Saturday, October 9, 2010

முதுமையின் மழலை.............


என் மழலைக் குறும்புகளை
உன் தாய்மை பறைசாற்றி மகிழ்ந்தது


உன் முதுமைக் குறும்புகளை
என் ஆணவம் மூடி மறைக்கிறது.


என் மழலை அழிச்சாட்டியத்திற்கு நீ கொடுத்த பரிசு
வண்ண வண்ண இனிப்புகள், தாலாட்டுக்கள்.


உன் முதுமை அழிச்சாட்டியத்திற்கு நான் கொடுத்தது
வண்ண வண்ண மாத்திரைகள், உன்னை தூங்க வைப்பதற்கு.


என் மழலையின் பரிணாமம் வாலிபம்
உன் முதுமையின் பரிணாமம் மறுபிறவியா?


அடுத்த பிறவியிலும் உன் கர்பக்கிரகத்தில்
என் உயிர்க்கருவை அனுமதிப்பாயா?

Thursday, October 7, 2010

மௌனம் பேசியதே !

நிலாவே வா.........செல்லாதே வா.......
எனை நீதான் பிரிந்தாலும்....நினைவாலே அணைப்பேனே...............கவிஞர் வாலி அவர்களின், நம் நெஞ்சுக் குழியைத் தீண்டிய பாடல் அது......

இன்றைய அதிவேக பொருளாதார வளர்ச்சி, வாழ்க்கைத் தரத்தை பன்மடங்கு உயர்த்தியுள்ளது. அதற்கான ஏராளமான வாய்ப்புக்களும் குவிந்துக் கிடக்கிறது......திருமணம், குடும்பம், தனிப்பட்ட வாழ்க்கை என்று பார்க்கும் போது....... இன்றைய திருமண பந்தம் என்ற கட்டமைப்பின் ஆணி வேரே ஆட்டம் கண்டு கொண்டிருக்கிறது....... சகிப்புத் தன்மை, சரியான புரிதல், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இதற்கெல்லாம் சிலர் வாழ்க்கையில் அர்த்தமற்றுப் போகிறது.........

என் தோழி மேகலா, ஒரு தனியார் கம்பெனியில் உயர் அதிகாரியாக பணிபுரிபவர். பொறுப்பான பதவியில் இருக்கும் இவர் உண்மையான உழைப்பாளி. தன்னுடைய 35 வயதில் கம்பெனியில் தன் திறமையை நிரூபித்து, பதவி உயர்வு, பல போட்டிகளுக்கிடையே பெற்று, அந்த உன்னதமான தருணத்தை கணவருடன் சேர்ந்து கொண்டாட வேண்டும் என்ற பேராவலுடன் வீடு தேடி ஓடி வருகிறார். வேலை முடித்து வீட்டில் ஓய்வாக தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கும் கணவரிடம் உற்சாகமாகத் தனக்குக் கிடைத்த பதவி உயர்வு பற்றிக் கூறியவுடன், அவர், " அப்படியா, வெரிகுட், கங்கிராட்ஸ்" என்று கூறிவிட்டு தொடர்ந்து அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார்......

எத்தனையோ எதிர்பார்ப்புகளுடன் கணவரைக் காண ஓடி வந்த மேகலாவின் வெற்றியில் அவருக்கு மகிழ்ச்சிதான் என்றாலும், வழக்கம் போல, அவர் அதிகம் பேசவும், மனைவி பேசுவதைக் கவனிக்கவும் விரும்பவில்லை. நூறாவது முறையாக இது போன்ற பிரச்சனையினால், ஆச்சரியப்பட்டு போனார் மேகலா! அவரிடம், "என்னதான் பிரச்சனை உங்களுக்கு", என்று வெளிப்படையாகக் கேட்டாலும் "அதெல்லாம் ஒன்றுமில்லை நான் நல்லாத்தானே இருக்கேன்", என்று ஓரிரு வார்த்தையில் பதில் சொல்லி மேற்கொண்டு வாதம் வளராமல் முடித்து விடுவார்.

இதில் உண்மை என்னவென்றால், அதிகப்படியான இந்த அமைதி அவர்கள் உறவையே பாதிக்கக் கூடும். கணவனின் இந்த அலட்சியப் போக்கு, தனிமையில் அவர்கள் இனிமையாகக் கழிக்கக் கூடிய பொழுதைக் கூடப் பாதிக்கக் கூடும்.......

50 முதல் 70 சதவிகித திருமணங்களில் பிரச்சனை வருவதற்கு இது போன்று பேச வேண்டிய நேரங்களில் கூட அதீத அமைதி காப்பதும் கூடக் காரணமாகிறது. பெரும்பாலான பெண்களின் பெருங்குறையே தன் கணவர், தன் நண்பரிடமும், உடன் பணிபுரிபவரிடமும் பேசுவது போல தன்னிடம் வெளிப்படையாகப் பேசுவதில்லை என்பதுதான்.

திருமணம் ஆன ஆரம்பக் காலத்தில், மனைவியை வசீகரிப்பதற்கும், தன்னை நிரூபிப்பதற்காகவும் அதிகம் பேசுகின்ற ஆண்கள், வெகு விரைவிலேயே மௌனமாகி விடுகின்றனர். அதாவது தேவையான நேரங்களில் கூட அதிகம் பேச விரும்பாதவர்களாகி விடுகின்றனர். ஆனால் இதற்கு மாறாக, தன் கணவனைப் பற்றி முழுமையாகப் புரிந்து கொள்ளும் வரை அதிகம் பேசாத பெண்கள் பிற்பாடு, ஏகபோக உரிமை எடுத்துக் கொண்டு பேச ஆரம்பித்து விடுகின்றனர்.

பெரும்பாலும் கணவன் மனைவிக்குள் பேச்சு வார்த்தைகள் சுமுகமான நிலையில் இல்லாததற்கான ஒரே காரணம் அவர்கள் இருவரும் ஒரே விடயத்தைப் பற்றி மாறுபட்ட கருத்துக்கள் கொண்டிருப்பதுதான். மன நிறைவான திருமண பந்தம் இல்லாத பெரும்பாலான மனைவிகள் சொல்லக் கூடிய கீழ்கண்ட மூன்று குற்றச்சாட்டுக்களே அதற்குச் சான்றாகும்.

1. கணவர் தன்னுடைய உணர்வுகளை பகிர்ந்து கொள்வதே இல்லை!

பெரும்பாலான மனைவிமார்களின் குறை, தன் கணவன் தன்னுடைய சோகத்தையும், பிரச்சனைகளையும் தன்னுடன் பகிர்ந்து கொள்வதில் பெரும் தயக்கம் காட்டுவதுதான்! அவர்களுடைய பிரச்சனையான நேரங்களில் ஆழ்ந்த மௌனம் சாதிக்கும் ஆண்களின் போக்கு பல நேரங்களில் மனைவியை நிலை குலையச் செய்துவிடுகிறது. மனோத்தத்துவ நிபுணர்கள் கூறும் இதற்கான காரணம், ஆண்களும், பெண்களும் தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்துவதில் உள்ள வித்தியாசங்கள் தான். பெண்களைப் போன்று ஆண்கள் வெளிப்படையான எண்ணங்கள் கொண்டவர்களாக இருப்பதில்லை. அவர்கள் தங்கள் உணர்வுகளை பகிர்ந்துக் கொள்வது ஆண் தன்மைக்கு பொருத்தமற்ற, தேவையற்ற செயலாக போதிக்கப் பட்டு வளர்க்கப்படுவதுதான். இதனாலேயே பெரும்பாலான ஆண்கள் தங்கள் பிரச்சனைகளை மனைவியுடன் கலந்தாலோசித்து தீர்வு காணும் உபாயத்தை இழந்து விடுகின்றனர்.

2. கணவர் தன்னைப் புறக்கணிக்கிறார்!

பெண்களைப் போன்று ஆண்கள் வெளிப்படையாகப் பேசாசதால்தான் தங்களைப் புறக்கணிப்பதாக மனைவி எண்ணுகிறார்.

ஆண்களுக்கு குடும்பப் பொறுப்பு, குழந்தைகள் எதிர்காலம், என்பன போன்ற முக்கிய விடயங்கள் மட்டுமே பேசுவதைத் தவிர, வேறு தன்னுடைய நிதி நிலைமை மற்றும் பிரச்சனைகள் குறித்து தேவையில்லாமல் மனைவியிடம் புலம்புவதில் அவசியம் இல்லை என்று கருதுகின்றனர்.

3. அவர் மற்றவர்களிடம் பேசுவதைப் போல என்னிடம் பேசுவதில்லை!

சில மனைவிகளின் பெரும் குறையே, கணவர் அன்றாடம் வேலையிலிருந்து திரும்பியவுடன், வழி மேல் விழி வைத்துக் காத்திருக்கும் தன்னிடம் நாலு வார்த்தை அனுசரணையாக பேசுவதற்குக் கூட மனமில்லாமல், தான் மிகவும் களைப்பாக இருப்பதாகக் கூறுவதுதான். ஆனால் இதே கணவன், தன்னுடைய நண்பர் வந்தாலோ, தொலைபேசியில் அழைத்தாலோ, உற்சாகத்துடன் பேசுவது கண்டு இவர்கள் நொந்து நூலாகிப் போய்விடுகிறார்கள்!

பெண்களுக்கு, கணவனின் ஆதரவான அந்தப் பேச்சுதான் தன்னிடம் அக்கறையும், நெருக்கத்தையும் உணர்த்துவதாக உள்ளது. தொழில் சம்பந்தமாகப் பேசிப் பேசி அலுத்துப் போய் வீடு திரும்பும் ஆண்கள் எந்த விதமான கருத்துப் பரிமாற்றமும் இல்லாமல் அமைதியாக இருக்கவே விரும்புகின்றனர்.

இது போன்ற வேறுபாடுகளைத் தவிர்த்து, கணவனும், மனைவியும் சுமுகமாகப் பேசி ஒரு பிரச்சனைக்குத் தீர்வு கண்டு, ஆனந்தம் அடைய ஒரு சில வழிகள் உண்டு. அது பற்றிப் பார்க்கலாம்............

1. சரியான நேரத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்!

ஏதாவது முக்கியமான விடயம் பற்றி பேசி முடிவெடுக்க வேண்டிய சூழ்நிலையில், கணவனுக்காக மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தாலும் அவர் வந்தவுடன் பிரச்சனையை ஆரம்பிக்காமல், இன்னும் சற்றே பொறுத்திருந்து, அவருக்கு ஏதாவது காபி, பலகாரம் கொடுத்து உபசரித்து, பின்பு அவர் அமைதியானவுடன் பேச ஆரம்பிக்க வேண்டும்.

2. அவகாசம் கொடுக்க வேண்டும்......

பல நேரங்களில் கணவன் முக்கியமான, தன்னுடைய கேள்விக்கு விடையளிக்காமல் மௌனம் சாதிப்பதைக் கண்டு பொறுக்காத மனைவி, திரும்பத் திரும்ப அதையேக் கேட்டு நச்சரிப்பதால் மேலும் இறுக்கம் அதிகமாவதுடன், அவருக்குச் சலிப்புத்தான் ஏற்படும். இது போன்ற சூழ்நிலைகளைத் தவிர்க்க வேண்டுமானால், கணவர் பதில் சொல்ல விரும்பாத அந்த அமைதியை கலைக்காமல், அவரைப் பொறுமையாக அமைதியாகப் பார்க்க வேண்டும். அதாவது, பார்வையால் பேச வேண்டும். அப்பொழுதும் பதில் கிடைக்கவில்லை என்றால், அவரை மெதுவாக பேச வைக்கும், விதமாக, அவர் மனதில் நினைப்பதை பேசுவதில் என்ன சிரமம் என்பதை அனுசரணையாகக் கேட்க வேண்டும். அதற்கும் பதில் இல்லையென்றால், அந்தக் குறிப்பிட்ட விடயம் பற்றி அடுத்த நாள் பேசலாம் என்று, அதற்கான பதிலைத் தான் அடுத்த நாள் எதிர்பார்ப்பதை புரியவைக்க வேண்டும்.

3. பயணங்கள் செல்லலாம்!

பொதுவாகக் குழந்தைகள் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளும் பெற்றோர், அது தவிர மற்ற விடயங்களைப் பற்றி பேசுவதற்கு அதிக நேரம் செலவிட முயற்சிப்பதில்லை. பொழுதுபோக்குகள், தோட்டப் பராமரிப்பு அல்லது சுற்றுலாப் பயணங்கள் என்பன போன்ற குடும்பத்துடன் சேர்ந்து செலவிடும் சூழ்நிலைகளை நல்லவிதமாக பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.

4. அக்கறையும், ஈடுபாடும் தேவை.

இவை அனைத்தையும் விட மிக முக்கியமானது கணவர் பேசும் போது அந்தப் பேச்சில் கவனம் வைத்து மற்ற வீட்டு விடயங்களைப் பற்றி மனதை அலை பாய விடாமல், அதிக வாதம் செய்யாமல், தேவையான விடயங்களுடன், அக்கறையுடன் பேச ஆரம்பித்தாலே, நல்ல முறையில் உரையாடல், ஆக்கப்பூர்வமாக அமையும் என்பதில் ஐயமில்லை.

5. புகார் வேண்டாமே?

பொதுவாகப் பெண்கள் எப்பொழுதும் புகார் கூறுபவர்களாகவே இருப்பதால்தான் சண்டை வரும் வாய்ப்பு ஏற்படுவதாகக் கூறுகின்றனர் மனோத்தத்துவ நிபுணர்கள். இதனாலேயே பல ஆண்கள் உரையாடலைத் தவிர்க்க முயற்சிக்கிறார்கள். இதனைத் தவிர்ப்பதற்கு ஆக்கப்பூர்வமான, நடைமுறைக்கு ஒத்துவரக்கூடிய வாதத்தைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். நடந்து முடிந்த பழைய தவறுகளையே சுட்டிக் காட்டி குறைகூறிக் கொண்டிருப்ப்பது, " நீங்க எப்பப் பார்த்தாலும் இப்படித்தான்", என்பன போன்ற வசனங்களையும் முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.

எந்தத் தவறாக இருந்தாலும் முழுப்பழியையும் தூக்கி கணவர் மீதே போடக் கூடாது. உதாரணமாக, கணவர் விரும்பாத ஒரு விருந்திற்கோ, விசேசத்திற்கோ, போக வேண்டியச் சூழலில், அவருடைய வெறுப்பான முகபாவத்தைத் தாங்கிக் கொள்ள முடியாவிட்டாலும், அதைப் பக்குவமாக எடுத்துச் சொல்லிப் புரிய வைக்க முயல வேண்டும். தன்னுடைய எண்ணத்தைப், பொறுமையாக, இனிமையாக, எடுத்துரைத்து, அந்தச் சூழ்நிலையை யதார்த்தமாகக் கையாள வேண்டும். இதற்கு மிகுந்த சுய கட்டுப்பாடு அவசியமென்றாலும் இதற்குரிய பலன் மிகவும் சக்தி வாய்ந்ததாகும்.

மேற்கண்ட இத்தனை முயற்சிகளுக்கும் பலன் இல்லாவிட்டால், கண்டிப்பாக கணவனின் நடவடிக்கையில் அக்கறையுடன் கவனம் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் திருமண கவுன்சிலிங் தெரபி மூலம் முயற்சி செய்யலாம்.

Wednesday, October 6, 2010

இயற்கை அன்னையின் இன்ப ஊற்று........


நொடிப் பொழுதின் உன்னத நினைவலைகள்
பரந்த பசுமையான வயல் வெளிகள்
காட்சிக்குத் தப்பிய இயற்கை வனங்கள்
இலவசமான மன ஆறுதல்கள்...........

குளிர்ந்த இளங்காலைப் பொழுது, ஆதவனின் பொன்னொளிக் கிரணங்கள்
நீல வானம், வெள்ளி நிலவு, மின் மினியாய் நட்சத்திரக் கூட்டங்கள்
கடலலைகளின் ஆர்ப்பரிப்பு, நெடிதுயர்ந்த பசுமை மலை முகடு
சுழன்று வீசும் காற்று, கறுத்த வான் மேகம்,
சோ......வென கொட்டும் வெண்பஞ்சுப் பொதியென அருவி

அன்றையப் பொழுதை இனிமையாக்கும் சிறிய விடயங்கள்
சீறி ஓடும் வாழ்க்கை ஓட்டத்தின் இளைப்பாற்றும் நிழற் குடைகள்!

ஓடையின் ஓரங்களில் நட்புக்கரம் நீட்டும் நெடிதுயர்ந்த மரங்கள்
வெட்கித் தலைகுனியும் இலைகள், மலரத் துடிக்கும் வண்ண மொட்டுக்கள்
கோடைக்கால மழையில் நனைந்த மணம் வீசும் மலர்கள்
இதயத்தைக் குளிரச் செய்யும் குறிஞ்சிப் பூக்கள்.

எளிதாகப் பகிர்ந்துக் கொள்ளப்படும் ஆசிகள்!
தம் வாழ்க்கைக்கு ஒளியூட்டும் அன்னைக்கு,
நாம் செய்யும் கைம்மாறு கபடமற்ற புன்னகை.............

Monday, October 4, 2010

அதிர்ச்சி வைத்தியம்.......

ஷோபனா, அமெரிக்கா கிளம்புவதற்கு பேக்கிங் பண்ண ஆரம்பித்து விட்டாள். நேற்றுதான் வந்தது போல் இருக்கிறது. முப்பது நாட்கள் ஓடிவிட்டது.........

ஒரு வருடம் முழுவதும் அடக்கி வைத்திருந்த பாசம், மடை திறந்த வெள்ளம் போல, பொங்கிவர, முப்பது நாட்களும் முப்பது நொடியென சிட்டாய்ப் பறந்து விட்டது. மனம் மட்டும், பரபரப்பாக, செய்வதொன்றும் அறியாது, பரிதவித்துப் போகிறது. மகளையும், குழந்தைகளையும் பிரிய வேண்டுமே என்று நினைக்கும் போதே, அடிவயிற்றில் சிலீரென ஒரு உணர்வு. ஆனாலும் வேறு வழியில்லையே...... அதற்கு மேல் விடுமுறை இல்லை, விசா பிரச்சனை, குடியுரிமை..........இப்படி ஏதேதோ காரணங்கள் மட்டும், பதிலாகக் கிடைக்கும்.

" அம்மா, இதென்ன எல்லா சாமான்களையும் பேக்கிங் பெட்டியோடயே வைக்கிறீங்க? அதுவே பாதி இடத்தை அடைச்சிக்கும். அது மட்டுமில்லாம இருபது கிலோ வெயிட்தான் அலௌட், தெரியுமில்ல. எல்லா பேக்கிங்கையும் பிரிச்சு வையுங்கம்மா.....", என்றாள்.

" ஷோபி, என்னம்மா குழந்தையோட விளையாட்டுச் சாமானையெல்லாம் வெளியே எடுத்து வைக்கிறே?".

" என்னம்மா, பெட்டி முழுக்க டாய்ஸ் மட்டுமே வைக்க முடியுமா? வேணுங்கற டாய்ஸ் அங்கேயே நிறைய வாங்கி வெச்சிருக்கேன். அங்க ஈசியா கிடைக்காத பொருளை மட்டும் தான் வைக்கணும். அடுத்த முறை வரும்போது, பாத்துக்கலாம்".

" அடுத்த முறை வரும் போது குழந்தை பெரியவனாயிட்டா, இதையெல்லாம் சீந்த மாட்டானே?"

" அதுக்கென்ன பண்ண முடியும்? நீங்க வாங்கும்போதே அதை யோசிச்சிருக்கணும்".

" ஏம்மா அடுத்த முறை நீ வர்றதுக்குள்ள நம்ம பப்பு எங்களையெல்லாம் மறந்திடுவானில்ல? திரும்ப புதுசா பார்க்கிற மாதிரி பார்ப்பான் இல்ல?".

" அதெப்படிம்மா, நாமதான் அடிக்கடி, சாட்டிங் பண்ணறோம், வெப் கேமரா மூலம் பார்த்துக்கறோம், நினைச்சா போன்ல பேசறோம்".

" இருந்தாலும்...........".

" மம்மி.........நோ செண்டிமெண்ட்ஸ்...............கொஞ்சம் பிராக்டிகலா இருங்க. ரொம்ப ஓவர் ஆக்டிங் பண்ணாதீங்க", என்றாள், கடுமையாக. மறு வினாடி மாலதியின் முகம், வாடிய மலராக துவண்டுவிட்டது.

ஆனால் ஷோபாவோ எந்த பிரதிபலிப்பும் இல்லாமல், " பரத் கிளம்புங்க, ஷாப்பிங் போகலாம்", என்று கிளம்பி விட்டாள்.

காரில் ஏறிய மறு வினாடி, அடக்க முடியாதவளாக குலுங்கிக், குலுங்கி அழ ஆரம்பித்தாள் ஷோபனா.

" ஏய் ஷோபி, என்னது இது, ஏன் இப்படி அழறே........" என்றான் பரத் ஒன்றும் புரியாமல்.

" மம்மிகிட்ட ரொம்ப கடுமையா பேசியது, மனதுக்கு ரொம்ப பாரமா இருக்கு பரத்", என்றாள் விசும்பலுடன்.

" பின்னே, எனக்கே நீ பேசியது ரொம்ப சங்கடமா இருந்திச்சு, நீ ஏன் அப்படி பேசினே?", என்றான்.

" மம்மிக்கு ஒரு சின்ன ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுக்கத்தான் .............. இல்லேன்னா, நாம கிளம்பறத நெனச்சி அவங்க அழ ஆரம்பிச்சிட்டாங்கன்னா, என்னால தாங்க முடியாது............ நாம ஊருக்கு கிளம்பற நேரத்துல ரொம்ப வேதனைப்பட்டு, உடம்பை கெடுத்துக்குவாங்க........ அதைக் கண்ட்ரோல் பண்ணத்தான் அப்படி பேசினேன் ", என்றாள் அழுகையினூடே.

" ஏய், மாலதி, அவதான் அவ்வளவு திமிறா பேசிட்டுப் போறாளே, நீ ஏன் வீணா அழுதுக்கிட்டிருக்கே?".

" இல்லைங்க, ஏதோ டென்சன்ல பேசிட்டா, ஊருக்குப் போயும் அதை நினைச்சி, நினைச்சி வருத்தப்படுவாளே, அதைத்தாங்க என்னால தாங்க முடியல", என்றாள்..............

Sunday, October 3, 2010

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் - பாகம் -3.

உடல் பருமன்:

அதிக பருமனாக இருப்பது, எப்பொழுதும் ஆபத்தானது என்று பயப்படத் தேவையில்லை. சில நேரங்களில் உடல் வாகு மற்றும் பரம்பரை வழி, இப்படி சிலக் காரணங்களினால் கூட உடல் பருமன் வரலாம். ஒடிசலான தேகம் உடையவர்களுக்கு நோயே வராது என்ற உத்திரவாதமும் கிடையாது.... கட்டுப்பாடான உடல் எடை உடையவர்கள் ஓரளவிற்கு, ஆரோக்கியத்தைக் காப்பாற்றிக் கொள்ள முடியும், என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

நாம் எந்த அளவிற்கு உடற்பயிற்சி செய்கிறோமோ, அந்த அளவிற்கு சாப்பிடும் முறையையும் அமைத்துக் கொள்ள வேண்டும். வயதிற்கு தகுந்த உடற்பயிற்சி அவசியம் தேவை. குறைந்தபட்சம், 45 நிமிட நடைப்பயிற்சியாவது, அன்றாடமோ, வாரம் மூன்று முறையாவதோ கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.

உடல் பருமன் அளவைக் குறிக்க பிரபலமான முறை, BMI என்பது. இது, ஒருவரின், மொத்த உடல் எடையின், அளவை [கிலோ கிராமில்] அவர்களுடைய, உயரத்தை [மீட்டரில்] அந்த எடையில்,சதுரித்து, வகுத்து கணக்கிடப்படுகிறது. அதாவது, சாதாரணமாக 5.5 அடி உயரமுள்ள ஒருவர்,[ 1.65 மீ] 132 பவுண்ட் அல்லது 60 கிலோ எடை இருந்தால், அவருடைய, BMI , 22 ஆகும். BMI, 25ம் அதற்கு அதிகமாகவும் இருந்தால் அது அதிக உடல் எடை என்றும், 30 க்கும் அதிகமானால், அதிக உடற் பருமன் [Obesity ] என்பதாகும். இது பொதுவான அளவாகும். சக்கரை வியாதி, உயர் இரத்த அழுத்தம் இருதய நோய் போன்றவைகள் இருப்பவர்களுக்கு, இது வேறுபடும்.
பி.கு: உங்கள் சரியான BMI அளவை கண்டுபிடிக்க , www.healthizen.com, சென்று பாருங்கள்.
குறைந்த கலோரி உணவு வகைகளை உட்கொள்ளும் போது, உடலில் அதிக எடை கூடுவதைக் கட்டுப் படுத்தலாம்.


மிக சுவையான மற்றும் ஆரோக்கியமான சோயாவில் குறைந்த கலோரி ரெசிபியைப் பார்க்கலாம்.

சோயா உருண்டைகள்: [soya Nuggets]

4 பேருக்குத் தேவையானவை.
ஒருவருக்கான கலோரி அளவு - 75.


தேவையான பொருட்கள்:

சோயா உருண்டைகள் - 80 கி.
எண்ணெய் - 1 டீஸ்பூன்
வெங்காய விழுது - 2 டே.ஸ்பூன்.
இஞ்சி பூண்டு விழுது - 1 டே.ஸ்பூன்.
தக்காளி விழுது - 4 டே.ஸ்பூன்.
[ தக்காளியை வேகவைத்து, தோலுரித்து அரைத்துக் கொள்ளலாம்].
தண்ணீர் - 1/2 கப்.
தயிர் [ கொழுப்பில்லாத்து] - 1 டீஸ்பூன்.

மசாலாக்கள்:

சீரகம் - 1/2 டீஸ்பூன்.
தனியாத்தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
சாட் மசாலா பவுடர் - 1/2 டீஸ்பூன்.
கரம் மசாலா - 1/4 ஸ்பூன்

உப்பு, மிளகாய்த்தூள், மிளகுத் தூள், தேவைக்கேற்ப. பச்சை கொத்தமல்லி அலங்கரிக்க.

செய் முறை:

சோயா உருண்டைகளை மிதமான வெண்ணீரில் 15 - 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

அதை பிழிந்து எடுத்து, 2, 3 முறை நன்கு கழுவவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, சீரகம், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியாத்தூள், கரம் மசாலா, மிளகு தூள் அனைத்தும் போட்டு, 1 1/2 நிமிடம் வதக்கவும்.

வெங்காய விழுது, தக்காளி விழுது, இஞ்சி பூண்டு விழுது, அனைத்தையும் சேர்த்து, 3 -4 நிமிடங்கள் மிதமான தீயில் வதக்கவும்.

சோயா உருண்டைகளை நன்கு பிழிந்தெடுத்து, அத்துடன், தயிர், 1/2 கப் தண்ணீர் அனைத்தும் மசாலாவுடன் கலந்து, 3 -4 நிமிடங்கள் மிதமான தீயில் வதக்கவும். தேவையானால், இன்னும் 2 - 3 நிமிடங்கள் சிறு தீயில் வைத்து இறக்கவும்.

கொத்தமல்லி தழை தூவி அலங்கரிக்கவும்.

சாதம், ரொட்டி, பரோட்டா ஆகியவற்றிற்கு நல்ல மேட்ச்............