Tuesday, March 8, 2011

அன்பே தெய்வம் !அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு. - திருக்குறள்.

ஆக்னஸ் கோங்ஸா பொஜாஹியு, பிறந்தது யுகோஸ்லேவியா நாட்டின், ஸ்கோப்ஜே கிராமத்தில்., 1910ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 27 ஆம் நாள் அல்பேனிய தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். ரோமன் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்த இவர் மிகுந்த மத நம்பிக்கை உடையவர். முதல் உலகப் போரில் தன்னுடைய குடும்பம் அடைந்த வேதனைகளும், சோதனைகளும் அவரை மிகவும் பாதித்தன. இந்த சமயத்தில் தான் இந்தியாவிலுள்ள வங்க மாநிலத்தில் மிகவும் பின் தங்கிய நிலையிலுள்ள மக்களுக்கு ஒரு கிறித்துவ சேவைக் குழு தொண்டு புரிந்து கொண்டிருந்ததை அறிந்து, தானும் அவர்களுடன் சேர்ந்து தொண்டு புரியும் எண்ணம் மலர்ந்தது. இதன் விளைவாகவே, தன்னுடைய 18 வது வயதிலேயே துறவறம் பூண்டு, பற்றுக்களியெல்லாம் விட்டு தன் நாடான யுகோஸ்லேவியாவிலேயே பெண் துறவியானார்.

அயர்லாந்தில் டப்ளின் நகரத்தில் ஆங்கில மொழிப் பயிற்சியும், மதப்பயிற்சியும் பெற்ற போது, அவர் எண்ணம் இந்தியாவிலுள்ள வங்காளத்தின் மீது சென்றது. எண்டாலி என்னுமிடத்தில் அமைந்துள்ள புனித மேரி பள்ளியில் புவியியல் ஆசியையாகச் சேர்ந்தார். இதற்கு முன்பு டார்ஜிலிங்கில் உள்ள லோரடோ கன்னிமாடத்தில் கன்னிமார்களுக்குரிய ஜபம், பிரார்த்தனை முறைகள் அனைத்தையும் கற்றுக் கொண்டார். தன்னுடைய சந்நியாசப் பெயராக, தெரெஸா மார்ட்டின் என்று மாற்றிக் கொண்டார் .ஆம், மக்கள் தொண்டே நகேசன் தொண்டு என்று தன் வாழ்நாள் முழுவதையுமே மக்கள் தொண்டிற்காகவே அர்ப்பணித்துக் கொண்ட நம் அன்னை தெரெசாதான் அவர்!

புனித மேரி பள்ளியில் 17 ஆண்டுகள் தங்கி ஆசிரியப்பணியும் பின்பு முதல்வர் பணியும் மேற்கொண்டார்.1947 ம் ஆண்டின், வரலாற்று நிகழ்வான பிரிவினையின் காரணமான இடப்பெயர்வு, கொல்கத்தா மக்களை பசி, பட்டினி, குழப்பம் என்றும், கிழக்கு பாகிஸ்தானத்திலிருந்து வேரோடு பிடுங்கி எறியப்பட்ட மக்கள் வெள்ளம், நடுத்தெருவில்..............பிரிட்டானிய ஆட்சியின் இரண்டாவது பெரிய நகரத்தின் சரித்திரம் மாறிக்கொண்டிருந்தது. இந்த அவலம் அன்னை தெரெசாவின் மனதில் பெரும் ரணத்தை ஏற்படுத்தியது.1948 இல் புனித தெரெசா பள்ளியில் ஒரு மருத்துவமனையை திறந்தார். இந்த ஆண்டிலேயே இந்தியக் குடியுரிமையும் கிடைத்தது அன்னைக்கு. 1950 இல் கல்கத்தாவில் ஏழைகளின் துயரம் துடைக்கும் சமயம் ஒன்று நிறுவப்பட்டது. தற்போதைய ஆசார்ய ஜகதீஸ் போஸ் தெருவில் அன்பு இல்லம் செயல்ப்ட்டுக் கொண்டிருக்கிறது.

அன்னையுடன் சேர்ந்து தொண்டு செய்து கொண்டிருந்த மற்ற சேவை சகோதரிகள் நாள்தோறும் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் வகுக்கப்பட்டன.

அதிகாலை 4.30 மணிக்கு எழுந்து, முதல் இரண்டு மணி நேரம் தியானத்திலும், பிரார்த்தனையிலும், கூட்டு வழிபாட்டிலும் ஈடுபட்டு, அடுத்து எளிய உணவு உட்கொண்டு, சேவைப்பணி செய்ய இரண்டு அல்லது மூன்று குழுக்களாக பிரிந்து சென்று, நகரத்தின் முக்கிய சாலைகள், குடிசைப்ப்குதிகள் நகரத்தின் சந்துக்கள் போன்ற இடங்களுக்கெல்லாம் சென்று அங்குள்ள அனாதைகளையும், பசியாலும், பிணீயாலும் அல்லலுறுபவர்களையும் இறக்கும் தருவாயில் அனதையாக துன்புறுபவர்களையும் அழைத்து வருவார்கள். குப்பைத் தொட்டிகளில் வீசப்படும் குழந்தைகளைக் கூட தேடி எடுத்து வருவார்கள்.

தொழு நோயால் பாதிக்கப்பட்டு அறுவறுக்கத்தக்க நிலையில் இருப்பவர்களையும், துளியும் அறுவறுப்பு இல்லாமல் எடுத்து வ்ந்து சுத்தம் செய்து மருத்துவ உதவியும் அளித்து இப்படி அவ்ர்கள் செய்யும் சேவை மிக உயர்ந்ததாகும்.

அல்லல்படும் அனாதைகள் கண்னில் படும் போதெல்லாம் அன்னையின் கண்கள் குளமாகும். அவர்கள் இருக்கும் இடம் எவ்வளவு அசுத்தமாக இருந்தாலும் அவர் தயங்காமல் அவரிடம் நெருங்கி, அவர்களுக்குத் தேவையான பணிவிடைகள் செய்து காப்பாற்றத் தயங்க மாட்டார். அன்னையின் அமெரிக்க நண்பர்கள் பரிசாக அளித்த ஆம்புலன்ஸ் உதவி கொண்டு நடமாடும் மருத்துவமனையைத் துவங்கினார்.கல்கத்தா நகருக்கு அருகில் ’பிரேமதானம்’ என்ற பெயரில் தொழுநோயாளிகளுக்கு ஒரு மருத்துவமனை கட்டினார். அன்னை இந்நோயாளிகளுக்கு ஆற்றிய தொண்டு மகத்தானது. இந்தியாவில் மட்டும் 40 இலட்சம் பேர் இந்நோயால் வருந்துகின்றனர். இன்று உலகம் முழுவதும் சராசரியாக 650 நடமாடும் மருத்துவமனைகள் பரவி, 60 இலட்சம் தொழு நோயாளிகளுக்கு சேவை செய்து வருகின்றனர்.

அன்னை தெரெசாவிடம் இப்பணியில் ஈடுபடும் எண்ணம் எங்கனம் வந்தது, என்றுகேட்டால், ஏசு கிறிஸ்துவின் புனித பைபிளில் இருந்துதான் என்பாராம்.ஆன்மீக பலம்தானே ஆன்ம பலம். அன்னை தெரெசாவின் அறக்கட்டளை உலகெங்கிலும் 450 மையங்களில் செயல்பட்டுவருகின்றன. 1985 ஆம் ஆண்டு எய்ட்ஸ் நோயாளிகளுக்கென முதல் மருத்துவ சேவை இல்லம் நியூயார்க்கில் ஏற்படுத்தப்பட்டது. குவாட்டிமலாவில் நில நடுக்கம் ஏற்பட்டபோது வீடு இழந்தவர்களுக்கென அன்னை தெரெசாவால் அங்கு ஒரு மையம் உருவாக்கப்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட்வர்களுக்கான ப்துகாப்பும் அளிக்கப்பட்டது. நூற்றுக்கும் மேலான சேரிப் பள்ளிக்கூடங்களும், அனாதைக் குழந்தைகளுக்கான விடுதிகளும், குடி, போதை ம்ருந்துகளுக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு இல்லங்களும், மீட்பு மையங்களும் நிறுவி செயல்படுத்தினார். 2000 க்கும் மேற்பட்ட சகோதரிகளும், 750 மருத்துவ ஊர்திகளும் சேவையில் ஈடுபட்டன.

1962 ஆம் ஆண்டு அன்னையின் தன்னலமற்ற சேவையை கௌரவிக்கும் பொருட்டு , இந்திய அரசாங்கத்தால்’ பத்மஸ்ரீ’விருதும், தொடர்ந்து, நாட்டின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருதும் 1980 ம் ஆண்டு வழங்கப்பட்டது. 1979 இல் ‘நோபல் பரிசு’ மற்றும் 1984 இல் எலிசபெத் மகாராணியிடம் பாராட்டுப் பத்திரமும் பெற்றார்.

அன்னை தெரெசா, உலக அன்னையாக இருப்பினும், அவர் தன்னை ஒரு இந்திய பிரஜை என்று சொல்லிக் கொள்வதிலேயே பெரும் நாட்டம் கொண்டார். ‘நான் இந்தியன். இந்தியா என் நாடு’, என்று சொல்லிக் கொள்வதிலேயே பெருமைப் ப்ட்டார்.

ஏழையின் சிரிப்பிலும், பிஞ்சு நெஞ்சங்களின் கண்ணீரிலும், புன்னகையிலும் ஏசு பிரானையேக் கண்ட அன்னையின் உயிர், 1997 ஆம் ஆண்டு, இரவு 9.30 மணிக்கு, செப்டம்பர் 5 ஆம் தேதி அந்த வெண் புறா ஆண்டவனில் சென்று கலந்தது. உலக மக்களின் ந்ல்னுக்காக தன் வாழ்க்கை முழுவதையுமே அர்ப்பணித்த அன்னை என்ற தீபம் அணைந்தபோது, உலகத்தின் ஒவ்வொரு குடிமகனும் தன் தாயை இழந்த சோகத்தை உணர்ந்தனர் என்றால் அது மிகையாகாது. எதோ பிறந்தோம், வாழ்ந்தோம் என்று இல்லாது, உலக மாந்தர் அத்துனை உள்ளங்களிலும் நீங்கா இடம் பிடித்த அன்னை இன்றும் தன்னலமற்ற சேவை உள்ளம் கொண்ட அத்தனை இதயங்களிலும் வாழ்ந்து கொண்டிருப்பதும் சத்தியம். தாய்மை என்பதற்கு சாதி மதம் என்ற பேதம் இல்லை என்பதனை உணர்த்திய அன்னை சக்தியின் மறு அவதாரம் அல்லவா?

புனித அன்னை தெரெசா போன்று இன்னொரு அன்னை இந்த பூமியில் அவதரிக்க இன்னும் எத்துனை கோடி ஆண்டுகள் ஆகுமோ? அன்பின் வழியே அறவழி, அதுவே இறைநெறி என்ற அரிய கருத்துக்களின் எளிய உருவம் தான் நம் அன்னை தெரெசா. அவருடைய சேவை இல்லத்தில் காணப்படும் வாசகம் :

மௌனத்தின் பலன் பிரார்த்தனை
பிரார்த்தனையின் பலன் இறை நம்பிக்கை
இறை நம்பிக்கையின் பலன் அன்பு
அந்த அன்பின் பலனே சேவை
இந்த சேவையின் பலன் உலக அமைதி!!

Sunday, March 6, 2011

பாரதிக் கல்வி

பாரதிக் கல்வி - ஆசிரியர் - திரு ஸ்ரீரங்கம் மோகனரங்கன்.

பாட்டுக்கொரு பாரதி, என சிறு குழந்தையும் போற்றிப் புகழ் பாடும் பாரதி மிக எளிதாக மக்களின் மனதில் இடம் பிடித்தவன். எத்துனை ஆயிரம் கவிஞர்கள் தோன்றிடினும், பாரதியின் முதன்மை இடத்தை இன்று வரை பிடித்தவர்கள் எவரும் இலர். 39 ஆண்டுகளே வாழ்ந்த பாரதியின் பன்முக சாதனைகள் ஆச்சரியத்திற்கு மட்டுமன்றி பெரும் ஆய்வுகளுக்கும் உட்படுத்தப்படுவதும் இயல்பு.இவர் தமிழ் மொழிக்குச் செய்த தொண்டுகள், அவரது சமுதாயச் சீர்திருத்தக் கருத்துக்களையும், புறந்தள்ளிவிடுகிறது. ஸ்ரீ மகாதேவன் போன்று பல்வேறு எழுத்தாளர்கள் பாரதியின் படைப்புக்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டாலும், திரு ஸ்ரீரங்கம் மோகனரங்கன் அவர்களின் பாரதியின் படைப்புக்கள் குறித்த பார்வை மிகவும் வித்தியாசமான ஒன்றாகவே உள்ளது என்றால் அது மிகையாகாது.

தன்னுடைய 9 ஆம் வயதில் தந்தை தமக்கு பரிசாக அளித்த ஸ்ரீமகள் கம்பெனி வெளியிட்ட பாரதியார் கவிதைகள் என்ற புத்தகத்தின் மூலமே தனக்கு பாரதியின் படைப்புக்களின் மீது ஆர்வம் ஏற்பட்டு, அந்த நாள் முதல், தற்போது வரை பன்முறை பாரதியோடு மனதளவில் வாதப்போர் நடத்தியிருப்பதாகக் கூறும் ஆசிரியரின் கூற்று, அதனை அறியும் ஆவலில் புத்தகத்தின் ஊடே, அவருடனேயே பயணிக்கச் செய்கிறது.

ஆரம்பத்திலேயே பாரதி ஒரு மேலோட்டமான கவி என்று தன் வாதத்தை துணிச்சலாகத் துவக்குகிறார் ஆசிரியர்.

பாரதி இந்தியாவின் பிரதான சிந்தனையாளர்களில் ஒருவன் என்றும், உலகையும் இந்தியாவையும், உள்ளபடி காட்ட தமிழனுக்குக் காலம் விட்டு வைத்த ஒற்றைக் குருகுலம் என்பது திரு சீனி விசுவநாதன் கொண்டுவந்த பாரதியின் படைப்புக்களுக்குப் பிறகுதான் என்கிறார், ஆசிரியர்.

பாரதியின் பாடல்கள் உரை எழுதி புரிந்துக் கொள்ள வேண்டியன என்றும், பாரதி ஓர் எளிமைக் கவிஞர் என்ற வாதிகளைச் சாடியும் நம்மை சற்றே, குழப்பத்தில் ஆழ்த்துகிறார்.

கவிதை என்றால் அது பாரதிதான், அவன் ஒரு உலகக் கவி, மகாகவி போன்ற தோத்திரக் கூற்றுகளே, விடுதலைக்கு முன்னும் பின்னும், இன்று வரை கூட பாரதியின் அணுகுமுறையைத் தீர்மானித்து வந்திருப்பதாகவும், மாறாக வழிபாட்டாளர்களின் அழிச்சாட்டியத்தைக் கண்டிப்பது பாரதியைப் பற்றிய வெறுப்பாக மாறுவதும், வழிபடும், வெறுப்பும் இரண்டும் உள்நோக்கம் கொண்டவை என்றும், அவரை உள்ளபடி புரிந்து கொள்ளுதலே அவருக்கு நாம் செய்யும் உண்மையான மதிப்பு, அவற்றில் மாறுபடுவோமாயின் அது தோற்றரவு. நமது பார்வையின் பிழையே என்று கூறும் போது, வாசகராகிய நம்மை நிமிர்ந்து உட்காரச் செய்து விடுகிறார், ஏதோ மாறுபட்ட கோணத்தில் எதையோ சொல்லப் போகிறார் என்ற எண்ணத்தில்!

இளம் பிராய பாலகனாய் தாம் கண்ட பாரதியின் ஞானப்பித்தர் போன்றதொரு தோற்றம், நம் ஒவ்வொருவரின் மனக்கண்ணின் முன்னே விரியும் நிதர்சனமான காட்சிகளே. தன் அழகான வார்த்தைகளின் பயன்பாட்டில் அக்காட்சியைக் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியது அவர்தம் எழுத்தின் வெற்றியே.

இத்துணை அழகான பதிவை ஏற்படுத்தியவர், அடுத்த வரியிலேயே, இதுவே பாரதிக்கு இழைக்கப்பட்டிருக்கும் கொடுமை என்று, தாம் உணர்ந்து கொண்டது அவர்தம் படைப்பை ஊன்றிக் கற்கத் தொடங்கிய பின்புதான் என்னும் போது, அச்சொல் அம்பு திருப்பி வந்து நம்மையேத் தாக்குகின்றது........

பாரதி என்றாலே ஆவேசமான பேச்சு என்ற சிலப்பதிகாரத்தின் அடியார்க்கு நல்லார் உரையின் மூலமே தாம் உணர்ந்த போதுதான், வசனக் கவிதையிலும் கவிஞனின் பிரசன்னத்தை மனம் தேடத் தொடங்கியதையும், பாஞ்சாலி சபதம் உணர்ச்சியோடு மல்லுக்கட்டும் கவிதை, கண்ணன் பாட்டிலும், குயில் பாட்டிலும்தான் தன்னைச் சுயமாக நாட்டிக் கொள்கிறது என்று ஒவ்வொரு பாட்டையும் அழகாக ஒற்றை வரியில் மதிப்பிட்டிருக்கும், வார்த்தை ஜாலம் !

முதன் முறையாக நூல் வடிவம் கண்ட மாதவ சிவஞான யோகிகளின் சிவஞான மாபாடியம், பாரதியின் மிகப் பெரிய எதிர்பார்ப்பிற்குள்ளானதையும், அவர்தம் காசி வாசத்தால், ஆரம்பத்தில் தேவாரம் மற்றும் திருவாசகம் முதலியவற்றில் திளைத்திருந்திருப்பதையும், வைணவ நூல்களின் அறிமுகம் அற்றவராக இருந்ததையும் தெளிவுற விளக்கியுள்ளார்.

1910 க்குப் பிறகு அரவிந்தரோடு வேத ஆய்வில் ஈடுபட்ட பின்னர்தான் பாரதியாருக்கு ஆழ்வார்களின் பாடல்களின் அறிமுகம் கிடைத்திருப்பதையும் நம்மாழ்வார் மீதும், ஆண்டாள் மீதும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட சில கட்டுரைகள் காணப்படுவதாகவும் கூறுகிறார். ‘உசாத்துணை’ போன்ற அழகிய, ஆனால் அதிகம் புழக்கத்தில் இல்லாத பல தமிழ் சொற்களும் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த இடத்தில் பாரதியின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் வார்த்தைக்கு வார்த்தை அதன் பொருளை அலசி ஆய்ந்து, வியந்து, இறுதியில், ”நம்மாழ்வார் பாடலை மொழிபெயர்க்கும் போது பாரதியாரின் அனுமானரீதியிலான சிக்கலைப் பார்க்கும் போது இந்த நாலாவது கண்ணி பாரதியார் எழுதியதன்றோ என்ற ஐயம் வலுப்படுகிறது” என்ற முடிவில் அவர்தம் ஆழ்ந்த சிந்தனையின் மூலம் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறார்.

சைவமும், சாக்தமும், வைணவமும் அவரது உள்ளீடு பாட்டில் கலந்தே இருந்திருக்கிறது என்பதை ‘திருக்கோவையாரின் உட்கருத்தை கண்ணன் என்ற பாட்டுடைத் தெய்வத்திற்கு ஏற்றிப் பாடப்பட்டவை போலும்’, என்ற கூற்றின் மூலமாகவும் அவர் கண்ணனைக் காதலியாகவும், ஆன்மாவைக் காதலனாகவும் அமைத்துப் பாடியதைச் சிலாகித்திருப்பதன் மூலமாகவும், தன்னுடைய ஆழ்ந்த சைவ மற்றும் வைணவ ஞானத்தையும் தெள்ளத் தெளிவுற விளங்கச் செய்கிறார் இந்த வித்தகர்.

விவேகாநந்தரிடத்திலும் விமர்சன ரீதியான பார்வை உடையவர் பாரதி என்பதையும் ஆய்ந்தளித்திருக்கிறார் ஆசிரியர்.

‘நிற்பதுவே நடப்பதுவே, நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ’ என்ற பாரதியின் இனிமையான பாடலின் மூல நாதத்தின் காரணம் ஆசிரியரின் பார்வையில் வெளிப்படுவது, வாசகரையும் பல்வேறு விதமாக சிந்திக்கத் தூண்டுவதாக அமைந்துள்ளது எனலாம்.

பாரதி, ‘விவேகானந்தர் துறவறம் மேற்கொள்ளாது, இல்லறத்தில் இருந்திருப்பாரேயானால் இந்தியாவிற்கு அளப்பரிய நன்மைகள் புரிந்திருப்பார் என்று கூறியிருப்பதைப் போலவே ஆசிரியரும், பாரதியும் பொது வாழ்வில் மிகவும் ஈடுபடாதிருந்தால் நமக்கு ஒரு சிறந்த கவிப்புதையலே கிடைத்திருக்கும் என்ற ஏக்கத்தின் வெளிப்பாடும் நிதர்சனமாகிறது.

பாரதியின் ஒவ்வொரு பாடலுக்கான களத்துடனும் பின்னிப் பிணைந்து, அதனூடே சென்று முத்து முத்தான வார்த்தைகளில் வெளிப்படுத்தியிருப்பது ஆசிரியரின் வெற்றியே.

ஆசிரியர் திரு மோகனரங்கன் அவர்களின் மற்ற பல்வேறு கவிதைகளும், கட்டுரைகளும் எளிய நடையில் எழுதப்படவில்லையே என்ற பலரின் ஆதங்கங்களின் பதிலாக, அவர் கூறும் கருத்து, பாரதியின் பாடலை உதாரணமாகக் காட்டி, இதைப்போல எளிமையாக இல்லையே கவிதை, என்று எவரேனும் கேட்கும் பொருட்டு, கேட்பவருக்குக் கவிதையின் தேவை இன்னும் எழவில்லை என்றுதான் நினைக்க வேண்டி இருக்கிறது, என்ற கூற்றில் வாசகரை மட்டுமன்றி, பாரதியையும் சேர்த்து, துணிந்து சாடியுள்ளார், தொடர்ந்த தம் கருத்துக்களின் மூலமாக.

‘பாரத தேசம்’ என்ற பாடலில் தமிழ் நாட்டைப் பற்றி மறந்த பாரதி, எந்த சம்பந்தமும் இல்லாத சிங்கமராட்டியரையும், கவிதையும் இணைத்து, அனைத்திற்கும் பாடலின் உணர்ச்சியில் கருத்துத் துல்லியம் தவறிப் போதல், ஆனால் உள்நோக்கத்தினால் அன்று, என்று வெகு சாமர்த்தியமாக வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் சாடியிருக்கிறார் ஆசிரியர்.

இதே காரணம் கொண்டு பெண் விடுதலைக் குறித்த தெளிவான உரைநடையையும், தம்முடைய பாரதி அறுபத்தாறினில் எழுதிய பாடலின் சாரத்தையும் ஒப்பிட்டு இறுதியில் தம் தீர்ப்பாக, பெண் விடுதலை எனும் தலைப்பில், பெண்ணடிமைத்தனம் மிஞ்சியிருப்பதன் காரணம் பாடலின் உணர்ச்சித் தீவிரம் தன் போக்குக்கு எதையோ கேட்டுக் கொண்டிருக்கிறது என்று பகன்றிருப்பது நம்மையும் அதே கோணத்தில் சிந்திக்கத் தூண்டுவதும் தவிர்க்க இயலாததாகிறது.

குயில் பாட்டில், ‘அந்த மூன்று வரிகள் இல்லாதிருப்பின் குயில் இன்னும் ஒரு மாற்று சிறந்திருக்கும் என்பதில் ஐயமில்லை’, என்ற ஆசிரியரின் கூற்று ஆச்சரியத்தின் ஊற்று!

இதே குயில் பாட்டு குறித்து ஸ்ரீமகாதேவன் அவர்களின் மதிப்புரையும் சற்று காணலாம் கீழே.........

//sri Mahadevan’s opinion of Bharati’s ‘Kuyil Pattu’ as having reached the peak of his poetic art will be shared by many others. Even the statement that “the artistic soul freed from the urgencies and conflicts of mundane existence floats on a sea of unalloyed happiness,” will receive instantaneous agreement from many others. But one would just like to make a gentle observation by way of criticism of that poem that, however delightful it may be, however happily wedded may be its unforgettable melody with deep meaning, still there is a kind of vagueness in the poet’s inability to sustain the continuation to a finale of the story of the Bull and the Monkey, whether you call it sheer allegory or symbology.//


தொடரும்........