Thursday, May 26, 2011

வள்ளல் பாரிராசன்.


ரயில் பயணங்கள் கூட மிக இனிமையானவைதான்.முன் பதிவு செய்யப்பட்ட குளுகுளு வசதியுடனான பஞ்சு மெத்தை இருக்கைகள். அத்தோடு கலகலவென அரட்டை அடித்துக் கொண்டு, நல்ல பொழுது போக்கான ஆசாமிகளுடன், நேரம் போவதே தெரியாமல் வம்பை வளர்த்துக் கொண்டு, அவ்வப்போது கொறிப்பதற்கு ஏதாவது தீனி.இடையில் சுகமான உறக்கம் கொஞ்சம். இப்படி ஒரு இரயில் பயணம் என்றால், ஏன் ஒருவர் வெறுக்கப் போகிறார்....?

பாரிராசன், வியாபார நிமித்தமாக அடிக்கடி பயணம் செல்லக்கூடியவர்.ஆனால் சரியான சுகவாசி. ஒவ்வொரு முறை பயணம் செய்யும் போதும், அவருக்கு பயணச்சீட்டு, அது தொலைதூர விமானப் பயணம் ஆனாலும் சரி அல்லது எட்டிப் பிடிக்கும் துரத்தில் இருக்கும் எட்டயபுரமானலும் சரி, வேலையாட்கள் முன்கூட்டியே பயணச்சீட்டை பதிவு செய்வதோடு,அவரை ரயிலில் வழியனுப்ப இரயில் நிலையம் வரை வந்து பெட்டி, படுக்கைகளை அடுக்கி வைத்துச் செல்வார்கள். அன்றும் அப்படித்தான், அவர்கள் வந்து எல்லாம், சரி செய்துவிட்டு சென்றார்கள். மனிதர் வந்து நிதானமாக ஆசுவாசமாக உட்கார்ந்தவர், சுற்றிலும் நோட்டம் விட்டார்.அருகில் இரண்டு இளைஞர்கள்,கலகலவென மலையாளத்தில் சம்சாரிச்சிக்கினு இருந்தார்கள்.

இரயிலில் கூட்ட நெரிசல்.கோடை விடுமுறை சமயம். நம் வள்ளல் பாரிராசனோ, சொகுசாக ஆடல் பாடலாக, தன் இரட்டை சரீரத்தை யதார்த்தமாக பரப்பி உட்கார்ந்து கொண்டார். பக்கத்தில் இருப்பவர்களை சரி கட்டுவது அவருக்கு அவ்வளவு சிரமான காரியம் அல்ல. ஒற்றை நாடி சரீரம்தான் என்றாலும் பாவம் உட்காருவதற்கு சிறிதளவாவது இடம் கொடுக்க வேண்டுமல்லவா.......

அந்த இளைஞர்கள் அவருடைய படாடோபத்தையும், வயதையும், பந்தாவையும் பார்த்துவிட்டு சற்றே ஒதுங்கி வேறு பவ்யமாக உட்கார்ந்து கொண்டால்,நம் வள்ளலுக்கு கேட்கவும் வேண்டுமோ! சுகமாக காலை நீட்டி சாய்ந்துவிட்டார். வழியெல்லாம் போன் வேறு....தான் பெரிய வியாபார காந்தம் என்பதை வெளிப்படுத்தும் விதமாக.. பசங்கள் மிரண்டுத்தான் போனார்கள். கொஞ்சம் அவர் அசைந்தாலும், அவர்கள் இன்னும் கொஞ்சம் ஒடுங்கி உட்காருவது பார்ப்ப்தற்கு வேடிக்கையாகவும் இருந்தது. எப்படியாவது இந்த பெரிய மனிதரிடம் நல்ல பெயர் வாங்கிவிட்டால் தங்கள் வாழ்க்கைக்கும் ஒளி கிடைக்கலாம் என்ற நப்பாசை வேறு.

‘தம்பி, அந்த பேண்ட்ரியில் போய் ஒரு தண்ணீர் பாட்டில் கூலா வாங்கி வர முடியுமா’ என்று கேட்டதுதான் தாமதம் இருவரும் எழுந்து கொண்டார்கள். ‘இதோ ஐயா’ என்று.

அவரும் பெருமையாக புன்னகைத்துக் கொண்டு ஒரு ஐநூறு ரூபாய் தாளை அனாவசியமாக உருவி,

‘ இந்தாப்பா, சில்லரை இல்லை’ என்று கூறி நீட்டினார்.

வெகு பவ்யமாக வாங்கிச் சென்ற இளைஞர்கள் கர்மசிரத்தையாக பாட்டிலை வாங்கி வந்து நீட்டினார்கள்.

ஒரு பெரிய மனிதரின் பழக்கம் கிடைத்த பெருமிதம் அவர்கள் முகத்தில். இருக்காதா பின்னே........ஏதோ நண்பன் அவனுடைய அவசர வேலைக்காக, இரண்டாம் வகுப்பு பயணச்சீட்டு கிடைக்காதலால் முதல் வகுப்பு ஏ.சி கோச்சில் டிக்கெட் வாங்கிக் கொடுக்க அடித்தது யோகம் என்று இருவரும் வந்திருப்பது இங்கு மற்றவர்களுக்குத் தெரியவாப் போகிறது....? வேலை வெட்டி இல்லாமல் அலைந்து கொண்டிருந்தவர்களுக்கு, பயணச் சீட்டும், தங்கும் இடமும் கொடுத்து, சாபாட்டிற்கும் பணம் கொடுத்து , யாருக்குக் கிடைக்கும் இந்த வாய்ப்பு! எப்படியோ இந்த பெரிய மனிதரைப் பிடித்து ஒரு நிரந்தர வேலைக்கு ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் என்று கணக்கு போட்டார்கள் இருவரும். ஆனாலும் பேராசைதான் என்றாலும், இவ்வளவு பெரிய மனிதருக்கு வேலை வாங்கிக் கொடுப்பது பெரிய விசயமா...தாங்களும் பள்ளியிறுதி வகுப்பு வரை படித்திருக்கிறோமே என்ற தன்னம்பிக்கை வேறு. அவ்வளவுதான், இருவரும் போட்டி போட்டுக் கொண்டு பாரிராசன் வள்ளலுக்கு பணிவிடை செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.அவர் எள் என்றால் எண்ணெய்யாக நின்றார்கள். பாவம் இந்த பெரிய மனிதர்களின் வள்ளல் தன்மை பற்றி அறிந்திலர் இருவரும்!

மனிதர் இது போன்று ஏமாளிகள் கிடைத்தால் விடுவாரா என்ன....அவ்வப்போது பேண்ட்ரிக்கு அனுப்புவது, பெரிய மனது பண்ணி அவர்களுக்கும் சிறு தீனி வாங்கிக் கொள்ளச் சொல்வது [ ஆனாலும் அவர்கள் இருவரும் நல்ல பெயர் வாங்குவதிலேயே குறியாக இருந்தவர்கள் அதெல்லாம் சாப்பிடவேயில்லையே !] கால் மட்டும்தான் அமுக்கிவிடவில்லை இருவரும். அதைத்தவிர அவருடைய சொகுசுக்குண்டான அத்தனை பணிவிடைகளையும் சங்காமல் செய்தார்கள்.

வயிறு நிறைந்து, கண்கள் சுழட்ட ஆரம்பிக்க , இவர்கள் பாவம் அப்போதுதான், தங்களுடைய சுய புராணத்தை ஆரம்பிக்க இருந்தார்கள்.ஆனால் மனிதரோ தூங்குவதற்கு மும்முரமாக ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். பெட்டியை மேலே இருந்து எடுக்கச் சொல்லி அதிலிருந்து, காற்று ஊதும் தலையனையை எடுத்து ஒருவர் கொடுக்க, ஒருவர் ஊத, மகராசன் அதை சுகமாக தலைக்குப் பின்னால் வைத்துக் கொண்டார். பிறகு பெட்டியை பூட்டி எடுத்து தலைமாட்டில் வைத்துக் கொண்டார். இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பரிதாபமாகப் பார்த்துக் கொள்ள மனிதர் எதையுமே கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. சென்னையிலிருந்து ஆலப்புழா செல்லும் விரைவு வண்டி அது. அவர் இறங்க வேண்டிய இடம் கோவை. கோவை வந்தவுடன் எழுப்பி விட வேண்டும் என்ற கண்டிசன் வேறு போட்டுவிட்டு ஆனந்தமாக நித்திரை கொள்ள ஆரம்பித்து விட்டார். இந்த அப்பாவி இளைஞர்கள் கொட்ட கொட்ட விழித்துக் கொண்டு கோவை வரக் காத்திருந்தார்கள்.

கோவை நெருங்கும் நேரம் மனிதர் எழுப்பினாலும் எழுந்திருக்கும் வழியைக் காணோம். இளைஞர்களுக்கு அவரைத் தொட்டு எழுப்ப பயம். அவருடையது ஒரு சிறிய பெட்டியும், ஒரு பெரிய பெட்டியும் ஆக இரண்டு உருப்படிகள். சிறிய பெட்டியைத்தான் தலைமாட்டில் வைத்துக் கொண்டார் பத்திரமாக.

இதற்குமேல் பொறுமை காக்க முடியாது என்று ஒரு இளைஞன் அவரை மெதுவாக தட்டி எழுப்பினான். மனிதர் அப்படியே ஆடி அசைந்து எழுந்திருக்க முயன்றார்.

‘ஐயா, வண்டி கோவை நெருங்கி விட்டது. சீக்கிரம் எழுந்திருங்கள். அங்கு 10 நிமிடம்தான் நிற்கும்.’

‘அட்ப்பாவிங்களா, முன்னாடியே எழுப்ப மாட்டீங்களா.......என்னடா ஒரு சூட்டிப்பே இல்லாத பசங்களா இருக்கீங்க....நீங்கள்ளாம் என்னாத்த வேலை பார்த்து கிளிச்சி பெரிய ஆளா வரப்போறீங்க...?’

அவ்வளவுதான், அவர்கள் முகம் பொசுக்கென்று வற்றிப் போய் தாங்கள் அவருடைய விலாசம் கேட்க நினைத்ததைக் கூட மறந்து விட்டார்கள். நல்ல வேளையாக அவருடைய விசிட்டிங் கார்ட் ஒன்று கீழே விழ அதை பத்திரப்படுத்தி வைத்திருந்தனர் இருவரும். எப்படியும் ஊருக்குப் போயாவது அவரைத் தொடர்பு கொண்டு வேலை கேட்டு விட வேண்டும் என்று திட்டம் இருவருக்கும்......ஆனால் ஒரு பெரிய ஆப்பு காத்திருப்பது பின்னால்தான் தெரிந்தது இருவருக்கும்.

ஆம் மனிதர் கழிவறைக்குச் சென்றவர் அங்கு 10 நிமிடம் எடுத்து கொண்டதோடு ஆடி அசைந்து வருவதற்குள் வண்டி கோவை ரயில் நிலையம் வந்து நின்றுவிட்டது. அரக்கப் பரக்க ஓடிவந்தவர், சின்ன பெட்டியைத் தான் எடுத்துக் கொண்டு, பெரிய பெட்டியை அந்த இளைஞரில் ஒருவரை கொண்டுவந்து கொடுக்கச் சொன்னார். அவர்களும் இந்த ஒரு வேலைதானே செய்துவிடலாம் என்று முடிவெடுத்து வேகமாக செயலில் இறங்கினர்.

‘அப்பாடி.........மனிதர் ஒரு வழியாக இறங்கவும், வண்டி கிளம்பவும் சரியாக இருந்தது.ஒரு பெரிய கடமையை முடித்த திருப்தியுடன் இருவரும் நிம்மதியாக கண்ணயர்ந்தனர்.தூங்கி விழித்து, புறப்படத்தயாராகும்போது தான் ஒரு பெரிய அதிர்ச்சி இருவருக்கும். பெட்டி மாறியிருந்தது. ஆம் பாரிராசன் இறங்கும் அவசரத்தில் தன் பெட்டியை வைத்துவிட்டு அவர்களுடைய சிறிய பெட்டியை எடுத்துச் சென்றுள்ளார். இருவருக்கும் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. அட்டா பெட்டியில் என்னென்ன் முக்கிய சாமான்கள் வைத்துள்ளாரோ தெரியவில்லையே என்று அச்சம் அடைந்தனர். சரி கீழே இறங்கியவுடன் முதலில் அவருக்கு போன் செய்து விவரத்தைச் சொல்ல வேண்டும் என்று முடிவெடுத்தனர்.

போன் எண்ணை எடுத்து ஒரு வழியாக போன் செய்ய எண்ணைப் போட்டு,

‘ஹலோ, பாரிராசன் ஐயாங்களா........’

‘ஆமாம், நீங்க யாரு...?’

‘ஐயா, நாங்கதான் ரயிலில் உங்களோடு பயணம் செய்தோமே. அவங்கதான். ஐயா.....நீங்க...’

‘டேய், திருட்டு பசங்களா.......என் பெட்டியை ஏண்டா மாத்தினீங்க...இப்ப பெட்டியைத் திறந்து பார்த்துட்டு அதில பெரிசா பணமெல்லாம் இல்லன்னதும் ஒன்னும் தெரியாத மாதிரி போன் பண்றீங்களா.....?’

‘ ஐயோ, இதென்ன, இப்படி பேசறீங்க...உங்க பெட்டியில என்ன இருக்குன்னே எங்களுக்குத் தெரியாதே...இப்பதான் உங்க பெட்டி மாறினதே எங்களுக்குத் தெரியும். உடனே போன் பண்ணறோம்...’

’அடேய், அதெல்லாம் எனக்குத் தெரியாது......அந்த பெட்டில முக்கியமான பில்லு, கிரெடிட் கார்ட் எல்லாம் இருக்கு. உங்களால அதை வைச்சுக்கிட்டு ஒன்னும் பண்ண முடியாது. ஆனா எனக்கு அது ரொம்ப முக்கியம். மரியாதையா கொண்டாந்து குடுத்துபிடுங்க......இல்லேன்னா போலீசுல புடிச்சி குடுத்துடுவேன் பார்த்துக்கோங்க.........’

இருவருக்கும் வேர்த்துப் போய் குலை நடுங்க ஆரம்பித்து விட்டது. இது ஏதுடா வம்பாகப் போய்விட்டதே.......யார் முகத்துல இன்னைக்கு முழிச்சோமோ தெரியலையே.....ஆண்டவனே என்று விதியை நொந்து கொண்டு,

‘ஐயா, அவசரப்பட்டு வார்த்தையைக் கொட்டாதீங்க.....உண்மை தெரியாம ஒரு பெரிய மனிதர் வாயில் இப்படி கீழ்த்தரமான வார்த்தையெல்லாம் வரலாமா.....உங்களை எவ்வளவு பெருமையா நினைச்சிருந்தோம். இப்படி இவ்வளவு அநாகரீகமாக நடந்துக்கறீங்க......நல்லாயிருங்க ஐயா. உங்களோட பெட்டியை அப்படியே திறந்து கூட பார்க்காம கொரியர் பண்ணுகிறோம். திறந்து நீங்க சரி பார்த்துக்கோங்க.......இன்னொரு முறை இது போல அடுத்தவர் மனதை புண்படுத்துகிற பாவத்தைச் செய்யாதீங்க.......நன்றி ஐயா..’

பாரிராசனுக்கு முகத்தில் ஈயாடவில்லை....கன்னத்தில் யாரோ பளார் என்று அரைந்தது போல் உணர்ந்த மனிதர் கன்னத்தைத் தேய்த்துக் கொண்டே திருதிருவென விழித்தார்!பவள சங்கரி திருநாவுக்கரசு.--


Monday, May 23, 2011

வெண்ணிலவில் ஒரு கருமுகில் ! (10)

வெண்ணிலவில் ஒரு கருமுகில் !(10)

'விரும்பிப் போனால், விலகிப் போகும். விலகிப் போனால் விரும்பி வரும் ‘ என்பது வாழ்க்கையின் ஒரு விதி.

மாறன் தந்தையைப் பர்த்தவுடன் அழுதுவிடக் கூடாது, தைரியமாக இருப்பதாகக் காட்டிக் கொள்ள வேண்டும் என்று திட்டம் போட்டு வைத்திருந்தது, தந்தையின் கலங்கிய விழிகளைப் பார்த்த அந்த நொடியில் தவிடு பொடியாகிவிட்டது.தன்னையறியாமல் கண்களில் மாலையாக கண்ணீர். என்னதான் கண்டிப்பான அப்பாவாக இருந்தாலும், சிறு வயதிலிருந்தே தங்களுக்கு வேண்டியதையெல்லாம் பார்த்து பார்த்து செய்த மனிதராயிற்றே. இன்று இப்படி படுக்கையில் இருப்பதை காணச் சகிக்காமல் மனதைப் பிழிந்தது.

‘அப்பா, இப்ப தேவலையாப்பா....’ அதற்குமேல் வார்த்தைகள் வரவில்லை.

‘நன்னாயிருக்கேன்ப்பா......ஏதோ நம்ம பார்த்தசாரதி என்னை மீட்டுண்டு வந்துட்டான்......அன்றாடம் அவனை சேவிச்ச பலனை மொத்தமா கொடுத்துட்டான்..பாவம் அம்மாதான் ரொம்பவும் நடுங்கிப் போயிட்டா..’ கண்களைச் சுழற்றி அம்மாவைத் தேடுவதைக் கவனித்த் மாறன்,

‘அப்பா, அம்மா வெளியில இருக்காப்பா. டாக்டர் ஒருத்தர்தான் உள்ளே இருக்கனும். அதுவும் 5 நிமிடத்திற்கு மேல் இருக்கக்கூடாதுன்னு கண்டிப்பா சொல்லிட்டாராம்.

‘சரிப்பா...நீயும் இப்பத்தானே ஊரிலிருந்து வந்திருக்கே. பிரயாணமெல்லாம் நன்னாத்தானே இருந்தது,’

‘ம்ம்..ஆமாம்ப்பா.நீங்க ஓய்வெடுத்துக்கோங்கோ...நானும் ஆத்துக்குப் போய் ஸ்நானம் பண்ணிண்டு வரேன்’

‘ம்ம் சரிப்பா. அம்மாவை வரச்சொல்லு.நாக்கு வரண்டு போறது. குடிக்க ஏதானும் வேணும்’

வெளியில் வந்தவன்,அம்மாவிடம் அனு நின்று பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து சற்றே தயங்கி நின்றான். இரட்டைப் பின்னலும், பட்டுப்பாவாடையும் கட்டிக் கொண்டு,ஓயாமல் வாய் பேசிக் கொண்டிருந்த சுட்டிப் பெண்ணாக, பார்த்தசாரதி கோவில் தேர்த்திருவிழாவின் போது இறுதியாகப் பார்த்தது அவளை.இப்போது நேர் மாறாக, மிக அமைதியாக, பொறுப்பான, பெண்ணாக சுத்தமாக மாறிவிட்டிருந்தாள். அம்மாவிடம் மிக அனுசரனையாக அவள் நடந்து கொண்டது நிறைவாக இருந்தது அவனுக்கு.துளியும் சங்கோஜப்படாமல், யதார்த்தமாக் சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல அவள் நடந்து கொண்ட விதம் மாறனுக்குப் பிடித்திருந்தது.குடும்பத்திற் கேற்ற நல்ல பெண் என்று அப்பா சொன்னது சரியாகத்தான் இருக்கிறதென்று நினைக்கத் தோன்றியது.

இந்த ஒரு வாரத்தில் தந்தையின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது மனதிற்கு அமைதியளிப்பதாக இருந்தது.அடுத்த நாள் வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் என்று மருத்துவர் கூறியிருந்தாலும் வீட்டிற்குச் சென்று க்வனமாக இருக்க வெண்டும் என்ற அறிவுரைகளையும் வழங்கியிருந்தார் மருத்துவர். இன்னும் இரண்டொரு நாளில் நாளில் ஊருக்குக் கிளம்ப வேண்டும். அப்பா நலமாக இருப்பதில் மன நிம்மதியுடன் கிளம்ப முடியும். இந்த முறை இந்தியாவிற்கு வந்து 10 நாட்களே தங்க முடிந்தாலும், மனதிற்குள் ஒரு அமைதி இருந்தது.மலை போல் வந்த துன்பம் பனிபோல் நீங்கியது போல ஒரு நிம்மதி.அனுவின் அமைதியான தோற்றமும், நட்புறவுடன் பழகும் அவளின் குணமும்,தன் பெற்றோருக்கு உதவியாக இருக்கும் நல்ல மனதும் அவளிடம் ஒரு மரியாதையை ஏற்படுத்தியது மாறனுக்கு. அதற்கு மேல் எதைப்பற்றியும் நினைத்துப் பார்க்க இயலாத சூழல்.

ஊருக்குக் கிளம்பும் போது அப்பாவின் கணகளில் துளிர்த்திருந்த சிறிய கண்ணீர் முத்துக்கள் மனதை நெகிழச் செய்தது.பழைய தெம்பு இன்னும் வரவில்லை.மரணபயத்திலிருந்து மீள கொஞ்ச காலம் பிடிக்கும் போன்று தெரிந்தது. எப்படியும் அனு அடிக்கடி வந்து பார்த்து இவர்களை சரி செய்துவிடுவாள் என்று நினைப்பது தவறோ என்று மனம் தயங்கத்தான் செய்தது.எது நடந்தாலும் நன்மைக்கே, என்று பொத்தாம் பொதுவாக முடிவு செய்வதைத் தவிர வேறு ஒன்றும் செய்வதற்கில்லை. அப்பா விமான நிலையம் வந்து வழி அனுப்பி வைக்க இயலாதது பெரும் மனக்குறையாக இருந்தது அவனுக்கு.அண்ணனும் முதல் நாளே கிளம்பிப் போய்விட்டான்.மன்னி வேறு அங்கு தனியாக இருந்து கொண்டிருக்கிறார்களே. வாயும், வயிருமாக இருப்பவர்களுக்கு ஒத்தாசைக்குக்கூட அங்கு அக்கம், பக்கத்தில் ஆட்கள் இல்லை.அதுதான் நகர வாழ்க்கை. மக்கள் அவரவர்களின் பாட்டைப் பார்ப்பதே பெரும்பாடு நகரங்களில்.இதில் அடுத்த வீட்டு பிரச்சனைகளைப் பார்ப்பது சாமான்யமான காரியம் அல்லவே.

ரம்யாவிற்கு தான் கிளம்பப்போவதை முன்பே தெரிவித்திருந்ததால், அவள் விமான நிலையத்திற்கு உல்லாச ஊர்தியுடன் வந்திருந்தாள்.பனிக் குன்றுகளின் சொச்சம் அங்கங்கே குத்தவைத்திருந்தது கணகளுக்கும் குளிர்ச்சிதான். சுட்டெரிக்கும் சென்னை வெய்யில்,எவ்வளவு கொடியது என்பதை இந்த மிதமான குளிர் நன்கு உணர்த்தியது.நெவார்க் விமான நிலையம், மிகவும் போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதி.சரியான நேரத்திற்கு விமானம் தரையிறங்கிவிட்டாலும், பாதுகாப்புச் சோதனைகள் முடிந்து வெளிவர சற்று தாமதம் ஆனது. பாவம் ரம்யா வந்து காத்துக் கொண்டிருப்பாளே என்று வேக வேகமாக ஓடி வந்த மாறன் வெளியில் ரம்யாவைக் காணாமல் தலையைத் திருப்பி அங்கும் இங்கும் தேடிக் கொண்டிருந்தான்.

வலது புறம் நுழைவாயிலில் ஒரு சீனக் குழந்தை, குண்டு கன்னம், சப்பை மூக்கு, ரோசா வண்ண இதழ்கள், அழகான மழலையில் உடன் வந்த இன்னும் சற்றே பெரிய குழந்தையிடம் ஏதோ கையை நீட்டி, நீட்டி பேசிக் கொண்டிருந்தது...நடு நடுவே, தன்னையே யாரோ உற்றுப் பார்ப்பதை உணர்ந்து, சற்றே நாணத்துடன், லேசான புன்னகையைப் பூத்தது.....அந்த அழகில் அப்படியே மெய்மறந்து நின்று கொண்டிருந்த போதுதான், முகத்தின் வெகு அருகில் சாவி ஆடியது. யாரது, என்ற கோபத்துடன், திரும்பி பார்த்தவன், அட ரம்யா...நீதானா?

‘ஆமாம் மாறன், கொஞ்சம் தாமதமாகிவிட்டது. வழியில் ஒரே போக்குவரத்து நெரிசல் வேறு.வந்து சேருவதற்குள் போதும், போதுமென்றாகிவிட்டது.சாரிப்பா’’

பரவாயில்ல விடு, எனக்கு நேரம் போனதே தெரியலப்பா....இந்த குழந்தைகள் அத்தனை அழகு...என்னமா பேசறாங்க......ஆங்கிலமும், சீனமும், கலந்து தூள் கிளப்புறாங்க.......பொழுது போனதே தெரியல.

‘என்னப்பா, அதுக்குள்ள குழந்தை ஆசை வேறு வந்துவிட்டதா.ரொம்ப டூ மச்சா இல்ல இருக்கு இது.அது சரி அப்பாகிட்ட,மேட்டரை போட்டு உடைச்சு எனக்கு வேலை இல்லாம பண்ணிட்ட போல’

‘அட ஏன்ப்பா, நீ வேற,அங்க இருக்கற நிலைமை தெரியாம பேசிக்கிட்டு இருக்கே.அதெல்லாம் இருக்கட்டும், நம்ம் ஆபீஸ்ல என்ன விசேசம். நீ பேக்கிங் எல்லாம் ஆரம்பிச்சுட்டியா?’

ஆபீஸ் எப்பவும் போலத்தான்...நாளொரு இஷ்யூவும், பொழுதொரு சங்கடமுமாக போய்க்கொண்டு இருக்கிறது. எந்த மாற்றமும் இல்லை.இப்பத்தான் ஊருக்கு, ஷாப்பிங் பண்ண ஆரம்பிச்சு இருக்கேன்.இனிமேதான் பேக்கிங் ஆரம்பிக்கனும். இன்னும் 2 வாரம் இருக்கே...

இருவரும் பேசிக் கொண்டே, கார் பார்க்கிங்கிற்கு வந்து தரையில் பரவிக் கிடந்த பனிக்கட்டிகளில் வெகு கவனமாக அடி எடுத்து வைத்து நடந்து சென்று வண்டியினுள் ஏறினர்.ரம்யா, எடுத்த எடுப்பிலேயே, சர்ரென, ஆக்சிலேட்டரை தூக்கி விட்டு வேகமாகக் கிளப்பினாள்.

‘என்ன ஆச்சு, ரம்யா. ஏன் இப்படி...பார்த்து நிதானமா எடு’

‘ம்ம்ம்’

பார்க்கிங் ஏரியாவை விட்டு வெளியே வந்த்வுடன், திரும்பவும் வேகத்தை அதிகமாக்க முயன்றாள். ஸ்பீட் லிமிட் 40 மைல் என்று தெரிந்தும், அதற்கு மேலும் வேகம் எடுக்க ஆரம்பித்தாள். பல முறை ஏற்கனவே டிக்கெட் வாங்கியவள்தான் என்றாலும், அங்கங்கே இன்னும் பனிக்கட்டிக்ளின் மீதம் பரவிக் கிடக்கையில் இப்படி சர்ரென்று வண்டி எடுப்பது எவ்வளவு ஆபத்தானது என்று தெரிந்தும் இப்படிச் செய்கிறாளே என்று யோசிக்கும் போதே, ரம்யா வண்டியை அப்படியே பனிக்கட்டியின் மீது வேகமாக ஏற்ற, வண்டி ஒரு சுற்று சுற்றி சர்ரென வழுக்கிக் கொண்டே ........இழுத்துச் சென்றது. கத்துவதற்குக்கூடத் தோன்றவில்லை இருவருக்கும்.நல்ல வேளையாக ஒரு மரம் சாலையோரம் இருந்தது. வண்டி அதில் சென்று மோதி நின்றது. இன்னும் இரண்டு அடி சென்றிருந்தால், அவ்வளவுதான், ஒரு பெரிய பள்ளம். ஏழு, எட்டு அடி இருக்கும். நல்ல வேளையாக எந்த சாமி புண்ணியமோ, மரம் வந்து காப்பாற்றியது. வண்டியைத் திறந்தால் திறக்க முடியாமல், கதவு இறுகிக் கொண்டது.

ரம்யா அப்படியே சாய்ந்து உட்கார்ந்து விட்டாள் படபடப்பாக......

மாறன் அவளிடமிருந்த செல்பேசியை வாங்கி 911 என்ற அவசர உதவி எண்ணை அழைத்து, செய்தியைச் சொல்லி உதவி கேட்டு, அவர்கள் வந்து ஒரு வழியாக வண்டியைத் திறந்துவிட, பிறகு இருவரும் ஓரளவிற்கு சரி செய்து கொண்டு புறப்படத்தயரானார்கள்.மாறன் தான் வண்டியை ஓட்டிக் கொண்டு வருவதாக எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அடம் பிடித்து தானே ஓட்டி வந்து சேர்ந்தாள்.

‘என்ன ரம்யா....இன்னும் இவ்வளவு டென்சனாவே இருக்கே.....என்ன ஆச்சுப்பா.’ என்றான் கனிவாக.

‘அதெல்லாம் ஒன்னுமில்ல மாறன். இந்தா உனக்கு சாப்பாடு. ஏதோ செய்திருக்கேன். சுமாராத்தான் இருக்கும். நாளைக்குத் தனியா சப்பாத்தியும், சன்னாவும் வைத்திருக்கிறேன். இப்போ போய் சாதம் சாப்பிடு. தக்காளி சாதம். உனக்குத்தான் பிடிக்குமே. நாளைக்குப் பார்க்கலாம். சரியா....’

‘ரம்யா, பார்த்துப் போ ரம்யா. நாளைக்குப் பேசலாம்’என்று கூறி அனுப்பினாலும், ரம்யாவை நினத்து மேலும் கவலையாக இருந்தது மாறனுக்கு. ஏன் இவ்வளவு டென்சனாக இருக்கிறாளோ தெரியவில்லையே. நாளை ஆபீஸ் சென்றவுடன் முதல் வேலையாக அதைக் கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.வீட்டில் நுழைந்து பெட்டியை ஓரமாக வைத்துவிட்டு, கழிவறைக்குச் சென்று முகம் அலம்பிக் கொண்டு வந்து உட்கார்ந்தான். அம்மா இத்தனை நெருக்கடியான மனநிலையில் கூட தனக்காகவும், அண்ணன், மன்னிக்காகவும், பலகாரங்கள் செய்து கொடுத்ததை நினைத்து ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை அவனால்.தாய்மை என்ற அந்த உணர்வு இந்த உலகத்தில் வேறு எந்த உறவுக்கும் ஈடாகுமா என்று கற்பனைகூட செய்து பார்க்க இயலாத ஒன்று.இட்லி பொடி, பருப்பு பொடி, கருவேப்பிலை பொடி என்று எல்லாம் பார்த்து பார்த்து பக்குவமாக தயார் செய்து, அழகாக அதை பேக் செய்தும் கொடுத்திருந்தார்கள். எப்பொழுதும் பேக்கிங் தந்தையின் வேலை.இந்த முறை அம்மா, அப்பாவின் மேற்பார்வையில் அதே போல் அழகாக பேக் பண்ணி அனுப்பியிருந்தார்கள். அம்மா கைபட்ட அந்த பொட்டலத்தின் ஸ்பரிசம் கூட அவனுக்கு அந்த நேரத்தில் இதமாக இருந்தது. ஏதோ தன் தாய் அருகாமையில் இருப்பது போன்று ஒரு உணர்வு. இதற்காகவே அவன் தன் அம்மாவிடம் எதையாவது இப்படி கேட்டு வாங்கி வைத்துக் கொள்வான். முடிந்தவரை அதை கொஞ்சமாவது சேமித்து வைத்தும் கொள்வான், அடுத்த முறை ஊருக்குச் செல்லும் வரை. ரம்யா கூட பல முறை இதைக் கிண்டல் செய்திருக்கிறாள், தேவையில்லாத செண்டிமெண்ட் என்று......ரம்யா கொடுத்த தக்காளி சாதம் சுவை சற்று மட்டுதான் என்றாலும்,பசிக்கு தேவாமிர்தமாக இருந்தது. அம்மா கையால் சுவையாக சாப்பிட்டு வந்ததனால் ஒரு வேளை இது மட்டாக தெரிகிறது போலும் என்று நினைத்துக் கொண்டே சாப்பிட்டான். திடீரென புரை ஏற ஆரம்பித்தது அவனுக்கு.யாரோ தன்னை நினைத்துக் கொள்வார்கள் போலிருக்கிறதே...யாராக இருக்கும்......?வாஷிங்டன் - நண்பன் தினேஷின் வீடு.இரண்டு பேருக்குப் போதுமான அளவில் சிறிய வீடு. ஒரு படுக்கை அறை, சமயலரை, சின்ன வரவேற்பு அறை என சிறிய வீடுதான். அங்கு வாங்குகிற சம்பளத்தில் கனிசமான செலவு என்றால் அது வீட்டு வாடகையும், குழந்தை பராமரிப்பு செலவும்தான்.கணவன், மனைவி இருவருக்குப் போதுமான வீடுதான். ஆனாலும் யாராவது இப்படி விருந்தாளி வந்துவிட்டால் கொஞ்சம் திண்டாட்டம்தான்.தினேஷின் மனைவி அனிதாவின் தூரத்து உறவினரின் பெண் அங்கே குடியிருப்பதாகவும், அவள் தனியாக இருப்பதனால் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் செய்யும்படியும், அனிதாவின் பெற்றோர், ஏற்கனவே தொலைபேசி மூலம் தெரிவித்திருந்தார்கள். அதனால் இன்று அவள் வீட்டிற்கு வந்து நேரில் சில விசயங்கள், அலுவல் சம்பந்தமாக பேச வேண்டும் என்பதாலும் தினேஷின் இல்லம் தேடி வந்திருக்கிறாள்.

அப்போதுதான் அவள், தனக்கு கம்பெனியில், டெப்புடேஷனாக 2 மாதங்களுக்கு நியூ ஜெர்சிக்கு மாற்றல் செய்திருக்கிறார்கள், என்றும் அங்கு ஒருவரையும் தெரியாததாகையால் தனக்கு உதவ யாராவது தெரிந்தவர்கள் இருந்தால் அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாள்.

அப்போதுதான் மாறனின் நினைவு வந்தது தினேஷிற்கு. மாறனின் நல்ல குணங்கள் குறித்தும், அவன் கல்லூரிக்காலத்திலேயே, அனாதை ஆசிரமம் ஒன்று ஆரம்பித்து அதன் மூலம் பல குழந்தைகளின் வாழ்வில் இன்றும் ஒளியேற்றிக் கொண்டிருப்பதையும், அந்த வகையில்தான், தனக்கும் மாறனின் அறிமுகம் கிடைத்ததையும் குறித்து விளக்கமாகக் கூறி, அவனை அறிமுகப்படுத்தி வைப்பதாகவும் கூறினான் தினேஷ், அவந்திகாவிற்கு. ஆம் அதே அவந்திகாதான்.............

தொடரும்.