Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Thursday, November 11, 2021

கணிப்பொழில்

 


 

மையக்கருத்தாகக்கொண்ட பாடல் :

குறுந்தொகை 41

 அணிலாடு முன்றிலார் 

 

இன்னும் எவ்வளவு நேரம்தான் இப்படி இந்த அமராவதி ஆத்தங்கரையே கதின்னு கடக்கப்போற கணிப்பொழில்?

கணி ..  கணி .. உன்னைத்தானடி கூப்பிட்டிட்டிருக்கேன்..  என்னதான் ஆச்சுடி உனக்கு. கொஞ்ச நாளா நானும் கவனிச்சிக்கிட்டு இருக்கேன். அடிக்கடி இங்கன வந்து உக்காந்துக்கிட்டு இந்த ஆறையே வச்ச கண்ணு வாங்காம யாரையோ எதிர்பார்த்து காத்துக்கிட்டு இருக்கிற மாதிரி பார்த்துக்கிட்டு உட்கார்ந்திருக்கியே .. என்னதான் ஆச்சுடி உனக்கு?

விவரம் தெரிந்த நாளிலிருந்து அன்றாடம் பார்த்துப் பழகிக்கொண்டிருக்கும்  கணிப்பொழில் ஒரு நாளும் இப்படி பித்துப் பிடித்தவள் போல இருந்தாளில்லை. குழி விழுந்த கண்களும், கருவளையங்களும், பொலிவிழந்த தேகமும் பல நாட்களாக அவள் சரியான உணவும், உறக்கமும் இல்லாமல் இருக்கிறாள் என்பதைக் காட்டினாலும், இப்படி மௌனமாக, வெறித்த பார்வையோடு இருப்பவளை காணச்சகிக்கவில்லை அவளுக்கு.

கிட்டத்தட்ட 10 நாட்கள் ஆகிவிட்டன. மயில்விழி சற்றே அச்சத்தில் குழப்பமடைந்தாள். இதற்கு மேலும் இந்த விசயத்தை கணிப்பொழிலின் பெற்றோரிடம் சொல்லாமல் மறைப்பது சரியல்ல என்று புரிந்தது. தோழிகள் இருவரும், கைத்தறி மற்றும் நெசவுத் தொழில்நுட்பம் ( Handloom and textile technology) பொறியியல் கல்வி படிப்பவர்கள். கல்விசார் திட்டப்பணி ஆதாரத்திற்காக, கரூர் கைத்தறி நெசவுத் தொழிலகங்களுக்கு 3 மாத பயிலரங்கிற்காக வந்துள்ளனர். முதல் ஒரு மாதம், அந்த ஞாயிறன்று ஊரைச் சுற்றிப்பார்க்க கிளம்பியவர்கள், அமராவதி ஆற்றிற்கு வரும்வரை எந்தப் பிரச்சனையும் இல்லாமல்தான் பயிற்சி வகுப்பில் கவனமாக இருந்தனர். போகப்போக சரியாகிவிடும் என்று இதனை சாதாரணமாக எடுத்துக்கொண்டது சரியான முடிவு அல்ல என்பதை சற்று தாமதமாகத்தான் உணர ஆரம்பித்திருக்கிறாள் மயில்விழி.

கொங்குநாடு என்ற அமைப்பு பொ.ச.மு. 100ஆம் ஆண்டில் ஆய் மன்னர்களால் தோற்றுவிக்கப்பட்டதாக கிரேக்க ஆவணங்கள் குறிப்பிடுவதையும், அகண்ட தமிழகமான இந்த நிலப்பகுதி பல லட்சக்கணக்கான ஆண்டுகள் பழமைவாய்ந்தது என்பதிலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவள் கணிப்பொழில். பனியுகம் 100,000 ஆண்டுகட்கு ஒருமுறை தோன்றி உலகக் கடல்கள் வற்றிவிடுவதால், கடல் மட்டம் குறைந்து போயிருக்கின்றன. பல்லாயிரம் ஆண்டுகட்டுப் பின்னர் அந்த பனிக்குன்றுகள் உருகி மீண்டும் கடல் நீர் மட்டம் உயர்வதும் பூமியில் பன்முறை நிகழ்ந்துள்ளன. இறுதி 20,000 ஆண்டுகளில் அவ்விதம் நிகழ்ந்ததில் கடல் நீர்மட்டம் சுமார் 1000 அடிவரை குறைந்து மீண்டும் உயர்ந்திருக்கும் வகையில் கடற்கரைப் பகுதிகளில் பல தளங்கள் வெளியில் தெரிந்தும்,  நீர் உருகி  கடல் மட்டம் உயர்ந்தபோது அவை கடலுக்குள் மூழ்கியும் இருந்திருக்கின்றன என்பது போன்ற லெமூரியக்கண்ட கோட்பாடுகளிலும் அதீத நம்பிக்கை கொண்டவள் நம் கதையின் நாயகி கணிப்பொழில். தன்னுடைய பெரும்பான்மையான ஓய்வு நேரங்களை இந்த ஆய்விலேயே கரைத்திருப்பவள். தமிழ் ஆசிரியரான தம் தந்தையின் மூலமாக பண்டைய தமிழர் வாழ்வியல் குறித்து அறிய ஆரம்பித்தபோது ஏற்பட்ட ஆர்வம் இன்று இதுவரை தொடர்கிறது.

அன்று வழக்கம் போல பள்ளிக் குழந்தையாக துள்ளிக் குதித்துக்கொண்டு கேலியும் கிண்டலுமாக பேசிக்கொண்டு வந்தவள், ஆற்றங்கரையை நெருங்கும்போதே மெல்ல அமைதியாகி ஆழ்ந்த யோசனைக்கு சென்றதாகத் தெரிந்தது. கொஞ்ச நேரத்திலேயே ஏதோ நினைவுகளுக்குள் ஆழ்ந்தவளாக ஆற்றையே வெறித்துப் பார்க்க ஆரம்பித்திருந்தாள். முதலில் விளையாட்டு காட்டுவதாகத்தான் நினைத்தாள். ஆனால் போகப்போக அது விளையாட்டு அல்ல என்று புரிந்துகொண்டாள். மல்லுகட்டி அவளை விடுதிக்கு அழைத்து வருவதே பெரும்பாடாகிவிட்டது. இரண்டு நாட்கள் அமைதியாக இருந்தவள் மீண்டும் அவளைக் கட்டாயப்படுத்தி ஆற்றுக்கு அழைத்து வந்துவிட்டாள். வார இறுதிவரை பொறுத்திருக்கமாட்டாமல் பகல் நேர வகுப்பு முடிந்த கையுடன் கிளம்பி வந்துவிடுகிறாள். ஆற்றை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவளிடம் ஒரு முன்னேற்றம். அங்கும், இங்கும் எதையோத் தேடவும் ஆரம்பித்திருந்தாள். ஏதோ முனகலுக்கு இடையே ‘உள்ளி விழவு’ என் கண்ணாளன் உறந்தையரசு” போன்ற வார்த்தைகள் காதில் விழுந்தாலும் எதைத் தேடிக்கொண்டிருக்கிறாள் என்பது அவளுக்கேத் தெரியுமா, இல்லையா என்பதும் புரியவில்லை. கடந்த இரண்டு நாட்களாக வகுப்பிற்கும் வர மறுத்து இருட்டிய பிறகும் வரமாட்டேன் என்று அடம் பிடிக்கவும்தான் நிலைமையின் தீவிரம் மயில்விழிக்குப் புரிந்தது.

சற்றும் தாமதிக்காமல் கணிப்பொழிலின் அம்மாவின் கைபேசி எண்ணில் அழைத்தாள். அதிர்ச்சி அலைகளின் சலசலப்பு சற்று நேரம் இருந்தது. பின் மீண்டும் விவரங்களைத் தெளிவாகக் கேட்டுக்கொண்டவர், உடனே கிளம்பி அவளையும் அழைத்துக்கொண்டு ஊருக்குப் புறப்பட்டு வருமாறு கேட்டுக்கொண்டார்.

ஆனால் அது அவ்வளவு எளிதான காரியமாக இல்லை. எவ்வளவோ சொல்லியும் அவள் கேட்பதாக இல்லை. தான் தவறவிட்டதை அடையத் துடிப்பவளாகக் காட்சியளித்தாள். வேறு எந்தப் பேச்சும் அவள் செவிகளுக்கு எட்டவில்லை. உள்ளதை உள்ளவாறு அவள் அன்னையிடம் கூறியதால் அவர்களும் சற்றும் தாமதியாமல் உடனே கிளம்பி வந்துவிட்டார்கள். பெற்றோரைப் பார்த்த பின்பும் எந்த சலனமும் இல்லை அவளிடத்தில். இயன்றவரை பேசியும் பார்த்தார்கள். சென்னைக்கு அழைத்துச் சென்று அடுத்து ஆகவேண்டியதைப் பார்க்கலாம் என்றாலும் அதற்கான ஒத்துழைப்பு இல்லை அவளிடம். கட்டாயப்படுத்தி இழுத்துச் செல்ல முயன்றபோது அவளிடம் ஏற்பட்ட பதற்றம் அச்சமூட்டியதால் அங்கேயே ஒரு மனநல மருத்துவரைப் பார்க்க முடிவெடுக்கும் நிலை ஏற்பட்டது.

அடுத்த இரண்டு நாட்கள் பரிசோதனை செய்தும் எந்த முன்னேற்றமும் இல்லை.  ஆற்றங்கரையோரம் அழைத்து வந்து ஆலோசனை நடத்தினால் ஏதாவது கண்டுபிடிக்க முடியலாம் என்று மருத்துவர் ஆலோசனையின் பேரில் மீண்டும் அமராவதி கரைக்கே அழைத்து வரப்பட்டாள். வந்த நொடியிலேயே அத்தனை பொலிவு அந்த முகத்தில்.

ஆற்றங்கரையில் அன்று வழக்கத்திற்கு மாறாக கூட்டம் சற்று அதிகமாக இருந்தது. காலையிலிருந்து தொல்லியல் துறையினர் படையெடுப்பு அந்த சுற்று வட்டாரத்தையே பரபரப்பாக்கிக் கொண்டிருந்தது. அருகில் இருந்த குடியிருப்பில், சற்று தொலைவில் கிணறு வெட்டத் தோண்டியபோது நடுகல் போன்று ஏதோ முக்கியமான தொல்பொருள் ஆதாரம் கிடைத்திருப்பதாகத் தகவல் கிடைத்ததால் மக்கள் அங்கு கூடியிருந்தனர். பழந்தமிழர்தம் பெருமையின் ஆதாரங்களைக் கண்டு களிப்பதில் மக்களுக்கு நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கும் இக்காலகட்டத்தில் அந்த இடத்தில் இன்னுமொரு அதிசயமான சம்பவமும் நிகழப்போவதை எவரும் அறிந்திலர்.

தலைவர் மதியழகனின் கீழ் இயங்கும் இக்குழு சமீபத்தில் தமிழ்நாட்டில் முக்கியமான பல தொல்லியல் தளங்களில் பல ஆதாரங்களைக் கண்டுபிடித்து வெளியிட்டவர்கள். அதீதமான ஆர்வமும், கடினமான உழைப்பும் கொண்ட அருட்செல்வன், தமக்கு வலதுகரமாகச் செயல்படுவதாலேயே  தன்னுடைய பணிகள் இத்துணை சிறப்பாக அமைகிறது என்று மதியழகன் முழுமையாக நம்பக்கூடியவர். அருட்செல்வன் எதையும் தகுந்த ஆதாரமில்லாமல் எளிதாக நம்பக்கூடியவன் இல்லை என்பதோடு, அந்த ஆதாரங்களைப் பெறுவதிலும் விடாமுயற்சியுடன் செயல்படுபவன். உணவு, உறக்கம் என எதையும் பொருட்படுத்தாமல் கடமையே கண்ணாக இருப்பவன். இந்த இடத்தினுள் நுழைந்தது முதல் ஏதோ ஒரு சக்தியின் பிடியில் சிக்குண்டது போன்று இறுக்கமாக இருந்தான். கண்கள் அலைபாய்ந்தவாறு எதையோ தேடிக்கொண்டே இருந்ததையும் கவனிக்கத்தான் செய்தார் என்றாலும் அதைப்பற்றி கேட்டு அவனை தொந்திரவு செய்ய விரும்பவில்லை. ஏதோ ஒன்றில் இலயித்திருக்கும் மனதை இழுத்துப் பிடித்து இனிமையைக் கெடுக்க விரும்பவில்லை. ஆனாலும் அருட்செல்வன் பெருங்குழப்பத்தில் இருக்கிறானோ, என்ன காரணமாக இருக்கும் என்ற ஐயமும் எழுந்தது. பணிகள் ஒரு புறம் தொடர்ந்தவாறு இருந்தாலும் அருட்செல்வன் மட்டும் குழுவோடு சேராமல் தனிப்பட்ட முறையில் எதையோ தேடிக்கொண்டிருப்பது போல இருந்தது.

அப்போதுதான் அது நடந்தது. தென்கிழக்கு மூலையிலிருந்து, “சார், இங்கு ஒரு கல்வெட்டு இருக்கிறது” என்று குழுவில் ஒருவர் கண்டுபிடித்துச் சொல்ல, எதிர்புறம் தேடிக்கொண்டிருந்த அருட்செல்வன், “என்ன.. கல்வெட்டா, கிடைத்துவிட்டதா.. எங்கே .. எங்கே என்று உருண்டு புரண்டு எழுந்து ஓடி வந்தது அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. மண்ணில் புதைந்து கிடந்த கல்வெட்டை எடுக்க முயன்றவர்களைத் தடுத்து நிறுத்திவிட்டு தானே அதைத் தோண்டி எடுக்க முயன்றதோடு அதன் அடியில் ஏதோ ஒரு பொருளை வைத்தவன் போல பரபரப்பாகத் தேடிக்கொண்டிருந்தான். அவனிடம் இருந்த வேகமும் கண்ணில் மின்னும் ஆர்வமும் அனைவரின் கைகளையும் கட்டிப்போடத்தான் செய்தன.

ஒரு மணி நேரத்தேடலின் முடிவில், “ஆகா, இதோ கிடைத்துவிட்டதே .. என் உயிர் இனி என்னிடம் வந்துவிடும்” என்ற அவனுடைய அலறல் அந்த இடத்தையே அதிரச் செய்தது. அவ்வளவு முக்கியமாக அவன் தேடியடைந்த அந்த கருவூலம் ...

மாம்பிஞ்சுக் கொலுசு, பவளத்தாலி, காலாழி, காப்பு, தோடு, திருகுபூ, சூடாமணி போன்றவற்றோடு செண்பகப் பூஞ்சோலை சித்திரமாக பொறிக்கப்பட்ட மிகப்பெரிய சூதுபவளமணி என பெண்களின் அணிகலன்கள் அனைத்தும் ஒரு மண் பானையில் பாதுகாக்கப்பட்டிருந்தன. அதை எடுத்து அப்படியே அணைத்துக்கொண்டவன், அந்த சூதுபவள மணியை எடுத்து, அன்புடன் வருடியவன், “இதோ என் கணிப்பொழிலின் அணிகலன்கள்” (கணிப்பொழில் என்பதன் பொருள் செண்பகப் பூந்தோட்டம்) என்று புளங்காகிதமடைந்தான்.

இந்த சலசலப்பில் தன் பெயர் ஒலிக்கக் கேட்ட கணிப்பொழிலும் அவள்தம் பெற்றோரும் விரைந்து வந்தனர். அப்போதுதான் யாரும் எதிர்பார்க்காத அந்த நிகழ்வு நடந்தது. கணிப்பொழில் வேகமாக வந்தவள், அருட்செல்வனைப் பார்த்த அந்த நொடியில்  சற்றும் தயங்காமல், வேகமாகச் சென்று, “உறந்தையரசு” என்று உள்ளம் உருக ஒரு வித்தியாசமான பெயரால் அழைத்தவாறு ஓடிச் சென்று அருட்செல்வனை அணைத்துக்கொண்டவள்.. ஆயிரமாயிரம் ஆண்டுகளாகக் காத்திருந்து தேக்கி வைத்திருந்த அத்துணை காதலையும் முத்த மழையாய்ப் பொழிந்து தள்ளிவிட்டாள்.. அதிர்ச்சியில் உறைந்து நிற்பவர்களை இருவரும் கண்டுகொள்ளவேயில்லை..  இதைவிட ஆச்சரியம், அந்த கல்வெட்டில்  பொறிக்கப்பட்டிருந்த பாடலை அழகாக இசைத்தவன், அன்பு காதலிக்கு உள்ளி விழவில் அளித்த பரிசாகக் கூற கேட்டவர்கள், இப்படிக்கூட நடக்குமா என்ற வியப்பில் வாய் பிளந்து நின்றனர் ...

சிரீ சொர்ணமெனும் மடவாள் அன்னமென

நடைபயில மாவீரனிவன் மலரம்பு தொடுத்து

மங்கையிவளின் கொடியிடை நோக துவண்டவளை

கணிப்பொழிலாம் கன்னியிவளை உள்ளி விழவில்

தொட்டணைத்து தேற்றும் உறந்தையரசு.

 

கழுமலத்தில் சேரன் படைத்தலைவனாகிய கணையன் என்பவனை பெரும்பூட்சென்னியெனும் சோழன் வென்றபோது, அப்போரில் காலாட்படைத் தலைவனாக இருந்த உறந்தையரசு வீரமரணம் அடைந்ததால் அவனுடைய பத்தினி கணிப்பொழில் உடன்கட்டை ஏறியதாக அந்த நடுகல் வாசகம் இவர்களின் வரலாறைக் கூறிக்கொண்டிருந்தது.  சேர கொங்கர்தம் பாரம்பரிய ஆட்டமான சலங்கை கட்டி ஆடும் ஆட்டத்தின் எச்சங்கள் பல கதைகள் புகன்றன.

 

அறிவியலுக்கு அப்பாற்பட்ட இந்த சம்பவத்தின் எதிர்வினைகள் எப்படியானாலும், இந்த இணைகள் எத்தனைப் பிறவிகளாக இப்படி சேர்ந்திருக்கிறார்களோ என்ற சிந்தனையே அனைவருக்கும் மேலிட்டது!

முற்றும்

 


 

ஊழ்வினை

 

 

ஊழ்வினை

 

சிறுகதை

கொரோனாவின் கொடுஞ்சீற்றத்தால் ஊரடங்கில் முடங்கிக்கிடக்கும் இலக்கியவாதிகள் செவிக்கும், அறிவுக்கும் ஏற்பட்ட பசியைப் போக்கும் வகையில் இணையக் கூட்டங்களை தொடர்ந்து நடத்திக்கொண்டிருந்தனர். இன்று நான்காவது நாளாக நடக்கப்போகும் கூட்டத்தில் சிலம்பின் சீர்வளர் செல்வர் எனும் பட்டம் பெற்ற சடகோபனின் பேச்சைக் கேட்க ஆவலாகக் காத்திருக்கிறான் மதிமாறன். மனைவி சந்திரமதியையும் எப்படியும் இதில் ஈடுபடுத்தவும் ஆவல் கொண்டாலும், ஆகச்சிறந்த சொற்பொழிவாளரும்,  பட்டிமன்ற பேச்சாளருமான அவளுக்கு சமீப காலமாக அப்படி என்னதான் ஆனது என்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு தனக்குள்ளேயே முடங்கிக்கிடக்கிறாள். என்ன காரணமாக இருக்கும் என்று அறிய அவன் முயன்றதெல்லாம் வீணாகத்தான் போனது. நாளுக்கு நாள் அவளுடைய நிலை மோசமாகிக்கொண்டே போனது. மன அழுத்தத்தின் விளிம்பில் டிப்ரஷனில் போய்விடுவாளோ என்றுகூட அஞ்ச வேண்டியுள்ளது. ஒரு வேளை ஊரடங்கில் வீட்டிற்குள்ளேயே முடங்கிக்கிடப்பதால் வந்த வினையோ என்றால் அதற்கும் வாய்ப்பு குறைவு. பொதுவாகவே அவள் பயணங்களை விரும்பக்கூடியவள் இல்லை. எம்.எட் (M.Ed) முடித்த பின்புகூட பணிக்குச் செல்ல விரும்பவில்லை. அவ்வப்போது பட்டிமன்ற நிகழ்விற்கு அழைப்பு வரும்போது மட்டும் கலந்து கொள்வாள். ஆனால் கொரோனா தொற்று எந்த வகையில் இவளை இந்த அளவிற்கு பாதித்துள்ளது என்று தெரியவில்லை. சாப்பாடு, தூக்கம், வீட்டு வேலைகள் என அனைத்திலுமிருந்து மொத்தமாக முடக்கிப் போட்டுவிட்டதே. கவுன்சலிங், யோகா பயிற்சி, தியானம், மருந்து என எதுவும் பயனளிக்கவில்லை.

எப்படியோ கட்டாயப்படுத்தி அழைத்து வந்து உட்கார வைத்தாகிவிட்டது. சிலப்பதிகாரம், அதுவும் வழக்குரை காதை என்றால் சலிக்காமல் கேட்டுக்கொண்டே, பார்த்துக்கொண்டே இருப்பாள். வந்தவள் அசையாத பதுமையாக உட்கார்ந்திருக்கிறாள். கணீர் என தன் வெண்கலக் குரலில் பொழிய ஆரம்பித்துவிட்டார் சடகோபன். அவ்வப்போது சந்திரமதியை திரும்பிப் பார்த்தவாறு இருந்த மதிமாறானால் அவளிடம் கொஞ்சம், கொஞ்சமாக ஏற்படும் மாற்றங்களைக் கணிக்க முடிந்தது.

சிலப்பதிகாரம்,  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்களின் வாழ்க்கை நெறிமுறைகளை அவர்தம் மேம்பட்ட கலாச்சாரத்தின் அடிப்படையில் தெளிவுற விளக்கும் வரலாற்று நூல்.  இளங்கோவடிகள்,  நற்பண்போடும், மனித குலத்திற்கு பயன்படும் நன்னெறியோடும்,
உயிரையும் துச்சமாக மதித்தாலும் நீதிக்குப் போராடும் உணர்வோடும் வாழ்வரை இந்த உலகம் தெய்வமாகக் கொண்டாடும்” எனும் சத்தியத்தை கண்ணகியின் பாத்திரம் மூலம் உணர்த்தி இருக்கிறார். கற்பனையினூடே பல சத்தியங்களுக்கும் ஆதாரமாக இருப்பது சிலப்பதிகாரம். தமிழர்களின் பண்பாட்டுப் பெட்டகமாகத் திகழும் சிலப்பதிகாரம் பெருங்காப்பியத்திற்குரிய தனிப்பெருமை வாய்ந்ததாகும். அப்படிப்பட்ட சிலப்பதிகாரத்தின் கருப் பொருள்களாக விளங்குபவை, அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்,
 உரைச்சால் பத்தினியை உயர்ந்தோரேத்துவர், ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்ற மூன்றுமே. அந்த வகையில் தொடர்ந்து கொண்டிருந்த சடகோபனின் அந்த சொற்பொழிவின் அடுத்தொரு வார்த்தையேதும் சந்திரமதியின் செவிகளில் விழவேயில்லை! ஆம் நினைவுகள் எங்கோ பின்னோக்கிச் சென்று கொண்டிருந்தன.

மனித ஆற்றலின் சக்தியைத் திருடும் களவாணி அந்த மனிதனுக்குள்ளேயே உட்கார்ந்துகொண்டு ஆட்சி செய்வதை அந்த மனிதனே உணரத் தவறுவதும் இயற்கையாக நடக்கக்கூடியதுதான். ஒரு சில விசயங்களை நம் மனது திட்டவட்டமாக ஒரு முடிவு எடுத்துவைத்துக் கொள்கிறது. அதை உள் மனது ஆழமாக நம்பிக் கொண்டு, இப்படித்தான் நடந்திருக்கும் என்று உறுதியான முடிவும் எடுத்துக் கொள்கிறது. ஆனால் பிற்காலங்களில் அது உண்மை அல்ல என்று தெரிய வரும்போது, அதாவது அறிவாற்றலின் மீதிருக்கும் அந்தத் திரை விலகும் நேரம் காலங்கடந்த நிலை ஏற்பட்டு விடுகிறது. மனிதாபிமானம் என்பதற்கான பொருள் இன்றைய காலகட்டங்களில் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கிறது என்பதும் உண்மை.

பழைய நினைவுகள் புதிய வேதனைகளைச் சேர்த்து பெருங்குழப்பத்தை ஏற்படுத்த, சந்திரமதியின் பக்கமிருந்து லேசான ஒரு விசும்பலாக வெளிவந்தது. தவித்துப்போன மதிமாறன் அவளருகில் சென்று பதட்டத்துடன் அவள் கரங்களை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டவன், அவள் தலையை மெல்லக் கோதியவாறு தன் தோள்களின் மீது சாய்த்து அணைத்துக் கொண்டான். இணையக் கூட்டத்தின் வீடியோ, ஆடியோ என இரண்டையும் மியூட்டில் போட்டு வைத்தது நல்லதாகப் போய்விட்டது என்று நினைத்துக்கொண்டான். என்ன ஆயிற்று இவளுக்கு? அப்படி என்ன பேசினார் சடகோபன் இறுதியாக என்று யோசித்தான்.

சிலப்பதிகாரக் கதை புனைந்துரை அன்று, உண்மையில் நிகழ்ந்த வரலாறு என்ற ஆழ்ந்த நம்பிக்கையும் கொண்டிருப்பவள் என்ற வகையில், ‘ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்ற சொல்லாடல் அவளை இந்த அளவிற்கு பாதித்திருக்கிறதா, அவை  அவள் தலைக்கு மேல் கூர்வாளாக வீற்றிருப்பது போன்று அவளுடைய உடல்மொழி உணர்த்துவதாகத் தோன்றியது. இருந்தாலும், இத்தனை ஆண்டுகளாக பூட்டி வைத்திருந்த மனம் திறந்து நன்றாக அழுது தீர்க்கட்டும், துன்பமெல்லாம் கரைந்து நீர்த்துப் போகட்டும் என்று காத்திருந்தான். அழுது ஓய்ந்து களைப்பால் கணவன் மடியில் கண்ணயர்ந்தவளை மெல்ல தலையணையில் சாய்த்து வைத்தான்.

மனசாட்சி என்பது நம் மனதின் ஒரு பகுதி. அவரவர்களின் செயல்பாடுகள்   சரியா அல்லது தவறா என்பதை மனசாட்சியே புரிய வைக்கிறது. ஒருவருக்கு குற்ற உணர்ச்சியை உணரச் செய்தால் அச்செயல் தவறு என்பதை அவர் உணர்கிறார். மனம் தெளிவான நிலையில் இருந்தால், அவர் எந்த தவறும் செய்யவில்லை என்பது அவருக்குத் தெரிவதால் அவர் குற்ற உணர்ச்சியை உணர்வதில்லை.

அரை மணி நேரம் கழித்து மெல்ல கண் விழித்தவள் வாய் திறக்கவும் முயன்றாள். அவள் மனதை பாதித்த அந்த விசயம் பற்றி அவள் சொன்னதைக் கேட்டபோது ஆச்சரியத்தில் மெய்சிலிர்த்தான் மதிமாறன். அந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் இருக்கலாம். இவ்வளவு நாட்களாக இந்த அளவிற்கு மனதை முள்ளாகக் குத்தும் இந்த சம்பவத்தை எப்படி கடந்து கொண்டிருக்கிறாள் என்று ஆச்சரியமாகவும் இருந்தது. நடந்த சில தினங்களில் எதுவுமே நடக்காதது போல அனைத்தையும் மறந்துவிட்டு இயல்பாக இவளால் மட்டும் எப்படி இப்படி இருக்க முடிகிறது என்று வியந்த காலமும் நினைவிற்கு வரத்தான் செய்தது.

இவர்கள் குடியிருக்கும் அடுக்கு மாடி குடியிருப்பின் காலியாக இருந்த எதிர் வீட்டிற்கு புதிதாக ஒரு குடும்பம் குடி வந்திருந்தனர். அதற்கு முன்பு இருந்த ஒரு தாத்தாவும், பாட்டியும் தங்கள் மகனுடன் வெளிநாட்டிற்கேச் சென்றுவிட திட்டமிட்டு வீட்டை இவர்களுக்கு விற்றுவிட்டு சென்றுவிட்டனர். ஒரு கணவன், மனைவி, கல்லூரிக்குச் செல்லும் ஒரு பெண், அவள் பாட்டி என சின்ன குடும்பம்தான். மிக அன்பாகப் பழகக்கூடியவர்களாக இருந்ததால் நிம்மதியாக நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால் சில நாட்களிலேயே அவர்கள் வீட்டில் அவ்வப்போது அந்தப் பாட்டியின் சத்தமும், மருமகளின் சத்தமும் கேட்க ஆரம்பித்தது. அவர்களிடம் விசாரித்தபோது, மோகன் என்ற அந்த குடும்பத் தலைவர், தன் தாய்க்கு அல்சைமர் எனும் ஞாபகமறதி வியாதி என்றும், தான் என்ன செய்கிறோம் என்பதையே மறந்துவிட்டு ஒரே செயலை திரும்பத் திரும்ப செய்வார்கள் என்றும் அதனால் வீட்டில் பிரச்சனை என்றும் கூறினார். இதனாலேயே இதற்கு முன்னால் இரண்டு வீடு மாற்ற வேண்டியதானதையும், அதனாலேயே இந்த முறை மிகவும் சிரமப்பட்டு சொந்த வீடு வாங்கிக்கொண்டு வந்ததாகவும் கூறினார். ஆரம்பத்தில் பரிதாபமாகத் தோன்றிய அவர்கள் நிலை 6 மாதத்திலேயே எரிச்சலூட்டுவதாக மாறிப்போனது. அந்தப் பாட்டி தன் வீடு எது என்பதையே மறந்துவிட்டு அடிக்கடி இவர்கள் வீடு திறந்திருக்கும் போதெல்லாம் உள்ளே வந்துவிடுவதும், நேராக கழிவறைக்குள் சென்று கையை அலம்பிக் கொண்டே இருப்பதும், என்று இப்படி ஏதாவது செய்ய ஆரம்பித்த பின்பு இவர்களுக்கும் சலிப்பு ஏற்பட ஆரம்பித்துள்ளது. இத்தனைக்கும் அவர்கள் கதவை பூட்டியேதான் வைத்திருந்தாலும் திறக்கும்போதெல்லாம் வந்துவிடுவார். முக்கியமாக கையில் ஏதோ ஒட்டிக்கொண்டது போல அசூசையாக உணர்வதுபோல முகத்தை வைத்துக்கொண்டு சோப்பை போட்டு கையை கழுவிக்கொண்டே இருப்பார். சந்திரமதி மெல்ல மெல்ல கோபம் கொள்ள ஆரம்பித்தபோதெல்லாம் மதிமாறன், ‘நம் வீட்டில் இப்படி ஒரு பெரியவர் இருந்தால் என்ன செய்ய முடியும், கொஞ்சம் பொறுத்துக்கொள்’ என்று சமாதானப்படுத்திக் கொண்டிருப்பான்.

அன்று ஏற்கனவே கணவனுடன் ஏதோ கருத்து வேறுபாட்டினால் மனக்குழப்பத்தில் சமையலும் செய்யாமல் இருந்த நேரத்தில் அந்தப் பாட்டி வழக்கம்போல் வீட்டிற்குள் வந்து கழிவறையைப் பயன்படுத்திவிட்டு, ஃபிளஷ் செய்யாமல் அப்படியே வந்திருக்கிறார். கோபத்தின் எல்லைக்கேச் சென்றுவிட்ட சந்திரமதி செய்த தகராறில் அவர்கள் வீட்டில் பெரும் பிரச்சனையாகி, அவருடைய மருமகளும் ஒரே பிடியாக, இதற்கு மேல் தன்னால் பொறுத்துக்கொள்ள இயலாது என்றும் அவரை முதியோர் இல்லத்தில் சேர்த்தியே ஆகவேண்டும், இல்லையென்றால் தான் அந்த வீட்டில் இருக்க முடியாது என்றும் பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்துள்ளார். இறுதியில் வேறு வழியில்லாமல் அவருடைய மகன் மோகன் தன் தாயை ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு வந்தார். ஆனால் மகனையும், பேத்தியையும்  மட்டும் மறக்க முடியாமல் புலம்பிக்கொண்டே இருந்த அந்தப் பாட்டி சரியாகச் சாப்பிடாமல், தூங்காமல் விரைவிலேயே அங்கேயே உயிரையும் இழந்துவிட்டார்.

ஆனால் சந்திரமதிக்கு அன்றிலிருந்து தான் ஏதோ பெரிய பாவம் செய்துவிட்டது போலவும், தன்னால்தான் அந்தப் பாட்டி முதியோர் இல்லம் செல்லவேண்டி வந்ததோடு, உயிரையும் இழந்துவிட்டார் என்று பெரிய குற்ற உணர்ச்சியை ஏற்படுத்திவிட்டது. நாளடைவில் மெல்ல மெல்ல மறந்துவிட்டு தன் குடும்பக் கடமைகளில் ஆழ்ந்துபோய் இருந்தாலும், இன்று இந்த கொரோனா தொற்று அனைத்தையும் மீண்டும் வெளியே கொண்டு வந்துவிட்டது. சுய நினைவின்றி கையை திரும்பத் திரும்ப கழுவிக்கொண்டே இருந்த அந்தப் பாட்டியை அவ்வளவு வெறுத்ததன் பயனே இன்று சுய நினைவோடு அடிக்கடி கையை கழுவிக்கொண்டே இருக்கிற நிலைமை வந்ததோ என்று தன்னையறியாமல் ஒரு அழுத்தம் அவளை பாதித்துள்ளதை ஒரு வழியாகப்  புரிந்து கொண்டதால் இனி அவளை எப்படியும் சமாதானம் செய்து பழைய நிலைக்குக் கொண்டு வந்துவிடலாம் என்ற நம்பிக்கையோடு அழைத்துச் சென்று படுக்க வைத்தான். ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதெல்லாம் கதைதான் என்று அவனைப்போலவே நாமும் நம்பத்தானே வேண்டும்? தவறே செய்யாதவர்கள் என்று இந்த உலகில் எவரும் இல்லை. வாழ்க்கையில் நாம் செய்யும் சில தவறுகள் மட்டுமே நம் குணாதிசயங்களை வரையறுப்பதில்லையே!

 

Saturday, January 4, 2020

The Man in the Mist - Agatha Christie




ஒரு காலத்தில், கல்லூரிக் காலங்களில் அகதா கிரிஸ்டி கதை என்றால் அப்படியொரு ஈர்ப்பு இருந்தது. கதாவின் நூற்றாண்டான இப்போது ஒரு சிறுகதையைப் படித்து மொழிபெயர்க்கலாம் என்றால் தற்காலக் கதைகளிலிருந்து இது எவ்வளவு வித்தியாசப்படுகிறது என்று தெரிகிறது ... துப்பறியும் சாம்பு மாதிரித் தெரிகிறது கொஞ்சம் .. 

மூடுபனி மனிதன் - The Man in the Mist

துப்பறிவாளர்கள், டாமியும், தப்பென்சும், சமீபத்தில் ஒரு முத்துமாலை களவாடப்பட்ட வழக்கில், தோல்வியைத் தழுவியிருந்தனர். அதுகூட பரவாயில்லை, உள்ளூர் காவல் அதிகாரி அந்தக் கயவனை கையும், களவுமாகப் பிடித்தும்விட்டதால் தங்களது துப்பறியும் தொழிலில் பின்னடைவு ஏற்பட்டதாக மிகுந்த வருத்தம் கொண்டவர்கள் அந்த வருத்தம் தீருவதற்காக  ஒரு விடுதியில் மதுபானம் அருந்திக் கொண்டிருந்தார்கள். அப்போதுதான் பல்ஜர் என்று அழைக்கப்பட்ட  மெர்வின் எஸ்கோர்ட், என்ற தெரிந்த நபர் ஒருவரைச் சந்தித்தனர்.. அவன் கில்டா கிளென் என்கிற ஒரு பிரபலமான நடிகையிடம் தொடர்பு கொண்டிருந்தவன். கில்டா கிளென் நல்ல அழகியானாலும் சற்று மந்த புத்தி உடையவள் என்ற அவளைப்பற்றிய கிசுகிசுப்பும் உண்டு. செல்வி கில்டா, டாமியின் தந்தை பிரவுன்  மாறுவேடத்தில் இருப்பதைக் கண்டு இவர் ஏன் இப்படி மாறு வேடத்தில் இருக்க வேண்டும் என்று குழப்பமடைந்தாள். இதை அறிந்த டாமி தன் தகப்பனின் துப்பறியும் திறமையைப் பற்றி  ஆதாரத்துடன் அவளிடம் பெருமையடித்துக் கொண்டிருந்தான். காவல் நிலையத்திற்குச் செல்வதற்காக பல்ஜரிடம் வழி கேட்டுக்கொண்டிருந்தாள் அவள். அவன் மார்கன் அவென்யூ பக்கம் செல்ல வேண்டும் என்று வழிகாட்டிய போது, கில்டா கிளென் அதிர்ச்சியடைந்தாள். ஆம், கொலை செய்யப்பட்ட ஒரு காவல்துறை பணியாளர், கேட்பாரற்றுக் கிடக்கும் அந்த இடத்தில் ஆவியாக அலைந்து கொண்டிருப்பதாகக் கூறப்படும் வதந்தியை முழுதாக நம்பிக் கொண்டிருக்கும் அவளைப் பார்த்து வேடிக்கையாகச் சிரித்தான் அவன். அந்த கேலிச் சிரிப்பு சங்கடப்படுத்த,  மெல்ல பேச்சை மாற்றும்முகமாக,  சற்று முன் அந்த விடுதியின் வெளியில் தன்னிடம் பேசிக்கொண்டிருந்த அந்த  லார்ட் லெக்கன்பரியைத்தான் தனக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறாள். பல்ஜரும் அவசரமாகக் கிளம்பத் தயாரான அந்த நேரத்தில்தான் டாமி கிளென்னிடமிருந்து, தனக்கு உதவி வேண்டுமென்ற செய்தி வருகிறது. வெள்ளை மாளிகை, மார்கன் அவென்யூவில் மாலை 6.10 மணிக்கு சந்திக்க வேண்டும் என்றது மேலும் அந்த குறிப்பு.
அந்த நேரத்தில், அலங்கோலமாக உடை உடுத்திய ஒரு வித்தியாசமான இளைஞன் ஒருவன் அந்த விடுதியினுள் ஆவேசமாக நுழைந்தான். இதனால் மேற்கொண்டு இது தொடர்பான பேச்சு தடைபட்டது. வந்தவன் டாமி மற்றும் தப்பென்சு அருகில் அமர்ந்தபடி, தன் பெயர் ஜேம்ஸ் ரெய்லி என்றும், தான் ஒரு அமைதிவாதக் கவிஞர் என்றும் தன்னை அறிமுகம் செய்து கொண்டான். கில்டா மீது தனக்கு அன்பும் அக்கறையும் இருந்தாலும், அவளுக்கு லார்ட் லெகன்பரியுடன் திருமணம்  நிச்சயம் ஆன பிறகு அவள் பின் சென்று தொல்லை கொடுப்பதில்லை என்றான். ஆனாலும் அவனுக்கு இன்னும் கோபம் தீரவில்லை என்பது, அவன் வந்த அதே வேகத்தில் திரும்பிச் சென்றதில் தெரிந்தது.
டாமியும், தப்பென்சும் மார்கன் அவென்யூ நோக்கிச் சென்றனர். காற்றினூடே அடர்ந்த பனிமூட்டம் புகையாய் கிளம்பியிருந்தது. அதனுள்ளிருந்து, ஒரு உருவம் ..  காவல்காரர் தோற்றத்தில், வெள்ளை மாளிகையின் அருகிலிருந்து மெல்ல மெல்ல மேலே எழும்பி வருவதைப்போல் இருந்தது. அதைக் கண்டு தப்பென்சு திடுக்கிட்டாலும், ஒருவேளை பிரம்மையாக இருக்கும் என்று விரைவில் ஆசுவாசப்படுத்திக்கொண்டபோது, ரெய்லி அந்த வீட்டினுள் நுழைவதையும் அவர்கள் கண்டனர். காவல்காரர் அதை திருமதி ஹனிகாட் இன் இல்லம் என்று உறுதிபடுத்தியதோடு, சில நிமிடங்களுக்கு முன் செல்வி கிளென் போலவே யாரோ ஒருவர் அந்த வீட்டினுள் நுழைவதைப் பார்த்ததாகவும் கூறுகிறான். அந்த வீட்டினுள் நுழைய எத்தனித்தபோது பயங்கரமான ஒரு அலறல் சத்தம் அவர்களை நிலைகுலையச் செய்தது. அப்போது ரெய்லி கையில் சிகப்பு பெயிண்ட் போல எதையோ வாசற்கதவின் கம்பத்தில் பூசிவிட்டு வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தான்.

அவர்கள் இருவரும் வீட்டின் உள்ளே சென்று எல்லெனைச் சந்திக்கிறார்கள். அந்தப் பணிப்பெண் ரெய்லியின் வருகைக்கும், திருமதி ஹனிகாட்டை சந்திப்பதிலும் விருப்பமின்றி கோபமாக இருக்கிறாள் என்பது தெரிகிறது. டாமியை ஒரு உண்மையான பாதிரியார் எனத் தவறாகப் புரிந்துகொண்டு, கில்டா தன் தங்கை என்ற உண்மையையும் சொல்லி, தனக்கு உதவுமாறு வேண்டுகிறாள். 20 ஆண்டுகளுக்கு முன்னர் தன்னுடைய பதினேழாவது வயதில் தன் குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மாறாக மணந்து கொண்ட அவனை  இன்று லார்ட் லெகான்பர்ரியை மணப்பதற்காக விவாகரத்து செய்ய  விரும்புகிறாள். ஆனால் இந்தத் திருமணம் முடிந்து வெகு காலம் ஆனதில் திருமதி ஹனிகாட்டிற்கு அவன் பெயர் கூட நினைவில் இல்லை. இந்த நிலையில் அவளுடைய கணவன் அவளின் இந்த விருப்பத்திற்கு உடன்பட மறுக்கிறான். வெகு வேகமாக மாடிக்கு விரைந்த அதே வேகத்தில் திரும்பியது ரெய்லி இல்லை என்று உறுதியாகக் கூறுகிறாள் அவள். அங்கு நடந்தது என்னவாக இருக்கும் என்ற நடுக்கம் ஏற்பட்டது. டாமி மாடிப்படிக்கான வழியை காண்பிக்கும்படி கேட்டுக்கொண்டு போய் பார்த்தான். அங்கு மழுங்கிய ஏதோ ஒரு ஆயுதம் மூலம் கில்டாவின் தலையின் ஒரு புறம் அடித்து நசுக்கப்பட்ட நிலையில் உயிரற்ற அவளுடைய உடல்  கிடப்பதைக் கண்டனர் அவர்கள். தப்பென்சு போலீசை வெளியிலிருந்து இழுத்து வருகிறான். திருமதி ஹனிகாட்டை விசாரித்ததில், அவளுடைய தங்கை மணி ஆறடிக்க எட்டு நிமிடம் இருக்கும்போது, உள்ளே நுழைந்தாள் என்பதைத் தான் அந்த பெரிய கடியாரத்தைச் சரி செய்யும் வேளையில் சரியாக அவள் வந்ததால் உறுதி செய்ய முடிந்தது என்கிறாள். அந்த போலீசுக்காரர் அந்த நடிகை டாமியும், தப்பென்சும் மார்கன் அவென்யூவிற்கு வரும் சற்று முன்பு அவள்  உள்ளே சென்றதைப் பார்த்ததையும் உறுதி செய்தது இது. 

மறுநாள், ரெய்லி கைது செய்யப்பட்டு, டாமியும், தப்பென்சும் குற்றவாளியை அவனுடைய வழக்கறிஞர் மிஸ்டர் மார்வெல்லுடன் சந்தித்தனர். ரெய்லி, தான் அந்த அறையினுள் நுழைவதற்கு முன்பே அந்தப் பெண் இறந்திருந்தாள் என்று வலியுறுத்துகிறான். ஆனால் அந்த நேரத்தில் அந்த வீட்டினுள் வேறு எவரும் இல்லாதலால் எல்லென் அல்லது ஹனிகாட் இருவரில் யாராவது ஒருவரே அவளைக் கொன்றிருக்கக் கூடும் என்று தோன்றியது. டாமி உடனே, யாரும் இல்லாத வீட்டினுள் கில்டா நுழைவதைக் கண்டதை நினைவுகூர்கிறான் - அவள் குரலை மட்டுமே கேட்டனர் - ஆனால் அதற்கு முன்பு வீட்டிலிருந்த இரு பெண்களும் சமயலறையில் இருந்தனர், அவர்கள் வேறு எவரும் உள்ளே நுழைவதைக், காணவோ அல்லது சத்தம் கேட்கவோ இல்லை. கதவின் அசைவைக் கேட்டதால் மட்டுமே அது எதையும் நிரூபிக்க முடியாது.  சாதாரணமாக வீட்டை விட்டு யாரோ வெளியேறுவதாலும் ஏற்படும் சலசலப்பாகவும் இருக்கலாம் - வெளியில் இருந்த போலீசுக்காரன் அந்த வேலையை முடிக்கக்கூடிய மழுங்கிய ஒரு ஆயுதத்துடன் கேட்டின் வழியாக பனிமூட்டத்திலிருந்து வெளிப்பட்டிருக்க வேண்டும். குறிப்பாக அந்த போலீசுக்காரனே கில்டாவின் வெகு காலத்தின் முந்தைய கணவனாக இருந்திருக்கவும் வேண்டும்.



Monday, November 28, 2016

வந்துவிடு வனிதா.. !

பவள சங்கரி


ஓவியம் : நன்றி திரு. ஜீவா

சன்னல் திட்டின் விளிம்பில் உட்கார்ந்தவாறு மாலை நேர மங்கிய ஒளியில் மயிலிறகாய் வருடும் தென்றல், முன் நெற்றி முடியை மெல்லச் சுழட்டியடித்தது. அவளுடைய தலை சன்னலில் முட்டியிருந்தது. சன்னல் தூரிகையின் நெடி மூக்கில் நுழைந்து ஒருவித உறுத்தலை ஏற்படுத்தியது.அவள் களைப்பாகவும் இருந்தாள்.

Monday, November 16, 2015

மௌனம் உறைந்த மனம் (வரலாறு அல்ல.. கற்பனைக் கதை)


பவள சங்கரி


மனத் தெளிவு மட்டுமே ஒரு சாமான்ய மனிதனை புத்தனாக்குகிறது. ஒரு புத்த பிக்குனி கதை கேளுங்கள்.

இயற்கை வளமும், இறை நலமும் ஒருங்கே உறையும் உன்னத மலை அது. அமைதி.. அமைதி.. எங்கும் பேரமைதி.. அமைதியின் அழகில் இறைமையின் வடிவாக வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் சோலை. தெளிந்த நீரோடையின் இதமான குளிர் தென்றல் சுகமாக அணைத்திருக்க, பதமான பல்சுவையமுதாய் புள்ளினங்களின் மெல்லிய கீதங்கள். இரைச்சலற்ற இனிய நாதங்கள். இவையெல்லாம் மகுடமாய் அலங்கரிக்க மகாராணியாய் வீற்றிருக்கிறாள் அம்பிகைதேவி, பூத்துக்குலுங்கி மணம் பரப்பிக்கொண்டிருக்கும் பசுமை வேம்பின் தண்ணிழலில் தனி இராச்சியம் அமைத்தபடி ஆனந்த தியானத்தில் அமைந்திருந்தாள். எண்ணமெல்லாம் இசைக்களிப்பு! சுவாசமெல்லாம் கானத்தின் சிலிர்ப்பு! நேசமெல்லாம் இராகாலாபனையின் உயிர்ப்பு! உண்டியும், உறக்கமும் கூட மறந்த மோன நிலை! இசையே உணவாய், உணர்வாய் உயிர் மூச்சாய் உறைந்திருக்கும் உன்னத நிலை! இதுதான் அம்பிகைதேவியின் இறை நிலை. அவளின் அன்றாட வாடிக்கை. எத்தனைக் காலமாய் இப்படி கிடக்கிறாளோ, அறிந்தவர் எவரும் இலர். பலர் கண்களுக்கு கந்திற்பாவையாகத் தெரிபவள், சிலர் பார்வையில் மட்டும் உயிருள்ள ஓவியமாய், உன்னதக் காவியமாய் காட்சியளிப்பவள். கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்று காலம் ஓடிக்கொண்டிருந்தது. இளவரசன் இமயவர்மன் சிறந்த பௌத்த நெறியாளர். கருணையே வடிவாக, கடமையே உறவாக, மக்கள் நலமே பெரிதாக நினைத்து வாழ்பவன். அவனுடைய அன்றாடப் பணிகளுள் முக்கியமான ஒன்று அம்பிகைதேவி தரிசனம். பெரும்பாலும் கந்திற்பாவை காட்சியே காணக்கிடைத்தாலும் பலமுறை கனவிலும், சிலமுறை அரை நினைவிலும் அம்பிகைதேவியின் உருவைக் கண்டவன். அந்த தீப ஒளியில் கண்கள் கூசிட உள்ளம் மட்டும் பட்டொளியாய் பளிச்சென்று மின்ன, சிறிது சிறிதாக ஞானம் பெற்றவாறு புத்தம் நோக்கி நகர்ந்துகொண்டிருந்தவன். புரியாத புதிர் ஒன்று கந்திற்பாவையிடம் இருந்ததையும் கண்டவன், என்றேனும் ஓர்நாள் அம்பிகைதேவி தனக்கு விடை பகர்வாள் என்று ஞானம் பெறக் காத்திருந்தான். தேடல் தொடர்ந்தவண்ணம் இருந்தது. கந்திற்பாவையின் கழுத்தைச் சுற்றிய யாழிசைக் கருவியின் உறுதியான நரம்புகள் நீண்டு நெளிந்து, சில நேரங்களில் இறுக்கியவண்ணம் இருந்தது. ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு வண்ணம் காட்டி காண்போரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திக்கொண்டிருந்த அந்த மென்நரம்புகள் இடையூறாய் இருப்பதாக நினைத்து போகவர விலக்க நினைக்க, இமயவர்மனைத் தீண்ட விட்டால்தானே.. இறுக்கிய இசை நரம்பிற்கு இதயமில்லையோ என்றுகூட கருவினான் அவன். கேள்வி கேட்பாரும் இல்லாமல் பதிலளிக்கவும் முனையாமல் அசையா சடமாக கந்திற்பாவை … பரபரத்து துடித்த கையை , மடக்குவதைக் காட்டிலும் வேறேதும் செய்ய இயலா நிலை இமயவர்மனுக்கு. விடிவு காலம் வர வினையாவும் தீரும் என்று காத்திருந்தான் அவன்.

Thursday, July 16, 2015

அவந்திகா



பவள சங்கரி

அவந்திகா



நம் ஒவ்வொருவரின் செயல்பாட்டிற்குமே நாம் பெற்றிருக்கின்ற ஞானத்தின் இயல்பு, நம்மிடம் மறைந்துள்ள சத்வ, ரஜோ, தாமச குண இயல்புகள், நமது கொள்கைப் பிடிப்பு ஆகியவையும், நமது கர்மப் பலனும் தான் முக்கிய காரணம்.

ஒரு செயலில் ஈடுபடுதல், செய்யாமல் விடுவது, செய்யத்தக்க செயல், செய்யத் தகாத செயல், அச்சம், அச்சமின்மை, பந்தம், விடுதலை போன்றவற்றைச் சரியாக உணர்ந்துகொள்ளும் அறிவு தான் சாத்வீக புத்தி.

எந்த ஓர் அறிவு செய்யத்தக்கது, செய்யத் தகாதது ஆகியவற்றைச் சரியாக அறிவதில்லையோ அது குழப்பமான ராஜச புத்தி. இவை தவிர தர்மத்தை அதர்மமாகவும், அதர்மத்தைத் தர்மமாகவும் மாற்றிப் புரிந்துகொண்டு செயல்படுவது தாமச புத்தி. இதற்கு நல்லதெல்லாம் தீயதாகவும், தீயவை நல்லவையாகவும் தோன்றும். எடுத்துச் சொன்னாலும் புரியாது. தொடர்ந்து தவறாகச் செயல்படவே தூண்டும்.

Monday, September 22, 2014

அமர காவியம்!



பவள சங்கரி


காதல் என்பது நீ காதலிக்கும் அந்த ஒருவருக்கானதேயல்ல
உன்  தனித்தன்மையை உணரச் செய்து
உன் சுகதுக்கம் என எதையும் எவருடன் பகிரமுடிகிறதோ
எவருடன் நீ நீயாகவே இருக்க முடிகிறதோ
எவரால் உன் வாழ்க்கையில்  மாற்றம் ஏற்படுகிறதோ
எவரால் அப்படியொரு காதலை உணர்த்த முடிகிறதோ
அந்த ஒருவருக்கே உரித்தானது அது!
வானத்தில் எழுதிவைத்தேன் உன் பெயரை
மேகம் வந்து மறைத்துவிட்டது.
கடலோரத்தில் மணல்மேட்டில் எழுதிவைத்தேன்
அலைவந்து மொத்தமாக அடித்துச்சென்றது.
இருதயத்தில் பொரித்து வைத்தேனதை
இரும்பாக நிலைத்து நிற்கிறது அங்கே!
வண்ணமயமான ஒரு காகிதத்தில் கண்ணைக்கவரும் வகையில் கருத்தாய் கவிதைகள் எழுதி எவரோ தவறவிட்டுப்போன அது தன் கையில் ஏன் கிடைத்தது என்று சிந்திக்க முடியாத அளவிற்கு ஒரு கணம் அதன் கருத்தில் இலயித்துப்போனாள் மரியா.

Thursday, August 7, 2014

சுருதி லயம்





பவள சங்கரி

நன்னா யோசனை பண்ணி சொல்லும்மா சுருதி. உண்மையிலேயே நோக்கு என்னைப் புடிக்கலையா. நம்மளோட காதலுக்கு ஆயுசு இவ்ளோதானா? என்ன ஆகிப்போச்சின்னு இப்படி கடந்து துடிச்சிண்டிருக்கே. நானும் உனக்குப் புடிச்சா மாதிரி இருக்கணும்னுதான் முயற்சி பண்றேன். ஆனா என்னமோ தெரியல, இந்த மனசு ஒரு நிலைக்கு வரமாட்டீங்குது. எவ்வளவோ கட்டுப்பாடா இருக்கணும்னுதான் நினைக்கிறேன். ஆனா என்னோட தொழில் என்னை அப்படி இருக்க உடமாட்டீங்குதுடி. புரிஞ்சிக்கோம்மா.. இனிமேல் சத்தியமா குடிச்சுட்டு வரமாட்டேன் .. இந்த ஒரு தரம் மட்டும் மன்னிச்சுடுடி.. என் செல்லம் இல்லியோ நீ.. “

"ரகு, என்னை விரட்டி, விரட்டி காதலிச்ச அந்த ரகுதானா நீன்னு எனக்கு அடிக்கடி சந்தேகமே வந்துடுதுடா..  நான் மட்டும்தான் உன் உலகம்உயிர் அப்படீன்னு சொன்னதெல்லாம் வெறும் பிதற்றல்தான் இல்லியா..  இப்பல்லாம் உனக்கு அந்த மதுவில மட்டும்தான் போதை .. உனக்குன்னு ஒரு குடும்பம் இருக்குங்கறதை கூட மறக்க வக்கிற இந்த குடிபோதை உனக்கு தேவையா இருக்கு..  என்னோட குடிகார அப்பன்கிட்ட உன் மொத்த சேமிப்புஇருபத்தஞ்சாயிரத்தையும் கொடுத்துதானே என்னை வாங்கிட்டு வந்தே..  இப்ப அதே மாதிரி  உன் பொண்ணுங்களையும்  எவனாவது வந்து வாங்கிட்டுப் போவானுங்கன்னு கோட்டை கட்டி வச்சிருந்தா அத இப்பயே இடிச்சுப்புடு.. ஆமா சொல்லிப்புட்டேன்.. அப்புடி ஒரு நினப்பு உனக்கு இருக்குதுன்னு தெரிஞ்சா உன்னை வெட்டி பொலி போட்டுடுவேன் ஆமா..  உன்னோட திருநீரு பட்டையையும், சாந்தமான மூஞ்சியையும் பார்த்து நான் ஏமாந்தது போதுமடா சாமி...

Monday, July 21, 2014

டாப் டக்கர்

பவள சங்கரி


மச்சி,  எங்கடா இருக்கே, சீக்கிரம் வாடா..  ஷாப்பிங் போகனும்னு சொன்னேனில்ல..  

எங்கடா, இப்பதான் டூட்டி முடிச்சு வெளியே கிளம்பறேன். வந்து சேர இரண்டு மணி நேரம் ஆகும். பீக் ஹவர்.. பஸ் கிடைச்சி வரணுமே.. அப்புடி என்னடா அவசரம் உனக்கு.. வீக் எண்ட் போலாமே மச்சி...”

“இல்லடா, என்னோட போன் ரொம்ப மக்கர் பண்ணுது.. உடனடியா வாங்கியாகணும். முக்கியமான டேட்டாஸெல்லாம் அழிஞ்சி போச்சுன்னா என்ன பண்றதுன்னு பயமா இருக்குடா.. இன்னைக்கு சம்பளம் வாங்கினேன். அதான் உன்னோடது மாதிரி ஒரு நோக்கியா போன் வாங்கலாம்னு பாக்குறேன்”

நோக்கியா வேண்டாம்டா. மைக்ரோசாஃட்காரன் நோக்கியாவை வாங்குனதிலிருந்து இன்னும் சரியா செட்டாகலடா...  எல்லோரும் இப்ப அதைவிட்டு சேம்சங்க் போயிட்டிருக்காங்க. அதான் இப்ப மார்கெட்ல டாப் டக்கரா போகுது. நான் இப்ப சாம்சங்க் கம்பெனிக்கு அடுத்த ஸ்டாப்புலதான் பஸ்ஸீக்கு நிக்கறேன். நீ கிளம்பி வந்துடு. நான் அப்படியே பொடி நடையா அதுக்குள்ள வந்து சேந்துக்கறேன்.. சரியா”

“ம்ம்.. அப்படியா சொல்ற..  ஓகேடா மச்சி.       இதோ இப்ப உடனே கிளம்பறேன். வந்து நம்ம உடுப்பி கிருஷ்ணா பவன்ல சூப்பர் நெய் ரோஸ்ட் வாங்கித் தறேன்”

“ஓகே.. ஓகே.. அப்ப சீக்கிரம் வந்து சேரு. பசி வயித்தைக் கிள்ளுது”

Monday, July 7, 2014

மானசா





பவள சங்கரி

மானசா.. ஏய் மானசா.. எந்த உலகத்துல இருக்கே நீ..  எப்பப் பார்த்தாலும் காதுல பாட்டை மாட்டிக்கிட்டு, ஏதோ உலகத்துல சஞ்சாரம் பண்ணிக்கிட்டு .. என்ன பண்றே.. நான் கழுதையா கத்துறது ஏதாவது உனக்கு காதுல உழுகுதா..  இல்லைனா எப்பப் பார்த்தாலும் சிரிப்பும், கும்மாளமும் தான்” 

ஏனோ இந்த அம்மாக்களுக்கு மட்டும் தான் கடந்து வந்த அந்த ஸ்வீட் சிக்ஸ்டீன் மனசு மறந்தே போகுது.. எத்தனை சுகமான பருவம் அது. கண்ணுல பார்க்குறதெல்லாம் அழகு. எதோ எல்லாமே தனக்காகவே படைக்கப்பட்டது போல ஒரு நினைப்பு. அதோட உலகத்துலயே தன்னைவிட வேற அழகியே இல்லைங்கற மதர்ப்பு..  1008 கோணத்துல கண்ணாடியில அழகு பாக்குறதே முக்கியமான வேலை..  இத்தனை கற்பனையையும் அந்த ஒற்றை வரியில் தவிடு பொடியாக்க அம்மாவுக்கு மட்டுமே சாத்தியம். “இங்க பாருடி, சும்மா சிலுப்பிக்கிட்டுத் திரியாத.. பன்னிக்குட்டி கூட பருவத்துல அழகாத்தான் இருக்கும்.. போ.. போ.. போய் பொழப்பப் பாரு..”

Monday, June 30, 2014

ஆத்ம ராகம்

பவள சங்கரி


 தற்போதைய உடலில் வாழும் வாழ்வுக்கு ஏற்பவே, ஆத்மா மறுபிறவியில் வேறு உடலை அடைகின்றது.
அத்தியாயம் – 15, பதம் – 3



அப்பா.. அப்பாபேப்பர் படிக்கறீங்களாசாப்பிட்டாச்சாப்பா


இல்லப்பா. உனக்காகத்தான் வெயிட்டிங். நிம்மியும் இன்னும் சாப்பிடலை. அவளோட ரூமில் படிச்சிட்டிருக்கா பாருசப்பாத்தியும், சன்னாவும் செய்திருக்கேன். வாங்க சாப்பிடலாம்

சாரிப்பா, இன்னைக்கு நான் உங்களுக்கு டின்னர் தயார் பண்ண ஹெல்ப் பன்ணமுடியாமப் போச்சு. பை வே, அப்பா ஷி ஈஸ் சுமனா, என்னோட ஃபிரண்ட். இன்னைக்கு நம்மளோட டின்னர் சாப்பிடப் போறாங்க

வணக்கம் அப்பா

அவள் உடுத்தியிருந்த ஜீன்ஸ் பேண்ட், டி ஷர்ட், பாய் கட் முடி போன்றவற்றிற்கும் அவளுடைய பேச்சிற்கும் சம்பந்தமே இல்லாதது போல இருந்தது.

வணக்கம்மா. என்ன செய்யறீங்க. படிச்சிட்டிருக்கீங்களா?”

இல்லைப்பா, நான்  பாட்டு ஆசிரியராக ஒரு தமிழ் பள்ளியில்  பணியில் இருக்கறன். உங்கள் மகன் வழமையாக வரும் பள்ளிதான் அது. அங்குதான் என்ர தலைமை ஆசிரியை மூலம் இவர் அறிமுகமானார். நான் தான் இவருக்கு கர்நாடக இசை கற்றுத் தருகிறன்

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 36

  63 நாயன்மார்கள் வரலாறு – 31 மூர்க்க நாயனார்   தொண்டை நாடு சான்றோர் உடைத்து , எனும் பழமொழிக்கேற்ப சான்றோர் பெருமக்கள் பல்லோர் அவதரித...