Wednesday, March 19, 2025

சூழ்நிலைக் கைதி


வார்த்தைகளை கொஞ்சம் பக்குவமாகப் பயன்படுத்தியிருந்தால்
இவ்வளவு பெரிய துன்பச் சூழலில் சிக்கியிருக்க மாட்டேன்
சற்றே பொறுத்திரு எனும் மந்திர வார்த்தையால்
சூழ்நிலையைப் புரிய வைத்திருந்தால் ஆதீத கற்பனையால்
இவ்வளவு அதிர்ச்சியடைந்திருக்க மாட்டேன்
ஒரு சிறிய விளக்கம் கொடுத்திருந்தால் தூக்கம் கெட்டு
குருதி கொதித்து மருத்துவமனை வரை வந்திருக்க மாட்டேன்
எப்படியும் எதையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருப்பது
தெரிந்தும் இத்தனை கடினமான வார்த்தைப் பிரயோகத்தைத்
தவிர்த்திருந்தால் சுயபச்சாதாபத்திற்கு ஆளாகாமல் இருந்திருப்பேன்
மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லும்போது தற்காப்பிற்கு
ஒரு மரத்துண்டாவது சிக்காமலா போகும்
சமாதானத்திற்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப்போடாமல்
அதீத அமைதி காப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது?
- பவளா

காலம் கடந்த ஞானம்

 அறுபதில் பெற்ற இந்த ஞானம் இருபதில் பெற்றிருந்திருக்கலாம் …

1.உங்களை நீங்கள் எந்த அளவிற்கு கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்துகிறீர்களோ அதே அளவு மரியாதையைத்தான் உங்கள் உறவுகளிடமிருந்து நீங்கள் பெற முடியும். மரியாதை சம்பாதிக்கப்படுகிறது!
2. தோல்விக்கான காரணம் சரியான முயற்சி இன்மைதான்.
3. நிராகரிப்பிற்கான காரணம் சரியான வேண்டுகோளின்மைதான்.
4. வெற்றியும் தோல்வியும்நீங்கள் முயற்சிசெய்வதற்கு முன்பு உங்கள் மனதில் இருக்கும் தெளிவற்ற கருத்துகள் மட்டுமே. எதுவும் செய்யாமல் இருப்பதுதான் உண்மையான தோல்வி.
5. உங்களைக் காப்பாற்ற உங்கள் இலக்கு, சாதனை, உறவு என எதுவும் உடன் வருவதில்லை.
6. எப்போதும் வாழ்க்கையில் ஏதோபற்றாக்குறையோ, அதிருப்தியாகவோ உணருவதிலிருந்து யாரும் உங்களை காப்பாற்ற இயலாது.
7. பிரச்சனைகள் இல்லாத வாழ்க்கை என்று எதுவும் இல்லை. இன்றைய பிரச்சினைக்கான தீர்வு நாளைய பிரச்சினைக்கான வித்தாகக்கூட இருக்கலாம்.
8. உங்கள் நடவடிக்கைகளின் பிரதிபலிப்பாகத்தான் உங்கள் வாழ்க்கைத் துணையின் நடவடிக்கைகள் இருக்கும்.
9. வாழ்க்கையின் மிகவும் மதிப்புமிக்கவைகளான ஆரோக்கியம், செல்வம், அறிவு, நம்பிக்கை, உறவுகள் போன்றவைகளின் முக்கியத்துவத்தை இளமையாக இருக்கும்போதே கவனம் கொள்ளத் தொடங்கினால் பிற்காலத்திற்கு நல்லது.
10. இளமையில் மிகவும் கவர்ச்சிகரமாகத் தோன்றும் சில விசயங்கள் பிற்காலங்களில் எதிர்மாறாகிவிடுகின்றன.
11. உங்கள் பிரச்சனைகளுக்கான பொறுப்பை நீங்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ளும் வகையில் அதனால் ஏற்படும் வலியிலிருந்து மீள்வதற்கான வழியையும் எளிதாகக் கண்டடைகிறீர்கள்.
12. உங்கள் பிரச்சினைகளுக்கு வேறொருவரைகாரணமாக்கி குறை கூறும்போது, உங்கள் மகிழ்ச்சியையும் நல்வாழ்வையும் வரையறுக்கவும் ஆணையிடவும் அவர்களை அனுமதிக்கிறீர்கள். அவர்களுக்கு அதிகாரம் கொடுக்கும் முட்டாள்தனத்தை செய்து மரியாதையை இழக்காதீர்கள்.
13. நீங்கள் புத்திசாலி என்றோ, தன்னம்பிக்கை உள்ளவர் என்றோ, வசதியானவர் என்றோ எவரிடமும் நிரூபிக்கும் முயற்சி தேவையற்றது.
14. ஏதாவது ஒன்றைச் சிறப்பாகச் செய்யக் கற்றுக்கொண்டு, மேலும் திறமையையும், தன்னம்பிக்கையையும் வளர்க்கும் செயல்முறையே அதன் மீது அதிகமான ஆர்வத்தை ஏற்படுத்துகிறதே தவிர பேரார்வம் எல்லாம் காரணமில்லை.
15. வாழ்க்கையில் நமக்குக் கிடைக்கும் அனைத்தும் நம் உள்ளார்ந்த உழைப்பினாலும், தியாகத்தினாலுமே கிடைக்கிறது. ஆனாலும் எது நம்மை நன்றாக உணர வைக்கிறதோ அதுவே ஒருநாள் நம்மை மோசமாக உணர வைப்பதையும் தவிர்க்க இயலாது.
16. மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை அல்ல. அர்த்தமுள்ள மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை என்பதைக் காலமே உணரவைக்கும்.
17. உடற்பயிற்சியை எதற்கும் ஈடாகப் பார்க்காமல், ஒரு முதலீடாகக் காணும்போதுதான் நீங்கள் செலுத்தும் ஒவ்வொரு துளி ஆற்றலையும், பன்மடங்காகத் திரும்பப் பெறுவீர்கள்.
18. சில சமயங்களில் காயப்படுத்தி, சில சமயங்களில் சங்கடப்படுத்தினாலும் பெரும்பாலானவர்கள் நல்லவர்கள்தான்.
19. உங்கள் வளர்ச்சி என்பது உங்களை அரிதாகவே மகிழ்ச்சிப்படுத்துகிறது. அதற்கு உங்கள் பழைய மதிப்புகள், உங்கள் பழைய நடத்தைகள், உங்கள் பழைய அன்புகள், உங்கள் பழைய அடையாளம் போன்றவற்றின் இழப்பு தேவைப்படுகிறது. அந்த மாற்றம் ஏதோவொரு வகையில் வருத்தம் ஏற்படுத்தப்போவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
20. நீங்கள் யார் என்பதை நீங்கள் தீர்மானிக்கவில்லை என்றால், மற்றவர்கள் உங்களுக்காகத் தீர்மானிப்பார்கள். நாம் எதை விட்டுக்கொடுக்கிறோம், எதை தியாகம் செய்கிறோம், எதை நிராகரிக்கிறோம் என்பதன் மூலம் மட்டுமே நாம் வரையறுக்கப்படுகிறோம். எதையும் தியாகம் செய்து எதையும் நிராகரிக்கவில்லை என்றால், நமக்கு எந்த அடையாளமும் இல்லை. நம்மைச் சுற்றியுள்ளவர்களின் விருப்பத்தேர்வுகளாகவும், கோரிக்கைகளின் பிரதிபலிப்பாக மட்டுமே இருப்போம். ஆனாலும் உங்கள் அடையாளம் என்பது சுயமாக கட்டமைக்கப்பட்ட ஒரு மனச் சிறை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
21. மற்றவர்களைப் பற்றிய அனுமானங்களைச் செய்யாதீர்கள். அவர்களுடைய அனுபவங்களை நீங்கள் உணரும் வாய்ப்பு குறைவு. உங்களைப் பற்றிய அனுமானமே பல நேரங்களில் தவறாகலாம்.
22. நீங்கள் நினைப்பதை விட மிகக் குறைவாகவே நீங்கள் மதிப்பிடப்படுகிறீர்கள். காரணம் அவரவர்களுக்கு தங்களைப் பற்றி சிந்திக்கவே பொழுது சரியாக இருக்கிறது.
23. உங்கள் குறைகளை ஏற்றுக்கொண்டு, தோல்வியைத் தழுவுங்கள். காரணம் வெற்றியை எதிர்பார்த்து தன்னம்பிக்கை வருவதில்லை. அது தோல்வியில் இருந்து வரும் ஆறுதலிலிருந்துதான் வருகிறது.
24. எல்லோருக்கும் பிடித்தவராக இருக்க வேண்டும் என்று போராடுவதைவிட, அவர்களுக்குப் பிடிக்காதவர்களாக இருக்கும் விருப்பத்தை வளர்த்துக் கொள்வதால், அது செய்ய வேண்டியதைச் செய்ய உங்களுக்கு சுதந்திரம் அளிக்கும்.
25. ஒவ்வொரு நல்ல உறவும் பல வருட நம்பிக்கையின் பின்னணியில் கட்டமைக்கப்படுகிறது. நேர்மையும், நம்பிக்கையுமே ஆரோக்கியமான உறவுக்கும், மகிழ்ச்சிக்கும் முதுகெலும்பாகிறது.
26. உங்கள் எல்லா உறவுகளுக்கும் உங்களால் ஒரே பிரச்சனை என்றால் அதற்குக் காரணம் நீங்கள்தான்.
27. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய மிகவும் பயனுள்ள விசயங்களில் ஒன்று, உங்கள் எதிர்மறை உணர்ச்சிகளை எவ்வாறு ஆக்கபூர்வமாக வழிநடத்துவது என்பதைக் கண்டுபிடிப்பதாகும்.
28. வாழ்க்கையில் எளிதானது எதுவும் அர்த்தமுள்ளதாக இருக்கும் வாய்ப்பு குறைவு. நமக்கு எளிதாகக் கிடைத்த எதையும் பாராட்டவோ அனுபவிக்கவோ மாட்டோம். எனவே உங்கள் வாழ்க்கையில் கடினமான விசயங்களைத் தவிர்ப்பதை நிறுத்திவிடுங்கள்.
29. விரைவாக படுக்கைக்குச் செல்லவும், அதிகாலையில் எழுந்திருக்கவும் பழக வேண்டியது அவசியம்.
30. இறுதியாக, எதையும் புதிதாகக் கற்றுக்கொள்ள வயது ஒரு தடையில்லை. எந்த வயதிலும் புதிதாக எதையாவது கற்றுக் கொண்டே இருக்கலாம். அது மட்டுமே மன நிம்மதிக்கு வழி.

Thursday, January 9, 2025

கழுகும் – சிறுமியும்

 


கழுகும் – சிறுமியும்

 

அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாறலாம். அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்று உணரும் நாட்களும் வரலாம்.

  ஊடகவியல், இணைய ஊடகவியல், இலக்கியம், இசையமைப்பு போன்ற துறைகளுக்காக ஐக்கிய அமெரிக்காவில் வழங்கப்படும் மிக உயரிய விருதுதான் புலிட்சர் பரிசு. இவ்விருது நியூ யார்க் நகரத்தில், கொலம்பியா பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டு வருகிறது.

1994-ம் ஆண்டில் தன்னுடைய சிறப்பான புகைப்படத்திற்காக, கெவின் கார்ட்டர் என்பவர் புலிட்சர் பரிசைப் பெற்றார். தி வல்ச்சர் அண்ட் தி லிட்டில் கேர்ள் (The Vulture and the little girl – கழுகும் சிறுமியும்) என்ற அந்த புகைப்படம் அனைத்துப் படங்களிலும் மிகச்சிறப்பான ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

சூடான் நாட்டின் அப்போதைய சூழ்நிலையை மையப்படுத்தி எடுத்த இந்த புகைப்படம் மார்ச் 26, 1993 அன்று தி நியூயார்க் டைம்ஸ் இதழில் வெளிவந்தது. பட்டினியால் மிகவும் பலவீனமாகி இருந்த எலும்பும், தோலுமாக மெலிந்து நடக்க முடியாமல் சுருண்டு கிடந்த ஒரு பெண் குழந்தை ஐக்கிய நாடுகள் சபையின் உணவு வழங்கும் மையத்தை அடைவதற்கு போராடிக் கொண்டிருந்த அந்த குழந்தையின் பின்னால் ஒரு கழுகு, அந்தக் குழந்தை இறந்து விழுந்தால் உணவாக்கிக் கொள்ளலாம் என்று காத்துக் கொண்டிருக்கிறது. இந்த சிறப்புப் படத்திற்கான புலிட்சர் பரிசை 1994இல் பெற்றார். ஆனால் அந்த மகிழ்ச்சி வெகு நாட்களுக்கு நிலைக்கவில்லை.

கடுமையான விமர்சனத்திற்கு உள்ளான அந்தப் படத்தினால் பலர் அவரை கண்டிக்க ஆரம்பித்தனர். அந்தக் குழந்தைக்கு உதவுவதற்குப் பதிலாக இப்படி படம் எடுத்து புகழ் சேர்த்ததை மிக மோசமாக விமர்சித்தனர். மனம் நொந்து போன கார்டர், அதிகமான மன உளைச்சலுக்கு ஆளானவர் அதிர்ச்சியும், குற்ற உணர்ச்சியின் காரணமாகவும் நான்கு மாதங்களில் தற்கொலை செய்து இறந்து போனார்.

இன்றும் விபத்து நடக்கும் இடங்களில் உயிருக்குப் போராடும் ஒருவரை காப்பாற்றுவதைக் காட்டிலும் அதை படம் பிடித்து வெளியிடுவதில் அதிகக் குறியாக இருப்பவர்களைத்தான் அதிகமாகக் காண முடிகிறது.

 

சூழ்நிலைக் கைதி

வார்த்தைகளை கொஞ்சம் பக்குவமாகப் பயன்படுத்தியிருந்தால் இவ்வளவு பெரிய துன்பச் சூழலில் சிக்கியிருக்க மாட்டேன் சற்றே பொறுத்திரு எனும் மந்திர வார...