Saturday, March 23, 2019

அகண்ட தமிழகத் தொன்மை வரலாறு


தமிழகத்தின் பண்டைய வரலாறு என்று எடுத்துக்கொண்டால் பெரும்பாலும் 3 அல்லது 4 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு அசோகரின் புத்த மத பரப்புதலுக்குரிய காலகட்டங்களிலும் அதற்குப் பிறகு சேர, சோழ, பாண்டியரின் ஆட்சிக் காலங்களிலும் தொகுக்கப்பட்டுள்ளன. சங்க காலத்திற்கு முந்தைய காலகட்டங்களின் தமிழர் வாழ்வியல் குறித்த வரலாறு இன்னும் பரவலாகவும், ஆழ்ந்தும் ஆராயப்படத்தக்கது. ஆதித்தமிழர்களின் வரலாறு என்பது தமிழர்களின் நுண்ணறிவும், சிறப்பான செயல் திறனும், மனித நேயமும் இணைந்த காலகட்டம். அகண்ட தமிழகமாக விரிந்திருந்த பொற்காலம். அகண்ட தமிழகம் என்பது சிந்துவெளி முதல், இலங்கை வரை நீண்ட நிலப்பரப்பு.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழமையான தமிழ் இலக்கியங்களில் ஒன்றான, சங்க இலக்கியங்கள்  473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களைக் கொண்ட எட்டுத்தொகை நூல்கள், பத்துப்பாட்டு நூல்கள், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் போன்றவை உள்ளடங்கியவை. கிறித்து பிறப்பதற்கு முற்பட்ட காலகட்டங்களில் எழுதப்பட்ட இந்நூல்களில் அக்காலகட்டத்தில் வாழ்ந்த தமிழர்களின் அன்றாட வாழ்க்கை முறைமைகளைப் படம் பிடித்துக் காட்டுவதோடு,  பண்டைத் தமிழரது காதல், போர், வீரம், ஆட்சியமைப்பு, வணிகம் போன்ற நடைமுறைகளையும்  அறியத் தருகின்றன. அதாவது அகமும் புறமும் காதலும் வீரமும் இணைந்தவையே சங்கப் பாடல்கள். வீட்டையும் நாட்டையும் போற்றிய தமிழ் மக்களின் உணர்வுகளால் பின்னப்பட்ட சொல்வலைக் களஞ்சியம் என்றே சொல்லலாம். மக்கள் வாழ்க்கையை உள்ளது உள்ளபடியே சொன்னால் சுவை பயக்காது என்பதாலேயே , அவைகளை  கற்பனையும் உண்மையும் கலந்து சுவைப்படப் புனைந்து கூறுவர். அந்தந்த காலகட்டங்களுக்கேற்றவாறு இயற்கை வளம், மனித நலம், அவர்தம் இயல்பு, சுற்றுச்சூழல் போன்ற பலவற்றையும் பிரதிபலிக்கக்கூடியது கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களின் படைப்புகள். பொ..மு. 300 முதல் பொ..மு. 100 வரையான சங்ககாலம் குறித்து அறிய, சங்க இலக்கியங்கள், மொழியியல், அகழாய்வுத் தரவுகள், நாணயங்கள், கல்வெட்டுகள், மெகத்தனிசு, சாணக்கியன் போன்றவர்களின் குறிப்புகள் எனப் பல சான்றுகள் உள்ளன. 
ஆதித்தமிழர்கள்  பிரளயத்தால் கடலில் மூழ்கிய நிலப்பரப்பிலிருந்து புகலிடம் தேடி மேற்கே கடல் பாதையில் பயணமாகி, இசுரேலுக்குச் சென்றவர்கள் யூதர்களாகவும், எகிப்திற்குச் சென்றவர்கள் சுமேரியர்களாகவும் ஆனார்கள்.   சிந்து சமவெளியில் குடியேறியவர்கள் சேரர்கள் எனவும், கங்கை பாயும் சமவெளிப் பகுதிக்குச் சென்றவர்கள் சோழர்கள் எனவும், தெற்குப் பகுதியில் குடியேறியவர்கள் பாண்டியர்கள் எனவும் ஆனார்கள். பின் அடுத்தடுத்த பல்வேறு படையெடுப்புகள், ஆட்சி மாற்றங்கள் போன்ற காரணங்களால் சிந்துநதிப் பகுதி சேரர்களில் பெரும் பகுதியினரும், கங்கைப் பகுதி சோழர்களும், பாண்டியர் ஆட்சிக்கு உட்பட்ட தெற்குப் பகுதிக்கே வந்து சேர்ந்தனர். இவ்வாறு இந்திய வடபகுதி முழுவதும் தமிழர்களே இருந்துள்ள செய்திகளும், அப்பகுதி முழுவதும் அகண்ட தமிழகமாக பரந்த நிலப்பரப்பைக் கொண்டதாக உருவாகியுள்ளதற்கான பல ஆதாரங்கள் உள்ளன.
முக்கோண வடிவிலான நம் தமிழ் நாட்டைச் சூழ்ந்துள்ள முக்கடலை ஆய்வு செய்தால் தமிழனின் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றை நாம் மீட்டுருவாக்கம் செய்யலாம். ஆனாலும் பண்டைய கால வரலாற்றைப் பொருத்தவரை அக்கால இலக்கியங்கள் மற்றும் ஏனைய படைப்புகளிலிருந்து ஒரு விழுக்காடுதான் அதன் வரலாறு குறித்து அறிய முடியும் எனவும், 99 விழுக்காடு வரலாற்றை அகழாய்வுகள் கொண்டுதான் நிரப்ப முடியும் எனவும் வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின் மேற்கு பகுதியில் இயற்கை அமைத்த அரணான மேற்குத் தொடர்ச்சி மலையை முறையாக ஆய்வு செய்வதன் மூலம் தமிழர்களின் மறக்கப்பட்டதும், மறைக்கப்பட்டதுமான வரலாற்றை நம்மால் மீளுருவாக்கம் செய்ய இயலும் என்பதும் நிதர்சனம்.  ஆர்வலர்களைக் கவரும் வகையில் கற்பனை கலந்து, தொன்மப் புனைவுகளுடன் மிகைப்படுத்தப்பட்ட எழுத்துகள் உண்மை நிலவரத்தை வெளிப்படுத்த இயலாமல் போகலாம். ஆயினும் ஆய்வாளர்கள் தரவுகள் சார்ந்து ஏரண அடிப்படையில் அனுமானத்தின் துணைகொண்டு நிறுவ முயலும் தரவுகள் நம்பகத் தன்மை மிக்கவையாக எண்ண முடிகின்றது.  தமிழர்களின் இலக்கிய வளங்களில் முக்கியமான ஒன்றான சங்க இலக்கியங்களில் அதிகமானத் தரவுகள் இருப்பதாக கீழை நாட்டறிஞர் கரோஷிமா குறிப்பிட்டுள்ளதும் கருத்தில் கொள்ளத்தக்கது. தங்கள் புலனறிவால் தம்மைச் சுற்றியுள்ள இயற்கையின் ஆற்றலை உள்வாங்கி அதனை உள்ளது உள்ளபடி எழுதிய எண்ணற்ற படைப்புகளின் மூலமாக சங்கப் புலவர்கள் தனிப்பட்ட இடத்தைப் பெற்றவர்களாகின்றனர். தமிழர்களின் இயற்கையுடன் இணைந்த வாழ்வியல் மரபியல், அகம் மற்றும் புறம் சார்ந்த சிந்தனைகளை ஆய்வு செய்யத் தேவையான தரவுகள் இருப்பதாக இந்த ஆய்வாளர்கள் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்கள்.  தமிழர்கள் வாழ்வியல் வரலாறு தொன்மை மிக்கதாக இருந்தாலும் ஒரு பெரிய இடைவெளிக்குப் பின்னரே சங்க இலக்கியங்கள் ஆய்வுக்கான ஆவணங்களாகக் கிடைத்தன என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. தமிழகத்தில் குறிப்பாகக் கொங்குநாட்டின் வரலாற்றை எடுத்துக் கொண்டால் பொ..மு. 300 இல் இருந்து பொ.. 200 வரையில் வரையறுத்துக்கொள்ள வாய்ப்புகள் அதிகமாக உள்ளதற்கான காரணம் கொங்கு நாட்டில் அதிகமாகக் கிடைக்கப்பெறும் தரவுகளே. மனிதவியல் என்ற புலத்தின் அடிப்படையில் கொங்கு நாட்டின் வரலாற்றை ஆய்வு செய்வதற்கான தரவுகள் ஏராளம்.

தொல்லியல் தொல்பொருள் தொடர்பான ஆசியத் தகவல்களை பல நாடுகளிலிருந்து வெளியான ஆவணங்களின் மூலம் தொகுத்தும் பகுத்தும் உற்று நோக்கியதில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கொங்கு நாட்டுக்கும் கிழக்கில் எகிப்து, சுமேரியா, மெசபடோமியா, சிரியா, கிரேக்கம் மற்றும் உரோமுடன் வணிக உறவு இருந்தது தெளிவாகிறது.  இந்தியாவில் இந்து சமவெளி ஹாரப்பாவுடன் கொங்கு வணிகத் தொடர்பில் இருந்ததும் அறிய முடிகின்றது.  அதுபோன்றே கிழக்காசியாவில் இலங்கை தொடங்கிச் சீனம் வரை பல கிழக்காசிய நாடுகளுடன் கொங்கு நாட்டிற்கு வணிக உறவு இருந்ததையும் அனுமானிக்க இயலும்.  இதன் அடிப்படையில் பன்னாட்டு வணிகமே கிழக்கிலும் மேற்கிலும் பல நாடுகளைக் கொங்கு நாட்டுடன் இணைக்கும் உறவுப் பாலமாக இருந்ததையும் நிறுவ முடிகிறது. கொங்கு நாட்டின் பாலக்காட்டு கணவாய் பல இனம் பல சமயங்கள் எளிதில் உள் நுழைய வழிவகுத்தது போன்றே பாலக்காட்டு கணவாய் வழியே ஆழ்கடல் வழியாகப் படகிலும் சிறு நாவாய்களிலும் பயணித்துப் பன்னாட்டு வணிகம் மேற்கொள்ளவும் பாலக்காட்டு கணவாய் வழிவகுத்தது எனலாம். 

கொங்கு நாட்டில் தாண்டிக்குடியில் கடந்த நூற்றாண்டில் தொடர்ந்து நடந்த அகழ்வாய்வுகள் பொ..மு. 4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்திட்டைகளைக் கண்டறிந்துள்ளனர்.  கொடுமணல், கொங்கு நாட்டின் ஈரோடு மாவட்டத்தில், பெருந்துறை வட்டத்தில் நொய்யல் ஆற்றின் வடகரையில், சென்னிமலையிலிருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. சங்ககாலத் தமிழ் மக்கள் பல்வேறு தொழில்நுட்பங்களில் மேன்மை பெற்றவர்களாக இருந்தனர் எனவும், அதன் மூலம் வளர்ச்சி பெற்று, பன்னாட்டு வணிகத்திலும், ஒட்டுமொத்தப் பொருளாதாரத்திலும் மிக உன்னத நிலையை அடைந்திருந்தனர் எனவும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள ‘தொல்லியல் நோக்கில் சங்ககாலம்’ என்ற தனது நூலில், பக்: 79 முதல் 130வரை 52 பக்கங்களில் விரிவாகக் கூறியுள்ளார் முனைவர் கா.இராசன் அவர்கள்.
கொடுமணல் பகுதியில் பச்சைக்கல், நீலக்கல், பளிங்கு, சூதுபவளம், சேசுபர், அகேட், குருந்தம், வைடூரியம், லாபியஸ் லசுலி (Lapius Lajuli), மாவுக்கல் முதலிய அரிய கற்களைக் கொண்டு மணிகள் செய்யும் தொழில் சிறப்பாக நடந்து வந்துள்ளது எனவும், மேற்கூறியவற்றில் வைடூரியம், சூதுபவளம், அகேட் போன்றவை மூலப் பொருட்களாக இந்தியாவின் பிற பகுதியிலிருந்து தருவிக்கப்பட்டு இங்கு ஆபரணங்களாக உருவாக்கப் பட்டுள்ளன எனவும் மயிரிழை அளவு துளைகள் கொண்ட மணிகள் கொடுமணலில் கிடைப்பதால், தமிழர்கள் தொழில்நுட்பம் அறிந்தவர்களாக இருந்துள்ளனர் எனவும், இத்தொழில் சங்க காலத்தில் சிறப்புற்று விளங்கியதோடு அதிக அளவு அந்நியச் செலவாணியை தமிழகத்திற்கு ஈட்டித் தந்துள்ளது எனவும் அறியமுடிகின்றது. சங்ககாலத்தில் கொடுமணம் என்று அழைக்கப்பட்ட இவ்வூர் இன்று கொடுமணல் என வழங்கி வருகிறது. யவனர் என இலக்கியங்களில் குறிப்பிடப்படும் கிரேக்கம், உரோம், எகிப்து நாடுகளைச் சேர்ந்த மக்கள் இந்த கொடுமணலுக்கு வந்து சென்றுள்ளனர்.
கொடுமணல் அக்காலத்தில் ஒரு பெரிய தொழில் நகரமாக இருந்திருக்கிறது என்பதையும் இது புலப்படுத்துகிறது. .எச்.வார்மிங்டன் (E.H. warmington) தமது The commerce between the Roman Empire and India, (1948) என்ற நூலில், உரோமானியர் அக்காலத்தில் மிக விரும்பி பயன்படுத்திய அரிய கல் வகைகள் என்று குறிப்பிட்டுள்ளவைகள் கொடுமணலில் கிடைத்த மேற்கண்ட கற்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொங்கு நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட ஊதா நிறக்கல் மணிகண் (Lapis Lazhli) மெசபதோமியாவில் செல்வ வளமிக்க மக்களும் அரசர்களும் விரும்பும் மணிகளாக இருந்திருக்கின்றன. அரசன் இறக்கும்போது அவனுடன் வைத்துப் புதைக்கும் அளவிற்கு இவைகள் மிகுந்த மதிப்புமிக்க  பொருட்களாகக் கருதப்பட்டு வந்துள்ளதை அறிய முடிகின்றது. ஆய்மன்னன் அளித்த கலிங்கம்,  வைரம், பொன், முத்து ஆகியவை, முசிறிப் படிமம், மாந்தை நகரத்தில் நிலத்தில் கிடைத்த வைரம், பொற்குவை போன்றவைகளும் இந்த மதிப்புமிகு பொருட்கள் வகையைச் சேரும். சிந்து சமவெளியில் பழுப்பு நிறக்கல், பளிங்குக்கல், பிற கற்கள் ஆகியவற்றால் அழகு மணிகள் செய்யப்பெற்று வணிகம் செய்யப்பட்டன. இதன் மூலம் கிடைத்த வருவாய் சிந்து வெளி நகரங்களை வளப்படுத்தியுள்ளன. பொன் அணிகலன்கள், நீலநிறக்கல்லால் செய்யப்பெற்ற அணிகலன்கள் போன்றவைகள் சிந்து சமவெளி வாழ்விடங்களில் கிடைத்துள்ளன. தமிழரின் ஆற்றல் மிக்க நுண்கலைத் திறனுக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள்  இவை போன்று ஏராளம்.

வளை, மணிகள் கோர்த்த ஆரங்கள், மணிகள் கோர்த்த மேகலை, சிலம்பு, போன்ற நுண்கலைப் பொருட்கள் பற்றிய செய்திகள் தமிழ் இலக்கியங்களின் மூலம் பெருமளவில் கிடைக்கின்றன. சங்க இலக்கியத்தில் போகிற போக்கில் உவமைகளாகவும், உருவகங்களாகவும் இவைகள் கூறப்பெறுவதும் கண்கூடு. சங்க காலத்தில் சிறப்புற்று விளங்கிய தொழில்களில் மணிகள் செய்யும் தொழில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். பெருங்கற்படைச் சின்னங்களில் அகழ்ந்தெடுக்கப்பட்ட எண்ணற்ற மணிகளே இதற்குச் சான்றாகலாம். நிலவியல், வேதியியல், இயற்பியல் காரணமாக ஏற்பட்ட மாற்றங்களால், பாறைகளுக்கு இடையே தோன்றும் அரிய மணிக்கற்கள் தொடர்பான ஆழ்ந்த அறிவு பெற்றவர்களாக தமிழர்கள் இருந்ததால் மட்டுமே அவற்றின் இருப்பிடமறிந்து அவைகளைக் கண்டெடுத்து மணிகள் செய்ய இயலும். இந்த அரிய மணிகள் விளையுமிடம் அறிந்ததோடு அவற்றை வாழ்வியலுக்குப் பயன்படுத்தும் முறையையும் கண்டறிந்த படைப்பாற்றல் மிக்கவர்களாக இருந்துள்ளனர். இயற்பியல் வேதியியல் கூறுகள் கொண்ட இவ்வரிய கல்மணிகளின் தன்மையை அறிந்திருந்தால் மட்டுமே அவற்றை ஆபரணப் பொருட்களாக மாற்ற இயலும். இவற்றை வணிகத்திற்குப் பயன்படுத்தும் வகையில் தொழில் நுட்பத்தைக் கொண்டு வடிவமைப்பதை சங்காலத் தமிழ் மக்கள் நன்கு உணர்ந்திருந்தனர். இவ்வரியத் தகவல்கள் குறிப்பாகக் கொடுமணல் அகழாய்வு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளன.
சங்க இலக்கியத்தில் கையாளப்பட்டுள்ள மணி, காசு, காணம் என்ற சொற்களின் பின்புலத்தை ஆய்ந்தறிதலும் அவசியமாகிறது. சில இடங்களில் இச்சொற்களுக்கானப் பொருள் கூறப்பட்டுள்ளன. மணி  என்ற சொல், பெரும்பாலும் நூலில் மாலையாகக் கோர்த்து அணிந்து கொள்ளும் அணிகலன் என்ற வகையிலேயே  பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இச்சொல் சங்க இலக்கியத்தில் 381 இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இயற்கையாகக் கிடைக்கும் கற்களையே மணி என்ற இந்த சொல் குறிக்கின்றது.  புறநானூற்றின் 202ஆம் பாடலில் கலைமான் ஒன்று ஓடுகின்றபொழுது அதன் குளம்படி பட்டு அங்கிருந்த மணிகள் தெறித்து சிதறுவதாகக் குறிப்பிடப்படுகிறது. இன்றும் காங்கயத்திற்கு வடமேற்கின் ஐந்து கல் தொலைவில் அமைந்துள்ள சிவன்மலை, பெருமாள்மலை ஆகிய மலைகளில் மணிகளை மக்கள் சேகரித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆதிகாலத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறை சார்ந்த, சமூகம், பொருளாதாரம், கல்வி, நாகரிகம், அரசியல், வீரம், கலை, கொடை, ஆடை, அணிகலன், அவர்தம் பழக்க வழக்கங்கள், வணிகத் திறன் போன்ற பல்வேறு செய்திகளையும் அறிந்து கொள்ள உதவுவது புறநானூறு. இதில் பண்டைய தமிழர்களின் 28 வகை அணிகலன்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன் போன்ற 18 சேர அரசர்களையும் பற்றி சிறப்பித்துப் பாடப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக ஒரு பாடலும் பொருளும் இதோ:
புறநானூறு 202
 பாடியவர்: கபிலர்,
பாடப்பட்டோன்: இருங்கோவேள்,
திணை: பாடாண்,
துறை: பரிசில்

வெட்சிக் கானத்து வேட்டுவர் ஆட்டக்
கட்சி காணாக் கடமா நல் ஏறு
கடறு மணி கிளரச் சிதறு பொன் மிளிரக்
கடிய கதழும் நெடு வரைப் படப்பை,
வென்றி நிலைஇய விழுப் புகழ் ஒன்றி,  5
இரு பால் பெயரிய உரு கெழு மூதூர்க்
கோடி பல அடுக்கிய பொருள் நுமக்கு உதவிய
நீடு நிலை அரையத்துக் கேடும் கேள் இனி,
நுந்தை தாயம் நிறைவுற எய்திய
ஒலியற் கண்ணிப் புலிகடிமாஅல்,  10
நும் போல் அறிவின் நுமருள் ஒருவன்
புகழ்ந்த செய்யுள் கழாஅத் தலையை
இகழ்ந்ததன் பயனே, இயல் தேர் அண்ணல்,
எவ்வி தொல் குடிப் படீஇயர், மற்று இவர்
கைவண் பாரி மகளிர் என்ற என்  15
தேற்றாப் புன் சொல் நோற்றிசின் பெரும,
விடுத்தனென், வெலீஇயர் நின் வேலே, அடுக்கத்து
அரும்பு அற மலர்ந்த கருங்கால் வேங்கை
மாத்தகட்டு ஒள் வீ தாய துறுகல்
இரும்புலி வரிப் புறம் கடுக்கும்  20
பெருங்கல் வைப்பின் நாடு கிழவோயே.

பொருளுரை:  வெட்சி மலர்கள் நிறைந்த காட்டை உடைய ஊர், உயர்ந்த மலையின் அருகில்,  நிலைத்த வெற்றியும், சிறந்த புகழும்  பொருந்திய, இரு பால் பெயரிய உரு கெழு மூதூர்,’சிற்றரையம்’, ‘பேரரையம்’ எனும் பெயர் பெற்றிருந்த, ‘அரையம்’ எனும் ஊர். அந்நாட்டின் வேட்டுவர்கள் மான்களை வேட்டையாடும் பொருட்டு துரத்தும் வேளையில் அம்மான்களில் ஒன்று மலைச்சரிவில் தெறித்து ஓடுகையில் அதன் குளம்படி புதைந்த மண்ணிலிருந்து மணிக்கற்கள் வெளிக்கிளம்பி சிதறுமாம்! கோடி கோடியாக அடுக்கப்பட்டிருந்த பொன்னை நுமக்குக் கொடுத்து உதவியதும் அவ்வூரே. தழைத்த மலர்க் கண்ணியை அணிந்த புலிகடிமாலே! முன்பொரு காலத்தில், உன் தந்தையின் அரசு உரிமையை நிறைய பெற்ற உன்னைப் போல் அறிவில் ஒத்த, உன் குடியின் ஒருவன், வேளிர் குடி அரசன், எவ்வி புலவர் கழாத்தலையார் என்ற புலவரை அவமதித்ததன் பயனாக அவனது பேரரையம், சிற்றரையம் எனும் ஊர்களும் அழிந்ததோடு அவனது பழங்குடித் தொடர்பும் அற்றுப்போனது. இவர்கள் கொடைத் தன்மை மிக்க பாரியின் பெண்கள் என்று அறிமுகம் செய்த எனது பொருந்தாப் புல்லிய சொற்களைப் பொறுத்தருள்வாயாக பெருமானே! நான் உன்னிடமிருந்து  விடை பெறுகிறேன்.   உன் வேல் வெல்லட்டும், மலையில் அரும்பு இன்றி மலர்ந்த கரிய அடியை உடைய வேங்கை மரத்தின் கரிய புற இதழ்களையுடைய மலர்கள் பரவியதால் அப்பாறைகள், வரிகளையுடைய பெரிய புலிகள் போன்று தோற்றமளிக்கும் பெரிய மலையை உடைய நாட்டின் தலைவனே!

முடிவுரை:


ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற வகையில், ஏற்றத் தாழ்வில்லாத ஒரு சமத்துவ வாழ்வியலை மேற்கொண்டவர்கள் ஆதித்தமிழர்கள். குறிப்பாக வணிகர்கள் தாங்கள் சென்ற இடங்களிலெல்லாம் தங்களின் மேன்மைமிக்க வாழ்வியலையும் சமூக அமைப்பையும் குறுநில அரசாண்மையையும் அறிமுகப்படுத்தி அதனைப் பரவச் செய்தனர்.  கொங்கு மண்டலத்தின் கொடுமணல் சிந்து சமவெளியையும் மெசபதோமியாவையும் இணைக்கும் சுவையான வரலாற்றை மீட்டெடுக்க உதவும் தரவுகள் ஏராளம். தமிழரின் தொன்றுதொட்ட வாழ்வியலைப் பற்றிக் கூறும் மேலைநாட்டு அறிஞர் ஒருவர், “தொல்தமிழர்கள் மகிழ்ச்சியாகவும், மன நிறைவுடனும் வாழ்ந்திருக்கிறார்கள்என்று குறிப்பிடுகின்றார். அதீத வளர்ச்சியைக் கண்டடைந்துவிட்ட இந்த நவீன காலத்தில் நாம் முக்கியமாக மீட்டெடுக்க வேண்டியதும் இதுவாகத்தான் இருக்கின்றது! தொலைத்ததைத் தொலைந்த இடத்திலிருந்துதானே மீட்டெடுக்க முடியும்? தொன்மை வரலாற்றைப் புரட்டிப்போட வேண்டிய அவசியமும் இங்குதான் உருவாகிறது.


சமயோசிதம்சரோஜினி நாயுடு அம்மையாரை ஒரு முறை ஒரு பொதுக்கூட்டத்திற்குப் பேச அழைத்திருந்தனர்.  நிரம்பிய சபையில் அம்மையார் உரையாட ஆரம்பித்தவுடன் கொஞ்ச நேரத்திலேயே மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு கும்மிருட்டில் மக்கள் கூச்சலிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். மின்னாக்கி (ஜெனரேட்டர்) போன்ற தொழில்நுட்பம் ஏதும் வளர்ச்சியடையாத காலகட்டம் அது. மின்சாரம் வரும்வரை மக்களைக் கட்டுப்படுத்த வேண்டும். அம்மையார்  திடீரென்று மக்கள் இருக்கும் திசை நோக்கி, நண்பர்களே,ஏன் இப்படி இருளைக் கண்டு கலவரமடைகிறீர்கள்? நான் தான் ஒளியுடன் வந்திருக்கிறேனே! ஏன் இப்படி கூச்சலிடுகிறீர்கள்? என்றவுடன் மக்கள் கூட்டம் அமைதியானாலும், அவர்களுக்கு ஐயம். எங்கு விளக்கு என்று தேடத்தான் செய்தார்கள். மீண்டும் அவர், உங்கள் மன இருளைப் போக்கும் அறிவொளி ஏற்றத்தானே நான் இங்கு வந்திருக்கிறேன், அமைதியாகக் காத்திருங்கள் என்றவுடன் மக்களின் கைதட்டல் ஒலி வானைப் பிளந்திருக்கும் என்று சொல்லவா வேண்டும்.. இதுபோன்று மக்களைக் கட்டுப்படுத்த சமயோசித அறிவாற்றலும் வேண்டுமே!