Wednesday, September 11, 2013

பாட்டி சொன்ன கதைகள்! (15)


பவள சங்கரி
ஹாய் குட்டீஸ் நலமா,
மாம்பழமாம் மாம்பழம்
மாம்பழமாம் மாம்பழம், மல்கோவா மாம்பழம்,
சேலத்து மாம்பழம், தித்திக்கும் மாம்பழம்,
உங்களுக்கு வேணுமா? இங்கே ஓடி வாருங்கள்
பங்கு போட்டுத் திங்கலாம்!!
653938மாம்பழம்னு சொன்னாலே வாயில் உமிழ் நீர் சுரக்கிறதல்லவா? தமிழ்நாட்டில் பொதுவாக மாம்பழம் பங்குனி, சித்திரை மாதங்களில் கிடைக்கும். மா, பலா, வாழை என்ற முக்கனிகளில் முதல் கனி இந்த மாங்கனிதான். மாங்கனிக்கு பல பெருமைகள் இருக்கு தெரியுமா? முருகனுக்கும், விநாயகருக்கும் இந்த மாம்பழத்துக்காகவே, சண்டை வந்து முருகர் கோபித்துக்கொண்டு மலையில் போய், குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்னு போய் உட்கார்ந்துகிட்டாரு. மங்கையர்கரசியாருக்கு ஆண்டவன் அருளியதும் மாங்கனிதான். அம்மையாரை காரைக்கால் அம்மையாராக்கியதும் இந்த மாங்கனிதானே! இப்படிப்பட்ட மாங்கனியில் அப்படி என்னதான் விசேசம் இருக்குன்னு கேட்கறீங்களா? மாம்பழத்தில் வைட்டமின் ஏ, சி மற்றும் அமினோ அமிலம், பொட்டாசியம், காப்பர் எல்லாம் இருக்கிறது. அதனாலேயே மாம்பழத்திற்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம்.

நம்ம நாட்டிற்கு மட்டுமல்லாமல் பாக்கிஸ்தான் மற்றும் பிலிப்பைன்சுக்கும்கூட மாம்பழம்தான் தேசியக்கனியாம். பங்களா தேசத்தின் தேசிய மரம் மாமரம்தான் தெரியுமா? அமிர்தமே ஆனாலும் அளவாகத்தானே சாப்பிட வேண்டும், அப்படித்தான் மாம்பழமும் அளவாகச் சாப்பிட்டு, கூடவே பாலும் பருகி (சூட்டைத் தணிப்பதற்கு) வளமாக வாழலாம். நம்ம இந்தியாவில்தான் அதிகமாக மாம்பழம் விளைகிறது.
அல்போன்சா, பங்கனபள்ளி, கிளி மூக்கு என்கிற தோத்தாபுரி, சரோலி, சௌன்சா, ஃபஸ்லி, ஹிம்சாகர், குலாப் காஸ், கேசர், ரசால்லு, சுவர்ணரேகா, நீலம். மல்லிகா மல்கோவா, சக்கரைக்குட்டி, குல்குல், போன்ற 500க்கும் மேற்பட்ட மாம்பழ வகைகள் நம் நாட்டில் கிடைக்கிறது.
images
சீசன் காலங்களில் இந்த மாம்பழங்களை சீக்கிரமா பழுக்க வைப்பதற்கும், அதற்கு, நல்ல கலரும், பளபளப்பும் கொடுப்பதற்காக, ஒரு இரசாயணப் பொருளைச் சேர்க்கிறார்கள். அது பார்ப்பதற்கு, சாதாரண கருங்கல் ஜல்லி மாதிரிதான் இருக்கும். CaC2 என்ற, கால்சியம் கார்பைடு கல்லை மாங்காய் குவியலுக்கு நடுவே அப்படியேவோ அல்லது பேப்பரில் சுற்றியோ வைத்துவிட்டால், ஒரு வாரத்தில் பழுக்கற காய்கூட நான்கு நாட்களில் பழுத்துவிடும். இப்படிப் பழுக்க வைக்கப் பட்ட பழங்களில் படிந்திருக்கும் வேதிப் பொருட்களால் வாந்தி பேதி முதலிய வயிற்றுக் கோளாறு ஏற்படுவதோடு நாளடைவில் கேன்சர் வரும் அபாயமும் உள்ளது. இனிமே மாம்பழம் வாங்கும் போது எச்சரிக்கையா இருக்க வேண்டும் இல்லையா?
சரி இப்ப கதைக்கு வருவோமா!
சக்கரவர்த்தி, கிருஷ்ணதேவராயர் சபையில் ஒருநாள் அவர் மிகவும் சோகமாக உட்கார்ந்திருக்கிறார். சமீபத்தில் தாயைப் பறி கொடுத்த மன்னருக்கு மனதில் தீராத வேதனை. காரணம் இறக்கும் நேரத்தில் தாய் ஆசையாகக் கேட்ட மாங்கனியை தான் ஒரு சக்கரவர்த்தியாக இருந்தும் வாங்கிக் கொடுக்க முடியவில்லையே என்று பெரிய மனக்குறையாக ஆகிவிட்டது. அது ஐப்பசி மாதம் ஆனதால் எங்கேயும் மாம்பழமே கிடைக்கவில்லை. இதை நினைத்தே மனதில் வருத்தம் அதிகமாகி அதுவே நோயாகிப் போய்விட்டது. சபையோரைப் பார்த்து, இதனைப் போக்குவதற்கு ஏதும் வழியிருக்கிறதா என்று கேட்டார் மன்னர். அப்போது ஒரு அந்தணர் எழுந்து, தான் சொல்லும் பரிகாரத்தைச் செய்துவிட்டால் மன்னரின் தாயின் ஆன்மா சாந்தியடைவதோடு அரசருடைய மனமும் ஆறுதலடையும் என்று சொன்னதைக் கேட்டு மன்னரும் மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். அதாவது அந்த அந்தணர் சொன்னது போல, 101 அந்தணர்களுக்கு, நல்ல துணிமணிகளுடன், அரசாங்க விருந்து கொடுத்து, இறுதியாக எல்லோருக்கும் ஒரு தங்க மாங்கனியை வெற்றிலை பாக்கில் வைத்து தட்சணையாகக் கொடுக்க வேண்டும் என்று சொன்னதை மன்னர் அடுத்த நாளேசெய்தும் முடித்துவிட்டு, ஓரளவிற்கு நிம்மதியைத் தேடிக்கொண்டார். இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த தெனாலி ராமனுக்கு,
“அடடா, மன்னரின் மன வாட்டத்தைப் பயன்படுத்திக்கொண்டு இப்படி அவரை ஏமாற்றுகிறார்களே என்று மிகவும் வருத்தமாகவும், ஏமாற்றியவர்கள் மீது ஏகப்பட்ட கோபமாகவும் இருந்தார். அவர்களுக்கு எப்படியும் பாடம் புகட்ட வேண்டும் என்றும் முடிவு செய்தார் தெனாலிராமன்.
சில நாட்களில் தெனாலிராமன் அந்த 101 அந்தணர்களையும் கூப்பிட்டு, அடுத்த நாள் தன் தாய்க்கு நினைவு நாள் வருவதால், அவர் இறக்கும் தருவாயில் அவருக்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய்ய முடியாமல் போனதை இந்த அந்தணர்களுக்குச் செய்து பரிகாரம் தேடிக்கொள்ள விரும்புவதாகக் கூறினார். இதைக்கேட்ட அந்த அந்தணர்களுக்கு, பெரும் மகிழ்ச்சி. தங்கள் பக்கம் காற்று வீசுகிறது என்று கொண்டாட்டமாக ஒப்புக்கொண்டார்கள். அடுத்த நாள் அனைவரையும் உட்காரவைத்து சாப்பாடு போட்டு, ஒவ்வொருவரையாக வந்து தட்சணையாக தன் தாயின் விருப்பப்பட்டதை வாங்கி செல்லச் சொன்னார். ஒவ்வொருவரையாக, அறைக்குள் கூப்பிட்டு பழுக்கக் காய்ச்சிய கம்பியை வைத்து முதுகில் ஒரு இழுப்பு இழுத்து அனுப்பினார். எல்லோரும் அலறி அடித்துக்கொண்டு நேரே அரசரிடம் சென்று முறையிட்டனர். நடந்ததைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அரசர், தெனாலிராமனைக் கூப்பிட்டு விசாரித்தார். தெனாலிராமனும், தன் தாய் சாகும்போது மஞ்சள் காமாலை வந்து சிரமப்பட்ட நேரத்தில் தங்கக் கம்பியால் சூடு இழுக்கத் தவறிவிட்டதால் அவர் இறந்து போனார். அதற்கான பரிகாரமாகத்தான் இப்போது அனைவருக்கும் தங்கக் கம்பியால் சூடு போட்டேன் என்றார். அரசர் தன் தாய்க்காக தங்க மாம்பழம் கொடுத்தது சரி என்றால், தன் தாய்க்காக தான் சூடு போட்டதும் சரிதான் என்று சொன்னபோது அரசருக்கு அதை மறுத்து பேசவும் முடியவில்லை. அரசரை ஏமாற்றிய அந்த அந்தணர்கள் செய்வதறியாது தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு சென்றுவிட்டனர்.
இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன… ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருந்துகொண்டுதான் இருப்பார்கள். தேவையில்லாத உணர்வுகளுக்கு இடம் கொடுத்து, ஏமாற்றுபவர்களுக்கு நாமே வாய்ப்பு கொடுக்கக் கூடாது. பல நாள் திருடன் ஒரு நாள்  அகப்படுவான் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
மீண்டும் சந்திப்போம்.
படங்களுக்கு நன்றி :

நன்றி : வல்லமை - செல்லம்

1 comment:

  1. தெனாலிராமன் பற்றி பாட்டி சொன்ன கதை மாம்பழமாக இனிக்கிறது.

    பாராட்டுக்கள்,

    //ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருந்துகொண்டுதான் இருப்பார்கள். தேவையில்லாத உணர்வுகளுக்கு இடம் கொடுத்து, ஏமாற்றுபவர்களுக்கு நாமே வாய்ப்பு கொடுக்கக் கூடாது.//

    ;)


    ReplyDelete

பாரம்பரிய உடையில் தைப்பொங்கல்!

      ஒவ்வொரு மனித சமுதாயத்திற்கும் ஒரு பண்பாடு உண்டு. பேசும் மொழி, உண்ணும் உணவு, வாழும் முறை போன்றனைத்தையும்விட அணியும் ஆடை அதிக முக்...