Thursday, August 20, 2026

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 38

 


63 நாயன்மார்கள் வரலாறு – 33 சாக்கிய நாயனார்

 

பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!

ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்ற்!

வாழி திருநாவலூர் வன்றொண்டர் பதம் போற்றி!

ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி!

 

    

தொண்டை நாட்டில், திருச்சங்க மங்கை என்னும் ஊரில் வேளாளர் குலத்தில் தோன்றியவர் சாக்கிய நாயனார். சாக்கியர் என்பது சாக்கிய மதத்தைச் சார்ந்தவர் என்ற பொருளாகும். இவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் தெரியவில்லை. இவர் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினார். அனைத்து உயிர்களிடத்தும் அருளுடையவராக விளங்கிய சாக்கியர், பௌத்த மதத்தில் ஞானம் பெற முயன்றவர், இறைவன் திருவருளால் சிவநெறியே உயர் நெறி என்று உணர்ந்தார். காஞ்சிபுரத்தில் ஏகாம்பர நாதரைத் தொழுதார். ஆனாலும் அவர் சாக்கிய உடையை மாற்றிக் கொள்ளாமல் அதே உடையிலேயே இருந்தார்.

வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே
மறவாது கல்லெறிந்த சாக்கியற்கும் அடியேன்

 என்று சுந்தரமூர்த்தி நாயனார் இவரைப் புகழ்கின்றார்.

 

காணாத அருவினுக்கும்

  உருவினுக்கும் காரணமாய்

நீள் நாகம் அணிந்தார்க்கு

  நிகழ் குறியாம் சிவலிங்கம்

நாணாது நேடியமால் நான்

  முகனும் காண நடுச்

சேணாரும் தழல் பிழம்பாய்த்

  தோன்றிது தெளிந்தாராய்.

 

சிவலிங்க வழிபாடே சிறந்தது என்று மனம் தெளிந்த சாக்கியர் உள்ளம், நாள்தோறும் சிவலிங்கத்தைக் கண்ட பின்னரே உண்ண வேண்டும் என்ற முடிவை மேற்கொண்டார். வெட்டவெளியில் கேட்பாரற்று இருந்த ஒரு சிவலிங்கத்தைக் கண்டு களிப்புற்றவர், செய்வதறியாது அருகிலிருந்த ஒரு கல்லை எடுத்து சிவலிங்கத்தின் மீது எறிந்து வழிபட்டபோது சிவபெருமானும் அக்கல் அடியை இனிமையாக அன்புடன் ஏற்றுக்கொண்டார்.  இறைவன் மீது கொண்ட அளவிலாத அன்பினாலே அவன் திருவருளையே நினைந்து தாம் என்ன செய்கிறோம் என்று தெரியாமலே கல் எறிந்த சாக்கியரை எம்பெருமான் மகிழ்ந்து ஏற்றார். மறுநாளும் சாக்கியர் சிவபெருமானைக் கண்டு களிக்க வந்தார். முதல் நாள் நடந்த நிகழ்வுகளைப் பற்றி எண்ணிப் பார்த்தவர், தாம் செய்த அச்செயல் இறைவன் திருவருளாலே நடந்துள்ளது என்று உணர்ந்து நாளும் அதையேச் செய்வது இறைவன் திருவுளம் என்றும் உணர்ந்தார்.

 

சாக்கியரின் கல்லெறியும் வழிபாடு இங்கனமே தொடர்ந்தது. ஒரு நாள் கல் வழிபாட்டைச் செய்ய மறந்து உணவு உண்ண அமர்ந்தவர், எம்பெருமானுக்கு கல்லெறியாமல் உண்ண வந்துவிட்டோமே என்று பேரன்புடன் கல்லை எடுத்துக் கொண்டு ஓடி வந்தார் சாக்கியர். அப்போது அவர் முன் சிவபெருமான் உமாதேவியுடன் தோன்றி திருக்காட்சி வழங்கினார். தேவாதி தேவர்களுக்கும் கிடைக்காத பெரும்பேறு சாக்கிய நாயனாருக்குக் கிடைத்தது. அவருக்கு சிவலோகமும் அன்போடு வழங்கினார் எம்பெருமான்.

 

சாக்கிய நாயனார் புராணம் சொல்லும் கருத்து

 

அறுபத்து மூன்று நாயன்மார்களில் பௌத்த மதத்தைச் சேர்ந்த ஒரே நாயனார் சாக்கிய நாயனார். இவர் அனைத்து உயிர்களிடத்தும் அன்பும், அருளும் ஒருங்கே அமையப் பெற்றவராய்த் திகழ்ந்தார். சிவபெருமானை வழிபடுவோர் மலர் தூவியும், பதிகங்கள் பாடியும் வழிபடுவது வழக்கம். ஆனால் சிவபெருமானைக் கல்லெறிந்து வழிபட்டு, கயிலாய பதவியைப் பெற்றவர் சாக்கிய நாயனார்.

பிறப்பதும், இறப்பதும் மனித இனத்தின் சாபக்கேடு என்பதை உணர்ந்த சாக்கிய நாயனார், நாம் எங்கிருந்து வந்தோம், எங்கே செல்லப் போகிறோம் என்றும் சிந்திக்க ஆரம்பித்தார். பிறப்பையும், இறப்பையும் தவிர்க்க வேண்டுமென்ற கருத்து அவர் எண்ணத்தில் ஆழமாக ஊன்றிவிட்டது. கல்வியில் கரையிலாக் காஞ்சி மாநகருக்குச் சென்றார். காஞ்சி மாநகர் தத்துவக் கோட்டையாகத் திகழ்ந்த பொற்காலம் அது. 2000 ஆண்டுகளுக்கு முன்னர் சீன நாட்டில் இருந்து பலர் காஞ்சி மாநகர் வந்து தத்துவம் பயின்று சென்றதாகவும் வரலாறு அறியத் தருகின்றது. சாக்கிய நாயனார் காஞ்சி மாநகர் சென்று பல நூல்களை ஆராய்ந்து, பல அறிஞர்களின் உரைகளைக் கேட்டுத் தாமும் அறிஞராய்த் திகழ்ந்தார்.  

 

பௌத்தர்களின் அரிய  திரிபிடகம்” என்ற கலை நூலைக் கற்று அதன் துணிபாகப் பெறப்பட்ட முடிபும் இன்னும் மற்றப் புறச்சமயங்களின் சார்பாகக் கூறும் முடிவுகளும் உண்மைப் பொருள் அல்ல என்ற உண்மையைத் தெளிந்தார். தத்துவத்தின் ஈர்ப்பால் சாக்கிய மதத்தைச் சேர்ந்தவர், இறைவன் திருவருளால் சிவநெறியே உயர்நெறி என உணர்ந்தார். ஆனாலும் சாக்கியர் தோற்றத்திலேயே இருந்தார். சிவநெறியில் சிந்தை இருந்தாலும் புறத்தே சிவ வேடம் தரிக்காமல் சாக்கிய வேடத்திலேயே இருந்தார்.

 

 

எந்நிலையில் நின்றாலும்

  எக்கோலம் கொண்டாலும்

மன்னிய சீர்ச் சங்கரன் தாள்

  மறவாமை பொருள் என்றே

துன்னிய வேடம் தன்னைத்

  துறவாதே தூய சிவம்

தன்னை மிகும் அன்பினால்

  மறவாமை தலை நிற்பார்

 

வினை என்பது சடம். வினைச்செயல் செய்கின்ற உயிர் செய்கின்ற செயல், செயலுக்கேற்ற பலன், பலனைக் கூட்டுகின்ற இறைவன் இந்த நான்கும் சைவத்திற்கு அடிப்படை. இறைவன் வினைப்பயனைக் கூட்டுவிக்கின்றான். எந்த நிலையில் ஒருவர் நின்றாலும், எந்தக் கோலத்தைக் கொண்டாலும், நிலையான சிறப்புடைய சிவபெருமானின் திருவடிகளை மறவாமையே உண்மையான உறுதிப் பொருளாகும், எனத் துணிந்து சாக்கியர் வேடம் தரித்தவாறே சிவபெருமானை வணங்கி வந்தார்.

 

செய்வினையும் செய்வானும் அதன்

  பயனும் கொடுப்பானும்

மெய் வகையால் நான்காகும் விதித்த

  பொருள் எனக் கொண்டே

இவ்வியல்பு சைவநெறி அல்ல

  வற்றுக்கு இல்லை என

உய்வகையால் பொருள் சிவன் என்று

  அருளாலே உணர்ந்து அறிந்தார்.

 

கண்ணுக்குத் தெரியாத அருவமாய் உள்ள மேனிக்கும், கண்ணுக்குத் தெரியும் உருவ மேனிக்கும் மூலமான இருப்பிடமாகி, நீண்ட பாம்பினை அணிந்த எம்பெருமான் சிவனை அறிந்து வழிபட சிறந்த அடையாளமான குறியாய் விளங்கும் சிவலிங்கம் தேடிய திருமாலும், நான்முகனும் காணுமாறு அவர்கள் நடுவே அனல் தூணாகித் தோன்றிய வடிவமே ஆகும் எனத் தெளிவு கொண்டார்.

 

செய்யும் வினை ஒன்று. செய்பவனான கருத்தா ஒன்று. பயன் ஒன்று. அதனை வழங்கி ஊட்டுபவனான இறைவன் ஒன்று என உண்மை காணும் வகையினால், விதியினால் கிடைக்கும் பொருட்கள் நான்காகும் என்ற தெளிவும் கொண்டார். இந்தச் சிறப்பு இயல்புநிலை சைவநெறி அல்லாத மற்ற நெறிகளுக்கு இல்லை என்ற துணிபையும், நிலை பெறும் தவத்தால் சிவபெருமானின் துணையால் பொருளாவது சிவனே ஆவார் என்பதனையும் உணர்ந்து அறிந்து கொண்டார்.

 

அகம் நிறைந்த பேர்

  உவகை அடங்காத ஆதரவால்

மகவு மகிழ்ந்து உவப்பார்கள்

  வன்மை புரிசெயலினால்

இகழ்வனவே செய்தாலும் இளம்

  புதல்வர்க்கு இன்பமே

நிகழும் அது போல் அதற்கு

  நீள் சடையார் தாம் மகிழ்வார்.

 

எப்போதும் செயலுக்கு முக்கியத்துவம் இல்லை. செயல்புரிவார் உள்ளத்தில் திகழும் நினைவுகளுக்கே முதன்மை கொடுக்கிறோம்.

 

கல்லாலே எறிந்ததுவும் அன்பான

  படி காணில்

வில்வேடர் செருப்பு அடியும்

  திருமுடியில் மேவிற்றால்

நல்லார் மற்று அவர் செய்கை

  அன்பாலே நயந்து அதனை

அல்லாதார் கல் என்பார்

  அரனார்க்கு அஃது அலராமால்.

 

  சாக்கிய நாயனார் அச்செயல் தொடங்கிய நாளில் இறைவர் அருள் செய்த அச்செயல் இடையறாது தொடர்ந்து செல்லும் கடமையை எண்ணுபவராய்க் கல்லைச் சிவலிங்கத்தின்மீது எறிபவராய்த் துவராடையை அணிகின்ற சாக்கிய வேடத்தையும் தொடர்ந்தார். பெருந்தவமுடைய சாக்கிய நாயனார் சிவபெருமானின் அருட்செயலே அனைத்தும் என்ற உணர்வுடையவராக விளங்கினார். கல்லால் எறிந்த செயலும் அன்பால் செய்யும் தொண்டே என்பதற்கு ஆதாரமாக, வில்வேடரான கண்ணப்பரின் செருப்படியும், இறைவரின் திருமுடியில் பொருந்தப் பெற்ற தன்மையை அறிவோம். நாயனார் அன்பால் விரும்பிய அச்செயலை, அவர் எறிந்தது கல் என்பர் அறியாதார். ஆனால் அது எம்பெருமான் சிவனுக்கு மனமிக்க மலரேயாகும்.

 

சிவபெருமானை வழிபட தூய அன்பும், உண்மையான பக்தியும் இருந்தால் போதும் என்பதற்கு எடுத்துக்காட்டாக கல்லெறிந்து வழிபட்டு, கயிலாய பதவியைப் பெற்றவர் சாக்கிய நாயனார். வீரட்டானேசுவரருக்கு எதிரே சாக்கிய நாயனார் திருமேனி கையில் கல்லுடன் காணப்படுகிறது. வீரட்டானேசுவரர் திருமேனி மீது சாக்கியர் கல்லால் எறிந்ததால் ஏற்பட்ட வடுவும் காணப்படுகிறது. இவரது குருபூசை தினத்தன்று அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

 

திருச்சிற்றம்பலம்

 

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 37

 


63 நாயன்மார்கள் வரலாறு – 32 சோமாசிமாற நாயனார்

 

 அன்பராம் சோமாசி மாறனுக்கும் அடியேன்என்று திருத்தொண்டத் தொகையில் போற்றப்படும் சோமாசிமாற நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர்.
 பாடல் பெற்ற திருத்தலமான, மாஞ்சோலை சூழ்ந்த ஊரானஅம்பர்மாகாளம் (தற்போது "கோவில் திருமாளம்' என அழைக்கப்படுகின்றது),  சோழ வளநாட்டில் அமைந்துள்ள ஒரு புண்ணியத் தலமாகும். இவ்வூரில் வேதங்கள் பயிலும் மறையவர் குலத்தில் அவதரித்தவர் சோமாசிமாற நாயனார். சோமயாகம் செய்பவர்கள் சோமையாசி என்று அழைக்கப்பட்டனர். இதுவே பின்னாளில் சோமாசிமாற நாயனார் என்று மாறியுள்ளது. தவறாது மழைபொழியவும், உலகம் செழிக்கவும் செய்யப்படும் யாகமே சோம யாகம். இவர் சிவனடியார்கள் என்றால் அவர் எக்குலத்தவராயினும் பேதம் பாராட்டாது தொண்டு செய்வதைத் தம் வாழ்நாள் கடமையாகக் கொண்டிருந்தார்.

அம்பர்நகர் அந்தணர்சோ மாசி மாறர்

    அன்பர்களாம் யாவர்க்கும் அன்பின்அமு த்ளிப்பார்

உம்பர்நிகழ் வகையாகம் பலவுஞ் செய்யும்

    உண்மையினார் ஐந்தெழுத்தும் ஓவா நாவார்

நம்பர்திகழ் திருவாரூர் நயந்து போற்றும்

    நாவலர் கோன் அடிபரவும் நன்மை யாலே

இம்பர்தொழ உம்பர்பணிந்து ஏத்த வேலை

    ஏழுலகும் உடனாளும் இயல்பி னாரே

எந்நாளும் சிவத்தலங்கள் தோறும் சென்று சிவதரிசனம் செய்து, சிவபெருமானின் "நமச்சிவாய" எனும் திருவைந்தெழுத்தை சித்தந் தெளிய ஓதும் ஒழுக்கம் உடைய இவர் தம் இளம் வயது முதலே சிவபெருமானின் மீது மிகுந்த பக்தியும், அன்பும் கொண்டிருந்தார். அதுமட்டுமின்றி சிவபெருமானை வழிபடும் அடியார்களுக்கு வேண்டிய பொருள் உதவிகளையும், உணவுகளையும் அளிப்பதைத் தமது தலையாயக் கடமையாகவும் கொண்டிருந்தார்.

பல சிவத்தலங்களுக்குச் சென்று வழிபாடு செய்த, சோமாசிமாற நாயனார்  பஞ்சபூத தலங்களில் பூமிக்கான திருத்தலமான திருவாரூர் திருக்கோவிலுக்குச் சென்ற சோமாசிமாற நாயனார் தேவாசிரியத் திருமண்டபத்தைத் தொழுது நின்றார். அப்போது சுந்தரமூர்த்தி நாயனார் பரவை நாச்சியாரோடு திருவாரூர் திருக்கோவிலுக்கு வந்திருந்தனர். சோமாசிமாற நாயனார் அவர்களைக் கண்டதும் மகிழ்ச்சியுடன் சுந்தரமூர்த்தி நாயனாரின் திருப்பாதம் பணிந்து வழிபட்டார். இந்த நேரத்தில் சோமயாகத்தின் இறுதியில் சமர்ப்பிக்கப்படும் அவிர்ப்பாகத்தை எம்பெருமானே நேரில் வந்து பெற்றுக்கொள்ளவேண்டும் என்கிற ஆவல் அவருக்கு ஏற்பட்டது. சுந்தரரின் பாதம் பணிந்தால் எம்பெருமானை எளிதில் அணுகமுடியும் என்று எண்ணியவர், சுந்தரரின் நட்பைப் பெறும் முயற்சியில், தினமும் அவருக்கு தூதுவளைக் கீரையைப் பறித்து பரவை நாச்சியாரிடம் அளிப்பார். பரவை நாச்சியாரும் சுந்தரருக்கு கீரையை சமைத்துப் போட, அவரும் தினமும் அவருக்கு யார் அந்த தூதுவளைக் கீரையைத் தருகிறார் என்று கேட்டார்.

 பரவை நாச்சியாரும், அவருக்கு சோமாசிமாற நாயனாரை அறிமுகம் செய்துவைத்தார். பணிந்து நின்ற சோமாசி மாற நாயனாரைக் கண்டு மகிழ்ந்த சுந்தரர், அவர்களுக்கு வேண்டுவது யாது என்று வினவினார். சோமாசிமாற நாயனாரும், தாம் செய்ய இருக்கும் சோமயாகத்தின் அவிர்ப்பாகத்தை எம்பெருமான் தாமே வந்து பெற்றுக்கொள்ள ஆவண செய்ய வேண்டும் எனத் தம் மனத்தின் ஆசையை அவரிடம் வெளியிட்டார். ஈசன் நிகழ்த்த இருக்கும் திருவிளையாடலைத் தம் மனக்கண்ணில் முன்னரே அறிந்துகொண்ட சுந்தரரும், இறையருளால் அனைத்தும் நலமாகும் என்று உறுதியளித்தார். வேள்விக்கான நாளும் வந்தது.

 

வேள்வி நிறைவுபெறும் தருணத்தில் அவிர்ப்பாகத்தை சமர்ப்பிக்க வேண்டுமென அனைவரும் ஈசனின் வருகைக்காகக் காத்திருந்தபோது, பறை ஒலியும் கேட்டது. தெருவில் சென்று பார்த்தபோது, அங்கே ஒரு வேடன் பறையை இசைத்தபடி, தோளில் இறந்த மானின் உடல் கிடக்க நடந்து வந்துகொண்டிருக்கிறார். கைகளில் நான்கு நாய்களைக் கட்டி இழுத்துக்கொண்டு வரும் அவருடன், தலையில் மதுக்குடத்தைச் சுமந்தபடி வந்த அவர் மனைவி,  தன் முதுகில் இரு பிள்ளைகளையும் கட்டிக்கொண்டிருந்தாள்.

 

ஆனால் சோமாசிமாற நாயனாரோடு வேள்வியில் ஈடுபட்டவர்கள் அனைவரும் வேடரைக் கண்டதும், அதை அபசகுனமாகக் கண்டு அங்கிருந்து விலகி ஓடியபோது சோமாசிமாற நாயனாரோ, அனைத்தையும் அறிந்திருந்தவராக அவிர்ப்பாகத்தை எடுத்தார். நேரே அந்த வேடனிடம் எடுத்துச் சென்று அவரிடம் நீட்டினார். சுற்றியிருந்தவர்கள், எம்பெருமானுக்குத் தரவேண்டிய அவிர்ப்பாகத்தை பைத்தியக்காரத்தனமாக ஒரு பாவப்பட்ட மனிதனுக்குத் தருகிறாரே என்று கோபப்பட்டனர். அப்போதும் சோமாசிமாற நாயனாரோ மிகுந்த பக்தியோடு பணிந்து நின்று அவிர்ப்பாகத்தை வேடனின் கைகளில் அளித்தார். அப்போதுதான் அங்கு அந்த அதிசயம் நடந்தது. அந்த வேடன் நாயனார் அளித்த அவிர்ப்பாகத்தைப் பெற்ற அதே கணத்தில் இடப வாகனாக உமையம்மையோடும்விநாயகரோடும், முருகப் பெருமானோடும் பிரகாசமாகக் காட்சி கொடுத்தார். அந்தக் காட்சியைக் கண்ட ஊர் மக்கள் மகிழ்ந்து கொண்டாடினர். 'காட்சி கொடுத்த நாயகர்' என்ற பெயரும் சோமாசிமாற நாயனாருக்கு உண்டாயிற்று.

 

சோமாசிமாற நாயனார் புராணம் சொல்லும் கருத்து

புகழ், பயன் என ஏதும் கருதாது உலக நலன்களுக்காகச் செய்யப்படும் வேள்விகளால் உலகத்தில் துன்பம் நீங்கும், மழை பொழியும், வளம் பெருகும் என்பது ஆன்றோர் வாக்கு.

கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே

செற்றார் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய

முற்றா வெண்திங்கள் முதல்வன் பாதமே

பற்றா நின்றாரைப் பற்றா பாவமே

என்பார் ஞானசம்பந்தப் பெருமான்.

ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும்
கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்பராகில்
அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே!

என்னும் அப்பர் பெருமானின் வாக்கிற்கிணங்க, ஒருவர் எந்தக் குலத்தில் பிறந்தவராயினும் அவர் ஈசருக்கு அன்பர் என்றால் அவர் நம்மை ஆளும் குருநாதர் என்று இயல்பினர். எப்போதும் சிந்தை தெளிய சிவன் ஐந்தெழுத்தை ஓதுபவர். அப்படிப்பட்ட அடியவர்கள் யாராயினும் வேறுபாடு கருதாது அவர்களைப் போற்றி வணங்கினார்.

எத்தன்மையர் ஆயினும் ஈசனுக்கு

  அன்பர் என்றால்

அத் தன்மையர் தாம் நமை

  ஆள்பவர் என்று கொள்வார்

சித்தம் தெளியச் சிவன்

  அஞ்செழுத்து ஓதும் வாய்மை

நித்தம் நியமம் எனப்

  போற்றும் நெறியில் நின்றார்

அடியவர்களுக்குள் சாதி, இனம் பாராது, சிவபெருமானை அவர்கள் உருவில் கண்டு வணங்கல் வேண்டும். இக்கொள்கையை சோமாசிமாற நாயனார் கடைபிடித்து இறைவனையும், இறையடியார்களையும் போற்றினார். நாயன்மார்களில் அனைத்துப் பிரிவைச் சேர்ந்தவர்களும் உள்ளார்கள். தீண்டத்தகாதவராகப் பயிர் பார்த்துக் கொண்டிருந்த நந்தனாரிலிருந்து, வேடர் (கண்ணப்பர்), செம்படவர் (அதிபத்த நாயனார்) , வண்ணார் இனத்தைச் சேர்ந்தவர் (திருக்குறிப்புத் தொண்ட நாயனார், குயவர் (திருநீலகண்டர்) என்றும், சேர, சோழ, பாண்டிய, பல்லவ அரசர்கள் வரையில் அத்தனை சாதிகளையும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் பார்க்கிறோம். இவர்களில் ஞானசம்பந்தர் உள்பட பன்னிரண்டு வைதிக பிராமணர்கள் உள்ளனர். இவர்களில் சோமாசிமாற நாயனாரும் ஒருவர்.

எம்பெருமானுக்குத் தரவேண்டிய அவிர்ப்பாகத்தை பைத்தியக்காரத்தனமாக ஒரு பாவப்பட்ட மனிதனுக்குத் தருகிறாரே என்று கோபப்பட்டபோதும், அத்வைதத்தின் அரும்பொருள் அறிந்த சோமாசி மாற நாயனாருக்கு அந்தக் காட்சியின் பொருள் விளங்கியது. அந்த வேடர் பிடித்துவந்த நான்கு நாய்களும் நான்கு வேதங்கள் என்றும் கொம்பு, தாரைத் தப்பட்டைகளை எல்லாம் இந்திராதி தேவர்கள் என்றும் புரிந்துகொண்டார். அருகில் இருந்த வேடரின் மனைவியை அன்னை பார்வதி என்றும் அவள் முதுகில் இருக்கும் இரு மழலைகளும் 'விநாயகனும் முருகனும்' என்றும் தெளிந்தார்.  

 

 திருவாரூருக்கு அருகில் உள்ள திருத்தலமான திருமாளம் எனும் தலத்தில் ஆண்டுதோறும், சோமயாகப் பெருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்தப் பெருவிழாவில் தியாகராசப் பெருமானுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறும். முன்னதாகக் காலை 9 மணியளவில், சுந்தரமூர்த்தி நாயனாரும், பரவை நாச்சியாரும் யாகசாலைக்கு எழுந்தருளி சோமயாகத்தைத் தொடங்கி வைப்பர். சோமயாகம் செய்வதன் மூலம் மழைபொழியும் என்பது நம்பிக்கை. திருமாகாளம் மகாகாளநாதர் கோயிலில் பிராகாரத்தில் சோமாசிமாற நாயனார் அவர் மனைவி சுசீலை தனி சந்நிதி உள்ளது. இவரது குருபூசை தினத்தன்று அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

 

"திருச்சிற்றம்பலம்

 

 

Saturday, June 13, 2026

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 36

 


63 நாயன்மார்கள் வரலாறு – 31 மூர்க்க நாயனார்

 


தொண்டை நாடு சான்றோர் உடைத்து, எனும் பழமொழிக்கேற்ப சான்றோர் பெருமக்கள் பல்லோர் அவதரித்த தொண்டை நாட்டில், நீர் வளமும் நில வளமும் மிக்க ஊரான திருவேற்காட்டில், வேளாண்மை குலத்தில் தலைமை சார்ந்த பெரியார் ஒருவர் வாழ்ந்தார். திருநீற்றினையே மெய்ப்பொருளாகக் கருதியவர், சிவனடியார்களுக்கு அன்புடன் திருவமுது படைத்து, அவர்களையே சிவமெனக் கருதித் துதித்துப் பின்னர் தாம் உண்ணும் நியதியைக் கொள்கையாகக் கொண்டவர்.

தொண்டைவள நாட்டுவளர் வேற்காட் டூர்வாழ்

    தொல்லுழவர் நற்சூதர் சூது வென்று

கொண்டபொருள் கொண்டன்பர்க்கு அமுத ளிக்குங்

    கொள்கையினார் திருக்குடந்தை குறுகி யுள்ளார்

விண்டிசைவு குழறுமொழி வீணர் மாள

    வெகுண்டிடலான் "மூர்க்கர்" என விளம்பும் நாமம்

எண்டிசையும் மிகவுடையார் அண்டர் போற்றும்                                                 

    ஏழுலகும் உடனாளும் இயல்பி னாரே

அடியார்கள் விரும்பும் அனைத்தையும் அவர்களுக்கு அன்புடன் அளித்து அமுதும் செய்வித்து வந்தார் மூர்க்க நாயனார். அடியவர்கள் திரண்டு வர ஆரம்பித்ததால் அவர் தம் உடைமைகளை விற்றும் திருத்தொண்டு செய்து வந்தார். இருப்பினும் மேலும் அத்தொண்டு செய்வதற்குப் போதிய பொருள் இன்மையால், முன்பு அவர் கற்ற சூதாட்டத்தைப் பயன்படுத்தத் தொடங்கினார். அதன் மூலம் பொருள் ஈட்டி அடியவர்களுக்கு அமுது படைக்க எண்ணினார். ஆனால் அவ்வூரில் சூதாடுவோர் இல்லாமையினால் அவ்வூரை அகன்று ஒவ்வொரு சிவத்தலங்களுக்கும் சென்று, அவ்வூரிலுள்ள சிவபெருமானை உள்ளம் உருகி வழிபட்டுப் பின் சூதாடி அதன் மூலம் வரும் பொருளினால் அடியவர்க்கு அமுது ஊட்டி வந்தார்.

பெற்றம் ஏறிப் பலிக்கு வரும்

  பெருமான் அமரும் தானங்கள்

உற்ற அன்பால் சென்று எய்தி

  உருகும் உள்ளத்தொடும் பணிந்து

கற்ற சூதால் நியதியாம்

  கடனும் முடித்தே கருதாரூர்

செற்ற சிலையார் திருக் குடந்தை

  அடைந்தார் வந்து சில நாளில்

பின்னர் கும்பகோணத்தை அடைந்து அங்கே சூதாடிப் பொருள் தேடி தம் கடமையை நிறைவேற்றியவர், சூதிலே முதல் ஆட்டத்தில் தோற்றவர் பின்னாட்டங்களிலே பல முறையும் வென்றவர் பொருள் பெற்றார். சூதிலே மறுத்தவர்களை மூர்க்கமாக உடைவாளை உருவிக் குத்தியதால், நற்சூதர் மூர்க்கர் என்னும் பெயர்களைப் பெற்றார். சூதினால் பெற்ற பொருளை அடியார்களுக்கு திருவமுது செய்தபின் கடைப்பந்தியில் அமர்ந்து தம் பசியாறினார்.

சூதினில் வென்று எய்தும் பொருள்

  துரிசு அற்ற நல் உணர்வில்

தீது அகல அமுது ஆக்குவார்

  கொள்ளத் தாம் தீண்டார்

காதலுடன் அடியார்கள் அமுது

  செயக் கடைப் பந்தி

ஏதம் இலா வகை தாமும் அமுது

  செய்து அங்கு இருக்கும் நாள்.

எம்பெருமானின் அடியார்களுக்கு அன்றாடம் அமுது படைத்தவர், அப்பெருமக்களின் அருளால் அனைத்துத் துன்பங்களும் நீங்கப் பெற்று இவ்வுலகை விட்டு இறையடி நிழல் சென்று சார்ந்தார்.

மூர்க்க நாயனார் புராணம் சொல்லும் கருத்து

உலகினிலென் செயலெல்லா முன்விதியே நீயே உண்ணின்றுஞ் செய்வித்துஞ் செய்கின்றாய் என்றும் நிலவுவதோர் செயலெனக்கின்றுன் செயலேயென்றும் நினைவார்க்கு வினைகளெலாம் நீங்குந்கானே" என்று சிவஞான சித்தியாரிலும்,

"எல்லா முன்னுடைமையே எல்லாமுன் அடிமையே எல்லாமுன்னுடைய செயலே" - "அறிந்தபடிநின்று சுகநான் அவ்வண்ணமாகாமை இவ்வண்ணமாயினேன் அதுவுநின் செயலதென்றே கல்லாத வறிஞனுக்குள்ளே யுணர்த்தினை" - "சந்ததமுமெனது செயல் நினது செயல் யானெனுந் தன்மை நினையன்றியில்லாத் தன்மையால் வேறலேன்" என தாயுமான சுவாமிகள் பாடலிலும்,

"என்செயலாவதி யாதொன்றுமில்லை இனித்தெய்வமே உன் செயலே என்றுணரப் பெற்றேன்" என பட்டினத்தடிகள் பாடலிலும் வருவன கொண்டு, செய்யும் செயல் யாவும் சிவனருளால் மட்டுமே நடைபெறுவதை அறியத் தருகின்றனர்.

ஐம்பெரும் பாவங்களில் ஒன்றான சூதாட்டத்தை இறையடியாரான ஒரு நாயனார் செய்வது தகுமோ என்ற வினா எழுவது இயல்புதானே. ஆனால் இந்நாயனார் அந்த சூதாட்டத்தை தம் மகிழ்ச்சிக்காகவோ அல்லது தம் குடும்பத்திற்காகவும், சுய நோக்கிற்காகவும் செய்திருந்தால் அது மாபெரும் தவறாகும். ஆனால் நாயனார் தாம் முன்பு கற்ற அந்த சூதாட்டத்தை தம் வாழ்வு வளம் பெற பயன்படுத்தவில்லை. தம் உடைமைகள் அனைத்தும் தீர்ந்து விட்ட பிறகு வேறு வழியின்றி அடியவர்களின் நலன் கருதி அந்த சூதாட்டத்தைத் தேர்ந்தெடுத்தார். அடியார்களுக்கு அமுது படைக்கவும், அவர்களுக்குத் தேவையான பொருட்களை அள்ளி வழங்க வேண்டும் என்ற தம் கொள்கை நிறைவேறவும் அவர் இறுதி வரை பாடுபட்டார். பொதுவாகவே அடியார்கள் தாம் கொண்ட கொள்கைகளை நிறைவேற்ற தம் உயிரையும் கொடுக்கத் தயங்க மாட்டார்கள். அதனால் வரும் பாவத்தை ஏற்கவும் அவர் தயாராக இருந்தார். அந்த வகையில் அவர் சூதாடி வந்த பொருளில் தனக்காகவோ, தன் குடும்பத்தினர்க்காகவோ ஏதும் எடுத்துக் கொள்ளவில்லை.

செய்தற்கரிய செயல்பலவுஞ் செய்து சிலர் எய்தற்கரியதனை எய்தினர்கள் ஐயோ நாம் செய்யாமை செய்து செயலறுக்கலாயிருக்கச் செய்யாமை செய்யாதவாறு" என்று திருக்களிற்றுப்படியார் கூற்றினாலும்,

"நடமாடுங் கோயில் நம்பர்க் கொன்றீயிற் படமாடுங் கோயிற் பகைவற் கதாமே" எனத் திருமூலர் திருவாய் மலர்ந்தருளியதாலும் அறிய முடிகிறது.

வம்பறா வரிவண்டு மணம்நாற மலரும்       

மதுமலர்நற் கொன்றையான் அடியலாற் பேணா

எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்       

ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்

நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்       

நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கர்க்கும் அடியேன்

அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்       

ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.                   

 

நற்ற மிழ்வல்ல ஞானசம் பந்தன்        

நாவினுக் கரையன் நாளைப்போ வானுங்

கற்ற சூதன்நற் சாக்கியன் சிலந்தி        

கண்ணப் பன்கணம் புல்லனென் றிவர்கள்

குற்றஞ் செய்யினுங் குணமெனக் கருதுங்        

கொள்கை கண்டுநின் குரைகழல் அடைந்தேன்

பொற்றி ரள்மணிக் கமலங்கள் மலரும்        

பொய்கை சூழ்திருப் புன்கூர் உளானே. 

சுந்தரர் தேவாரம்

 

திருச்சிற்றம்பலம்

 

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 38

  63 நாயன்மார்கள் வரலாறு – 33 சாக்கிய நாயனார்   பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி! ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிர...