Monday, December 30, 2013

பாட்டி சொன்ன கதைகள் - 23


பவள சங்கரி

சந்தர்ப்பவாதி எலிகள்


ஹாய் குட்டீஸ் நலமா?

எலியைப் பார்த்திருக்கிறீர்களா?  நீண்ட வால் கொண்ட ஒரு சிறிய உயிரினம் என்றாலும் அதன் வேலைகள் மிகப்பெரியது. சந்தர்ப்பவாதிகளான இந்த எலிகள் பெரும்பாலும் மனிதர்கள் வாழும் இடத்தில்தான் வாழ்கிறது. வளர்ந்து வரும் நாடுகளில் இந்த எலிகளினால் உணவுப் பண்டங்களின் நாசம் அதிகம். எலிகள் பல பரிசோதனைச் சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது. மனித இனத்திற்குப் பயன்படக்கூடிய முக்கியமான சோதனைகளான மரபுணுக்கள், வியாதிகள், மருந்துகளின் பின்விளைவுகள் மற்றும் ஆரோக்கியம் சம்பந்தமான பல்வேறு சோதனைகளுக்காக இந்த எலிகளே பயன்படுத்தப்படுகின்றன. வீட்டில் வளரும் எலிகளுக்கும், காட்டு எலிகளுக்கும் பல வேறுபாடுகள் உண்டு.  வீட்டில் வளரும் எலிகள் அமைதியானதாகவும், மிகவும் அரிதாகவே கடிக்கும் வழக்கமும் கொண்டது. பெரும் கூட்டமாக வாழ்க்கூடிய இந்த எலிகள். மிக அதிகமாகக் குட்டி போடும் வழக்கமும் உடையது. பிரவுன் நிற எலிகளே அதிகமாக விஞ்ஞான பரிசோதனைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. அதன் புத்தி கூர்மை, தீவிரம் மற்றும் ஒத்துப்போகும் தன்மை காரணமாக எலிகள் மிகப்பயனுள்ள ஒரு மரபணுக் கருவியாகப் பயன்படுகிறது. அதனுடைய உளவியல் பல வகையில் மனிதர்களைப் போலவே இருக்கிறது. பல நாடுகளில் இந்த எலிகள் உணவாக பயன்படுத்தப்படுகிறது. நம் இந்தியாவிலும்  உணவுப் பஞ்சம் வந்த காலங்களில் விவசாயிகள் எலிகளை உணவாக உண்டு உயிர் வாழ்ந்திருக்கிறார்கள். பழமைவாதிகளான ஹாவாயி மற்றும் பாலினேசிய மக்களுக்கு இந்த எலிகள் அன்றாட உணவாக இருக்கிறது.  இது போன்று இன்னும் பல்வேறு நாடுகள் எலியை உணவாக உட்கொள்கின்றனர். பாம்புகளுக்கு மிக முக்கியமான உணவாகும் இந்த எலிகள்.

எலிகள் நோய்களை எளிதாக பரப்பக்கூடிய குணம் உடையது என்பதுடன், நம் இல்லத்தையே புரட்டிப்போட்டு விடக்கூடியது.  உலக சுகாதார மையத்தின் அறிக்கையின்படி காலரா, மஞ்சள் காய்ச்சல் போன்று பிளேக் நோயும் மிக அபாயமான உயிர்கொல்லி நோய். 17ம் நூற்றாண்டுகளில் பல லட்சம் மக்கள் இந்த பிளேக் நோயினால் பாதிக்கப்பட்டு இறந்திருக்கிறார்கள். 1994-ம் வருடம்  இந்தியாவில் பிளேக் நோய் மிகவும்  அதிகமாகப் பரவிய மாநிலம் குஜராத். இங்கு  சூரத் மாநிலத்தில் பிளேக் நோயினால் பாதிக்கப்பட்டு 52 பேர் இறந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. 

பிளேக் நோய் எர்சினியா பெஸ்டிஸ் என்ற பாக்டீரியாவினால் உண்டாகிறது. . குளிர் காய்ச்சல், தலைவலி, நிணநீர் சுரப்பி வீங்கி வலி எடுத்தல் போன்றவைகள் பிளேக் நோயின் அறிகுறிகள். இந்த நோயினால் பாதிக்கப்பட்ட எலி கடிப்பதன் மூலமும், எலி கடித்த தின்பண்டங்களை உட்கொள்வதன் மூலமும் பிளேக் நோய் பரவுகிறது. எலியின் உடலிலிருந்து  வரும் தெள்ளுப் பூச்சிகள் மனிதனைக் கடிப்பதன் மூலமும் பிளேக் நோய் பரவுகிறது.  

சரி நம் கதைக்கு வருவோமா?

ஹேம்லினின் பாட்டுக்காரன்!

ரொம்ப காலத்திற்கு முன்னர், 1284இல், ஹேம்லின் நகரத்தில் ஒரு விசித்திர மனிதன் வந்தான். அவன் பளிச்சென்ற அடர்ந்த வண்ணத்தில் வித்தியாசமான கோட் அணிந்திருந்தான். ‘பைய்ட் பைபர்’ என்று அழைக்கப்பட்ட அந்த காற்றிசைக் கருவி வாசிப்பவன், எலி பிடிப்பதற்காக வரவழைக்கப்பட்டான். அந்த நகரத்தில் எலிகள் தொல்லை மிக அதிகமானதால் மக்கள், அதைப் பிடித்துச் செல்லக்கூடிய ஒருவருக்கு தகுந்த சன்மானம் வழங்குவதாக அறிவித்திருந்தார்கள். அந்த எலி பிடிப்பவன், தன் சட்டைப் பையிலிருந்து ஒரு ஊதலை  எடுத்து ஊத ஆரம்பித்திருந்தான். ஊரிலுள்ள அத்தனை எலிகளும், வங்குகள் மற்றும் வீட்டிற்குள்ளிருந்தும் வெளியே வந்து அவனைச் சுற்றி வந்தன.  அவன் நேரே வெஸெர் ஆற்றின் பக்கம் அவைகளை ஓட்டிச் சென்று அந்த ஆற்றினுள் இறக்கினான். அனைத்தும் நீரில் மூழ்கி இறந்து போயின. 


மக்கள் அனைவரும் பிளேக் நோயின் பீதியில் இருந்து விடுபட்ட மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால் அடுத்த நொடி, இதற்குப் போய் இவ்வளவு பணம் தருவதாக ஒப்புக் கொண்டோமே என்று வருந்தவும் ஆரம்பித்தனர். அவனிடம் அனைத்து விதமான சாக்கு போக்குகளும் சொல்லி அவனுக்கு பணம் கொடுக்க மறுத்துவிட்டனர். அவன் மிகவும் கோபமாகவும், வெறுப்பாகவும் வெளியேறினான். ஒரு ஜூன் மாதம் 26ம் நாள் காலை 7 மணிக்கு மீண்டும் வந்தான் அவன்.  இன்று ஒரு வேட்டைக்காரனின் உடையில் வந்தான். தலையில் ஒரு விநோதமான தொப்பி அணிந்து கொண்டு முகத்தில் ஒரு பயங்கரம் இருந்தது. தெருவில் இறங்கி தன் ஊதலை எடுத்து ஊத ஆரம்பித்தான். இப்போது அவன் பின்னால் கூட்டம் கூட்டமாகச் சென்றது எலிகள் அல்ல.. அனைத்தும் குழந்தைகள். நான்கு வயதில் ஆரம்பித்து, ஆண் மற்றும் பெண் குழந்தைகளுடன், மேயரின் வளர்ந்த பெண்ணும் அதில் இருந்தாள். அவன் அந்தக் குழந்தைகளை அழைத்துக்கொண்டு ஒரு மலைக்குச் சென்றான். அந்தக் குழந்தைகளோடு மறைந்தும் போனான்..இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த, குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் ஆயா ஒருவள் , சற்று தூரம் பின்னாலேயேச் சென்றவள் பாதியிலேயே திரும்பி வந்து இந்தச் செய்தியை ஊருக்குள்  சொன்னாள். பதட்டமான பெற்றோர் தங்கள் குழந்தைகளை தேடிக்கொண்டு நகர எல்லைக்கு ஓடினர். குழந்தைகளைக் காண முடியாமல் துக்கத்தில் கதறினர் தாய்மார்கள். ஒரு மணி நேரத்திற்குள் ஊர் முழுவதும் ஆட்களை விட்டு தேடியாகிவிட்டது. ஒருவரைக்கூட காண முடியவில்லை.  மொத்தத்தில் 130 குழந்தைகள் தொலைந்து போயிருந்தனர்.  ஒரு கண் பார்வையற்ற மற்றுமொரு காது கேளாத குழந்தைகள் மட்டும் பாதியிலேயே திரும்பி வந்தனர். ஆனால் இருவராலும் ஒழுங்காக அந்த இடத்தைக் குறிப்பிட முடியவில்லை. இன்னுமொரு சிறுவன், தான் எடுக்க மறந்த மேல் ஜாக்கெட்டை திரும்ப வந்து எடுத்துச் செல்வதற்குள் அவர்கள் ஒரு குகைக்குள் சென்று மறைந்ததால் அவன் மட்டும் தப்பிக்க முடிந்தது. 

18ம் நூற்றாண்டின் பாதி வரையில் , இன்று வரையும் இருக்கலாம், அந்தக் குழந்தைகளை வாரிச் சென்ற தெருக்களில் எந்த இசையோ, நடனமோ அனுமதிக்கப்படவில்லை. திருமணம் அல்லது மத ஊர்வலம் என அந்த இடத்தைக் கடக்கும் எதுவும் தங்கள் ஆட்டம், பாட்டத்தை நிறுத்திவிட்டுத்தான் அமைதியாகச் செல்ல வேண்டும். அந்தக் குழந்தைகள் மறைந்த இடத்திற்கு பாப்பன்பெர்க் என்று பெயரிட்டார்கள். இடது புறமும், வலது புறமும் இரண்டு கல்லால் ஆன சிலுவைகளை நினைவுச் சின்னமாக நிறுவினர். சிலர் அந்தக் குழந்தைகள் குகைக்குள் சென்றுவிட்டனர் என்றும், மற்றும் சிலர், அவர்கள் மீண்டும் திரான்சில்வேனியாவிற்கு வந்துவிட்டனர் என்கின்றனர். அவன் கேட்டதைவிட பன் மடங்கு அதிகமாக பணத்தைப் பெற்றுக்கொண்டு குழந்தைகளை விடுவித்தான் என்றும் சிலர் கூறுகின்றனர். 

எவர் ஒருவரையும் அவர் தகுதி பற்றி அறியாமல் குறைத்து மதிப்பிட்டு, எதிர்த்து நிற்கும்போது பேரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என்பதை உணர வேண்டும் குழந்தைகளே. சொன்ன வாக்கை கூடியவரை காக்க வேண்டியது முக்கியமான கடமை. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதில் பலன் இல்லை!

முற்றும்.

படங்களுக்கு நன்றி :

http://en.wikipedia.org/wiki/Rat

நன்றி : வல்லமை - செல்லம்

2 comments:

  1. ஏற்கனவே கேள்விப்பட்டுள்ள கதையே ஆகினும் சொல்லியுள்ளவிதம் மிகவும் அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. குழந்தைகள் மட்டுமல்ல... அனைவரும் இன்றைக்கு அவசியம் உணர வேண்டிய கதை...

    வாழ்த்துக்கள்....

    ReplyDelete