Saturday, November 9, 2013

பாட்டி சொன்ன கதைகள் - 17


பவள சங்கரி


ஹாய் குட்டீஸ் நலமா?


‘யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்’ என்பது பழமொழி.

AfricanElephant111

யானையின் தந்தம் மிக விலையுயர்ந்தது. கிட்டத்தட்ட 20,000 ஆண்டுகளுக்கும் முன்னரே யானையின் தந்தத்தினால் பல ஆபரணங்கள், கலைப்பொருட்கள் செய்து பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். நீர் யானையின் தந்தங்களை பொய்ப்பல் கட்டுவதற்காக ரோமானியர்கள் மிகப்பழங்காலத்திலேயே பயன்படுத்தியுள்ளார்கள் என்பதற்கான ஆதாரங்களும் கிடைத்திருக்கின்றன. ஆனால் இந்த தந்தத்திற்காக யானைகள் இன்று பெருமளவில் வேட்டையாடப்படுவதுதான் வேதனையான விசயம். இதனாலேயே இன்று யானைகள் பெருமளவில் எண்ணிக்கையில் குறைந்து வருகின்றது. 2012ம் ஆண்டில் மட்டும் 35,000 ஆப்ரிக்க யானைகள் அதன் தந்தத்திற்காகவே கடத்தப்பட்டுள்ளன என்கிறது செய்திகள். சென்ற பத்தாண்டுகளில் மட்டும் 60 சதவிகித யானைகள் இந்த தந்தத்திற்காகவே கொல்லப்பட்டுள்ளது என்பது நெஞ்சை உருக்கும் செய்தி. ஒரு ஆப்ரிக்க யானையின் தந்தம் சராசரியாக, 6. 6 அடி நீளமும், 23 கிலோ எடையும் கொண்டவை. இது போக விபத்து மற்றும் இயற்கை சீற்றங்களாலும் யானைகளுக்கு அழிவு ஏற்படுகிறது. 1989 முதல் தந்தம் ஏற்றுமதி செய்வதையும், விற்பனை செய்வதையும் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதையும் மீறி ஆப்ரிக்காவிலிருந்து ஆசியாவிற்கு மிக அதிகமாக யானைத் தந்தங்கள் கடத்தப்படுகிறதாம். 2011 ஜனவரியிலிருந்து 30 டன் அளவிற்கு, அதாவது 3000 யானைகளுக்கும் மேலாக கொலை செய்யப்பட்டு, அதன் தந்தங்கள் கடத்தப்பட்டுள்ளது. சீனா, ஜப்பான் போன்ற இடங்களில் தந்தங்களுக்கான விற்பனை அதிகமாக உள்ளதாம். 2012 இல் யானைகள் தந்தங்களுக்காக கொல்லப்படுவது மிக அதிகமாகிவிட்டது என்கிறார்கள். இன்று மொத்தமாகவே 420,000 முதல் 650,000 ஆப்ரிக்க யானைகளே இருக்கின்றன என்கிறது ஒரு புள்ளிவிவரம், தற்போது பதினைந்து நிமிடங்களுக்கு ஒரு யானை வீதம் இழப்பு ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. இப்படியே போனால் 2025ம் ஆண்டில் யானை என்று ஒரு இனமே இல்லாமல், மொத்தமாக அழிந்துவிடக்கூடும் என்று எச்சரித்திருக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். என்ன செய்யப் போகிறோம்? படங்களில் மட்டுமே பார்த்து ரசிக்கும்படி ஆகிவிடப்போகிறது என்று கவலையாக உள்ளது.

முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது நாம் நினைப்பது போல, யானை தந்தம் தானாக விழுவதில்லை. மனிதாபிமானமே இல்லாமல் அந்த உயிரைக் கொன்றுதான் அதன் தந்தத்தை எடுக்கிறார்கள். தந்தத்தினால் செய்த, சீப்பு, சோப்பு பெட்டி, நகைப்பெட்டி, கலைப்பொருட்கள், போன்ற எதையும் பயன்படுத்துவதில்லை என்ற குறிக்கோள் வைத்துக்கொள்ளலாமே. நம் நண்பர்கள் பயன்படுத்தினாலும் உண்மையை எடுத்துச் சொல்லலாம். பரிதாபமாக, அழிந்து கொண்டிருக்கும் இந்த அழகிய உயிரினத்தை, எப்படியாவது காக்க வேண்டும் என்று உறுதி கொள்வோம் குழந்தைகளே.

சரி கதைக்கு வருவோமா:


கஜேந்திர மோட்சம்

சாதி, மதம் என்ற பேதங்கள் இல்லாமல், சாதியும், மதமும் எதுவாக இருந்தாலும் கடவுளிடம் பக்தி கொள்பவர்கள் அந்த ஆண்டவனை முழுமையாக நம்பி, உன்னை விட்டால் எனக்கு வேறு கதியில்லை என்று பூரண சரணாகதி அடைய வேண்டும். அப்பொழுதுதான் அந்த ஆண்டவனின் கடைக்கண் பார்வை நம்மீது பட்டு நாம் நம் துயரங்களிலிருந்து மீண்டு வருவோம்.

ஒரு முறை இந்திராஜூம்னன் என்ற ஒரு அரசன், விஷ்ணு பகவான் மீது அதீதமான பக்தி கொண்டவனாக இருந்தான். எந்த நேரமும் அந்த சாமியின் பெயரைச் சொல்லிக்கொண்டே, அதே நினைவில் பக்தியில் திளைத்து இருப்பான். ஒரு சின்ன காரியம் என்றாலும் விஷ்ணுவை கும்பிடாமல் செய்ய மாட்டான். அவன் பூஜையில் இருக்கும் போது யார் வந்தாலும் அவனுக்குத் தெரியாது. அந்த அளவிற்கு ஆழ்ந்த பக்தி. ஒரு நாள் அவன் அப்படி ஒரு பூஜையில் இருக்கும்போது நம் கோபக்கார துர்வாச முனிவர் அந்த அரசரைக் காண வருகிறார். அவரும் வெகு நேரம் காத்திருந்து பார்த்தார். மன்னன் தன்னை கண்டுகொண்டதாகத் தெரியவில்லையே என்று லேசாக கணைத்தும் பார்த்தார். அதற்கும் அசையவில்லை அந்த அரசன். வழக்கம்போல கோபம் கொண்ட துர்வாச முனிவர் பிடி சாபம் என்று,

“நான் வந்து நிற்பது கூடத்தெரியாமல், பெரிய பக்தன் என்ற ஆணவத்தில் என்னை மதிக்காமல் இருந்தாய். நீ மதம் பிடித்த யானையாக காட்டில் அலைந்து திரியக்கடவது” என்று சாபமிட்டுவிட்டார். அரசன் தன் தவறை உணர்ந்து துர்வாசரிடம் மன்னிப்பு வேண்டி சாப விமோசனமும் பெற்றான். அதாவது, “நீ யானையாக ஆனாலும் திருமால் மீது கொண்ட பக்தியை மறக்காமல் இருப்பாய். அத்தோடு குளத்தில் இருக்கும் ஒரு முதலை உன் காலைப் பிடிக்கும்போது நீ ஆதி மூலமே என்று அழைக்க, உடனே அந்த திருமால் வந்து உன்னைக் காப்பார். உனக்கு சாப விமோசனமும், மோட்சமும், கிடைக்கும்” என்றார்.

அதன்படியே அந்த அரசன் கஜேந்திரன் என்ற மிகப்பெரிய கம்பீரமான யானையாக காடுகளில் தன் குட்டிகளுடன் அலைந்து திரிந்து கொண்டிருந்தான். மதம் பிடித்த அந்த யானையைக் கண்டு சிங்கம், புலி போன்ற பயங்கர மிருகங்கள்கூட பயந்து ஒடுங்கிக் கிடந்தன. ஆனால் ஆச்சரியமாக மான், முயல் போன்ற சிறிய மிருகங்கள் அதனுடன் பயமில்லாமல் நெருங்கி விளையாடிக்கொண்டிருந்தன. இந்த கஜேந்திரன் எங்காவது தாமரைப் பூவைப் பார்த்துவிட்டால் போதும். உடனடியாக வழியில் கிடக்கும் அனைத்தையும் மிதித்து துவம்சம் செய்துவிட்டு நேரே போய் அந்தத் தாமரை மலரை எடுத்துவந்து விஷ்ணு பூஜை செய்ய ஆரம்பித்துவிடும்! அந்த பக்தி கொஞ்சமும் குறையவேயில்லை. ஒரு முறை அங்கு ஒரு குளத்தில் கூஹூ என்ற ஒரு அரக்கன் தண்ணீருக்குள் இருந்து கொண்டு அங்கு குளிக்க வருபவர்களையெல்லாம் காலைப்பிடித்து இழுத்து பயமுறுத்திக்கொண்டிருந்தான். ஒரு முறை அகத்திய மாமுனிவர் அந்தக் குளத்தில் நீராட வந்தபோது அவருடைய காலையும் பிடித்து இழுத்தான். அவரும் கோபத்தில் அவன் முதலையாகப் போகவேண்டும் என்று சாபமிட்டார். அவனும் அலறிக்கொண்டு தம் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டு, சாப விமோசனமும் கேட்டான். அதன்படி கஜேந்திரன் என்னும் யானை வரும்போது அதன் காலைப்பிடிப்பாய், அப்போது அதைக்காக்க வரும் கடவுள் உன்னையும் காக்கும் என்று சொல்லிவிடுகிறார். அந்த அரக்கனும் முதலை வடிவில் குளத்தினுள் காத்துக் கிடக்கிறான்.

vishnu-garuda

அகத்திய முனிவரும், துர்வாச முனிவரும் கூறியது போல அந்த நேரமும் வந்தது. தஞ்சாவூர் மாவட்டம், திருக்கவித்தலம் (கபிஸ்தலம்) என்னும் இடத்தின் அருள்மிகு கஜேந்திர வரதன் திருக்கோவிலின் முன்னால் கிழக்கு திசையில் உள்ள கபில தீர்த்தத்தில் நீர் அருத்துவதற்காக பொய்கையை அடைந்த கஜராஜன் தன் துதிக்கையால் தாமரைப் பூ. அல்லி ஆகியவற்றின் மகரந்தங்கள் நிறைந்த அந்த இனிய பொய்கை நீரை உறிஞ்சி உளம் குளிரப் பருகி, அந்த நீரைத் தன் பரிவாரங்களுக்கும் வழங்கினான். பின் ஒரு தாமரை மலரைப் பறித்து தான் வணங்கும் பெருமாளுக்கு சமர்பிக்க விரும்பி அந்த பொய்கைக்குள் காலை வைத்த போது அதிலிருந்த முதலை கஜேந்திரனின் காலைக் கவ்விக் கொண்டு கஜேந்திரனை தண்ணீருக்குள் இழுக்க முயன்றது . உடனே கஜேந்திரன், “ஐயோ என் காலை விடு .. என்னை காப்பாற்றுங்கள்” என்று கத்தியது. உடனே பெண் யானைகளும், குட்டிகளும் வந்து கஜேந்திரனை விடுவிக்க பெரும்பாடு பட்டன. வெளியில் இருக்கும் யானையின் பலத்தைக்காட்டிலும், நீருக்குள் இருக்கும் முதலையின் பலம் அதிகம் அல்லவா? அதனால் கஜேந்திரனால் அந்த முதலையிடமிருந்து மீண்டு வரமுடியவில்லை. இப்படியே ஆயிரம் ஆண்டுகள் போராடிக் கொண்டிருந்ததாம் அந்த யானை. தேவர்களும் இதனை கவனித்துக் கொண்டிருந்தார்களாம். கஜேந்திரனுக்கு உடல் பலம் முழுவதும் குறைந்த அந்த நேரத்தில்தான் அவன், “ஆதிமூலமே” என்று அலறிய மறுகணம் கருட வாகனத்தில் கையில் சுதர்சன சக்கரத்துடன் வந்து கஜேந்திரனின் துயர் தீர்த்தான் பக்தவத்சலன். கீழ்கண்ட இந்த பாடலை பாடி நாமும் அவனருளைப் பெறுவோமே.


மங்களாசாசனம்

lampகூற்றமும் சாரா கொடுவினையும் சாரா தீ 
மாற்றமும் சாரா வைகயறிந்தேன்- 
ஆற்றங் கரை கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும் 
மாயன் உரைக் கிடக்கும் உள்ளத் தெனக்கு

-திருமழிசையாழ்வார்ஆயிரம் ஆண்டுகள் எதற்காக அந்த பெருமாள் கஜேந்திரனை காத்திருக்க வைத்தார் தெரியுமா? தான் என்ற அகந்தையில், தன் பலத்தினால் தானே தன்னை விடுவித்துக்கொள்ள முடியும் என்று நம்பிக்கிடந்தவரை அந்த கடவுள் அந்த யானயைக் காக்க வரவில்லை. ஆனால் அனைத்தையும் துறந்து முழுவதுமாக ஆண்டவனிடம் சரணாகதி அடைந்து ‘ஆதிமூலமே’ என்று அடிபணிந்தவுடன் வந்து உடனே காத்து அந்த யானை, முதலை என இருவருக்கும் சாப விமோசனம் அளித்தார். நாம் எந்த ஒரு சக்தியின் மீதும் முழுமையான நம்பிக்கையுடன் சரணாகதி அடையும் போது மட்டுமே அதன் பலனை முழுமையாகப் பெற முடியும் என்பதை உணர்ந்து கொண்டீர்களா?


மீண்டும் சந்திப்போமா


படங்களுக்கு நன்றி:நன்றி : வல்லமை - செல்லம்

2 comments:

  1. //நாம் எந்த ஒரு சக்தியின் மீதும் முழுமையான நம்பிக்கையுடன் சரணாகதி அடையும் போது மட்டுமே அதன் பலனை முழுமையாகப் பெற முடியும்//

    அழகான கதை அருமையாகச் சொல்லியுள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. யானைகள் அழிவை தடுக்க மனிதன் மனம் வைக்க வேண்டும்...!

    ReplyDelete