Friday, November 22, 2019

பாட்டி சொன்ன கதைகள் - 29


பவள சங்கரி

உயிரா? மானமா?

ஹாய் குட்டீஸ் நலமா?

முன் காலத்தில் நம் தமிழ் மக்கள் எப்படி வாழ்ந்தார்கள் தெரியுமா?  மானமும், வீரமும் தம் இரு கண்களாகக் கொண்டுதான் வாழ்ந்தார்கள். 

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.

என்பது வள்ளுவரின் குறள். அதாவது,  கடுங்குளிரிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள  உதவும் மயிற்கற்றையை  கவரிமா இழக்க நேர்ந்தால், எப்படி அவற்றால் வாழமுடியாதோ, அதேபோன்று  சான்றோர்கள் ஏதேனும் இழிவான காரியங்களால் தங்களுக்கு  அவமானம் நேர்ந்தால் உயிர்விடத் தயங்க மாட்டார்கள் என்பதே இதன் கருத்து. 

இப்படி உயிரை விட மானம்தான் பெரிது என்று வாழ்ந்த மாவீரர்கள் பலர் இருந்திருக்கிறார்கள் நம் நாட்டில். அப்படி ஒரு மாவீரன் பற்றிய கதைதான் இது!

சேர மன்னர்களில் இரும்பொறை மரபினர் என்ற  ஒரு சாரார் இருந்தனர்.  இந்த மரபில் கணைக்கால் இரும்பொறை என்ற ஒரு அரசர்  தம் குடிமக்களை கண் போல காத்து வந்தார். அந்த அரசர்,நல்ல அறிவும், இரக்க குணமும், துணிச்சலும், உதவும் மனமும், தன்னம்பிக்கையும்  ஆகிய அரசருக்குரிய நல்ல குணங்கள் அனைத்தும்  பெற்றிருந்தார். நல்ல தமிழ் பற்றும், அழகாகக் கவிபாடும் திறமும், கவிபாடி பரிசில் பெற விரும்பும் புலவர்களுக்கு, நிறைய பரிசில்கள் வழங்கும் வள்ளலாகவும் இருந்தார். பெறும் பேரும், புகழும் பெற்று விளங்கிய கணைக்கால் இரும்பொறை இவை அனைத்திற்கும் மேலாக தம் மானமே பெரிது என்றே வாழ்ந்து வந்தவர். அந்த காலகட்டத்தில் சோழ நாட்டை ஆண்டு கொண்டிருந்த மன்னன் கோச்செங்கணான் என்பவன்.   மிகப்பெரிய வீரனும், சிவபக்தனுமான இவனுக்கும் கணைக்கால் இரும்பொறைக்கும் உள்ளூரப் பகைமை இருந்தது. தமிழ் மொழியினிடத்தும், தமிழ்ப் புலவர்களிடத்தும் தணியாத அன்பு கொண்டவன் இவன். இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட பகையுணர்ச்சி நாளடைவில் மெல்ல, மெல்ல வளர்ந்து பெருந்தீயாக மாறி இறுதியாக   பெரும் போராகவும் மூண்டது. இந்தப் போர் கழுமலம் என்னும் ஊரில் நடந்தது. இப்போரில் சேரன் தோல்வியடைந்தான்.  சோழன் வெற்றி பெற்றான். அதாவது கணைக்கால் இரும்பொறை தோற்று விட்டதால், சோழ மன்னனால் சிறைப் பிடிக்கப்பட்டான். பகைவனின்  சிறையில் அடைபட்டு இருக்க நேரிட்டதை மிகப் பெரிய அவமானமாகக் கருதிய கணைக்கால் இரும்பொறை, அதை எண்ணி எண்ணி மனம் புழுங்கிக் கிடந்தான். இந்நிலையில் ஒருநாள் அவனுக்குத் திடீரென தண்ணீர் தாகம் எடுத்தது. சிறைக் காவலாளர்களை அழைத்து  தண்ணீர் வேண்டும் எனக் கேட்டான்.  தவித்த வாய்க்குத் தண்ணீர் வேண்டும் என்று ஒருவர் கேட்டால் முதல் வேலையாக அதைச் செய்வதுதான் தமிழர்களின் பண்பாடு. ஆனால் அந்த காவலர்கள் அந்த அடிப்படை அறம் கூட அறியாதவர்கள், அவ்வளவு பெரிய மன்னன் என்றுகூட பாராமல், கேட்டவுடன் தண்ணீர் கொண்டுவந்து கொடுக்காமல் அந்த அரசரை கேலியும், கிண்டலுமாகப் பேசி, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப்போல, மிகவும் புண்படச் செய்துவிட்டனர். அதன் பின்னர் வெகு நேரம் கழித்து,  ஒரு பாத்திரத்தில் சிறிது நீரைக் கொண்டு வந்து இடக்கையால் அலட்சியமாக வைத்துச் சென்றான் ஒரு காவலன். ஏற்கனவே சிறைப்பட்டுக் கிடப்பதில்  மானம் அழிந்த செயலாகக் கருதி வருந்தும் சேரனுக்கு, காவலாளியின் இந்த கேவலமானச் செயல் அந்த மன்னரை மேலும் வேதனைப்படுத்தியது. இத்துனை அதிகமான தண்ணீர் தாகம் இருப்பினும் கூட, தன்னை அந்தக் காவலர்கள், அவமானப்படுத்தியதால், இத்தகையப் பகைவர்களிடம் கேட்டு வாங்கிய தண்ணீரைக் குடிக்க மானமுள்ள அந்த அரசனுக்கு மனம் வரவில்லை.

இப்படி ஒரு வேதனையான நேரத்தில் அவனுடைய கவி உள்ளம் உருகி  அது பாடலாகப் பிறந்து, இன்றும் வரலாறாக ஆகிவிட்டது. அந்தப் பாடலின் கருத்தைக் கேளுங்கள்:

குறைப் பிரசவமாகப் பிறந்த குழந்தையைக்கூட, போரில் இறவாமல் இப்படி  இறத்தல் அவமானம் என்று கருதி,  இறந்த அந்த குழந்தையையும், குறையாகப் பிறந்த தசைப் பிண்டத்தையும் கூட வாளால் வெட்டித்தான் புதைப்பார்கள். பகைவன் சிறையில் அகப்பட்டு சங்கிலியால் கட்டுண்ட நாயைப் போல, அப்பகைவனின் காவலாளரிடம் பிச்சை கேட்டு தண்ணீர் பெற்று அதைக் குடித்து உயிர் வாழ விரும்பும் என் போன்றவர்களை இனி இவ்வுலகத்தார் பெறாமல் இருக்கட்டும்” என்பதுதான் அது.  தம் அவல நிலையை கவிதை மொழிகளால் உள்ளம் உருக வடித்து வைத்திருக்கிறான் சேரமான் கணைக்கால் இரும்பொறை.இப்படி ஒரு பாடலைப் பாடி முடித்த அந்த அரசன்,  அவர்கள் கொடுத்த அந்தத் தண்ணீரைக் குடிக்காமலேயே உயிரை விட்டு விட்டான். பின் புலவர் பொய்கையார் என்ற இரும்பொறையின் ஆசிரியர்  மூலம், அரசன் கணைக்கால் இரும்பொறையின், தமிழ் பற்று மற்றும் வள்ளல் தன்மை ஆகியவற்றைப் பற்றி அறிந்து, இத்தகைய ஒரு சான்றோனைச் சிறைப்பிடித்து பெரும் பாவம் செய்துவிட்டோமே என்று மிகவும் வேதனைப்பட்ட, மன்னன் கோச்செங்கணான் இரும்பொறையை உடனே விடுவிக்கச்சொன்ன போது, அவனுடைய உயிரற்ற உடலையே அங்குக் காண முடிந்தது அரசனால்.  இங்ஙனம் பகைவனும் விரும்பிக் கண்ணீர் விடுமாறு உயிர்விட்டு தம் மானத்தைக் காத்துக்கொண்ட இரும்பொறையின் புகழ் இவ்வுலகில் தமிழ் உள்ளளவும் அழியாமல் நிலைத்து நிற்குமல்லவா?


மானம் மரியாதையெல்லாம் அரசர்களுக்கோ, சாமான்ய மனிதர்களுக்கோ மட்டுமல்ல, நம் வீட்டில் செல்லமாக நம்மோடு வளர்ந்து கொண்டிருக்கும் உயிரினங்களுக்கு இல்லையா, என்ன? கேளுங்கள் இதையும்..

மணி, ஒரு தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது ஒரு நாள் பள்ளி விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தான்.  தெருவோரம் இருந்த நடைமேடையின் ஒரு மூலையில், வெள்ளை உடம்பில் அங்கங்கே கருப்புத் திட்டுகளுடன், தாயை எங்கோ தொலைத்துவிட்டு, கியா.. கியா என்று கத்திக்கொண்டே அங்கும், இங்கும் ஓடி, ஓடி தாயைத் தேடிக்கொண்டிருந்தது அந்தக் குட்டி. பிறந்து 5 நாட்கள் ஆகியிருக்குமோ என்னவோ, அதற்குள் பாவம் தாயைப் பிரிந்து துடித்துக்கொண்டிருந்தது. பால் வைக்கவோ, தொட்டுத் தடவி சமாதானம் செய்யவோ ஆளில்லை. அவரவர் அவசரம் அவரவர்களுக்கு. அந்த நாய்க் குட்டிக்குப் போக்கிடமும் இல்லை. அந்த வழியாக வந்த மணி இதைப் பார்த்தவுடன் பரிதாபப்பட்டு வீட்டிற்குத் தூக்கி வந்துவிட்டான். அம்மாவும், அப்பாவும் முதலில் திட்டினாலும், அவர்களுடன் வாக்குவாதம் செய்து எப்படியோ மெல்ல, மெல்ல அதைத் தக்க வைத்துக்கொண்டான்.  முதலில் வீட்டிற்குள் வரக்கூடாது, வெளியில்தான் இருக்க வேண்டும் என்று சத்தம் போட்டுக்கொண்டிருந்த அப்பாகூட போகப் போக அதனுடன் சகஜமாக வீட்டில் ஒருவர்போல பழக ஆரம்பித்துவிட்டார். சிட்டு என்று அழகாகப் பெயர் வைத்திருந்தான் மணி.  சிட்டு ஆரம்பத்தில் குழந்தைபோல அதிகமாகக் குறும்பு செய்து கொண்டிருந்தாலும், போகப்போக, சொன்ன பேச்சைக் கேட்டுக்கொண்டு, வீட்டிற்குள் எந்த அசிங்கமும் செய்யாமல், மணி சொல்லிக்கொடுப்பதை சமத்தாகக் கேட்டுக்கொண்டு, சுத்தமாக இருக்கவும் பழகிக் கொண்டது. அன்றாடம் ஒழுங்காகக் குளிக்க வைப்பது, அப்பாவின் பூஜை நேரத்திற்கு உள்ளே வந்து தொந்திரவு செய்யாமல் இருப்பது, அனாவசியமாக சத்தம் செய்யாமல் பதவிசாக தன் இடத்தில் இருப்பது, விருந்தாளிகள் வந்தால் அவர்களாகக் கூப்பிடும் வரை அவர்கள் முகத்தைப் பார்த்துக்கொண்டே  அமைதியாக இருப்பது என்று இப்படி வெகு சீக்கிரமே நல்ல பெயரும் வாங்கிவிட்டது.  

“டேய் சிட்டு, என்னடா பண்றே, வாடா இங்கே.. பார் நான் வேளியே போறேன். வீட்டை பார்த்துக்கோ. தட்டில சாப்பாடு போட்டு வச்சிருக்கேன் பாரு. ஒழுங்கா சாப்பிடு. நான் வருகிற வரைக்கும் முன்னாடியே இரு” என்று அப்பா கூப்பிட்டு சொல்லிவிட்டுப்போகும் அளவிற்கு வீட்டில் எல்லோரும் சிட்டுவிடம் ஒன்றிவிட்டது மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. பள்ளிவிட்டு வந்தவுடன் சிட்டுவிடம் கொஞ்ச நேரம் பொழுதைப்போக்குவது வாடிக்கையாக இருந்தாலும், போகப்போக படிப்பு அதிகமாக, சிட்டுவிடம் விளையாடுவது குறைந்து போனது. ஆனாலும், அதனுடன் இருந்த நெருக்கம் மட்டும் அதிகமாகிக் கொண்டுதான் போனது. 

பள்ளி முடித்து மணி, பொறியியல்  கல்லூரியில் சேருவதற்காக மேட்டூரிலிருந்து சென்னை செல்ல வேண்டிய சமயத்தில் அவனுக்கு பெற்றவர்களுடன், சிட்டுவைப் பிரிந்து செல்வதும் பெரும்பாடாக இருந்தது. சிட்டு என்ன புரிந்து கொண்டதோ பெட்டியெல்லாம் எடுத்துக்கொண்டு அப்பா, அம்மாவுடன் ஹாஸ்டலுக்குக் கிளம்பும்போது, முகத்தைப் பாவமாக, சோர்வாக வைத்துக்கொண்டிருந்தது கண்ணை விட்டு மறையவே முடியாத காட்சி மணிக்கு. ஹாஸ்டலிலிருந்து போன் செய்யும் போதெல்லாம், சிட்டுவைப் பற்றியும் அதிகமாக விசாரிக்காமல் இருக்கமாட்டான் மணி. சிட்டுவும் அதைப் புரிந்துகொண்டு செல்லமாக ஒரு சத்தம் கொடுப்பது காதில் கேட்டால்தான் மணிக்கு மகிழ்ச்சியாக இருக்கும். விடுமுறைக்கு வரும்பொழுதெல்லாம், சிட்டுவிற்குப் பிடித்த மேரி பிஸ்கட் வாங்கி வருவதும் வழக்கமாக இருந்தது. இப்படியே சில, பல ஆண்டுகள் ஓடிவிட்டது. 

படித்து முடித்து மணிக்கு சென்னையிலேயே வேலை கிடைத்து, ஆறு மாதத்திலேயே அமெரிக்கா போகும் வாய்ப்பும்  கிடைத்ததில் குடும்பத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சிதான். சிட்டுவும் வளர்ந்து ரொம்பவும் பெரியவனாகிவிட்டதால், அவனைப் பற்றி பெரிதாகக் கவலைப்படவில்லை ஒருவரும். அவனுக்கும் பொழுது சரியாகத்தான் கழிந்து கொண்டிருந்தது.  மணி அமெரிக்கா சென்று கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகாலம், மேட்டூர் பக்கமே வரவே இல்லை. போனில் கூட வாரம் ஒரு முறைதான் பேச முடிந்தது. அதுவும் சிட்டுவைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் மட்டுமே கேட்டக் கூடிய நிலைதான் இருந்தது. அவ்வப்போது அப்பாவும் சிட்டுவிற்கு ஏதோ உடல் நலக்குறைவு என்பார். ஒரு முறை காலில் அடிபட்டு லேசான எலும்பு முறிவு ஏற்பட்டபோது கூட டாக்டரிடம்  காண்பித்து வைத்தியம் பார்த்து சரி செய்ததாகக் கூறியபோது, சிட்டு நலமாக இருப்பதில் அவனுக்கு திருப்தியாகவே இருந்தது.  ஆனால் இவையனைத்தும் மணி அடுத்த முறை இந்தியாவிற்கு வந்து வீட்டின் நிலையைக் காணும்வரைதான் நீடித்தது. 

ஒன்றரை ஆண்டிற்குப் பிறகு அம்மா, அப்பாவையும் சிட்டுவையும் பார்க்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சியில் நிலைகொள்ளாமல் துடித்துக்கொண்டு வந்தான் மணி. மறக்காமல் மற்ற பொருட்களுடன் சிட்டுவிற்கென்று மேரி பிஸ்கெட்டுடன், குளிருக்கு இதமாக சிறிய கம்பளி ஒன்றும் வாங்கி வந்திருந்தான். அம்மா, அப்பாவிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே கண்கள் சிட்டுவைத் தேடிக்கொண்டிருந்தது. இந்நேரம் தன் குரல் கேட்டால் ஓடி வந்துவிடுமே, எங்கே போயிருக்கும் என்று மனமும் அலை பாய்ந்தது அவனுக்கு. அவனுடைய எண்ணத்தைப் புரிந்து கொண்டவராக அவனுடைய அப்பா, 

“என்னப்பா, சிட்டுவைத் தேடறியா. அவனுக்கு வயாசாயிடிச்சில்லையா? அவனால் சட்டுனு எழுந்து வர முடியாது. பின்னால இருக்கான். நீயே போய் பாரு” என்றார் சர்வசாதாரணமாக.

‘என்னது, பின்னாலயா...’ என்று ஏதோ சொல்லியபடி கொல்லைப்புறம் ஓடினான். அங்கு, சிட்டு ஒரு மூலையில் மண் தரையில் மேலே ஈ மொய்ப்பது கூடத் தெரியாமல், பக்கத்தில் வைக்கப்படிருந்த வட்டிலில் இருந்த சாப்பாடு காய்ந்துபோய்க் கிடக்க, வாயில் நீர் வடிவது கூடத் தெரியாமல் அப்படியே படுத்துக் கிடந்தது. மணிக்கு அதைப் பார்த்தவுடனே நெஞ்சு அடைப்பது போல ஆகிவிட்டது.  தான் வந்து அருகில் நிற்பது கூட சிட்டுவிற்குத் தெரியவில்லை என்பதுதான் அவனுடைய வேதனையின் உச்சமாக இருந்தது.  அருகில் உட்கார்ந்து சிட்டுவைத் தொட்டு, ‘டேய்.. சிட்டு’ என்றதுதான் தாமதம், சட்டென்று அதன் உடலில் ஒரு குலுங்கல், மெல்ல எழுந்து நிற்க முயன்றது. மணி தன் கையோடு கொண்டு வந்த மேரி பிஸ்கட்டை எடுத்து ஊட்டிவிட முயன்றான். அதுவும் முதலில் கொஞ்சம் சிரமப்பட்டாலும் கொஞ்சம் , கொஞ்சமாக சாப்பிட முயன்றதால், லேசாக கண்களில் ஒளி வந்தது. உடனடியாக அந்த சாப்பாட்டுத் தட்டை எடுத்து சுத்தமாகக் கழுவி, உள்ளே போய் அம்மாவிடம் கேட்டு ஒரு டம்ளர் பால் வாங்கிக் கொண்டு வந்து அந்தத் தட்டில் ஊற்றி அந்த பிஸ்கட்டை அதில் நனைத்து ஊட்டிவிட்டான். சிட்டுவும் கண்ணீர் வழிய ஒரு அரை பாக்கெட் பிஸ்கெட் சாப்பிட்டு முடித்தது. சிட்டுவிற்கு என்ன பிரச்சனை என்று மணிக்கு நன்கு புரிந்தது. 

“அப்பா, அம்மா, உங்களுக்கே இது நியாயமா இருக்கா. சிட்டுவை ஏன் இப்படி வைத்திருக்கிறீர்கள். மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு” என்றான் மணி வேதனையுடன்.

“என்னப்பா பண்ணச் சொல்ற. அதுக்கு வயசாயிடிச்சில்ல. வீட்டுக்குள்ள விட முடியுமா. அதை குளிக்க வக்கக்கூட முடியல.  அதான் அது மேலெல்லாம் ஒரே வாடை அடிக்குது. அதனாலதான் வீட்டிற்குள்ள வர வேண்டாம்னு சொல்லிட்டேன். அதுக்கு ரோசம் பொத்துக்கிட்டு வந்துடுது. ஒழுங்கா சாப்பிடாம அடம் பிடிக்குது. கடக்கட்டும்னு விட்டுட்டேன். நாம என்ன பண்ண முடியும் அதுக்கு..” என்றார் அப்பா சர்வ சாதாரணமாக.

மணிக்கு தன் அப்பாவா இப்படிப் பேசுவது என்று அதிர்ச்சியாக இருந்தது. 

“அப்பா, உங்களுக்கே இது நியாயமா இருக்கா அப்பா? வயசானா, வீட்டிற்குள் வரக்கூடாதுங்கறது சரியாப்பா.. முதுமை என்ன ஒதுக்க வேண்டிய ஒன்றா? அந்த இயலாமையை புரிஞ்சிக்கிட்டு  அதைச் சமாளிக்க நாம உதவியா இருக்க வேண்டாமா? இப்படி வெளியே தனியா ஒதுக்கி வைக்க எப்படி மனசு வந்தது உங்களுக்கு? இத்தனை வருசமா, நம்ம வீட்டுக்கு காவலா, நமக்கெல்லாம் ஒரு நல்ல துணையா இருந்த ஒரு ஜீவனின் கடைசி காலத்தை இப்படி கொடுமையா கழிக்க விடலாமா அப்பா..? தாத்தாவும் , பாட்டியும் நம்மகூட இறுதிகாலத்தில் தங்காமல் கிராமத்தில் இருந்ததும் இதற்குத்தானா? ”

போர்க்காலத்தில் மக்களுக்குச் சேவை செய்யும் செஞ்சிலுவைச் சங்கம் போல வாயில்லாத இந்த பாவப்பட்ட ஜீவன்களுக்காக புளு கிராஸ் அப்படீன்னு ஒன்னு இருக்கே அதைக்கூட மறந்துட்டீங்களா. நாம போய் அங்க சேவை செய்யாட்டியும் போகுது. நம் கண் முன்னால் இப்படி வதை படுகிற ஜீவன்களை அவர்களிடம் சொன்னாலாவது காப்பாற்றக் கூடும் இல்லையா?

மணி , சிட்டுவின் மீது செலுத்திய தனிப்பட்ட கவனத்தின் காரணமாக அவன் ஊருக்குக் கிளம்புவதற்குள் சிட்டு ஓரளவிற்கு நன்றாகவே உடல் தேறிவிட்டது. புளூ கிராஸ் நண்பர்கள் மூலமாக சிட்டுவிற்கு ஒரு பாதுகாப்பான இடத்தைத் தெரிந்து கொண்டு அதைப் பராமரிப்பதற்கான பணத்தையும் கொடுத்து அதை நல்ல ஒரு இடத்தில் சேர்த்துவிட்ட திருப்தியில் நிம்மதியாக ஊருக்குக் கிளம்பினான் மணி. 

Tuesday, November 19, 2019

செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.யின் நினைவு நாள் இன்று.விடுதலைப் போராட்டவீரர் உயர்திரு எஸ்.பி. வெங்கடாசலம் தமது சுயசரிதையில் ..... (”இப்படிக்கு நான்” என்ற தலைப்பில் என் எழுத்து வடிவில் )

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்கள் வெள்ளைக்காரனுக்குப் போட்டியாக ‘இந்தியன் ஸ்ட்ரீம் நேவிகேஷன் கம்பெனி (Indian Stream Navigation Company) என்று ஒரு கப்பல் கம்பெனியை ஆரம்பித்த நேரத்திலேயே, எனது பாட்டனார் திரு. சீரங்க முதலியார், 1000 ரூபாய் கொடுத்து, கப்பல் கம்பெனியின் பங்குதாரராகத் தன்னை இணைத்துக்கொண்டார். அந்தக் கப்பல்
கம்பெனி தூத்துக்குடிக்கும், இலங்கைக்குமான சுதேசிக் கப்பலை இயக்கி, வெள்ளைக்காரக் கப்பல் கம்பெனியை முடமாக்கியது. இந்த நிலையில் வ.உ.சி., சுப்ரமணிய சிவா, பாரதியார் போன்றவர்கள் திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்புப் பிரச்சாரத்தை மிகத் தீவிரமாக நடத்தி வந்தார்கள். அவர்களின் வந்தே மாதரம் என்னும் கோஷம் பட்டி தொட்டியெல்லாம் எதிரொலிக்கச் செய்தது. இதனால் ஆத்திரமடைந்த மாவட்டக் கலெக்டர் ஆஷ்துரை ராஜதுவேஷ வழக்கில் கைது செய்து இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்புக்கூற காரணமாக இருந்தார். ஒரு மனிதனுக்கு ஒரு ஆயுள்தான். ஆனால் வெள்ளை ஆட்சி இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது விசித்திரமானது. இவர்கள் சிறையில் இருக்கும்போது
இந்திய நீராவிக் கப்பல் கம்பெனியின் பங்குதாரர்களை மிரட்டி பங்குகளுக்கு அதிக பணம் தருவதாகக் கூறியும், மிரட்டியும் பெரும்பான்மையான பங்குகளை வாங்கிய பிரிட்டிஷ் கப்பல் கம்பெனி வ.உ.சி. தொடங்கிய சுதேசியக் கப்பல் கம்பெனியை மூடிவிட்டது. இந்தக் காலகட்டத்தில்தான் சீரங்க முதலியாரின் பங்குகளையும் அதிக விலைக்குக்கேட்டு, பிரிட்டிஷ் கப்பல் கம்பெனி முகவர்கள் விலை பேசினர். ஆனால் அவர் அந்த பங்குகள்
தேசபக்தியின் அடையாளச் சின்னங்கள் என்று கூறி விற்க மறுத்துவிட்டார். அந்தப் பங்குகள் நீண்டகாலம் மீனாட்சிசுந்தரம் அவர்கள் வசம் இருந்தது. . இந்த தேசபக்தி என் தந்தைக்கும், சித்தப்பாவிற்கும், என் அண்ணனுக்கும் உண்டு. அது எனக்கும் தொடர ஆரம்பித்தது. மீனாட்சி சுந்தரம் முதலியார் அவர்கள், பெரியாரோடு தொடர்பு ஏற்படுத்தி, பி.ஏ. பட்டப்படிப்பு முடித்தவுடன் காங்கிரசில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்கள்.

அப்பா என்றால் ....

அப்பா எனும் அற்புதம் புவியில் என்றும் பெருவரம் தரணியில் அவரே தனிரகம் அல்லல் தீர்க்கும் அருமருந்து இருள் நீக்கும் அகல்விளக்கு அகிலம் போற்று...