Wednesday, April 10, 2013

பாட்டி சொன்ன கதைகள் (6)பவள சங்கரி

மீனே,மீனே மீனம்மா, மீனாட்சியம்மா!
ஹாய் குட்டீஸ் நலமா...?

மீன் பற்றி என்னவெல்லாம் தெரியும் உங்களுக்கு? மீன் போன்ற கண்கள் என்று படபடக்கும் அழகிய விழிகளுக்கு கண்ணை ஒப்பிடுவார்கள் இல்லையா. மீனாட்சி அம்மனுக்கும் அந்தப் பெயர் ஏன் வந்தது. மீன்+ஆட்சி=மீனாட்சி. மீன்கள் முட்டை இட்டு குஞ்சு பொறிக்கும் வகையைச் சார்ந்தது. மற்ற உயிரினங்களைப் போல அது முட்டையை அடைகாத்து குஞ்சு பொறிப்பதில்லை. அது அந்தப் பக்கம் செல்லும் போதெல்லாம், அதன் பார்வை பட்டே முட்டையிலிருந்து குஞ்சு வெளிவருமாம். ஒரு வாரம் முதல் பத்து நாட்களுக்குள் இந்த அழகான மீன்குஞ்சு வெளிவந்துவிடுமாம்.

இதோ இந்த விடீயோவைப் பாருங்களேன்!


அன்னை மீனாட்சியின் கருணை நிறைந்த பார்வையாலேயே இந்த உலகம் வாழுகிறது. என்ற அடிப்படையில் மீனாட்சி என்ற திருநாமமும் அம்மனுக்கு வந்திருக்காம். மீனைப் போன்று பார்வையால் ஆட்சி செய்பவள், மீனாட்சி. இந்த மீன் குட்டிக்கு யாரும் நீந்தச் சொல்லிக் கொடுப்பதில்லை. இயற்கையாவே அது முட்டையிலிருந்து வெளிவந்தவுடன் நீந்த ஆரம்பித்துவிடும். அப்படித்தான் மனிதர்களும் வாழ்க்கையில் பிறந்த அன்றிலிருந்து இயல்பாகவே எதிர்நீச்சல் போட ஆரம்பித்துவிடுகிறார்கள். சரி கதைக்கு வருவோமா?

முன்னொரு காலத்தில் பாண்டிய நாட்டில் மீனவன் ஒருவன் வாழ்ந்து வந்தான். ஆற்றில் மீன் பிடித்து விற்று பிழைப்பு நடத்தும் அவன் ஒருநாள் ஆற்றில் வலையைப் போட்டபோது அதில் அழகானதொரு தங்க மீன் சிக்கியதாம். அதிசயமாக அந்த மீன் பேசவும் செய்ததாம். ஆம், அந்த மீனவனைப் பார்த்து, “நீ என்னை மன்னனிடம் எடுத்துக் கொண்டுபோ. நான் மன்னனிடம் பேசி உன்னை பெரும் செல்வந்தனாக்குகிறேன்” என்றதாம். மிகவும் ஆச்சரியத்தில்  ஆழ்ந்துபோன அந்த மீனவன் அந்த தங்க மீனின் சொற்படியே பாண்டிய மன்னனிடம், பளபளவென ஜொலிக்கும் அந்த தங்க மீனை எடுத்துச் சென்றானாம். அதைப் பார்த்த அரசரும் ஆச்சரியப்பட்டு விசாரிக்க, அந்த மீனும் அழகாக பேச ஆரம்பித்ததாம்.

“அரசே, உங்கள் முன்னோர்களின் அரச சின்னம் பொறித்த ஒரு முக்கியமான தங்கக்கட்டி பல காலமாக காணாமல் போய்விட்டதல்லவா? இப்போது அது கிடைத்தால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டதாம்.

மிகவும் மகிழ்ந்து போன அரசனோ, “அப்படிக் கொண்டு வந்து கொடுப்பவருக்கு தக்க சன்மானமாக எதைக் கேட்டாலும் கொடுப்பேன்” என்று வாக்குறுதி அளித்தானாம்.

அதற்கு அந்த தங்க மீனும், “சரி அப்போது என்னைக் கொண்டுவந்து உன்னிடம் ஒப்படைத்த அந்த மீனவனுக்கு தக்க சன்மானம் கொடுத்துவிட்டு என் வயற்றினுள் இருக்கும் அந்த தங்கக் கட்டியை எடுத்துக்கொள்” என்றதாம்.

ஒன்றும் புரியாமல் விழித்த அரசனைப் பார்த்து, அந்த தங்க மீன், தானும் அந்த மன்னனின் மூதாதையரின் வழியில் வந்தவர்தான் என்றும், அந்த பொக்கிசத்தை தன் வயிற்றில் சுமந்து பாதுகாப்பாக வைத்திருப்பதாகவும், அதை அப்போது அந்த மன்னனிடம் ஒப்படைக்கும் நேரம் வந்துவிட்டதாகவும், தான் முக்தியடையும் காலமும் நெருங்கிவிட்டதாகவும் கூறியதைக் கேட்ட அரசன், ஒரு புறம் தொலைந்துபோன தம் மூதாதையரின் பொக்கிசம் கிடைத்தாலும், அதிசயமான இந்த தங்க மீனை, தம்முடைய வம்சாவழியினரை கொல்ல வேண்டுமே என்ற கவலை ஒரு புறமும் வாட்ட தயங்கி நின்றானாம். அப்போது அந்த மீன்,

“மன்னா, என்னிடம் உள்ள பொக்கிசத்தைப் பெற்றுக்கொண்டு நான் முக்தி பெற வழி செய்தால், நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்” என்றதாம். மன்னனும் தன் மனதை தேற்றிக் கொண்டு அந்த அதிசய மீன் சொன்னதைக் கேட்டு அதன்படியே செய்ததோடு அந்த மீனவனுக்கு ஒரு ஊரையே எழுதி வைத்தாராம். அந்த மீனவரும் மிகவும் மனம் மகிழ்ந்து  அரசரை வாழ்த்திச் சென்றாராம்.

நேர்மையாக நடந்துகொண்டால் அதற்கான பலன் கைமேல் கிடைக்கும் என்பதை இக்கதையின் மூலம் புரிந்து கொண்டீர்களல்லவா?

மீண்டும் சந்திப்போம்.

படங்களுக்கு நன்றி:

நன்றி : வல்லமை / செல்லம்

4 comments:

 1. எடுத்துக் கொண்ட கதை அருமை...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க திரு தனபாலன்.

   அன்புடன்
   பவள சங்கரி

   Delete
 2. தங்கமான கதை ..அருமையான நீதி ..பாராட்டுக்கள்.

  ReplyDelete
 3. தங்கள் வருகைக்கும், வாசிப்பிற்கும் மிக்க நன்றிங்க இராஜராஜேஸ்வரி.

  அன்புடன்
  பவள சங்கரி

  ReplyDelete