Saturday, October 30, 2010

எழுத்தறிவிப்பவன்.................


மாதா, பிதா, குரு, தெய்வம் என குருவிற்கு, மாதா, பிதாவிற்கு அடுத்த இடமும், தெய்வத்திற்கு மேலான இடமும் கொடுத்து வைத்துள்ளது நம் கலாச்சாரம். முன் காலங்களில் 'குருகுலம் ', என்று குழந்தைகளை சேர்த்து விட்டால், அங்கு குழந்தைகளுக்கு நல்லொழுக்கங்கள் முதல் கல்வியுடன், சகல கலைகளையும் கற்றுத் தருவார்கள். அரசனின் குழந்தையாக இருந்தாலும், ஆண்டியின் குழந்தையாக இருந்தாலும் ஏற்றத்தாழ்வு இல்லாமல் ஒரே இடத்தில் அமர்ந்துதான் கல்வி பயிலுவார்கள். குரு சொல்லும் வாக்கை தெய்வ வாக்காகக் கொண்டு மாணவர்கள் அடி பணிந்து நடப்பார்கள்.

காலப் போக்கில் அந்த முறை மாறி, மறைந்தே விட்டது. பிறகு வந்த காலங்களில் குருவிற்கு, ஆசிரியர் என்று ஓரளவிற்கு மதிப்பு இருந்து கொண்டிருந்தது. ஆனால் சமீப காலங்களில் ஆசிரியர்களில் ஒரு சிலர் நடந்து கொள்ளும் முறை அந்த தெய்வீகப் பணியின் மீது ஒரு வெறுப்பையே மக்களுக்கு ஏற்படுத்துகிறது. மாணவர்களின் சேட்டைகள் அதிகரித்திருப்பது போல ஆசிரியர்களின் அடக்கு முறையிலும் பல புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப் படுத்துகிறார்கள்.

கோவை ஆர்.எஸ்.புரத்தில் ஒரு பள்ளியில் அப்படி ஒரு தண்டனை தவறு செய்யும் குழந்தைகளுக்குக் கொடுப்பதாக நாளிதழில் படித்த போது, அதிர்ச்சியில் உரைந்தே போனேன். ஆம் அந்நியன் டெக்னிக்கில் 'கும்பிபாகம்' தண்டனை!

அதாவது தவறு செய்யும் குழந்தைகளை மரத்தில் கட்டி வைத்து, அந்த மரத்தின் அடிபாகத்தில் இருக்கும் செவ்வெறும்புகளை கடிக்க விடுவது. அந்தக் குழந்தைகள் இரண்டு கால்களையும் மாற்றி மாற்றி எறும்பு கடி தாங்காமல் உதைக்கும் காட்சியைக் கண்டுகூட மனம் இரங்காமல் குறிப்பிட்ட நேரம் வரை அவ் வேதனையை அக் குழந்தை தாங்கியே ஆக வேண்டுமாம். பெற்றவர்கள் இக்காட்சியைக் காண நேர்ந்தால் என்ன ஆகும்? ஆனால் இந்த விவரமான ஆசிரியர்கள், அத்தகைய தண்டனையைப் பற்றி வீட்டிலோ, வெளியே யாரிடமோ சொன்னால் 'டிசி' கொடுத்து பள்ளியை விட்டே வெளியே அனுப்பி விடுவோம் என்ற மிரட்டல் வேறு விடுவார்களாம். குழந்தைகள் பயந்து போய் வெளியிலும் சொல்வதில்லையாம். இப்போது எப்படியோ செய்தி வெளியே பரவி, சம்பந்தப்பட்ட பள்ளியின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

இப்பொழுதெல்லாம் தனியார் பள்ளிகள் பல, வருமானங்களை மட்டுமே குறிவைத்து, சேவை மனப்பான்மை என்பதே துளியும் இல்லாமல், ஆசிரியப் பயிற்சி கூட எடுக்காத வெறும் பட்டம் மட்டுமே பெற்ற ஆசிரியர்களைக் கொண்டே பள்ளியை நடத்துவதுதான் இது போன்ற குற்றங்கள் நடப்பதற்கு காரணமாகின்றன, என்பதே பெற்றோரின் வாதமாக உள்ளது. ஆசிரியர் பயிற்சியில், குழந்தைகள் மனோத்தத்துவம் [child psychology] பயிற்றுவிக்கிறார்கள். அதன் மூலம் குழந்தைகளின் மனநிலையை உணர்ந்து கொண்டு அதற்கு தகுந்தாற் போல கல்வி புகட்ட முடியும். ஆனால் இது போன்று பயிற்சி பெறாத ஆசிரியர்களே, பெரும்பாலும் குழந்தைகளை இவ்வாறு மனிதாபிமானமில்லாமல் நடத்துகிறார்கள். இச் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.

Wednesday, October 27, 2010

ஸ்ரீலங்கா அதிபருக்கு நல்லிணக்க அறிவுரை - வழக்குரைஞர் ஜார்ஜ் வில்லி

மேதகு அய்யா அவர்களே, மதிப்பிற்குரிய காங்கிரஸ் பெண்மணி, திருமதி ராஜபக்ச, ஷீலா ஜேக்சன் லீ அவர்களே! இந்த அமைப்பை ஏற்படுத்திக் கொடுத்தமைக்கு ஷீலா அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். தூதரக தலைமை அதிகாரி அரோரா அவர்களுக்கும் நன்றி உரித்தாகுக.

மேன்மை தங்கிய விருந்தாளிகளே, லேடிஸ் & ஜென்டில் மென், மேன்மை பொருந்திய தங்களை இந்த பெருமை வாய்ந்த நகருக்கு வரவேற்கிறோம். ஓக் மரங்களையும் பாசாங்குப் பறவைகளையும் பொருட்படுத்தாவிட்டால், தாங்கள் இந்நகரத்தை சிறிலங்கா என்றே தவறாக எண்ணலாம்.

நான் பிறந்தது சிறிலங்காவில் தான். என் தாய், மனைவி சாந்தியின் பெற்றோர், மற்றும் என் தாத்தா, பாட்டி என அனைவரும் என் தாய்த்திருநாட்டின் புனிதமான பூமிக்கடியில்தான் சாமாதியாகியுள்ளனர். மேதகு அய்யா அவர்களே, நான் என்னுடைய 10 வது வயது வரை ஜாஃனாவில் வளர்ந்து, பிறகு கொழும்புவிற்கு இடம் பெயர்ந்தோம். என் மனைவி பதுளாவைச் சேர்ந்தவர். பெரு மதிப்பு வாய்ந்த ராணுவத் தளபதியாக இருந்த இவர் தந்தையுடன், தியாதலவாவில் வளர்ந்தவர். நான் ஜாஃனாவின் மகோசா மரங்களின் நறுமணம் நுகர்ந்தவன். கொழும்புவில் என் பால்யப் பருவத்தில் பள்ளிக்குச் செல்லும் போது, செந்நிற நாவற்கனிகளை அதன் செங்கறைகள் என் வெண்மையான மேல் சட்டையில் படும்படி அதனைச் சுவைத்தவன். மனம் கவரும் மணத்தினால், பலா மரங்களில், பழுத்த பழங்களை காக்கைகள் கொத்தித் திறக்க முனைவதையும் கண்டிருக்கிறேன்.

வெசாக், திருவிழாக்கால வண்ணமயமான பந்தல்களைக் கண்டிருக்கிறேன். ஏழை மக்களுக்கான தர்ம சாலைகளின் உணவையும் வெட்கமின்றி உண்டிருக்கிறேன். கோவில்களின் மணியோசையையும் கேட்டிருக்கிறேன். மல்லிகை மற்றும் ஜாஸ் குச்சிகளின் நறுமணத்தையும் நுகர்ந்திருக்கிறேன். பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்குத் தந்தை ஹேர்த்துக்கு பணிவிடைகள் புரியும் போது, ஆல் செயிண்ட்ஸ் சர்ச் மணியோசையையும் கேட்டிருக்கிறேன்.

ஆனால் 1975 இல் நான் சிறிலங்காவை விட்டு வெளியேறியதிலிருந்து, சொல்லொனாத் துயரமும், கவலையும், வேதனைகளும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. தன்னுடைய புனித நீரை மட்டுமே நெல் வயலுக்குக் கொண்டு வருவதையே வழமையாகக் கொண்ட சக்தி, மஹாவேலி கங்கை, இரத்த வெள்ளத்தைப் பாய்ச்சிவிட்டாள். சிங்களவர்கள் மற்றும் தமிழர்கள் இருவரும் இங்கு அமெரிக்காவில் இருந்து கொண்டு, என் முன்னோர்கள் வாழ்ந்த சொர்க்க பூமி, நரகத்தின் அதள பாதாளத்திற்குச் செல்வதைக் காணும் அவலத்திற்கு ஆளாகியுள்ளோம். எவைக் குற்றம் சொல்வது என்று ஒருவரும் அறிந்திலர். அதற்கான காலமும் கடந்து விட்டது.

மேதகு அய்யா, தங்களின் சக்தி துட்டகாமுனு மற்றும் எள்ளாளரின் எம் மக்களின் வழியாகவும் பெற்றிருக்கலாம். துட்டகாமுனு, தன்னுடைய காண்டுலா யானையின் மீதிருந்து, எள்ளாளரிடம் சண்டையிட்டு, எள்ளாளரைக் கொறதை நினைவில் கொள்ளுங்கள். சிறிலங்காவை முதன் முறையாக இணைத்ததற்காக இன்றும் துட்டகாமுனு நினைவில் கொள்ளப்படுகிறார். எள்ளாளரை தோற்கடித்து கொன்ற பிறகு அவர் எள்ளாளருக்கு, அவர் மீது கொண்ட மரியாதை காரணமாக, தன் மதிப்பிற்குரிய எதிரிக்காக ஒரு நினைவுச் சின்னம் எழுப்பினார். அது மட்டுமல்லாமல், தன் குடிமக்களை, அந்த இடத்தில் நின்று எள்ளாளருக்கு மரியாதை செலுத்தி வணங்கிச் செல்ல கட்டளையிட்டார்.

இவ்வாறு செய்ததன் மூலமாக தன் உயர்ந்த குணத்தை மட்டும் வெளிப்படுத்தவில்லை. அத்தோடு தான் ஒரு திறமையான அரசியல்வாதி என்பதையும் நிரூபித்துள்ளார். எள்ளாளரின் தோல்விக்குப் பின்னரும் அவர் தமிழ் மக்களையும் ஆட்சி செய்ய வேண்டியதையும் உணர்ந்திருந்தார்.

மேதகு அய்யா அவர்களே, நம்பிக்கை, நற்பேறு மற்றும் நுண்ணிய அரசியல் திறன் அனைத்தும், தங்களைச் சரித்திரத்தின் ஒரு தனிப்பட்ட இடத்தில் நிலை பெறச் செய்துள்ளது.

இனி வரும் இளம் சந்ததியினர், தங்களுடைய சரித்திரப் புத்தகங்களில், பலரும் தோற்கடிக்க முயன்று தோல்வியடைந்த புரட்சியாளர்களை, ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றி கொண்டவர், ஒரு உயர்ந்த தலைவர், சிறந்த வீரர், மகிந்த ராஜபக்ச என்று பயிலுவார்கள். அவர்கள், தங்களை 21 ஆம் நூற்றாண்டின் துட்டகாமுனு என்று கூட சொல்லலாம். ஆனால் தாங்கள் ஜெமுனுவின் அங்கியை அணிய விரும்பினால், மேதகு அய்யா அவர்களே, ஒரு நினைவுச் சின்னத்தையும் தாங்கள் கட்டமைக்க வேண்டிவரும். அந்த நினைவுச் சின்னம் வெறும் கட்டிடமாக இல்லாமல், அது, ஒரு கட்டுப்பாடான, சட்டதிட்டங்களுக்குட்பட்ட, புதிய செயல் முறைத் திட்டங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும்.

58 கலகங்கள் ஆரம்பிக்கக்கூடியத் தவறைச் செய்யாதீர்கள். பல்கலைகழகத்தினுள் நுழைய விரும்பும் தமிழர்களைத் தடுத்து நிறுத்தாதீர்கள். தமிழர்கள் தங்களை இரண்டாந்தர குடிமக்களைப் போல் உணரும் நிலையை ஏற்படுத்தாதீர்கள். அவர்களின் மதத்திற்கும் மற்றும் மொழிக்கும் மரியாதை செலுத்துங்கள். மேதகு அய்யா அவர்கள் தமிழர்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டியது உள்ளது. தங்கள் மொழியையேக் கடவுளாகக் கொண்டவர்கள். உலகத்திலேயே, இந்த அளவு மொழி பக்தி கொண்ட மிகச் சில கலாச்சாரங்களே உள்ளது.

தாங்கள் ஒரு வழக்கறிஞராக பணியாற்றியுள்ளீர்கள். மனித உரிமைகளுக்காகப் போராடும் மாமனிதராகவும் இருந்திருக்கிறீர்கள். இப்பொழுது பிரபலமான நிலையிலும் இருக்கிறீர்கள். வெற்றி வாகை சூடி ரோமாபுரிக்குத் திரும்பியிருக்கும் ஜூலியஸ் சீசருக்கு நிகரான சக்தி படைத்தவர் தாங்கள். தாங்கள் கேட்பதை எவரும் மறுக்க இயலாது. நாம் இருவரும் சட்டப் பள்ளியில் பயின்ற சில உன்னதமான சட்டப் பிரிவுகளை சட்டமன்றத்தை ஏற்றுக்கொள்ளச் செய்யுங்கள். பிறகு நாம் ஆத்மசாந்தி அரசியலமைப்பைக் கற்றிருக்க வேண்டும். என் உதவி தங்களுக்குத் தேவைப்படுமானால், இந்த உலகத்தின் பார்வையாளர்கள் போல் நானும் அளிக்கத் தயாராக உள்ளேன். தமிழர்கள் தங்களுக்கும் ஒரு இடம் இருக்கிறது என்று தாங்கள் அளிக்கப் போகும் உறுதியை எதிர்நோக்கி நிர்வாணமாகவும், பசியுடனும் கிடக்கிறார்கள்.

அப்படி ஒன்று அவர்களுக்கு இருப்பதை உறுதிபடுத்துங்கள். தாங்கள் ஒரு பிரபாகரனை கொன்று விட்டீர்கள். ஆனால் இன்னொரு பிரபாகரனை வளர விடாதீர்கள். ஆயுதங்களுடனும், துப்பாக்கியுடனும் இன்னொருவர் வளருவதைத் தங்களால் தடுக்க இயலாது. தாங்கள் அதை தங்களுடைய பரந்த மனப்பான்மையால் மட்டுமே செய்ய முடியும். புத்த பகவானிடமிருந்து கற்ற இரக்கம், உண்மை, நீதி ஆகியவைகள் மட்டுமே தங்களுக்குத் தேவையான ஆயுதங்கள். 'தம்மா படா'வின் படி புத்தர் எந்த நேரத்திலும் வெறுப்பை, வெறுப்பால் கைப்பற்ற முடியாது. வெறுப்பை அன்பினால் மட்டுமே கைப்பற்ற இயலும். இது ஒரு பழமையான நியதி. இதுதான் புத்தபிரான் அருளியது.

மேதகு அய்யா அவர்களே, தாங்கள் இந்த நல்ல நகரத்தை விட்டு சிறிலங்கா செல்லும் போது, ஒரு 10 வயது பாலகன் நாளை பள்ளிக்கு தன் வெள்ளைச் சட்டையுடன் செல்லும் போது, அதில் நாவற்பழக் கறை தவிர வேறு எவ்விதமான சிகப்புக் கறையும் ஆகாது என்றொரு வாக்களிக்க வேண்டும். காலை நேரக் காகம் பலாப்பழத்தைத் தவிர வேறு எதையும் கொத்திக் கொண்டிருக்கக் கூடாது. நான் நறுமணம் நுகர்ந்த மகோசா மரங்களில் வேறெதுவும் தொங்கக் கூடாது.

மேதகு அய்யா, எங்களை சுவர்கத்திற்கு திருப்பியனுப்புங்கள். எங்களை சுவர்கத்திற்கு திருப்பியனுப்புங்கள். நன்றி

Sunday, October 24, 2010

அகக் கண்கள் ...........



அகக் கண்கள் திறந்து...........
காட்சிகள் விரிகின்றன.
அழகான நீர் நிலையைக் காண்கிறேன்!
இரு புறமும் கொத்துக் கொத்தாக
மலர்கள் தாங்கிய குறுஞ்செடிகள்....

நீலமேகக் கூரையில்
வெண்பஞ்சுப் பொதிகள்....
வெளிர்நீல மலைக் குன்றுகளில்
பனிபடர்ந்த மரக் கன்றுகள்!

அந்தி மயங்கும் நேரம்.....
கூட்டில் அடையப் போகும்
பறவைகளின் மெல்லிய கீதம்.
மனம் அமைதியில் திளைத்த இன்பம்.

அந்த ஓடைக்கரையில் ஒரு
ஒரு குச்சு வீடு......
சின்ன அறையில் நிறைமனதுடன் நான்!
குச்சு வீட்டின் கொல்லைப்புறத்து
பசுமையான வயல் வெளி......
வளமையான பயிர்களின் நாணம்.....

கரையோரத்து மலர்களின் நறுமணம்
குடில்........அழகான குடில்......
எளிமையான மனிதரும்...
அழகான பறவைகளும்....
பகிர்ந்து வாழும் அழகிய குடில்....

குடிலின் அருகில் என் சொந்தங்கள் இல்லை.....
என் சாதி இல்லை......என் மதம் இல்லை....
என் இனம் கூட இல்லை.......
ஆனால் பெயர் மட்டுமே அடையாளமாக.....
அந்த இனம் அன்பை மட்டுமே ஆதாரமாக....

இயற்கையின் இனிமையைக்
கொண்டாடும் இனமாக........
அந்த அழகைப் பகிர்ந்து
பருகும் இனமாக......
திறந்த இதயத்துடன், பரந்த
மனதுடன் வாழும் இனம்....
அங்கு என் அமைதியான.......
ஆனந்தமான வாழ்க்கை...........