Monday, September 24, 2012

வினை தீர்க்கும் விநாயகர்


பவள சங்கரி

 இந்த முறை விநாயகர் சதுர்த்தி வழக்கம் போலவே மிகச்சிறப்பாக கொண்டாடினோம். விநாயகரை வணங்கும்போது நம் நினைவிற்கு வரவேண்டிய இன்னொருவர் அவ்வையார். 


இளம் வயது முதல் அன்றாட வழிபாட்டில் பொருள் அறியாமலே பாடிவந்த விநாயகர் அகவல். ஒரு குறிப்பிட்ட வயதில் பொருள் உணர்ந்து பாடும் போது ஒவ்வொரு வரியும் பிரம்மிப்பைக் கொடுத்தது உண்மை. சித்தாந்தக் கருத்துகளின் சாரமாக விளங்குவது விநாயகர் அகவல் என்று ஆன்றோர் சொன்னதன் பொருளும் விளங்க ஆரம்பித்தது. இளமை முதல் அசை போட்டதின் விளைவு  விநாயகர் அகவலின் ஞான வாசல்கள் மெல்ல மெல்லத் திறக்க ஆரம்பித்தபோது பெற்ற அந்த பரவசநிலை சொல்லில் அடங்காது. தத்துவ வாழ்வின் வாசல்களுக்கு வழியமைத்துக்கொடுக்க வல்லது விநாயகர் அகவல் என்பதை உணரச் செய்தது. நம்பியாண்டார் நம்பிகள் வாழ்ந்த 516ம் நூற்றாண்டு காலங்களிலேயே பொல்லாப் பிள்ளையார் தமக்கு அருளிய வரலாறு மூலமாக, விநாயகப் பெருமானை ஆதி காலந்தொட்டே வழிபட்டு வந்திருப்பது அறிய முடிகிறது. எந்த சிற்பமோ அன்றி படமோ, எதுவும் இல்லாமலே கூட மிக எளிமையாக அன்றாடம் வீட்டில் பயன்படுத்தும் மஞ்சள் தூள் கொண்டே பிள்ளையார் பிடித்து வைத்து அவரை எழுந்தருளச் செய்து மன நிறைவுடன் வணங்க முடியும். அதனாலேயே விநாயகர் நம்மோடு ஒன்றிய தெய்வமாகிவிடுகிறார்.