Saturday, June 29, 2013

வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா? (17)




பவள சங்கரி



அனைவரும் கற்றுணர வேண்டிய மூன்று சத்தியங்கள் : பரந்த மனம், அன்பான பேச்சு, சேவை வாழ்க்கை மற்றும் கருணை ஆகியவைகளே மனிதம் மலரச் செய்யும் மகத்தான செயல்கள்.
புத்தர்

கருணையுள்ள இதயம் கடவுள் வாழும் இல்லம்!

நல்ல எண்ணங்களே நம்முடைய நல்ல செயல்களுக்கு வித்தாகி வெற்றிக் கனியை எட்டிப் பறிக்கச் செய்கிறது என்பது திண்ணம். அனைவரிடத்திலும், எப்பொழுதும் கருணையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பது நல்லதொரு கருத்து என்றாலும், நடைமுறையில் அது முழுவதும் சாத்தியமாகுமா என்ற ஐயம் எழாமல் இல்லை. ஆனாலும் பழகப் பழக நாளடைவில் அது சாத்தியமாகும் என்பதும் சத்தியம். தம்மைத் தாமே வலிமையாகவும், புத்திசாலியாகவும் ஆக்கிக்கொள்ளவும்  மற்றும் அதிக தன்னம்பிக்கையுடனும், நெகிழ்த் திறனுடனும் நடந்து கொள்ளச் செய்யும் யதார்த்தமான பாதை இது. பச்சாதாபத்துடன் நடந்துகொள்ளும் மனோ நிலையை வளர்த்துக்கொள்ளும் போது, தம் அன்புக்குரியவர்களின் தேவைகளை உணர்ந்து தக்க சமயத்தில் உதவி செய்வதற்கும் வழிவகை செய்யும்.  அஞ்சி நடுங்கச் செய்யும்  கடினமான நேரங்கள் மற்றும் வாழ்க்கையின் இருண்ட காலங்களையும் கூட பொறுமையுடன் எதிர்கொள்ளச் செய்யக்கூடியது ‘கருணை’ என்ற இந்த மகோன்னத குணம்.  மிகக் கடினமான நேரங்களில் கூட தம் சுயநலத்திற்காக மட்டுமே  கண்களை மூடிக்கொண்டு கருணைக் கடலில் மூழ்கித் தெளிவதன் மூலம் தம் குறிக்கோளை நிறைவேற்றிக் கொள்ளும் ஆற்றல் பெற முடியும். அதனாலேயே  சக்தி வாய்ந்ததொரு ஆயுதமாக செயல்படக்கூடிய, ‘கருணை’ என்ற இந்த அற்புதமான குணத்தை வளர்த்துக் கொள்வது ஒரு வெற்றியாளருக்கு அவசியமாகிறது.