Friday, February 17, 2023

DISCOVERY OF KOREA

 


தமிழ் இலக்கியப் பணியில் கிட்டத்தட்ட 38 ஆண்டுகளாக தொய்வில்லாத ஒரு தொடர்ந்த பயணம் வாய்த்திருப்பதற்கு இறையருளும், தமிழன்னையின் கடைக்கண் பார்வையும் மட்டுமே காரணம். சிறுகதைத் தொகுப்பு, புதினம், கட்டுரைத் தொகுப்பு, கவிதைத் தொகுப்பு, வரலாற்று ஆய்வு, மொழிபெயர்ப்புப் புதினம், மொழிபெயர்ப்புக் கவிதைகள் தொகுப்பு என தமிழ் இலக்கியங்களின் பல்வேறு தளங்களிலும் 35க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டாகிவிட்டது. பள்ளிகள், கல்லூரிகளில் தொடர்ந்து சொற்பொழிவாற்றி வருவதோடு, மாணவர்களுக்கு படைப்பாற்றல் பயிற்சியும் வழங்கி வருகிறேன். ஆனால் இப்போதுதான் முதல் முறையாக ஒரு ஆங்கில நூல் எழுதியுள்ளேன். இதுவரை பல நூல்களுக்கு வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர், கல்விக்கோ. முனைவர் விசுவநாதன் அவர்கள் அணிந்துரை அல்லது விரிவான வாழ்த்துரை வழங்கி கௌரவித்துள்ளார்கள். இந்த ஆங்கில நூலுக்கு வாழ்த்துரை வாங்க பலப்பல நாட்கள் காத்திருந்தாலும், தமது இடைவிடாத பணிக்கிடையிலும் நூலை முழுமையாக வாசித்து அழகாக வாழ்த்துரை வழங்கி என்னை உற்சாகப்படுத்தி தொடர்ந்து பணியாற்றும் உத்வேகத்தையும் அளித்துள்ளார். உண்மையில், தேர்வெழுதிய ஒரு மாணவி பேராசிரியரின் மதிப்புரைக்குக் காத்திருக்கும் ஒரு படபடப்பான சூழலில்தான் காத்திருக்க நேரிட்டது. ஆனாலும் இந்த அற்புதமான வாழ்த்துரை உள்ளம் குளிரச் செய்தது.

அணிந்துரை கேட்டால் அனாவசியமாக, ஓராண்டுக்கும் மேல் ஆகும் பரவாயில்லையா, காத்திருக்க இயலுமா என்று கேட்கும் அறிஞர் பெருமக்களும் இருக்கத்தானே செய்கிறார்கள் ..
குறள் 625
அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும்

Tuesday, February 14, 2023

கன்னியாகுமரி நினைவலைகள்!இந்தியாவின் தென்கோடியில் உள்ள மாவட்டம் கன்னியாகுமரி. வங்காள விரிகுடாவும், இந்தியப் பெருங்கடலும் அரேபியக் கடலும் சந்திக்கும் திரிவேணி சங்கம்.  ஒளிமயமான ஞாயிறு எழுச்சிக்கும், மங்கிய மாலைப் பொழுதின் அமைதியான சூரிய மறைவிற்கும், நிலவின் உதயத்திற்கும் கண் கொள்ளாக் காட்சியின் சாட்சியாக நிற்கும் அற்புதமான கடற்கரை! மூன்று பக்கங்களிலும் கடலும், மேற்குத் தொடர்ச்சி மலைகளின் வடக்குப் பகுதியை எல்லையாகவும் கொண்ட நிலப்பரப்பைக் கொண்டுள்ளது. தமிழகத்தில் அரபிக்கடலை நோக்கிய ஒரே மாவட்டம் கன்னியாகுமரி தான். புவியியல் முறையில் குமரிமுனை என்று அறியப்பட்டது. 1956 – நவம்பா் முதல் நாளன்று தோவாளை, அகத்தீசுவரம், கல்குளம் மற்றும் விளவங்கோடு ஆகிய நான்கு தாலுகாக்கள் ஒன்றிணைக்கப்பட்டு நாகா்கோவிலை தலைமை இடமாகக் கொண்டு தமிழ்நாட்டில் கன்னியாகுமரி என்ற புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது.

 சுவாமி விவேகானந்தர் பேருண்மையைக் கண்ட அற்புதமான பாறை. குளிர்ந்த கடற்காற்றும்,ர்த்தனமிடும் அலைகளும் சூழ்ந்திருக்கும் புதிரான பாறை. இந்திய மண்ணின் ஆன்மீக ஒளியை உலகிற்கு எடுத்துச் சென்ற தலைசிறந்த மகானுக்கு ஒரு அஞ்சலி. காலத்தால் அழியாத, நினைவகமாக நிலைத்து நிற்கும் விவேகானந்தர் பாறை. இந்தப் பாறை லட்சத்தீவு கடலால் சூழப்பட்டுள்ளது இந்தியாவில் அதிகம் பார்வையிடப்படும் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான விவேகானந்தர் பாறை நினைவகம் கடலில் உள்ள பாறையின் மீது, நிலப்பரப்பில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கன்னியாகுமரி, இந்தியாவின் தென் முனையில் அமைந்துள்ள ஒரு அழகிய நகரம். வரலாற்று, பண்பாட்டு சின்னங்கள் பல ஒருங்கே அமையப்பெற்றிருக்கும் இந்த இடம் கடற்கரைக்காகவும், தமிழின் பெருமையை உலகறியச் செய்த திருவள்ளுவரின் புகழை பறைசாற்றும் திருவுருவச் சிலைக்காகவும் சுற்றுலாப் பயணிகளால் பெரிதும் விரும்பப்படுவது.

19ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த தத்துவஞானியும்,  சொற்பொழிவாருமான, சுவாமி விவேகானந்தர் 1893 இல் சிகாகோவில் நடைபெற்ற உலக மதங்களின் பாராளுமன்றத்தில் பங்குபெற்று இந்தியாவின் ஆன்மீகக் கலாச்சாரப் பெருமையை உலகுக்கு எடுத்துச் சென்றவரின் நினைவாக 1970 இல் நினைவுச்சின்னம் உள்ள பாறை விவேகானந்தர் ஞானம் பெற்ற இடத்தில் கட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்தப் பாறையில் தான் கன்னியாகுமரி அம்மன் சிவபெருமானிடம் பிரார்த்தனை செய்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன. பாறையில் சிறப்பாகப் பாதுகாக்கப்பட்ட ஒரு பகுதி கன்னியாகுமரி அம்மனின் பாதத்தின் முத்திரை என்றும் நம்பப்படுகிறது. சுவாமியின் நினைவுச்சின்னம் பல்வேறு கட்டிடக்கலை வகைகளின் நேர்த்தியான கலவையைக் காட்டுகிறது. அம்மனின்  திருப்பாத மண்டபமும், விவேகானந்தர் மண்டபமும் நம் மண்ணிற்கு பெருமை சேர்ப்பன. வளாகத்தில் சுவாமி விவேகானந்தரின் கம்பீரமான வெண்கலச் சிலையும் உள்ளது. 1892ம் ஆண்டு விவேகானந்தர் கன்னியாகுமரிக்கு வருகை தந்ததாகவும், அப்போது அங்கிருந்து நீந்தி சென்று பாறையில் தியானம் செய்ததாகவும் நம்பப்படுகிறது. இதன் காரணமாகவே விவேகானந்தர் நினைவு மண்டபம் அதே பாறையில் எழுப்பப்பட்டுள்ளது.

திருவள்ளுவர் திருவுருவச் சிலை, 1990ம் ஆண்டு தொடங்கப்பட்டு சுமார் 10 வருடங்கள் அமைக்கப்பட்ட, திருவள்ளுவர் எழுதிய திருக்குறளின் மொத்த அதிகாரத்தின் எண்ணிக்கையான 133 அடி உயரமுள்ள அற்புதமான சிலை. அதிகாரத்துக்கு ஒன்று என 133 குறள்களும் உள்ளே பொறிக்கப்பட்டிருக்கின்றன.
இந்தியாவின் மிக உயரமான சிலைகளுள் ஒன்றாகவும் விளங்கும் சிலை இது.