Thursday, April 26, 2012

வெண்ணிலவில் ஒரு கருமுகில்!(34)அமெரிக்காவிலிருந்து, இந்தியா வந்து சேரும் அநத நீண்ட பயணம் துளியும் சலிப்பு தட்டவில்லை இருவருக்கும். தங்களின் காதல் வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் உன்னத தருணம் அல்லவா அது! இத்தனை நாட்கள் பட்டாம்பூச்சியாய் படபடக்கும் அந்த கண்களும், குழந்தைச் சிரிப்பும், கன்றின் துள்ளலும் எங்குதான் மறைத்து வைத்திருந்தாளோ தெரியவில்லையே என்று, தன் தோளின்மீது தலைசாய்த்து சுகமாக உறங்கும் அந்த வளர்ந்த குழந்தையை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான். தன் செய்கை தனக்கே சங்கடத்தை ஏற்படுத்த மெல்லிய புன்னகையுடன் பார்வையை மறுபுறம் திருப்பிக் கொண்டான். அதற்குள் பயணம் முடிந்துவிட்டதா என்று லேசான வருத்தம் கூட வந்தது. இன்னும் 10 நாட்கள்தானே நம் உடமையாகப் போகும் பொக்கிசம்தானே என்று மனதை தேற்றிக் கொண்டு, விமான நிலையத்தில் அவந்திகாவின் உறவினர்களுடன், தன் சகோதரனையும் சந்திக்கத் தயாரானார்கள் இருவரும். அவந்திகாவின் சிவந்த கன்னங்கள், வெட்கத்தினால் மேலும் சிவந்து அவள் அழகின் உச்சத்தை வெளிக்கொணர்ந்தது.

அன்று வெள்ளிக்கிழமை சுப முகூர்த்த நாளில் இளமாறன் மற்றும் அவந்திகா இருவருக்கும், காலை சுப வேளையில் நிச்சயதார்த்தம் முடிவுசெய்யப்பட்டிருந்தது. மங்களம் அழகாக பச்சைப்பட்டு மடிசார் புடவையில் மங்களகரமாக வந்து நிற்க, ராமச்சந்திரன் மிகுந்த அதிர்ச்சியுடன்,

”நான் தான் உன்னை பச்சை பட்டு மட்டும் உடுத்த வேண்டாம் என்று சொன்னேனே, அதற்குப் பிறகும், அதே பச்சைப் புடவையை உடுத்திக் கொண்டுவந்து நிற்கிறாயே.. ஒரு தடவை சொன்னா புரியாதா நோக்கு…”?

“இல்லண்னா இது புது புடவை அதான் ஆசையா உடுத்திண்டேன். உங்களுக்குப் பிடிக்கலேன்னா, மாத்திண்டு வந்திடவா…”?

“பின்ன… அதைத்தானே ஆரம்பத்திலிருந்து சொல்லிண்டிருக்கேன். புரியலயோ நோக்கு.? போய் சீக்கிரமா மாத்திண்டு வா, மணியாறது பார்..”

சரி என்று சொல்லிய்வாறே மளமளவென்று புடவையை மாற்றிக்கொண்டு கிளம்பினாள். அதற்கு மேல் எந்த விளக்கமும் அவரிடம் எடுபடாது என்று நன்றாகவே தெரிந்து வைத்திருந்ததால், எந்த வாதமும் செய்யாமல் சட்டென்று சிகப்பு வண்ண ஆடையை மாற்றிக்
கொண்டு, தலை நிறைய பூவுமாக, முகம் நிறைய பூரிப்புமாக, மலர்ந்த முகத்துடன் கிளம்பினாள்.

உறவினர்கள் அனைவரும் திருமண மண்டபத்தில் ஒன்றுகூடி, ஒரு சிறு ராமநாம பஜனையும் முடித்துவிட்டு, மணமேடையில் சுவாமியும், அம்மனும் போல சர்வ அலங்காரத்துடன் மாறனும், அவந்திகாவும் அமர்ந்திருக்க, மூத்தோர் கூடி நிச்சயதார்த்த ஓலையை வாசித்து, அதில் இரு வீட்டாரும் கையொப்பமிட்டு, மணமகனையும், மணமகளையும் பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கும்படி அழைத்தனர். முதலில் மாப்பிள்ளையின் பெற்றோரை அழைத்தனர் பாதபூசை செய்வதற்கு. பெற்றவர்களின் காலில் பூ போட்டு வணங்கி ஆசிர்வாதம் பெறுவார்கள். மங்களம் மாமி உறவினர்களுக்கு பூவும், தாம்பூலமும் கொடுத்துக் கொண்டிருந்தார். கணவர் அழைப்பதைக் கேட்டவர் தாம்பூலத்தட்டை அனுவைக் கூப்பிட்டுக் கொடுத்து மற்றவர்களுக்குக் கொடுக்கச் சொல்லிவிட்டு மணவறை நோக்கி அடியெடுத்து வைத்தவ்ர், சற்று உயரமான மேடையாக இருந்த காரணத்தினால், ஓரத்தில் இருந்த சின்ன இரும்புத்தூணைப் பற்றிக் கொண்டு மேடையின் மீது ஏற எத்தனிக்க …. உடனே வீல் என்ற அலறல் சத்தம் மண்டபத்தையே புரட்டிப் போட்டது. சற்று நேரம் என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. திடீரென்று மாறனின் பெரியப்பா, யாராவது உடனே மெயினை ஆஃப் பண்ணுங்கோ.. சீக்கிரம் என்று கத்தியவுடன் தான் அந்த அபாயம் புரிந்தது அனைவருக்கும்.. யாரோ வெளியில் இருந்தவர்கள் சட்டென்று மின் இணைப்பைத் துண்டிக்க, அப்போதுதான் மங்களம் மாமியைப் பிடித்திருந்த மின்சாரம் பட்டென்று தூக்கிப் போட்டது. ராமச்சந்திரன், ”ஐயோ மங்களா…” என்று அலறி விழப்போக மாறன் ஓடிவந்து தந்தையைத் தாங்க, அதற்குள் மற்ற உறவினர்கள் அவசரமாக மங்களம் மாமிக்கு காற்று விசிறி தண்ணீர் தெளிக்க முயல, அதற்குள் யாரோ ஆம்புலன்சிற்கு போன் செய்ய, மண்டபமே பரபரப்பாக செயல்பட்டது. ஆம்புலன்சில், மங்களம் மாமியை தூக்கிப் படுக்க வைத்துக் கூட்டிச் சென்றனர். ராமச்சந்திரனும் சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு, தானும் ஓடிச்சென்று ஆம்புலன்சில் ஏறிக்கொண்டார். மாறனும், அவந்திகாவும், மாலையைக் கழட்டி வைத்துவிட்டு, மருத்துவமனை செல்லத் தயாரானார்கள் மற்றொரு காரில்.

மாலை நான்கு மணிக்கு மேல் மங்களம் மாமி கண் விழித்த பின்புதான் அனைவருக்கும் உயிரே வந்தது. ஆனால் கீழே விழுந்ததில் முட்டி எலும்பு விலகி, அத்தோடு கெண்டைக்கால் எலும்பிலும் ஒரு விரிசல் ஏற்பட்டிருப்பதாகவும், மாவுக்கட்டு போட்டால் ஒரு மாதத்தில் சரியாகிவிடும் என்றும் மருத்துவர் சொன்னதைக் கேட்டவுடன் அனைவருக்கும் மிக்க வருத்தம் தான். திருமணத்திற்கு 10 நாட்களே இருக்கும் நிலையில் இப்படி ஆகிவிட்டதே என்ன செய்வது என்ற பெருங்கவலை ஆட்கொண்டது. அதைவிட அவந்திகாவின் பெற்றோரும், பாட்டி, தாத்தாவும், இப்படி ஒரு சம்பவம் நடந்தது அபசகுனமாகக் கருதி ஒருவேளை திருமணத்தை நிறுத்தி விட்டால் என்ன செய்வது என்று மிகவும் கவலை கொண்டு விட்டனர்… மாறனும், அவந்திகாவும், அதிர்ச்சியின் உச்சத்திலிருந்து இன்னும் மீளாமலே இருந்தனர். அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்ற கவலை இருவரின் முகத்திலும் தெரிந்தது.

எத்தனையோ சோதனைகளுக்குப் பிறகு கூடிய திருமணம் இப்படி ஆகிவிட்டதே என்று வருத்தம் ஒரு புறமும், ஆரம்பத்திலிருந்தே அப்பா பயந்தது போலவே ஆகிவிட்டதே… இனி அவர் என்ன முடிவு எடுக்கப் போகிறாரோ தெரியவில்லையே, இவ்வளவு தூரம் வந்த பிறகு கட்டாயம் இத்திருமணத்தை நிறுத்தும் அளவிற்கு கல்மனது கொண்டவரல்லர் என்றாலும், அம்மாவிற்கு ஏதாவது ஒன்று என்றால் துளியும் தாங்க மாட்டார். எப்படியும் சமாதானம் செய்து விடமுடியும் என்ற நம்பிக்கையும் இருந்தது..

அவந்திகாவின் குடும்பத்தாரின் முகத்திலும் அதே அளவு அச்சம் இருந்தது. தங்கள் மகளின் வாழ்க்கை என்னாகுமோ என்று.

மங்களம் மாமி கண் முழித்தவுடன் தான் ராமச்சந்திரன் முகத்தில் இருந்த கவலை ரேகைகள் சற்றே குறைந்தது. தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போனது நல்ல வேளை.. அப்பாவின் முகத்தையும், அம்மாவின் நிலையையும் மாறி, மாறி பாவமாக பார்த்துக் கொண்டிருந்த மகனின் எண்ணோட்டங்களைப் புரிந்து கொண்ட அவர்,

“மாறன், அவந்திகாவை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு ஒருநடை சென்று வந்துவிடு” என்று சொன்னவுடன் தான் அனைவரின் முகத்திலும் ஒரு தெளிவே வந்தது.. நல்ல வேளையாக அவர் எந்த தப்பான முடிவும் எடுக்கவில்லை என்பதில் பெருமகிழ்ச்சிதான் என்றாலும், அம்மாவால் ஓடி ஆடி வேலை செய்ய முடியாதே என்று கவலையாகவும் இருந்தது. திருமணத்தை 3 மாதங்கள் தள்ளி வைத்துவிடலாம் என்று கூட நினைத்தான் மாறன். ஆனால் ராமச்சந்திரன் குறித்த நேரத்தில் திருமணம் நடக்க வேண்டும் என்று உறுதியாக இருந்ததில் மகிழ்ச்சியாகவும் இருந்தது. இந்தக் கல்யாணமே வேண்டாம் என்று அத்துனை உறுதியாக இருந்த அப்பாவே, இப்படி ஒரு சம்பவம் நடந்து, அம்மா படுக்கையில் இருக்கும் வேளையில்கூட, பதட்டம் கொள்ளாமல் நிதானமாக யோசித்து ஒருவரையும் பாதிக்காமல் நல்ல முடிவாக எடுத்திருப்பதைக் கண்டு பூரிப்பாக இருந்தது. உரிமையுடன், திருமண காரியங்கள் அத்துனையும் இழுத்துப் போட்டுக் கொண்டு, அம்மாவின் இடத்தில் இருந்து தன்னலம் கருதாமல் செய்து கொண்டிருக்கும் அனுவைப்பார்க்க ஆச்சரியமாக இருந்தது மாறனுக்கு. நட்பாகட்டும், உறவாகட்டும் தன்னைச்சுற்றி உள்ள அத்தனை பேரும் தன்மீது உண்மையான பாசம் கொண்டு, இருப்பதைக் காணும்போது தன் பலம் பன்மடங்கு கூடிப்போனதை அவனால் உணர முடிந்தது. அந்த வரிசையில் இன்று அவந்திகாவும் இணைந்து கொள்ள, ஆனந்தக் கண்ணீருடன், அர்த்தமுள்ள பார்வையை அவள் மீது வீசியபோது, அதனை உணர்ந்து கொண்டதன் வெளிப்பாடாக அவன் கைகளைப் பற்றி ஓர் அழுத்தம் கொடுத்தாள். நல்வரமாக அமைந்த தம் வாழ்க்கையை எண்ணி மனதார அந்த ஆண்டவனுக்கு நன்றி செலுத்திக் கொண்டிருந்தான் மாறன்.

சுபமாக நிறைவுற்றது.

படங்களுக்கு நன்றி:

http://cameras.about.com/od/digitalphotographycontest/ig/March-2006-Photo-Gallery/Lovers–Moon.htm

http://spdigitalstudio.blogspot.in/2011/10/marriage.html

நன்றி : வல்லமை

கலீல் ஜிப்ரானின் நியாயங்கள்! (சட்டம்)

உவகையுடன் சட்டம் இயற்றும் நீவிர்
அதனை முறிக்கையிலும் பேருவகை கொள்கிறீரே.
கடலோரம் விளையாடும் சிறார்கள்
மணற்கோபுரங்களைக் கருத்தாய் கட்டி
குதூகலத்துடன் அதைச் சிதைக்கவும் துணியும்
அச்செயலுக்கொப்பானத்ன்றோ இதுவும்.
ஆயின்,நீவிர் மண்ற்கோபுரம் அமைக்கும்
தருணமதில் கடலன்னையவள் கரைசேர்க்கும்
மணற்குவியலதையும் சேர்த்தே சிதைக்கும்
உம்மோடு தாமும் குதூகலம் கொள்கிறதே அக்கடல்.
உண்மையில் மாசற்ற நகைப்பன்றோ.அது.
ஆயினும், கடலென பரந்து விரிந்த
வாழ்க்கையற்றவருக்கு மாந்தர் உருவாக்கிய
அச்சட்டம் மட்டும் மணற்கோட்டையாய்
இல்லாமல் போனாலும்தான் என்ன,
ஆயினும், உறுதிமிக்க பாறையாக
இருக்கக்கூடிய வாழ்க்கையின்மீது
தம் சுயவிருப்புகளைச் செதுக்கக்கூடிய
சிற்றுளியாக எவருக்கு இருக்கப் போகிறது அச்சட்டம்?
நாட்டியக்காரரை வெறுக்கும் முடவனால்
ஆகப்போவதுதான் என்ன?
வழிதவறி நிலைமாறி சுற்றித்திரியும்
காட்டுமானையும், கலைமானையும் கண்டு
தம் நுகத்தடியே காப்பு என்று கருதிக்கொண்டு
திரியும் எருதைப்பற்றி யாருக்கு என்ன?
தம் புறச்சட்டையை அகற்ற இயலாத முதுபாம்பு அதையே
இயல்பாய்க் கொண்டோரை நிர்வாணி, வெட்கங்கெட்டவன்
என எள்ளி நகையாடுதலால் ஆகப்போவதுதான் என்ன?
மணவிழாவிற்கு விரைவாய்வந்து அதிகமாய்
விருந்தும் உட்கொண்டதால் ஏற்பட்ட களைப்பு
மேலீட்டிலும் வந்தவழியே சும்மா செல்லாது
விருந்தெல்லாம் வன்முறை விருந்தளிப்பவனோ
சட்டமீறல் செய்பவன் என்று
புலம்புவோரைப்பற்றி ஆகப்போவது என்ன?
கதிரொளியில் புறமுதுகு காட்டி நிற்போரை
காப்பது எங்கனம்?
தங்களின் பிம்பத்தை மட்டுமே காட்சியாய்க் கொள்ளும் இவர்களுக்கு இவர்களின் நிழல்களே இவர்தம் நியாய ஏற்பாடாகிறதே.
அக்கதிரோன் இவர்தம் நிழற்கால்களின் சக்கரமாய் மட்டுமே சுழலக்கூடுமன்றோ?
சட்டங்களை ஏற்றதோடு அதனை அதள பாதாளத்திலும் தள்ளி அதன் நிழல்களை மட்டும் தரணியின் மீது கோலமாக்குவதில் பயன் எங்கனம் கிடைக்கும்?
கதிரோனை நோக்கி நடக்கும் உம்மில் எவரை, பூமியின் மீது விழும் எந்த பிம்பங்கள் தாங்கிப் பிடிக்க இயலும்?
வளியோடு பயணிப்போரில் எவருக்கு, எந்தக் காற்றாடித் திசைக்காட்டி வழி நடத்தப்போம்?
அடுத்தவரின் சிறைவாயிலின் மீதல்லாதவரை உம் நுகத்தடியினை நீரே முறித்தாலும் உம்மை எம்மனிதச்சட்டம் கட்டுப்படுத்த இயலும்?
எம்மனிதரின் இரும்புச் சங்கிலியின்மீதும் தடுமாறி சாயாமல் நீவிர் நடனமாடும் பட்சத்தில் எச்சட்டத்தைக் கண்டு நீவிர் அச்சம் கொள்ளப்போகிறீர்?
மற்றையோரின் பாதையின் தடைக்கல்லாய் இராது, உம் ஆடையைக் கிழித்துக் கொண்டு நீவிர் அலைய நேர்ந்தாலும், எவர் உம்மை தீர்ப்பாயத்தினுள் கொணர இயலும்?
ஆர்பலீசு மாந்தரே, உம்முடைய முரசை பாதுகாப்பாக திரையிட்டு வையுங்கள், யாழிசைக் கருவியின் நரம்புகளைத் தள்ர்த்தக் கூடும். ஆனால் கீதமிசைக்கும் வானம்பாடியை கட்டுப்படுத்தக் கூடியவர் எவர் உளர்?
THEN a lawyer said, But what of our Laws, master?
And he answered:
You delight in laying down laws,
Yet you delight more in breaking them.
Like children playing by the ocean who
build sand-towers with constancy and then
destroy them with laughter.
But while you build your sand-towers the
ocean brings more sand to the shore,
And when you destroy them, the ocean
laughs with you.
Verily the ocean laughs always with the
innocent.
But what of those to whom life is not an
ocean, and man-made laws are not sand-
towers,
But to whom life is a rock, and the law
a chisel with which they would carve it in
their own likeness?
What of the cripple who hates dancers?
What of the ox who loves his yoke and
deems the elk and deer of the forest stray
and vagrant things?
What of the old serpent who cannot
shed his skin, and calls all others naked
and shameless?
And of him who comes early to the
wedding-feast, and when over-fed and tired
goes his way saying that all feasts are
violation and all feasters law-breakers?
What shall I say of these save that they
too stand in the sunlight, but with their
backs to the sun?
They see only their shadows, and their
shadows are their laws.
And what is the sun to them but a caster
of shadows?
And what is it to acknowledge the laws
but to stoop down and trace their shadows
upon the earth?
But you who walk facing the sun, what
images drawn on the earth can hold you?
You who travel with the wind, what
weathervane shall direct your course?
What man’s law shall bind you if you
break your yoke but upon no man’s prison
door?
What laws shall you fear if you dance
but stumble against no man’s iron chains?
And who is he that shall bring you to
judgment if you tear off your garment yet
leave it in no man’s path?
People of Orphalese, you can muffle the
drum, and you can loosen the strings of the
lyre, but who shall command the skylark
not to sing?
-excerpt from The Prophet, by Kahlil Gibran

Wednesday, April 25, 2012

பெண்ணை வெறும் கைப்பாவையாக வைத்திருந்த காலம்! - (2)

தடைக்கல்லையும் படிக்கல்லாக மாற்றிய மங்கையர்கள்!


மங்கையர்க்கு அரசியார்

பூசல் அயில்தென்ன னார்க்கன லாகப் பொறாமையினால்
வாச மலர்க்குழல் பாண்டிமா தேவியாம் மானிகண்டீர்
தேசம் விளங்கத் தமிழா கரர்க் கறி வித்தவரால்
நாசம் விளைத்தாள் அருகந் தருக்குத் தென் னாட்டகத்தே

1. மங்கையர்க்குத் தனி அரசி எங்கள் தெய்வம் வளவர் திருக்குலக் கொழுந்து வளைக்கைமானி
செங்கமலத் திருமடந்தை கன்னிநாடாள் தென்னர்குலப் பழிதீர்த்த தெய்வப் பாவை
எங்கள் பிரான் சண்பையர் கோன் அருளினாலே இருந்தமிழ் நாடுற்ற இடர் நீக்கித் தங்கள்
பொங்கொளி வெண் திருநீறு பரப்பினாரை போற்றுவார் கழல் எம்மால் போற்றலாமே

2. பூசுரர் சூளா மணி ஆம் புகலி வேந்தர் போனக ஞானம் பொழிந்த புனித வாக்கால்
தேசுடைய பாடல் பெறும் தவத்தினாரைச் செப்புவது யாம் என் அறிந்து தென்னர் கோமான்
மாசில் புகழ் நெடுமாறன் தனக்குச் சைவ வழித்துணையாய் நெடும் காலம் மன்னிப் பின்னை
ஆசில் நெறியவரோடும் கூட ஈசர் அடி நிழல் அமர்ந்திருக்க அருளும் பெற்றார்

3. வரும் நாள் ஒன்றும் பிழையாத் தெய்வப் பொன்னி வளம் பெருக்க வளவர் குலம் பெருக்கும்தங்கள்
திருநாடு போற் செழியர் தென்னர் நாடு சீர் விளக்கும் செய்ய சீறடிகள் போற்றி
ஒரு நாளும் தம் செயலில் வழுவாது அன்பர்க்கு உடைகீளும் கோவணமும் நெய்து நல்கும்
பெருநாமச் சாலியர் தம் குலத்தில் வந்த பெருந்தகையார் நேசர் திறம் பேசல் உற்றாம்
மங்கையர்க்கரசியார் புராணம்

சைவ ஒழுக்கத்தை எத்தகையதோர் நிலையிலும் காக்கக் கூடிய மரபில் வந்தவர், மங்கையரில் மாணிக்கமான, சோழமன்னனின் தவப்புதல்வியாக அவதரித்தவர், மங்கையர்கரசியார். நின்றசீர் நெடுமாறன் என்னும் பாண்டிய மன்னருக்கு மணம் முடித்து வைத்தார் சோழ மன்னர். பாண்டிய மன்னனோ, சமண சமயத்தில் ஈடுபாடு கொண்டவனாக இருந்தான். அரசவையில் குலச்சிறையார் என்ற ஒரு அமைச்சரைத்தவிர ஏனையோர் அனைவரும், சமண சமயததை தொடர்பவர்களாகவே இருந்தனர். சைவநெறியில் சிறந்து ஒழுகுபவரான அம்மையார் திருநீறு இடுவதற்கும் வழியின்றி நொந்து போனவராகிறார். சிவனடியார்களைக் கண்டாலோ, அவரிடம் பேசினாலோ, தீட்டு என்பதாக, ‘கண்டு முட்டு - கேட்டு முட்டு’ என்று வாழ்ந்த மன்னவனின் கட்டளைப்படி அதற்கான அனுமதியின்றி, அவர் மன்னன் அறியாதவாறு திருமண்ணை மார்பின் மத்தியில் மறைவிடத்தில் வைத்துக் கொண்டிருந்தார்.. இச்சமயத்தில் திருஞானசம்பந்தர் தம் அடியார் குழுவுடன் பாண்டிய நாட்டிற்கு வருது தங்கியிருப்பது அறிந்து, சமணர்களின் விருப்பிற்கிணங்க அவர்களைத் தீயிட்டுக் கொளுத்த ஆணையிடுகிறார். ஆளுடைய பிள்ளையார் தம் அடியார்களுடன் தங்கியிருந்த மடத்திற்கு தீ வைத்தனர். ஞானசம்பந்தப்பெருமானார் “பையவே சென்று பாண்டியருக்கு ஆகவே” என்று பணித்திட, அவருக்கு வைத்த தீ திரும்பி வந்து, அரசருக்கு வெப்பு நோயாக மாறி வாட்டியது. சமணர்கள் எவ்வளவோ மருந்து, மாயம் செய்தும், மன்னரை சுர நோயிலிருந்து காக்க முடியவில்லை. மங்கையற்கரசியாரின் மாதவத்தினால், திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய திருநீறு மூலமாக வெப்பு நோய் நீங்கி சைவ சமயத்தை போற்றிப் பரவினார். குடிமக்களும் மன்னன் வழியே சிவநெறியைப் போற்றி வாழலாயினர். மகாராணியாக இருந்த போதும் தாம் விருப்பம் போல் தெய்வத்தை வணங்கும் அனுமதி கூட மறுக்கப்பட்ட போதும், தம் பொறுமை மற்றும் பதிபக்தி மூலம் கணவனை நல்வழிப்படுத்தும் வல்லமை பெற்றிருந்தார், மங்கையர்கரசியார் என்பது புராணம் கூறும் உண்மை.

'செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்”
என்பார் வள்ளுவப் பெருந்தகை.

சோழவள நாட்டின் கடற்துறைப்பட்டிணமான காரைக்கால் எனும் திருத்தலத்தில் வணிகர் குலத்தில் தனதததன், தர்மவதி தம்பதிருக்கு, மகாலட்சுமியைப் போன்ற தோற்றம் கொண்ட புனிதவதியார் அவதரித்தார். திருமண வயதில் பரமதத்தன் என்பவருக்கு திருமணம் முடித்து வைத்தனர். சைவநெறியில் தவறாது ஒழுகி கணவருக்கும் அருஞ்சேவைகள் புரிந்து கற்புடைநாயகியாக வாழ்ந்து காட்டியவ்ர் புனிதவதியார். ஒரு முறை தனதத்தன் தனக்கு ஒரு வியாபாரி மூலம் கிடைத்த இரண்டு மாங்கனிகளைத் தன் வீட்டிற்கு கொடுத்தனுப்பினார். சிவனடியார் ஒருவர் அவர்தம் இல்லம் நாடிவர, அவரை அன்போடு உபசரித்து கையில் இருந்த மாங்கனிகளில் ஒன்றை அவருக்குப் படைத்தார். கணவர் வீடு வந்து மதிய உணவுடன் தாம் கொடுத்தனுப்பிய மாங்கனியைக் கேட்க அம்மையாரும் கையிலிருந்த அந்தக்கனியைக் கொண்டுவந்து கொடுத்தார். பழம் மிகவும் சுவையாக இருப்பதாகவும் அந்த மற்றொரு கனியும் தனக்கே வேண்டும் என்றும் கேட்கிறான். அம்மையார், கணவர் விரும்பிக் கேட்கும் கனியை தம்மால் கொடுக்க முடியவில்லையே என்று மனம் வருந்தி, சிவபெருமானை மனமுறுகி வேண்டிக்கொள்ள், புனிதவதியாருக்கு ஆண்டவனிடமிருந்து அற்புதமானதொரு மாங்கனி கிடைக்கிறது. மனமகிழ்ச்சியுடன் கணவருக்குக் கொடுக்க, அதை உண்ட கணவனோ நான் அனுப்பிய கனியை விட பன்மடங்கு சுவையான இக்கனி எங்கனம் வந்தது என வினவ, புனிதவதியார் நடந்ததைக் கூறி, இறைவன் அருளால் தாம் கனி பெற்றதைக் கூற, நம்பிக்கையற்ற கணவனோ அதனை சோதிக்க விரும்பி, “அங்கனமாயின் மற்றொரு கனியை உம் இறைவனிடம் பெற்று தா” என்று கேட்கிறார். திரும்பவும் சிவபெருமானை வேண்டி நிற்க, மீண்டும் கனி கிடைக்கும் வரம் பெறுகிறார். இதைக்கண்ட கணவன் இத்தகைய மாட்சிமை வாய்ந்த மங்கையுடன் உறைய தனக்குத் தகுதியில்லை என்றுணர்ந்து , பாண்டி மாநகர் சென்று அங்கு வேறு பெண்ணை மணந்து, அதன் மூலம் பிறந்த பெண் குழந்தைக்கு அம்மையாரின் திருப்பெயரையே வைக்கிறார்.
அவரைச் சந்திக்கும் வேளையில் தம் மனைவி, குழந்தையுடன் வந்து புனிதவதியாரின் காலில் வீழ்ந்து ஆசீர்வாதம் வாங்குகிறார், தம் மனைவி குழந்தையுடன். அந்நொடியே, தமக்கு இந்த அழகுருவம் நீங்கி, பேய் வடிவைப் பெற வேண்டும் என்று ஆண்டவனிடம் வரமும் பெறுகிறார். உடம்பில் அழகைக் கொடுக்கும் அத்துனை சதைகளையும் உதறி எறிந்து சிவகண வடிவை விரும்பி ஏற்கிறார்.
"பிறவாமை வேண்டும், மீண்டும் பிறப்புண்டேல் இறைவா உனையென்றும் மறவாமை வேண்டும்" என்று வேண்டுகிறார்.

‘காலையே போன்று இயங்கும் மேனி, கடும்பகலின்
வேலையே போன்று இலங்கும் வெண்ணீறு - மாலையின்
தாங்குருவே போலும் சடைக்கற்றை மற்றவர்க்கு
வீங்கு இருளே போலும் மிடறு’ -
காரைக்கால் அம்மையின் பாடல்.

Inline image 1
நம் தமிழகம் எத்துனையோ வீரப்பெண்மணிகளின் வரலாறுகளைக் கண்டிருக்கிறது. ஆயினும், இப்பெண் சாதாரண வீர மங்கை அல்ல. ஆம் ராணி வேலு நாச்சியார் என்றால் சாதாரண வீரம் அல்ல. மாபெரும் படையை எதிர்கொண்டு ஆயுதம் தாங்கி எதிரிகளை வீழ்த்திய, வீராங்கனை! 1730 ஆம் ஆண்டு, இராமநாதபுரத்தில் பிறந்தவர். விஜயரகுநாத செல்லத்துரை சேதுபதி மற்றும் முத்தாத்தாள் நாச்சியாரின் ஒரே செல்வமகள். சகல கலைகளையும் கற்றுத் தேர்ந்திருந்தவர். 18ம் நூற்றாண்டிலேயே ஆங்கிலேயரின் ஆட்சிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் போராளி என்ற பெரும் பேறு பெற்றவர். வேலுநாச்சியார் வாள்வீச்சு, அம்பு விடுதல், ஈட்டி எறிதல், குதிரையேற்றம், யானையேற்றம் என்று அனைத்து போர்க் கலைககளிலும் கற்றுத் தேர்ந்தவர். வீர சாகசம் மட்டுமன்றி, கல்வியறிவிலும் சிறந்து விளங்கியதற்கு ஆதாரம் அவர் பத்து மொழிகள் திறம்பட அறிந்திருந்ததோடு, மகாபாரதம், இராமாயணம் போன்ற இதிகாசங்களும் கற்றறிந்திருந்தார்.. இப்படி வீரத்திலும், கல்வியிலும் சிறந்து, வளர்ந்த இளம் பெண் வேலு நாச்சியாரின் அழகிலும் தீரத்திலும் மனதைப் பறிகொடுத்த சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதர், வேலு நாச்சியாரை 1746ம் வருடம் மணமுடித்தார்.

திருமண வாழ்க்கை இனிதாக ஆரம்பமாகியது. சில காலங்களில், இராமநாதபுரத்தைத் தாக்கி கைப்பற்றிய ஆற்காடு நவாப்பின் அடுத்த குறி சிவகங்கையாக இருந்தது. ஆங்கிலேயப் படைகள் நவீனரக ஆயுதங்கள் மூலம் நவாப்பிற்கு உதவ முன்வர, சமயம் பார்த்துக் காத்திருந்தவன், முத்துவடுகநாதர் காளையர் கோவிலில் வழிபட்டுக் கொண்டிருந்த சமயம் பார்த்து அக்கோவிலைச் சுற்றி வளைத்து கொடூரமாய்த் தாக்கத் துவங்கினர். ஆங்கிலேயரின் நவீனரக ஆயுதங்களின் சக்தியால், அந்தத் தாக்குதலைச் சமாளிக்க இயலாமல் மன்னனும், உடன் சென்ற இளவரசியாரும் அநியாயமாகக் கொல்லப்பட்டு, காளையார் கோவில் கோட்டையும் நவாப் வசமானது. இதனை அறிந்த வேலு நாச்சியார் பதைபதைத்து கணவர் மற்றும் இளவரசியைக் காண கோவிலுக்குச் செல்லும் வழியில் வேலு நாச்சியாரைக் கைது செய்ய நவாப் அனுப்பிய படை நாச்சியாரை வழியிலேயே மடக்க அவர்களை எதிர்த்து வீராவேசத்துடன் ஆயுதம் ஏந்திப் போராடிய வீரமங்கை அவர்.

தன் கணவரின் உடலை உடனே சென்று காண வேண்டுமென்ற வெறியில் வீராவேசமாக போராடி,முன்னேறிச் சென்ற வேலு நாச்சியாரிடம், தளபதிகளான மருது சகோதரர்கள், மன்னரும் கொல்லப்பட்ட நிலையில் நாட்டைக் காப்பாற்ற அரசியார் வாழ்ந்தாக வேண்டும் என்று வலியுறுத்திய ஆலோசனையையும் சட்டை செய்யாமல் காளையார் கோவில் சென்று பிணக்குவியலுக்கு இடையில் தம் கணவரும், இளவரசியும் இரத்த வெள்ளத்தில் கிடந்த காட்சியைக் கண்டு கதறி அழுததோடு நிற்காமல் தம் கணவரையும், இளவரசியையும் கொன்ற கயவர்களை பழி வாங்கியேத் தீருவது என்ற சபதமும் மேற்கொண்டார். மருது சகோதரர்களின் உதவியால் குதிரையின் மீது ஏறி மேலூர் சென்று சமயோசிதமாக, ஆங்கிலேயருக்கும், நவாபிற்கும் எதிரியான ஹைதர் அலியுடன் நட்புப்பாலம் அமைத்தார். தம் நிலையை தெளிவாக விளக்கிய வேலு நாச்சியாரின் வீரத்திருமுகம் கண்டு அவரைத் தம் அரண்மனையிலேயேத் தங்கவும் அனுமதி அளித்தார். தலைப்பாகையுடன் ஆண் வேடத்தில் வந்து தன்னிடம் உருது மொழியில் மிகச்சரளமாக உரையாடிய நாச்சியாரைக் கண்டு பேராச்சரியம் கொண்டார் ஹைதர் அலி. ஹைதர் அலியின் பாதுகாப்பிலேயே, மருது சகோதரர்களின் உதவியுடன், திண்டுக்கல் ம்ற்றும் விருப்பாட்சி கோட்டைகளில் 8 ஆண்டுகள் தங்கி தம் படைபலத்தை பெருக்கிக் கொண்டிருந்தார். ஆங்கிலப் படையையும், நவாப்பையும் ஒழித்து, தம் பரம்பரைச் சின்னமான அனுமன் கொடியை தம் சிவகங்கைச் சீமையில் பறக்கவிட்டேத் தீர வேண்டும் என்ற வெறியுடன் தருணம் பார்த்து காத்துக் கொண்டிருந்தார். அதற்கான தருணமும் வந்தது. காளையார் கோவிலை போரிட்டு முதலில் கைப்பற்றினார்.. சிவகங்கையையும், திருப்பத்தூரையும் ஆங்கிலேய மற்றும் நவாப்பின் படைகள் சுற்றி வளைத்திருந்தன. இளைய மருது சகோதரரை தளபதியாகக் கொண்டு ஒரு படையை திருப்பத்தூருக்கு அனுப்பி, வெற்றி கொள்ளச் செய்தார். வேலு நாச்சியாரின் தலைமையிலான மற்றொரு படை பெரிய மருது சகோதரரை தளபதியாகக் கொண்டு ஆங்கிலேயப் படைகளை வீழ்த்தியது.

வேலு நாச்சியார் மிக சாணக்கியத்தனமாக செய்த ஒரு செயல் வெள்ளையர் படையில் பலரையும் வெட்டுண்டு உயிரிழக்கச் செய்தது. ஆம், சிவகங்கை ராஜராஜேஸ்வரி ஆலயத்தில் நவராத்திரி, விஜயதசமி அன்று பெண்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று வழிபடுவது வழக்கம். ஆங்கிலேயப் படைகள் பாதுகாப்பாக அங்கு இருக்கும். இச்சமயத்தில், வேலு நாச்சியாரும் தம் படைகளுடன் கூட்டத்தோடு கூட்டமாக நுழைந்து, அவர்கள் எதிர்பார்க்காத நேரத்தில் சரமாரியாக தாக்குதல் நடத்தி, ஆங்கிலேயப் படைகளை நிலை குலையச் செய்தனர். உயிர் பிழைத்தவர்களும் தப்பியோடினர். கொஞ்ச நாட்களிலேயே, வேலு நாச்சியாரின் படையில் இருந்த குயிலி என்றொரு பெண்ணின் வீர சாகசத்தால் தம் உயிரைப் பணயம் வைத்து, தம்மீது தீ வைத்துக் கொண்டு வெள்ளையரின் ஆய்தக்கிடங்கையே முழுவதுமாக அழித்ததும் குறிப்பிடத்தக்கது. தம் கணவனைக் கொன்றவர்களை பழி வாங்க தாம் எடுத்த சபதத்தை நிறைவேற்றி, தம்முடைய ஐம்பதாவது வயதில் சிவகங்கையின் கோட்டையின் மீது பறந்து கொண்டிருந்த ஆங்கிலேயக் கொடியை இறக்கிவிட்டு, தம் சிவகங்கைச் சீமையின் அனுமன் கொடியை ஏற்றினார். பத்து ஆண்டுகள் அவருடைய நல்லாட்சி நடந்து கொண்டிருந்தது......

தடைகளையும் மீறி சாதித்தப் பெண்களின் வரலாறு இது போன்று ஏராளம்.....

காற்றில் ஆடும் தீபங்கள் (2)

வாழ்வியல் வண்ணங்கள் (2)

நிறம் மாறிய பூக்கள்!

கருப்பினவாதத்தின் உச்ச நிலையில் தம் பள்ளிப் பருவத்தில் தாம் பட்ட துயரில் மனம் நொந்து, ஒதுக்கப்பட்ட சிறுவனாக, பலூன் விற்கும் தன் தாத்தாவிடம் சென்று முறையிட, அவரும் மற்ற பலூன்களுடன் ஒரு கருப்பு வண்ண பலூனில் சற்று காற்றை அதிகமாகவே பிடித்து, மேலே பறக்க விட, அந்த பலூன் மற்றவைகளைவிட மிக உயரமாக பறக்க ஆரம்பிக்கிறது.. அதைக்கண்ட அந்த சிறுவனின் மனதில் உற்சாகம். அப்படி என்றால் இந்த கருமை நிறம் என் செயல்களுக்குத் தடையில்லையா என்று கேட்க, தாத்தாவும், நிறத்திற்கும் செயலுக்கும் என்ன சம்பந்தம், சாதனைகள்தான் ஒருவரை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்துகிறது என்ற அந்த ஆக்கப்பூர்வமான பேச்சுதான் ஆப்பிரகாம் லிங்கனை வாழ்க்கை முழுவதும் போராட வைத்தது. தம்முடைய 59வது வயதில்தான் தம் கனவுக்கோட்டையின் உச்சியைத் தொட்டார். அதுவரை அவர் ஓயவே இல்லை. இப்படி இந்த நிறபேதம் குறிப்பிட்ட அந்த இனத்திற்கு மட்டுமல்லாமல், மனிதராய்ப் பிறந்த பலருக்கும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதும் மறுக்க இயலாத உண்மை. அதுவும் குறிப்பாக பெண்களுக்கு. வெள்ளை தோல் உள்ளவர்கள் மட்டுமே அழகு, கருப்பு நிறமாக இருப்பவர்கள் அழகு என்று ஒப்புக் கொள்ள்பபடுதில்லை. இதற்கு கிளியோபாட்ரா போன்ற ஒரு சிலர் மட்டுமே விதிவிலக்கு. நம்ம ஊர் பெண்கள் நிறம் சற்று மட்டமாக இருந்தால் உடனே தான் அழகே இல்லை என்று கற்பனை செய்து கொண்டு, அதனால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மையினால் ஏதாவது தவறான முடிவு எடுத்து விடுவதும் உண்டு. குடும்பத்தில் ஒளியூட்டும் விளக்காக இருக்க வேண்டிய அந்த தீபம் உறவுகளைச் சுட்டெரிக்கும் நெருப்பாக மாறியது எங்கனம்?

தீபம் – (2)

’கருப்புத்தான் எனக்குப் புடிச்ச கலரு’ என்று பாடுவது கேட்பதற்கு வேண்டுமானால் நன்றாக இருக்கும். ஆனால் ஒரு பெண் கருப்பாக பிறந்துவிட்டால் சில பெற்றோருக்கு அன்றே தலைவலி பிடித்துவிடும். சில குடும்பங்களில் அந்தப் பெண்ணை கரைசேர்ப்பதற்காக அப்போதிருந்தே காசு பணம் சேர்க்க ஆரம்பிப்பார்கள். பெண் எவ்வளவுதான் படித்து நல்ல உத்தியோகத்தில் இருந்தாலும், நல்ல குணவதியாக இருந்தாலும், கருப்பாக இருந்தால் முதல் பார்வையிலேயே முகம் சுளிக்கும் வழக்கம் இன்றும் இருந்து கொண்டுதான் இருக்கிறது ஒரு சிலரிடம். இதனாலேயே பல பெண்கள் தங்களுக்குள் தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொள்கிறார்கள். இது தேவையில்லாத ஒன்று என்பதை பிற்காலத்தில் உணர்ந்தாலும் அந்த பருவ வயதில் இந்த வெளித்தோற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அப்படித்தான் நிறைமதியின் நிலையும்! வீட்டில் திருமணம் பார்த்து பேசி முடித்தார்கள். உடன் படிக்கும் மாணவன் தன்னுடைய காதலை வெளிப்படுத்தியபோது கூட, பெற்றோர் பார்த்த மாப்பிள்ளைக்குத்தான் கழுத்தை நீட்டுவேன், அவர்கள் மனம் நோக விட முடியாது என்று மறுத்தவள்., அடுத்து எடுத்த சில விபரீதமான முடிவுகளால் குடும்பமே ஆட்டம் கண்டது என்றுதான் சொல்ல வேண்டும். அதற்கு காரணங்களும் இருந்தது.

பிறந்த வீட்டில் குழந்தையாக இருந்தபோது முதல் கருவாச்சி என்று செல்லமாகக் கூப்பிட்டு கொஞ்சியிருந்தாலும், அதையே வாழப்போகும் வீட்டில் கிண்டலாகச் சொல்லிக் கொண்டிருந்தால் எந்த பெண்ணால் தாங்கிக் கொள்ள முடியும்? சுயகௌரவம் பார்க்கக்கூடிய எந்த பெண்ணும் இதை ஒப்புக்கொள்ள மறுப்பாள். ஊரைக்கூட்டி நிச்சயதார்த்தம் முடித்து, பத்திரிக்கை அடித்து அனைவருக்கும் விநியோகமும் செய்த பின்பு, திருமணத்திற்கு ஒரு வாரம் இருக்கும் நிலையில் யாரைப்பற்றியும் துளியும் கவலைப்படாமல், அதிரடியாக ஒரு முடிவு எடுத்து விட்டாள். தன்னை முழுமையாக விரும்பிய, உடன் படித்த மாணவரை ஒருவரிடமும் சொல்லாமல் போய் திருமணம் முடித்துக்கொண்டு வந்து விட்டாள். குடும்பமே அதிர்ச்சியில் உறைந்து போனது.

சிறு வயதிலிருந்து தன்னம்பிக்கையை ஊட்டி வளர்க்காத பெற்றோரின் தவறா, தன் வீட்டிற்கு வரப்போகிற மகாலட்சுமியை அவள்தம் சுயம் பாதிக்கும் அளவிற்கு நிலையில்லாத அந்த வெற்று வெளித்தோற்றத்தைக் குறித்து அடிக்கடி கிண்டல் செய்து பேச, காலம் முழுவதும் இப்படிப்பட்ட பிரச்சனையை எதிர்கொள்வதைவிட தன்னை விரும்பியவனை மணந்து கொண்டு அமைதியான வாழ்க்கையை வாழ சுயநலமான முடிவெடுத்தவளின் தவறா…… யார் தவறு இது? அத்தனை உறவுகளையும் பகைத்துக் கொண்டு ஒரு பெண் நிம்மதியாக வாழமுடியுமா? அவளை இந்த முடிவெடுக்கத் தூண்டிய சமுதாயமும்தானே இதற்கு காரணம்.?

நன்றி : வல்லமை

Sunday, April 22, 2012

சூல் கொண்டேன்!


அந்திச்சூரியனும் முழுமதியும் இணையும்
இனியதொரு பொழுதின் ஏக்கமும்
கூடிக்களிக்கும் குதூகலக் கற்பனையும்
சுவையான கருப்பஞ்சாற்றில் ஊறித்திளைத்து
கனிவான கற்கண்டாய் உருமாறி
கவின்மிகு கருவதனைக் கொள்ளவே
தவியாய்த் தவித்து மனம்
பனியாய் உருகிப் பார்த்திருக்க.......

பதமாய் பகட்டாய் பரிதவிப்பாய்
காத்திருந்த கருகூலம் கண்டேன்
மதியொளியும் கருக்கமும் வின்மீன்களும்
கண்டறியாதனக் கண்டேன் என
கட்டிக்கரும்பாய் கனிரசமாய் கவித்துளியாய்
கன்னியவளை கருத்தாய்க் கவரவே
காந்தர்வமாய் கணப்பொழுதில் காட்சிமாறவே
ஆலிங்கனமும் புனைவும் புனிதமாகவே
ஆனந்தமாய் அள்ளிப்பருகிய அற்புதங்கள்
ஆசுவாசமாய் சூல் கொண்டது

சூல் கொண்ட சுடரொளியாய்
மயங்கி தள்ளாடி மூச்சிறைத்து
மனம் நிறைந்து மட்டற்றமகிழ்ச்சியில்
பிரசவ வேதனையையும் பிரியமாக
வரவேற்று கதறாமல் சிதறாமல்
பொன்னாய் பூவாய் முத்தாய்
வைரமாய் புளங்காகிதமாய் புதுமையாய்
பூத்த புதுமலராய் அழியாத மணமும்
நிலையான குணமும் தனியான
சுவையும் கனிவான பார்வையும்
சலியாத மொழியும் இனிமையான
நடையும் இதமான சுகமும்
சுவையாக வழங்கும் வெல்லக்கட்டியாய்
கட்டவிழ்ந்த தருணமதில் பெற்றெடுத்த
கவி மழலையின் இளம்தாயாய்
உளம் நிறைந்த பேதையாய் யாம்!நன்றி : திண்ணை வெளியீடு.

பெண்ணை வெறும் கைப்பாவையாக வைத்திருந்த காலம்!

//இதுபோன்ற தகவல்கள்தானே நமக்கு வேண்டும்! மிக மிக நன்றியப்பா!

அந்த "ரவுக்கை கழட்டுற" பழக்கம் இடத்துக்கு இடம் வேறுபடுமோ-னு நினைக்கிறேன், பெண்ணே!
இன்னும் சொல்ல நிறைய இருக்கில்லெ -- "சேலை முந்தானையெப் போர்த்திக்கொள்ள" வேண்டிய பழக்கத்திலிருந்து தொடங்கி?!!// ராஜம் அம்மா.


யானை கட்டி போரடித்த காலம்! பொன் விளையும் பூமி. பஞ்சம் வந்த காலத்திலும் ஊருக்கு தானியங்களை படியளந்த வள்ளல். சமுதாயத்தில் தலை நிமிர்ந்து வாழ்ந்த காலம். ஜவஹர்லால் நேரு, காமராசர் என பெருந்தலைவர்களுக்கு வீட்டில் விருந்து வைத்து உபசரித்ததன் சாட்சியாக 8 அடியில் நெடிதுயர்ந்த புகைப்படங்கள். அண்ணாந்து பார்த்தால் கழுத்து வலிக்கும் அளவிற்கு உயரமான சுவர்கள். ஒரு தெருவில் ஆரம்பிக்கும் வாசல், மறு தெருவில் முடிவுறும் பொடக்காளி என்கிற பின்வாசல். சேலம் மாநகரின் சேர்மன் ராமலிங்கம் என்றால் அன்றைய காங்கிரசு வட்டாரத்தில் மிக பிரபலம். இன்றும் ஊரில் பெயர் சொல்லிக் கொண்டிருக்கும் சேர்மன் ராமலிங்கம் மார்க்கெட், சேர்மன் ராமலிங்கம் மெயின் ரோடு, சேர்மன் ராமலிங்கம் பள்ளிக்கூடம் என்று மாளாத சொத்துகளை ஊருக்காக வாரி இறைத்த வள்ளல்தன்மை தந்த பரிசாக பறை சாற்றிக் கொண்டிருக்கும் நிதர்சனம். உக்கிராண அறை என்கிற பொக்கிச அறை! (ஒரு அறையே பீரோவாக இருந்த ஆச்சரியம்) அரசியல் தலைவர்கள், கல்வியாளர்கள் என்று சதாசர்வ காலமும் நிறைந்த சபையாக இருக்கும் இல்லம். இப்படி ஊரின் முக்கிய பிரபலங்களின் ஒருவராய் இருந்த என் தாய் வழித்தாத்தா. இவ்வளவு பெருமையும், புகழும், செல்வாக்கும் தாண்டவமாடிய ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணின் நிலை என்ன என்பதைக் காட்டவே இந்த முன்னுரை.

ராஜாராம் மோகன்ராய், திலகர் போன்றோரின் பெரும்போராட்டத்தின் விளைவாக சதி என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கம் முற்றிலும் ஒழிக்கப்படது. ஆனால் ஒவ்வொரு நாளும், தீக்குளித்து புழுவாய்த் துடித்த வாழ்க்கையில் இருந்து மீள அந்த தலைமுறையினரால முடியவில்லை. பருவம் எய்துவதற்கே முன்பே ஏழு வயதில் திருமணம். மணமகனுக்கும் இளம் பருவம். திருமணம் முடித்தவுடன், திரும்ப தாய் வீட்டு வாசம். ஆனால் பள்ளிப்படிப்பும், சகஜமாக வெளியில் திரிந்து விளையாடும் அனுமதியும் மறுப்பு. வீட்டில் சமையலும் மற்ற பழக்க வழக்கங்களும் கற்றுக் கொடுக்கப்படும். பருவ வயது வந்தவுடன் நல்ல நாள் பார்த்து கணவர் வீட்டில் கொண்டுபோய் விட்டுவிடுவார்கள். 13 வயதில் ஒரு வாலிபருக்கு மனைவியாக குடும்ப வாழ்க்கைக்குத் தயாராக வேண்டிய கட்டாயம். அன்றிலிருந்து இரவிக்கைக்கு விடுதலை. சில பெண்கள் கச்சை என்ற பெயரில் அணிந்திருப்பார்களாம். இவர்களெல்லாம் தன் சேலை முந்தானையை ஒரு சுற்று உள்ளாடையாக நாணத்தை மறைக்க தாங்களே ஏற்படுத்திக் கொண்ட வழமையாக்கிக் கொண்டிருந்திருக்கிறார்கள். பருவ வயது. வெள்ளை வெளேர் என்ற பளபளப்பான அழகிய தோற்றம். ஒரு பெண் உள்ளாடையும் இரவிக்கையும் அணியக்கூடாது என்றால் அவள் நிலை என்னவாக இருக்கும்? அவமானத்தால் கூனிக்குறுகி கதவின் இடுக்கை விட்டு வெளியே வரவே முடியாத, ஆண்களின் முகத்தில் முழிக்கவே இயலாத நிலை. குடும்பப் பெண்களின் பெரும்பாலோனோர் இந்நிலையில் இருக்க வேண்டிய கட்டாயத்தில் கூட தாசிகள், பரத்தையர் என்ற ஒரு கூட்டம் உருவாக்கப்பட்டிருக்கலாம். ஆண்களுக்கு ஒரு வடிகாலாக அவர்கள் இருந்திருக்கலாம். அங்கு சென்று வரும ஆண்களை தவறு சொல்லும் வழக்கமே இல்லாமல் இருந்திருக்கிறது...சில நேரங்களில் அதெல்லாம் அவர்களுக்கு கௌரவமான தோற்றத்தைக் கொடுக்கக் கூடியதாகக்கூட இருந்திருக்கிறது.

இந்நிலையில் ஒரு பெண்ணின் அறிவு வளர்ச்சி எந்த அளவில் இருக்க முடியும் என்று எளிதாக ஊகிக்க முடியும். அதற்கு அடுத்து வந்த காலம் சற்று விழிப்புணர்வு ஏற்பட்ட காலமாக இருந்திருக்கிறது. ஒரு பெண் கல்வி கற்றால் அந்த குடும்பமே அறிவு பெறும் என்பார்கள். ஆனால் கல்வியறிவே இல்லாத ஒரு தாய், பொது வாழ்க்கையில் சதாசர்வ காலமும் உழன்று கொண்டிருக்கும் தந்தை, ஆள் அம்பு என்று பணி செய்ய பலர் இருந்தாலும், குழந்தைகளை படிப்பறிவே சற்றும் இல்லாத ஒரு தாயால் எப்படி நன்கு வளர்க்க முடியும். சமையலறையை விட்டு வெளியே வரவே கூச்சம்... இதுதான் ஆண்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட இயந்திரமாக பெண்ணின் வாழ்க்கை. தன் சட்டங்களுக்கு அடி பணிய வேண்டும், தன் கட்டுப்பாட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்ற அந்த ஆதிக்க உணர்வு பெண்களின் வாழ்க்கையை அழகுப் பதுமைகளாக சமையலறையுடன் முடக்கிப் போட்டிருக்கிறது. அசுர உழைப்பு இருந்த அவரிடம் மன உறுதியையும் பார்க்க முடியும். தன் 60 வயதில் ஒரு மூட்டை அரிசியை இழுத்துப்போடும் அளவிற்கு சக்தி கொண்டவர்கள். தன் 85 வயதுவரை நல்ல கண் பார்வையுடன் எவருடைய உதவியும் இல்லாமல் தானே சமைத்து சாப்பிட்டு, தவ வாழ்க்கையாக, இரவிக்கை போடாமலே உயிரை விட்ட உத்தமி. அந்த அளவிற்கு மனப்பக்குவம் பெற்றதொரு வாழ்க்கை.

உளவியல் ரீதியாக ஒரு பெண்ணை எளிதாக முடக்கிப்போடும் ஒரு நுழைவாயிலாக இந்த இரவிக்கை மறுப்பு இருந்திருக்க வேண்டும். நாணத்தினால் அந்தப்பெண், கல்வியறிவும் பெறாமல், கைப்பாவையாக, அலங்காரப் பதுமையாக, தனக்கான ஒரு பொக்கிசமாக வைத்துக் கொள்ளும் முயற்சியாகவே இந்த பழக்கம் வந்திருக்க வேண்டும். இதைத் தவிர வேறு காரணங்கள் இருக்க வாய்ப்பிருந்திருப்பதாகத் தெரியவில்லை. வெளி உலக ஞானமே இல்லாத ஒரு பெண்ணால் வளர்க்கப்பட்ட குழந்தைகளின் நிலை என்னவாக இருக்க முடியும். இரவிக்கை போட்டவர்களெல்லாம் ஒழுக்கமான பெண்கள் இல்லை என்ற ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி வைத்திருந்தார்கள்.

நல்ல வேளையாக தான் ஒரு கல்வியாளராக இருந்ததாலும், ஈரோடு கல்வி நிலைய நிறுவனர் மீனாட்சி சுந்தரமுதலியாருடன் நெருங்கிய தொடர்பு கொண்டவராக இருந்ததாலும், தம் ஊர் மக்களும் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் கொண்டதாலும், தாமே ஒரு பள்ளியை நிறுவியதால் ஓரளவிற்கு குழந்தைகளும் கல்வியறிவு பெற முடிந்தாலும், தம்முடைய 50 வயதிற்குள்ளாகவே ஓயாத உழைப்பின் காரணமாகவோ என்னவோ இருதய நோயினால், மரணம் அடைந்த பின்புதான் உலக ஞானமும், கல்வியறிவும் இல்லாத ஒரு தாய் அந்த சொத்தையும் கட்டிக்காக்க இயலாமல், மகனையும் ஒழுங்காக வளர்க்க இயலாமல், கடலில் கரைத்த பெருங்காயமாக அவ்வளவு சொத்தும் கரைந்து போக காலி பெருங்காயப் பெட்டியாக இறுதிவரை ஒரு தவ வாழ்க்கையை வாழ்ந்து சென்ற உத்தமியாக மட்டுமே பார்க்க முடிகிறது.

இந்த காலகட்டத்திற்குப் பிறகுதான், ஈரோடு மாநகரிலும், சில கல்வியாளர்களின் முயற்சியால ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. முதன்முதலில் ரா.பா தங்கவேலனார் மற்றும் மீனாட்சி சுந்தர முதலியார் அவர்களும், திண்ணைப்பள்ளியாக ஆரம்பித்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் 4 குழந்தைகள், அதுவும் ஆண் குழந்தைகள் மட்டுமே சேர்ந்து, பிறகு இவர்களெல்லாம் ஏற்படுத்திய விழிப்புணர்வின் காரணமாக, செல்வச்சீமான் வீட்டு பெண் குழந்தைகள் மட்டும் மெல்ல வெளியேவர ஆரம்பித்து, பின்பு ஓரளவிற்கு விழிப்புணர்வு ஏற்பட்ட நிலையில் மீனாட்சி சுந்தர முதலியார் அவர்கள் முதன்முதலில் பெண்களுக்கென்று தனி பள்ளியை நிறுவினார். மெல்ல மெல்ல இரவிக்கை அற்றுப்போன வாழ்க்கைக்கும் விடிவு வந்திருக்கிறது,நாகரீகம் வளர ஆரம்பித்து, இன்று அசுர வளர்ச்சியாக பெண்களின் முன்னேற்றம் ஆச்சரியப்படும் வகையில் உள்ளதையும் மறுக்க இயலாது.. இருந்தாலும் இன்றளவிலும் பழைய பண்பாட்டின் மிச்சங்களாக கிராமப்புறங்களில் இரவிக்கை இல்லாத பாட்டிமார்களைக் காண முடிகிறது.