Showing posts with label கட்டுரை - வல்லமை பிரசுரம். Show all posts
Showing posts with label கட்டுரை - வல்லமை பிரசுரம். Show all posts

Thursday, February 23, 2017

அருள்மிகு குருநாதசுவாமி திருக்கோயில்



புதுப்பாளையம், அந்தியூர்

guru

தமிழ்நாடு –  ஈரோடு மாவட்டம், அந்தியூரில் புதுப்பாளையம் எனும் இடத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு குருநாதசுவாமி ஆலயம் அமைந்துள்ளது. மிக வித்தியாசமான முறையில் அமைந்திருக்கும் தெய்வத் திருமேனிகள் காண்போரை தம் வசமிழக்கச் செய்வது நிதர்சனம். இக்கோவில், ஈரோடு மாவட்டம் , அந்தியூரிலிருந்து வடக்கே 2 கிலோ மீட்டர் தொலைவில் மேற்கு மலைத் தொடரின் அருகில் மிக  அமைதியானதொரு சூழலில் அமைந்துள்ளது.   பாண்டிய மன்னர்களின் ஒரு குறு நில மன்னனால்  கற்கோவில் கட்டி வைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

Saturday, December 24, 2016

அடியாரேயாயினும் உழைப்போரே உன்னதம் பெறுவர்!


பவள சங்கரி
appar_thirunavukkarasar-95x300ஞானசம்பந்தப்பெருமானும், அப்பர் பெருமானும் ஏழாம் நூற்றாண்டின் இடையில் சமக்காலத்தில் வாழ்ந்த திருத்தொண்டர்கள். இவர்கள் இறை வழிபாட்டிற்காக திருவீழிமிழலையில் தங்கியிருந்த காலத்தில் அந்த நாட்டில், மழையின்மைக் காரணமாக பெரும் பஞ்சம் ஏற்பட்டு, உயிர்கள் அனைத்தும் பசியால் வாடி வருந்தியிருந்தன. அடியார்களும் துயர்மிக உற்ற நிலையில் ஆண்டவனிடம் முறையிட்டு வேண்டினர். இதனையறிந்த திருஞானசம்பந்தப்பிள்ளையார், `கண்ணுதலான் திருநீற்றுச் சார்வினோர்க்கும் கவலை வருமோ?’ என்று மனம் நொந்தவாறே, இறைவனை நினைந்துறுகியவாறே உறங்கச் செல்கிறார். எம்பெருமானார் பிள்ளையின் துயர் பொறுக்கவில்லை போலும்! அவர்தம் கனவில் தோன்றி, மக்கள், மாக்கள் துயர் தீர்க்கும்பொருட்டு ஆலயத்தில் உள்ள கிழக்கு, மேற்கு பலிபீடங்களில் இருவருக்கும் பொற்காசுகள் அளித்துள்ளதாகக் கூறுகிறார். விழித்தெழுந்த ஞானசம்பந்தப்பெருமான், அப்பரடிகளையும் உடன் அழைத்துக்கொண்டு ஆண்டவன் அருளியவாறு பலிபீடம் நோக்கிச்செல்கிறார். கிழக்கு பலிபீடத்தில் சம்பந்தப்பெருமானும், மேற்குப் பலிபீடத்தில் அப்பர் பெருமானும் காசு பெற்று உயிரினங்களின் துயர் துடைக்க மேவுகிறார்கள். அவரவர் திருமடங்களுக்குச் சென்று அடியவர்களுக்கும் அமுதளிக்க விரைகின்றனர். இங்குதான் வினை விடுபடுகிறது. அப்பர் பெருமானின் திருமடத்தில் விரைவாகவும், சம்பந்தப்பெருமானின் திருமடத்தில் காலம் தாழ்ந்தும் திருவமுது அளிக்கப்படுகிறது. இதையறிந்த சம்பந்தப்பிள்ளையார் அதற்குரிய பொறுப்பாளர்களை அழைத்து காரணம் வினவுகிறார். அவர்களும், சம்பந்தப்பெருமானின் பொற்காசுகள் மாற்று குறைந்ததாக இருந்ததால் அதனை மாற்றி பொருட்கள் பெறுவதில் தாமதம் ஏற்படுவதே காரணம் என்று கூறுகிறார். ஓய்வின்றி உழவாரப்பணி செய்து நொந்து போயிருக்கும் அப்பர் பெருமானாருக்கு மேலும் துன்பம் நேரக்கூடாது என்றுதானோ நல்ல காசுகளை அளித்துள்ளார் எம்பெருமானார் என்று உணர்ந்த சம்பந்தப்பிள்ளையார் மறுநாள் ஆலயம் சென்று `வாசிதீரவே காசு நல்குவீர்` என்ற கீழ்கண்ட திருப்பதிகம் பாடி இறைவனை மனம் குளிரச்செய்து தாமும் நற்காசினைப்பெற்று அடியார்களுக்கு விரைவில் தக்க சமயத்தில் உணவளித்து மகிழ்வித்து தாமும் மனமகிழ்ந்தார். இறையருளால் சில நாட்களிலேயே மழைவளம் பெற்று நாடும் செழித்து, பஞ்சமும் நீங்கி, மக்களும் நலமாக வாழ்ந்தனர்.
வாசிதீரவே, காசு நல்குவீர்;sambandhar1
மாசுஇல் மிழலையீர்; ஏசல் இல்லையே
இறைவர் ஆயினீர்; மறைகொள் மிழலையீர்;
கறைகொள் காசினை, முறைமை நல்குமே
செய்யமேனியீர்; மெய்கொள் மிழலையீர்;
பைகொள் அரவினீர்;உய்ய நல்குமே
நீறு பூசினீர்; ஏறு அது ஏறினீர்;
கூறு மிழலையீர்;பேறும் அருளுமே
காமன்வேவ, ஓர் தூமக் கண்ணினீர்;
நாம மிழலையீர்; சேமம் நல்குமே
பிணிகொள் சடையினீர்; மணிகொள் மிடறினீர்;
அணிகொள் மிழலையீர்; பணிகொண்டு அருளுமே
மங்கை பங்கினீர்; துங்க மிழலையீர்;
கங்கை முடியினீர்; சங்கை தவிர்மினே
அரக்கன் நெரிதர, இரக்கம் எய்தினீர்;
பரக்கும் மிழலையீர்; கரக்கை தவிர்மினே
அயனும் மாலுமாய் முயலும் முடியினீர்;
இயலும் மிழலையீர்; பயனும் அருளுமே
பறிகொள் தலையினார், அறிவது அறிகிலார்;
வெறிகொள் மிழலையீர்; பிரிவது அரியதே
காழிமா நகர் வாழி சம்பந்தன்,
வீழிமிழலை மேல், தாழும் மொழிகளே
பி.கு. செய்தொழில்களில் இலாபம் பெருகுவதற்கும், கடினமான வழக்குகளிலும் வெற்றி பெறுவதற்கும் ஓதவேண்டிய பதிகம் இது!
http://www.vallamai.com/?p=74118

Wednesday, January 25, 2012

தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா…?

பவள சங்கரி

அன்பு நண்பர்களே,

இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்!

நம் இந்தியத் திரு நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிரையும் ஈந்து, தம் சந்ததியினர் சுதந்திரக் காற்றைச் சுகமாக சுவாசித்து நல் வாழ்வு வாழ அரும் பெரும் தியாகங்கள் செய்த நல் உள்ளங்கள் எத்தனையோ! அவர்களை இந்நன்னாளில் நினைவு கூர்ந்து, நன்றி பாராட்டுவது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். அந்த வகையில் ஓடியாடி விளையாடி, உல்லாசமாக இருக்கக் கூடிய பதின்மப் பருவத்தில் , தாய்த்திரு நாட்டின் மீது கொண்ட பற்றின் காரணமாக , சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டு , ஆங்கிலேயர்களால், நரக வேதனையை அனுபவித்ததோடு, அவ்வினிய பதின்மப் பருவத்திலேயே தம் இன்னுயிரையும் ஈந்த உத்தமப் பிறவியாம் தில்லையாடி வள்ளியம்மையைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதில் ஆறுதல் அடையலாம் அல்லவா?

தண்ணீர் விட்டா வளர்த்தோம் ? சர்வேசா! இப்பயிரைக்
கண்ணீரால் காத்தோம்! .. (சுதந்திரப் பயிர்)
பஞ்சமும் நோயும் நின் மெய்யடி யார்க்கோ ?
பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ ?
சுதந்திர தாகம்)
விண்ணில் இரவிதனை விட்டுவிட்டு எவரும்போய்
மின்மினி கொள்வாரோ ? ….
மண்ணில் இன்பங்களை விரும்பிச் சுதந்திரத்தின்
மாண்பினை இழப்பாரோ ?
(சுதந்திரப் பெருமை)

மகாகவி பாரதியார்

தில்லையாடி வள்ளியம்மை – (1898 – 1914)

ஒருவர் எவ்வளவு காலம் வாழ்ந்தார் என்பது சாதனை அல்ல, வாழ்ந்த காலத்தில் என்ன சாதித்தார் என்பதே சரித்திரம் ஆகிறது. அந்த வகையில் தான் வாழ்ந்த மிகக் குறைந்த 16 ஆண்டுகால வாழ்க்கையில் , நம் நாட்டை அடிமைத்தளையிட்டு வைத்திருந்த ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடி, தம் இன்னுயிர் நீத்த முதல் விடுதலைப் போராளி, வீரச்சுடர் வள்ளியம்மை என்கிற வனிதாமணி ஒரு தமிழ்ப்பெண்.

நஞ்சை புகழ் தஞ்சை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த தில்லையாடி என்ற கிராமத்தில் முனுசாமி முதலியார் மற்றும் மங்களத்தம்மாள் தம்பதியருக்கு 1898ஆம் ஆண்டில் பிறந்தவர் இவ்வீராங்கனை வள்ளியம்மை.

தில்லையாடியில் நெசவுத் தொழில் செய்து வாழ்ந்து வந்த முனுசாமி, ஆங்கிலேய பிரிட்டிஷ் ஆட்சியில் ஆலைத்துணி இறக்குமதியால், நெசவுத்தொழில் நலிவடைந்த நிலையில், ஆங்கிலேயர்களின் கைக்கூலிகளாக கங்காணியர் தமிழ் நாட்டுத் தொழிலாளர்களை தென் ஆப்ரிக்காவிற்கு ஏற்றுமதி செய்து கொண்டிருந்தனர். அப்படி ஒரு கூலித் தொழிலாளியாக அனுப்பப்பட்டவர்தான் முனுசாமி. அங்கு ஜோகன்ஸ்பர்க் என்னும் ஊரில் ஒரு சிறிய வியாபாரத்தைத் தொடங்கியவர். அங்குதான் வள்ளியம்மை பிறந்தார்.

பல இன்பக்கனவுகளுடன் நாடு விட்டு நாடு சென்ற இந்தியத் தொழிலாளர்கள் , ஆங்கிலேயர்களால் அடிமைகளாக நடத்தப்பட்டனர். ஒவ்வொரு இந்தியரும் மூன்று பவுன் தலைவரி கட்ட வேண்டும். அவர்கள் அங்கு பல தடைகளுடன் வாழ வேண்டியிருந்தது. அனுமதியின்றி குறிப்பிட்ட பகுதிகளுக்குள் நுழைய முடியாது. வாக்குரிமை கொடுக்கப்படவில்லை. வெள்ளையர்களுடன் சமமாக அமர முடியாது, அவர்களுடன் பள்ளியில் கூட நம் குழந்தைகள் படிக்க முடியாது. இந்தியர்கள் வாழும் இடங்கள் சுகாதாரமற்ற சேரிகளாகவே காட்சியளித்தன.

வெள்ளையரின் அடக்குமுறையாலும், அதிகாரத்தாலும் இந்தியர்கள் மட்டுமன்றி அம்மண்ணின் மைந்தர்களான நீக்ரோ மக்களும் கடும் துன்பத்திற்கு ஆளாவதைக் கண்ட இளம் பெண்ணான வள்ளியம்மை உள்ளம் நொந்து போனார். இந்தச் சூழலில்தான் 1893 ஆம் ஆண்டு மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி தென்னாப்பிரிக்காவிற்கு வந்தவர், 22 ஆண்டுகள் (இடையில் 2 ஆண்டுகள் நீங்கலாக) அங்கேயே தங்கிவிட்டார். அங்கே இந்தியர்களுக்கும், நீக்ரோக்களுக்கும் இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்டு மனம் பதறி, அநீதியை எதிர்த்துப் போரிட்டு, அவர்களின் உரிமைகளை மீட்டுத் தரவும் துணிந்தார்.

தென்னாப்பிரிக்காவின் கிறித்துவ மதச்சடங்குபடி திருமணப்பதிவு புத்தகத்தில் பதிவு செய்யப்படாத திருமணங்கள் செல்லுபடியாகாது என்று 1913ல் மார்ச் மாதம் 14ந் தேதி , கேப் உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பு இந்து மக்களை மிகவும் பாதித்தது. அங்குள்ள இந்திய மக்கள் தங்கள் மத வழக்கப்படி செய்து கொண்ட திருமணங்கள் செல்லாது என்பதோடு, அவர்களின் குழந்தைகளுக்கும் சட்டப்படியான வாரிசு உரிமையும் இல்லை என்றாயிற்று. இதனால் இந்திய வம்சாவளியினர் கிளர்ச்சியில் இறங்க வேண்டியதாயிற்று. அச்சமயத்தில் காந்தியடிகள், ஜோகன்ஸ்பர்கில், 3000 மக்கள் திரண்டிருந்த பெருங்கூட்டத்தில் அகிம்சை முறையிலான போராட்டத்தை நடத்தினார்.

இந்தியர்கள் சார்பில் நடத்தப்பட்ட அனைத்துப் பொதுக்கூட்டங்களுக்கும் தன் தாயாருடன் சிறுமி வள்ளியம்மையும் சென்று வந்து கொண்டிருந்தார். காந்தியடிகளின் சொற்பொழிவுகள் அச்சிறுமியின் மனதில் மிக எளிதாக விடுதலைக் கனலை மூட்டி விட்டன. இந்தியர்கள் புதிதாக வந்து குடியேறுவதைத் தடுக்கும் பொருட்டு டிரான்ஸ்வாலுக்குள் குடியிருந்த ஒவ்வொரு இந்தியரின் விரல் ரேகையை பதிவு செய்ததைக் கண்ட வள்ளியம்மையின் தன்மான உணர்வு துடித்தது. அதுவே, அச்சிறுமியை காந்தியடிகளின் அறப்போரில் தன்னையும் இணைத்துக் கொள்ளத் தூண்டியது, அந்த 16 வயதேயான இளம் மங்கைக்கு!

இந்தப் போராட்டத்தில் முதன் முறையாக காந்தியடிகள் பெண்களையும் சேர்த்துக் கொண்டார். காரணம் இவ்வன்கொடுமைச் சட்டத்தினால் நேரடியாக, அதிகளவில் பாதிக்கக் கூடியவர்கள் பெண்களும், குழந்தைகளும்தான். பெற்றவர்களின் தடையையும் மீறி இப்போராட்டத்தில் வள்ளியம்மை கலந்து கொண்டார்.

1913 ல் ஜோகன்ஸ்பர்க் நகரில், அக்டோபர் முதல் வாரத்தில், வெள்ளையர்களின் அடக்கு முறைகளை எதிர்த்து அன்னை கஸ்தூரிபாய் தலைமையில் , பெண்களின் சத்தியாகிரகப் போர்ப்படை திரண்டது. இந்த அணியின் முதல் வரிசையில் கஸ்தூரிபாய்க்கு இணையாக வள்ளியம்மையும் அவருடைய தாயாரும் நின்றனர். “ வெள்ளையர்களின் ஏகாதிபத்தியத்தின் தளைகளைத் தகர்த்தெறிவோம் வாருங்கள் “ என்ற அவருடைய முழக்கம் ஏனைய சத்யாகிரகிகளையும் எழுச்சியுறச் செய்தது.

“ எங்கள் தேசத்தின் கதிரவனுக்கு அஸ்தமனம் என்பது எப்போதுமில்லை” என்ற இறுமாப்புடன் மார்தட்டிக் கொண்டிருந்த காலனி ஆதிக்கம் ஆட்டம் காணத்தொடங்கியதும் அப்போதுதான். வள்ளியம்மையின் சங்கநாத முழக்கத்துடன், ஊர்வலம் ஜோகன்ஸ்பர்க் நகரிலிருந்து நியூகாசில் நகருக்கு முன்னேறியது. வழியில் சார்லஸ் டவுன், டண்டி,லேடிமிஸ்த், மாரிட்ஸ் பர்க், டர்பன் போன்ற முக்கியமான இடங்களில் தங்கிச் சென்ற அனைவருக்கும், சிறுமி வள்ளியம்மை அனைத்து சேவைகளும் ஓடியாடி செய்தார்.

காந்தியடிகளின் முழக்கத்தைக் கேட்ட நியூகாசில் நகர நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளிகள் அவர் சொல்படி வேலை நிறுத்தமும் செய்த தமிழர்களைக் கண்டு மேலும் உற்சாகமானார் வள்ளியம்மை. தடையை மீறி டிரான்ஸ்வால் நகருக்குள் நுழைந்த பெண்கள் அணியினர் கைது செய்யப்பட்டு, மாரிட்ஸ்பர்க் சிறையில் அடைக்கப்பட்டனர். மூன்று மாதக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. சுகாதாரமற்ற சூழலும், உணவும் அவர்தம் உடல்நிலையை பெரிதும் பாதித்தது. வயிற்று வலி, காய்ச்சலில் அவதிப்பட்டார். அத்தோடு போலீசாரின் கடுமையான சித்ரவதைக்கும் ஆளானார். அபராதத்தொகை கட்டிவிட்டுச் செல்லும்படிச் சொன்ன அதிகாரிகளின் ஆணைக்குக் கட்டுப்படாமல், அது சத்தியாகிரகப் போராளிக்கு இழுக்கு என்ற காரணம் காட்டி, சிறையை விட்டு வெளியில் போகாமல், அங்கேயே இருந்ததால், அவர் உடல்நலம் மேலும் பாதிக்கப்பட , மருத்துவர்களின் எச்சரிக்கையினால், 1914 பிப்ரவரி 14ஆம் நாள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

மனித உரிமைக்காக, தென்னாப்பிரிக்காவில், காந்தியடிகளோடு இணைந்து பாடுபட்டவர், அண்ணலின் மனம் கவர்ந்த, தில்லையாடி வள்ளியம்மை. இந்தியருக்குத் தேசியமும் இல்லை…தேசியக் கொடியும் இல்லையென கொக்கரித்த ஒரு ஆங்கிலேயனின் ஆணவப் பேச்சைச் சகிக்காத வள்ளியம்மை, தான் உடுத்தியிருந்த சேலையின் முந்தானையை அக்கணமே கிழித்து, அவன் முகத்திற்கு நேரே, இது தான் எங்கள் தேசியக் கொடி என்று துணிந்து கூறினார் .கிழித்துக் காட்டிய அந்த முந்தானையில் இருந்த, காவி, வெள்ளை, பச்சை வர்ணங்கள் தான் மூவர்ணக் கொடியானது என்பது குறிப்பிடத்தக்கது.

16 வயதே நிரம்பிய, இறப்பின் தருவாயில், உயிர் பிரியும் முன்பு கூட, சிறைச்செல்ல சித்தமாயிருந்த உத்தமி வள்ளியம்மையைப் பற்றி அண்ணல் தன் சுய சரிதையில், மனம் நெகிழ்ந்து எழுதியுள்ளார். “ சிறை சென்றதற்கு வருந்துகிறாயா?” என்று கேட்ட அண்ணலின் கேள்விக்கு, தம் தளிர்க்கரங்களைக் கூப்பி வணங்கி, “ வருத்தமெல்லாம் இல்லை. இப்போது தாங்கள் கட்டளையிட்டாலும், போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை செல்லச் சித்தமாயிருக்கிறேன்” என்றாராம். அண்ணல், சிறை சென்றால் உயிர் பிரிந்து விடுமே?” என்றதற்கு, “ மரணத்தை நான் பொருட்படுத்தவில்லை. தாய்த்திருநாட்டிற்காக உயிரைக் கொடுக்க விரும்பாதவர்கள் யார்?” என்றார்.

கிழிந்த நாராக , ஒரு சமுக்காளத்தில் சுற்றப்பட்டு வீட்டில் கொண்டுவந்து கிடத்தப்பட்ட சிறுமி வள்ளியம்மையின் உடல் நிலை மேலும் மோசமடைந்து, 1914 ஆம் ஆண்டு பிப்ரவரி 22 ஆம் நாள், அவர் பிறந்த அதே நாளில், இறைவனடி சேர்ந்தார்.

1915-ம் வருடம், ஏப்ரல் மாதம், 30-ம் தேதி. தரங்கம்பாடியிலிருந்து புறப்பட்ட இரண்டு மாட்டு வண்டிகள், தஞ்சை மாவட்டத்தில் உள்ள தில்லையாடியை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றன. முதல் வண்டியில் மகாத்மா காந்தியும், அன்னை கஸ்தூரிபாயும் அமர்ந்திருக்கிறார்கள்.வண்டிகள் தில்லையாடி எல்லையை மிதித்த போது உணர்ச்சிவசப்பட்ட மகாத்மா கண் கலங்கி, வண்டியை விட்டு இறங்கி, கீழே குனிந்து இரு கரங்களையும் குவித்து மண்ணை அள்ளி எடுத்து கண்களில் ஒற்றிக் கொண்டார்.

என்ன புண்ணியம் செய்து விட்டது அந்த மண்? அது சாதாரண மண் அல்ல; காந்திஜி தென்னாப்பிரிக்காவில் தொடங்கிய சத்தியாக்கிரகப் போராட்டத்தில் உயிர் நீத்த வள்ளியம்மை, நாகப்பன், நாராயணசாமி ஆகிய தியாகச் செம்மல்களைத் தந்த வீர மண் அது. தென்னாப்பிரிக்க அரசாங்கம் சத்தியாக்கிரகிகளுக்குக் கொடுத்த தொல்லைகள் மிக மோசமானவை. அந்தத் தொல்லைகளைக் கண்டு கொஞ்சமும் அஞ்சாமல் லட்சியம் ஒன்றையே உயிராகக் கொண்டு சிறை சென்ற வீரப் பெண்மணி, தில்லையாடி வள்ளியம்மை.

இந்திய விடுதலைக்கு ஆணி வேரான உரிமைப் போர் தென்னாப்பிரிக்கப்போராட்டம்…. இதில் தன் இன்னுயிரையே அர்ப்பணித்த தில்லையாடி
வள்ளியம்மையின் நினைவுச் சின்னத்தை தென்னாப்பிரிக்காவில், 1914ம் ஆண்டு ஜூலைத் திங்கள் 15ம் நாள் காந்தியடிகள் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு அரசு தில்லையாடி வள்ளியம்மையின் தியாகத்தைப் போற்றும் வகையில் நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் தில்லையாடி கிராமத்தில் தில்லையாடி வள்ளியம்மையின் நினைவு மண்டபம் அமைத்துள்ளது. அண்ணல் காந்தியடிகள் தில்லையாடிக்கு 1915 ஆம் ஆண்டு, சனவரித் திங்கள் 5 ஆம் நாளன்று வருகை தந்து அமர்ந்த இடத்தில் நினைவுத் தூண் கட்டப்பட்டுள்ளது. அதன் எதிரில்தான் தில்லையாடி வள்ளியம்மை நினைவுமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இங்கு தில்லையாடி வள்ளியம்மை அவர்களின் மார்பளவு சிலை ஒன்று முன் மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பொது நூலகத்துறை மூலம் ஒரு நூலகமும் செயல்பட்டு வருகின்றது.கைத்தறி நெசவாளர் சங்கம் சென்னையில் அமைத்த விற்பனை நிலையத்திற்கு, ‘தில்லையாடி வள்ளியம்மை மாளிகை’ என்று அவர் பெயரைச் சூட்டி கௌரவித்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் வெள்ளையனின் துப்பாக்கி முன்பாக துணிச்சலுடன் எதிர்நின்று அண்ணல் காந்தியடிகளைக் காப்பாற்றிய வள்ளியம்மை _ இருந்திருந்தால் ஒரு வேளை கோட்ஸே சுட்டுக் கொல்லும்போது _ குறுக்கே பாய்ந்து காப்பாற்றியிருப்பாரோ என்னவோ.. அதற்குள் அவ்வளவு சிறிய வயதில் அந்த தியாகச் சுடரை இயற்கை அழைத்துக் கொண்டதுதான் கொடுமை.

இப்படி எத்தனை வள்ளியம்மைகள், நம் சுதந்திரப் போராட்டத்தில் தங்கள், இன்னுயிரையும் ஈந்தார்கள் என்பதை நம் வரலாறு கூறும்.

படங்களுக்கு நன்றி :

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88

Sunday, October 30, 2011

வாழ்க்கை வாழ்வதற்கே!

மனித வாழ்க்கை கிடைத்தற்கரிய அரியதோர் வரம். இதனை எந்த அளவிற்கு நாம் உணர்ந்துள்ளோம் என்பது ஐயமாகவே உள்ளது. உலக பக்கவாத தினமான இன்று, பக்கவாதத்தை எதிர்த்துப் போரிடுவதற்கான விழிப்புணர்வு பெறுவதற்கான அவசர தேவை ஏற்பட்டுள்ள தருணம் இது என்பதை உலக பக்கவாத அமைப்பு (WSO) தெரிவித்துள்ளது.

குடும்பம்,குழந்தைகள் எதிர்காலம், தொழில் என்று விரைவாக சுழன்று கொண்டிருக்கிற காலச்சக்கரம், இந்த 50 வயதில் தன் உடன் பிறப்புகளை அடிக்கடி சந்தித்து அளவளாவும் வாய்ப்பை வெகுவாகக் குறைத்து விட்டிருந்தது வையாபுரிக்கு. ஆம், தான் பிறந்து வளர்ந்த பசுமையான கிராமத்தை விட்டு, பிழைப்பைத் தேடி பட்டணம் வந்து சேர்ந்து கிட்டத்தட்ட இந்த 27 ஆண்டுகளில் தன்னுடைய வாழ்க்கைத்தரம் ஓரளவிற்கு உயர்ந்திருந்தாலும், நகர, நாகரீக வாழ்க்கை கற்றுக் கொடுத்த தீய பழக்கங்களான மதுவும், புகைப்பழக்கமும், தவிர்க்க முடியாமல் தொற்றிக் கொண்டதும் நிதர்சனமாகிப்போனது அவருக்கு. உடன் பிறந்த ஒரே தங்கையையும் அதே கிராம வாழ்க்கையில் இணைந்திருக்க, ஏதோ ஆடிக்கொரு முறை, அம்மாவாசைக்கொரு முறையே தன் தங்கையை காணக்கூடிய வாய்ப்பு அமைவதும் வாடிக்கையாகி விட்டது.

அன்றும் அப்படித்தான், ஒரு ஆண்டிற்குப் பிறகு தங்கையைக் காண வருவதாகத் தகவல் கொடுத்து விட்டு சென்ற மனிதர், பேருந்தை விட்டு இறங்கி புகை வண்டி, தண்டவாளப் பாதையைத் தாண்டிச் சென்றால் வெகு அருகிலேயே தங்கையின் இல்லம் இருப்பதால் நடந்து சென்றவர், அன்புத் தங்கை தனக்காக வழி மேல் விழிவைத்து தண்டவாளத்தின் மறுபுறம் காத்திருந்தவர் , சகோதரரைக் கண்ட ஆர்வத்தில், புகை வண்டி வருவதைக்கூட கவனியாமல், வேகமாக தண்டவாளத்தைக் கடக்க முயல….. அந்தோ… பரிதாபம். வெகு விரைவாக வந்த புகை வண்டியில் அடிபட்டு உடல் இரண்டாக சிதறியதைக் கண் முன்னால் கண்ட சகோதரர் அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போனவர், மயங்கிச் சரிந்தார். மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப்பட்டவருக்கு பக்கவாதம் வந்துள்ளதாக மருத்துவர்கள் அறிவித்தனர். உடலின் வலது புறம் முழுவதுமாக செயலிழந்த நிலையில் வாய் பேச்சும் தடைபட்டு, தொழிலும் முடங்க…. பல மாதங்கள் வரை படுக்கையில் இருக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது.

ஒவ்வொரு ஆறு வினாடிக்கும் ஒருவர் இந்த பக்கவாத நோயினால் பாதிக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. மற்றெந்த நோயைவிடவும் இந்த பக்கவாத நோய் அதிகளவிலான உயிர் இழப்பை ஏற்படுத்துகிறது. வருடத்திற்கு சுமார் ஆறு மில்லியன் மக்கள் இந்த பக்கவாதத்தினால் உயிரிழக்கின்றனர். ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, புகைப்பழக்கம் உள்ளிட்ட காரணங்களே பக்கவாத நோய் ஏற்பட வழிவகுக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அக்டோபர் 29 ஆம் தேதி உலக பக்கவாத தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருமுன் காப்பதே புத்திசாலித்தனம் அல்லவா. அந்த வகையில் மருத்துவர்கள் கூறும் பக்கவாதத்திற்கு எதிரான ஆறு முக்கிய சவால்கள் :

1) விழிப்புணர்வு கொள்ள வேண்டிய சில முக்கிய விசயங்கள் : உயர் இரத்த அழுத்தம், சக்கரை மற்றும் இரத்தத்தின் கொழுப்புச் சத்தின் அதிகளவு ஆகியன.

2) எப்பொழுதும் சுறுசுறுப்பாகவும், அன்றாட உடற்பயிற்சி பழக்கம்

3) உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு கொள்வதன் மூலம், உடல் எடை அதிகம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும்.

4) கட்டுப்பாடான மதுப்பழக்கம்.

5) புகைப்பிடிக்கும் வழக்கத்தை முழுவதுமாக தவிர்க்க வேண்டும்.

6) பக்கவாத நோயின் அறிகுறிகள் குறித்த முன்னெச்சரிக்கையின் விழிப்புணர்வு மிக அவசியமானதாகும்.

இந்தியாவில் இந்நோய் அண்மைகாலமாக அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். 50 வயதுக்கு மேற்பட்டவர்களை மட்டுமே தாக்கி வந்த இந்த பக்கவாத நோய் . அண்மைக்காலமாக 20 லிருந்து 30 வயதிற்குட்பட்டவர்களை அதிகமாக தாக்கத்தொடங்கியுள்ளது. இந்நோயால் பாதிக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை 15 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியாவில், ஒரு லட்சம் பேரில், தோராயமாக 130 முதல் 225 பேருக்கு இந்நோய் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. மேலும், இந்தியாவில் மட்டுமே ஒரு நாளைக்கு 2 ஆயிரம் பேர் இந்நோயால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மனித மூளையின் ஒரு பகுதி செயலிழப்பதால், பக்கவாதம் ஏற்படுகிறது. இதனால், உடலின் ஒரு பகுதி செயல் இழந்து, உடல் உறுப்புகள் இயங்காமல் படுக்கையிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. பேச முடியாமலும் போகிறது. இதற்கு உரிய சிகிச்சை முறைகள் இருக்கின்றன. அதனை குறித்த நேரத்தில் சரியாக மேற்கொண்டால் விரைவாக இதிலிருந்து மீண்டு வரவும் வாய்ப்புள்ளது.

தினசரி மூன்று கதலி வாழைப்பழங்களை சாப்பிடுவதன் மூலம் பக்கவாதம் ஏற்படுவதைத் தவிர்‌‌க்க முடியும் என்று ஆய்வுகள் மூலம் பிரிட்டிஷ் மற்றும் இத்தாலிய ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது. காலை உணவுக்குப் பின் ஒன்றும், பகல் உணவுக்குப் பின் ஒன்றும் பின்னர் மாலை வேளையில் ஒன்றுமாகச் சாப்படுவது மூலம் உடலுக்குத் தேவையான பொட்டாசியத்தை பெற முடிகின்றது என்கின்றனர். அதன்மூலம் மூளையில் இரத்தக் கட்டுக்கள் ஏற்படுவது 21 ‌விழு‌க்காடு தடுக்கப்படுகின்றதாம்.

பசளிக் கீரை, விதைவகைகள், பால், மீன், பருப்பு வகைகள் போன்ற பொட்டாசிய உணவு வகைகளை உட்கொள்வதன் மூலமும் பக்கவாதம் நோயைத் தடுக்க இயலும் என்றும் கூறப்படுகிறது.

தினசரி உணவில் 1600 மில்லி கிராம் பொட்டாசியத்தைச் சேர்த்துக் கொண்டாலே போதுமானது என்றும் அமெரிக்க இதய நோய்கள் பற்றிய குறிப்பேடுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன. வாழைப்பழத்தில் சராசரியாக 500 மில்லி கிராம் பொட்டாசியம் அடங்கியுள்ளது. இது இரத்த அழுத்தத்தை சீர்படுத்தி உடலின் நீர்த்தன்மை சமநிலையையும் பேணுகின்றது எ‌ன்றும் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

நல்ல ஆரோக்கியமான பழக்க, வழக்கமும் , நோய் குறித்த முழுமையான விழிப்புணர்வு இவைகளே இந்த உயிர்க்கொல்லி நோயிலிருந்து நம்மைக் காக்கவல்லது என்பதே நிதர்சனம்.

படத்திற்கு நன்றி

Sunday, September 11, 2011

பாட்டுக்கொரு புலவன்!

பவள சங்கரி

பாட்டுக்கொரு புலவனவன் , புலமையின் முன் செல்லியும், சேக்ஸ்பியரும் எம்மாத்திரம் என எக்காலமும் வியக்க வைக்கும் நம் முண்டாசுக்கவி இன்று உடலால் மட்டுமே தமிழ் கூறும் நல்லுலகை விட்டு மறைந்த நாள்.  தம் தமிழ்க் கவிதையால் தேசபக்திக் கனலைச் சுடர்விட்டுப் பிரகாசிக்கச் செய்ததோடு, அரசியல், தத்துவம், ஆன்மீகம், சமூகம், காவியம் என அக்கவி நுழையாத துறையே இல்லை எனலாம். முற்போக்குச் சிந்தனைகளை ஊக்குவிக்கக் கூடிய படைப்புகளின் தலைவனவன்!  ஆங்கிலம், வடமொழி, பிரெஞ்சு போன்ற பல மொழிகளின் ஞானம் கொண்டு தமிழ் மொழியின் கவிதைகளுக்கு வல்லமை கூட்டினான் என்றால் அது மிகையாகாது.
1908 ஆம் ஆண்டு, இந்தியா இதழ் மூலம் ஆங்கிலேய ஆதிக்கத்தின் நடவடிக்கைகள் குறித்து எதிர்ப்புக் குரல் எழுப்பி, அது காரணம் கொண்டே, ஆங்கிலேய அரசு இவரை கைது செய்ய முனைய, பிரெஞ்சு அரசின் பொறுப்பில் இருந்த பாண்டிச்சேரிக்குத் தப்பிச் சென்ற கதாநாயகன் இவன்…..
தேசீய கீதங்கள் – பாரத நாடு – வெறிகொண்ட தாய்
ராகம் – ஆபோகி , தாளம் – ரூபகம்
1.     பேயவள் காண்எங்கள் அன்னை-
பெரும் பித்துடை யாள்எங்கள் அன்னை
காயழல் ஏந்தியபித்தன்-தனைக்
காதலிப் பாள்எங்கள் அன்னை.     (பேயவள்)
2.     இன்னிசை யாம்இன்பக் கடலில்-எழுந்து
எற்றும் அலைத்திரள் வெள்ளம்
தன்னிடம் மூழ்கித் திளைப்பாள்-அங்குத்
தாவிக் குதிப்பாள்எம் அன்னை.     (பேயவள்)
3.     தீஞ்சொற் கவிதையஞ் சோலை-தனில்
தெய்விக நன்மணம் வீசும்
தேஞ்சொரி மாமலர் சூடி-மதுத்
தேக்கி நடிப்பாள்எம் அன்னை.     (பேயவள்)
4.     வேதங்கள் பாடுவள் காணீர்-உண்மை
வேல்கையிற் பற்றிக் குதிப்பாள்
ஓதருஞ் சாத்திரம் கோடி-உணர்ந்
தோதி யுலகெங்கும் விதைப்பாள்.     (பேயவள்)
5.     பாரதப் போரெனில் எளிதோ?-விறற்
பார்த்தன்கை வில்லிடை ஒளிர்வாள்
மாரதர் கோடிவந் தாலும்-கணம்
மாய்த்துக் குருதியில் திளைப்பாள்.     (பேயவள்)


தேசீய கீதங்கள்சுதந்திரம்
27.சுதந்திரப் பயிர்
கண்ணிகள்
தண்ணீர்விட் டோவளர்த்தோம்? சர்வேசா!இப்யிரைக்
கண்ணீராற் காத்தோம்;கருகத் திருவுளமோ?     1
எண்ணமெலாம் நெய்யாக எம்முயிரி னுள்வளர்ந்த
வண்ண விளக்கிஃது மடியத் திருவுளமோ?     2
ஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்தபினர்
வாராது போலவந்த மாமணியைத் தோற்போமோ?     3
தர்மமே வெல்லுமெனும் சான்றோர் சொல் பொய்யாமோ?
கர்ம விளைவுகள்யாம் கண்டதெலாம் போதாதோ?     4
மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்நது கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ?     5
எண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கியிரு
கண்ணற்ற சேய்போற் கலங்குவதுங் காண்கிலையோ?     6
மாதரையும் மக்களையும் வன்கண்மை
யாற்பிரிந்துகாத லிளைஞர் கருத்தழிதல் காணாயோ?     7
எந்தாய்!நீ தந்த இயற்பொருளெ லாமிழந்து
நொந்தார்க்கு நீயன்றி நோவழிப்பார் யாருளரோ?     8
இன்பச் சுதந்திரம் நின் இன்னருளாற் பெற்றதன்றோ?
அன்பற்ற மாக்கள் அதைப்பறித்தாற் காவாயோ?     9
வானமழை யில்லையென்றால் வாழ்வுண்டோ?
எந்தை சுயாதீனமெமக் கில்லை யென்றால் தீனரெது செய்வோமே?     10
நெஞ்சகத்தே பொய்யின்றி நேர்ந்ததெலாம் நீ தருவாய்
வஞ்சகமோ எங்கள் மனத்தூய்மை காணாயோ?     11
பொய்க்கோ உடலும் பொருளுயிரும் வாட்டுகிறோம்?
பொய்க்கோ தீராது புலம்பித் துடிப்பதுமே 12
நின்பொருட்டு நின்னருளால் நின்னுரிமை யாம்கேட்டால்
என்பொருட்டு நீதான் இரங்கா திருப்பதுவே?     13
இன்று புதிதாய் இரக்கின்றோமோ? முன்னோர்
அன்றுகொடு வாழ்ந்த அருமையெலாம் ஓராயோ?     14
நீயும் அறமும் நிலைத்திருத்தல் மெய்யானால்,
ஓயுமுனர் எங்களுக்கிவ் ஓர்வரம்நீ நல்குதியே 15
_தம் ஞானப் பாடல்கள் மூலம் மக்கள் மனதில் பெரும் எழுச்சியை ஏற்படுத்திய மாகவி பாரதி!
ஞானப் பாடல்கள்
96. அன்பு செய்தல்
இந்தப் புவிதனில் வாழு மரங்களும்
இன்ப நறுமலர்ப் பூஞ்செடிக் கூட்டமும்
அந்த மரங்களைச் சூழ்ந்த கொடிகளும்
ஔடத மூலிகை பூண்டுபுல் யாவையும்
எந்தத் தொழில் செய்து வாழ்வன வோ?
வேறு
மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும்
வரம்புகட்டாவிடினும் அன்றிநீர் பாய்ச்சாவிடினும்
வானுலகு நீர்தருமேல் மண்மீது மரங்கள்
வகைவகையா நெற்கள்புற்கள் மலிந்திருக்கு மன்றோ?
யானெ தற்கும் அஞ்சுகிலேன்,மானுடரே,நீவிர்
என்மதத்தைக் கைக்கொண்மின்,பாடுபடல் வேண்டா;
ஊனுடலை வருத்தாதீர்; உணவியற்கை கொடுக்கும்;
உங்களுக்குத் தொழிலிங்கே அன்பு செய்தல் கண்டீர்!
78. அச்சமில்லை
பண்டாரப் பாட்டு
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளொரெலாம் எதிர்த்து நின்ற போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சை கொண்ட பொருளெலாம் இழந்த விட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.

கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
நச்சை வாயி லேகொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
.பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
1905 ஆம் ஆண்டு வ.உ.சியுடன் தொடர்பு கொண்டு அரசியலில் தீவிரமாக நுழைந்து, காசியில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பும் போது கல்கத்தா சகோதரி என்றழைக்கப்பெறும் விவேகானந்தரின் பெண் சீடரான நிவேதிதாவைச் சந்தித்து, அவர் கொள்கைகள்பால் பெரிதும் ஈர்க்கப்பட்டு அவரைத் தம் ஞான குருவாக ஏற்றுக் கொண்டார்.
_4. சான்றோர்
28. நிவேதிதா
அருளுக்கு நிவேதனமாய் அன்பினுக்கோர்
கோயிலாய் அடியேன் நெஞ்சில்
இருளுக்கு ஞாயிறாய் எமதுயர்நா
டாம்பயிர்க்கு மழையாய்,இங்கு
பொருளுக்கு வழியறியா வறிஞர்க்குப்
பெரும்பொருளாய்ப் புன்மைத் தாதச்
சுருளுக்கு நெருப்பாகி விளங்கிய தாய்
நிவேதிதையைத் தொழுது நிற்பேன்.
பாரதியின் தீஞ்சுவைக்கனியின் சுவையென, கண்ணன் பாடல்கள் அமைந்தது குறிப்பிடத்தக்கதாகும். கண்ணனைத் தம் தோழனாகவும், தாயாகவும், தந்தையாகவும், அரசனாகவும், சேவகனாகவும், சற்குருவாகவும்,சீடனாகவும், குழந்தையாகவும், காதலனாகவும் – பல கோணங்களில் ரசித்து, அன்பு சொரிந்து கவி புனைந்திருப்பது எக்காலத்தும் சுவைத்து மகிழக்கூடியதாகும்.
முப்பெரும் பாடல்கள்
கண்ணன் பாட்டு
15. கண்ணன்-என் காந்தன்
வராளி-திஸ்ர ஏக தாளம்
சிருங்கார ரசம்
கனிகள் கொண்டுதரும்-கண்ணன்
கற்கண்டு போலினிதாய்;
பனிசெய் சந்தனமும்-பின்னும்
பல்வகை அத்தர்களும்,
குனியும் வாண்முகத்தான்-கண்ணன்
குலவி நெற்றியிலே
இனிய பொட்டிடவே-வண்ணம்
இயன்ற சவ்வாதும்.

கொண்டை முடிப்பதற்கே-மணங்
கூடு தயிலங்களும்,
வண்டு விழியினுக்கே-கண்ணன்
மையுங் கொண்டுதரும்;
தண்டைப் பதங்களுக்கே-செம்மை
சார்த்துசெம் பஞ்சுதரும்;
பெண்டிர் தமக்கெல்லாம்-கண்ணன்
பேசருந் தெய்வமடி!
குங்குமங் கொண்டுவரும்-கண்ணன்
குழைத்து மார்பெழுத;
சங்கையி லாதபணம்-தந்தே
தழுவி மையல் செய்யும்;
பங்கமொன் றில்லாமல்-முகம்
பார்த்திருந் தாற்போதும்;
மங்கள மாகுமடீ!-பின்னோர்
வருத்த மில்லையடீ!
1. கண்ணன் பாட்டு
16. கண்ணம்மா-என் காதலி 
காட்சி வியப்பு
செஞ்சுருட்டி-ஏகதாளம்
ரசங்கள்:சிருங்காரம்,அற்புதம்
சுட்டும் விழிச்சுடர் தான்,-கண்ணம்மா!
சூரிய சந்திர ரோ?
வட்டக் கரிய விழி,-கண்ணம்மா!
வானக் கருமை கொல்லோ?
பட்டுக் கருநீலப்-புடவை
பதித்த நல் வயிரம்
நட்ட நடு நிசியில்-தெரியும்
நக்ஷத் திரங்க ளடி!
சோலை மல ரொளியோ-உனது
சுந்தரப் புன்னகை தான்?
நீலக் கட லலையே-உனது
நெஞ்சி லலைக ளடி!கோலக் குயி லோசை-உனது
குரலி னிமை யடீ!வாலைக் குமரி யடீ,-
கண்ணம்மா!மருவக் காதல் கொண்டேன்.
சாத்திரம் பேசு கிறாய்,-கண்ணம்மா!
சாத்திர மேதுக் கடீ!
ஆத்திரங் கொண்டவர்க்கே,-கண்ணம்மா!
சாத்திர முண்டோ டீ!
மூத்தவர் சம்ம தியில்-வதுவை
முறைகள் பின்பு செய்வோம்;
காத்திருப் பேனோ டீ?-
இது பார்.கன்னத்து முத்த மொன்று!

மகாபாரதத்தின் நாயகி, பாஞ்சாலியின் சபதம் குறித்த பாரதியின் கவிதைகள் இரண்டு பாகங்களாக சுவைத்து அனுபவிக்கும் வண்ணம் புனையப்பட்ட கவிதைகளாகும்.
2. பாஞ்சாலி சபதம்
சபதச் சருக்கம்
65. திரௌபதி சொல்வது
‘சாலநன்கு கூறினீர்! ஐயா!
தருமநெறிபண்டோர் இராவணனும்
சீதைதன்னைப் பாதகத்தால
கொண்டோர் வனத்திடையே
வைத்துப்பின்,கூட்டமுறமந்திரிகள்
சாத்திரிமார் தம்மை வரவழைத்தே,
செந்திருவைப் பற்றிவந்த செய்தி
யுரைத்திடுங்கால்“தக்கது நீர் செய்தீர்;
தருமத்துக் கிச்செய்கைஒக்கும்”என்று,
கூறி உகந்தனராம் சாத்திரிமார்!
பேயரசு செய்தால்,பிணந்தின்னும் சாத்திரங்கள்!
மாய முணராத மன்னவனைச் சூதாடவற்புறுத்திக்
கேட்டதுதான் வஞ்சனையோ? நேர்மையோ?
முற்படவே சூழ்ந்து முடீத்ததொரு செய்கையன்றோ?
மண்டபம்நீர் கட்டியது மாநிலத்தைக் கொள்ளவன்றோ?
பெண்டிர் தமையுடையீர் பெண்க ளுடன்பிறந்தீர்!
பெண்பாவ மன்றோ? பெரியவசை கொள்வீரோ?
கண்பார்க்க வேண்டும்!’என்று கையெடுத்துக் கும்பிட்டாள்
அம்புபட்ட மான்போல் அழுது துடி துடித்தாள்.
வம்புமலர்க் கூந்தல் மண்மேற் புரண்டுவிழத்
தேவிகரைந்திடுதல் கண்டே,சில மொழிகள்
பாவிதுச் சாதனனும் பாங்கிழந்து கூறினான்,
வேறு
ஆடை குலைவுற்று நிற்கிறாள்;-அவள்
ஆவென் றழுது துடிக்கிறாள்-வெறும்
மாயட நகர்த்த துச்சாதனன்-அவள்
மைக்குழல் பற்றி யிழுக்கிறான்-இந்தப்
பீடையை நோக்கினன் வீமனும்-கரைமீறி
எழுந்தது வெஞ்சினம்;-
துய்கூடித் ததருமனை நோக்கியே,-
அவன்கூறிய வார்த்தைகள் கேட்டிரோ?

மனைவியின் பிறந்த ஊராகிய கடையத்தில் 1918 – 20 களில் அமைதியாக வாழ்க்கை நடத்திய க்வி, 1920ல் மீண்டும் சென்னையில் உள்ள சுதேசமித்திரனில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். 1919ல் சென்னையில் உள்ள திரு.சி.இராசகோபாலாச்சாரியின் இல்லத்தில் மகாத்மா காந்தியடிகளைச் சந்தித்தார். 1921. ஆகஸ்ட் மாதத்தில் திருவல்லிக்கேணி கோவில் யானை தன் துதிக்கையால் தள்ளிவிட, மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு காப்பாற்றப்பட்டாலும்,அந்த மாதமே, 12 ஆம் நாள் விடியற்காலை 1.30 மணியளவில் தமது 39 ஆவது வயதில் இயற்கை எய்தி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 43

  63 நாயன்மார்கள் வரலாறு – 37 கூற்றுவ நாயனார் குன்றாத புகழாளர் களந்தை வேந்தர்     கூற்றுவனார் மாற்றலர்மண் கொண்டு சூடப் பொன்றாழு முட...