Saturday, March 16, 2019

அன்பெனும் சிறைக்குள்




மகாகவி பாரதியின் இறுதி சொற்பொழிவு நிகழ்ந்த எங்கள் ஈரோடை மாநகர கருங்கல்பாளையம் நூலகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உலக புத்தக தினம் நிகழ்வில் சிறப்புரையாற்ற கலந்து கொண்டபோது நூலகத்திற்கு என்னுடைய சில நூல்களை காணிக்கையாகச் செலுத்தி வந்தேன். அதில் ஒரு சிறுகதைத் தொகுப்பை வாசித்து புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் ஒரு புலனக் குழுவில் அந்த நூலகத்தின் பொறுப்பாளர் அன்புத் தோழி சர்மிளா அவர்கள் மதிப்புரை வழங்கியிருக்கிறார்கள். 



அதனை பதிவேற்றமும் செய்து எனக்கு அனுப்பி மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளவருக்கு என் அன்பார்ந்த நன்றி. கிட்டத்தட்ட  120 சிறுகதைகள், 4 தொகுப்புகளாக வெளிவந்தன. சிறுகதை எழுதி வெகுநாட்கள் ஆகிவிட்டன என்பதையும் நினைவூட்டி மீண்டும் எழுதவும் தூண்டுகிறது இவருடைய உற்சாகமான வாழ்த்து.. மீண்டும் நன்றி தோழி. ஒரு 3 நிமிடம் தான்..  கேட்டுப்பாருங்களேன் ..

Thursday, March 14, 2019

நெஞ்சு பொறுக்குதில்லையே!





அண்ணா நம்பித்தானே வந்தேன் ..   ஏன் இப்படி .... 


ஏன் இந்த அலறல்? படித்த பெண்கள், பணியில் உள்ள பெண்கள், மருத்துவர்கள் என்று பல தரப்பட்ட பெண்களும் எப்படி இந்தக் கயவர்களிடம் சிக்குகிறார்கள்? இந்தக் கயவர்களின் இலக்கு என்ன? சிந்தியுங்கள் தோழமைகளே! பொள்ளாச்சி சம்பவம் ஒரு மாதிரிதான். இது போன்று எல்லா இடங்களிலும்தான் நடந்து கொண்டிருக்கின்றன. ஏன் வெளியில் வருவதில்லை? இந்தக் கயவர்களின் தேர்வே இவர்களின் பலம். சமூகக் கட்டுப்பாடும், மான, அவமானத்திற்கு அஞ்சி நடுங்கும் பெண்களையே குறிவைத்து வலை விரிப்பது. தனக்கு நேரும் கொடுமை வெளியில் தெரிந்தால் குடும்பத்திற்கு மானக்கேடு, பெற்றோர் எப்படி இதை எடுத்துக்கொள்வார்களோ என்ற அச்சம் என்று எதையும் வெளியில் சொல்ல மாட்டார்கள் என்பதை நன்றாக அறிந்துகொண்டு திட்டமிடுகிறார்கள். பழமைவாதம், நாகரிகம் என்ற இரு வேறு எல்லைகளின் இடையிலான மெல்லிய புள்ளியில் உழலும் பரிதாபமான சீவன்கள் இவர்கள். மெல்ல மெல்ல, பல நேரங்களில் பெற்றோருடன் போராடி, கல்வி கற்று சாதிக்க வேண்டும் என்ற பேரார்வத்துடன் வெளியில் வரும் இவர்களை பசப்பு வார்த்தைகளைக் கூறி, தேவையில்லாத, அளவிற்கு அதிகமான புகழ்ச்சிகள், வர்ணனைகள் என்று அவர்களை ஒரு போதை நிலைக்கு அடிமையாக்கித் தமது வலையில் சிக்க வைக்கிறார்கள். இதற்குப்பின் ஒரு பெரிய நெட் ஒர்க்கே வேலை செய்யலாம். பல காரணங்களுக்காகத் திட்டமிட்டு செயல்படும் இந்த கயவாளிக் கூட்டம் தங்கள் குடும்பத்தை மட்டும் பாதுகாப்பாக வைத்துக்கொள்வார்கள் போலும். ஏதாவது பணமுடிப்போ, விருதோ, பாராட்டுப் பத்திரமோ வாங்கிக்கொண்டு இதற்கு ஒத்து ஊதும் பிரபலங்களும், இதன் பின் விளைவுகள் பற்றியோ, நடக்கும் கொடுமைகள் பற்றியோ எதையும் கண்டுகொள்வதில்லை. தலைவலியும், காய்ச்சலும் தனக்கு வந்தால்தானே தெரியும் வேதனை..  இந்தப் பிரபலங்களின் சொற்களை வேத வாக்காக நம்பும் சிலரும் கண்ணை மூடிக்கொண்டு மாட்டிக்கொள்கிறார்கள் என்பதைப் பற்றியெல்லாம் அவர்கள் சிந்திப்பார்களா என்றே தெரியவில்லை. இவர்களே இப்படியென்றால் கைக்கூலிகளாகச் செயல்படுபவர்களைப் பற்றி கேட்கவா வேண்டும். ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்று கொண்டாடிவிட மாட்டார்களா? 


இதற்கெல்லாம் தீர்வு என்ன? பெற்றோர்களே உங்கள் குழந்தைகளுக்கு நல்ல விசயங்களை சொல்லிக்கொடுக்க நேரம் ஒதுக்குங்கள். தெய்வம் நின்று கொல்லும் என்று காத்திருக்கும் காலத்தில் கயவர்கள் வேகமாக அழிவை ஏற்படுத்திவிடுவார்கள் என்பதைப் புரிய வைத்துவிடுங்கள். தற்காப்புக் கலையைக் கற்றுக்கொடுங்கள். பெண்களுக்கான பாதுகாப்புச் சட்டங்கள் குறித்த விழிப்புணர்வைக் கொண்டிருங்கள். பெண் குழந்தைகளுக்கு கட்டாயம் துணிவையும், நம்பிக்கையையும் ஊட்டி வளர்க்கத் தயங்காதீர்கள். தவறு நடப்பதற்கு முன் தற்காத்துக் கொள்ளவும்,  அதற்கும் மீறி தவறு நடந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும், அதிலிருந்து எப்படி மீண்டு வரவேண்டும், துணிவே துணையாகக் கொண்டு போராடவும் குழந்தைகளுக்குக் கட்டாயம் அறிவுறுத்துங்கள். குழந்தைகளை முடங்கிப்போக விடவும் கூடாது என்பதிலும் தெளிவாக இருங்கள்! எந்தப் புற்றில் எந்த பாம்பு இருக்கும் என்று தெரியாத நிலையில் எவரிடமும் எல்லையின்றி பழகுவதைத் தவிர்த்து விடுங்கள். பெரிய மனிதர்கள் என்று நம்பி அனுமதிக்கப்படுபவர்கள், பெற்றோர்களிடம் பழகுவதுகூட குடும்பத்தில் உள்ள இளம் பெண்களைக் குறிவைத்தும் கூட இருக்கலாம் என்பதை உணருங்கள். எச்சரிக்கையாக இருங்க வேண்டிய காலகட்டம் என்பதை உணருங்கள்.