63 நாயன்மார்கள் வரலாறு – 29 – திருமூல
நாயனார்
‘நம்பிரான்
திருமூலன்’ அடியார்க்கும் அடியேன், என்று
ஆரூரர் தம் திருத்தொண்டத் தொகையில் போற்றிப் புகழும் திருமூல நாயனார்,
சைவ சமயத்தில் காலத்தால் முதிர்ந்தவர் மட்டுமின்றி கருத்தால்,
எண்ணத்தால், சிந்தையால் முதிர்ந்தவர் என்று அறியப்படும்
ஆகச்சிறந்த சிவயோகி ஆவார். திருக்கையிலை மலையின் திருக்கோயிலுக்கு
முதற்பெரும் நாயகரான திருநந்திதேவர், இந்திரன், மால், அயன் முதலிய தேவர்களுக்கு நெறி அருள்கின்ற திருவருள்
பெற்றவர். இத்தகைய நந்தி தேவரின் திருவருள் பெற்ற சிவயோகிகளில்
ஒருவர் என்ற பேர் பெற்றவர். திருமந்திரத்தில் திருமூலர் என்று
குறிப்பிடப்படும் இவர் சுந்தரநாதன் அன்று அழைப்பட்டவர்.
"நந்தியருள் பெற்ற
நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக் ரமர்
என்று இவர் என்னோடு எண்மரும் ஆமே"
திருமூலரின்
பழைய நண்பராகிய, பொதிகையில் எழுந்தருளியுள்ளஅகத்திய மகாமுனிவருடன்
சில நாட்கள் தங்கியிருக்க விரும்பியவர் கயிலையினின்றும் புறப்பட்டுத் தென் திசையை நோக்கி
வந்தார்.
திருக்கேதாரம், நேபாளம், காசி, திருசைலம், திருக்காளத்தி, திருவாலங்காடு, காஞ்சீபுரம்,
திருவதிகை, சிதம்பரம்
என்னுந் தலங்களை வணங்கிக் கொண்டு திருவாவடுதுறையை அடைந்து, அங்கே ஆவடுதுறைப்
பெருமானை வணங்கத் திட்டமிட்டார்.
ஒருநாள் அந்தத்தலத்தை அகன்று செல்லும்பொழுது, காவிரியாற்றங்கரையிலுள்ள வனத்தினில் பசுக்கூட்டங்கள் அழுது கொண்டிருப்பதைக் கண்டார். சாத்தனூரில்
மூலன்
எனும் இடையன் அவைகளை மேய்க்கின்றவன்.
அன்று
அவன் அவ்விடத்தில்,
பசும்புல்வெளியில் இறந்து கிடந்தான். அப்பசுக் கூட்டங்கள் அவன்
மீது உள்ள அன்பினால் அவனைச் சுற்றிச் சுற்றி
வந்து கதறி
அழுதன.
பசுக்களின்
துன்பத்தைக் கண்ட
சிவயோகியார், எம்பெருமானின் திருவருளால் அப்பசுக்களின் துயரத்தை நீக்க
வேண்டும் என்று
முடிவெடுத்தார். தம் திருமேனியை
ஒரு பாதுகாப்பான இடத்தில் மறைத்து வைத்துவிட்டு, மூலனின் உடலிலே தன் உயிரைப் புகுத்தினார். பசுக்களின் துயரத்தைப் போக்குவதற்காக திருமூலராய் எழுந்தார். மூலனை
மோந்த பசுக்கள் அளவற்ற மகிழ்ச்சி கொண்டன. திருமூலநாயனார் அது கண்டு திருவுளமகிழ்ந்து, அவைகள் மேயுமிடத்திற்
சென்று மேய்த்தார்.
மகிழ்ந்து,
துள்ளிக் குதித்து, மேய்ந்திருந்த பசுக்கள் அந்தி
நேரத்தில், பசுக்கள் தத்தம் கன்றுகளை நினைந்து, தாமே முன் பைய நடந்து, சாத்தனூரை அடைந்தன.
சிவயோகியார் அப்பசுக்களுக்குப் பின்சென்று, அவைகளெல்லாம்
தத்தமது
வீடுகளுக்குச் செல்லத்
தாம் வெளியிலே நின்றார்.
மூலனுடைய மனைவி தன்
கணவனைத் தேடி வந்தவள், சிவயோகியார் நின்ற இடத்தை அடைந்து, அவருடைய திருமேனியைத் தீண்ட, அவர்
விலகி
நின்றார். திருமூலநாயனார்,
தனக்கும் மூலனின்
மனைவிக்கும்
யாதொரு சம்பந்தமும் இல்லை என்று மறுத்து, ஒரு
பொது மடத்தினுள்ளே
புகுந்து, சிவயோகத்தில் இருந்தார். மனைவி அன்று
இரவு முழுவதும்
உறக்கமின்றி
கவலை கொண்டிருந்தவள் மறுநாள் அதனை ஊர்ப்பெரியவர்களிடம்
சென்று முறையிட்டாள். தன் கணவனுக்கு சித்தம்
பேதலித்துவிட்டதாகவும் கூறினாள். திருமூலனைக் கூர்ந்து கவனித்த அப்பெரியவர்கள்
அவர் சிறந்த ஞானியாகத் தெரிவதாகவும், சிவயோகியாராகத்
தெரிவதாகவும் கூறி, அவரை இனி அவள் என்றும் சேர முடியாது என்று
புரிய வைத்து திரும்ப அழைத்துச் சென்றனர்.
சிவயோகத்தில் இருந்த திருமூல நாயனார் எழுந்து, பசுக்கள் வந்த வழியே சென்று தாம் மறைத்து
வைத்திருந்த தம் உடலைக் காணாது, மெய்ஞ்ஞானத்தையுடைய சிந்தையினால் ஆராய்ந்து, சிவபெருமான் அருள்
செய்த ஆகமத்தினுடைய பொருள் அனைத்தும் தமிழ் ஆக்க எம்பெருமான் திருவருள் இவ்வுடலைத்
தந்தது என்று உணர்ந்தார்.
"தண்ணிலவார் சடையார்தாம்
தந்த ஆகமப் பொருளை
மண்ணின்மிசைத் திருமூலர் வாக்கினால் தமிழ்வகுப்பக்
கண்ணிய அத்திருவருளால் அவ்வுடலைக் கரப்பிக்க
எண்ணிறைந்த உணர்வுடையார் ஈசர் அருள் எனவுணர்ந்தார்"
திருமூலரும்
எம்பெருமானின் திருவருளைத்
துதித்து, திருவாவடுதுறையை அடைந்து, அங்குள்ள சிவாலயத்தின் சிவபெருமானை வணங்கி, அதற்கு மேற்குப்
புறத்தில் உள்ள அரசின் கீழ்
அமர்ந்து சிவயோகத்தில் நிலைத்திருந்தார். மூவாயிரம்
ஆண்டுகள் அங்ஙனம் இருந்து, ஒவ்வொரு ஆண்டிற்கு ஒவ்வொரு திருப்பாடலாக மூவாயிரம் திருப்பாடலால் சைவாகமங்களில் உணர்த்தப்பட்ட ஞானம் யோகம் கிரியை சரியை
என்னும் நான்கு பாதங்களையும் பேசுகின்ற திருமந்திரம்
எனும் தமிழ்நூலைப்
பாடியருளி, பின் திருக்கையிலையை அடைந்தார்.
முன்னிய
அப் பொருள் மாலைத்
தமிழ் மூவாயிரம் சாத்தி
மன்னிய
மூவாயிரத்து ஆண்டு
இப்புவிமேல் மகிழ்ந்து இருந்து
சென்னி
மதி அணிந்தார் தம்
திருவருளால் திருக் கயிலை
தன்னில்
அணைந்து ஒரு காலும்
பிரியாமைத் தாள் அடைந்தார்.
திருமூலதேவ நாயனார் புராணம்
சொல்லும் கருத்து
"என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே"
திருமூலர் அருளிய
மூவாயிரம் பாடல்களும் திருமந்திரம் என்ற நூலாகப் பன்னிரெண்டு திருமுறைகளில் பத்தாவது
திருமுறையாக விளங்குவது. திருமூலர், இறைவன் தம்மைப் படைத்தது இறைவனுடைய தன்மைகளைத் தமிழில் அழகுற எடுத்தியம்புவதற்காகவே
என்றார். திருமூலர் திருமந்திரம் ஆகமப் பொருளையெல்லாம் திரட்டி
ஒன்பது தந்திரங்களாக அருளிச் செய்தார்.
“ஞானமுதல் நான்கும் மலர் நற்றிரு
மந்திரமாலை"
என்ற திருத்தொண்டர்புராண வசனமாகிய புறச்சான்றினாலும் அது வலுவுறும்.
"பக்தன் சரியை கிரியை பயில்வுற்றுச்
சுத்த அருளால் துரிசற்ற யோகத்தில்
உய்த்தநெறியுற் றுணர்கின்ற ஞானத்தாற்
சித்தங் குருவருளாற் சிவமாகுமே"
சிவப்பேறடைதற்குரிய நெறிகளான சரியை, கிரியை, யோகம், ஞானம்
என்ற நான்கும் சைவநாற்பாதங்களாம். நான்காவதாகிய ஞானம்
சிவப்பேற்றை நேரே அருள்வதாக, ஏனைய மூன்றும் படிமுறைக்கிரமத்தில் அதற்குத்
தகுதியளிப்பன. ஞானம்
என்பது சிவத்தில் இலயித்த உயிர் சிவத்தையுணர்தலாகிய மெய்யுணர்வு
விளக்கமுற்றிருப்பதாகவும் அமையும்.
திருவாவடுதுறையில்
அரசின் கீழ் திருமூலர் யோகத்தில் இருந்ததை ,
சேர்ந்திருந்தேன் சிவ மங்கை தன் பங்கனைச்
சேர்ந்திருந்தேன் சிவன் ஆவடு தண்டுறை
சேர்ந்திருந்தேன் சிவ போதியின் நீழலில்
சேர்ந்திருந்தேன் சிவன் நாமங்கள் ஓதியே
என்று குறிப்பிடுகின்றார்.
சைவ சித்தாந்த
சாத்திரங்களுக்கு முன்னோடியாக விளங்கும் திருமந்திரம்,
‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்று அனைவராலும்
பயன்படுத்தப்படுகின்ற சொற்றொடரை அருளியவர் திருமூலர். சாத்திரங்களின்
சாரத்தை மிக எளிமையாகவும், முழுமையாகவும் உரைத்தவர் திருமூலர்.
ஆகமங்கள் 28 தமிழாகமம் சொல்ல வந்த திருமூலர் வரலாறு
28 பாடல்களில் அமைந்துள்ளதும் போற்றத்தக்கது.
திருச்சிற்றம்பலம்.

No comments:
Post a Comment