Showing posts with label ஒரு பக்க சிறுகதை. Show all posts
Showing posts with label ஒரு பக்க சிறுகதை. Show all posts

Saturday, January 29, 2011

பட்ட மரம்.

பட்ட மரம்.

அடர்ந்த வனம். எங்கு நோக்கிலும் கபடமற்று தன்னிச்சையாக வளர்ந்த பசுமையான, வகைவகையான மரம் செடி கொடிகள். வண்ண மலர்கள். சுகந்த மணம் நாசியை நிறைத்து, மதியை மயங்கச் செய்தது........... பளீரென ஒரு மின்னல். அசைந்து, அசைந்து தன்னருகே வருகிறதே.......ஓ ...இது மின்னல் இல்லை. ஏதோ பறவை போலல்லவா இருக்கிறது.......அட ஆமாம் அன்னப்பறவை. பாலையும், தண்ணீரையும் தனித்தனியே பிரித்து விடுமாமே, அந்த அன்னப் பறவை.....தலையை ஆட்டி கிட்டே வந்து உரசி நின்று.........உற்றுப் பார்க்கிறதே, எதனால் என்று தெரியவில்லையே. திடீரென, ஒய்யாரமாக தோகையை ஆட்டியபடி அப்படியே ஒரு வட்டமடித்து, திரும்பி நடக்க ஆரம்பித்தது அது.

நேர்ந்து விட்டது போல பின்னாலேயே போக முயற்சித்து, அது ஓட ஆரம்பித்த போது தானும் ஓடி துரத்திப் பிடிக்கும் நோக்கில், நெருங்கி, நெருங்கி.....ஆகா பிடிக்கப் போகிறோம் என்று கையை நீட்டும் நேரம் அங்கே ஒரு அழகான ராஜ குமாரி. ஆம் ராஜகுமாரியாய் மாறிப்போன அன்னம்.

டொக்.....டொக்......டொக்........என்ன சத்தம். ராஜகுமாரி, நீ எனக்கே, எனக்கா.........

அட பாவி மனுசா......மணி 7 ஆவுது, கனவு கண்டுகினு கீது பாரு.........பொழுதன்னைக்கும் சுட்டி டிவி குழந்தைங்களோட உக்கார்ந்துகினு பாக்குறது. அப்பறம் இப்படிகனவு கண்டு உளர்றது. இதே பொயப்பா பூடிச்சி உனக்கு.

ஏய் இன்னாம்மே ரொம்பத்தான் அலுத்துக்கினுகிற.............

சரி, இன்னா சத்தம் வெளிய?

அதுவா, நீதானே அந்த பட்டுப் போன, காய்க்காம கடந்த கொய்யா மரத்த வெட்ட சொன்ன? அதைத்தான் ஆள் வந்து வெட்டறான்.

எம்புட்டு நாளா சொல்லறேன். கண்டுக்காம இருந்துட்டு இன்னைக்கு என்னா ஞானோதயம்?

அதுவா, இன்னைக்குத் தானே, உங்க அக்கா ஊரில இல்ல, குல சாமி கோயிலுக்கு போயிருக்கா. அதான் இன்னைக்கு வெட்டச் சொன்னேன்.

அவ ஊருக்குப் போறதுக்கும், நீ மரத்தை வெட்டறதுக்கும் இன்னாம்மே சம்பந்தம்? அவகிட்ட எப்பவும் மல்லுகட்டிகினு நிக்கிறது போதாதுனுட்டு, அவ இல்லாத நேரத்திலயும் இப்புடி கரிச்சி கொட்டறியே ஞாயமா?

அடப் போய்யா, உனக்கு என்னைக்குத்தான் இதெல்லாம் புரியப் போகுது. அவளே பாவம், புருசனும் இல்லாம, புள்ளை குட்டியும் இல்லாம, நொந்து போய் பட்ட மரமா வந்து நிக்குறா......இந்த மரத்த வெட்டற போது நீயோ இல்ல அந்த மரவெட்டியோ ஏழு தடவை பட்ட மரம், பட்டமரம்னு சொல்லுவீங்க......அந்த நேரத்துல அந்த புள்ள மனசு என்ன பாடு படும் கொஞ்ச ரோசனை பண்ணிப் பாத்தியா நீ? அதான் அவ வரதுக்குள்ள இந்த மரத்தை வெட்டிப்புடலாம்னு...............

அடி, என் ராசாத்தி, இத்தனை நல்ல மனசா உனக்கு........இத்தனை நாள் இது தெரியாமப் போச்சே..........

Sunday, July 25, 2010

யுக்தி

" என்னப்பா, பாலு எப்பப் பார்த்தாலும் இப்படி கடைசி நாள்தான் வந்து மின்சாரக் கட்டணம் கட்டுவியா? ஒரு நாலு நாள் முன்பாவது வந்து கட்டக் கூடாதா?"

மின்சாரக் கட்டண கவுண்டரில் பணம் வசூலிக்கும் கரிகாலன் என் பால்ய சிநேகிதன்.கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில் பணத்தை அவனிடம் கொடுத்துவிட்டு வந்துவிட்டால், அவன் கட்டிவிட்டு ரசீதை என் வீட்டில் வந்து கொடுத்துவிடுவான்.என் வீடு தாண்டித்தான் அவன் வீட்டிற்கு செல்ல வேண்டும்.அந்த உரிமையில் தான் என்னை அப்படிக் கேட்டான்.

"என்னப்பா பண்றது, என்வேலை அப்படி. வியாபார விசயமா அலையறதே என் பொளப்பா போச்சு. அடிக்கடி வெளியூர் பயணம் வேற போறதனால சரியான நேரத்திற்கு வரமுடிவதில்லை".

'அதுவும் சரிதான்.சரி, சரி கொடு, நல்ல வேளை இன்னைக்கு கூட்டம் கொஞ்சம் கம்மியாத்தான் இருக்கு. அட, என்னப்பா உன்னோட மின்சாரக் கட்டிணம் இந்த முறை ரொம்ப கம்மியா இருக்கு? எப்பவும் 3000க்கும் மேலே வரும். இந்த முறை அதிசயமா 1000 ரூபாய் கனிசமா குறைஞ்சிருக்கு. குடும்பத்தோட வெளியூர் போயிடீங்களா', என்றான் ஆச்சரியமாக.

அட, இல்லப்பா, ஒரு சின்ன யோசனை தோணிச்சு. அத எடுத்து வுட்டேன் பாரு, கனிசமா பில் குறைஞ்சி போச்சு, என்றேன்.

'அட, அப்படி என்னப்பா யோசனை? சொல்லு, நானும் முயற்சி பன்றேன், என்றான்.'பெரிசா ஒண்ணுமில்லப்பா.எங்க வீட்டில தேவையில்லாத இடத்திலெல்லாம், லைட் எரிஞ்சிக்கிட்டே இருக்கும். லைட் போட்டா அணைக்கவே மாட்டாங்க. ஃபேன், ஏ.சி போட்டாலும் அப்படித்தான். அது பாட்டுக்கு ஆள் இல்லாத நேரத்துலக் கூட ஓடிக்கிட்டே இருக்கும். மோட்டார் போட்டா, தண்ணீர் நிரம்பி வழிந்து போன பிறகு தான் நிறுத்துவாங்க. தண்ணீர் வேறு வீணாகும்.

பிள்ளைங்ககிடேயும் என் மனைவிக்கிட்டேயும், பல முறை எடுத்துச் சொல்லியும், எந்த பயனும் இல்ல. இப்ப என்ன பண்ணினேன் தெரியுமா?

என் மனைவியைக் கூப்பிட்டு, போன மாச பில் தொகையான 3600 ரூபாயை, அவள் கையில் கொடுத்து, இந்த மாதம், நீ என்ன பண்ணுவியோ எனக்குத் தெரியாது. கரண்ட் பில்லை முடிந்த வரை சிக்கனம் பண்ணினா, இதில எவ்வளவு பணம் மீதி வருதோ அதை உன் சிறுவாட்டுல சேர்த்துக்கோ, ',என்று சொல்லி விட்டேன்.

அவ்வளவுதான், அவள் ரொம்ப சாமார்த்தியமா கரண்ட்ட பயன் படுத்த ஆரம்பிச்சுட்டா. ஏ.சி. யைக் கூட போட்ட 2 மணி நேரத்தில ஆஃப் பண்ணிட்டு, இந்த குளிர்ச்சியே ரொம்ப நேரத்துக்கு இருக்கும், ஃபேன் போட்டா போதும்ன்னு சொல்லறா. இதுதான் எங்க கரண்ட் பில் குறைந்த ரகசியம்', என்றேன்.

'ஆஹா, அருமையான யோசனைப்பா. நானும் இதையே முயற்சி பண்ணறேன்', என்றான் கரிகாலன்

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 36

  63 நாயன்மார்கள் வரலாறு – 31 மூர்க்க நாயனார்   தொண்டை நாடு சான்றோர் உடைத்து , எனும் பழமொழிக்கேற்ப சான்றோர் பெருமக்கள் பல்லோர் அவதரித...