“சுவாமி, வணக்கம்.  என் பெயர் ராமன்.  பிழைப்பைத் தேடி வந்தேன்.  நானும் என் தாயும், வறுமையில் வாடுகிறோம். என் தந்தையும் இப்போது உயிருடன் இல்லை. என் தாயை காப்பாற்ற வேண்டும். ஒரு வழி சொல்லுங்கள் சுவாமி” என்று அவர் காலில் சென்று நெடுஞ்சாண்கிடையாக விழுந்தான். அவனைப் பார்த்து பரிதாபப்பட்ட முனிவர்  சற்று தூரத்தில் இருந்த காளி கோவிலுக்குச் சென்று அன்னையின் காலில் விழுந்து தனக்கு ஒரு வழி வேண்டும் என்று கேட்கச் சொன்னார். அதற்கு, ராமனும், “சாமீ, நான் போய் கூப்பிட்டால் அவள் எங்க வரப்போறாள், நானும் தினமும் புலம்பிக்கிட்டுதான இருக்கேன். அவ காதில எங்க கேக்குது. நீங்க வந்து கொஞ்சம் சொல்லுங்க சாமி” என்று கெஞ்சிக் கேட்டான். அவனைப் பார்க்கவே பாவமாக இருந்ததால், அந்த முனிவரும், “நான் உனக்கு ஒரு மந்திரம் சொல்லித்தருகிறேன். அதை 1008 முறை இடைவிடாமல், அந்த அம்மனை மனமார வேண்டி, உச்சாடணம் செய்தால், அம்மன் நேரில் தோன்றுவாள். உனக்கு வேண்டும் வரம் கேட்கலாம் என்று சொல்லி வாழ்த்திச் சென்றார்.  ராமனும் அவரை வணங்கிவிட்டு அம்மனைக் காண ஆவலுடன் கிளம்பினான். 

 காட்டின் உள்ளே வெகுதூரம் தேடியலைந்து வந்தவன், அங்கு ஒரு காளி கோவில் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியுடன், அம்மா.. அம்மா என்று கூவியழைத்துக்கொண்டே ஓடினான்.  அங்கு காளிதேவியின் சிலை பயங்கர வடிவில் இருந்தது. ராமனும் வேறு எதைப்பற்றிய நினைவும் இல்லாமல், முனிவர் பெருமான் சொன்ன அந்த மந்திரத்தை கண்களை மூடிக்கொண்டு பயபக்தியுடன் உச்சாடணம் செய்ய ஆரம்பித்தான். இந்த இளம் வயதில் இத்துனை பக்தியுடன், நம்பிக்கையுடன் 1008 முறைகள் அசராமல் மந்திரம் சொன்ன ராமனைக் கண்டு மனம் இரங்கி அம்மன் காட்சி கொடுத்தாள். சர்வ காளியின் உக்கிரமான உருவத்தைக் காணும் எவரும் அஞ்சி நடுங்குவர். இந்தச் சிறுவனின் முகத்தில் அந்த அச்சம் சற்றும் இல்லையே, என்று அந்த மாகாளியே ஆச்சரியப்பட்டுப் போனாள். நம்ம ராமன் அதோடா விட்டான். கொஞ்ச நேரம் அன்னையையே உற்றுப் பார்த்தவன், ‘கப..கப’ வென சிரிக்க ஆரம்பித்துவிட்டான். அன்னைக்கு மேலும் ஆச்சரியம்..

”அடேய், பாலகா ஏனடா இப்படி சிரிக்கிறாய், என்னை அழைத்துவிட்டு?” என்று கோபாவேசமாகக் கேட்டார்.

அதற்கு நம் ராமன், “ ஐயோ அம்மா, வேற ஒன்னுமில்லை. எங்களுக்கெல்லாம் இந்த ஒரு மூஞ்சும், ஒரு மூக்கும் வச்சுக்கிட்டே, சளி புடிச்சு தும்மல் வந்தால் அத்தனைப் பாடு படறோமே.. நீ இத்தனை முகமும், மூக்கும், கைகளும் வச்சிருக்கியே. உனக்கு தும்மல் வந்தால், எப்படியிருக்கும்னு நினைச்சுப் பார்த்தேன், சிரிப்பு வந்துடுச்சி.. இத்தனை கையும் வச்சு அத்தனை மூக்கையும் ஒன்னாத் துடைச்சா எப்படியிருக்கும்னு நினைச்சா சிரிப்பு, சிரிப்பா வருது தாயி” என்று சொல்லி மீண்டும் சிரித்தானாம். உடனே காளி தேவிக்கும் தாங்க முடியாத சிரிப்பு வந்து, அந்த சிரிப்பில் காடே அதிர்ந்து, அன்னையின் அந்த மகிழ்ச்சியால் காடெல்லாம் பூவும், மணமும், பழங்களும் செடிகளும், மரங்களும் பூத்துக்குலுங்கினவாம். 

சிரித்து முடித்த அன்னை மகிழ்ச்சியாக, “ இயற்கையிலேயே உனக்கு நகைச்சுவை உணர்வு உன்னுள்ளேயே உறைந்து கிடக்கிறது. மகிழ்ந்து போனோம். வேண்டும் வரம் கேள் மகனே!” என்றாராம்.

உடனே நம் ராமன், “அம்மா, நாங்கள் இன்பமாக வாழ எனக்கு நல்ல கல்விச் செல்வமும், நிறைய பணமும் வேண்டுமம்மா” என்றான்.

அப்போது அன்னை, தம் இரு கரங்களில் ஒன்றில் தங்கக் கிண்ணத்தில் பாலும், மற்றொரு கையில் வெள்ளிக் கிண்ணத்தில் பாலும்  வைத்து ராமனின் முன்னால் நீட்டி, “ராமா, நம்பிக்கையான உன் பக்தியை மெச்சினேன்.  இந்த இரண்டில் தங்கக் கோப்பையில் உள்ளது கல்வி மற்றொன்றான வெள்ளிக் கோப்பையில் உள்ளது செல்வம். இதில் ஒன்றை மட்டுமே நீ பருக வேண்டும். அந்த ஒன்று எது என்று நீயே தேர்ந்தெடுக்கலாம்” என்றார்.

ராமனுக்கு இரண்டும் வேண்டும் என்ற ஆசை. கல்வி இருந்தால் மட்டுமே புகழ் கிடைக்கும். செல்வம் இருந்தால் மட்டுமே சொகுசாக வாழ முடியும். இரண்டில் ஒன்றை எடுத்தால் மற்றொன்றை இழக்க வேண்டுமே. என்ன செய்வது என்று யோசித்தவன், சட்டென்று, ஒரே நேரத்தில் இரண்டு கிண்ணத்தையும் எடுத்து அதிலிருந்த பாலை ஒன்றாக ஊற்றி மளமளவென குடித்துவிட்டான்.  காளி அன்னைக்கு கோபம் வர ஆரம்பித்தது.

"அடேய் சிறுவனே, நான் உன்னை ஏதாவது ஒரு கிண்ணத்தில் உள்ள பாலை மட்டும்தானே குடிக்கச் சொன்னேன்!"

"ஆம் தாயே, சரிதான். நானும்  நீ சொன்னதுபோல ஒரு கிண்ணத்தின் பாலை மட்டும்தானே குடித்தேன்." என்றான்.

"எதற்காக இரண்டு கிண்ணத்தின் பாலையும் ஒன்றாகக் கலந்தாய்?" என்றார் கோபமாக.

"ஓ, அம்மா, அதுதான் உன் கோபமா? கலக்கக் கூடாது என்று நீ சொல்லவே இல்லையே தாயே!" என்றான் பவ்யமாக.

காளியின் கோபம் சட்டென மறைந்தது. அந்த பத்ரகாளி அன்னையையே  புன்னகை புரியச் செய்தான் அந்த தெனாலிராமன்! அன்னை அதே மகிழ்ச்சியுடன். " மகனே ராமா! சரியான ஆள்தான் நீ.  என்னையே ஏமாற்றி விட்டாயே.  உன் சமயோசிதமான புத்தியை மெச்சினோம். நீ பெரும் புலவன் என்று பெயர் பெறாவிட்டாலும்  விகடகவி என்று பெயர் பெற்று அனைவரையும் மகிழ்விப்பாய். வளமாகவும் வாழ்வாய்!." என்ற அற்புதமான வரங்களை அருளி மறைந்தாள். தெனாலிராமனுக்கு விகடகவி என்று அன்னை அளித்த அந்த பட்டம் மிகவும் மகிழ்ச்சியூட்டியது அவனை. பலமுறை சொல்லிப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தான்.  “அட, திருப்பிப் படித்தாலும் விகடகவி என்றே வருகிறதே’ என்று வேறு பெருமைப்பட்டுக்கொண்டான்! 

இப்படியாக எந்த ஒரு விசயத்தையும் முடிந்தவரை  நகைச்சுவை உணர்வுடன் அணுகும்போது,  மனிதர்களை மட்டும் அல்ல கடவுளரையும்கூட கவர முடியும், நம் காரியங்களை எளிதாக சாதித்துக்கொள்ளவும் முடியும் என்று புரிந்து கொண்டீர்கள்தானே?  

1 comment:

  1. அணுகும்போது மட்டுமல்ல, இன்றைக்கு சொல்வதும் அப்படித்தான் சொல்ல வேண்டியிருக்கு - பகிர்விலும்... [!]

    ReplyDelete