Friday, May 30, 2025

காகத்தின் நுண்ணறிவு!

 






காக்கை நாம் அன்றாடம் பார்க்கிற பறவை. ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பது நாம் இயல்பாகப் பயன்படுத்தும் பழமொழி. நாங்கள் அன்றாடம் காலையில் காக்கை, குருவிகளுக்கும் அணிலுக்கும் உணவளிப்பது வழக்கம். காகங்கள் மிக புத்திக் கூர்மையுள்ள பறவைகள் என்று படித்திருந்தாலும் அதை இன்று நேரில் அறியும் வாய்ப்பு அமைந்தது. தமது இரையை, உணவைப் பெறுவதற்காகக் கருவிகளைப் பயன்படுத்தும் திறன் வாய்ந்தவை. நம் வாழ்வோடும் பண்பாட்டோடும் பின்னிப்பிணைந்த ஒரு பறவையினம் இது. இன்று காலை இட்லிதான் வைத்தேன். அதுவும் நேற்று இரவு உணவு விடுதியில் வாங்கி வந்த இட்லி என்பதால் காலையில் அது சற்று கெட்டிப்பட்டுவிட்டது. சிறிய துண்டுகளாக கிள்ளிப்போட்டுதான் வைத்தேன். ஆனாலும் வெகு நேரம் தலையை ஆட்டி ஆட்டி பார்த்துக்கொண்டே இருந்ததே தவிர ஒரு துண்டுகூட எடுக்கவில்லை. என்ன நினைத்ததோ, சற்று நேரத்தில் ஒரு இட்லித் துண்டை எடுத்து அதை அருகில் இருக்கும் தண்ணீரில் போட்டது. ஒரு நொடியில் மீண்டும் அதை எடுத்து உண்டது. இப்படியே இரண்டு மூன்று முறை செய்துவிட்டு ஒரு துண்டு இட்லியை அதேபோல் தண்ணீரில் நனைத்து எடுத்துக்கொண்டு பறந்துவிட்டது. குட்டிக்கு எடுத்துச் சென்று ஊட்டும் போல. உண்மையில் எனக்கு அப்படியொரு ஆச்சரியமாக இருந்தது. காக்கைதானே என்று சாதாரணமாக நினைத்துவிட முடியாது, மனிதர்களைவிட புத்திசாலியாக இருக்கிறேன் என்று உணத்ர்த்திவிட்டுச் சென்றுவிட்டது. இன்று முழுவதும் காக்கை பற்றிய நினைவே சுற்றி சுற்றிச் வருகிறது.
நம் வீட்டு வாசலில் காகம் கரைந்தால் விருந்தினர்கள் வருவார்கள் என்பது நமது நம்பிக்கை.
பழங்காலத்தில் கடற்பயணம் மேற்கொள்பவர்கள் காக்கைகளை கூண்டில் அடைத்து உடன் எடுத்துச் செல்வர். கரைக்குச் செல்லும் வழி அறியாத நேரத்தில் அந்தக் காகத்தை எடுத்து பறக்க விடுவார்கள். அந்தக் காகம் செல்லும் திசையைப் பின்பற்றிச் சென்று கரையை அடைந்துவிடுவார்களாம். அப்போது அந்தக் காகம் கரைந்து கொண்டே கரையையும் அடையும். கரையோரத்தில் வாழும் மக்கள் வழிமாறிய கப்பலில் பயணிகள் பசியுடன் வருவார்கள் என்பதறிந்து அவர்களுக்கு விருந்து சமைத்து வைத்துக்கொண்டு உபசரிக்கக் காத்திருப்பார்களாம்.... அதனாலேயே இன்றும் காகம் கரைந்தால் உறவினர் வருவார்கள் என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது. உலகின் பழமையான நாகரிகங்களின் ஒன்றான மெசப்பத்தோமியா நாகரிகத்தின் நாணயங்களிலும், ஓவியங்களிலும் ஒரு மாலுமி காக்கையை பறக்கவிடுவது போன்று பொறிக்கப்பட்டுள்ளதும் இதன் பழமைக்கு ஆதாரமாக உள்ளது. ஆகா எத்தனை நூற்றாண்டுகளாக இன்னும் நம்மோடு தொடர்ந்து வருகிறது இந்தப் பாரம்பரியம்!
" விருந்து வரக் கரைந்த காக்கை" எனும் குறுந்தொகைப் பாடல் மூலம் இதை அறியலாம். சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்களில் ஒருவரான காக்கைப் பாடினியார் நச்செள்ளையார் என்பவர் காகத்தைப் பற்றிப் பாடியே இப்பெயரைப் பெற்றுள்ளார். அவர்தான் காக்கைக் கரைந்தால் விருந்தாளி வருவர் என்ற பொருளில் ஓர் அகப்பாடல் புனைந்துள்ளார். முல்லைத் திணைக்குரிய பாடலிது. தோழி கூறுவதாக அமைந்துள்ள அப்பாடல் ..
திண்டேர் நள்ளி கானத்து அண்டர்
பல்லா பயந்த நெய்யின் தொண்டி
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோறு
எழுகலத்து ஏந்தினும் சிறிதென் தோழி
பெருந்தோள் நெகிழ்த்த செல்லற்கு
விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே (குறுந். 210)
ஐங்குறுநூற்றிலும் காக்கை குறித்த நம்பிக்கை கொண்ட இன்னொரு பாடல் வந்துள்ளது.
மறுவில் தூவிச் சிறு கருங் காக்கை
அன்புடை மரபினின் கிளையோ டாரப்
பச்சூன் பெய்த பைந்நிண வல்சி
பொலம்புனை கலத்தில் தருகுவென் மாதோ
வெஞ்சின விறல்வேற் காளை யோடு
அஞ்சில் ஓதியை வரக்கரைந் தீமே
(ஐங். 391)
காகம் கரைதலைக் கண்ட தலைவி அதனை விரட்டித் துரத்துகிறாள். ஏனென்றால் காகம் கரைதல் தன் தலைவனுடைய வருகைக்கு நன்னிமித்தம் என்பது அவளுக்குத் தெரியும். ஆனால் அந்நேரத்தில் ஊடலில் இருப்பவள் போலும் அவள் அதை நம்பவில்லை. கோபமாக காகத்தைத் துரத்திக் கொண்டே இருக்கையில் தலைவனைக் காணாது வருத்தத்தில் இருந்த தனது மெலிந்த கைகளிலிருந்த வளையல்கள் பாதி கழன்று தரையில் விழுந்தன. ஆனால் உண்மையில் திடீரென்று தன் தலைவன் வருவதைக் கண்ணுற்ற அந்தத் தலைவியின் உடலும் கைகளும் மகிழ்ச்சியில் பருத்துவிடுகின்றன. அதன் விளைவாக அவள் கையிலிருந்த மீதி பாதி வளையல்கள் உடைந்து சிதறிவிட்டனவாம். முதலில் காகம் தனக்குப் பொய்யான நம்பிக்கையூட்டுகிறதே என்ற கோபத்தில் தலைவி காகத்தை விரட்டுகிறாள்.
இப்படி தலைவனைப் பிரிந்த தலைவியின் உடல் மெலிவதும் அதனால் கைவளைகள் நெகிழ்ந்து மண்ணில் விழுவதும் அகப்பாடல்களில் அடிக்கடி காணமுடிகிறது. மெலிந்தபோது கழன்று விழும் வளையல்கள் தலைவனைக் கண்டவுடனே கைகள் பருத்ததால் வெடித்துச் சிதறின என்பதும் செறிந்தன என்று சொல்வதும் மிகைபடக் கூறல் என்றாலும் இலக்கியச் சுவைக்கு ஒரு அற்புதமான எடுத்துக்காட்டாக அல்லவா இருக்கிறது!
அன்றாடம் காகங்களை அழைத்து உணவிட்டு, பின் உணவருந்தும் பழக்கம் நம்மூரில் பலருக்கும் உண்டு. புனைவுகளிலும் இலக்கியங்களிலும் அண்டங்காக்கை பற்றிய பல குறிப்புகள் உள்ளன. இதன் கருப்பு நிறம், பற்கள், கரகரவெனும் குரல், உணவுப்பழக்கம் ஆகியவற்றின் காரணமாக, காகம் தொன்மங்கள், புனைவுகளின் படைப்பாளர்களால் தீய சக்தியின் குறியீடாகக் கருதப்பட்டு வருகின்றது. அண்டங்காக்கை துர்மரணத்திற்கும், இறப்புக்கும் இடையே ஒரு இடைத்தரகராக இருந்தது என்று பிரெஞ்சு மனிதவியல் அறிஞர் கிளாட் லெவி-ஸ்ட்ராஸ் ஒரு கட்டமைப்புவாதக் கோட்பாட்டை முன்வைத்தார். காகம் இறந்தவர்களுடனும் இழந்த ஆத்மாக்களுடனும் தொடர்புடையது என்று சுவீடன் நாட்டுப்புறத்திலும்,
நம்பப்படுகின்றது. இந்து மதத்தில் காக்கைகள் உருவில் மூதாதையர்கள் அமாவாசை, திதி சமயங்களில் அவர்களுக்காகப் படைக்கும் உணவு அல்லது தின்பண்டங்களை எடுக்க வருகின்றன என்ற நம்பிக்கை இன்றளவிலும் நடைமுறையில் உள்ளது. தென் கொரிய நாட்டிலும் மூதாதையர்களுக்குப் படையல் இட்டு நீர் விளவி வழிபாடு செய்யும் வழமை உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
· மிகுந்த சக்தி வாய்ந்த இந்துத் தெய்வம் சனி பகவானின் வாகனம் காகம் என்றும் குறிப்பிடப்படுகின்றது. மகாவித்தைகள் என்ற பத்து தாந்தரீகக் கடவுள்களின் குழுவில் ஒன்றான தூமாவதி, இந்துத் தாய் தெய்வத்தின் அச்சமூட்டும் அம்சத்தைப் பிரதிபலிக்கின்றது. அவலட்சணமான விதவையாகச் சித்தரிக்கப்படும் இத்தெய்வம் பொதுவாகக் கல்லறைகள் நிறைந்த, பிணங்களைத் தகனம் செய்யும் பூமியில் காகத்தின்மீது சவாரி செய்வதாகக் குறிப்பிடப்படுகிறது.

Tuesday, May 27, 2025

கங்கைகொண்ட சோழபுரம்



கங்கைகொண்ட சோழபுரம்

 

நம் தமிழ்நாட்டின் முக்கியப் பெருமைகளில் ஒன்று என்றால் அது நம் வரலாற்றுச் சின்னங்களும், பிரம்மாண்டமான பழமையான ஆலயங்களும்தான். அந்த வகையில் 1090 ஆண்டுகள் பழமையான கங்கைகொண்ட சோழபுரம் என்ற வரலாற்று சிறப்புமிக்க இக்கோவில் தஞ்சைப் பெருவுடையார் கோவிலைக் கட்டிய முதலாம் ராசராச சோழனின் மகனான இராசேந்திர சோழனால் கட்டப்பட்டது. யுனெசுகோ பாரம்பரிய தளங்களில் பட்டியலிடப்பட்டுள்ள இக்கோவில் சோழர் கட்டிடக்கலையின் ஒரு அற்புத அடையாளம்.  

இராசராச சோழனுக்கும், திரிபுவனமாதேவிக்கும் பிறந்தவன் மதுராந்தகன் என்ற இராசேந்திர சோழன்இவனது ஆட்சிக்காலம் கி.பி. 1012 1044. கடல் கடந்து பல நாடுகளை வென்று கடாரம் கொண்டான் என்ற பட்டம் பெற்றவன்.

தன் தந்தை தஞ்சாவூரில் கட்டிய கோவிலைப்போல், கங்கைகொண்ட சோழபுரத்தில் பெரிய கோவில் கட்டி, பெரிய சிவலிங்கத்தையும் நந்தியையும் உருவாக்கியவன் தஞ்சாவூரைப்போலவே சிவனுக்கு பிரகதீசுவரர் என்றும், அம்மனுக்கு பெரியநாயகி என்றும் பெயர் சூட்டியுள்ளான். தன்னிடம் தோற்ற மன்னர்களை கங்கையிலிருந்து தண்ணீரை தலையில் சுமந்து கொண்டு வரச்செய்து கும்பத்திற்கு அபிசேகம் செய்தான். இதனால் இவ்வூர் கங்கை கொண்ட சோழபுரம் ஆனது. புனித நன்னீராட்டு நீரை கோவிலுக்குள்ளேயே கிணறு தோண்டி அதில் வடியச்செய்து, அதன்மேல் தனது சின்னமான சிங்கத்தின் சிலையை வடித்தவன், கோவிலுக்கு வரும் போதெல்லாம் இந்த கங்கை நீரை தலையில் தெளித்துக்கொண்ட பின்பே சிவனை தரிசனம் செய்வது வழக்கமாம். இக்கோவில் முழுவதும் வெண்மையாகக் காட்டியளிப்பதற்குக் காரணம் கோவில் முழுவதும் பாறாங்கல்லால் ஆனது. தமிழகத்திலேயே மிகப்பெரிய இலிங்கம் இங்கு தான் உள்ளது. ஒரே கல்லால் ஆன மூலவர் இங்கு பிரமாண்டமாக அருள்பாலிக்கிறார்.

இந்தியாவின் மிகப் பெரிய கோயில்களில் ஒன்றான கங்கைகொண்ட சோழபுரத்தில் சிவன் முதன்மைக் கடவுளாக இருக்கிறார்250 ஆண்டுகள் சோழர் பேரரசின் தலைநகராக விளங்கிய கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள இந்த கோயில், பிரமாண்டமான கலை, சிற்ப வேலைப்பாடுகளுக்கு பெயர் பெற்றதுதிருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றான இக்கோவில் ஐராவதேசுவரர் கோயில், பெருவுடையார் கோயில் ஆகிய மூன்றும் சேர்த்து அழியாத சோழர் பெருங்கோயில் எனப் போற்றப்பட்டு யுனெசுகோவின் பொது ஊழி உலகப்பாரம்பரியக் களப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.  இதன் பிரம்மாண்டமான கோபுரத்தின் உயரம் 55 மீட்டர், அதாவது 180 அடி. 170 மீ உயரமும் 98 மீ அகலமும் கொண்ட ஒரு அழகான முற்றம் உள்ளது. பிரதான மூலவர் தெய்வம் 13 அடி உயரத்துடன் பிரம்மாண்டமாக நின்று அருள்பாலிக்கிறார். கட்டமைப்பின் முக்கிய பகுதி 341 அடி உயரமும் 100 அடி அகலமும் கொண்டது.

60 அடி  நீளமும் 320 அடி  அகலமும் கொண்ட முற்றத்துடன் கூடிய உயர்ந்த மேடைமீது இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளதுகருவறைக்கு முன் அர்த்தமண்டபமும் தூண்களமைந்த முன்மண்டபமும் உள்ளன. கருவறையின் முன் இருபுறமும்அடி உயரமுள்ள துவாரபாலகர் சிலைகள் காணப்படுகின்றன

கருவறைக்குள் சூரிய ஒளியை எதிரொளிக்கும் வகையில் கருவறையை நோக்கியவாறு 660 அடியில் நந்தி அமைக்கப்பட்டுள்ளது.  

 

கருவறையில்  சந்திரக்காந்தக் கல் பதிக்கப்பட்டுள்ளதால் எப்பொழுதும் குளிர்ச்சியாக இருக்கிறது. தெற்குநோக்கிய அம்மன் சன்னிதியிலுள்ள பெரியநாயகி அம்மன் திருஉருவச் சிலையின் உயரம் 9.5 அடி . பிரகதீசுவரர் கருவறையைச் சுற்றி ஐந்து கருவறைகளும் சிம்மக்கிணறும் உள்ளன.

அண்மையில்தான் இக்கோயிலில் கொடி மரம் அமைக்கப்பட்டது.

முதன்மைக் கருவறைச் சுவற்றின் வெளிப்புற மாடங்களில் அர்த்தநாரீசுவரர், நடராசர், பிரம்மன், துர்க்கை, திருமால், சரசுவதி  என ஐம்பதுக்கும் மேற்பட்ட சிற்பங்கள் உள்ளனசோழர் கலைக்குச் சான்றாக விளங்கும் 11ஆம் நூற்றாண்டு காலத்திய வெண்கலச் சிலைகள் இக்கோயிலில் காணப்படுகின்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்கது சுப்பிரமணியர் திருவுருவ வெண்கலச் சிலையாகும். ஒன்பது கோள்களைக் குறிக்கும் ஒற்றைக் கல்லாலான நவக்கிரகம்  இக்கோயிலில் அமைந்துள்ளது.

கல்வெட்டுகளின்படி இக்கோயில் கட்டப்பட்ட ஆண்டு முதலாம் இராசேந்திரன் ஆட்சிக்குவந்த இருபதாம் ஆண்டான பொ.. 1035 ஆகும். கங்கைவரை சென்று பாலப் பேரரசை வெற்றிகொண்ட முதலாம் இராசேந்திரன், தன் தந்தை கட்டியக் கோயிலைப் போன்று தானும் ஒரு கோயில் கட்ட விரும்பினான். இடைக்காலச் சோழத் தலைநகராக விளங்கிய தஞ்சாவூரிலிருந்து தான் புதிதாக நிர்மாணித்த கங்கைகொண்ட சோழபுரம் ஊரைத் தனது தலைநகராக முதலாம் இராசேந்திரன் மாற்றியதிலிருந்து தொடர்ந்து அடுத்த 250 ஆண்டுகளுக்கு கங்கைகொண்ட சோழபுரமே சோழர்களின் தலைநகரமாக விளங்கியது.


முதலாம் இராசேந்திர சோழனுக்குப் பின் வந்த பெரும்பாலான சோழ அரசர்கள் கங்கைகொண்ட சோழபுரத்தில் முடிசூட்டிக் கொண்டனர். இவ்வரசனுக்கு அடுத்து ஆட்சிக்கு வந்த  முதலாம் குலோத்துங்க சோழனால் இந்நகரைச் சுற்றி கோட்டைச் சுவர்கள் கட்டப்பட்டுள்ளன.

 

சேரர், சோழர், பாண்டியர் என மூவேந்தர்களின் சிறப்பைப் பாடும் மூவர் உலாவிலும், தக்கயாகப்பரணியிலும் இந்நகரைப் பற்றிய விரிவான விளக்கங்களைக் காணமுடிகின்றதுசமூக, பொருளாதார, அரசியல் நிகழ்வுகளின் நடுவகமாக விளங்கியுள்ள இக்கோவிலில்,  இசை, நடனம், வெண்கலச் சிலை உருவாக்கம் போன்ற பற்பல கலாச்சார நிகழ்வுகள்   நிகழ்த்தப்பட்டன.

இக்கோயில் இந்தியத் தொல்லியல் துறையினரால்   ஒரு பாரம்பரியமான நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது.

இங்கு சரசுவதி, லட்சுமி இருவரும் தியானக்கோலத்தில் இருப்பதால், இவர்கள் ஞான சரசுவதி, ஞான லட்சுமி என அழைக்கப்படுகின்றனர்.  

9 வயது சிறுமியின் வடிவில் புன்னகைத்த முகத்துடன் 20 திருக்கரங்களுடன் மகிடாசூரனை வதம் செய்த கோலத்தில் அருளுகிறாள். மிக அபூர்வமான இக்கோலத்தைக் கொண்டவளை மங்கள சண்டி என்று அழைக்கிறார்கள்

 இங்குள்ள நந்தி சுண்ணாம்புக் கல்லில் செய்யப்பட்டு தரையில் அமர்ந்துள்ளது. இந்த நந்தியும் மிகவும் பெரியது. சூரியன் உதயமானதிலிருந்து மறையும் வரை நந்தியின் நெற்றியில் பட்டு பிரதிபலிக்கும் சூரிய ஒளிக்கீற்று 200 மீட்டர் தொலைவில் உள்ள இலிங்கத்தின் மீது விழும் காட்சி வேறு எங்கும் காணமுடியாத அற்புத காட்சி. அதேபோல் 160 அடி உயரம் கொண்ட கோபுரத்தின் மீதுள்ள கலசத்தின் நிழல் தஞ்சை கோயிலில் உள்ளது போலவே இங்கும் பூமியில் விழாது.

  கோவிலின் விமானம் கீழே சதுரமாகவும், அதன் மேல் எண்பட்டை வடிவிலும், உச்சிப் பகுதி வட்ட வடிவிலும் அமைக்கப்பட்டு சிவலிங்க வடிவில் காட்சி தரும்இக்கோவிலின்  வளாகத்தில் வடக்கிலும், தெற்கிலும் இரு சிறிய கோவில்கள் அமைந்துள்ளனஅவை முறையே  வட கைலாயம் என்றும் தென் கைலாயம் என்றும் கூறப்படும்வட கைலாய கோவிலில்  பின்னாளில் அம்மன் கற்சிலை வைக்கப்பட்டு அம்மன் கோவிலாகவும் தென் கைலாயம் கற்சிலை  ஏதுமின்றி சிதைந்து காணப்படுகிறது.

 

சோழமன்னர்கள் வாழ்ந்த இடமே மாளிகைமேடு ஆகும். செயங்கொண்டார், ஒட்டக்கூத்தர் முதலிய பெரு மக்கள் இங்கு வாழ்ந்திருந்தார்கள். கலிங்கத்துப்பரணி, விக்ரமசோழன் உலா, இரண்டாம் குலோத்துங்கன் உலா முதலியவை இங்கிருந்து பாடப்பட்டன. சேக்கிழார் பெரிய புராணம் பாடுவதற்குத் தூண்டுகோலாக இருந்ததும் இக்கோவில்தான்.

கங்கைகொண்டசோழீசுவரம் கோயில் தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டத்தில் கும்பகோணத்திலிருந்து சென்னை செல்லும் சாலையில் 35 கி.மீ. தொலைவில் உள்ளது. திருச்சி மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்தில் சயங்கொண்ட சோழபுரத்திருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. சென்னையிலிருந்து வருவோர் சேத்தியாதோப்பு வழியாக மீன்சுருட்டி வந்து, அங்கிருந்து திருச்சி சாலையில் 2 கி.மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம். கோவிலின் பல பகுதிகளில், குறிப்பாக, பிரதான மண்டபத்தில் அற்புதமாகச் செதுக்கப்பட்ட பல சிற்பங்கள் உள்ளன

ஆந்திரா, கர்நாடகா, வங்காளம் போன்ற பல இடங்களிலிருந்து எடுத்து வரப்பட்ட சிற்பங்கள் இக்கோவிலிலும், அருகிலுள்ள கிராமங்களிலும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன

 மாசி சிவராத்திரி, ஐப்பசி பவுர்ணமி, பங்குனித்திருவிழா, மார்கழி திருவாதிரை போன்ற விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

 

காலை 6 மணி முதல் 12 மணி வரை,

மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை கோவில் திறந்திருக்கும்.

 

 

 

 


காகத்தின் நுண்ணறிவு!

  காக்கை நாம் அன்றாடம் பார்க்கிற பறவை. ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பது நாம் இயல்பாகப் பயன்படுத்தும் பழமொழி. நாங்கள் அன்றாடம் கா...