Wednesday, April 1, 2020

தமிழக முதல்வரின் எளிமையும், வலிமையும்






அவரவர் சுயம் வெளிப்படும் பேரிடர் காலம். இதுபோன்ற காலத்திலும் பேருக்கும், புகழுக்கும் அடிமையாகி போலி வேடதாரிகளாக அலைபவர்கள் ஒருபுறம். ஆதாயம் இல்லாமல் ஏன் சிரமப்பட வேண்டும் என்று அமைதியாக வேடிக்கைப் பார்க்கும் பிரபலங்கள் ஒருபுறம் என்று பல காட்சிகள் அரங்கேறும் வேளையில் நம் தமிழக முதல்வர் அமைதியாக, அச்சம் தவிர்த்து, தெளிவாக சிந்தித்து தேவையான தீர்வுகளை உடனுக்குடன் செய்ய முனைந்து அவைகளைச் சரியாகத் திட்டமிட்டு செயல்படவும் முனைகிறார். பெருந்தலைவர்கள் ஓமந்தூரார், காமராசர் போன்றவர்களுக்குப் பிறகு அவர் பாணியில் மிக இயல்பாக, முதலமைச்சர் என்ற முகமூடி இல்லாமல் மக்கள் தலைவராக, எளிய மக்களின் சிரமங்களையும் புரிந்துகொண்டு நாட்டு நிலையை அனுசரித்து சரியாகத் திட்டமிட்டு சுழன்று செயலாற்றுவதை பாராட்டாமல் இருக்க முடியாது. ஊடகவியலாளர்களின் குதர்க்கமான கேள்விகளுக்கும், மிக இயல்பாக நம் நாட்டின் நிலை பற்றி உங்களுக்குத் தெரியாததையா நான் சொல்லிவிடப் போகிறேன், இயன்றவரை சிறப்பாக செயல்படுவோம் என்ற வகையில் யதார்த்தமாகப் பதில் அளித்து வாயடைக்கச் செய்து எளிமையாக புரியவும் வைத்து நிலைமையை கட்டுக்குள் வைத்திருக்கிறார்.
கிட்டத்தட்ட 40 – 42 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் நாட்டில், 1800 கோடி உரூபாய் செலவில் அவிநாசி அத்திக்கடவு நீர் பாசனத் திட்டம், மேட்டூர் அணையின் உபரி நீரில்  560 கோடி செலவில் சிறப்பான பணித்திட்டம், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் போன்ற நான்கு மாவட்டங்களின் வறட்சியைப் போக்க உதவும் பசுமைத் திட்டம், தொலைநோக்கு பார்வையிலான செயல் திட்டங்களிலும் சிறப்பான முன்னெடுப்பு என குறுகிய காலங்களில் இவரது செயல் திட்டங்கள் பாராட்டிற்குரியது.


அமெரிக்க நாட்டின் சான் யூசே நகரில் நடைபெற்ற, 250-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் தலைமையேற்று, தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஆக்கமும், ஊக்கமும் அளிக்கப்படும் என உறுதி அளித்தார். இங்கிலாந்து நாட்டின் தலைநகரமான இலண்டன், அமெரிக்கா நகரில் தொழில் தொடர்பான பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், இதைத்தொடர்ந்து நியூயார்க் நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு, அங்கு 16 நிறுவனங்களின் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தியுள்ளார்.
இந்த வகையில் இந்த இக்கட்டான சூழ்நிலையையும் எதிர்கொண்டு சிறப்பாகச் செயல்பட்டு தமிழகத்தை மீட்டுக்கொண்டு வருவார் என்ற நம்பிக்கை வருகிறது.  பாராட்டை எதிர்பார்க்காமல் தன்னலமற்று, மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு செயல்படும் நம் முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு பொதுமக்களாகிய நாம் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது நமது கடமை என்பதையும் நினைவில் கொள்வோம்.





No comments:

Post a Comment