Thursday, July 18, 2013

வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (19)


பவள சங்கரி
“ஒருவரை விடுவிக்க வெறுமனே அவருடைய சங்கிலிகளை உடைத்தெறிவது மட்டுமல்லாமல் அடுத்தவர்களின் சுதந்திரத்தை மதிப்பதோடு அதை மேம்படுத்தும் வகையில் வாழ்வதில்தான் இருக்கிறது. 
_நெல்சன் மண்டேலா


அறியாததை அறிந்து, தெரியாததற்குள் காலடி வைக்கலாமா?
நடப்பது அனைத்தும் நன்மைக்கே என்று எடுத்துக்கொண்டு வாளாவிருக்கலாமா? அல்லது நம்மை மீறி நடப்பவைகளை எதிர்த்து நின்று போராடலாமா? அல்லது விட்டுவிலகி வேறு பாதையை நாடலாமா?
சமீபத்தில் என் நண்பர் ஒருவரை வெகு நாட்களுக்குப் பிறகு சந்தித்தேன். அவர் சமீபத்தில் மிகப்பெரிய வியாபார காந்தமாக மாறிவிட்டதாகக் கேள்விப்பட்டிருந்தேன். உண்மையில் அவரை எனக்குத் தெரியும் என்று சொல்லிக் கொள்வதில் எனக்கும் பெருமையாக இருந்தது. காரணம் வாழ்க்கையின் அடி மட்டத்திலிருந்து உழைப்பினால் மேல் நிலைக்கு வந்தவர். அன்று அவரைப் பார்த்தபோது என் கற்பனைக்குச் சற்றும் எட்டாத நிலையில் மிகவும் வேதனையாகக் காணப்பட்டார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பேசிக்கொண்டிருந்தபோது, அவருடைய வியாபார பங்குதாரர் தன்னை ஏமாற்றிவிட்டு பணத்தையெல்லாம் எடுத்துக்கொண்டு போய்விட்டார் என்று புலம்பினார். இத்தனைக்கும் அந்தக் கூட்டாளி இவருடைய நெருங்கிய நண்பர். தான் ஏமாற்றப்பட்டதால், வேதனையிலும், கோபத்திலும் உழன்று நொந்து போயிருந்தார். இது நடந்து கிட்டத்தட்ட ஓராண்டு ஆன நிலையில் இன்னும் அவர் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளாமல், தன் வேதனைக்கு ஒரு தீர்வு கிடைக்கும் முகமாக, இந்த ஏமாற்றத்திற்கு தர்க்கரீதியான ஒரு காரணத்தைத் தேடி தன் மூளையை கசக்கிப் பிழிந்துகொண்டிருக்கிறார். எப்படியாவது அதை அறிந்தே ஆக வேண்டும் என்று தீர்மானமாக இருக்கிறார்.

Sunday, July 14, 2013

பாட்டி சொன்ன கதைகள் (11)


பவள சங்கரி
ஹாய் குட்டீஸ் நலமா?
pigeon10
கடல் புறா கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அறிவியல் முன்னேற்றம் அடையாத அந்தக் காலத்தில் கப்பல் பயணம் செய்பவர்கள் கரையைக் கண்டுபிடிப்பதற்கு புறாவைப் பயன்படுத்துவார்களாம். அதாவது குறிப்பிட்ட ஒரு தூரத்தைக் கடந்தவுடன், கரை அருகில் இருக்கிறதா என்று கண்டுபிடிப்பதற்காக கப்பலில் வளரும் ஒரு புறாவை அனுப்புவார்களாம். கரை அருகில் இருந்தால் அது அங்கு சென்று தானியங்கள் அல்லது ஏதும் சிறு புழுக்கள் என தின்றுவிட்டு திரும்புமாம். கரை அருகில் இல்லாதபட்சத்தில், விரைவில் திரும்பிவிடுமாம். இதைவைத்து கப்பல் மாலுமிகள் கரை அருகில் இல்லை என்பதைக் கண்டுகொள்வார்களாம். ஆனால் இன்று அப்படி இல்லை. கடல் பயணம் செய்பவர்களுக்கு உதவும் வகையில் பல நவீனக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
362755133627466936275516
சரி கதைக்கு வருவோமா.. சிபிச் சக்கரவர்த்தின்னு ஒரு பெரிய ராஜா இருந்தாராம். மிகப்பெரிய வள்ளல் அவர். பறவைகளிடம்கூட மிகுந்த அன்பும் அக்கறையும் உடையவர் சிபி. ஒரு நாள் ஒரு கழுகு ஒரு புறாவைத் துரத்திக்கொண்டு வந்ததாம். அரசர் பூங்காவில் உட்கார்ந்து இயற்கையை இரசித்துக் கொண்டிருந்த அந்த நேரத்தில் அரசரின் கண்களில் இந்தக் காட்சி பட்டதாம். அப்போது கழுகினால் துரத்தப்பட்ட அந்த அப்பாவிப் புறாஉயிருக்குப் பயந்து அடைக்கலம் தேடி சிபி மன்னனின் மடியில் வந்து விழுந்தது. அதைப் பார்த்த மன்னன் கழுகிடமிருந்து அந்தப் புறாவைக் காக்க முயற்சித்தார். அப்போது அந்த கழுகு அரசனிடம் நியாயம் கேட்டதாம். புறா என் உணவு. அதனைச் சாப்பிட விடாமல் தடுப்பது தர்மமாகுமா? என் பசிக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் என்று பரிதாபமாகக் கேட்டதாம். உடனே மன்னன், சற்றும் யோசிக்காமல், புறாவின் எடைக்கு நிகராக என் சதையை அரிந்து கொடுக்கிறேன் என்றாராம். உடனே அந்தக் கழுகும் அதற்கு சம்மதித்ததாம். மன்னன் சிபி உடனே அதற்கான ஏற்பாடுகளைச் செய்யச்சொல்லி கட்டளையிட, உடனே பணியாட்கள் அதற்கான தராசை கொண்டு வந்தனர். தராசின் ஒரு புறம் அந்தப் புறாவை நிறுத்தி வைத்து, மறுபுறம் தன் தொடையிலிருந்து சதையை கொஞ்சம் கொஞ்சமாக வெட்டி வைத்தும் தராசு இறங்கி சமமாகவில்லையாம். சிபி மன்னன் உடனே தானே ஏறி அந்த தராசில் உட்கார அது சம நிலைக்கு இறங்கி வந்ததாம். ஆச்சரியமான அந்தச் சூழலில் புறாவை விரட்டி வந்த அந்தக் கழுகு பிரகாசமாக பரம்பொருளாக உருவெடுத்து, நெடிதுயர்ந்து நின்றதோடு, “உன் வள்ளல் தன்மையை உலகுக்குத் தெரியப்படுத்தவே இந்த நாடகமாடினோம். சகல செல்வங்களும் பெற்று நீடூழி வாழ்க” என்று அன்னை பராசக்தியுடன் வந்து ஆசீர்வதித்தாராம். உடனே அவருடைய வெட்டிய சதைகள் அனைத்தும் உடலோடு சேர்ந்துவிட்டது. அந்தப் புறாவும் பறந்துவிட்டது.
இதிலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டியது , தர்மம் செய்ய நினைத்தால் அதை முழு மனதுடன், நிறைவாகச் செய்யத் துணிய வேண்டும். அப்படிச் செய்யும்போது நமக்கு மேல் உள்ள அந்த பரம்பொருள் மனம் மகிழ்ந்து நமக்கு வேண்டியதெல்லாம் அருளுவார்.
மீண்டும் சந்திப்போம்
படங்களுக்கு நன்றி:
http://pigeonfanciers.ca/picture.html

நன்றி ; வல்லமை - செல்லம்