Saturday, December 30, 2017

புத்தாண்டின் புதுவரவு!
புத்தாண்டைப் புத்துணர்வுடன் எதிர்கொள்ள வரமாய் அமையும் என் அடுத்த நூல். வழக்கம்போல் பழனியப்பா பதிப்பகத்தாரின் பேராதரவுடன், ஐயா முத்துக்குமாரசாமி அவர்களின் ஆசிகளுடன், தமிழறிஞர் வி.ஐ.டி. கல்லூரியின் வேந்தர் திரு.விசுவநாதன் அவர்களின் அற்புதமான அணிந்துரையுடன் வெளிவந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கிறேன். நண்பர்களின் வாழ்த்துகளையும் வேண்டி நிற்கிறது என் கிறுக்கல்கள்! 


எண்ணக்குவியல்களின் சிதறல்கள் 
வண்ணக்கோலங்களாய் வான்முட்ட
திண்ணக்குயில்களின் இசைப்பாட்டும்
சிகரம்தொட்ட சிறுபொழுதுகள்!

Thursday, December 21, 2017

தமிழ் இசைக் கல்வெட்டு


கொங்கு நாட்டின் மிகச்சிறப்பான ஒரு விசயம் என்றால் அது உலகின் முதல் தமிழ் இசைக்கல்வெட்டு!
isai1
isai
ஈரோடு மாவட்டம், ஈரோடு – காங்கேயம் பாதையில் 12 கல் தொலைவில், அரச்சலூரில், அவல்பூந்துருத்திக்கு அருகில் அமைந்துள்ள பாண்டியர் குழி என்ற இடத்தில் உள்ள கற்குகையில் அமைந்துள்ளது அற்புதமான இந்த தமிழ் இசைக் கல்வெட்டு . இதன் அருகில் ஒரு, ஆண், பெண் உருவங்கள் பொறிக்கப்பட்ட கல்லும் உள்ளது. இதனைப்பற்றிய ஆய்வுகளும் மேற்கொள்ளப்படவேண்டும் என்கிறார் கல்வெட்டறிஞர் புலவர் இராசு அவர்கள்.
IMG_20171221_132623484
இந்தக் கல்வெட்டை முதலில் 1961 ஆம் ஆண்டில் கண்டு பிடித்தவர் கல்வெட்டறிஞர் புலவர் இராசு அவர்கள். கி.மு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கண்டறியப்பட்ட இந்தத்.தமிழ் கல்வெட்டு தொன்மைக்கால தமிழி எனும் எழுத்து பிற்காலத்தில் வட்டெழுத்தாக உருமாற்றம் பெற்றுள்ளதையும், , இசைத்தாள வரிசையைப் பதியும் முதல் ஆவணமாகவும் திகழ்கிறது. சங்ககாலத்திலேயே தமிழர்கள் தமிழிசைக் குறியீடுகளில் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பதும் உறுதியாகிறது. இது சிலப்பதிகாரம் சொல்லும் சதுரப்பாலையைச் சார்ந்த இசைக்குறிப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது.
IMG_20171221_125239428
பல்லடம் – காளிவேலம்பட்டியைச் சேர்ந்த தூரன் சு. வேலுச்சாமி என்பவர் இதனை ஆவணப்படமாக எடுக்க முயற்சி எடுத்துக்கொண்டுள்ளதும், இவர் ஏற்கனவே பெரியார் மற்றும் ராமானுஜர் ஆகிய திரைப்படங்களுக்கு களப்பணிகள் செய்துள்ளவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. என் ‘கடைச்சங்கத்தில் கொங்கு கலாச்சாரம்’ என்ற நூல் பற்றிய சுவையான கலந்துரையாடலும் சிறப்பாக அமைந்தது.

Monday, December 18, 2017

தட்டைப்பயறு பொங்கல்
வெயிட் குறைக்க அருமையான சத்துணவு


அரிசி / குதிரைவாலி / சாமை / கம்பு / சோளம்  இதில் ஏதேனும் ஒன்றை ஒரு கப் எடுத்தால், கால் கப் தட்டைப்பயறு எடுத்துக்கொள்ளலாம். முதலில் அரிசி அல்லது மற்ற சிறுதானியங்களில் ஏதும் ஒன்றோ அல்லது கலந்தோ எடுத்து தண்ணீரில் களைந்து சுத்தம் செய்து 30 நிமிடங்கள் ஊற வைக்கலாம். தட்டைப் பயிறை நன்கு சிவக்க வறுத்து அதை குக்கரில் 4 /5 சத்தம் வரவிட்டு நன்கு வேக வைத்துக்கொள்ளவும். 

வெங்காயம், 2 பச்சை மிளகாய், 2 தக்காள், சுரைக்காய் விரும்பு அளவு எடுத்து அனைத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். 
மிளகு 1 தே.க., சீரகம் 1 தே.க. , பூண்டு 7/8 பல். நான் நாட்டு பூண்டு பயன்படுத்துவதால் 8/10 போடுவேன். சைனா பூண்டு என்றால் அளவை குறைத்துக்கொள்ளலாம். வரமிளகாய் 6, கருவேப்பிலை 1 கொத்து அனைத்தையும் மிக்சியில் நன்கு பொடித்துக்கொள்ளவும்.

பின் ஒரு வானலியில் நல்லெண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் ஊற்றி கடுகு, உளுந்து தாளித்து, பொடித்த பொடியும் போட்டு, வெங்காயம், தக்காளி, சுரைக்காய் அனைத்தும் போட்டு நன்கு வதக்கி வெந்த தட்டைப் பயிறில் கொட்டி, அதில் ஊறிய தானியத்தையோ, அரிசியையோ போட்டு, தேவையான அளவு உப்பு, மூன்று கப் தண்ணீர், (தட்டைப் பயிர் வெந்த தண்ணீருடன் சேர்த்து) அனைத்தையும் குக்கரில் வைத்து நன்கு குழைய வேக வைத்தால் சுவையான  தட்டைப் பயறு பொங்கல் தயார்!


Thursday, December 7, 2017

பல தானிய சத்துணவு இட்லி
குதிரைவாலி - 1 கப்
தினை - 1 கப்
சாமை - 1 கப்
பாசிப்பருப்பு - 1/2 கப்
துவரம்பருப்பு - 1/4 கப்
கடலை பருப்பு - 1/4 கப்
கொள்ளு - 1/4 கப்
கு.உளுந்து - 1/2 கப்
இட்லி அரிசி - 1/4 கப்
பச்சரிசி - 1/4 கப்
வெந்தயம் - 1 டே. ஸ்பூன்செய்முறை:

மேற்கண்ட அனைத்து தானியங்களையும் 2 அல்லது 3 மணி நேரம் ஊற வைத்து அத்துடன், இஞ்சி, பூண்டு, சோம்பு, வர மிளகாய் சேர்த்து நைசாக அரைத்துக்கொள்ளவும். மசால் வாடை பிடிக்காதவர்கள் பெருங்காயம், சீரகம், இஞ்சி சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். மாவு 5 அல்லது 6 மணி நேரம் புளிக்க வைத்து, அதில் கடுகு, வெங்காயம், கருவேப்பிலை, முருங்கைக் கொழுந்து இலைகள், தாளித்து இட்லி வார்க்கலாம். சுவையான மெது மெது குஷ்பூ இட்லி தயார்!

Monday, December 4, 2017

அந்தாதி - தமிழின் இனிமை!
முதல் வரியின் இறுதிச் சொல் அடுத்த வரியின் முதற் சொல்லாக வருவதுதான் அந்தாதி எனப்படும். மனப்பாடம் செய்வதற்கு எளிமையாக இருக்க வேண்டும் என்று கருதியும் அந்தாதி இலக்கியம் தோன்றியிருக்கலாம். தமிழில் தோன்றிய முதல் அந்தாதி காரைக்கால் அம்மையார் பாடிய அற்புதத் திருவந்தாதி ஆகும்.
குறிப்பிடத்தக்க அந்தாதிகள் இதோ:

(1) முதல் திருவந்தாதி - பொய்கை ஆழ்வார்
(2) இரண்டாம் திருவந்தாதி - பூதத்தாழ்வார்
(3) மூன்றாம் திருவந்தாதி - பேயாழ்வார்
(4) சடகோபர் அந்தாதி - கம்பர்
(5) திருவரங்கத்தந்தாதி - பிள்ளைப் பெருமாளையங்கார்
(6) கந்தர்
அந்தாதி - அருணகிரிநாதர்
(7) திருவருணை அந்தாதி - எல்லப்ப நாவலர்
(8) அபிராமி அந்தாதி - அபிராமி பட்டர்
(9) திருக்குறள் அந்தாதி - இராசைக் கவிஞர்

11-ஆம் திருமுறையில் வரும் அந்தாதிகள்
(1) அற்புதத் திருவந்தாதி - காரைக்காலம்மையார்
(2) சிவபெருமான் திருவந்தாதி - கபிலதேவ நாயனார்,
(3) சிவபெருமான் திருவந்தாதி - பரணதேவ நாயனார்
(4) கயிலைபாதி காளத்தி 
பாதி அந்தாதி - நக்கீர தேவ நாயனார்
(5) திருவேகம்பமுடையார்
திருஅந்தாதி - பட்டினத்தடிகள்
(6) திருத்தொண்டர் திருஅந்தாதி - நம்பியாண்டார் நம்பிகள்
(7) ஆளுடைய பிள்ளையார்
திருவந்தாதி - நம்பியாண்டார் நம்பிகள்
(8) பொன்வண்ணத்தந்தாதி - சேரமான் பெருமாள் நாயனார்
19ஆம் நூற்றாண்டில் மிகுதியான அந்தாதி நூல்கள் தோன்றியுள்ளன. வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளும் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களும் அதிக எண்ணிக்கையில் அந்தாதி நூல்கள் இயற்றியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tuesday, November 28, 2017

உடுத்தும் உடையில் மட்டுமா உள்ளது நாகரீகம்?
சுவாமி விவேகானந்தர் அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகர வீதியில்  நடந்து சென்று கொண்டிருந்தபோது மிக எளிமையான உடையில் இருந்தாராம். கையிலே ஒரு தடியும், மேனியில் ஒரு சால்வையை மட்டும் போர்த்தியபடி  சென்றாராம். சுவாமியின் எதிரில் வந்த ஒரு ஆங்கிலேயப் பெண்மணி அவருடைய தோற்றத்தைக் கண்டு எள்ளி நகையாடியிள்ளார். சிறிதும் கோபம் கொள்ளாத சுவாமி விவேகானந்தர் புன்முறுவல் தவழும் முகத்துடன், “அம்மா எங்கள் இந்திய நாட்டில் ஒருவர் அணியும் உடைகளை வைத்து அவரை மதிப்பிடும் வழக்கம் இல்லை. நாகரீகம் என்பது மனிதனுடைய நன்னடத்தையில் தான் அடங்கியிருக்கிறது” என்று சொல்லி விட்டு சங்கடம் ஏதுமின்றி அவ்விடம்விட்டு அகன்றாராம். இதில் நாம் உணர வேண்டியது 2 செய்திகள். ஒன்று, சுவாமிகள் தமது சொந்த மண்ணின் மீது கொண்ட மதிப்பு! அடுத்தது தம் நன்னடத்தையின் மீது கொண்ட அதீத நம்பிக்கை!

Monday, November 27, 2017

Quotation


அன்றைய பொழுதை உன் அறுவடையைக் கணக்கில்வைத்து மதிப்பிடாதே
நீ விதைக்கும் விதைகளைக்கொண்டே மதிப்பிடு!!

ராபர்ட் லூயிசு இசுடீவென்சன்ஓரக்கண்ணால் பார்க்கும் கோடியைவிட நேராகக் காணும் வாரத்திற்கொரு பவுண்டு என்பதே மேல்.

பெர்னார்ட் ஷா

LIFE


உயிருள்ள மீனின் உணவு புழு.
உயிரற்ற மீன் புழுவின் உணவு!
#life

கலைஞனுக்குள் வாழும் மனிதம்
மனிதனுக்குள் மனிதம் விதைக்கிறது!
#life

ஒரு புன்னகை நட்பை இணைக்க அனுமதிக்கலாம்!
ஒரு நட்பு புன்னகையைப் பறிக்க அனுமதிக்காதே!!
#life

பறக்க மறந்த சிறகுகளை உயர்த்திப்பிடிக்கும்
அக்கைகள் நட்பெனும் தேவதையினுடையது!
#life

உள்வலி இரணங்கள் என ஏதும் உணராமல் கதாநாயக மேல்பூச்சில் மயங்கி முன்னுதாரணமாக்குவதால் வாழ்வே பாழ்!
#life

வாய்ப்புகள் வரமாகலாம் - கதவு தட்டும் தேவதைகள் சுமந்து வருவது பியாண்டோ கனியாகவும் இருக்கலாம்!
நம்பிக்கையோடு விழித்தெழுங்கள்!!
#life

பி.கு. பியாண்டோ கனி - Beondo - 3000 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் கனியக்கூடிய ஒரு பீச் வகைக்கனி. ‘சாம்குக் யுசா’ எனும் சீன தொன்மக் கதையில் பேசப்படும் அதிசயக்கனி!


வேதனைகளை வாங்குவதற்கு கொடுக்கும் விலை:
அல்லவைகளையே அனுதினமும் சுமப்பவரிடம் நல்லவைகளைத் தேடித்திரிவதும்
நல்லவைகளை மட்டுமே கருதியிருப்போரிடம் அல்லவைகளைத் தேடிக்காண முயல்வதும்தான்!
#life


சுயநலக்காரர்களுக்காக வடிவமைக்கப்பட்டதன்று
அன்பான உறவுகளின் இனியபொழுதுகள்!
#life

தன் நலம் பேணவும் அடுத்தவரை பாதிக்காத தன்மகிழ்ச்சிக்கு முன்னுரிமை அளிப்பதும் சுயநலம் அன்று .
#life


Sunday, November 26, 2017

ஆன்மா அழிவதில்லை!

இறந்தவர்களின் ஆன்மா அழிவதில்லை. பிரபஞ்சத்திற்கு மீண்டும் வருகின்றது, என்ற ஆச்சரியமான தகவலை அமெரிக்க இயற்பியலாளர்கள் இருவர் கண்டுபிடித்து கூறியிருக்கிறார்கள். இதைத்தானே நம் இந்து மதமும், சித்தர்களும் தொன்றுதொட்டு சொல்லி வருகிறார்கள். மிகவும் தாமதமான கண்டுபிடிப்பு!
மனித மூளை ஒரு "உயிரியல் கணினி" போலவே செயல்படுவது போல, மனித உணர்வு மூளையில் ஒரு குவியக்கொள்கை கணினி மூலம் இயங்கும் திட்டமாக இருக்கலாம் என்கிறார்கள். நுண்ணிய குழாய்களில் மூளை செல்களால் ஆன்மா பராமரிக்கப்படுகிறதாம்."மருத்துவ ரீதியாக இறந்தவர்கள்" என கருதப்படும்போது மூளையில் உள்ள நுண்ணுயிரிகள் தங்கள் குவாண்டம் நிலைமையை இழந்துவிடுகின்றன, ஆனாலும் பதிவான தகவல்கள் அழிவதில்லை. அவை அப்படியே பிரபஞ்சத்தில் பரவலாக விநியோகிக்கப்பட்டு சிதைகிறது.
உயிர் போனவுடன் இதயம் அழுகிப்போகும், இரத்த ஓட்டம் நிறுத்தப்படும் என்று சொல்லலாம்; நோயாளி மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டால், புத்துயிர் பெற்றால்,நுண்ணுயிரிகளில் இந்த குவாண்டம் தகவல் மீண்டும் செல்லும்போது ' மரணத்தை அருகில் பார்த்த அனுபவம் உண்டு' என்று கூறுவார். நோயாளி இறந்துவிட்டால், இந்த குவாண்டம் தகவல் உடலின் வெளியே, காலவரையின்றி, ஒரு ஆத்மாவாக உலவ முடியும்.
இந்த "ஆன்மாக்கள்" காலச்சக்கரத்தின் ஆரம்பம் முதலே இருந்திருக்கலாம் என்பதைக் குறிக்கிறது. சமீபத்திய கண்டுபிடிப்புகள் மனிதர்களால் பார்க்க முடியாத அல்லது கையாள முடியாத இருண்ட எரிசக்தியும் இருண்ட பொருட்கள் இருக்கின்றன. இந்த கோட்பாடு மேலும் மர்மமான, கவர்ச்சிகரமான பல விசயங்களுக்கு விடையளிக்கும் என்று நம்புவோம்.. எது எப்படியோ மக்கள் பாவ புண்ணியத்திற்கு கொஞ்சம் அஞ்ச வேண்டிய நிலை உள்ளது என்பது சத்தியம்!

Sunday, November 12, 2017

சிட்டுவின் வலசை வரலாறு!
உல்லாசமாய் உலகளந்திருந்த 
சிட்டுக்குருவி
வெள்ளோட்டமாய் மனுசனூரில் 
மதியிறக்கி
தள்ளாட்டமாய் தத்தளிக்கும் 
கூட்டத்தினூடே
பரவசமாய் கூர்ந்துநோக்கி 
வண்ணமயமான
வஞ்சகமெனும் புதிதாயொரு 
வரைவிலக்கணமும்
நெஞ்சகத்தை ஆட்கொள்ள 
அள்ளியெடுத்ததை
பத்திரமாய் பையகப்படுத்திப் 
பறந்தது
வகைவகையாய் பிறன்பொருள் 
களவாடலும்
காழ்ப்பும், கோபதாபமும், 
புறம்பேசுதலும்
தீயசொல்லும் விதண்டாவாதமும் 
விரசமும்
அனைத்தும் அள்ளிஅள்ளி 
பையகப்படுத்தி
சுமந்தசுமை மூச்சழுத்தி 
எழும்பவிடாமல்
விழிபிதுங்கி மூலையில் 
முடங்கச்செய்ய 
வாட்டமுற்று வாடிக்கிடந்ததை 
வழிப்போக்கன்
நாய்நண்பன் பரிவோடு 
நலம்விசாரிக்க
தன்வினை தானறியாது 
தலைகவிழ்ந்திருக்க
பைரவனும் ஏற்றிவைத்த 
துர்பாரங்களை
 ஒவ்வொன்றாய் சுமையிறக்கி 
சுகமளிக்க
கூனாய் குவிந்ததெலாம் 
சிதறியோட
குதித்தோடி குதூகலமாய்  
சிறகுவிரித்த
சிட்டுக்குருவி தவறியும் 
மனிதப்பதரின்புறம்
சிரம்சாய்க்காமல் வான்வழியே  
வலசைபோனது! 

நன்றி : வல்லமை - http://www.vallamai.com/?p=81248

Friday, November 10, 2017

நவகண்டம் - அரிகண்டம்


நவகண்டம் - அரிகண்டம்

பவள சங்கரி
நவகண்டம் என்பதன் பொருள் நவம் - ஒன்பது, கண்டம் -துண்டங்கள். ஒரு வீரர் தம் உடலை 9 துண்டங்களாகத் தாமே வெட்டிக்கொண்டு உயிர் துறப்பது.
அரிகண்டம் என்றால் ஒரு வீரன் தம்மைத்தாமே வாளால் கழுத்தை அறுத்துக்கொண்டு உயிர் தியாகம் செய்வது. தலையை ஒரு கையால் பிடித்துக் கொண்டோ, தலையை ஓரிடத்தில் இழுத்துக் கட்டியோ மறுகையால் வாள் கொண்டு கழுத்தினை அறுத்து பலி கொடுப்பது.
பழங்காலத்தில் மன்னர்கள் போரில் வெற்றிபெறவும், அவர்கள் நலம் பெறவும், தாங்கள் எடுத்துக்கொண்ட முக்கிய நலப்பணித் திட்டங்கள் எவ்விதத் தடங்கலுமின்றி நடந்தேறவும் போர்வீரர்கள் கொற்றவை தெய்வத்தின் முன், தங்களைத்தாங்களே பலியிட்டுக் கொள்ளும் வழக்கம் இருந்துள்ளதை சிற்பங்கள், நடுகற்கள் கல்வெட்டுகள் போன்ற ஆவணங்கள் மூலம் அறிய முடிகிறது.கொற்றவைக்கு அவ்வாறு பலியிட்டுக் கொள்பவர்கள் கூரிய வாளால் தங்கள் உடலை ஒன்பது பாகங்களாக, அதாவது கை, கால், வயிறு ஆகிய பகுதிகளை அரிந்துகொண்டு இறுதியாகத் தன் தலையைத் தானே அறுத்துக்கொள்வர். இதனை வெளிப்படுத்தும்நவகண்ட சிற்பங்கள்தமிழ்நாட்டில் பல இடங்களிலும் காணமுடிகிறது. குறிப்பாக பழம்பெரும் நாடான கொங்கு நாட்டில் மிக அதிகமாகக் காணப்படுவதை அறியமுடிகிறது.அரச விசுவாசிகளான படை வீரா்கள் தம்மைத் தாமே பலியிட்டுக் கொள்வதற்கான பலிபீடங்கள் பட்டினப்பாக்கத்தில் இருந்தமையை இளங்கோவடிகளின் கீழ்கண்ட பாடலின் மூலம் அறியமுடிகிறது:

வெற்றி வேந்தன் கொற்றம் கொள்கென

நற்பலி பீடிகை நலங்கொள வைத்தாங்கு

உயிர்ப்பலி உண்ணும் உருமுக்குரல் முழக்கத்து

மயிர்க்கண் முரசொடு வான்பலியூட்டி

( இந்திர விழவூரெடுத்த காதை 85-88 )

மேற்கண்ட அடிகள் மூலம் வீரா்கள் தமது தலையைத்தாமே வெட்டி பலிபீடத்தில் வைப்பதைக் குறிப்பிடுகின்றன.
மேலும் கொற்றவைக்கு தலையை அரிந்து கொடுக்கும் சிற்பங்களை மகாபலிபுரம்திரௌபதி ரதத்திலும் சிங்கவரம் குன்றத்திலும் திருவானைக்காவிலும் காணலாம்.
கம்பவர்மன் காலத்து நடுகல் ஒன்றில் இதைப்பற்றி சிறப்பாகக் கூறுவதைக் காணலாம்.

ஸ்ரீகம்ப பருமற்கி யாண்டு இருபதாவது

பட்டை பொத்தவனுக்கு ஒக்கொண்ட நாதன்

ஒக்கதிந்தன் பட்டை பொத்தன் மேதவம்

புரிந்ததென்று படாரிக்கு நவகண்டம் குடுத்து

குன்றகத் தலை அறிந்துப் பிடலிகை மேல்

வைத்தானுக்கு

என்பது அந்தக் கல்வெட்டு வாசகம்.

பழங்குடிகள் நிறைந்த கொங்கு நாடு பலப்பல தொன்மை வரலாறை தனக்குள்ளே கொண்டுள்ளது. இன்றளவிலும் மொத்த மக்கள் தொகையில் 10 சதவிகிதம் பேர் பழங்குடியினர் வாழ்கின்றனர். சங்ககாலம் தொட்டு கொங்குச் சமவெளிப்பகுதியில் வாழ்ந்த பழங்குடியினரில் குறிப்பிடத்தக்கவர்கள், குறும்பர், பூலுவர், காவலர், ஆவியர், சோழர் பூர்வபட்டயம் மாவலவர், குறும்பிலார், வேட்டுவர், அவ்டர், படைத்தலை போன்றவர்கள் இருந்தாலும், அவ்டர், ஆவியர், குறும்பர் போன்ற இனத்தவர் சமூக நீரோட்டத்தில் இணைக்கப் பெற்றதற்கான சான்றுகள் இல்லாவிட்டாலும், அவ்டநாடு, ஆவியர்நாடு, குறும்பநாடு போன்ற பெயர்கள் அரசியல் சமூகவியல் நீரோட்டத்தில் இருந்திருக்கின்றன. கொங்கு நாட்டில் சோழர் காலத்து பல நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவைகளில் பெரும்பாலும் எழுத்துகள் அதிகமில்லை. கொங்கு நாட்டின் எல்லைப்புறத்தில் கிடைத்த நடுகற்கள் போன்றவற்றில் சேர, சோழ, பாண்டிய பேரரசின் முயற்சிகளால் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன.


கொங்கு நாட்டின் வட பகுதியிலும், கருநாடக நாட்டின் தென் பகுதியிலும் வாழ்பவர்கள் வேட்டுவர்கள் என்ற கிராதர் என்கிறார் டி.என்.சுப்ரமணியம். கங்கமன்னன் சிவமாறனின் செப்பேடுகள், ‘வேட்டுவ அரசர்களின் அரன்களை எறிந்து வேட்டுவ அரசிகளைச் சிறை பிடித்தான்எனும் அது வடமொழியில் அமைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. பிற்காலச் சோழர்களின் முதலாம் ஆதித்தன் கொங்கில்வேட ராஜாக்களை வென்றான்என்று கொங்குதேச இராஜக்கள் என்ற மரபுவழி நூல் கூறும். சிவமாறன் போரும் ஆதித்தன் போரும் கி.பி. 9 - 10 ஆம் நூற்றாண்டில் நடந்திருக்கிறது. ஆதித்தன் காலத்து வேட்டுவ இராஜாக்கள் பலர் இருந்தனர் என்று வேட்டுவ இராஜாங்கம் என்ற நூல் கூறுகின்றது.


தமிழ் மண்ணில் முதன் முதலில் படைத்தொழிலில் ஈடுபட்டவர்கள் .....


தமிழ் மண்ணில் முதன் முதலில் படைத்தொழிலில் ஈடுபட்ட வேட்டுவ இனத்தில் இருந்துதான் சேர ,சோழ ,பாண்டிய அரசர்கள் உருவானார்கள் . வேட்டையாடுதலைத் தமது முதன்மைத் தொழிலாகக் கொண்டவர்கள் வேட்டுவர்கள். வேடர் என்ற சொல்லே வேட்டுவர் என்றாயிற்று. இவர்கள் வேடன், வெற்பன், சிலம்பன், எயினன், ஊரன், வேட்டைக்காரன், வேட்டுவன், வேட்டுவதியரையன், ஊராளி, வேட்டுவ கவுண்டர் மற்றும் நாடாழ்வான் முதலான பெயர்களாலும் அழைக்கப்பட்டனர். “வேர் வகையை எண்ணினாலும், வேட்டுவர் வகையை எண்ணமுடியாதுஎனும் முதுமொழியும் ஏற்பட்டுள்ளது.


வேட்டுவரின் பூர்வீகம் குறித்து அறிஞர்களிடையே பலவிதமான கருத்துகள் நிலவுகின்றன. வேட்டுவர், பிரம்மனால் படைக்கப்பட்ட ஆதி வம்சத்தினர் என்று வேளாளர் புராணம் குறிப்பிடுகிறது. சோழன் பூர்வ பட்டயம், வேட்டுவ கவுண்டர்களைக் கொங்கு நாட்டின் ஆதிகுடிகள் என்று சுட்டுகின்றது. சில பட்டயங்களில் வேட்டுவர், முத்தரையரின் வழித்தோன்றல்கள் என்றும் செப்புகின்றன. வேட்டுவக் கவுண்டரும் முத்தரையரும் கண்ணப்ப நாயனாரைத் தமது குல தெய்வமாகக் கொண்டு வழிபடுகின்றனர். எட்கார் ஃதர்ஸ்ட்டன் (Edgar Thurston) அவர்கள் முத்தரையர், வேட்டுவர், வலையர் ஆகியோர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று கூறியுள்ளார். இருப்பினும் வேட்டுவரின் பூர்வீகம் குறித்து நான்கு முக்கிய கொள்கைகள் (கருத்துகள்) உள்ளன. அவை, வேட்டுவர் நாகர் இனத்தவர், குரு குலத்தவர், கண்ணப்ப நாயனாரின் கால்வழியினர், கொங்கு நாட்டின் பூர்வீகக் குடிகள்.


கொங்கு நாட்டு வேட்டுவக்கவுண்டர்கள் வீர வரலாறுவரலாற்று வித்தகர், களஞ்சியச் செம்மல் பேராசிரியர் இரா தங்கமணி.


வெட்டவெட்டத் தழைக்கும் வேட்டுவர் படைஎன்பர் அண்ணன்மார். பழங்குடி வாழ்க்கையில் படையென்று ஒரு தனிப்பிரிவு கிடையாது. பழங்குடி இனம் மொத்தமுமே ஒரு படையாகச் செயல்படும். ஒரு குழுவினர் போரில் மாண்டுவிட்டால் அடுத்த குழுவினர் போருக்குத் தயாராகிவிடுவர். உடல் பலம் உள்ளோர் அனைவரும் போர் வீரர்களே. அதனால் அவர்களை மொத்தமாக அழிக்கவே முடியாமல் இருந்திருக்கின்றனர்.


நவகண்டச் சிற்பங்கள் - தலைபலி சிலைகள்கொங்கு நாட்டுச் சிவன் கோவில்களில் நவகண்டச் சிற்பங்கள் காணப்படுகின்றன. வேட்டுவர்கள் கொற்றவையின் பல புகழையும் கூறிப் பரவி, விறல் வெய்யோன் வெட்சி சூடுக எனத்தம் அரசனை வாழ்த்தினர். வேட்டுவவரி சித்தரிக்கும் கொற்றவையின் தோற்றத்தில் வைதீகச் சார்பு மிக்கிருந்தாலும் எயினர்களின் கொற்றவை வழிபாடு பழைய வேட்டைச் சமூக மரபுகளையே அடியொற்றி அமைக்கப்பட்டுள்ளமை சிலப்பதிகார வேட்டுவவரியின் தனிச் சிறப்பாகும்.

இட்டுத் தலை எண்ணும் எயினர் அல்லது 

சுட்டுத் தலைபோகாத் தொல் குடிக் குமரியை-

சிறு வெள் அரவின் குருளை நாண் சுற்றி

குறு நெறிக் கூந்தல் நெடு முடி கட்டி,

இளை சூழ் படப்பை இழுக்கிய ஏனத்து

வளை வெண் கோடு பறித்து, மற்று அது 

முளை வெண் திங்கள் என்னச் சாத்தி;
மறம் கொள் வயப் புலி வாய் பிளந்து பெற்ற

மாலை வெண் பல் தாலி நிரை பூட்டி;

வரியும் புள்ளியும் மயங்கு வான் புறத்து

உரிவை மேகலை உடீஇ; பரிவொடு 

கருவில் வாங்கிக் கையகத்துக் கொடுத்துத்
 
திரிதரு கோட்டுக் கலைமேல் ஏற்றி; 

பாவையும், கிளியும், தூவி அம் சிறைக்

கானக்கோழியும், நீல் நிற மஞ்ஞையும்,

பந்தும், கழங்கும், தந்தனர் பரசி; 

வண்ணமும், சுண்ணமும், தண் நறுஞ் சாந்தமும்,

புழுக்கலும், நோலையும், விழுக்கு உடை மடையும்,

பூவும், புகையும், மேவிய விரையும்,

ஏவல் எயிற்றியர் ஏந்தினர் பின் வர; 

ஆறு எறி பறையும், சூறைச் சின்னமும், 

கோடும், குழலும், பீடு கெழு மணியும்,

கணம் கொண்டு துவைப்ப; அணங்கு முன் நிறீஇ 

விலைப்பலி உண்ணும் மலர் பலி - பீடிகை,

கலைப் பரி ஊர்தியைக் கைதொழுது ஏத்தி- 2. வேட்டுவ வரி 20 – 40


இராமாயண காலத்தில் இலங்கையில் இந்த வழக்கம் இருந்ததை இராவணன் புதல்வர்களான மேகநாதன், இந்திரசித் ஆகியோர் பயங்கரமான நிகும்பிளா குகையில் நடத்திய சடங்குகள் காட்டுகின்றன.


பொதுவாக நாட்டுப்புறப் பாடல்கள், வில்லுப்பாட்டுகள், கும்மிப் பாடல்கள் போன்றவைகள் பத்ரகாளியம்மனை சிவபெருமானின் துணைவியாக, பராசக்தியின் அம்சமாகவும், திருமாலின் இளைய சகோதரியாகவும் குறிக்கப்படுவதால் சைவம், வைணவம் என இரண்டையும் பாலமாக இணைக்கும் தெய்வம் அன்னை பத்ரகாளி எனக் கருதலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். தாய்த்தெய்வம் என்று மக்களால் அன்பாக போற்றப்படும் பத்ரகாளியன்னை, மாகாளி, ஓம் காளி, கொற்றவை, எல்லைப் பிடாரி, பத்ரகாளி என பல்வேறு திருநாமங்கள்கொண்டு போற்றப்படுகிறாள். காளி என்றால் கறுத்தவள் என்றும் பொருள்படும். பீடையை அறுப்பவள் பிடாரியானாள். தீமைகளை, தீயவர்களை, தீய எண்ணங்களை அழித்து நல்லவைகளை நிலைநாட்டுபவர்கள் பேராண்மை பெற்று விளங்க எண்ணுவோர் காளியை வழிபடுகின்றனர். அதாவது அன்னை அருள்வடிவாய் காட்சியளிக்கும்போது பவானியாகவும், ஆண் சக்தியாக அருள்பாலிக்கும்போது துர்க்கையாகவும் விளங்குகின்றாள் என்கின்றனர் ஆன்றோர். அந்த வகையில் பழம்பெரும் நகரமான அந்தியூர் எனும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள பத்ரகாளியம்மன் சகல செல்வங்களும் அருளும் வடிவுடை அன்னையாகத் திகழ்கிறாள். இவள் வீற்றிருக்கும் ஆலயமோ ஆயிரம் ஆண்டுகள் பழமையானது!


ஈரோட்டிலிருந்து வடக்கு புறம் 35 கி.மீ. தொலைவில் உள்ளது அந்தியூர். செல்லீசுவரர் திருக்கோவில் மற்றும் அழகராசப் பெருமாள் திருக்கோவிலும் அருகிருக்க இக்கோவில் அந்தியூர் கோட்டையின் உட்புறத்தில் மேற்குப் புறமாக அமைந்துள்ளது. சேர, சோழ, பாண்டிய மன்னர்களுடன், கொங்கர்களும் தனியாட்சி செய்துவந்த நாடு கொங்கு நாடு என்பது. 24 உட்பிரிவுகள் கொண்ட கொங்கு நாட்டில், பவானி ஆற்றின் வடபுறம் உள்ள வடகொங்கு வடகரை நாடு என்பதும் ஒன்றாகும். இந்த வடகரை நாட்டின் தலைநகராக இருந்தது அந்தியூர்.


கொங்கு நாட்டின் வடக்கு எல்லையாக இருப்பது பர்கூர் மலைத்தொடர். சங்க காலச் சிறப்புமிக்க நகரங்களில் முக்கியமானது அந்தியூர். அக நானூறு எனும் சங்க இலக்கியத்தின் 71 ஆம் பாடலைப் பாடியஅந்தி இளங்கீரனார்என்ற புலவர் அந்தியூரைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதிலிருந்து இவ்வூரின் பழமையை அறிய முடிகிறது. பண்டைக் காலத்தில் மூன்று சுற்றுகளுடன் அகழிப்பாதுகாப்பும் கொண்ட, வராக நதிக்கரை ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த மண்கோட்டை இன்று அழிந்துவிட்டாலும் கோவில்கள் இவ்வூரின் பழம்பெருமையை எடுத்துரைக்கின்றன.


அந்தியூரின் தென்கிழக்கு மூலையில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது இவ்வாலயம். கோவிலின் முன்புறம் அறுபது அடி நீளமுள்ள குண்டம் காணலாம். குண்டத்தின் மேற்குப்புறம் கம்பீரமான வடிவுடைய பெரியதொரு கணபதியைக் காணலாம். திருக்கோவில் வாயிலில் அழகும், அச்சமும் ஒருங்கே அமையப்பெற்ற கம்பீரத் தோற்றத்துடன் இரண்டு பூதகணங்கள் காவல்புரியும் காட்சி மெய்சிலிர்க்கச்செய்பவை. மகாமண்டபத்தில் முருகன் மற்றும் பிள்ளையார் திருவுருவங்கள் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளனர்.


களப்பலி வீரர் சிற்பம்! – நவகண்டம்
மூதுபுகழ் கொண்ட கொங்கு நாட்டில் வீரப்பெண்மணிகளின் வரலாறு எண்ணற்றவை. தங்கள் நாட்டு மன்னன் போரில் பகைவர்களை அழித்து வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத் தங்கள் தலையை வெட்டி வெற்றித் தெய்வமாகிய காளி அன்னைக்கு காணிக்கையாக்கும் வழமை இருந்துள்ளது. கி.பி. 1265 – 1285 காலத்திய ராஜகேசரி வர்மன் என்கிற வீரபாண்டித் தேவரின் கல்வெட்டுகள் இதற்கு ஆதாரமாக உள்ளன. அவ்வழக்கத்தின்படி பெண் வீரர்களும் தங்களையே களப்பலி கொடுத்துள்ளனர் என்பதற்கு ஆதாரமாக அந்தியூர் சிறீபத்திரகாளியம்மன் திருக்கோவிலில் தமது தலையைத் தாமே வெட்டிக்கொண்டு பலி கொடுக்கும் வீரப்பெண்மணிகளின் சிலைகள் கேட்பாரற்று குப்பைமேட்டில் மண்ணில் புதைந்து கிடக்கும் அவலத்தைப் பார்க்க வருத்தமாகத்தான் இருந்தது.. பழம்பெரும் ஆலயங்கள் புதுப்பிக்கப்படும்போது இதுபோன்று வரலாற்று ஆவணங்களின் அருமை தெரியாமல் அழிக்கப்பட்டுவிடுகின்றன. ஆனால் சென்ற வாரம் தமிழ் மரபு அறக்கட்டளை என்ற அமைப்பு எடுத்த முயற்சியின் காரணமாக இந்த நவகண்ட சிற்பங்கள் மண்ணிலிருந்து மீட்டெடுத்து சுத்தம் செய்யப்பட்டு எண்ணெய் காப்பும் சாத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கோவில் நிர்வாகத்தினரால் மேலும் ஒரு நவகண்ட வீரர் சிற்பம், இடப்புறம் மனைவியுடனும், வித்தியாசமான ஆடை, ஆபரணங்கள் அணிந்தவாரும் மீட்டெடுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.


இன்றும் ஈரோடு, சென்னிமலை, திருச்செங்கோடு, கபிலர்மலை, மதுரை, திருவண்ணாமலை ஆகிய ஊர்களில்சாவான் சாமிகோயில்கள் உள்ளன. சேலத்தில் எடப்பாடி, புதுப்பாளையம், தாரமங்கலம், அத்தனூர், மணப்பள்ளி, கல்யாணி, சிங்களாந்தபுரம் ஆகிய ஊர்களில் நவகண்ட சிற்பங்கள் உள்ளன.


காரைக்குடிக்கு மேற்கே 9.கி.மீ. தொலைவில் உள்ளது குன்றக்குடி. இங்குள்ள குடைவரைக் கோயிலிலுள்ள கொற்றவை சிற்பம் எழில் மிக்கது. கொற்றவையின் வலப்புறத்தே வீரன் ஒருவன்நவகண்டம்அளிக்க, தன் வலக்கையால் வாளை ஏந்தி அடிக்கழுத்தில் நெடுஞ்சிரத்தை அரியும் நிலையில் காட்டப்பட்டுள்ளன. இதேபோல கொற்றவைக்கு தலையை அரிந்து கொடுக்கும் சிற்பங்களை மகாபலிபுரம்திரௌபதி ரதத்திலும் சிங்கவரம் குன்றத்திலும் திருவானைக்காவிலும் காணலாம்.


அத்தனூர் அம்மன் கோவில் (ராசிபுரம்), சிங்களாந்தபுரம் சந்தைப்பேட்டை, புதுப்பாளையம் முப்பீஸ்வரர் கோவிலில் மூன்று நவகண்ட சிற்பங்கள் (எடப்பாடி), தர்மபுரி மாவட்டம் காவேரிப்பட்டினத்திலிருந்து கிழக்கே 4 கி.மீ. தொலைவிலுள்ள பெண்ணேசுவர மடம் கோயிலின் முன்புறம் 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு நவகண்ட சிற்பம் என பல்வேறு சிற்பங்களைக் காணமுடிகிறது. திருவான்மூரிலுள்ள கி.பி. 889 ஆம் ஆண்டு கல்வெட்டொன்று பட்டிப்பொத்தன் என் பவன் நவகண்டம் கொடுத்ததைக் குறிப்பிடுகிறது. அம்பலக் கூத்தன் என்ற வீரன் தன் படைத் தலைவனின் நோய் குணமாக நவகண்டம் கொடுத்துள்ளதை முதலாம் குலோத்துங்க சோழன் காலக் கல்வெட்டொன்று குறிப்பிடுகின்றது. கல்வெட்டு பொறிக்கப்படாத நவகண்டக் கற்கள் கரூர், பேரூர், அவினாசி, ஆறூர் ஆகிய ஊர்களில் காணப்படுகின்றன. கொற்றவை வழிபாட்டு மரபில் நவகண்டம் என்னும் வழக்கம் தொன்றுதொட்டு இருந்து வருகிறது.


இந்த சிற்பங்கள் ஒன்றிலும் எழுத்துக்கள் இல்லை என்பதால் அவர்கள் யார் என்றும் அவர்களின் வரலாறு என்ன என்றும் அறிந்து கொள்ள முடியவில்லை.
கி.பி. 1600 ஆம் ஆண்டுகளுக்கு முன்னால் பாண்டிய பேரரசு பாண்டிய மன்னர்களின் மெய்காவலர்களாக இருந்தவர்கள் பண்டாரம் இனத்தைச் சார்ந்த வைராவி மட்டுமே. மன்னருக்காகத் தங்கள் இன்னுயிர் கொடுப்பவர்கள் வைராவிகள் மட்டுமே. யுத்தத்திற்கு முன்னால் ஒரு இராச இரத்தத்தை பலியாக கொடுத்தால் காளி தேவி வெற்றிக்கு உதவுவாள் என்பது ஐதீகம்.


கலிங்கத்துபரணியில் சோழ அரசின் வெற்றிக்காக இப்படி தலையை அறுத்து பலிகொண்ட வீரனைப் பற்றிய செய்தி இடம் பெற்றுள்ளது. இது போலவே தண்டனையாகவும் தன் தலையைத் தானே அறுத்துக் கொள்ளும் வழக்கம் இருந்திருக்கிறது.


இந்த நிகழ்ச்சி  ஒரு பெரிய விழா போன்று நடத்தப்படும். நவகண்டம் ‍‍/ அரிகண்டம் கொடுப்பதற்கு முன் உறவினர்கள் அனைவரும் அழைக்கப்படுவர். நவகண்டம் கொடுப்பவர் இடையில் உடைவாளும், மார்பில் கவசமும் தரித்து போர்வீரன் போல் போர்க்கோலம் பூண்டு இருப்பார். கொற்றவைக்கு பூசை முடித்து பின்பு, தனது இடது கையினால் முடியைப் பிடித்து வலது கையினால் கழுத்தை வெட்டிக் கொண்டு இறப்பர்.


நவகண்டம் கொடுப்பதற்கான காரணங்கள் :


வலிமையான‌ எதிரி நாட்டுடன் போர் புரிய நேரும் போது, வெல்வதற்கு வாய்ப்பே இல்லை என்ற‌ தருணங்களில் தெய்வத்தின் அருளை நாட வேண்டியுள்ளது. துர்க்கைக்குப் பலி கொடுத்தால் தெய்வத்தின் அருள் கிட்டும் என்ற நம்பிக்கையில் நவகண்டம் கொடுக்கப்பட்டது. உடல் ஆரோக்கியம் கெட்டு படுத்த படுக்கையாகக் கிடக்கும் அரசனுக்கு, அவன் நலம் திரும்ப அவரது விசுவாசிகளால் நவகண்டம் கொடுக்கப்பட்டது.


கடுமையான நோய் தாக்குதலால் சாவை எதிர் நோக்கி காத்திருக்கும் ஒருவர் வீர சொர்க்கம் அடைய விரும்பி நவகண்டம் கொடுத்துக் கொள்வது.


குற்றவாளி ஒருவன் தான் செய்த குற்றத்தினால் மரண தண்டனைக்கு உள்ளாகும்போது, அவ்வாறு சாகாமல் அரசன் அனுமதியுடன் நவகண்டம் கொடுத்துக் கொண்டு வீர சொர்க்கம் அடைவ‌து.


மற்றுமொரு சுவையான செய்தி - ஒருவன் போர்க்காயத்தினாலோ, நோயினாலோ சாகும் தருவாயில் அவனுக்கு முடிக்க வேண்டிய கடமைகள் பாக்கி இருக்குமாயின் தனது இறப்பை தள்ளிப் போடுமாறு இறைவனிடம் வேண்டுவர். அந்த கடமை நிறைவேறியதும் நவகண்டம் கொடுத்துக் கொள்வர். பெரும் அவமானத்தைப் பெற்றபின் அதற்கு மேல் வாழ விரும்பாமல் சாக விரும்புபவன் கோழையாக இல்லாமல் வீரச்சாவை விரும்பி நவகண்டம் கொடுத்துக் கொள்வர்.


சோழர்களுக்கு "வேளக்கார படைகள்" மற்றும் பாண்டியர்களுக்கு "தென்னவன் ஆபத்துதவிகள்" போன்ற தற்காப்புப் படைகள் இருந்தன. அரசர் உயிருக்கு ஆபத்து நேர்கையில் கொற்றவையின் சந்நிதியில் தங்களுடைய தலையைத் தங்கள் கையினாலேயே வெட்டிக் கொண்டு பலியாகிவிடுவர்.


உலகின் உயிரினங்கள் அடைந்த வளர்ச்சியினை உணர்த்தும் காலக் கண்ணாடி வரலாறு என்பது. வீரதீர செயல் புரிந்தவர்களின் வரலாற்று அடையாளமாகவே இந்த நவகண்டச் சிற்பங்கள் உள்ளன. இவை பல இடங்களில் கால வரலாற்றைக்காட்டும் முக்கிய ஆவணங்களாகவே விளங்குகின்றன.

துணை நூல்கள்:

கல்வெட்டு ஓர் அறிமுகம், தமிழ்நாடு தொல்பொருள்துறை ஆய்வுத்துறை வெளியீடு, 1976

சிலப்பதிகாரம் மூலமும் உரையும் - பொ.வே.சோமசுந்தரனார், கழகப்பதிப்பு, சென்னை-1, 1973.

சிலப்பதிகாரம் (கட்டுரைத் திரட்டு) - கா.அய்யப்பன் (பதி..) மாற்று, சென்னை-106, 2009.

https://tamilandvedas.com/tag/navakandam/
David Roy, ‘The Megalithic Culture of the Khasis ANTHRORPOS.L.VIII.Pt 3 - 4.
p.p522 ff’)
.