Friday, May 17, 2013

வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (12)



பவள சங்கரி

 அந்த அனுபவத்திற்கு  உங்களால் நன்றி சொல்ல முடியும்போது மட்டுமே அது உண்மையான மன்னிப்பு என்பதாகிறது.
- ஓப்ரா வின்ஃப்ரே

‘நன்றி’ என்ற மந்திரச் சொல்!

அன்றாடம் நாம் படுக்கையை விட்டு எழுந்ததிலிருந்து, மீண்டும் இரவு தூங்கப்போகும் வரை நம் பொழுது சரியாக கழிவதற்கு எத்தனையோ பேருக்குக் கடமைப்பட்டிருக்கிறோம். நம்மைப் படைத்த இயற்கை அன்னையிலிருந்து, நம் வீட்டுக் கழிவுகளை அப்புறப்படுத்தும்  கடைநிலை சுகாதார ஊழியர் வரை எத்தனையோ பேருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். அந்த நன்றியை மனதார வாய்விட்டு சொல்லும்போது ஏற்படுகிற நிம்மதியே அலாதிதான். ‘கடன்பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்பார் கம்பர். கடன்பட்ட நெஞ்சத்தின் வேதனைக்கு ஈடாக எதையும் சொல்ல முடியாது என்பதுதான் உண்மை. நன்றிக் கடனும் ஒரு வகையில் இதையேச் சாரும். அந்த நன்றியை பாரபட்சம் இன்றி, முழு மனதுடன், முகமலர்ச்சியுடன் அளித்துப் பார்த்தால் அதன் சுகமே தனிதான். ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு உணவு விடுதியில் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அடுத்த மேசையில் ஒரு கணவனும் மனைவியும் தங்கள் ஐந்து வயது குழந்தையுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். சாப்பிட்டு முடித்து பில் வந்தவுடன் கணவர் அதற்குரிய பணமும், அந்த பரிமாறுபவருக்கு உரிய சிறிய ஊக்கத் தொகையும் சேர்த்து வைத்துவிட்டுக் கிளம்புகிறார். ஆனால் அந்தக் குழந்தை பெற்றோருடன் கிளம்பாமல் காத்துக் கொண்டிருக்கிறது. அவர்கள் எவ்வளவு கூப்பிட்டும் தங்களுக்குப் பரிமாறிய அந்த ஊழியர் அடுத்த மேசையில் இருப்பவர்களுக்கு வேண்டியதைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டு வரும்வரை காத்திருந்து, ‘தேங்க்ஸ் அங்கிள், பை’ என்று மிக யதார்த்தமாகச் சொல்லிவிட்டுக் கிளம்பியபோது அந்த ஊழியரின் முகத்தில் 1000 வாட்ஸ் விளக்கு எரிந்தது என்னவோ உண்மைதான். ஊக்கத் தொகையாக தந்தை வைத்த அந்தப் பணத்தைக் காட்டிலும், குழந்தை மனதார நன்றி என்று சொன்ன அந்த வார்த்தை ஏற்படுத்திய மகிழ்ச்சியைக் கண்டபோது அத்தனை நாட்கள் நாங்கள் செய்யத் தவறிய விசயத்தை உணர்ந்தோம். இப்பொழுதெல்லாம் அப்படி நன்றி சொல்லும்போது மனதிற்குள் ஒரு நிம்மதி வருவதை உணர முடிகிறது. நாம் எத்தனையோ பெரிய அறிஞராகவோ அல்லது உயர் பதவி வகிப்பவராகவோ இருக்கலாம். நமக்காக ஒரு துரும்பை எடுத்துப் போட்ட மிகச் சாதாரண மனிதராக இருந்தாலும் அவருக்கு நன்றி சொல்லும் கடமையை சரிவர செய்வதால் நம்முடைய கௌரவம் ஒருபடி உயருமே தவிர அதனால் எந்த பாதிப்பும் வந்துவிடாது. மனித மனம் தம்முடைய சின்னச் சின்ன செயல்களுக்குக்கூட அங்கீகாரம் தேடும் இயல்புடையது. அந்த வகையில் ‘நன்றி’ என்ற இந்த சிறிய வார்த்தை பல மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியது என்பது அன்றாட வாழ்வில் நாம் காணும் யதார்த்தம். 

Wednesday, May 15, 2013

சுமைதாங்கி சாய்ந்தால் ........




பவள சங்கரி


"நைனா, அம்மா சாப்பிடக் கூப்பிடுறாங்க. மணி 10.30 ஆகப்போகுது. வந்து சாப்பிட்டுட்டு வந்துடுங்க. அப்பறம் மயக்கம் வந்துடும். சக்கரை வேற ஏறிப்போயிடும் ”

“ம்ம்ம்”

“என்னம்மா, முத்துலட்சுமி நைனா வறாங்களாமா, இல்லையா. இன்னும் எவ்ளோ நேரந்தான் நானும் சமையல் ரூமிலயே வெந்துக்கிட்டு இருக்குறது. உடம்பெல்லாம் அடிச்சிப் போட்டாப்பல இருக்கு. போய் படுக்க வேண்டாமா.. என்ன பண்றாங்க அப்புடி.?”

“அம்மா, நைனா ஏதோ பழைய தபால் எல்லாம் எடுத்து வச்சி பார்த்துக்கிட்டு இருக்காங்க.. ரொம்ப யோசனையா இருக்காங்க. நீங்க மூடி வச்சுட்டுப் போய் படுங்கம்மா. எனக்கும் கொஞ்சம் ஆபீசு வேலை இருக்கு. நைனா வரும்போது நான் சாப்பாடு எடுத்து வக்கிறேன்”