Friday, March 15, 2013

பாட்டி சொன்ன கதைகள் (4)


பவள சங்கரி

ஹாய் குட்டீஸ் நலமா?

அம்புலி மாமா
நித்திலன் பெயரைப் போலவே மிக அழகான குட்டிப் பையன். “நித்திலம்’ என்றால் முத்து. இது அழகான தமிழ் பெயர் இல்லையா? நித்திலன் என்றால் அழகான, குளிர்ந்த வெண்முத்தைப் போன்றவன் என்று அர்த்தம். சரி விசயத்திற்கு வருவோம். அவனுக்கு அவங்க அம்மா சாப்பாடு ஊட்டும்போது, ’ எனக்கு அந்த அம்புலி மாமாவைப் புடிச்சிக்குடு, அப்பதான் நான் சாப்பிடுவேன்னு அடம் பிடிச்சானாம். அம்மா, அதெல்லாம் ரொம்ப உயரமா இருக்கு கண்ணா,நாமெல்லாம் புடிக்க முடியாதுன்னு எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்காம, சாப்பிட மாட்டேன்னு அடம் பிடிச்சிக்கிட்டு இருந்தானாம். அப்ப அந்தப்பக்கமா வந்த பாட்டி, என்னடாது பேராண்டி இப்புடி அடம் புடிக்கிறானேன்னு,


“நித்திலன் செல்லம், ஒழுங்கா சாப்பிட்டு முடிச்சுட்டு வந்தீங்கன்னா, நான் அம்புலி மாமா கதை சொல்வேனே” என்று சொன்னவுடனே, “அப்படியா பாட்டி, இதோ சீக்கிரமா சாப்பிட்டு வரேன்” அப்படீன்னு சொல்லி வேகமா சாப்பிட்டுட்டு ஓடியாந்தானாம். அப்ப பாட்டி சொன்ன கதை இதுதான்!

நித்திலன் செல்லக்குட்டி மாதிரியே இராமாயணத்துல, இராவணனோட மகன் இந்திரஜித், அவங்க அப்பா மாதிரியே மிகுந்த பலசாலியாம். சின்னக் குழந்தையா, தொட்டில்ல  தூங்கும்போதே அவ்ளோ பலசாலியா இருந்தானாம். பிறக்கும்போதே பலவானாக பிறந்திருப்பான் போல... அவனுக்கும் ஒரு நாள் அந்த நிலாவைப் புடிச்சி விளையாட ஆசை வந்துச்சாம், நித்தில் குட்டி மாதிரியே..  ஆனா அந்தக் குழந்தை இந்திரஜித் அவங்க அம்மாகிட்ட எல்லாம் நிலா வேணும் என்று அடம் பிடிக்கலையாம். ஆனா அந்தக் குழந்தை இந்திரஜித் அப்படியே சல்லுனு பறந்து போய் அந்த நிலாவைப் புடிச்சி கொண்டாந்துட்டானாம், தான் விளையாடுவதற்கு. உலகமே அப்படியே இருண்டு போச்சாம்.. அப்ப அவங்க அப்பா இராவணன் வந்து அதெல்லாம் தப்பு மகனே, நீ செய்த காரியத்தால் உலகமே இருட்டிப்போச்சு பாரு கண்ணா, உடனடியா அதை விட்டுவிடுன்னு சொன்னாராம். அப்பா பேச்சைத் தட்டாத குழந்தையான இந்திரஜித்தும் உடனே அந்த நிலாவை அங்கேயே கொண்டுபோய் விட்டுட்டானாம்.. இது புராணக் கதைதான். நம்ப முடியலைதானே.. ஆனா நீ நம்பற மாதிரி இன்னொரு நிசமான கதை சொல்லட்டுமா..
 

ஒரு செயலை சாதிக்கணும்ன்னா இப்படித்தான் சின்ன வயசுல இருந்து மனசுல தீவிரமா கனவை வளர்த்துக்கணும். அப்பதான் பெரிய விசயங்களைக்கூட சர்வ சாதாரணமா சாதிக்க முடியும். நிலாவைப் பத்தி கதை மட்டுமே பேசிக்கிட்டிருந்த சமயத்துலதான் மூன்று பேர் நிலாவுலயே காலையும் வச்சு, கொடியும் நட்டுவிட்டு வந்தாங்களே.. அவங்க யாரு தெரியுமா? 1969ம் வருசம், ஜீலை மாதம் 20ம் நாள், நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங்க், எட்வின் ஆல்ட்ரின் மற்றும் மைக்கேல் கொலின்ஸ் என்ற மூவரும் அமெரிக்காவின் அப்போலோ - 11 என்ற விண்கலத்தின் மூலமாக சந்திரனுக்கு பயணம் செய்தார்கள். அதில் முதன் முதலில் நிலவில் கால் வைத்த முதல் மனிதர் அப்படிங்கற பெருமையோட, ஒகைய்யோ, ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த நீல் ஆம்ஸ்ட்ராங்க முதலில் சந்திரனில் காலடி வைக்க, அடுத்து ஆல்ட்ரினும் நிலவினில் கால் பதித்தாராம்.

ஆம்ஸ்டிராங்கும் ஒருவேளை குழந்தையா இருந்தப்ப நிலாவைப் புடிச்சி விளையாட ஆசைப்பட்டிருப்பாரோ...? அப்துல்கலாம் சொன்னது போல நிறைய கனவு காணலாம் நித்திலன் செல்லம்.. ஒரு நாள் அது கட்டாய்ம் நிறைவேறும். நித்திலன் அதை நல்லா புரிஞ்சிக்கட்டது, அவன் மிக யோசனையுடன், கண்களில் ஆர்வம் மின்ன, கூர்ந்து கவனித்து, தலையை ஆட்டிய விதத்திலிருந்து தெரிந்தது. நீங்களும் புரிஞ்சிக்கிட்டீங்கதானே.. 

மீண்டும் சந்திப்போம்.

2 comments:

  1. அழகா சொல்லி இருக்கீங்க...

    ReplyDelete

  2. எனக்குப் பலமுறை தோன்றுவதுண்டு. குழந்தைகளுக்கு மட்டும் அல்ல.பல பெரியவர்களும் கதை சொல்லப் பட வேண்டியவர்களே.எதற்காக கதை என்று புரியாமல் கதைகளையே உண்மை என்று நம்பி இருளில் இருக்கிறார்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete

பாரம்பரிய உடையில் தைப்பொங்கல்!

      ஒவ்வொரு மனித சமுதாயத்திற்கும் ஒரு பண்பாடு உண்டு. பேசும் மொழி, உண்ணும் உணவு, வாழும் முறை போன்றனைத்தையும்விட அணியும் ஆடை அதிக முக்...