Friday, May 12, 2017

சிறுவர் இலக்கியம் படைப்பது எப்படி? (1)


பவள சங்கரி

நல்ல நூல்கள் நம் நினைவலைகளை உயிர்ப்புடன் செயல்பட வைப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. சிறுவர் இலக்கியம் என்பதை எப்படி விளக்கலாம்? என்னென்ன மாற்றங்கள் கடந்த காலங்களினூடே ஏற்பட்டுள்ளன? சிறுவர் இலக்கியத்தின் உன்னத படைப்புகள் எவ்வாறு அமைக்கப்பட்டன? குழந்தைகளுக்கான புத்தகங்களில் மின்னனு ஊடகங்கள், உலகமயமாக்கல் போன்றவைகளின் பாதிப்பு என்ன?
“சிறார்களின் இலக்கியம் என்பது பொழுதுபோக்கு என்ற சாராம்சம் மட்டுமல்லாமல், தன்னம்பிக்கை, துணிச்சல், கருணை, அறம், அறச்சீற்றம் போன்ற குணாதிசயங்களை உணர்த்தவல்லதாக இருக்கவேண்டும். தரமான குழந்தைகளின் இலக்கியம் என்பது குழந்தைகளுக்கு இவைகளை எப்படி இதமாக கற்பிக்க வேண்டும் என்று கற்றுக்கொடுக்கிறது.
குழந்தைகள் மட்டுமன்றி பெரியவர்களின் சமூக வாழ்க்கையிலும் குழந்தைகளின் இலக்கியம் எவ்வாறு அடங்கியுள்ளது என்பதை வலியுறுத்துவதன் மூலம் நல்லதொரு சந்ததியை உருவாக்கமுடியும் என்பதும் திண்ணம்.
குழந்தை இலக்கியம் என்பது கவிதை, பாடல், நாடகம், படப் புத்தகங்கள் போன்ற பலவற்றை உள்ளடக்கியது.
குழந்தைகள் இலக்கியம் அவர்களைத் தங்கள் உலகத்துடன் இணைக்கிறது. பிள்ளைகள் படிக்கிற நல்ல புத்தகங்கள் அவர்கள் தங்கள் வாழ்க்கைப் பாதையில் செம்மையாக அடியெடுத்துவைக்க வழியமைக்கின்றன. அவர்தம் எதிர்கால உலகத்தை வடிவமைக்கும் பேராற்றல் கொண்டது அது.
பெரும்பாலான குழந்தைகள் மற்றும் பெற்றோரின் கனவுலகமான டிஸ்னியின் பூங்காக்களில் கடந்த ஒரு ஆண்டு மட்டும் நூற்று இருபது லட்சம் பேர் சென்று கண்டு களித்துள்ளனர், பிரான்சு. ஸ்பெயின் போன்ற நாடுகளில் உள்ள மொத்த மக்கள் தொகையைவிட இது அதிகம்.
சிறுவர் இலக்கியம் படைப்பதென்பது ஏனைய மற்ற படைப்புகளைக்காட்டிலும் மிக எளிதானது என்பதே பல எழுத்தாளர்களின் கணிப்பாக உள்ளது. ஒரு நல்ல கதையை எடுத்துக்கொண்டு அதன் கருவையும், எழுத்து நடையையும் எளிமையாக்கி, கூரிய நிகழ்வுகளையும், வசனங்களையும் மழுங்கச்செய்து, இறுதியாக ஒரு நீதிபோதனையும் வழங்கினால் அது சிறுவர் கதையாக மாறிவிடும் என்றே எண்ணுகின்றனர். பல எழுத்தாளர்கள் கையெடுக்கும் இந்த முறை சிறுவர் மத்தியில் எடுபடுவதில்லை. குழந்தைகள் உண்மையிலேயே மிகுந்த ஆர்வமும், ஆழ்ந்து நோக்கும் தன்மையும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். நீட்டி முழக்கும் வளவளவென்ற வசனங்களையும், அருளுரைகளையும், முரட்டுத்தனமான அணுகுமுறைகளையும் துளியும் வரவேற்பதில்லை அவர்கள்.
குழந்தைகளுக்கு கதை சொல்வதென்பது ஒரு கலை. மற்றெந்தக் கலைகளையும்போன்று சிறுவர் இலக்கியம் படைப்புக் கலையையும் நல்ல பயிற்சியின் ஊடாகவே படைப்பது முழுமையான பலனளிக்கும். பல்வேறு துறைசார்ந்த படைப்பாளர்களும் பையப்பைய பயிற்சி எடுத்த பின்பே தங்கள் கலையை அரங்கேற்றுகிறார்கள். அந்த வகையில் சிறுவர் இலக்கியக்கலையும் சீரிய பயிற்சியின் ஊடாகவே உருவாக்குவது மூலமாகவே நல்ல வாசகர்களைச் சென்றடைய முடியும்.
ஒரு அழகிய ஓவியத்தை உருவாக்குவதற்கு முன், அதன் பிம்பத்தை முழுமையாக உள்ளத்தில் வரைந்துவிட்டு, அங்கேயே அழகிய வண்ணங்களும் தீட்டி அழகு பார்த்த பின்பு அதைப் படமாக வரைவது போன்றே குழந்தைகளுக்காக கதை வடிப்பதையும் முறையான திட்டமிடல் மூலமே படைப்பது சிறப்பாக அமையும். பாட்டி சொன்ன பாரம்பரியக் கதைகளோ, நவீன அறிவியல் கதையோ அல்லது சமூகக் கதைகளோ எதுவாயினும் அனைத்திற்கும் இந்த முறை பொருந்தும். ஒரு நல்ல கதைக்கு, தெளிவான சிந்தனையில் உருவான கருவும், உறுதியான கதாபாத்திரங்களும், நறுக்கென்ற வசனங்களும் அடிப்படைத் தேவைகளாகும். இந்த அடிப்படையில் கட்டமைக்கப்படும் கதைகள் குழந்தைகளிடம் கட்டாயம் நல்ல வரவேற்பைப் பெறும் என்பதில் ஐயமில்லை.
இனிவரும் பகுதிகளில் ஒரு கதையை படைப்பதற்கான திட்டமிடல், அதன் போக்கு, வடிவமைப்பு போன்றவைகள் குறித்து பார்க்கலாம். வாசிக்க ஆரம்பித்தவுடன் மூச்சுவிடாமல் வாசித்து முடிக்கத் தூண்டுவதும், மனதில் பதியக்கூடிய கதாபாத்திரங்களை உருவாக்கும் யுக்தியையும் குறித்து சிந்திப்போம். ஒரு கதையின் ஆரம்பம், நடுப்பகுதி, இறுதிப்பகுதி என்பதோடு, கதைக்கரு மற்றும் கிளைக்கரு போன்றவை குறித்தும் அலசி ஆராய்வோம். கதையை உயிரோட்டமாக வைக்க உதவும் முக்கிய பாத்திரப்படைப்புகள், சிறார்களின் ஐம்புலன்களையும் தட்டி எழுப்புகின்ற மெல்லிய உணர்வுப்பூர்வமான வசனங்கள் போன்றவை குறித்தும் உரையாடலாம். ஒரு நல்ல நூலை வெளியிட்ட மன நிறைவில் பதிப்பாளரும், படைப்பாளரும், வாசகர்களும் மகிழ்ந்திருக்க சில நல்ல உத்திகளைக் கையாள்வது மிகமுக்கியம்!
தொடருவோம்

No comments:

Post a Comment

கலாச்சார மாற்றங்களின் பாதிப்பா? – ADHD (Attention deficit hyperactivity disorder)

கலாச்சார மாற்றங்களின் பாதிப்பா? – ADHD (Attention deficit hyperactivity disorder)