Saturday, June 13, 2026

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 35

 

63 நாயன்மார்கள் வரலாறு – 30 தண்டியடிகள் நாயனார்







சோழநாட்டுத் திருத்தலங்களில் முக்கியமான ஒன்றான திருவாரூர் எனும்

திருத்தலம் நால்வர் பெருமக்களால் பாடப்பெற்ற அருட்தலமாம்.

நம்பியாரூரர் வலது கண் பெற்ற திருத்தலம் என்பதோடு ஆரூரருக்கு

இறைவன் தோழமை கொடுத்த மிகத் தொன்மையான அருட்தலமும்

இதுதான். "நாட்டமிகு தண்டிக்கும் அடியேன்" என்று தண்டியடிகள்

நாயனாரை சுந்தரமூர்த்தி நாயனார் தம் திருத்தொண்டத் தொகையில்

புகழப்படும், சிவபெருமானின் மீது அதீத பக்தி கொண்டிருந்த தண்டியடிகள்

நாயனார், செங்குந்தர் மரபில் அவதரித்தவர். பிறந்தபோதே கண்காணார்,

புறக்கண்ணால் உலகத்தைக் காண இயலாத இவர் தம்முடைய அகக்கண்

கொண்டு இறைவனை வழிபட்டு வந்தார். கண் காண்பது சிவன்

மெய்த்தொண்டே என்று சிவன் கழல் போற்றித் திருத்தொண்டின் நெறி

நின்றவர் இவர்.

திருவாரூர் வருந்தண்டி யடிகள் காட்சி

சேராதார் குளந்தொட்டற்கு அமணர் சீறிக்

"குருடா! நீ முன்செவிடுங் கூடிற்று" என்று

குறித்தறியைப் பறித்தெறியக் கொதித்துத் தங்கண்

அருளாலே விழித்தெவரும் அந்தராக

அமணர் கலக் கம்பலகண் டவர்கள் பாழிப்

பருவான கற்பறித்தா விக்கரையுங் கட்டிப்

பரனருளால் அமருலகம் பற்றி னாரே.


தண்டியடிகள் நாயனார், அன்றாடம் தண்டியடிகள் பெருமான்

எழுந்தருளியுள்ள திருக்கோயிலுக்குச் சென்று தேவாசிரிய மண்டபத்தை

வணங்கி, ஆலயத்தை வலம் வந்து, ‘நமசிவாய’ எனும் ஐந்தெழுத்து

மந்திரத்தை உச்சரித்து, சிவத்தொண்டு செய்து வாழ்ந்து வந்தார். திருவாரூர்க்

கோயிலின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள கமலாலயம் எனும் திருக்குளம்,

பெருமானுக்குத் தீர்த்தக் குளமாகவும், அடியவர்கள் குளிப்பதற்கும்

உரியதாகும். அங்கு வாழ்ந்த சமணர்கள், ஒரு நாள் அங்கு பாழிகளும்,

பள்ளிகளும் அமைத்ததால் குளத்தின் இடமும் குறைந்தது. இதனை அறிந்த

தண்டியடிகள் அக்குளத்தினை தூர்வாரி அகலப்படுத்தவும் எண்ணினார்.

பிறவியிலேயே பார்வையற்றவராக இருந்தும் குளத்தினை சீரமைக்கும்

திருத்தொண்டினைச் செய்தவர். அதற்கு வழிகாட்டும் வகையில் குளத்தை

அகலமாக்கும் குழிவாயில் ஒரு தறியையும், குளக்கரையில் ஒரு தறியையும்

நட்டார். இரண்டையும் ஒரு கயிற்றால் இணைத்தார். குளத்தில் இறங்கி

மண்ணைத் தோண்டி ஒரு கூடையில் எடுத்தவர் அதைக் கரைமேட்டில்

கொட்டினார். தண்டியடிகள் நாயனாரின் இந்தத் தொண்டால், வெகு

விரைவிலேயே குளம் சுத்தமாகி, ஆழம் ஏற்பட்டு, தண்ணீர் பெருகத்

தொடங்கியது. தண்டியடிகள் நாயனாரின் செயலைக் கண்ட சமணர்கள்

பொறாமை கொண்டனர். இத்தொண்டினைக் கண்ட சமணர்கள், மண்ணைக்

கிளறினால் அதில் உள்ள சிற்றுயிர்கள் அழிந்து போகும் என்று கூறி

அதனைத் தடுத்தனர்.

சிவபெருமானுக்குத் தான் செய்யும் இப்பணியால், சிறு உயிரினங்களுக்கு

மட்டுமல்லாமல், அவர்களுக்கும் எவ்விதத் தீங்கும் நேராது என்றார். ஆனால்

அவர்கள் தாங்கள் கூறிய அறிவுரை காதில் விழவில்லையா, கண்தான்

இல்லை காதுமா செவிடு என்று கேட்டவர்களிடம்,

“சிவபெருமான் திருவடிகளன்றி வேறு ஒன்றையும் நான் காணவில்லை.

காண விரும்பவும் இல்லை. சிவபெருமானின் திருவருளால் என் கண்

காணப்பெற்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்றார்.


அதற்கு சமணர்கள் தண்டியடிகளிடம், அவர் தம் கடவுள் அருளால் கண்

பெற்றால் தாங்கள் அந்த ஊரை விட்டேச் சென்று விடுவதாகக் கூறியவர்கள்,

அவர்தம் கரத்திலிருந்த மண் வெட்டியையும், கூடையையும் பிடுங்கி

எறிந்தனர்.

மிகவும் வருந்திய தண்டியடிகள் நாயனார், ஆரூர் பெருமானின் திருமுன்

நின்று, தனது துன்பத்தை நீக்கி அருள்புரிதல் வேண்டும், என்று கண்ணீர்

மல்க வேண்டியவர், அப்படியே தூங்கியும் போனார். அவரது கனவில்

தோன்றிய எம்பெருமான், “மனக்கவலையை விடு. உன் கண்கள் நாளை ஒளி

பெறும். உன் தொண்டினைத் தடுத்துப் பழித்துப் பேசியவர்கள் கண்களை

இழப்பார்கள்” என்று அருளினார். அன்று இரவே சோழ அரசனின் கனவிலும்

தோன்றி, “தண்டியடிகள் நானார் செய்யும் கமலாலய குளத் திருப்பணிக்கு

ஊறு விளைவிக்கும் சமணர்களின் வழக்கினை முடித்து வை.” என்று

கட்டளையிட்டார். சோழ அரசன் கண்விழித்து எழுந்து திருவாரூரை

அடைந்தவர், தண்டியடிகளைச் சந்தித்து நடந்தவைகளைக் கேட்டறிந்தார்.

பின்னர் சமணர்களை அழைத்து விசாரித்தார். சமணர்கள் இறையருளால்

தண்டியடிகளுக்கு கண்ணொளி கிடைத்து விட்டால் திருவாரூரைவிட்டு

வெளியே செல்வதாக ஒப்புக்கொண்டதையும் தெரிவித்தனர். மறுநாள்

இருத்தரப்பினரையும் அழைத்துக் கொண்டு குளத்திற்கு வந்தார் சோழ

அரசன். அடிகளாரைப் பார்த்து, அவரை கண் பெறும் நிகழ்வினைச் செய்து

காட்டும்படி கூறினார். தண்டியடிகள் நாயனார் இறைவனை மனத்தால்

வழிபட்டு திருவைந்தெழுத்தை ஓதியபடி குளத்தில் மூழ்கி எழுந்தபோது,

கண்கள் செம்மையாகக் காண ஒளிபெற்று எழுந்தார். வானவர்கள் பூமாரி

பொழிந்தனர். தண்டியடிகள் நாயனார் பார்வை பெற்ற அதே நேரம்

அவர்களைச் சுற்றியிருந்த சமணர்கள் கண்பார்வை பறி போனது.

தண்டியடிகள் நாயனாரின் இறை பக்தியை எண்ணி அனைவரும் பரவசம்

அடைந்தனர். சமணர்கள் அனைவரும் தங்கள் நிலையை எண்ணி

வருந்தியபடி ஊரை விட்டே புறப்பட்டு போய்விட்டனர்.


ஏய்ந்த வடிமை சிவனுக்கியா னென்னி லின்றென் கண்பெற்று

வேந்த னெதிரே திருவாரூர் விரவுஞ் சமணர் கண்ணிழப்பார்;

ஆய்ந்த பொருளுஞ் சிவபதமே யாவ" தென்றே யஞ்செழுத்தை

வாய்ந்த தொண்ட ரெடுத்தோதி மணிநீர் வாவி மூழ்கினார்.

தண்டியடிகள் நாயனார் தான் எண்ணியபடி, திருக்குளத்தை அரசரின்

உதவியுடன் பெரிதாக கட்டி முடித்தார். தண்டியடிகள் நாயனாரின்

அறப்பணியை அரசரும், மக்களும் கொண்டாடி பெருமிதம் கொண்டனர்.

அதன்பிறகு பல காலம் இறைவனுக்கு தொண்டு செய்து வந்த தண்டியடிகள்

நாயனார் சிவபெருமான் திருவடி நிழல் சார்ந்தார்.

தண்டியடிகள் நாயனார் புராணம் சொல்லும் கருத்து

"முகத்திற் கண் கொண்டு காண்கின்ற மூடர்காள் அகத்திற் கண்கொண்டு

காண்பதே ஆனந்தம்" திருமந்திரம்.

சிவன் கழல் அல்லது வேறு காணாத அக நோக்கு உடைமையன்றிப் புறத்தில்

வேறு எதையும் காணாதவர் என்ற குறிப்பினால் பிறந்தபோதே கண்காணார்

கண் காண்பது சிவன் மெய்த்தொண்டே என்று சிவன் கழல் போற்றித்

திருத்தொண்டின் நெறி நின்றார். அகக்கண் காட்சியாகிய ஞானக்கண்

காட்சிக்குச் சிவம் அல்லாது வேறு ஒன்றும் தோன்றாது. அகக் காட்சியில்

சிவதரிசனம் பெற்றோர் புறக்காட்சியாகிய மற்றெந்த உணர்வுகளும் முற்றாக

அற்றிருப்பர் என்பதற்கிணங்க இந்நாயனார் பிறப்பிலேயே புறக்கண்

அற்றவராய்ப் பிறந்துள்ளார் என்பதை சேக்கிழார் பெருமான்,

"தண்டியடிகள் திருவாரூர் பிறக்கும் பெருமைத் தவமுடையார்

அண்டவாணர் மறைபாட ஆடுஞ்செய்ய கழல்மனத்துக்

கொண்ட கருத்தி னகநோக்குங் குறிப்பே யன்றிப் புறநோக்குங்

கண்டவுணர்வு துறந்தார்போற் பிறந்த பொழுதே கண்காணார்"

என்பார்.


எனவே, “நாட்டம்மிகு தண்டிக்கும் (மூர்க்கர்க்கும்) அடியேன்" என்னும்

இத்திருத்தொண்டத்தொகை வாக்கு நிற்றல் அறியப்படும்.

"காணுங் கண்ணாற் காண்பது மெய்த் தொண்டேயான கருத்துடையார்" என

அடுத்துவரும் சேக்கிழார் திருவாக்காலும் அறியப்பெறும்.

"கந்தை மிகையாங் கருத்து" எனத் திருநாவுக்கரசு நாயனார் புராணத்திலும்

வருவனவற்றாலும் விளங்கப் பெறும்.

எவ்வகைப் பற்றுதலுமின்றி முழுமையாகச் சிவன் பேரிலும் சிவன் சார்பிலும்

பணி செய்து கிடப்பவர்க்கு சிவ புண்ணியம் எனப்பட்டு, அதன் தரமும்

தகுதியும் உயர்வாகும்.

"நானவனென் றெண்ணினர்க்கு நாடுமுளமுண் டாதல்

தானென ஒன்றின்றியே தானதுவாய் –

நானென வொன்று இல்லென்று தானே எனுமவரைத்

தன்னடி வைத்து இல்லென்று தானும் இறை"

எனச் சிவஞான போதத்திலும்,

"யாதே செய்து மியாமலோ நீ என்னில் ஆதே என்னும் அளவில்

பெருமையான்" எனத் தேவாரத்திலும்,

"சிவனுமிவன் செய்தியெல்லா மென்செய்தி என்றுஞ் செய்ததிவனுக்

கெனக்குச் செய்ததென்றும் பவமகல உடனாகி ஏன்று கொள்வன்" எனச்

சிவஞான சித்தியாரிலும் வருவனவற்றால் அறியப்படும்.

தண்டியடிகள் நாயனார் புறக்கண் இன்மையாகிய தமது மீப்பெரும்

குறைபாட்டின் இடையிலும், அகக்கண் கூர்மைமிகப் பெற்று, திருவாரூர்த்

திருக்கோயிலின் திருக்குளத்துக்கு அநீதியான முறையில் ஏற்பட்ட

அவலத்தை உற்றுணர்ந்து தாமே தனி ஒருவராய் நின்று திருக்குளத்

திருப்பணியாற்றிய சீர்மை சிவத்திருப்பணியைத் தம் இலட்சியமாகக்


கொண்டு சைவத்திருப்பணி வரலாற்றின் பொன் எழுத்துக்களாற் பொறித்துப்

போற்றப்படும் தகைமையுடைவரானார்.

திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 36

  63 நாயன்மார்கள் வரலாறு – 31 மூர்க்க நாயனார்   தொண்டை நாடு சான்றோர் உடைத்து , எனும் பழமொழிக்கேற்ப சான்றோர் பெருமக்கள் பல்லோர் அவதரித...