Wednesday, May 29, 2013

வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா ! (14)பவள சங்கரி

 “நான் உலகத்திற்கு எப்படி தோற்றமளிக்கிறேன் என்பது எனக்குத் தெரி்யாது; ஆனால் என்னைப் பொருத்தவரை, ஒரு சிறுவனாக  கடற்கரையில் விளையாடிக் கொண்டிருப்பதைப்போல  உணர்கிறேன்,   கண்டறியப்படாத எத்தனையோ உண்மைகள் எம் முன் பெருங்கடலாக விரிந்து கிடக்கிறது. ஆனால் நானோ  அவ்வப்போது ஒரு மென்மையான கூழாங்கல்லோ அல்லது சாதாரண சிப்பியைக் காட்டிலும் மேலும் அழகான ஒன்றைக் கண்டுபிடிப்பதற்காக  என் கவனத்தை  திசை திருப்பிக் கொண்டிருக்கிறேன் ”.

ஐசக் நியூட்டன்

உள்ளொளியை மதித்துப் போற்றுவோம்!உயர, உயரப் போன எதுவும் ஓர் நாள் கீழே வந்தாக வேண்டும். கீழே வீழ்ந்ததும் ஓர் நாள் திரும்ப உயரும் காலமும் வரும்.  ஆனால் இது எப்போதும்  எல்லோருக்கும் தானாக நடக்கக் கூடியது அல்ல. பொருளாதார அடிப்படையில் நல்ல நேரங்களும், கெட்ட நேரங்களும், பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பற்ற நிலைகளும் யதார்த்தம். இருப்பினும் அறிவார்ந்த மக்கள் உயர்வு நிலையைக் கொண்டாடுவதுபோல தாழ்வு நிலையையும் கூட ஏற்றுக்கொள்ளத் தயங்குவதில்லை. எந்த ஒரு தொழிலும் சில காலங்கள் உச்சாணிக் கொம்பிலும், சில காலங்கள் சந்தையில் தாழ்வு நிலையிலும் இருப்பதைக் காண்கிறோம். பொதுவாக உயர்வான நிலையில் இருக்கும்போது எவருக்கும் மனதில் தாழ்வு நிலை வரக்கூடும் என்ற சந்தேகமே எழுவதேயில்லை. பங்குச் சந்தையில் அதிக முதலீடு செய்பவர்கள், அடிக்கடி இந்த அனுபவத்தைப் பெறக்கூடும்.  நம்மை மகிழ்ச்சியில் திளைக்கச் செய்யும் ஒவ்வொரு வெற்றியும், பல துன்பங்களின் மீது கட்டப்பட்டிருக்கலாமே தவிர அந்த துன்பங்களாலேயே ஆனது அல்ல என்பதே நிதர்சனம். ஒருவருக்கு பொருளாதாரப் பின்னடைவு என்பது எந்த நேரத்திலும் எழலாம். இது எத்துனைப் பெரிய தொழிலதிபர்களாக இருந்தாலும் தவிர்க்க முடியாத ஒன்று. இப்படிப்பட்ட ஆபத்துக் காலங்களிலும்  நம் வாழ்க்கை ஓட்டத்தைச் சீரமைக்கக்கூடிய ஒரு வரப்பிரசாதம் நம்முடனேயே இருந்து  நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கிறது. இந்த இயற்கை வரத்திற்கு ஏற்றவாரு நம் போக்குகளையும், சக்திகளையும், வெற்றிக்கான வாய்ப்புகளையும் அமைத்துக் கொள்வதால் பொருளாதாரம் ஏற்படுத்துகிற எந்த ஒரு சூழலையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் பெற்றுவிட முடியும். அப்படி ஒரு வழிகாட்டியாகச் செயல்படும் வல்லமை பெற்றதுதான் நம்முடைய உள்ளுணர்வு. இதன் அளவுகோளைக் கண்டுபிடிக்கும் எந்தவொரு இயந்திரமும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. 

Monday, May 27, 2013

குரங்கு மனம்
பவள சங்கரி  

"அருந்ததி, அம்மா சாப்பிட்டாங்களா? எங்கே ஆளையேக் காணோம்

இல்லப்பாஎங்கப்பா நேரத்துக்குச் சாப்பிடறாங்க..  என்ன சொன்னாலும் கேட்க மாட்டேங்கறாங்க. அழுதுகிட்டே இருக்காங்க. இன்னும் உங்கப்பா செத்த அதிர்ச்சியில இருந்து மீளவே இல்லை பாவம். நானும் எவ்வளவோ சமாதானம் சொல்லிப் பார்த்தேன். வேற என்ன செய்யிறதுன்னு தெரியல. நீ போய் பாரு ஜனா”.

கணவனும், மனைவியும் மாறி மாறி வருந்திக் கொண்டிருந்தனர். அப்பாவை  திடீரென்று இப்படி ஒரு விபத்து அள்ளிச் சென்றுவிடும் என்று கனவிலும் யாரும் நினைக்கவில்லை. இந்த அறுபது வயதிலும், வங்கி மேலாளர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்பும் கூட, தான் ஓய்ந்து உட்காராமல், ஸெராக்ஸ் மிஷின் மற்றும் கம்ப்யூட்டர் சென்ட்டரும் வைத்து நடத்திக்கொண்டிருந்தவர். அவருடைய சுறுசுறுப்பைப் பார்த்து  இளைஞர்களே பொறாமை கொள்ளும் அளவிற்கு அவர்தம் நடவடிக்கை இருந்தது அந்த ஆண்டவனுக்கேப் பொறுக்கவில்லை போலும். 15 வருடமாக தன்னோடு ஒட்டி உறவாடிய அந்த இரு சக்கர வாகனமே எமனாகிப் போனது. அப்படி ஒரு கோரமான விபத்தில் பாவம் மனிதர் அந்த இடத்திலேயே உயிரை விட்டுவிட்டார். மனைவியிடம், சீக்கிரம் வந்து டாக்டரிடம் கூட்டிச் செல்வதாகச் சொல்லிச் சென்றவர், வெகு சீக்கிரமே போன கையோடு, கருப்பு வண்டியில் வெள்ளைக் கட்டுகளுடன் வந்து சேர்ந்த போது மயங்கிச் சரிந்த மனைவி கௌரி இன்னும் முழுமையாகத் தெளியவே இல்லை. மகன் ஜனார்த்தனனும்மருமகளும் ஒரு குழந்தையைப் போல கௌரி அம்மாவை கவனித்துக் கொண்டதை அக்கம் பக்கத்தினர் பாராட்டாத நாளில்லை. நேர, நேரத்திற்கு  கட்டாயப்படுத்தி உணவு உண்ணச் செய்து, பெரும்பாலான நேரங்கள் கூடவே இருந்து ஆறுதலும் சொல்லி தேற்றிக் கொண்டிருந்தனர். கௌரியும் மற்ற மாமியார்கள் போல டிவியின் முன்னால் உட்கார்ந்து சீரியல் பார்த்துக்கொண்டு மருமகளை அதிகாரம் செய்து வேலை வாங்கும் வழக்கம் இல்லாதவள் ஆயிற்றே . வீட்டில் எல்லா வேலைகளையும் தானே இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வதோடு மருமகளையும், தன் மகளைப் போலவே, கண்ணே, பொன்னே என்று தலையில் தூக்கி வைத்துக்கொண்டல்லவா திரிந்தாள். இன்று அவளுக்கென்று ஒரு பெருந்துயரம் வந்தபோது தூணாகத் தாங்கி நிற்பதில் என்ன அதிசயம். திருமணம் ஆகி 12 வருடம் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாத மருமகளை இன்றுவரை ஒரு சொல்லேனும் சலிப்பாகப் பேசியவளில்லை. ஆண்டவன் செயல், நேரம் காலம் வரும்போது எல்லாம் தானாக நடக்கும் என்று பாடும் பழைய பஞ்சாங்கமாக இருக்காமல், மருமகளை கோயில் குளங்களுக்குக் கூட்டிச் செல்வதுடன், ஊரில் உள்ள நல்ல குழந்தைப் பேறு மருத்துவமனைகள் அனைத்திற்கும் கூட்டிச் செல்வாள். எந்த வகையிலும் மருமகள் மனம் தளராமல் தைரியம் சொல்லி பாதுகாப்பதில் தன் தாயை மிஞ்சியவள் மாமியார் என்பதில் அப்படி ஒரு பெருமை அருந்ததிக்கு. வயது ஏறிக்கொண்டே போவதால் இனி காத்திருந்து பயனில்லையென சோதனைக் குழாய் குழந்தை முயற்சிக்கலாம் என்று மகனையும், மருமகளையும் கட்டாயப்படுத்தி ஒப்புக்கொள்ள வைத்த இந்த நேரத்தில்தான் இப்படி பேரிடி தாக்கி, உறைந்துபோய் கிடக்கிறாள் கௌரி. தில்லியில் வேலை பார்க்கும் மகளும், மருமகனும்கூட அதிக நாள் லீவு போட்டு தங்க முடியாத சூழ்நிலையில், அம்மாவை அழைத்துக் கொண்டு போவதாகச் சொல்லியும், கணவன் வாழ்ந்த இடத்தைவிட்டு ஒரு அடிகூட எங்கும் நகர மாட்டேன் என்று பிடிவாதமாக இருக்கும் தாயை அனுப்ப மகனும் தயாராக இல்லைநடந்ததை ஏற்றுக் கொள்ளும் பக்குவமே இல்லாமல் துவண்டு போய் கிடக்கும் மாமியாரைத் தேற்றுவதற்கு தன்னால் ஆன அனைத்தும் செய்து கொண்டிருந்தாள் அருந்ததி. இந்த நேரத்தில்தான், அவளுக்கும் குழந்தைபேறு உண்டாகி வாந்தி மயக்கம் என வர ஆரம்பித்திருந்ததால் மெல்ல தன்னைத் தேற்றிக் கொண்டு தன் கணவனே குழந்தை உருவில் வரப்போவதாக நம்பிக் கொண்டு  மருமகளை கவனிக்க ஆரம்பித்திருந்தாலும், முகத்தில் பழைய உற்சாகம் சுத்தமாக இல்லை.