Friday, December 20, 2013

பாட்டி சொன்ன கதைகள் 22


பவள சங்கரி


ஹாய் குட்டீஸ் நலமா?


கரிகாலன் கட்டி வைத்தான் கல்லணையை!


ஆங்கிலப் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் என்பவர், நம் இந்தியாவின்,  தமிழ்நாட்டில் இருக்கும் மிகப்பழமையான,  திருச்சிக்கு அருகிலுள்ள கொள்ளிடம் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள கல்லணை என்ற இந்த அணையை பலகாலம் ஆராய்ச்சி செய்து பல உண்மைகளைக் கண்டறிந்தார் . காலத்தை வென்று நிற்கும் நம் தமிழின மன்னனின் பெரும் சாதனையைப் போற்றி, பெரிதும் வியந்து அதனை,  ' பிரம்மாண்டமான அணைக்கட்டு '  என்று புகழ்ந்துள்ளார். இதன் பிறகு நம் கல்லணையின் புகழ் பாரெங்கும் பரவியது! இதைக் கட்டியது யார் என்று தெரியுமா? சங்க காலத்தில் கரிகாலன் என்ற சோழ மன்னன் தான் இந்த கல்லணையைக் கட்டினான்.  இன்றுவரை புழக்கத்தில் இருக்கக்கூடிய மிகப் பழமையான அணையும் இதுதான். கரிகாலன் கி.பி. 2ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழ மன்னன், இவன் தந்தையின் பெயர் இளஞ்செட்சென்னி. சோழர் குலத்தை ஒரு குறுநில அரசிலிருந்து மாற்றி காஞ்சி முதல் காவிரி வரை பரவச்செய்த பேராற்றல் பெற்றவன். கரிகாலன் சிறுவனாக இருந்த போது தீ விபத்திலிருந்து தப்பியதால்  அவனது கால்  வெந்து கருகியதால் கரிகாலன் எனப் பெயர் பெற்றான் என்று பண்டைய தமிழ் வரலாறு கூறுகிறது. 

காவிரியில் அடிக்கடி பெரும் வெள்ளம் வந்ததால் மக்கள் மிகவும் வேதனைக்குள்ளானார்கள். மக்களின் வேதனையைப் போக்க வேண்டியது அரசனின் கடமையல்லவா?  அதற்காக கரிகாலன் கட்டிய, மிகப் பழமையான நீர்ப்பாசனத் திட்டம் கொண்ட இந்த கல்லணை காவிரியின் போக்கைக் கட்டுப்படுத்திக் கழனிகளிற் பாய்ச்சிச் செழிப்பை உண்டாக்கியது. இதனை  பட்டினப்பாலை, பொருநர் ஆற்றுப்படை பாடல்களும், தெலுங்கு சோழக் கல்வெட்டுகளும், திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் உறுதிபடுத்துகின்றன. இந்தக் கல்லணை கட்டிடக் கலையின் பெரும் சாதனையாகக் குறிப்பிடப்படுகிறது. காரணம், மணலில் அடித்தளம் அமைத்துக் கட்டியுள்ள பழந்தமிழரின் தொழில்நுட்பம் வியத்தகு சாதனையாகவே இருக்கிறது.  1080 அடி நீளமும், 66 அடி அகலமும், 18 அடி உயரமும் கொண்ட, இந்த கல்லணை கிட்டத்தட்ட  1950 ஆண்டுகளாக காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்திக்கொண்டிருக்கிறது என்பது ஆச்சரியமான விசயம் தான். ஏன் தெரியுமா?  இது  இன்றைய நவீன தொழில்நுட்பம் போல் அல்லாமல், வெறும் கல்லும், களிமண்ணும் மட்டும் கொண்டு கட்டப்பட்டுள்ளது என்பதுதான். ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவது என்பது, தொழில்நுடபம் அதிகமாக வளராத அந்த காலகட்டத்தில் சாமான்ய காரியமல்லவே?  அதற்கும் ஒரு வழியைக் கண்டார்கள் நம் முன்னோர்கள். ஆம், காவிரி ஆற்றின்மீது மிகப் பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டார்கள். பொதுவாக நீரின் அடியில் இருக்கும் மணல் அரித்துக்கொண்டே போகும் தன்மையுடையதுதானே. அதனால் அந்தப் பாறைகளும் கொஞ்சம், கொஞ்சமாக மண்ணுக்குள் போகும். அதன் பின் அதன்மேல் மற்றொரு பாறையை வைப்பார்கள். இடைஇடையே தண்ணீர்ல் கரையாத ஒருவித ஒட்டுக் களி மண்ணைப் பூசுவார்கள். இரண்டு பாறையும் நன்கு ஒட்டிக்கொள்ளும். இப்படித்தான் ஒன்றன் மேல் ஒன்றாக பாறையைப் போட்டு பெரிய அணையாக எழுப்பியிருக்கிறார்கள்!

சரி இப்போது இதே அணை சம்பந்தப்பட்ட இன்னொரு ஆச்சரியமான கதையைப் பார்க்கலாமா?


அப்பா சொன்னா கேட்டுக்கணும்!

ரொம்ப நாட்களுக்கு முன்பு ஹார்லெம் என்ற ஹாலந்து நாட்டின் ஒரு முக்கியமான நகரத்தில் ஹான்ஸ் பிரின்க்கர் என்று ஒரு சிறுவன் வாழ்ந்து வந்தான். இவனுடைய தந்தை, கண்மாய்களை திறந்து மூடுதல் அல்லது அதன் நீர் அளவைக் கட்டுப்படுத்தும் மிகப்பெரிய மர வாயில்களை திறந்து மூடும் தொழிலில் இருப்பவர். கால்வாய்களில் அளவிற்கு அதிகமாகத் தண்ணீர் பாய்ந்து ஆபத்து ஏற்படுத்தாத வகையில் மிகவும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய வேலை அவருடையது. ஹாலந்து நாட்டின் பெரும் பகுதி கடல் மட்டத்தைவிட தாழ்வாக இருப்பதால், நிலத்தில் வெள்ளம் புகுந்துவிடாமல் இருக்க உறுதியான நீண்ட மதில் மற்றும் தடைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. இந்த உயரும் அலைகளின் அழுத்தத்தினால் பல நேரங்கள் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது என்பதால் அதீத கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதை சிறுவர்கள்கூட அறிந்து வைத்திருந்தனர்.  ஒரு சிறு கவனக் குறைவும் பெரிய அழிவையும், பெரும் உயிர்ச்சேதமும் ஏற்படுத்திவிடும் என்று மகனுக்குத் தந்தை தெளிவாகவேப் புரிய வைத்திருந்தார். 

ஒரு இனிமையான இலையுதிர்கால மதியப்பொழுது அது. அப்போது ஹான்ஸ் பிரின்க்கர் என்ற அந்தச் சிறுவனுக்கு எட்டு வயது இருக்கும். மிக இரக்க குணம் கொண்ட அவன், அந்த மதகின் மறுபுறத்தில் வாழும் ஒரு குருட்டு மனிதருக்கு கேக் கொடுத்துவிட்டு வர வேண்டும் என்று பெற்றோரிடம் சொல்லிவிட்டு அங்கு செல்ல முற்பட்டான். வாய்க்கால் வழியாகச் செல்லும்போது இலையுதிர் கால மழை நீரினால் அது நிறைந்து கிடந்ததைக் கண்டான். ஒரு கணம் அவனுடைய கற்பனை வேகமாக அந்த உறுதியான வாயிற்கதவு மீது சென்றது. ஒரு வேளை அந்த வாயில்,  தண்ணீரை மெல்ல வெளிவிட  ஆரம்பித்தால் வயல் முழுவதும் அந்தக் கோபமான நீரினால் நிறைந்துவிடுமே. இப்படி எதையோ நினைத்துக் கொண்டே அழகழகான சிறிய வண்ண மலர்களை பொறுக்கிக்கொண்டு அதை காற்றில் பறக்க விட்டு அந்த அழகில் மயங்கி, அப்படியே மிதந்து கொண்டே சென்றுகொண்டிருந்தான். முயல் போல வயலுக்குள் துள்ளிக் குதித்துக்கொண்டு சென்றான். பார்வையற்ற தன் நண்பனின் முகமும், தன் வருகையால் அவர் முகம் மலரப்போவதையும் எண்ணி மகிழ்ச்சியுடன் சென்று கொண்டிருந்தான்.


சூரியன் மறைந்து கொண்டிருப்பதை ஹான்ஸ் கவனிக்கவில்லை. தன்னைச் சுற்றி அப்போதுதான் மெல்ல நோட்டமிட்டான். புல்லின்மீது விழுந்திருந்த தன்னுடைய நிழல்கூட மறைந்திருந்தது. இருட்ட ஆரம்பித்திருந்தது. இன்னும் கொஞ்சம் தொலைவு செல்ல வேண்டியிருந்தது. நீல மலர்களெல்லாம்,  கருத்துப் போயிருந்தது. அடர்ந்த காடு இடையில் வந்தபோது கொஞ்சம் திகிலாகவும் இருந்தது பாவம் அவனுக்கு. தன்னுடைய பள்ளியில் சொல்லிக் கொடுத்த பாடல்களையெல்லாம் பாடிக்கொண்டே சென்று கொண்டிருந்தான். சரி, வேகமாக ஓடிப்போய்விடலாம் என்று காலை எட்டிப்போட்ட அதே நேரம், ‘சொட்... சொட்..’ என்று தண்ணீர் துளித்துளியாகத் தெரித்து விழும் சத்தம் கேட்டு அதிர்ந்து திரும்பிப் பார்த்தான். சத்தம் வந்த திசையில் மெல்ல தலையை உயர்த்திப் பார்த்தபோது, அந்த நீண்ட மதிற்சுவரில் ஒரு சிறிய ஓட்டை இருப்பதையும், அதிலிருந்துதான் சொட்டு, சொட்டாக நீர் வெளிவருவதையும் கண்டான். அந்தச் சிறுவனுக்கு அதைக் கண்டவுடன் அபாயம் புரிந்துவிட்டது. இப்படியே தொடர்ந்தால், விரைவிலேயே மிகப் பயங்கரமான சம்பவம் நடக்கலாம் என்று புரிந்துகொண்டான். நொடியில் தன் கடமையை உணர்ந்துகொண்டான் ஹான்ஸ் கையில் இருந்த பூக்களையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, அந்த ஓட்டை இருந்த அந்த உயரமான இடத்திற்கு தொற்றி ஏறினான். அந்த ஓட்டையின் மீது தன் பிஞ்சு விரல்களை வைத்து அழுத்தியபோது நீர் வரத்து நின்றது.  மகிழ்ச்சியில் துள்ளியது அவன் மனது. தான் ஹார்லெம் மக்கள் இந்த கோபமான நீரில் மூழ்கிவிடாமல் எப்படியும் காப்பாற்றி விடலாம் என்று மகிழ்ந்தான். ஆரம்பத்தில் எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால் இரவு நெருங்கிக் கொண்டிருந்ததால், குளிர் காற்று வீச ஆரம்பித்தது. நம் இளம் கதாநாயகன் பாவம் குளிரில் நடுங்கி விறைத்துப்போக ஆரம்பித்தான். தன் பலம் கொண்டமட்டும் சத்தமாகக் குரல் கொடுத்தான். ஆனால் ஒருவரும் வருவதாக இல்லை. தாங்க முடியாத குளிர் உறையச் செய்தது. அழுத்திய கையும் வலி எடுக்க ஆரம்பித்தது. மெல்ல, மெல்ல அந்த வலி உடல் முழுவதும் பரவியது.  “அம்மா.. அம்மா..” என்று ஆன மட்டும் கத்தினான். ஒரு பதிலும் இல்லை. அவன் அம்மா, இவன் தன் நண்பனுடனேயே இரவு தங்கிவிட்டான் என்று நினைத்துவிட்டாள். அவனுக்கு இரவு முழுவதும் அப்படியே இருப்பதைத் தவிர வேறு வழியிருப்பதாகத் தெரியவில்லை. அந்த நீண்ட மதிற்சுவரின் மத்தியில் அந்த ஓட்டையை அழுத்திப் பிடித்தவாறு தொங்கிக் கொண்டிருந்தான் ஜான்சன். தூக்கமும் வரவில்லை, ஆனால் மயக்கத்தில் தலை தொங்கியவாறு இருந்தது. உடலெல்லாம் துவண்டு கிடந்தது. உடலிலிருந்த அத்துனை சத்தும் இருக்கும் இடம் தெரியாமல் போனது. தானே நினைத்தாலும் அங்கிருந்து தன் கையை எடுக்க முடியுமா என்று அவனுக்குத் தெரியவில்லை. 

பொழுது புலர்ந்தது!. ஒரு துறவி  ஒரு நோயாளிக்குப் பணிவிடை செய்துவிட்டு மடத்திலிருந்து வெளியே வந்துகொண்டிருந்தார். அந்த இடத்தைக் கடக்கும்போது, ஏதோ முனகல் சத்தம் கேட்க, மேலே பார்த்த அந்தப் பெரியவர், ஒரு சிறுவன் சுவரோடு ஒட்டிக் கிடந்ததைக் கண்டார். வேதனை தாங்காமல் முனகிக் கொண்டிருப்பதையும் கேட்டார். 

இந்தச் சிறுவன் இங்கு என்ன செய்கிறான் என்ற ஆச்சரியத்தில், அவரும் உரக்க, “அங்கு என்னப்பா செய்கிறாய்” என்று கத்தினார். 

அவனும், “தண்ணீர் முழுவதும் வெளியே வராமல் அடைத்துக் கொண்டிருக்கிறேன். உடனே வரச்சொல்லுங்கள் அவர்களை” என்றான் முனகலாக.  அதற்குமேல் அவனிடம் எந்த சத்தமும் இல்லை.அடுத்து என்ன நடந்திருக்கும் என்று தெரிந்ததுதானே. ஊர் மக்கள் அவனை தெய்வமாகவேக் கொண்டாடினர் என்று சொல்லவும் வேண்டுமோ? ஆண்டவன் அருளால் அவன் உயிரையும் காப்பாற்ற முடிந்தது அனைவருக்கும் மகிழ்ச்சியளித்தது!!

நல்லவர்களை இறைவன் என்றும் கைவிடுவதில்லை!

படங்களுக்கு நன்றி : கூகிள்

நன்றி ;  வல்லமை - செல்லம்

2 comments:

 1. சிறப்பான கதை... முடிவில் சொன்னதும் உண்மை... நன்றி...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. கல்லணையைப்பற்றிய விபரங்களும், சொல்லியுள்ள கதையும் அருமை. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

  கல்லணையைப்பற்றி நானும் கொஞ்சம் எழுதியுள்ளேன்.

  http://gopu1949.blogspot.in/2011/07/blog-post_24.html

  ReplyDelete