Saturday, August 7, 2010

ஊர்ப் பழமை..............

ஊர்ப் பழமை..........

நூல் குறிப்பு ;
நூலின் பெயர் _ " ஊர்ப்பழமை "
ஆசிரியர் _ 'பழமைபேசி' [எ] மௌன. மணிவாசகம்
.
பக்கங்கள் _ 320
விலை _ ரூ. 150/
வெளியீட்டாளர் _ அருட்சுடர் பதிப்பகம். ஈரோடு.
அலைபேசி: 9894717185
மின் அஞ்சல்: visuaruran@gmail.com.


இணையத் தமிழில் பழமைபேசியின் பங்களிப்பு சால சிறந்தது என்றும், இவரது இடுகைகளில் தகவல் நிறைவு, வரலாற்றொழுங்கு, நோக்கு நிலைத் தெளிவுகள், தமிழ் மொழி வளம் மட்டுமன்றி, இவருடைய 'நனவுகள்' என்ற நவீனம் படித்துத் தனக்குள் ஒரு நிறைவு உண்டானதையும் மற்றும் அவருடைய பன்முகத் திறமையை சிலாகித்தும், உலகத் தமிழர் அமைப்பின், தலைவர், திரு. நாஞ்சில் இ.பீற்றர் அவர்களின் முன்னுரையுடன்,

பல ஆண்டுகள் அமெரிக்க வாசத்துக்குப் பின்னும், துல்லியமாக, மொழிவளம் குன்றாமல், கொஞ்சும் தேன் தமிழில் தாம் கண்ட, கேட்ட, உணர்ந்த, போற்றிப் பாதுகாத்த நினைவுகளையும், நிகழ்வுகளையும் பதிவு செய்து, வலைப் பதிவுகள் வெறும் பொழுதுபோக்காய் மொக்கைப் போட மட்டும் என்றில்லாமல் ஆக்கப் பூர்வமாக எழுதி, அனைவரையும் அரவனைக்கும் பாங்குடன் எழுதும் நண்பர் பழமை பேசி என்று, தமிழ் மணம், தமிழ் வலைத் திரட்டியின் நிறுவனர் திரு. காசி ஆறுமுகம் அவர்களின் மனப்பூர்வமான வாழ்த்துரையையும் பெற்றுள்ள திரு. மௌன.மணிவாசகம் என்கிற இந்நூல் ஆசிரியர், கொங்குச் சீமையில் இருக்கும் உடுமலைப் பேட்டைக்கு அருகண்மையில் உள்ள அந்தியூர் எனும் சிற்றூரில் பிறந்துள்ளார்.

டொரண்டோ நகரின் யார்க் பல்கலைக் கழகத்தில் கணினி அறிவியல் துறையில் பட்டம் பெற்று, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, ஜெர்மனி, இசுரேல், சைப்ரசு, கனடா போன்ற நாடுகளில் பணிபுரிந்து விட்டு தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார் இந்த உலகம் சுற்றும் வாலிபர்.

பதின்மம் கடந்த சில காலங்களிலேயே தாம் பிறந்து, வளர்ந்த கொங்குச் சீமையையும், அதன் கிராமங்களையும் விட்டு, வெகு தொலைவிற்கு புலம் பெயர்ந்தாலும், கிராமியத்தின் தொண்மைகளை அணு அணுவாக அனுபவித்து இரசித்ததன் பொருட்டும், வெள்ளந்தியான கிராம மக்களின் அரவணைப்பில் ஆளானதையும் சதா சர்வ காலமும் நினைத்து, நினைத்து அசை போட்டதுடன் அன்னை தமிழ் பால் கொண்ட மாறாத காதலின் விளைவினாலுமே இத்தகைய அருமையான கொங்கு தமிழ் வட்டார வழக்கு ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் சிறு கதைகள் தாங்கிய " ஊர்ப் பழமை..........." எனும் நூலைப் படைத்துள்ளார்.

'பழமை பேசி' எனும் விருப்ப அடை மொழி கொண்ட ஆசிரியர் தன்னுரையில், வட்டார வழக்கினை எழுத்தாக்குவதற்கென்று, ஒரு நெறி முறையும், இலக்கண வரம்பும் இல்லாததால் சில குறைபாடுகள் இருப்பது இயல்பே என்று குறிப்பிட்டிருந்தாலும், தன்னுடைய கொங்குத் தமிழின் அழகு நடையினாலும், தனக்கே உரிய நகைச்சுவை மற்றும் பன்முகத் திறமையினாலும், வாசிப்போரைத், தன் வசம் கட்டியிழுத்து வைத்திருக்கிறார் என்றால் அது மிகையாகாது.

ஆசிரியர் இந்நூலை , எழிலாய்ப் பழமை பேச........., பள்ளயம், மற்றும் நனவுகள் [சிறுகதைத் தொகுப்பு] என்று மூன்று பாகங்களாகப் பிரித்து வடிவமைத்துள்ளார்.

எழிலாய்ப் பழமை பேச...... என்ற பகுதியில், 2000 ஆண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்ட கணக்காயிரம் செய்யுளின் மூலமாக, கூப்பிடு தூரம் மற்றும் சாண், முழம் போன்ற பழங்காலக் கணக்குகளின் விளக்கங்களைத் தெள்ளத் தெளிவாகத் தொகுத்திருக்கிறார்.

'கோளாறு சொல்லுறவனைக் கூட்டத்துல சேர்க்காதே ' போன்ற சிந்திக்கத் தூண்டும் ஊர் மொழிகள்.

உழவுத் தொழிலில் இன்று மிக நவீனமான இயந்திரங்கள் நடைமுறைக்கு வந்துவிட்ட போதிலும், ஆசிரியர் பழந்தமிழ் முறையிலான உழவுத் தொழிலினை '[ தாம்பு ஓட்டுற வேலை ] நம் கண் முன்னே விரித்துக் காட்டியுள்ளார்.

இன்றைய திரைப்பட நகைச்சுவை நடிகர்கள் அதிகம் பயன் படுத்துகிற ங்கொக்க மக்கா ' போன்ற வார்த்தைகளைக்கூட நையாண்டியாக விவரித்துள்ளார்.

' என்னோட சல்லடம் கிழிஞ்ச கதை ' என்ற பக்கத் தலைப்பில், ஆசிரியர் நகைச்சுவையாக விளக்கியிருக்கும் சம்பவம் நம் பண்டைய கலாச்சாரம் மற்றும் பண்பாட்டிற்கு ஓர் எடுத்துக் காட்டாகும். கொங்குத் தமிழ் அகராதியுடன் அனைவரும் புரிந்துக் கொள்ளும் வகையில், பல முக்கியமான வார்த்தைகளுக்கு ஆங்கில விளக்கமும் அளித்துள்ளார்.

கிராமத்துப் பகுதியில் ஆண்கள், மேல் துண்டு அணியும் வழக்கம் பரவலாக உள்ளது. அதன் பலவிதமான பயன்பாடு குறித்த ஆசிரியரின் விளக்கம் நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு வரலாற்றுச் செய்தியாகும்.

"கொங்குவள நாட்டிலே அன்புத் தேனும், விருந்தோம்பல் எனும் பழச்சாறும், ஊர் கூடித் தேரிழுக்கும் ஒரு மனம் கொண்ட சமூகப் பற்றும், எங்கும் வியாபித்திருக்கும் பல்வேறுத் தொழில்களை முனைந்துச் செய்யும் மக்கள், -செய்யும் தொழிலாலே மாறுபட்டு அடையாளம் காணப்பட்டாலும் கூட அவர்களிடத்தே சமூகப் பிணைப்பு இருந்தது," எனும் அவருடைய வியப்பில் இன்று அவ்வாறு இல்லையே என்கிற ஆதங்கமும் வெளிப்படுகிறது.

"மேற்கூறிய காரியங்கள் எல்லாம் கடந்த நூற்றாண்டில் நடந்தவை அல்ல, சுமார் பதினைந்து , இருபது ஆண்டுகளுக்கு முன்னால் கொங்குவள நாட்டில் ஈடேறியவைதான், இன்றைக்கு இந்த கட்டமைப்பு இருக்கிறதா? தொழில் வளம் பெருகி, சமுதாயம் வேளாண்மையிலிருந்து மற்ற மேம்பட்ட தொழில்களுக்குச் சென்று விட்டாலும் கூட அந்த உளவியல் கூறுகள் இருந்திருக்க வேண்டுமன்றோ ? இல்லை என்பதுதானே நிதர்சனம் ?" என்று தெளிவாக இன்றைய நிலையையும் விமர்சித்துள்ளார்.

கிராமத்தில் சொல்லக் கூடிய ஐந்தொகை, அதாவது விழுமுதல் [முதலீடு ], வரவு, செலவு, இருப்பு, ஆதாயம், இதனை ஒரு சிறு நிகழ்வைக் கொண்டு தெளிவுற விளக்கியிருப்பதுடன், இத்துடன் அமெரிக்கப் பொருளாதாரத்தையும் இணைத்து, ஒப்பிட்டு, சாமர்த்தியமாக விளக்கியுள்ளார், ஆசிரியர்.

தன்னுடைய இளவயதுச் சம்பவங்களையும் நினைவலைகளாக மண்ணின் மணம் மாறாது அழகாகத் தொகுத்துள்ளார். அங்கங்கே இலக்கண விளக்கமும் உண்டு.

பள்ளயம்

இப்பகுதியில் அந்தச் சொல்லுக்கான விளக்கத்துடன், நாட்டுப் புற பாடலும், இனிமையாகப் பதிவாக்கியிருக்கிறார் பழமைபேசி !.

பிறந்த நாள் நாம் ஏன் கொண்டாட வேண்டும் என்றும், ஏன் பிறந்த நாள் கொண்டாடுபவர்களை வாழ்த்த வேண்டும் என்பதற்கும் சில ருசியான தகவல்களைக் கொடுத்திருக்கிறார்.

கவி காளமேகப் புலவர், அபிராமிப் பட்டர் பாடல்களை ஆய்வு செய்திருப்பதோடு அதனை ஆங்கில ஆக்கமும் முயற்சித்துள்ளார்.

இந்தியப் பாதுகாப்பு என்கிற தலைப்பில் குற்றங்களும், தண்டனைகளும் குறித்துத் தெளிவாகத் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியிருக்கும் ஆசிரியர், இரசியா, சீனா மற்றும் அமெரிக்கா இடையிலான திட்டங்கள் மற்றும் பண வீக்கம் வரும் என்பதற்கான எச்சரிக்கை அனைத்தையும் கூறியுள்ளார். [இன்னும் சிறிது விளக்கமாகக் கூறியிருக்கலாமோ ?]

" இந்தியா தன்னோட பாதுகாப்புக்கும், வலுவான பொருளாதாரத்துக்கும் ஆனதைச் செய்யணும், யாருக்கும் வளைஞ்சி கொடுக்கக் கூடாது"............. போன்ற ஆக்கப்பூர்வமான எண்ணங்களையும் வெளிப்படுத்தியுள்ளார்.

எள்ளுத் தாத்தா வைத்தியத்தையும் விட்டு வைக்கவில்லை இந்த வித்தகர்.
போர்க்களத்து வீரர்கள் சிலை குறித்த ஆசிரியரின் வியாக்கியானம், புதியத் தகவல்கள்.

பெண் விடுதலை குறித்த மேன்மைச் சிந்தனை, சமூக விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையிலான ஆய்வுக் கட்டுரைகள்.

Blogல் கண்டதையும் எழுதுகிற மொக்கை ஆசாமிகளையும் சாடியிருக்கும் துணிச்சல்.

ஆசிரியரின் பார்வையில் கொடுமைகள் எத்தனை கொடுமையப்பா..............

புலவர்கள் வாழ்ந்த காலம் குறித்த ஆசிரியரின் குறிப்புகளின் மூலம் பல அரியத் தகவல்கள் கிடைக்கின்றன.

உண்மைக்கு எதிர்ப்பதம் பொய் என்பதைவிட இன்மை என்பதே சாலப் பொருந்தும் என்பதற்கான அழகான விளக்கங்களும் அளித்துள்ளார்.

அமெரிக்கத் தலைநகரின் இலக்கியக் கூட்டங்கள், ஆய்வுப் பணிகள் குறித்தக் கண்ணோட்டம் மற்றும் கவி காள மேகப் புலவரின் தாக்கம் அதிகம் கொண்டவரான ஆசிரியர் கனவில் கவி காளமேகம் என்ற தலைப்பில் நகைச்சுவையுடன் கலந்த இலக்கண விளக்கமும் மற்றும் கொங்குத் தமிழ் அகராதியும் அழகாகவேத் தொகுத்துள்ளார்.

நனவுகள்

இப் பகுதியில் கொங்குத் தமிழ் வட்டார வழக்கு நடையில் சுவை மிகுந்த சிறு கதைகளின் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.'சிறுகதை' எப்படி இருக்க வேண்டும் என்பதை சுவை பட தன் பாணியில் விளக்கியுள்ளார்.

ஆக ஆசிரியரின் "ஊர்ப் பழமை......." என்கிற இந்நூல், அனைத்துத் தரப்பு வாசகர்களையும் கவரக் கூடிய , ஜனரஞ்சகமான ஒரு நூலகம் என்றால் அது மிகையாகாது.

"எப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும்
கடைசியா இனத்துல வந்துதான் அடையணும் !

இதுவே ஆசிரியரின் தன்னிலை விளக்கமாகக் கொள்ளலாமோ?


Friday, August 6, 2010

கடவுச்சீட்டு. ...........எங்கே..........?


பயணங்கள் பல நேரங்களில் சுகமான அனுபவங்களைக் கொடுத்தாலும், சில நேரங்களில் சிறு கவனக் குறைவுக் கூட பெரிய பிரச்சனைகளை உருவாக்கிவிடும். அதுவும் அயல் நாட்டுப் பயணம் என்றால் கேட்கவே வேண்டாம். மிக எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டியது அவசியமாகிறது.
சென்ற டிசம்பர் மாதத்தில் தான் சென்றிருந்தோம். குளிரா அது.....? அம்மாடியோவ்......... நம்ம எடைக்கு மேல இரண்டு பங்கு எடைக்கு உடை வேறு...... அப்பத்தான் அந்த குளிர்ல இருந்து கொஞ்சமாவது தப்பிக்க முடியும். இந்த குளிரில் தான் நியூ ஜெர்சியில் விஞ்ஞானியாகப் பணி புரிந்துக் கொண்டிருக்கும் இருக்கும் என் மகள் வீட்டிலிருந்து, சிகாகோ மாநிலத்தின் ஐயோவா நகரத்தில் கணினி பொறியாளராகப் பணிபுரியும் என் மகன் இருக்கும் இடத்திற்குச் செல்ல முடிவெடுத்திருந்தோம்.ஐயோவாவிற்கு செல்ல நியூயார்க் லகார்டியா விமான நிலையத்திலிருந்து ஐயோவா மோலின் விமான நிலையம் செல்ல இரண்டு விமானங்கள் மாற்றிச் செல்ல வேண்டும்.

நியூஜெர்சியைவிட ஐயோவா நகரத்தில் மிக மோசமான பனியாக (-10dec) இருந்த காரணத்தினால் மேலும் கனமான குளிர் அங்கி எங்கள் இருவருக்கும் வாங்க வேண்டியிருந்தது. நான் என் கணவருக்கு முன்பாகவே அமெரிக்கா சென்று விட்டேன்.அங்கு ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தில் நன்றி நினைவு நாள் [thanks giving day] என்று ஒரு நாள் கொண்டாடுவார்கள். அன்றைய தினத்தில் பொருட்கள் அனைத்தும் மலிவு விலையில் கிடைக்கும்.

அப்படிக் கிடைத்த குளிர் அங்கி இரண்டு , ஒரே நிறத்தில் இருந்தாலும் பரவாயில்லை என்று வாங்கி வைத்து விட்டேன். ஆனால் என்னவருக்கு இப்படி நான் ஒரே நிறத்தில் வாங்கியது பிடிக்கவில்லை. இருந்தாலும் என்னுடைய கட்டாயத்தில் இரண்டு மனதாகத் தான் ஒப்புக் கொண்டார். ஆனால் இந்த ஒரே நிறத்திலான குளிர் அங்கிதான் எங்களை ஒரு இக்கட்டான சூழலிலிருந்து காக்கப் போகிறது என்று அப்பொழுது எங்களுக்குத் தெரியாது. நாங்கள் கிளம்பும் நாளும் வந்தது.

அன்று வானிலை மிக மோசமாக இருந்தது. வீட்டிலிருந்து விமான நிலையம் செல்லவே நேரம் அதிகமாகிவிட்டது. அவசர அவசரமாக, ஓடிச்சென்று பாதுகாப்பு ஆய்வை முடித்துக் கொண்டு கடைசி நிமிடத்தில் போய் நின்றால், நாங்கள் வரவில்லையென எண்ணி எங்கள் இருக்கைகளை வேறு இருவருக்குக் கொடுத்து விட்டார்கள்.

இருப்பினும், மேல் வகுப்பு இருக்கைகள் இருந்ததால் எங்களுக்கு அதில் இடம் கொடுத்தார்கள். அட பரவாயிலையே என்று யோசிக்காதீர்கள். அங்குதான் எங்களுக்கு ஆப்பு காத்திருந்தது. ஆனால் மேல் வகுப்பில் இராஜ உபச்சாரம்தான். இட நெருக்கடியால் எங்களுடைய பெட்டிகளை சரக்குப் பெட்டகத்தில் [ கார்கோ] வைத்து விட்டார்கள்.

விமானம் சிகாகோ வந்தடைந்து விட்டது. அங்கிருந்து அடுத்த விமானச்சேவை 40 மணித்துளி இடைவெளிதான். வழக்கமாக உள்நாட்டு விமானச் சேவையில் நம்முடைய உடைமைகளை விமானத்திற்கு வெளியே இறங்கியவுடனேயே பெற்றுக் கொள்ள முடியும்.

ஆனால் அன்று மட்டும் பன்னாட்டு முனையத்தில் [international terminals ] சென்று பெற்றுக் கொள்ளும் படி அறிவிக்கப் பட்டது. நாங்கள் இருந்த நுழைவாயிலிலிருந்து, அடுத்த நுழைவாயிலிலேயே அந்த இடம் இருப்பதான அறிவிப்பைக் கேட்டவுடனே என்னவர் அவசர, அவசரமாக நான் சொல்வதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் என் கைப்பையுடன் தன்னுடைய கைப்பையையும் வைத்து விட்டு, என்னை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு, வேகமாக நகர்ந்து விட்டார்.

அடுத்த நுழைவாயிலுக்குச் சென்றவுடன்தான் தெரிந்தது குறிப்பிட்ட நுழைவாயிலுக்குச் செல்ல இன்னும் வெகு தூரம் உள்ளதென்பது. அடுத்த விமானத்திற்கான கால அவகாசம் மிகக் குறைவாகவே இருந்ததால்,அவரும் வேகமாகச் சென்று திரும்புவதையேக் குறியாகக் கொண்டு, வேறு எதைப் பற்றியும் சிந்திக்காது, வேகமாகச் சென்றுவிட்டார். அங்குச் சென்றவுடன்தான் தெரிந்தது, தான் தன் கடவுச் சீட்டை கைப்பையிலேயே வைத்துவிட்டு வந்தது. அதற்குள் பாதுகாப்பு ஆய்விற்காக [security checking] அண்ணாச்சிகள் வரவும், இவரிடம் கடவுச் சீட்டு இல்லாததுக் கண்டு, மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுவிட்டது.

தீவிர வாதம் தலைவிரித்து ஆடுகிற இது போன்ற சமயங்களில் ஒரு சிறு சந்தேகம் கூட அங்கு பெரும் புயலையேக் கிளப்பி விடுகிறது. இவர் கடவுச் சீட்டு என்னிடம்தான் உள்ளதென்பதை எவ்வளவுதான் எடுத்துக் கூறியும், அதனைக் காதில் வாங்காமல் பரபரவென பாதுகாப்பு அதிகாரிகள், ஒன்று கூடி அவரைச் சுற்றி வளைக்கவும் அவரால் அந்த களேபரத்தில் ஏதும் சரியாகப் பேசமுடியவில்லை போலும்! வியர்க்க விறு விறுக்க எதையோச் சொல்லியும் இருக்கிறார்.

ஆனாலும், அவர்கள் அதை காதில் வாங்காமல், அவரை அசையக் கூட விடவில்லை. இந்தக் களேபரத்தில், 2 மணிகள் எளிதாக ஓடிவிட்டது. சென்ற மனிதரைக் காணவில்லையே, எங்குதான் போய்த் தேடுவது, அந்த பிரம்மாண்ட விமான நிலையத்தில் என்று ஒரே தவிப்பாகிவிட்டது.

அந்த இடத்தை விட்டு நகர்ந்தால் திரும்பவும் அவர் என்னைத் தேட வேண்டிவருமே என அசையாமல் அங்கேயே இருக்க வேண்டியிருந்தது. அப்பொழுதுதான் என் மகள் கொடுத்த அலைப்பேசியை மறுத்தது எவ்வளவு தவறு என்பதை உணர்ந்தேன். அங்கும் இங்கும் அருகிலேயே சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கும் போது ஒலி பெருக்கியில் எங்கள் இருவரின் பெயரும் ஒலிபரப்பக் கேட்டவுடன் என் கையும் காலும் ஓடவில்லை. என்னை நான் நிற்கும் அதே இடத்தில் நிற்கச் சொல்லி அறிவித்தார்கள்.

சில நிமிடங்களிலேயே, துப்பாக்கி ஏந்திய ஒரு பாதுகாவலருடன் வியர்க்க, விறுவிறுக்க வருகிறார் என்னவர். அந்தப் பாதுகாப்பு அதிகாரி என் கணவருடையது போலவே என்னுடைய குளிர் அங்கியும் இருப்பதைப் பார்த்து, சற்றே சந்தேகம் தணிந்தவராக, மெலிதாகப் புன்னகைத்துவிட்டு, என்னையும் அழைத்துக் கொண்டு உயர் அதிகாரிகளிடம் சென்றார்.

அங்கு நுழைந்தவுடன் அத்துணை அதிகாரிகளின் முகத்திலும் சிரிப்பு. உடனே, அதில் ஒருவர், Vow, he must be right, this lady must be his wife, see both are wearing the same jacket, oh.......god........ என்றாரேப் பார்க்கலாம்?

இதற்குப் பிறகுதான், அவர்கள் இறுக்கம் குறைந்தவர்களாக, அமைதியாக பேச ஆரம்பித்தார்கள். இத்தனைக் கூற்று நடந்து முடிவதற்குள், ஐயோவா நகரத்திற்கான கடைசி விமானமும், கிளம்பிவிட்டது. திரும்பவும் அடுத்த நாள் மாலைதான் எங்களுக்கு விமானம்.

இதற்கிடையில் எங்களை அழைத்துச் செல்வதற்காக விமான நிலையத்தில் மனைவி குழந்தையுடன் காத்துக் கிடக்கும் எங்கள் மகனோ எங்களைக் காணாமல் தவித்துப் போய், என்ன செய்வதென்று புரியாமல் தவித்துக் கொண்டிருக்க, நாங்களோ பொது தொலைப்பேசியைக் கூடத் தேடத் திராணியற்றவர்களாக, அந்த விமான நிலைய அதிகாரியின் உதவியுடனே எங்கள் மகனுக்கு விவரத்தைச் சொன்னோம்.

பொதுவாக இதுபோன்ற இறுக்கமானச் சூழலில்தான் என் மகனின் மூளை சுறு சுறுவென வேலைச் செய்யும். அவன் அந்தப் பனிப் புயல், அடை மழையில், மனைவி, குழந்தையையும் கூட்டிக் கொண்டு, 31/2 மணி நேரம் காரில் வந்து பெரும் சாதனையாக எங்களை அழைத்துச் செல்லும் வரை, அந்த பாதுகாப்பு அதிகாரிகளின் பார்வை வளையத்துக் குள்ளேயே குறுகுறுவென, உட்கார்ந்திருந்தது, எங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவமாகிப் போனது.

வெளிநாடு செல்லும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக இதைப் படித்துணர வேண்டியது அவசியம்.!

Monday, August 2, 2010

ஆனந்தம்.........பரமானந்தம். _ திரு சுகி சிவம்


நேற்று ஈரோடு புத்தகத் திருவிழா முழுவதுமாகக் களை கட்டியிருந்தது. சொல்லின் செல்வர் திரு சுகி சிவம் அவர்களின் பேச்சு, அத்துனை உள்ளங்களையும் கட்டி இழுத்து வைத்திருந்தது என்றால் அது மிகையாகாது. அரங்கு நிறைந்த காட்சியாக மட்டுமல்லாமல், ஆங்கிலத்தில், 'pin drop silence', என்பார்கள், அப்படி ஒரு அமைதியாக இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் புத்தகம் வாங்கிப் படிப்பவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போய்க்கொண்டிருப்பதற்கு, இதுவே ஒரு சான்று. காரணம் அரங்கில் இருந்த பெரும்பாலானவர்களின் கைகளில் சில புத்தகங்களாவது இருந்தது.

ஐயா சுகி சிவம் அவர்கள் கூறியது போல, வெளிநாடுகளில் கொடுப்பது போன்ற அங்கீகாரம் நம் ஊர்களில் சமூகச் சேவை ஆர்வலர்களுக்கு வழங்கப் படுவதில்லை என்பதும் வருந்தக் கூடிய விசயம்தான். திரு ஸ்டாலின் குணசேகரன் அவர்களின் அருமையான 'விடுதலை வேள்வி' எனும் புத்தகங்களை அடியேனும் ஓரளவிற்குப் படித்திருக்கிறேன். அதற்குப் பின்னால் இத்துனை பெரிய உழைப்பு இருப்பது நேற்றுதான் தெரிந்தது. உயர்ந்த சேவைக்கு உரிய அங்கீகாரம்தான், மற்றவர்களையும் இத்தகையச் சேவைகளுக்கு ஊக்குவிக்கக் கூடியது என்பதுதானே நிதர்சனம்.

திரு. சுகி சிவம் அவர்கள் ஆனந்தம்....பரமானந்தம் எனும் தலைப்பில் வெகு அழகாக , கோர்வையாகப் பேசி அரங்கையே அந்த 1 1/2 மணித் துளிகள் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

நம் ஊரில் 'பூப்பு நன்னீராட்டு விழா' என்ற ஒரு விழா, பெண் குழந்தைகள் பூப்படைவதை, ஊருக்கேத் தம்பட்டம் அடிக்கும் வகையில், பெரிய திருமண மண்டபத்தில் 500 முதல் 1000 பேரைக் கூடத் திரட்டி, அந்த' திரட்டி' என்கிறச் சடங்கைச் செய்வார்கள். அதற்கு அவர் சாட்டையடியாக, தினந்தோறும் பூ பூக்கிறது, காய் காய்க்கிறது _ இதிலென்ன விசேஷமிருக்கிறது? அப்படித்தான் பெண்களும் அந்தந்த வயதில் பருவமடைவது இயற்கை. இதற்கு ஒரு விழா அனாவசியமானது என்று நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய ஒரு செய்தியைச் சொன்னார்.

அடுத்து, வாழ்க்கை என்பது நாம் பலரும் நினைத்துக் கொண்டிருப்பது போல, வெறும் சம்பவங்களால் ஆனது அல்ல. சம்பவங்கள் பற்றிய அனுபவங்களால் ஆனது என்ற ஆழ்ந்த சிந்தனைக்குரிய விஷயத்தை முன்னிறுத்தி அதற்கு அழகான விளக்கங்களும் அளித்தார்.

வாழ்க்கை ஒரு பயணம் என்றால் அது எதை நோக்கியது? மயானம் அல்லது மரணத்தை நோக்கித்தான் என்றாலும், அது எப்படி ஆரம்பித்ததோ அப்படித்தானே முடிய வேண்டும். அதாவது பிறப்பு என்பது ஆண், பெண் என்ற இரு உயிர்களின், [ அது மனிதனோ அல்லது மிருகமோ, பறவைகளோ எதுவாகவும் இருக்கலாம்] இன்பத்தின் உச்சத்தின் சங்கமம் தான். இப்படி பேரானந்தத்தில் ஜனித்த அந்த உயிர் பரமானந்தத்தில் தானே முடிய வேண்டும், துக்கத்தில் முடிந்தால் அது எப்படி சரியாகும்? என்ற பெரும் தத்துவத்தையும் விளக்கினார்.

'உடல்', என்கிற அருமையான கருவி, மகிழ்ச்சிக்காக அளிக்கப்பட்டதாகும். நல்லதோர் வீணை.இந்தக் கருவியை சரியான முறையில் பயன்படுத்தினால் மகிழ்ச்சிக்கு உத்திரவாதம்.

மேற்கோள்களை நம்பி அறிவை வளர்த்துக் கொள்வது முட்டாள்தனத்தின் உச்சமாம்!

தன் உடலை நேசிப்பது மட்டுமே ஆரோக்கியமாக வாழ்வதற்குரிய சரியான அணுகுமுறை. நோயின்றி இருப்பது மட்டுமே ஆரோக்கியமல்ல. தூங்கி எழும் போது, ஒரு குழந்தையைப் போல துள்ளிக் கொண்டு, ஆனந்தமாக எழுந்திருக்க முடிந்தால் அதுவே ஆரோக்கியமான நோயற்ற நிலை என்று அர்த்தமாம்.

மதம் என்பது, ஒரு எல்லையில் நின்று விடும்.ஆன்மீகம் அப்படியல்ல .மதம் நெடுஞ்சாலை போன்றது.கடந்து செல்வதற்கு மட்டுமே பயன் படுத்தப்பட வேண்டியது. குடியிருப்பதற்காக அல்ல. ஆகவே மதம் என்னும் பெயரால் மூட நம்பிக்கைகளை தூக்கி எறிதல் வேண்டும்.

மனம் எப்படி உருவாகிறது? சிறு வயது முதல் நாம் பார்த்த, கேட்ட சொற்கள், செயல்கள் ஆகியவற்றின் பதிவுகளே பிற்காலத்தில் ஆனந்தம், துக்கம் என்பதாக வெளிப்படுகிறது. இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியடைவதைவிட்டு, இல்லாததை எண்ணி ஏங்குவதுதான் துக்கத்திற்கு காரணமாகிவிடுகிறது.

மனதை நிகழ்காலத்தில் நிற்க வைத்தால் மட்டுமே, மகிழ்ச்சியாக இருக்க முடியும். இறந்த காலத்தையோ, எதிர் காலத்தையோ எண்ணிக் கொண்டு நிகழ் கால நிம்மதியை இழக்கக் கூடாது.

முல்லா கதையின் மூலமாக நகைச்சுவையாக, கழுதைகளோடு ஒத்துப் போனால், பிரச்சனையில்லாமல் அமைதியாக வாழ முடியும், என்றார். யாரையும், யாரும் மாற்ற முடியாது. அவரவர் பாரம்பரிய முறையில் ஒவ்வொருவரும் வளர்ந்துள்ளதால் அதனை மாற்றியமைப்பது, எளிதல்ல. அப்படியே ஏற்றுக் கொள்வதே எளிதானதாகும்.

மனதை அடக்கி ஆள நினைப்பதும் தவறானதாகும். மனதை அடக்க நினைப்பதைவிட கடக்க வேண்டியதே அவசியமாகும்.

மனதை, அறிவை பயன் படுத்தி ஆனந்தமாக வாழ்வதே சிறந்த வாழ்வாகும்.

ஆனந்தத்தில் பிறந்து, பேரானந்தத்தை அடைவது விழிப்பு நிலை _ AWARENESS அனைத்திலும் விழிப்பு நிலை அதுவே ஆனந்த நிலை!!!!!!!


மழையின் கீதம் _ கலீல் ஜிப்ரான்


நான் சொர்க்கத்திலிருந்து கடவுளால் துளிக்கப்பட்ட,
புள்ளியிட்ட வெள்ளி நூல்களாவேன்.
இயற்கை பிறகு நிலத்தையும், பள்ளத்தாக்கையும்
அணி செய்வதற்காக என்னை எடுத்துச் செல்கிறது.

நான் வைகறையின் மகளால்
தோட்டத்திற்கு அணி சேர்த்து
அழகூட்டுவதற்காக, இஸ்தாரின்
மகுடத்திலிருந்து பறிக்கப்பட்ட
அழகான முத்தாவேன்.

நான் அழும்போது, குன்றுகள் சிரிக்கின்றது.
நான் பணிவுடன் இருக்கும்போது, அந்த
மலர்கள் கொண்டாடுகின்றன.
நான் சிரம் தாழ்த்தும் போது, அனைத்துப்
பொருட்களும் பூரிப்படைகின்றன.

நிலமும் சிறு முகிலும் காதலர்கள்
அவர்களிடையில் நான் ஒரு
கருணையின் தூதுவன் ஆவேன்.
நான் ஒருவரின் தாகம் தணிக்கிறேன்
நான் மற்றவரின் பிணியைப் போக்குகிறேன்.

இடியின் குரல் என் வருகையை தெரிவிக்கின்றது.
வானவில் என் செய்கையை அறிவிக்கின்றது.
நான் பித்துப் பிடித்த மூலங்களின்
பாதத்தில் புறப்பட்டு, எழுச்சியுற்ற
மரணச் சிறகுகளின் கீழ் முடிவுறும்
உலக வாழ்வைப் போன்றவன்.

நான் கடலின் இதயத்திலிருந்து
மேலெழும்பி, தென்றலுடன் உயரப் பறக்கிறேன்.
என் தேவை உள்ள நிலத்தைக் கண்டால்,
நான் கீழே சென்று மலர்களையும்
மரங்களையும், இலட்சக்கணக்கான,
சிறு வழிகளில் ஆரத் தழுவிக் கொள்கிறேன்.

நான் என்னுடைய மென்மையான விரல்களினால்
சன்னல்களை சாந்தமாகத் தீண்டுகிறேன்.
மற்றும் என்னுடைய அறிவிப்பே,
வரவேற்பு கீதமாகும்.அனைவரும் அதனைக்
கேட்கலாம், ஆனால் உணர்ச்சிமிக்கவரே
புரிந்து கொள்ள முடியும்.

காற்றில் உள்ள வெப்பமே என்னை பிரசவிக்கிறது.
ஆனால் அதன் கைமாறாக நான் அதைக் கொல்கிறேன்.

பெண் ஆணிடமிருந்து எடுத்துக் கொண்ட
சக்தியைக் கொண்டே அவனை
வெற்றி கொள்வது போல.

நான்தான் கடலின் ஆழ்ந்த மூச்சாகும்;
நிலத்தின் நகைப்பாகும்;
சொர்க்கத்தின் கண்ணீராகும்.

அதனால் காதலுடனே _

ஆழமான கடலின் பாசத்தின் பெருமூச்சாவேன்: வண்ணமயமான நிலத்தின் ஆன்மாவின் நகைப்பு: சொர்க்கத்தின் நினைவுகளின் கண்ணீர்.