Friday, January 7, 2011

காதல் சின்னம்.


காதல் சின்னம்

அற்றைத் திங்களின்
அற்புத நிலவொளியில்
அரசனின் அந்தப்புரத்தின்
அரசனையில் அழகுப் பதுமையாய்
அன்பு மனம் கலந்திருந்த
அரிதான தருணமதில்
அட்சர சுத்தமாய்
அன்புக் கட்டளையிட்டாள்
அரியணைப் பதுமையாம் மும்தாசு.

இற்றைத் திங்களில்
இந் நிலவொளியில்
இம்மையில் இனியும்
இச்சை கொண்டொரு
இல்லாளை வேண்டாமல்
இவ்விரண்டு மக்களையும்
இன்பமுற வாழ வழி செய்து
இந்நிலையை காலம் முற்றும்
இப்புவியுலக காதலர் அனைவரும்
இறுமாப்புடன் நிமிந்து நோக்கும் வண்ணம்
இசைபட பளிங்கு மாளிகையது அமைத்து
இச்சகத்து மாந்தரும் இன்பம் பெற
இணையிலாதொரு காதல் சின்னம் அமைக்கவே

ஓம்காரமாய் ஓங்கி ஒலிக்குதொரு
ஒய்யார மண்டபம் ஒயிலாய்
ஒத்த மனமுடைய மனிதரையும்
ஒண்ணாய் உயிர் சேர்க்கச் செய்கிறது
ஒருமையாய் ஓய்ந்து போன உள்ளமும்
ஒத்தாரை உறவோடு ஏற்றுக் கொள்ளும்
ஒப்புயர்வில்லா உன்னத நிலையையும்
ஒருகாலும் மாறாத அன்பையும்
ஓங்கி உலகளந்த உத்தமன்
ஓம்கார நாதனின் தண்ணளி வீசி
ஓங்கி உயர்ந்து நிற்கும் மாமலையாமே!!

Sunday, January 2, 2011

சுடர் ஒளி.

சுடர் ஒளி

ஓர் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட சிறுகதை.


காலை நேர பரபரப்பு. மருத்துவர் குழு ரவுண்ட்ஸ் வரும் நேரம். ஒரு புறம் அறையை சுத்தப்படுத்தும் பணியாளர்கள். மறுபுறம் நோயாளிகளுக்குத் தேவையான பணிவிடைகள் செய்யும் செவிலியர்கள் என்று மருத்துவமனை அல்லோகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. 106 ஆம் எண் அறைக்கு தனலட்சுமி புதிதாக வந்து சேர்ந்திருக்கும் நோயாளி. கணவர் ராதாகிருஷ்ணன் ஒரு மத்திய அரசு நிறுவனத்தின் உயர் பதவியில் இருப்பவர். தனலட்சுமி நல்ல தெய்வீகக் களையான முகம். பார்த்தவுடன் கையெடுத்துக் கும்பிடத் தோன்றும் கம்பீரமானதோற்றம்.

உடல் நிலை மோசமான அந்நிலையிலும் காலையில் டவல் பாத் எடுத்து, அழகாக நெற்றியில் குங்குமப் பொட்டிட்டு , இளம் பச்சை வண்ணத்தில் சுங்கடி பட்டுச் சேலையும் அதற்கு ஏற்றாற் போல அதேவண்ண இரவிக்கையும் அணிந்து, இலட்சுமி அம்சமாகவே காட்சியளித்தார். அந்த வார்ட் பக்கம் செல்பவர்கள் அவரைப் பார்த்த மாத்திரத்தில் இந்த அம்மாவிற்கு என்ன வியாதியாக இருக்கும், வயதும் நடுத்தர வயதுதான் என்று சந்தேகத்தோடு மறுபடியும் திரும்பிப் பார்க்காமல் செல்ல மனம் வராது.

அன்று காலை நர்ஸ் நம்ருதா டியூட்டிக்கு நான்கு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு வந்தாள். தனலட்சுமியை முதன் முதலில் பார்த்தவுடன் ஒரு மரியாதை தோன்றினாலும் அவருடைய கேஸ் ஷீட்டை பார்க்கும் ஆவல்தான் அதிகமானது. அதற்கான முயற்சியில் இருந்த போது, தனலட்சுமி நம்ருதாவை ஏற இறங்க பார்த்து விட்டு,

“ என்னம்மா, இது எத்தனாவது மாதம்? வயிறு பெரிதாக உள்ளதே?”, என்றாள்.

நம்ருதாவும், “ எட்டு மாதம்”, என்றாள், சற்றே நாணத்தால் தலை குனிந்தபடி.

“ ஏம்மா, மாதம் நெருங்கிவிட்டது போல் உள்ளதே. வயிறு நன்றாக இறங்கியுள்ளதே. மெட்டர்னிட்டி லீவ் எடுக்கவில்லையா?,” என்றாள்.

பதில் சொல்ல சற்று தயங்கினாலும், தனலட்சுமியின் அக்கரையான பேச்சும், அன்பான பார்வையும், அவள் கேள்விக்கு பதில் சொல்வதில் எந்த தயக்கமும் காட்ட முடியவில்லை நம்ருதாவால்.

தன் கணவன் ரயில்வே காவல் துறை அதிகாரியாக பணிபுரிந்ததால் அதிக அழுத்தம் காரணமாக மதுப் பழக்கத்திற்கு அடிமையானதன் விளைவாக இன்று பக்கவாதத்தினால் அவதிப் படுவதாகவும், பணிக்குச் செல்ல முடியாத வேதனையுடன் மருத்துவச் செலவின் பாரமும் சேர்ந்து தன்னால் விடுமுறை எடுக்க முடியாத சூழலை உருவாக்கியதன் பின்னணியை தயக்கமின்றி அவளால் கூற முடிந்தது. எட்டு ஆண்டுகளாக குழந்தைப்பேறு இல்லாமல் தவித்த தங்களுக்கு ஆண்டவர் கருணையால் தற்போது கிடைத்த வரத்தை பொக்கிஷமாக காக்க வேண்டிய கட்டாயத்தையும் மனம் விட்டு ஒரு தாயிடம் கொட்டித் தீர்ப்பது போல கொட்டித் தீர்த்தாள் நம்ருதா. காதல் மணம் புரிந்த காரணத்தினால் , இரு குடும்பத்தாரின் உறவும் இல்லாமல் போன சோகக் கதையும் இணைந்து இன்று தன்னை பாடாய்ப் படுத்துவதைத் தவிர்க்க முடியாமல் ஏங்கும் ஏக்கத்தை அவள் வார்த்தைகள் தெளிவாக படம்பிடித்துக் காட்டின.

பேசிக் கொண்டே தனலட்சுமி அம்மாவின் கேஸ் ஷீட்டை எடுக்கப் போனவள், அட்டெண்டர் வந்து, ஒரு அவசர கேஸ் வந்துள்ளதால் மருத்துவர் அழைப்பதாகக் கூறவும் அப்படியே விட்டு விட்டு பிற்பாடு வருவதாகக் கூறிச் சென்று விட்டாள். ஒரு பிரசவ கேஸ், குழந்தை கொடி சுற்றி இருந்ததால் மிகச் சிரமமான நிலையில் நல்லபடியாக தாயிடமிருந்து சேய் பிரிந்து வருவதற்குள் நேரம் போனதே தெரியவில்லை. இரவு வரை பெரும் போராட்டமாகி விட்டது. கணவனின் நினைவு வந்த மாத்திரத்தில், வேறு நினைவெதுவும் அற்றவளாக வீடு திரும்பினாள், நம்ருதா.

மறுநாள் காலை பணிக்கு வந்தவுடன், ஏனோ தனலட்சுமி அம்மாவின் நினைவாகவே இருந்தது நம்ருதாவிற்கு. உடனடியாகச் சென்று அவருடைய கேஸ் ஷீட்டைப் பார்க்க மனம் துடித்தாலும், மற்ற அவசரப் பணிகள் அவளைத் தடுத்து நிறுத்தி வைத்திருந்தது.

பணியில் மூழ்கியிருந்த சமயம் வார்ட் பாய் வந்து ஒரு எமர்ஜென்ஸி கேஸை, ஸ்கேன் அறைக்கு அழைத்துச் செல்ல வேண்டுமென்று கூறவும், அந்தப் பையன் பின்னாலேயே சென்றவள், அவன் 106 ஆம் எண் அறை இருந்த பகுதிக்குச் செல்லவும், அவள் மனம், ‘ கடவுளே தனலட்சுமி அம்மாவின் அறையாக இருக்கக் கூடாதே’, என்று தன்னையறியாமல் வேண்டிக் கொள்ள ஆரம்பித்தது.

ஆனால், விதி யார் வேண்டுதலையும் பொருட்படுத்தாமல், தன் தர்ம நியாயப் படித்தானே காரியங்கள் செய்து கொண்டிருக்கிறது? அப்படியானால் வேண்டுதல் என்பதன் அர்த்தமே பொய்யாகிப் போய்விடுகிறதே?

அந்தப் பையன் சரியாக தனலட்சுமி அம்மாவின் அறையின் வாசலில் சென்று நின்று கொண்டிருந்தான். மனம் படபடக்க ஆரம்பித்தாலும், ஒரு கணத்தில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தவள், பரபரவென செயலாற்றத் துவங்கினாள் நம்ருதா.

உள்ளே தனலட்சுமி அம்மாவிற்கு வெண்டிலேட்டர் பொருத்தியிருந்தார்கள். லேசான மயக்கத்தில் இருந்தார் அவர். அவரை பையனின் உதவியுடன் ஸ்ட்ரெச்சரில் மாற்றி, சலைன் பாட்டிலை ஒரு கையில் பிடித்துக் கொண்டு அந்தப் பையன் ஸ்ட்ரெச்சரை தள்ளிக் கொண்டுப் போக, மூன்றாம் மாடியில் இருந்த ஸ்கேன் அறைக்கு லிப்டில் அழைத்துச் சென்றனர். தனலட்சுமி அம்மாவின் கணவரின் முகத்தில் இருந்த சோகம் நம்ருதாவின் மனதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்களின் ஒரே மகன், 15 வயது இருக்கலாம், என்பது உறவினர்கள் பேச்சிலிருந்து தெரிய வந்தது. தேம்பித் தேம்பி அழுது கொண்டிருப்பதும், தந்தை ஆறுதல் சொல்ல இயலாத நிலையில் நின்று கொண்டிருப்பதையும் பார்த்து உறவினர்களும் விக்கித்து நின்று கொண்டிருந்தனர்.

இவையனைத்தையும் கவனித்தாலும், நம்ருதா, உடனே தனலட்சுமி அம்மாவை தாமதிக்காமல் ஸ்கேன் அறைக்கு அழைத்துச் சென்று பார்த்து, விரைவில் சிகிச்சையை ஆரம்பிக்க வழி செய்ய வேண்டுமென்ற உந்துதலில் தன் நிறைமாத பாரச் சுமையையும் பொருட்படுத்தாது பரபரப்பாக இயங்கத் தொடங்கினாள்.

லிப்டில் தனலட்சுமி அம்மாவின் நெருக்கமாக நின்று கொண்டு, அவர் தலையை ஆதரவுடன் தடவிக் கொடுத்து, “ எல்லாம் சரியாகிவிடும் அம்மா, கர்த்தர் ஒருகாலும் தங்களைக் கைவிட மாட்டார். தைரியமாக இருங்கள்”, என்றாள் நம்ருதா ஆதரவுடன்.

அரை மயக்கத்தில் இருந்த தனலட்சுமி அம்மாவோ நம்ருதாவின் கையை இருகப் பற்றிக் கொண்டு ஏதோ பேச வேண்டும் என்பது போலவும் வெண்டிலேட்டரை எடுக்க முயற்சிப்பது போலவும் சைகை செய்தார். ஏதோ தன் சிரமம் குறித்து சொல்லப் போகிறார் என்ற எண்ணத்தில் குனிந்து வாயருகே காதை வைத்துக் கொண்டு கேட்க முயற்சித்தாள் நம்ருதா. பேச முடியாத அந்த நிலையிலும், மிகச் சிரமப்பட்டு, தனலட்சுமி அம்மாள் சொன்ன அந்த விசயம் நம்ருதாவை கண் கலங்கச் செய்தது. ‘இதெல்லாம் பின்பு பார்த்துக் கொள்ளலாம் அம்மா, நீங்கள் ஓய்வெடுங்கள்’, என்றாள் நம்ருதா.

ஸ்கேன் அறைக்குச் சென்று, தனலட்சுமி அம்மாவை மெதுவாக தூக்கி படுக்க வைத்தாள். மனதில் ஏனோ பெரும் பாரம் நிறையத் தொடங்கியது. அந்த மின் இயந்திரம் உள்ளே இருக்கும் விபரீதங்கள் அனைத்தையும் தெள்ளத் தெளிவாக படம் பிடித்துக் காட்டத் தொடங்கியது. நம்ருதாவின் இதயமும் வேகமாக துடிக்க ஆரம்பித்தது.

நல்ல இதயத்தைக் கொடுத்த அந்த ஆண்டவன், எத்துணை இரக்கமற்ற அரக்கன் என்பதை தெளிவாக படம் பிடித்துக் காட்டியது அந்த மின் சாதனம். ஆம், தனலட்சுமி அம்மாவின் மார்பகப் புற்று நோய், அவருடைய மொத்த உள்ளுருப்புகளையும், பாரபட்சமின்றி பாதித்திருந்தது. உள்ளிருந்தே கொல்லும் வியாதியாக இறுதி எல்லையைத் தொட்டிருந்தது. தன் கண்களையே நம்ப முடியாதவளாக திரும்பவும், மருத்துவர் அறிக்கையையும் படித்து உறுதிப் படுத்திக் கொண்ட நிலையில், செய்வதறியாது, நேரே பிரார்த்தனை அறைக்குச் சென்று மனதார பிரார்த்திப்பதைத் தவிர வேறு வழி அறியாதவளானாள்.

பணி நேரம் முடிந்தும், வீடு திரும்ப எண்ணமில்லாதிருந்தும் உடல் அசதியும், கணவனின் நினைவும் சேர்ந்து அவளை வீடு நோக்கி நடக்கச் செய்தது. அடுத்து வந்த சில நாட்கள் தனலட்சுமி அம்மாவின் உடல் படும் வேதனையால், நல்லுள்ளம் கொண்டோர் அனைவரும் மன வேதனை கொள்வது தவிர்க்க முடியாததாகிப் போனது.


அன்று வெள்ளிக்கிழமை. உடல் அசதியால் பரபரப்பாக இயங்க முடியாது சற்றே
மெத்தனம் காட்டியதன் விளைவு மருத்துவ மனைக்கு காலம் தாழ்ந்து வர வேண்டியதாகிவிட்டது. தலைமை மருத்துவரிடம் வழக்கம்போல் பாட்டு கேட்க வேண்டிவருமே என்ற அச்சத்துடனே மருத்துவமனையினுள் அடியெடுத்து வைத்தவள், தலைமை மருத்துவர் தன் இருக்கையில் இல்லாதது கண்டு சற்றே பெருமூச்சு விட்டாள், நம்ருதா.

ஆனால் அது வெகு நேரம் நீடிக்கவில்லை. மருத்துவமனை மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. தனலட்சுமி அம்மாவின் அறையின் புறம்தான் அந்த பரபரப்பு என்பதை அறிந்த மாத்திரத்தில் அவள் அதிர்ச்சியடைந்ததோடு ஏதோ விபரீதம் நடக்கப் போவதாகவும் உணர்ந்தாள். தன் உடற்சுமையையும் பொருட்படுத்தாது வேகமாக ஓட்டமும் நடையுமாக தனலட்சுமி அம்மாவின் அறையை நெருங்கினாள். தலைமை மருத்துவர் அங்குதான் பரிசோதனை நடத்திக் கொண்டிருந்தார். இவளைக் கண்டவுடன் இன்றும் தாமதமா என்பது போல பார்வையிலேயே கோபத்தின் எல்லையை வெளிப்படுத்தினார்.

தனலட்சுமி அம்மாவோ மூச்சுத் திணறலால் துடித்துக் கொண்டிருந்தார். வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டிருந்தது. மருத்துவர் சலைன் பாட்டிலில் வேறு ஏதோ மருந்தை ஏற்றிக் கொண்டிருந்தார். அந்த அம்மாவோ மிகவும் துவண்ட நிலையில் நினைவுகளும் தப்பிக் கொண்டிருந்தது புரிந்த போது பேரதிர்ச்சியாக இருந்தது நம்ருதாவிற்கு. இரவு சென்று காலை வருவதற்குள் இத்தனை கொடுமையான ஒரு நிலைமையை சற்றும் எதிர்பார்க்கவில்லை அவள். 37 வயதேயான தனலட்சுமி அம்மாவிற்கு இப்படி ஒரு அவசர முடிவு மிகக் கொடியதாகும். அடுத்த சில மணித்துளிகள் கல் நெஞ்சையும் கரையச் செய்யும், விளக்க முடியாத சம்பவங்கள். அவர் உடல் படும் மரணவேதனையுடன் ஒரு படி அதிகமாக அவரின் கணவர் மற்றும் ஒரே மகனும் தாங்கொணாத்துயரில் இருந்தனர். உறவினர்களும் அவர்களுக்கு ஆறுதல் சொல்ல முயன்று தோற்றுக் கொண்டிருந்தனர்.

இந்த நேரத்தில்தான் யாருமே எதிர்பார்க்காத வகையில் தனலட்சுமி அம்மாள், அணையப் போகும் தீபம் சுடர்விட்டு பிரகாசிப்பது போல, வெண்டிலேட்டரை தானே எடுத்துவிட்டு நம்ருதாவை அருகே அழைத்து, மெல்லிய குரலில் அவளிடம், இனிமேல் கொஞ்ச நாட்களுக்கு குழந்தை பெரிதாகும் வரை தான் பணிக்கு விடுமுறை எடுத்துக் கொள்ளவும், கணவருக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகள் பெறுவதற்கும் தங்கள் லயன்ஸ் கிளப் டிரஸ்ட் மூலம் ஏற்பாடு செய்துள்ளதாகவும் அதற்கான கடிதம் தன் தலையணை அடியில் இருப்பதாகவும் சைகை மூலமும் வார்த்தைகள் மூலமும் புரிய வைத்தார், அந்த தெய்வப் பெண்மணி. இதனைக் கண்ட அத்துணைக் கண்களிலும் இரத்தக் கண்ணீர் வடிந்ததென்றால் அது மிகையாகாது. ‘மனிதம்’ என்பதன் முழுப் பொருளாக விளங்கிய ஒரு மாமனிதம்!

அந்த நொடி நம்ருதாவின் இதயம் துடித்து, மனதோ, தனலட்சுமி அம்மாவின் உயிர் தன் கருவில் இணைய வேண்டுமென ஏங்க ஆரம்பித்தது. கண்களை மூடி மனமார பிரார்த்திக்க ஆரம்பித்தாள் அந்த அபலைப் பெண். கர்பிணிகளின் வேண்டுதல்கள் பெரும்பாலும் செவிசாய்க்கப்படுவதாக நம்பிக்கையும் உண்டு.

தனலட்சுமி அம்மாவின் உயிர் அமைதியாக அடங்க ஆரம்பித்தது.......... திடீரென நம்ருதாவிற்கும் பிரசவ வேதனை ஆரம்பித்தது. அவள் மயக்கம் தெளிந்து கண் விழித்து பார்த்தபோது தன் அருகில் அழகானதொரு பெண் குழந்தை நிச்சலமாக உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்ட மாத்திரத்தில் ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டாள்...........