Friday, November 29, 2013

பாட்டி சொன்ன கதைகள் - 20


பவள சங்கரி

ஹாய் குட்டீஸ் நலமா?


சிட்டுக் குருவி.. சிட்டுக்குருவியின் சேதி தெரியுமா?சிட்டுக் குருவிகள் கீச்.. கீச் என்ற இனிமையான ஒலியுடன் மனிதரோடு மனிதராக கூடி வாழ்ந்த காலம் மறைந்து கொண்டு வருகிறது. உருவத்தில் சிறியதாக இருப்பினும் ஓயாத தம் இனிய குரலால் எங்கும் நிறைந்து இருந்தது. கூரை வீடுகள், ஓட்டு வீடுகள் போன்ற இடங்களில் வாழும் இந்த குருவியினம் இப்போது முற்றிலுமாக அழியும் நிலையில் உள்ளதாக , சர்வதேச இயற்கை மற்றும் இயற்கை வளங்கள் பாதுகாப்பு அமைப்பும் சிட்டுக் குருவி இனங்கள் குறித்து கவலை தெரிவித்துள்ளது அதிர்ச்சியான செய்தி. சிறு புழு, பூச்சிகளை மட்டுமே உணவாகக் கொண்டு வாழும் இந்த சிறிய உயிரினம் அழிவதற்கான காரணம் என்ன தெரியுமா?

முதல் காரணம், பெட்ரோல் எரியும் பொழுது அதிக அளவில் வெளியாகும் மெத்தில் நைட்ரேட் வாயுவினால் பாதிக்கப்படும் புழு பூச்சிகளை இந்த சிட்டுக் குருவிகள் உண்ணாமல் தவிர்த்து, பட்டினியால் உயிர் விடுகிறது. மேலும் இதன் முக்கியமான உணவான தானிய மணிகள் கிடைக்கும் வயல்வெளிகளில் இன்று பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகளின் வீரியம் தாங்க முடியாமல் போகும் பரிதாபம். இவை அனைத்திற்கும் மேலாக செல்போன் கோபுரங்களிலிலிருந்து வெளியாகும் மின்காந்த அலைகளின் தாக்கத்தினால் இக்குருவிகள் பரிதாபமாக உயிரிழக்க நேரிடுகிறது.  வழக்கமாக 10 முதல் 14 நாள்களில் இவை அடைகாத்து குஞ்சு பொறித்துவிடும். ஆனால் செல்போன் கோபுரங்களின் அருகில் இருக்கும் குருவிகள் 30 நாள்கள் வரை அடைகாத்தபோதும் குஞ்சு பொறிப்பதில்லை என்கிறார்கள் வல்லுநர்கள். இந்த குருவிகளுக்கு ஏற்படும் பாதிப்பு நமக்கும் ஏற்படலாம் என்பதும் அதிர்ச்சியான செய்தி.  அழிந்து வரும் பறவை இனங்கள் பற்றிய, பிரிட்டனில் உள்ள ஒரு பறவைகள் பாதுகாப்பு அமைப்பின் கணக்கெடுப்பில் சிட்டுக்குருவி இனமும் இடம்பெற்றுள்ளது.  இதே நிலை நீடித்தால் வருங்காலத்தில் நாம் சிட்டுக்குருவியை படங்களில் மட்டுமே காண முடியும். இதை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என்று உறுதி கொள்வோமாக. ஆண்டுதோறும் மார்ச் 20 ஆம் நாள் உலக  சிட்டுக் குருவிகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 


சரி நம் கதைக்கு வருவோமா? ஒரு பறவையின் உயிரைக் காப்பதற்காக தம் உயிரையே அர்ப்பணிக்கத் தயாராக இருந்த ஒரு அரசனின் கதை கேளுங்கள்!
சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன்னர் சிபி என்று ஒரு சக்கரவர்த்தி உசீனர தேசத்தை ஆண்டு வந்தான். . அவன் மனிதர்களிடம் மட்டுமல்லாது, பறவைகள், மிருகங்கள் என அனைத்து உயிரினங்களிடமும் மாறாத அன்பு கொண்டிருந்தான். கருணைக்கும், கொடைத்திறனுக்கும் பெயர் பெற்ற மன்னர்களில் சிபி  பலராலும் போற்றப்படுபவர். காரணம், அவனுடைய பரந்த மனமும் , தயாள குணமும்தான்.  சிபியின் இந்த கீர்த்தி தேவலோகத்தையும் எட்டியது. தேவேந்திரன் சிபிச் சக்கரவர்த்தியை சோதிக்க விரும்பினான். அக்கினி பகவானையும் உடன் அழைத்துக்கொண்டு, தான் ஒரு கழுகு வடிவத்திலும், அக்கினி பகவான் ஒரு புறா வடிவத்திலும் பூமிக்கு வந்தனர். வேகமாக பறந்து வந்த கழுகு, புறாவைத் துரத்திக்கொண்டு வந்தது. 

ஏழை எளியோருக்கு உதவுவதைத் தம் கைகாளாலேயே செய்ய விரும்புபவன் சிபி. அன்று தம் நந்தவனத்தில் அப்படி ஏழைகளுக்கு உணவளித்து முடித்து அரண்மனைக்குத் திரும்ப நினைத்தபோது, சிபியின் கைகளில் ஒரு புறா வந்து விழுந்தது.  அந்தப் புறாவின் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. ‘என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள்’ என்று கேட்பது போல அதன் முகம் மிகவும் பரிதாபமாக இருந்தது. அரசனின் மடியில் அப்படியே சுருண்டு  கிடந்தது. அதனை ஆதரவுடன் கையில் எடுத்து தடவிக் கொடுத்தான். அப்போது ஒரு பெரிய கழுகு அவர்கள் முன்னால் வந்து நின்றது. சிபியின் மடியில் இருந்த புறாவை தம் கூரிய கால் நகங்களால், கவ்வி எடுத்துச் செல்ல முயன்றது.  சிபி மன்னன் அதைத் தடுத்து நிறுத்தினான். புறா பயத்தில் மிகவும் நடுங்கிப்போனது. அப்போது ஒரு அதிசயம் நடந்தது.அந்த கழுகு மனிதனைப்போலவே பேச ஆரம்பித்தது. “அரசே, என்னுடைய இரையை நான் உண்பதை நீ ஏன் தடுக்கிறாய். என்னைத் தடுக்காமல் அந்த புறாவை கீழே விட்டுவிடு. நான் எடுத்துக்கொண்டு போகிறேன்” என்று அதிகாரம் செய்தது. 

"நீ யார் என்றே எனக்குத் தெரியவில்லை.  ஆனால் மனிதனைப் போலப் பேசும் உன் வல்லமை என்னை பெரிதும் வியப்படையச் செய்கிறது. எதுவானாலும், இந்தப் புறா தற்போது என் அடைக்கலமாக வந்திருக்கிறது. அதைக் காப்பாற்ற வேண்டியது என்னுடைய கடமை. ஆகவே இந்தப் புறாவை விட்டுச் சென்றுவிடு. நீ அதை எடுத்துச் செல்வதை என்னால் அனுமதிக்க முடியாது!" என்றான் சிபி.

உடனே அந்த கழுகு, "அரசே! உனக்கு எல்லா உயிரும் சமம்தானே. அப்படியிருக்க, என் இரையை உண்ண விடாமல் என்னைத் தடுப்பது நியாயமில்லையே நீ எல்லாருக்கும் நியாயம் சொல்ல கடமைப்பட்டவன். அப்படியிருக்க என்னையும் நீதானே காப்பாற்றவேண்டும்?  பசியால் வாடும் என் நிலை என்ன? நான் பசியால் இறந்துபோக வேண்டுமா? " என்று கோபமாகக் கேட்டது .

அந்தக் கழுகின் வாதம் நியாயமாகப்பட்டதால், சற்றே மனம் வருந்தி, அதனிடம், "உனக்குத் தேவையான வேறு எது வேண்டுமானாலும்  கேள். நான் அதைத் தருகிறேன். பாவம் அந்த புறாவை மட்டும்  விட்டுவிடு." என்று கூறினான்.

உடனே இதுதான் சமயம் என்று அந்த கழுகு, "அரசே! எனக்கு மாமிசம் உடனே வேண்டும்! அது மனித மாமிசமாக இருந்தாலும் கூட  பரவாயில்லை.  என்னால் பசி தாங்க முடியவில்லை! உடனே உணவிற்கு ஏற்பாடு செய்” என்றது.

சற்றே யோசித்த மன்னன் சிபி, “உன் பசியைப் போக்க வேண்டியதும் என் கடமைதான். அதற்காக இன்னொரு உயிரைக் கொல்ல எனக்கு மனம் வரவில்லை. உனக்கு மாமிசம்தானே வேண்டும். இதோ இந்த புறாவின் எடைக்குச் சரியாக என் தொடையில் இருந்து சதையை வெட்டித் தருகிறேன். நீ உண்டு பசியாறலாம்” என்று சொல்லி, உடனே சேவகர்களை அழைத்து தராசைக் கொண்டுவரச் சொன்னான். தராசில் ஒரு புறம் புறாவை வைத்துவிட்டு மற்றொரு புறம் தன் தொடையில் இருந்து சதையை கொஞ்சம், கொஞ்சமாக வெட்டி வைக்கிறான். ஆனாலும் அந்த தராசு இறங்கவே இல்லை. உடனே தானே ஏறி அதில் அமர்ந்த மறு நொடி, தராசு சம நிலைக்கு வந்தது. அடுத்த நிமிடம் அந்த புறாவும், கழுகும் தங்கள் சொந்த உருவமான, அக்கினி தேவன் மற்றும் இந்திரனாகவும் மாறி, அவனை அன்புடன் தடவிக் கொடுக்க, அவன் தொடையில் சதை வெட்டி எடுக்கப்பட்டதால் ஏற்பட்ட ரணமும் மறைந்தே போனது. அரசன் மகிழ்ந்து அந்த தேவர்களிடம் ஆசி பெற்றான்.  அவர்களும் சிபிச் சக்கரவர்த்தி அனைத்து நலங்களும் பெற்று நீடூழி வாழ வேண்டும் என்று ஆசி கூறிச் சென்றனர். தம் உயிர் போலவே பிற உயிரையும் எண்ண வேண்டும். நம்மைவிட எளிய உயிர்களுக்கு இயன்றவரை நாம் அடைக்கலம் கொடுக்க வேண்டும். அதுவும் ஒரு தலைமைப் பதவியில் இருப்பவன் தன்னை நம்பி இருப்போருக்கு தன்னலமின்றி சேவை செய்வதோடு, தர்ம, நியாயம் தவறாமல் நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது அல்லவா

முற்றும்.

கூகிளார் படங்களுக்கு நன்றி

நன்றி : வல்லமை - செல்லம்

2 comments:

  1. நீதிக்கதை நெகிழ வைத்தது. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete