Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Wednesday, May 3, 2017

தீ .. தீ ... தீ..!



ஒரு செயலை வல்லமையுடன் செய்து முடிப்பவர் யார் என்பதையறிந்து அவரிடம் அப்பணியை ஒப்படைப்பவரே சிறந்த நிர்வாகி. இதனை உணர்த்தும் விதமாக நேற்று நடந்த சம்பவம்.. 


இதனையே வள்ளுவப்பெருந்தகை,

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.     குறள் # 517 என்கிறார்.


நேற்று இரவு மணி 12.10. அசந்து உறங்கும் வேளையில் ‘டமார்’ என்று ஒரு சத்தம் எதிரொலித்தது. தூக்கம் கலைந்து என்னவோ ஏதோ என்று வெளியே ஓடிவந்து பார்த்தால், பக்கத்து வீட்டில் , எதிர் வீட்டில் , அண்டை அயலார் என ஒரு சிறு கூட்டம் ஓடிவந்து கொண்டிருந்தனர் எங்களைப்போலவே. எங்கள் வீட்டின் அருகாமையில் எதிர்புறமாக இருந்த ஒரு சிறு தயாரிப்பு நிறுவனத்தில் தீ விபத்து . அனைத்தும் இரசாயணப் பொருட்கள் என்பதால் அனைவரும் அச்சத்தின் உச்சத்தில் உறைந்திருந்த நேரத்தில், தீயணைப்புத்துறைக்கு தொலைபேசியில் அழைக்க முயன்றபோது பதற்றத்தில் எந்த எண்ணும் நினைவில் வர மறுக்கிறது. என் கணவர் காரை எடுத்து சற்று தொலைவில் நிறுத்திவிட்டு தீயை அணைக்க தண்ணீர் பிடித்து ஊற்றிக்கொண்டிருந்தார். ஒருவழியாக 101 நினைவிற்கு வந்து அழைக்க முயன்றபோது லைன் பிசியாகவே இருந்தது. உடனே 108 அழைத்துவிட்டேன். அந்தந்த பகுதிக்கென்று ஆம்புலன்ஸ், தீயணைப்பு நிலையம், காவல்துறை என அனைத்திற்கும் தனி எண்கள் இருப்பது தெரிந்தும் அந்த அவசரத்தில் ஒன்றும் நினைவிற்கு வரவில்லை. இதுபோன்று முக்கியமான எண்களை கண்ணில் படும்படியாக எங்காவது எழுதிவைக்க வேண்டும் என்று ஊருக்கு உபதேசம் செய்யும் நாம் கோட்டை விடுவதும் நடந்துவிடுகிறது. 108 என்று பொத்தாம் பொதுவாக போன் செய்தது சென்னையின் பிரதான ஆம்புலன்சு நிலையத்திற்குச் சென்றிருக்கிறது. ஒரு பெண் தான் அழைப்பை ஏற்றிருந்தார். பதற்றமாக நான் ஏதேதோ வேகமாக பேசியதை பொறுமையாகக் கேட்டு, தன் அமைதியான கேள்விகள் மூலம் எங்கள் ஊர், தாலுக்கா, அருகிலிருக்கும் லேண்ட்மார்க் என அனைத்தையும் என்னிடமிருந்து வாங்கி, அங்கிருந்து தானே ஈரோடு இரயில் நிலையம் அருகிலிருக்கும் தீயணைப்பு நிலையத்திற்கு நேரடியாக இணைப்பைக்கொடுத்து பேசவைத்துவிட்டார். அடுத்த 30 நிமிடங்களில் தீயணைப்பு வண்டி வந்ததால் பெரும் இழப்பிலிருந்து பாதுகாப்பும் பெறமுடிந்தது. அந்தப் பெண் ஒரே வார்த்தையில் இது ஆம்புலன்சு, 101 தான் தீயணைப்பு நிலையம் என்று சொல்லியிருந்தால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் அவர் அப்படி செய்யாமல் ஆபத்தான இந்தச்சூழலை நிதானமாக மனிதாபிமானத்துடன் அழகாகக் கையாண்ட விதம் முகம் தெரியாத அந்தப் பெண்ணை மனதார வாழ்த்தவும், பாராட்டவும் செய்கிறது! உலகம் அவ்வளவு மோசம் இல்லீங்க..  நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். 

Friday, May 29, 2015

அழகு மயில் ஆட ........ !



பவள சங்கரி
நேற்று கோவையில் மருதமலை அடிவாரத்தில் அழகு மயில் அற்புதக் காட்சி காணக்கிடைத்த வரம்!
DSC_0091[1]
தண்டலை மயில்கள் ஆட,
தாமரை விளக்கம் தாங்க,
கொண்டல்கள் முழவின் ஏங்க,
குவளை கண் விழித்து நோக்க,
தெண் திரை எழினி காட்ட, தேம்
பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட, -
மருதம் வீற்றிருக்கும் மாதோ.
DSC_0086[1]
சோலைகளில் மயில்கள் ஆட, தாமரை மலர்கள் விளக்குகளை ஏந்தி நிற்க, மேகங்கள் மத்தளம் போலொலிக்க , குவளைக் கொடிகளின் மலர்கள் அழகிய கண்ணென விழித்துப் பார்க்க, நீர்நிலைகள் தம் அலைகளால் திரைச்சீலையாய் விரித்து காட்ட, தேனொத்த மகர யாழிசை போன்று வண்டுகள் இனிது பாட, மருத நாயகி வீறு தோன்ற அமர்ந்திருப்பது போன்றிருந்ததாம்… கம்பராமாயணத்தின் அற்புத வரிகள். கொண்டல் முழங்கின் மயில் ஆடும்; குவளை மலர்ந்திருக்கும் மாலைப் போதில் தாமரை குவிந்துவிடும், கோசல நாடும்,மருதத்தின் பீடும் என இரண்டையும் கம்பராமாயணத்தில் கம்பனின் கவிந‌யத்தில் கண்டு வியக்க வைக்கும் பாடல்களுள், இது கம்பர் கோசல நாட்டின் மருதநிலத்தின் வளத்தினை வர்ணிப்பதோடு அந்நாட்டின் செழிப்பினைத் திரையிட்டுக் காட்டுகிறது.

Sunday, March 8, 2015

தாயிற் சிறந்த கோயில் இல்லை!


பவள சங்கரி


பட்டினத்தடிகளின் உள்ளம் உருக்கும் பாடல்!

ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி
முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே
அந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்
வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டிய தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டு வேன்

Wednesday, September 17, 2014

எங்கள் இனிய விருந்தாளி!


இன்று காலை எங்கள் வீட்டு மொட்டை மாடியில் வழக்கமாக வரும் விருந்தாளி வந்து அழகாக போஸ் கொடுத்தார் ...... சரக்கொன்றை மரத்தில் மறைவாக உட்கார்ந்து கொண்டு அழகு காட்டுவதைப் பாருங்களேன்.... அவ்வப்போது ஜோடியும் வருவார்கள்... ஆனால் இன்று தனியாக வந்து 1 மணி நேரம் இருந்தாரே....

Thursday, January 2, 2014

தென்றல் இதழில் சொந்தச் சிறை


பவள சங்கரி

புத்தாண்டுப் பரிசாக அமெரிக்காவில் வெளியாகும்  தென்றல் இதழில் என் சிறுகதை வெளியாகியுள்ளதில் பெரும் மகிழ்ச்சி எனக்கு. இருக்காதா பின்னே.. என் பல சொந்தங்கள் இரத்த பந்தங்கள் எல்லாம் அமெரிக்கவாசிகள்! அவர்கள் கையில் இருக்கும் தமிழ் இதழில் என் கதை வந்தால் அவர்களுக்கும், எனக்கும் மகிழ்ச்சிதானே..  கதையை பிரசுரத்திற்கு ஏற்றுக்கொண்ட தென்றல் ஆசிரியர் குழுவிற்கு நன்றி பல.

சொந்தச் சிறை முழுமையாக வாசிக்க இங்கே 


Friday, November 1, 2013

இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்!


வணக்கம் நண்பர்களே,

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!



அனைவரும் நலமா? ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி வரத்தான் செய்கிறது. ஆனால் கூடவே மாற்றங்களும் வந்துகொண்டுதான் இருக்கிறது. சென்ற ஆண்டுபோல் இந்த ஆண்டு இல்லை. அடுத்த ஆண்டு எப்படியிருக்குமோ தெரியாது. இன்று மகிழ்ச்சியாக உள்ளதை உள்ளபடி ஏற்றுக்கொண்டு கொண்டாடிவிட்டுப்போகலாமே, இல்லையா? நாளைபற்றி யார் அறிவார்? அரசியலில் ஆரம்பித்து, சமுதாயம், குடும்பம், தனிப்பட்ட முறையில் என எத்தனை, எத்தனை மாற்றங்கள். இளம் வயதில் அப்பா, அம்மாவிடம் பட்டாசும், புதுத் துணியும் சண்டை போட்டு வாங்கியதில் இருந்த மகிழ்ச்சி இன்று நம் விருப்பம்போல வாங்கிக் கொண்டாடுவதில் இல்லை. அன்று என் சகோதரிகளுடன் சண்டை போடுவேன் அப்பா மொத்தமாக வாங்கிப் போடும் துணியில் நான் தான் முதலில் தேர்ந்தெடுத்துக்கொள்வேன் என்று! அதில் எத்தனை தில்லாலங்கடி வேலையெல்லாம் செய்வோம். நாம் விரும்பிய உடையும் பட்டாசு பங்கில் ஒரு மத்தாப்பு பெட்டி அதிகம் கிடைத்துவிட்டாலோ ஏதோ உலகமே நம் காலடியில் கிடப்பதுபோல அப்படி ஒரு பெருமை. தலை நிமிர்ந்து நடந்து செல்வோம். இன்று அப்படி சண்டை போடவும் ஆளில்லை எனும்போது விருப்பமும் குறைந்து போகிறது. பெற்றோர்கள் ஒரு புறம், பிள்ளைகள் ஒரு புறம், நாம் ஒரு புறம் எப்படியோ காலமும் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது, கணினி வழியாகவும், தொலைபேசி வழியாகவும்! இதோ தெருவே இன்று அமைதியாக இருக்கிறது. ஒரு காலத்தில் விடியலில் 3 மணிக்கே தெருவெல்லாம் ஜெகஜோதியாக இருக்கும். பட, பட.. சட.சடவென எங்கு பார்த்தாலும் சத்தம் காதைப் பிளக்கும். நாங்களெல்லாம் சந்தோசமாக விடியலில் எழுந்து அவ்வளவு சீக்கிரம் தலைக்குக் குளித்துவிட்டு புத்தாடை உடுத்திக்கொண்டு பட்டாசு வெடித்து முடித்து, பிறகு பலகாரங்கள் ஒரு பிடி, பிடித்துவிட்டு, அடுத்து அம்மா அக்கம் பக்கத்து வீடுகளுக்கு பலகாரம் கொடுத்தனுப்புவார்கள். மகிழ்ச்சியாக ஒடுவோம். புத்தாடையைக்காட்டி பெருமைப்பட வேண்டுமே.. அந்த மகிழ்ச்சியெல்லாம் இன்றைய பெரும்பாலான குழந்தைகளுக்கு கிடைக்காமலே போய்விட்டது. தெருவில் பாதி குடும்பம் வெளிநாட்டில். குழந்தைகள் இல்லாமல் தொலைக்காட்சி முன்பு பெற்றோர். எங்கிருந்து பட்டாசு சத்தம் கேட்கும்.. போகிற போக்கில் இந்த வாழ்க்கையே பழகிவிடும் போல் உள்ளது!

எது எப்படியோ தீபாவளி என்ற அந்த சொல் ஒரு இன்பத்தை கொடுக்கத்தான் செய்கிறது. அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் நண்பர்களே. அனைவரின் வீட்டிலும் மங்கலம் பொங்கட்டும்! எங்கள் மனமார்ந்த பிரார்த்தனைகள்.

அன்புடன்
பவள சங்கரி
திருநாவுக்கரசு

Wednesday, February 29, 2012

5 பதிவர்களுக்கு விருது + எனக்குப் பிடித்த ஏழு விசயங்கள்


நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொப்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை - குறள் 789

அன்பு நண்பர் பதிவர் வீடுதிரும்பல் versatile Blogger (பலதுறைகளிலும் திறமையுடைய வலைப்பதிவர்) என்கிற தனக்குக் கிடைத்த விருதை நால்வருக்கு பகிர்ந்தளித்திருக்கிறார். அதிலும் என்னையும் கருத்தில் கொண்டு சேர்த்திருப்பதற்கு மனமார்ந்த நன்றிகள். இந்த விருதிற்கு தகுதியுடையவளாக இனிமேலாவது என்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஊக்கமளித்திருக்கிறார். அவருடைய அன்புக்கட்டளையை சிரமேற்கொண்டு, எனக்குப் பிடித்த ஏழு விசயங்கள் + ஐந்து வெர்சடைல் பிளாகர் பற்றி எழுதுகிறேன். உண்மையைச் சொன்னால், குடும்பம், குழந்தைகள் என்ற முழு சிந்தையில் ஓடிக் கொண்டிருந்த வாழ்க்கையில் இந்த எழுத்தும் , வலைப்பதிவர்களின் ஆக்கங்களை இரசிப்பதுவும், அந்த ஊக்கங்களினால் என்னை நானே மேம்படுத்திக் கொள்ள போராடுவதுமே என் ஓய்வு நேர பொழுது போக்காக இருக்கும் போது எனக்கும் பிடித்த அதாவது எனக்கே எனக்காகப் பிடித்த விசயங்கள் என்று கேட்ட போது..... ரூம் போட்டு யோசிக்க வேண்டியிருந்தது என்பதுதாங்க உண்மை!

அடுத்தவர் நிலையில் இருந்து நம்மைப்பற்றி நாம் சிந்திக்கும் போதுதாங்க பல விசயங்கள் நமக்கே புதிதாகத் தெரிகிறது.... அட, பரவாயில்லையே இவ்ளோ நல்ல விசயங்கள் உனக்குப் பிடிக்கிறதா என்று என்னை நானே பாராட்டிக் கொள்ளவும் தோணுது... அதே சமயம் நம்மைப் பிடிக்காதவர்களின் நிலையிலிருந்து நம்மையே பார்க்கும் போது நம்முடைய தவறுகளும், நம் மீது அதிருப்தியைக் காட்டுபவர்களின் பக்கம் உள்ள நியாயங்களும் புரிகிறது. ஆக, எதையோ நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் இயந்திர வாழ்க்கையில் இது போன்று தற்சோதனை செய்யக்கூடிய வாய்ப்பு கிடைக்கப்பெற்றது வரம்... இதன் காரணகர்த்தாவை அறிய விருப்பம்... இந்த சங்கிலித் தொடர் நல்லபடியாக அனைவரையும் சென்றடைய வாழ்த்துகள்! சரி விசயத்திற்கு வருகிறேன். எனக்குப் பிடித்த ஏழு விசயங்கள் இதோ......

Inline image 2
(1) என்னை எப்பொழுதும் கொள்ளை கொள்ளும் இயற்கை அன்னைக்கே அந்த முதல் இடம். அந்த இயற்கை அழகில் அப்படியே கரைந்து நின்று விடுவேன். மனமும், உடலும் இளகி அப்படியே வானில் பறப்பது போன்று தோன்றும். வண்ண வண்ண அழகிய மலர்களும், அதைச் சுற்றிச் சுற்றி நாட்டியமாடும் வண்ணத்துப் பூச்சிகளும், சல்சலப்பில்லாமல் அமைதியாக ஓடிக்கொண்டிருக்கும் தெளிந்த நீரோடையும், தென்னை மரங்களும், நெல் வயல்களும், சுவர்க்க பூமிதான்... என் இளமைக் காலங்களில் பாட்டியுடன், விடுமுறை நாட்களில் அப்படி ஒரு சுவர்க்க பூமியில், கழித்த மறக்க முடியாத நாட்கள்... கற்பனையில் மட்டுமே இப்போது சாத்தியம்... அப்படி என்னையே மறந்து, அதனுள்ளேயே கரைந்து, மறைந்து போய்விட மாட்டோமா என்று பித்தாகி, ஏங்கி நின்ற ஓர் இயற்கை அதிசயம் என்றால் அது நயாகரா நீர்வீழ்ச்சிதான்.... மெய்மறந்து, கரைந்துறுகி, கண்ணில் நீர் மல்க, வைத்த கண் வாங்காமால், இரசித்த அனுபவம்... ஆடலரசரின் திருநடனத்தையேக் கண்டு களித்தது போன்று ஒரு மெய்சிலிர்க்கும் அனுபவம். அருமையான தியானம்!

Inline image 4
(2) அன்றாடம் வாழ்க்கையில் ஏற்படும் சவால்களை துணிந்து நின்று எதிர் கொள்ளும் நல்ல நண்பர்களை மிகவும் பிடிக்கும்... அடுத்தவர் துன்பத்தைக் கண்டு மனம் பொறுக்காதவர்கள், தானே ஓடி வந்து எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் வலிய உதவி செய்பவர்கள்.... பலரைச் சொல்ல முடியும். ஆனால் சிலரை மறந்து விட்டு விட்டால் அவர் மனம் புண்படுமே என்று எவரையும் குறித்து சொல்லவில்லை.. ஆனால் அவர்களெல்லாம் கட்டாயம் புரிந்து கொள்வார்கள்.

(3). எனக்கு அதிகம் பிடித்த என்று சொல்வதை விட, நான் அதிகம் நேசிக்கும், அதாவது தெய்வத்திற்கு சமமாக வழிபடும் அன்பே சிவங்கள்..... ஆம் தெய்வக் குழந்தைகளின் பெற்றோர். வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியும் பலவிதமான இன்னல்களையும், சவால்களையும் சந்திக்கக் கூடியவர்கள்... தங்களுடைய, இன்பம், உல்லாசம் என அனைத்து சாதாரண விசயங்களைக்கூட தியாகம் செய்யும் பெற்றோர். நான் அறிந்த ஒரு தம்பதியர் ஆறு ஆண்டுகள் குழந்தை இல்லாமல் பல கோவில்களும், விரதங்களும் மேற்கொண்டு போராடிப் பெற்ற குழந்தை ஹைபர் ஆக்டிவ் பாதிப்பினால் தங்கள் வாழ்க்கையில் அனைத்தையுமே தியாகம் செய்து அக்குழந்தையை நல்ல முறையில் வளர்ப்பதற்காகவே இந்த 11 ஆண்டுகளாக போராடிக் கொண்டிருப்பவர்கள்... நடமாடும் தெய்வங்கள்!

(4) நல்ல உணவு சமைப்பதும், அதை ருசித்து சாப்பிடுவதும் ரொம்ப பிடிக்கும். இண்டர்நேஷனல் உணவு வகைகளை சுவைப்பதில் மிகுந்த விருப்பம.. ஆனால் சைவ உணவு வகைகள் மட்டுமே.. சில வருடங்கள் முன்பு சுத்த சைவமாக மாறிவிட்டேன்... சைனீஸ் உணவு வகைகளும், தாய்லாந்து உணவு வகைகளும் மிகுந்த விருப்பம் உண்டு...இனிப்பு வகைகள் என்றால் கேட்கவே வேண்டாம்...
Inline image 5

(5) பயணம்:

பயணம் செல்வது மிக பிடித்தமான விசயம். அது தொலைதூர நீண்ட விமானப் பயணமாக இருந்தாலும், ரயில் அல்லது பேருந்து , உல்லாச உந்து இப்படி எதுவானாலும் கொண்டாட்டம்தான்.... பலவகையான மக்களையும், அவர்தம் வித்தியாசமான பழக்க வழக்கங்களையும் பற்றி அறிந்து கொள்வதிலும், அங்குள்ள இயற்கை அழகையும் ரசிப்பதிலும் தனி சுகம்தான்.
Inline image 6

(6) சுகமான சுமைகள்:

என் பலமும் இதுதான்..... பலவீனமும் இதுதான்.....

சுழன்று சுழன்று சூறைக் காற்றாய் சுற்றியடிக்கும் பாசம்!
நெருக்கி நெருக்கி திணறச் செய்யும் பாசம்!
நெருங்கி நெருங்கிச் செல்ல வழுக்கிச் செல்லும் பாசம்!
பிரித்து, பிரிந்து பேரிடர் செய்யும் பிரிய பாசம்!
பழித்து, கிழித்து இதயம் பிளக்கும் பாசம்!
சிரித்து, சிறைப் பிடித்து சித்தம் கலக்கும் பாசம்!
மறைத்து, மறைந்து மனதை மயக்கும் பாசம்!
கொடுத்து, பிடுங்கி கொடுமையாய் கும்மாளமிடும் பாசம்!
அடித்து, அணைத்து அசட்டையாய் அன்பு பொழியும் பாசம்!
நெருங்கினால், பிரிந்து, பிரிந்தால் நெருங்கி சாலம் காட்டும் மாயம்!
[அந்த பாசம்]

(7) இன்ப கானம்:

ஜேசுதாஸ், எஸ்.பி.பி. சித்ரா, இவர்களின் மெலோடி பாடல்கள் கண்களை மூடி மெய்மறந்து இனிமையா இரசிக்கப் பிடிக்கும். குறுக்கில் எந்த இடையூறும் இருக்கக் கூடாது... ஆயிரம் முறை கேட்டாலும் சரி முதல் முறை கேட்பது போல ஆரம்பத்திலிருந்து , இறுதி வரை எந்த சத்தமும் இல்லாமல் அமைதியாக கேட்க வேண்டும். பயண நேரங்களிலும், இரவு நேரங்களிலும், நிசப்தமாக கேட்கப் பிடிக்கும்..... எம்.எஸ் அம்மாவின் குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா என்றும் என் விருப்பத் தேர்வு.... அன்பே சிவம் பாடல் தொடர்ந்து பல முறை கேட்டாலும் அலுக்காதது... பணி நேரங்களில் பாட்டு கேட்பது பணியை பாதிக்கும்... அதனால் பணி நேரத்தில் பணி மட்டும், பாட்டு கேட்பதற்கு அதற்கான தனி நேரம்...சில நண்பர்களின் கவிதைகள் மிகவும் பிடிக்கும்.எளிய நடையில் படித்தவுடன் புரிய வேண்டும்...

ஏதோ பிறந்தோம், வாழ்ந்தோம் என்றில்லாமல் நாலு பேருக்கு நல்லது செய்தோம் என்று இருக்க வேண்டும். கண்களை நிரந்தரமாக மூடிய பின்னும் நமக்காக நாலு பேர் உண்மையாக நாலு சொட்டு கண்ணீர் விடவேண்டும், சற்று பேராசைதான் என்றாலும், அதுவும் ஒரு குறிக்கோளாய் ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கை!

ஐந்து பேருக்கு விருதைப் பகிர்ந்து கொடுக்க வேண்டும் அல்லவா..? நிறைய பேர் ஏற்கனவே விருது பெற்று விட்டார்கள் போல் உள்ளது... இப்போது நான் குறிப்பிடப் போகிறவர்களும் ஏற்கனவே பலப்பல முறைகள் பலப்பல விருதுகள் வாங்கியிருக்கக் கூடும். இருப்பினும் என் திருப்திக்காக கொடுக்கிறேன்...
Inline image 7

சிறுகதைகள், கவிதைகள், சுய முன்னேற்றம், ஆன்மிகம் மற்றும் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகள் என்று அறிவுத் தேடலில் திளைத்திருப்போருக்கான ஒரு வலைப்பூ...என்.கணேசன் அவர்களின் வலைப்பூ...

தெள்ளுதமிழ் நடை, மனம்கவர் கவிதைகள், என்று பிரம்மிப்பேற்படுத்தும் இவர் வலைப்பூ.... நேசமித்திரன் கவிதைகள்.

மிகச்சுவையான ஒரு வலைப்பூ. சமீபத்தில் வம்சி சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றவர்.... பல விசயங்களை அனாவசியமாக அலசுபவர். திரு அப்பாதுரை அவர்களின் மூன்றாம் சுழி....

வாழ்க்கையின் எளிய பக்கங்களை மட்டும் பார்ப்பது ஒரு சிறந்த தவம்... அதாவது சீரியசான விசயங்களைக் கூட மிக எளிதாக நகைச்சுவையாக சொல்ல வல்லவர்.. Scribblings வித்யா.

சிறுகதை, கவிதை என்று கலக்குபவர். இரண்டு பிளாக் வைத்திருக்கிறார். கவிச்சோலை மற்றும் பாகீரதி என்று......... நிறைய எழுதிக் கொண்டிருந்தவர், இப்போது பணியில் பிசி என்கிறார். விரைவில் நிறைய எழுத வாருங்கள் எல்.கே..

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

Wednesday, July 28, 2010

வெற்றிக் கனியை எட்டிப் பிடிக்க வேண்டுமா.........? வாருங்கள்..............















இன்பமும், துன்பமும் பிறர் தர வாரா !!

நம்முடைய வெற்றிக்கும், தோல்விக்கும் நாமேதான் முழு காரணமாகிறோம்.வாழ்க்கையில் வெற்றியடைய வேண்டுமா? அதற்கு என்ன செய்ய வேண்டும்,மற்றும் செய்யக் கூடாது? வாருங்கள் பார்க்கலாம்.

ஒவ்வொரு ஆண்டும், புது வருடத்தில், நாம் ஒரு சில தீர்மானங்கள் எடுத்துக் கொள்கிறோம். அப்படி எடுத்துக் கொள்ளும் தீர்மானங்களை செம்மையாக நிறைவேற்றும் பட்சத்தில், நம்முடைய வாழ்க்கை தரம் உயரும் வாய்ப்பு அதிகரிக்கிறது. எந்தக் காரியத்தையும் தள்ளிப் போடாமல் செய்ய வேண்டிய வேளையில் தவறாமல் செய்ய வேண்டும் என்கிற ஒரு தீர்மானம் எடுக்கும் பட்சத்தில், நாம் வெற்றியை நோக்கி எடுத்து வைக்கும் முதல் படியாக அது மாறி விடுகிறது என்பதில் ஐயமில்லை.! அதனால் நாம் எக்காரணம் கொண்டும் நம்முடைய கடமைகளைத் தள்ளிப் போடுவதில்லை என்ற தீர்மானம் எடுத்துக் கொள்ளத் தயங்கக் கூடாது.

தாம் தள்ளிப் போடுபவர் இல்லையே என்ற எண்ணம் ஒவ்வொருவருக்குள்ளும் இருந்தாலும், பெரும்பாலும் ஏதோ ஒரு சூழ்நிலையில், ஏதோ ஒரு காரணத்திற்காக நாம் தள்ளிப் போட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்.

உதாரணமாக, பலர் சிரமமான காரியங்கள் என்பதற்காகவோ, நீண்ட வரிசையில் நின்று பில் கட்டுவது, பல நாட்களாக சேர்த்து வைத்திருக்கும் பரண் குப்பையைச் சுத்தம் செய்வது போன்ற வேலைகளை முடிந்த வரை தள்ளிப் போட்டுத்தான் செய்கிறார்கள். ஆனால், சமீபத்தில் எடுத்த ஒரு ஆய்வறிக்கையின்படி 25%தினர், இது போன்ற பழக்கம், தங்கள் வாழ்க்கையில் ஒரு தீராத பிரச்சனையாக உள்ளதென்றும், 40%தினர், பல நேரங்களில் இந்தத் தள்ளிப் போடும் வழக்கத்தினால், பல வாய்ப்புக்களையும், வருமானங்களையும் கூட இழந்திருப்பதாகவும் ஒப்புக் கொண்டுள்ளனர்.இதனால் எத்தனையோ, இழப்புக்களை சந்திக்கவும் நேரிடலாம்.

இந்த பழக்கம் விலைமதிப்பில்லாத நேரத்தை மட்டும் வீணடிக்காமல், மன அழுத்தத்தையும் அதிகரிக்க வல்லதாயினும், நம்முடைய குறிக்கோளை அடைவதிலும், கனவு நிறைவேறுவதிலும் தடைகளை ஏற்படுத்திவிடுகிறது. இது பிறவிப் பழக்கமோ, பரம்பரைப் பழக்கமோ அல்ல. இடையில் கற்றுக் கொள்ளும் ஒரு தீய பழக்கமே என்கின்றனர், வல்லுனர்கள்.இந்தப் பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கு,முதலில், நாம் எந்த வகையில் நேரத்தை வீணடிக்கிறோம் என்பதை இனம் காண வேண்டும்.இதற்காகப் பல மனோதத்துவ நிபுணர்கள் பல வழிமுறைகளைக் கண்டறிந்துள்ளனர். அதைப் பற்றி பார்ப்போம்.

முதற்படி; எப்பொழுது,எப்படி, ஏன் தள்ளிப் போடுகிறோம்? நம் வாழ்க்கையில் ஏதோ ஒரு பகுதியில்தான் நாம் இதைச் செய்கிறோம். உதாரணமாக, பலர் தன் அன்றாடக் கடமைகள் எல்லாவற்றிலும் மிகத் தெளிவாக இருப்பவர்கள், வழக்கமான மருத்துவப் பரிசோதனை, உணவுக் கட்டுப்பாடு, போன்றவற்றில் கோட்டை விட்டு டிடுவார்கள்.இதனைக் கண்டு பிடிப்பதற்கு, கடந்த 6 மாத காலத்தில் நாம் எதற்கெல்லாம் தள்ளிப் போட்டிருக்கிறோம் என்பதைப் புரட்டிப் பார்க்க வேண்டும்.நம்முடைய தொழில் சம்பந்தப்பட்டதாகவோ, சமூக வாழ்க்கை, பொருளாதாரச் செயல்கள், இப்படி எதுவாகவும் இருக்கலாம். இது எதனால் தள்ளிப் போடப் பட்டது? பயம், சலிப்பு, களைப்பு, நன்றாக செய்ய வேண்டும் என்ற பேராவலாகவும் இருக்கலாம். இல்லை வேறு ஏதாவது பொழுது போக்கில் ஈடுபட்டு, இதையெல்லாம் தள்ளிப் போட்டோமா? இதைக் கண்டறிந்தாலே அதிலிருந்து, எளிதாக மீண்டு விடலாம்.

இரண்டாம் படி; நாம் எப்பொழுதுமே மிக நன்றாக ஒரு காரியத்தை செய்ய வேண்டும் என எதிர் பார்ப்போமானால், எல்லாவற்றையும் குழப்பிக்கொள்ளாமல் நிதானமாக நன்றாகச் செய்யலாம் என்று தள்ளிப் போடுவோம். தகுதிக்கு மீறிய உயர்ந்த தரத்தை எதிர்பார்ப்பதை தவிர்த்தாலே, இது போன்று தள்ளிப் போடுதலைத் தவிர்க்கலாம், என்று நியூயார்க்கைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் ஜூலி, தன்னுடைய TIME MANAGEMENT FROM THE INSIDE OUT, என்கிற பத்திரிக்கையில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். அதற்காக ஒழுங்கு முறையைக் கைவிட்டு விட வேண்டும் என்பது பொருளல்ல. தேர்ந்தெடுத்த ஒழுங்கு முறையைக் கடைப் பிடித்தாலே போதும்.எந்த வேலைக்கு அதிகப் படியான கவனம் தேவைப் படுகிறது என்பதைக் கண்டறிய வேண்டும்.இப்படிச் செய்வதால் முக்கியமாகத் தேவையான இடத்தில் நம் நேரத்தைச் செலவிட முடியும்.

மூன்றாம் நிலை; ஒரு வேலையை நாம் தள்ளிப் போடுவதற்கான காரணம் பல நேரங்களில் நம் அணுகு முறையால் தான். உதாரணமாக, தாம் எழுத வேண்டிய கணக்குகள், அல்லது, வரவு செலவுக் கணக்குப் போடுவது போன்ற வேலையை இரவு 10 மணிக்கு மேல் செய்வது. நம்முடைய தெளிவான சிந்தனைக்கு முட்டுக் கட்டை போடக்கூடிய அந்த வேலையைத் தேர்ந்தெடுப்பது, தம் வேலையைத் தள்ளிப் போடத் தூண்டுகிறது.

இது போன்று தொடர்ந்து தள்ளிப் போடுகிறோம் என்றால், அந்த வேலையச் செய்யும் முறையை சற்றே மாற்றியமைக்க வேண்டும் சலிப்படையச் செய்யக் கூடிய வேலைகளைச் செய்ய முற்படும் போது விடுமுறை நாளையோ, ஓய்வாக இருக்கும் நேரத்தையோ தேர்ந்தெடுத்து, மனம் விரும்புகிற நல்ல பாடலோ, பிடித்த உணவு வகைகளோ, பக்கத்தில் வைத்துக் கொண்டு செய்ய முற்பட்டால எப்படித் தள்ளிப் போடும் எண்ணம் வரும்? எந்த வேலையாக இருந்தாலும், அதை விருப்பத்துடன் உற்சாகமாக, நகைச்சுவை உணர்வுடன்,ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு செய்ய வேண்டும்.அப்படியும் செய்ய முடியவில்லையென்றால் வேறு யாராவது மூலமாக வேலையை முடிக்கப் பார்க்க வேண்டும். தம்முடைய பொறுப்புக்களைத் தட்டிக் கழிக்கப் பார்ப்பதால், அதை நிறைவேற்றுவதற்குரிய சக்தியையும், நேரத்தையும் விட அதிகமாக செலவிட வேண்டி வரும், என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

நான்காம் நிலை; சில நேரங்களில் நாம் மிகவும் விரும்பிச் செய்யக் கூடிய வேலைகளைக் கூடத் தள்ளிப் போட நேரிடுகிறது. உதாரணமாக நல்ல அழகான கண்ணாடி ஓவியம் செய்து புதிதாகக் கட்டிய நம்முடைய வீட்டின் வரவேற்பறையில் மாட்ட வேண்டும் என்ற ஆசை. நம்முடைய மற்றப் பணிகள் மற்றும் பொறுப்புகள் காரணமாக இது தள்ளிப் போய்க்கொண்டே இருக்கலாம். கை வேலைகள் செய்கின்ற வேறு நண்பரையோ அல்லது பயிற்சி வகுப்பின் மூலமாகவோ ஒரு ஊக்கச் சக்தியைப் பெற்று, மளமளவென வேலையை முடிக்க முயல வேண்டும். அப்படி ஒரு வேலையை முடிக்கும் பட்சத்தில் ,அதை நமக்குப் பிடித்த உணவோடு, குடும்பத்துடன், கொண்டாடலாமே. சில நேரங்களில் ஒரு காரியத்தில் இறங்கும் போது, அதனால் அவமானப் பட்டுவிடுவோமோ அல்லது தவறாகப் போய்விடுமோ என்ற அச்சம் காரணமாகக் கூட தள்ளிப் போட்டுக் கொண்டே இருப்போம்.இது போன்ற நேரங்களில் நாமே நன்றாக சிந்தித்து எதற்காக அஞ்சுகிறோம் என்பதைக் கண்டறிந்து, அதனைத் தவிர்க்கப் பார்க்க வேண்டும். முடியவில்லையென்றால், நண்பர்களிடம் ஆலோசனை பெற்றாவது, அக் காரியத்தைத் தொடர முயற்சிக்க வேண்டும். அந்தக் காரியத்தின் மூலம் நமக்கு ஏதாவது ஆதாயம் கிடைக்கின்ற பட்சத்தில் அதை எப்படியாவது முடிக்க முயல வேண்டும்.

அமெரிக்க வல்லுனர்களான ரீட்டா மற்றும் ஜூலி ஆகியோரின் ஆலோசனைப்படி, அன்றாடம் முடிக்க வேண்டிய வேலைகளைக் குறிப்பெடுத்து வைத்துக் கொண்டு, அதனை தம் கைப்பட எழுதிக் கொள்ள வேண்டும்.

தேவையான ஓய்வு எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வேலை செய்யும் நேரத்தை நம்மையறியாமல் அது கைப்பற்றிவிடும்.

மிகவும் சலிப்படையச் செய்யக் கூடிய நீண்ட வேலையாக இருக்கும் பட்சத்தில், அதைப் பிரித்து ஒரு வாரத்திலோ அல்லது மாதக் கணக்கிலோ குறிப்பிட்டு நிர்ணயித்து சலிப்படையாமல் செய்து முடிப்பதற்கு வழி வகுத்துக் கொள்ள வேண்டும்.

போனில் பேசுவது, படிப்பது, எழுதுவது, இப்படிப்பட்ட மன உற்சாகம் அளிக்கக் கூடிய செயல்களுக்காகவும் நேரம் ஒதுக்க வேண்டும்.

மேற்கண்ட அனைத்து விசயங்களையும் உள் வாங்கி, செம்மையாக நம் கடமையை நேரந்தவறாமல் செய்யும் போது, வெற்றி நிச்சயம்தானே!!!!!! .


இளைஞர்களே............எங்கே போகிறோம்?


வசந்த கால பொன்மாலைப் பொழுது. பரந்து, விரிந்து, விழுதுகள் ஊன்றி நிழல் பரப்பிக் கொண்டிருக்கும், நெடிதுயர்ந்த ஆலமரம். அதன் உச்சியில் இரு கிளைகள் சங்கமிக்கும் இணைப்பின் மடியில் ஒரு குச்சி வீடு, அழகிய குருவிக்கூடு. குருவிக் குஞ்சுகள் குக்கூ......குக்கூ........குக்கூ என்று விடாமல் கத்திக் கொண்டேயிருக்க, சர் என்று எங்கிருந்தோ பறந்து வந்த தாய்க் குருவி அந்த குஞ்சுகள் ஒவ்வொன்றுக்கும் உணவை ஊட்டிக் கொண்டிருந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக பறக்கவும் கற்றுக் கொண்டிருந்தன அந்தக குருவிகுஞ்சுகள் நாட்கள்தான். குஞ்சுகள் மெல்ல, மெல்ல பறக்கவும் கற்றுக் கொண்டிருந்தன, அந்தக் குஞ்சுகள். சில நாட்களிலேயே நன்கு பறக்க கற்றுக் கொண்டு, தன் இரையைத் தானே தேடவும், தனக்காக கூடு கட்டிக் கொள்ளவும் பழகிவிட்டன. பறவைகள், மிருகங்கள் எல்லாமே இப்படித்தான், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் சுதந்திரமாக இருக்கவே பழகிக் கொள்கின்றன.

ஒரு தாய்ப்பறவை தன் குஞ்சுக்கு ஊட்டி வளர்க்கும் இந்த சுதந்திரப் பண்பு மனிதர்களும் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியமான ஒன்றாகும். தாங்கள், தங்கள் குடும்ப உறவுகளை சிரம் மேல் தாங்கி தங்கக் கூண்டில் எந்தப் பாதிப்பும் வராத வகையில் பாதுகாக்க வேண்டும் என்றுதான் ஒவ்வொரு மனிதனும் எண்ணக் கூடும். ஆனால் அதன் அளவு கோளில் ஒரு நிர்ணயம் வேண்டும். அதிக பாதுகாப்பு உணர்ச்சி, அவர்கள் வாழ்க்கை முன்னேற்றத்தைப் பாதிக்கச் செய்யும் பாச வலையாக மாறிவிடக் கூடாது . பெண் குழந்தைகளை பொத்தி வளர்க்க வேண்டியது எவ்வளவு அவசியமோ, அதே அளவு அவர்களுக்கு தனித்து சுதந்திரமாக இயங்கக் கூடிய தைரியத்தையும், முடிவெடுப்பதில் ஒரு தெளிவையும் ,எப்பேர்ப்பட்ட, சூழலிலும் தன்னைத்tதானே தற்காத்துக் கொள்ளவும் , சுய கட்டுப்பாட்டுணர்வையும், சிறு வயது முதலே ஊட்டி வளர்க்க வேண்டியதும் அவசியமாகிறது.

இன்றைய காலகட்டத்தில், பெண் குழந்தைகளும், படிப்பு, மற்றும் பணி காரணமாக தனியாக வெளிநாடுகளில் கூடச் சென்று வருடக் கணக்கில் தங்க வேண்டிய சூழ்நிலை க்கு ஆளாகிறார்கள். அதிக கட்டுப் பாட்டுடன் வளரும் குழந்தைகள், முதல் முறையாக முழுமையான சுதந்திரம் பெறும் போது, காணாததை கண்டது போன்ற ஒரு நிலைக்குத் தள்ளப் படுகிறார்கள். அது அவர்களின் வாழ்க்கைச் சூழல் மட்டுமன்றி பெற்றோரின் கனவு, நம்முடைய இந்தியப் பண்பாடு கலாச்சாரம் அத்துனையையும் பதம் பார்த்துவிடுகிறது.

மதுரையிலிருந்து வந்த ஒரு பெண்ணும் சென்னையிலிருந்து வந்த ஒரு இளைஞனும் அமெரிக்காவிற்கு பணி நிமித்தம் சென்றவர்கள், கண்ணோடு கண் நோக்கியதன் விளைவு, இன்று இருவரும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து [?] கொண்டிருக்கிறார்கள். இதையறியாத பெற்றோர் அவர்களுக்கு இந்தியாவில் வரன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

திடீரென ஒரு நாள் இது தெரிய வரும் போது அவர்கள் நிலை என்னவாகப் போகிறது என்று ஒரு பெற்றோரின் நிலையிலிருந்து யோசிக்கும் போது பேரதிர்சியாக உள்ளது. நம் குழந்தைகள் திரைகடல் ஓடியும் திரவியம் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்று பெருமைப் படும் அதே வேளையில் நம் கலாச்சாரம் எப்படியெல்லாம் சீரழிகிறது என்று சிந்தித்தால் அடிவயிறு கலங்கத்தான் செய்கிறது.

இன்னும் இருக்கிறது................

Tuesday, July 27, 2010

அடடா.........டென்சன் பார்ட்டியா.........நீங்க?

அவசரமாக அலுவலகத்திற்கு கிளம்பும் நேரம். இரண்டு சக்கர வாகனம் பழுது காரணமாக புறப்பட மாட்டேன் என்று அடம் பிடிக்கும் அந்த நேரத்தில், மன உளைச்சல் அதிகமாகி, வண்டியை காலால் உதைத்தால், கால் தான் வலிக்குமே தவிர வண்டி நகராது.அதை உணர்ந்து,அடுத்து என்ன செய்ய வேண்டும், ஆட்டோ பிடித்து போகலாமா அல்லது நண்பரிடம் உதவி கேட்கலாமா,என்பதைத்தானே யோசிக்க வேண்டும்.

மன அழுத்தம் ஏற்படுத்தக் கூடிய பதற்றமான மனோநிலை, சக்கரை வியாதி, அல்சர், இரத்தக் கொதிப்பு போன்ற பல வியாதிகளை முன் மொழியும் என்பதும் அனைவரும் அறிந்ததே.


வாழ்க்கைச் சூழலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள், அதன் காரணமான மோதல்கள், மற்றும் சவால்களை எதிர் கொள்ள வேண்டிய தருணங்கள், இவை அனைத்தும் மன அழுத்தத்தை தவிர்கக முடியாததாக்கிவிடுகிறது. மன அழுத்தத்தை தவிர்க்க இயலாவிட்டாலும், இதன் பின் விளைவுகளையாவது நம் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள முடியும். இதற்கான யதார்த்தமான, நிரூபிக்கப்பட்ட சில வழிமுறைகள் பற்றிக் காண்போம்.

முதன் முதலில் சரியான, நெறிமுறைப் படுத்தப்பட்ட வாழ்க்கை முறை, பெரும்பாலும் மன அழுத்தத்தைக் குறைக்க வல்லது என்பது வல்லுனர்களின் ஒருமித்த கருத்தாகும்.

இதனை திட்டமிடுவதற்காக நாம் எடுத்துக் கொள்ளக் கூடிய நேரமே, இதற்கான மூலதனம் ஆகும். அதாவது அந்த வாரத்திற்குரிய வேலைகளை முதலில் திட்டமிடல் வேண்டும்.

வேலைக்குச் செல்லும் பெண்களாக இருந்தால் அந்த வாரம் முழுவதும், என்ன சமைக்கப் போகிறோம் என்பது வரை அனைத்து விபரங்களையும் முன் கூட்டியே முடிவு செய்து வைத்துக் கொள்ளலாம்.

வியாபாரம் செய்பவர்களாக இருந்தாலும் அந்த வாரத்திற்குரிய முக்கியமான அலுவல்கள், வங்கிக் கணக்கு வழக்குகள், வசூலுக்குச் செல்ல வேண்டிய நாட்கள் இப்படி அனைத்தையும் முடிந்த வரை வாரக் கடைசி நாளே, தீர்மானித்து, நாட்குறிப் பேட்டில் குறித்து வைத்து விட வேண்டும்.எல்லா வேலைகளையும் தானே பார்த்துக் கொள்ளும் பேர்வழி என்று, நேரம் போதாமல் மன அழுத்தத்தை ராக்கெட் வேகத்தில் எகிற விடாமல், குடும்பத்தில் உள்ளவர்களிடமோ, தமக்குக் கீழ் பணிபுரிபவர்களிடமோ பங்கிட்டுக் கொள்ள வேண்டும்.

உணவின் மூலமாக ஆறுதல் பெற முடியும்.!
பெரும்பாலானவர்களுக்கு, மிகவும் மன உளைச்சலான நேரங்களில் ஏதாவது உணவு உட்கொண்டால், அது ஆறுதல் அளிப்பதாக இருக்கும். இதற்கான முதல் இடம் அரிசி உணவிற்குத்தான். மாவுப் பொருட்கள், மூளையில் சுரக்கின்ற செரோடினின் என்கிற இரசாயனப் பொருள் அளவை அதிகப்படுத்தி, முழு உடலுக்கும் ஒரு அமைதியைக் கொடுக்க வல்லதாம். இதன் காரணமாக மன அழுத்தத்தினால் வரக்கூடிய, கோபம், எரிச்சல் மற்றும் மனதை ஒருநிலைப் படுத்த முடியாத தன்மை போன்றவைகள் மட்டுப்படுத்தப் படுகிறது. இந்த மாவுப் பொருட்களின் சக்தி 2 முதல் 3 மணி நேரம் வரைதான் இருப்பதால் கலோரியின் அளவைக் கவனத்தில் கொண்டு அந்த உணவை 5 அல்லது 6 முறையிலான குட்டி உணவாகப் பிரித்து உண்ணலாம்.

சூழ்நிலைகளால் ஏற்படுத்தக் கூடிய மன அழுத்தத்தை சற்று நிதானமாகக் கையாண்டால், எளிதாக சமாளிக்க முடியும். எப்படிப்பட்ட சூழ்நிலையாக இருந்தாலும், சறிது சிந்தித்து , அந்த குறிப்பிட்ட விசயத்தை விட்டு சற்றே வெளியே வந்து, அடுத்தவர் நிலையிலிருந்து, யோசித்தாலே போதும்.அந்தச் சூழல் மிக எளிதாகிவிடும். பிறகு தாமே தீர்வையும் கண்டு விட முடியும்.

நடைப் பயிற்சி, மன அழுத்தத்தைக் குறைக்கும் மாயச் சக்தியாகும்.அன்றாடம் குறைந்தது, முப்பது நிமிடங்களாவது, நடக்கும் வழக்கத்தைக் கொள்ளவேண்டும். இது மன அமைதியுடன் உடல் ஆரோக்கியத்தையும் ஊக்குவிக்கும்.

தினந்தோறும் முடிந்தவரை, ஒரு அரை மணி நேரமாவது, தான் மிகவும் விரும்பும் ஏதாவது ஒரு பொழுது போக்கில் ஈடுபடுவது நன்மை பயக்கும். முக்கியமாக குடும்ப விழாக்கள், நண்பர்கள் வீட்டு விழாக்கள் என்று இப்படி ஏதாவது வாய்ப்பு கிடைத்தால் அதை நழுவ விடக்கூடாது.

தவிர்க்க முடியாத நெருக்கடியான சூழ்நிலையில் மன இறுக்கத்தை தளர்த்துவதற்கு மிக எளிமையான ஒரு சிறியப் பயிற்சியை பற்றி பார்ப்போம். இதற்கு, "வயிற்று சுவாசம் " என்று பெயர். இந்த மூச்சுப் பயிற்சியினால் நுரையீரல் முழுவதும் நிறைந்து மூளைக்கு அத்தியாவசியமான ஆக்சிஜனை துரிதப் படுத்துகிறது.

ஆழ்ந்த, நிதானமான மூச்சை மூக்கின் வழியாக எடுத்து, அது அடி வயிறு வரை செல்வதை உணர வேண்டும். இப்பொழுது நீண்ட, மெதுவான மூச்சை வெளிவிட வேண்டும். வயிறு அப்படியே உள்ளே போய் சம நிலையில் இருப்பதை கவனிக்க வேண்டும். உள்ளே இருக்கும் மூச்சு கண்டிப்பாக அமைதியையும், நிம்மதியையும் அளிக்க வல்லதாக கற்பனை செய்ய வேண்டும். அதே போல் மூச்சு வெளியே விடும் போது அதனுடன் சேர்ந்து மன அழுத்தமும் போய் விடுவதாக நினைக்க வேண்டும். இது மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக் கூடிய ஒரு சிறந்த பயிற்சியாகும்.

எந்த காரியமாக இருந்தாலும் அதன் எளிதான பக்கத்தை மட்டும் பார்க்க பழகிக் கொள்ள வேண்டும்.

சந்திரன், ஒரு பெரிய அறுவை சிகிச்சைக்காக மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டார். அறுவை சிகிச்சை அரங்கிற்கு உள்ளே செல்லும் நேரம், அவருடைய மகனும், மனைவியும் கலங்கி, செய்வதறியாது நிற்க, உடனே, அவர்களுடைய குடும்ப நண்பர், வடிவேலு பாணியில்," ஃபீலிங்ஸ்ஸ்......... சரி சரி ஓவரா ஃபீல் பண்ணாதீங்க, இன்னும் 2 மணி நேரத்திலே வெளியே வந்துடுவாப்ல. அப்பறம் சண்டையை வைச்சுக்கலாம்", என்று சொல்லவும் எல்லோரும் கொல்லென்று சிரித்து விட்டனர், சந்திரன் உட்பட. இலேசான மனதுடன் சென்று நல்லபடியாக அறுவை சிகிச்சை முடிந்து திரும்பியும் விட்டார், சந்திரன். "வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்", என்பார்கள்.நல்ல மனமார்ந்த சிரிப்பு, சதை இறுக்கத்தை தளர்த்தி, இரத்தக் கொதிப்பை மட்டுப்படுத்தி மன அழுத்தம் சம்பந்தப்பட்ட ஹார்மோன்களைக் குறைத்து, நோய் எதிர்ப்புச் சக்தியை ஊக்குவிக்கிறது.

மன அழுத்தமான நேரத்தில் காபி, கோகோ குளிர் பானங்கள் போன்றவைகள் நல்லதல்ல.

தொடர்ந்து கடுமையாக உழைக்க வேண்டிய நேரத்தில் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் ஒரு சிறு ஓய்வாவது எடுக்க வேண்டும்.

தினந்தோறும் காலை வேளையில் அமைதியாக தியானம், பிரார்த்தனை, இவைகளை செய்வது நாள் முழுவதும், அதிகமான மன அழுத்தம் ஏற்படுத்தும் நார் அட்ரினலின் மற்றும் அட்ரினலின் போன்ற ஹார்மோன்களைக் கட்டுப் படுத்தி, அதனால் ஏற்படக்கூடிய பாதிப்பைக் குறைக்கிறதாம்.

இறுதியாக ஒன்றை நாம் நன்றாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது, நம்முடைய உள்மன அமைதி என்பது நம்மிடம் மட்டுமேதான் உள்ளது. எந்த மருத்துவரும், எந்த மருந்தும் இதற்கு துணை புரியாது. அதை உணர்ந்து நாமே நம்மை அமைதியாக்கிக் கொள்ள வேண்டும்!!
,

Saturday, July 24, 2010

என்.... குழந்தையா........இப்படி......?

சமீபத்தில் என் தோழி ஒருவரை நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்க நேரிட்டது. இயல்பாகவே கலகலப்பான சுபாவமுடைய அவள் முகத்தில் ஏனோ ஒரு சோகம், காரணம் கேட்டபோது எனக்கும் அதிர்சியாக இருந்தது. குழந்தைகள் வளர்ப்பில் இன்று அதிகப்படியான அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டிய கால கட்டத்தில் இருக்கிறோம்.அவர்களின் படிப்பை மட்டும் குறியாகக் கொண்டு, சில நேரங்களில் மற்ற பழக்கவழக்கங்களை கவனிக்காமல் விட்டுவிடும் போது அது பெரிய ஆபத்தில் கொண்டு விட்டுவிடுகிறது.

என் தோழிக்கும் அப்படித்தான் ஆனது. இந்தத் தம்பதியருக்கு ஒரே செல்ல மகன் . ஏழு வருடங்கள் தவமிருந்து பெற்ற பிள்ளை. அதனால் இயல்பாகவே அதிக செல்லம் கொடுத்து வளர்த்து விட்டார்கள்.ராஜா வீட்டு கன்றுக் குட்டி போல வளர்ந்து வந்தான். ஒரு பெரிய கான்வென்ட்டில் படித்துக் கொண்டிருந்தான். இயல்பாகவே நல்ல புத்திசாலியான அவன் படிப்பில் திடீரென தொய்வு ஏற்பட்டது. அவன் நடவடிக்கைகளிலும் சிறிது, சிறிதாக மாற்றம் தெரிய ஆரம்பித்தவுடந்தான், பெற்றோருக்கு சந்தேகம் வர, அவனை கவனித்துப் பார்த்ததில், அவனுக்குப் போதைப் பழக்கம் இருப்பது தெரியவர, பேரதிர்ச்சிக்குள்ளானார்கள், பெற்றோர். நாளுக்கு நாள் அவன் அழிச்சாட்டியம் தாங்க முடியாமல் போனது. ஒரு கட்டத்தில், சே, இபபடி ஒரு பிள்ளை நமக்குத் தேவைதான என்று வெம்பி , வேதனைபட வேண்டியதாகியது. இது யாருடைய தவறு. ஏன் இப்படி நடந்தது ?

சில பெற்றோர்கள், போதைப் பழக்கங்கள் பற்றி குழந்தைகளிடம் விவாதிப்பது தவறு என்று எண்ணுகிறார்கள். பள்ளிக்கூடங்களில், அறிவுறுத்துவது மட்டுமே போதும் என்று எண்ணிவிடுகிறார்கள். இது தவறு. குழந்தைகள் நலனில் பெற்ரோரை விட அதிக அக்கரை யார்தான் எடுத்துக் கொள்ள முடியும்? குழந்தைகளுக்கு அறிவுறுத்தும் முன் எந்தெந்த எந்தெந்த விதமாக குழந்தைகள் தவறு செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பதை முதலில் உணர வேண்டும். இன்று பலவிதமான போதைப் பொருட்கள் புழங்க ஆரம்பித்துவ்ட்டன. தாங்கள் வாழக்கூடியப் பகுதியில் எது போன்ற புழக்கம் அதிகமாக உள்ளது என்பதை முதலில் கண்டுபிடிக்கவேண்டும்.பிறகு அது குறித்த விழிப்புணர்வை குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும்.

குழந்தைகளுக்கு அறிவுறுத்தும் போது திறமையான, மனதில் ஆழப்பதியும் படியான சொற்களைப் பயன்படுத்த வேண்டும்.தான் தன் மனம் போன போக்கில் வாழும் பெற்றோர்கள், குழந்தைகள் மட்டும் எந்த தவறும் செய்யாமல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதிலும் அர்த்தமில்லை. பெரும்பாலான இளைஞர்கள் முதலில் முயற்சிப்பது புகைபிடிக்கும் பழக்கம்தான்.

போதைப் பழக்கத்திற்கு அடிமையான விடலைப் பருவத்தினருக்கு பெரும்பாலும் பெற்றோர்களே முன்னோடிகளாக இருப்பதாக, ஐக்கிய நாடுகளின் நேஷனல் கவுன்சிலின் போதைத்தடுப்பு பற்றிய விவாதத்தின் போது அறுதியிட்டுக் கூறியுள்ளது.

பெரும்பாலான நேரங்களில் மதுப்பழக்கம் உடையவர், அதிக வேலை காரணமாக அசதி தெரியாமல் இருப்பதற்காகவும், மனச் சஞ்சலம் அதிகமானதால் குடிப்பதாகவும் கூறுகின்றனர். இதைக் கவனிக்கின்ற குழந்தைகள் மனநிலையில் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி சிந்திக்க வேண்டும்.

குழந்தை, அப்பா ஏன் குடிக்கிறார் என்று கேட்கும்போது, அப்பா பெரியவர், அந்த சுவை அவருக்குப் பிடித்திருக்கிறது , அதனால் ஏதோ சில நேரங்களில் குடிக்கிறார், என்றுதான் சொல்ல வேண்டும். அப்பாவிற்குத் தேவையாக இருப்பதால் குடிக்கிறார் என்ற வார்த்தையை கண்டிப்பாக நீக்கிவிட வேண்டும்.

குழந்தை, ஏன் நான் குடிக்கக் கூடாது என்று கேட்டால், நீ இன்னும் பெரியவனாகவில்லை, சிறுவயதில் குடிப்பது சட்டப்படி குற்றம், அதோடு உன் உடல் நிலையையும் இது பாதிக்கும், நீ வளர்ந்து பெரியவனாகும் போது நீயே முடிவு செய்து கொள்ளலாம் என்று தெளிவாகக் கூற வேண்டும்.

போதை தடுப்பு முறைகள் பற்றி எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அதாவது 5 வயது முதலே அறிவுறுத்த ஆரம்பித்து விட வேண்டும். நெருப்பைத் தொட்டால் சுடும் என்று யதார்த்தமாக குழந்தைக்குச் சொல்லிக் கொடுப்பதுபோல போதை மருந்துகளின் அபாயங்களையும் புரிய வைத்துவிட வேண்டும். குழந்தைகள் வளர்ந்து பெரியவனாகும் போது சொல்லிக் கொள்ளலாம் என்று காத்திருந்தால் சில நேரங்களில் அது பயனற்றுப் போகும். வருமுன் காப்பதுதானே சாலச் சிறந்தது?

குழந்தைகளை பள்ளிக் காலங்களிலிருந்தே அவர்கள் நடவடிக்கைகளில் பெற்றோர் தீவிர கவனம் செலுத்த வேண்டும். ஆரம்பக் காலங்களில் கண்டுபிடித்து விட்டால் மாற்றுவதும் எளிதாகும். மேலை நாடுகள் போல, நம் நாடுகளில் இது போன்ற கணக்கெடுப்புகள் அதிகமாக இல்லை. நம் கலாச்சாரம் பண்பாடு கருதி இதைத் தவிர்த்து விடுகிறார்கள்.கலிபோர்னியாவில் சமீபத்தில் எடுத்த ஒரு கணக்கெடுப்பின் படி 25 முதல் 30 சதவிகித பெற்றோர் தெரிந்தும் கண்டும் காணாமல் இருப்பதாகக் கூறுகிறார்கள். குழந்தைகளிடம் இதன் அபாயம் குறித்து பேசும் போது, அதை ஒரு தனி வகுப்புப் பாடம் போல நடத்தக் கூடாது. டிவி பார்க்கும் போதோ, அல்லது காரில் பயணம் செய்யும் போதோ, அறிவுரை கூறுவதுபோல் இல்லாமல் யதார்த்தமாகக் கூற வேண்டும். ஏதாவது சம்பவங்களையோ அல்லது உதாரணங்களையோக்கொண்டு அழுத்தமாக, அதே சமயம் யதார்த்தமாகச் சொல்ல வேண்டும். போதைப் பழக்கம், உடல் உறுப்புக்களை அப்படியே கறையான் போன்று அரித்து விடும், என்பதனையும் உணரச் செய்தல் வேண்டும்.

குழந்தைகளுக்கு மனமகிழ்ச்சி அளிக்கக் கூடிய ஆரோக்கியமான மற்ற கேளிக்கைகள் பற்றி புரிய வைக்க வேண்டும்.உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தை சிறுவயது முதலே ஊக்குவிக்க வேண்டும்.
பெரும்பாலும் சற்றே வளர்ந்த குழந்தைகள் ,நண்பர்கள் மூலமாகத் தான் இது போன்ற தீய பழக்கங்களை தொற்றிக் கொள்கின்றனர். நண்பர்கள் கட்டாயப்படுத்தினால் கூட மறுக்க வேண்டும் என்பதன் அவசியத்தைப் புரிய வைக்க வேண்டும். பெற்றோருக்கு இது போன்ற தீயப் பழக்கங்கள் அறவே பிடிக்காது என்று உணர்ந்த குழந்தைகள், நண்பர்கள் மத்தியிலும் கண்டிப்பாக 'ஐய ..... இதெல்லாம் வேண்டாம், எனக்குப் பிடிக்காது, உனக்குக்கூட இது தேவையில்லை என்றுதான் கூறுவார்கள்.

குழந்தைகளாக இருக்கும் பொழுதே இது போன்ற ஆரோக்கியமான எண்ணங்களை வளர்த்து விட்டோமானால், அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகும் போது, படிப்பு, தொழில் சம்பந்தமாக நம் கண் பார்வையில் இல்லாமல், வெளியூர்களுக்கோ, வெளி நாடுகளுக்கோ செல்லும் நேரங்களில் கூட பெற்றோர்கள் கவலையில்லாமல், அவர்கள் முன்னேற்றத்திற்கு அணையும் போடாமல், ஊக்குவிக்கும் வண்ணம் செயல்படலாம்.

காகத்தின் நுண்ணறிவு!

  காக்கை நாம் அன்றாடம் பார்க்கிற பறவை. ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பது நாம் இயல்பாகப் பயன்படுத்தும் பழமொழி. நாங்கள் அன்றாடம் கா...