Showing posts with label கவிதை.. Show all posts
Showing posts with label கவிதை.. Show all posts

Monday, November 14, 2016

குழந்தைகள் தினம்!







அன்பு மலர்களே!
கவின்மிகு வனங்களே!
தொட்டால் சிணுங்கியாகிறாய்
அழகு வண்ணம் காட்டி
வலை வீசிமகிழ்கிறாய்!
குயிலின் குரலில் மதிமயக்கி
நினைவிழக்கச் செய்கிறாய்!
மயிலின் ஒயிலாய் வலம்வந்து
வாஞ்சை சேர்க்கிறாய்!
கனிந்த பார்வையில் கல்லையும்
கற்கண்டாய் ஆக்குகிறாய்!
இருண்ட வானில் இனிமையாய்
ஒளி பாய்ச்சுகிறாய்!
திரண்ட மேகமாய் நிறைந்து
நீர் வார்க்கிறாய்!
பனிமழையோ பகல்நிலவோ
பட்டொளிவீசி நிற்கிறாய்!
விழியின் அசைவில் வித்தாகி
விதியின் விருட்சமாகிறாய்!
பாடும் பறவையோ பசுவின்மடியோ
பரவசமாய் நேசமாகிறாய்!
பசுந்தளிராய் பக்கமிருந்து பரிவாய்
பூத்துக் குலுங்கி பசப்புகிறாய்!
புன்னகையெனும் கிரீடம் சூடி
புவியின் புத்தொளியாகிறாய்!
ஆயிரமாயிரம் காலம் ஆருயிராய்
ஆனந்தம்பாடி வாழ்வீர்நீவிர்!!

Thursday, March 26, 2015

ஈடில்லா ஈசன்!


பவள சங்கரி




திருவடிச் சதங்கை ஜல் ஜல்லென்று சிணுங்க
அருள்வடிவான அன்னை ஆடிவரும் வேளை
கருவறையில் கற்பகமாய் காட்சியளித்து
அருமறைகள் தானருளி வேதப்பொருளானாளே!!! 


பழமைக்கோலம்  பரிதியின் தவம்
புதுமையில் புகுந்தால் புவிநாசம்
பழமையும் புதுமையும் பரிதிக்கேது
சுட்டெரிக்கும் சூதையும் சூழ்வினையையும்!!



அர்த்தநாரியாய் ஆருத்ரனாய் ஆதவனாய்
இடுகாட்டு நாயகனாய் இகம்பர அதிபதியாய்
ஈரேழுலகின் ஈடில்லா ஈசனான ஞானியே
ஊழிமுதல்வனாய் உருத்திரனாய் உறைவோனே!!!




                                                                  

Saturday, June 14, 2014

தந்தை ஒரு சீனத்துச் சுவர்!

பவள சங்கரி





தந்தை ஒரு சீனத்துச் சுவர்
வெறும் கற்களாலான சுவரல்ல
இரும்புக் கோட்டை அமைத்த சுவர்
வீசும் புயலும் தகிக்கும் தீக்கனலும்
அண்டவிடாது  அடைகாப்பவன்
குருதியை வியர்வையாக்கிப் பாசமாய்
வளர்ப்பவன். 

Friday, October 18, 2013

ஆனந்தக் கூத்து!


பவள சங்கரி



அண்டமெனும் ஆலயமதில் ஆனந்தக்கூத்தாடுகிறான்
பிண்டமாய்ப்போகும் ஊனுடம்பும் ஆலயம்தான்
அண்டமும் பிண்டமும் ஆனந்தத்தின் ஆணிவேர்
கொண்டதும் கொடுத்ததும் ஞானக்கூத்துவனின் இச்சை

இடகலை பிங்கலை சுழிமுனைகளின் இம்சையால்
மடமாந்தர் படும்துயர் பரமனவன் பார்வையால்
நடனமாடும் நாதமாய் நசுக்கிய முயலகனாய்
படமெடுத்து ஆடும் பாவவினைகள் பற்றறுத்துப்போகுமே!

Tuesday, July 10, 2012

வாழ்க்கைப் படகு!




கடலோடா கால்வால் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து.
இடன் அறிதல் - குறள் (496)

கடலலையினூடே தோணியும்
மன அலையினூடே வாழ்வும்
அலங்காரத் தேராய் அற்புதமாய்
வளையவரும் இனிய காட்சிகள்

சூறாவளியாய் சுழட்டியடித்து
புரட்டிப்போடும் வீச்சில் ஆழிக்கொடியும்
ஆழிவித்தும் ஆழ்ந்துபோகும்
ஆழும்பாழாய் ஆகிப்போகும்.

ஆழ்வான் கண்ட அல்லியாய்
சூழ்வான் இல்லாச் சுடரொளியாய்
ஆழ்வார் கன்மியாய் அகம் குளிர
ஆவேலியிலும் ஆழியான் வண்ணம்
காணும்பேறு பெற்று ஆவல்லியாய்
அவனைச் சூழ்ந்து தென்றல் வீசும்
சோலையில் சுகமாய் தவமிருந்து
அமைதியினூடே இனியதொரு பயணம்!
காட்சிப்பிழையில்லாத சுகமானபயணம்!

படத்திற்கு நன்றி:

Saturday, June 30, 2012

முதிதை


முற்றும் துறந்த முனிவராயினும்
பட்டமரம் துளிர்ப்பதில்லை
படுத்த உடல் எழுவதில்லை

கலந்தை கொள்ளும் பேரறிவாளராயினும்
கறந்தபால் மடி புகுவதில்லை
முதிர்ந்த இளமை திரும்புவதில்லை

பற்று நிறைந்த பாவையராயினும்
மலர்ந்த மலர் மொட்டாவதில்லை
கனிந்த கனி காயாவதில்லை

சத்தியம் காக்கும் மகாத்மாவாயினும்
சொன்ன சொல் மறைவதில்லை
இருந்தும் பேசாமடந்தையாயில்லை

முனிவரும் இல்லை முதிதையும் இல்லை
என்னுள் இருக்கும் அனைத்துமாய் யான்

மனிதரைப் படைத்தவனும் கடவுள்
கடவுளரைப் படைத்த மனிதனும் கடவுள்

கடவுளும், கடவுளும் ஆழிப்பேரலையில்
கலந்தனர் ஒன்றாய் சுனாமியால்!
கடவுளும், கடவுளும் முதிதையில்

கண்ணும் கருத்தும் கருணையில்
முதிதையும் முற்றிய நிலையில்
கடவுளாய் மனிதரும் மனமுவந்து
கடவுளையும் படைத்து கால
ஓட்டத்தையும் கட்டுப்பாட்டுக்குள்
நிலைக்கச் செய்து சரித்திரமும்
படைக்கச் செய்தாய் பதவிசாய்!







Saturday, June 2, 2012

எளிமையும்.. வலிமையும்!


ஒருபிடி சோற்றுக்கு
ஒருநூறு காக்கைகள்
ஓரொரு பருக்கையாய்
ஓடிஓடி கொரிக்க
கூடிக்கூடி சமத்துவமும்
பாடிப்பாடி தத்துவமும்
நாடிநாடி களித்திருக்க
கோடிக்கோடி தானியங்களைக்
குடைந்து குடைந்து
குதூகலமாய் சேகரித்து
குற்றேவல் புரியும்
குழுவிற்கும் சிறுபங்கிட்டு
திருப்தியாய் கொண்டாடி
திட்டமிட்டு சிலம்பாடி
திருவாசகமாய் மலர்ந்தருளி
கனிரசமாய் கற்கண்டாய்
கருத்துகள் பரிமாறி
கசப்பையும் கச்சிதமாய்
உவர்ப்பையும் உற்சாகமாய்
உரைப்பையும் உறுதியாய்
உல்லாசமாய் உடமையாக்கி
பச்சைப்பொய்கள் பலபேசி
பச்சைக்கிளியின் முகமூடியில்
பகட்டாய்த் திரியும்
பருந்துக் கூட்டம்!

in and out chennai publication: Thankyou.

Sunday, May 13, 2012

உம் கருவறையே எம் கல்லறையாய்!




ஒரு கூட்டுக் கிளியாக
ஒரு சோலை மலராக

பழமுதிர்ச்சோலைதனில் குளுமையாய்
கூடிக்களித்திருந்த காலம்

ராகம் சரியானதுதான்
தாளம்தான் தப்பானது.

பிரியாத வரம் வேண்டி
பொய்யாக கவி பாடினேன்

சலியாத மனம் நாடி
சத்தியமாய் தவமிருந்தேன்

ப்ழியும் பாவமும் பரிவோடு
முழியும் நகையும் கனிவோடு

வெட்கமும் துக்கமும் துணையாக
வெறியோடு கதைபல படித்தேன்

பரிபாடலும் சங்கப்பாடலும் சங்கமிக்கும்
கலையும் கருத்தாய் நாடகமாடினேன்

சொற்சுவையும் பொருட்சுவையும் சேர்த்தே
சமைத்தேன் சத்தான இலக்கியத்தை

தீதும் நன்றும் பிறர்தர வாராது
மோதும் முடிவும் முனைந்தேன்

கல்லைக் கனியாக்கும் சொல்லை
பல்லைக் காட்டிப் பரிசளித்தேன்

பரிசும் பாராட்டும் தாராளமாய்
பகிர்ந்தளித்தேன் பசப்பு வார்த்தைகளினூடே

பட்டையும் பகட்டையும் பாந்தமாய்
பரப்பினேன் பாசமெனும் பகடையாய்

கருவும் உருவும் ஈந்தாய்
வேரும் விழுதும் விருட்சமாய்

தாலாட்டும் தனிப்பாட்டும் அளித்தேன்
தங்கமான என் செல்லச்சிட்டுக்கு

பாசமும் நேசமும் பன்மடங்காய்
பகிராமல் பெருகியது பதவிசாய்

சிறகுவிரித்து கூட்டைப் பிரிந்து
இடம்பெயர்வின் இனிய தருணம்

சுயமும் சுகமும் சுவையாய்
படர்ந்த விருட்சமே உறவாய்

பாசப்பங்கீட்டில் நேசவெளியீட்டில்
துரும்பாய் சுருங்கிய துரோகம்

சுருங்கிய சாபமும் வரமாய்
சுவைத்தே வாழ்த்திய உத்தமம்

எம் உயிருக்கு மூலமாய்
உம் உயிராய் எமைக்காத்த

ஓருயிராய் உள்ளொளி பெருக்கி
காரிருளையும் கனிவாய் ஏற்றாய்

தனிமரமாய் வாடி நின்றாலும்
கனிமரமாய் பாடி வாழ்த்துகிறாய்

கைம்மாறு கருதா கடப்பாடு
கட்டவிழ்ந்த கருணை வெளிப்பாடு

தாலாட்டும் சோறூட்டும் தொடர்ந்தே
மடியும் மனமும் ஏந்தியே

காத்து நிற்கும் வரமாய்
பூத்து நிற்கும் உயிரே

எமை மீண்டும் அனுமதிப்பாயா
உம் கருவறைக்குள்?




Monday, March 19, 2012

அக்கக்கூ.......


அக்கக்கூ… அக்கக்கூ….. அக்கக்கூ…..


களத்து மேட்டில் கானாங்குருவி ஒன்னு
கசிந்துருகி காதலனின் வரவிற்காய்
தவமிருக்க, திசைமாறிய புள்ளது
பேசிய மொழிகள் பலவும்
சிந்தையை நிறைத்து பேதலித்த
புத்தியும் நொந்த மனமும்
கொண்ட பேதை அவள்
நட்ட கல்லாய் நலிந்து நிற்க
ஆம்பி பூத்த வரப்பதனில்
ஆனந்தமாய் காகலூகம் ஒன்னு
கருத்தாய் கதைபாடி சேதிசொல்ல
ஆம்பரியமாய்க் கண்டதும் பற்றிக் கொள்ளும்
மானுடக் காதலது விட்டவுடன்
தொற்றிக் கொள்ளும் மற்றுமொரு துணையை!
புள்ளின் இனமோ தனிமையில் வாடினாலும்
துணைவேறு நாடாமல் கொண்டவனின்
வரவுக்காய் காலமெல்லாம் காத்துக்கிடக்கும்!
மண்ணில் உய்ர்ந்த புள்ளின் இனமது!
கண்ணில் நீராய் உள்ளம் நிறைக்குமது!
அக்கக்கூ… அக்கக்கூ… அக்கக்கூ…..
படங்களுக்கு நன்றி :

நன்றி : வல்லமை

Monday, March 5, 2012

கந்திற் பாவை

பவள சங்கரி
உரித்து வைத்த சட்டையும்
பளபளப்பாய்த்தான்
இருக்கிறது.
சட்டை இல்லாத
நிர்வாணமும்
பாரமற்ற சுகம்தானே.
எளிமையாய் இருப்பதால்
வலிமை இல்லாத
சடமாய் ஆகிவிடவில்லை.
இறக்கி வைத்த பாரம்
எளிதாக்கிவிட்டது
உள்ளதையும், உள்ளத்தையும்.
தோற்றத்தில் பகட்டு இருந்தாலும்
பகட்டு இல்லாத தோற்றமும்
அழகாய்த்தானே இருக்கிறது?
சிறகே ஒரு சுமையானபோது
போதிதந்த ஞானமாய்
புத்தி வந்தது.
புத்தி வந்த நேரம்
ஆணவமலம்
அறவே ஒழிந்தது!

படத்திற்கு நன்றி : http://www.gardenornaments.com/ItalPark/Statues/469.jpg
நன்றி : வல்லமை.

Tuesday, December 13, 2011

எண்ணங்களும், வண்ணங்களும்


எண்ணங்கள் காட்டும் வண்ணங்கள்!
வெண்மையும் செம்மையும் காவியம்!
பசுமையும் செம்மையும் ஓவியம்!
இயற்கையும் இனிமையும் இதம்!
இசையும் நாதமும் சுகம்!
இலையும் தளையும் பக்குவம்!
சருகும் துளிரும் நித்தியம்!
மனமும் குணமும் அநித்தியம்!

Tuesday, October 18, 2011

வாழ்க்கை ஓடம்!

அலையினூடே உயர்ந்து தாழ்ந்து வாழ்க்கை ஓடமாய்
உயர்வை நோக்கி உன்னத கீதமாய் ஒலியூட்டி
தாழ்வின் நீட்சியிலும் நித்சலமான நீரோட்டமாய்.......
மால்வண்ணனின் அருள் பனித்துளியாய் பட்டொளி வீச
கார்முகில் களிநடம் புரியும் கனன்ற பொழுதுகளிலும்
பால்வண்ண நிலவொளியின் இலையுதிர் பருவமதில்
புள்ளினக் கூட்டமொன்று புதுமலர் காண மனம்நாடி
கருத்தாய் கதைப்பல பேசி நாடுவிட்டு காடுதேடி
வகையாய் வண்ணம் கண்டு குதூகலம் கொண்டு
இன்பமாய் இனிமையாய் இலக்கியமாய் இதமாய் ..............

Thursday, July 28, 2011

சூர்யோதயம்!






ஒளி பிறந்தது
மலர் மலர்ந்தது
இருள் மறைந்தது!

அறிவெனும் சுடராய் ஒளிர்வாய் - ஆதவனாய்!
பயிரெனப் பணிவாய் நிறைவினால் - சூரியனாய்!
நிதியென நிறைந்திருப்பாய் உளந்தனில் - ஸ்ரீமானாய்!

கருவாய் என்னுள் மலர்வாய் - கிரிகேஸ்வரனே!!
இணைவாய் எனதாருயினினில் - ஞாயிரோனே!!
கணைவாய் கருமை இருளை - கதிரோனே!
எழுவாய் கடல் மீதினிலே - பாஸ்கரனே!
தொழுவாய் மனமே உதயத்தினிலே - விகாதனனே!
இதயத் தாமரையாய் மலர்வாய் - மார்த்தாண்டனே!
துணையாய் நிற்பாய் துதிப்போருக்கு - திரிலோகனே!
பார்க்கும் திசையெல்லாம் பரிமளிப்பாய் - பிரம்மனே!
குன்றினிருந்தும் கிரணமாய் ஒளிர்வாய் - லோகப்பிரகாசனே!

Saturday, June 25, 2011

அழகில் தியானம்


அழகில் தியானம்

பசுமையில் ஒரு தெளிவு
வெண்மையில் ஒரு அமைதி
தனிமையில் ஒரு இனிமை
அழகில் வரும் நிறைவு
தியானம் ஒரு தெய்வீகம்!

Friday, January 7, 2011

காதல் சின்னம்.


காதல் சின்னம்

அற்றைத் திங்களின்
அற்புத நிலவொளியில்
அரசனின் அந்தப்புரத்தின்
அரசனையில் அழகுப் பதுமையாய்
அன்பு மனம் கலந்திருந்த
அரிதான தருணமதில்
அட்சர சுத்தமாய்
அன்புக் கட்டளையிட்டாள்
அரியணைப் பதுமையாம் மும்தாசு.

இற்றைத் திங்களில்
இந் நிலவொளியில்
இம்மையில் இனியும்
இச்சை கொண்டொரு
இல்லாளை வேண்டாமல்
இவ்விரண்டு மக்களையும்
இன்பமுற வாழ வழி செய்து
இந்நிலையை காலம் முற்றும்
இப்புவியுலக காதலர் அனைவரும்
இறுமாப்புடன் நிமிந்து நோக்கும் வண்ணம்
இசைபட பளிங்கு மாளிகையது அமைத்து
இச்சகத்து மாந்தரும் இன்பம் பெற
இணையிலாதொரு காதல் சின்னம் அமைக்கவே

ஓம்காரமாய் ஓங்கி ஒலிக்குதொரு
ஒய்யார மண்டபம் ஒயிலாய்
ஒத்த மனமுடைய மனிதரையும்
ஒண்ணாய் உயிர் சேர்க்கச் செய்கிறது
ஒருமையாய் ஓய்ந்து போன உள்ளமும்
ஒத்தாரை உறவோடு ஏற்றுக் கொள்ளும்
ஒப்புயர்வில்லா உன்னத நிலையையும்
ஒருகாலும் மாறாத அன்பையும்
ஓங்கி உலகளந்த உத்தமன்
ஓம்கார நாதனின் தண்ணளி வீசி
ஓங்கி உயர்ந்து நிற்கும் மாமலையாமே!!

காகத்தின் நுண்ணறிவு!

  காக்கை நாம் அன்றாடம் பார்க்கிற பறவை. ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பது நாம் இயல்பாகப் பயன்படுத்தும் பழமொழி. நாங்கள் அன்றாடம் கா...