Friday, November 1, 2013

இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்!


வணக்கம் நண்பர்களே,

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!அனைவரும் நலமா? ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி வரத்தான் செய்கிறது. ஆனால் கூடவே மாற்றங்களும் வந்துகொண்டுதான் இருக்கிறது. சென்ற ஆண்டுபோல் இந்த ஆண்டு இல்லை. அடுத்த ஆண்டு எப்படியிருக்குமோ தெரியாது. இன்று மகிழ்ச்சியாக உள்ளதை உள்ளபடி ஏற்றுக்கொண்டு கொண்டாடிவிட்டுப்போகலாமே, இல்லையா? நாளைபற்றி யார் அறிவார்? அரசியலில் ஆரம்பித்து, சமுதாயம், குடும்பம், தனிப்பட்ட முறையில் என எத்தனை, எத்தனை மாற்றங்கள். இளம் வயதில் அப்பா, அம்மாவிடம் பட்டாசும், புதுத் துணியும் சண்டை போட்டு வாங்கியதில் இருந்த மகிழ்ச்சி இன்று நம் விருப்பம்போல வாங்கிக் கொண்டாடுவதில் இல்லை. அன்று என் சகோதரிகளுடன் சண்டை போடுவேன் அப்பா மொத்தமாக வாங்கிப் போடும் துணியில் நான் தான் முதலில் தேர்ந்தெடுத்துக்கொள்வேன் என்று! அதில் எத்தனை தில்லாலங்கடி வேலையெல்லாம் செய்வோம். நாம் விரும்பிய உடையும் பட்டாசு பங்கில் ஒரு மத்தாப்பு பெட்டி அதிகம் கிடைத்துவிட்டாலோ ஏதோ உலகமே நம் காலடியில் கிடப்பதுபோல அப்படி ஒரு பெருமை. தலை நிமிர்ந்து நடந்து செல்வோம். இன்று அப்படி சண்டை போடவும் ஆளில்லை எனும்போது விருப்பமும் குறைந்து போகிறது. பெற்றோர்கள் ஒரு புறம், பிள்ளைகள் ஒரு புறம், நாம் ஒரு புறம் எப்படியோ காலமும் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது, கணினி வழியாகவும், தொலைபேசி வழியாகவும்! இதோ தெருவே இன்று அமைதியாக இருக்கிறது. ஒரு காலத்தில் விடியலில் 3 மணிக்கே தெருவெல்லாம் ஜெகஜோதியாக இருக்கும். பட, பட.. சட.சடவென எங்கு பார்த்தாலும் சத்தம் காதைப் பிளக்கும். நாங்களெல்லாம் சந்தோசமாக விடியலில் எழுந்து அவ்வளவு சீக்கிரம் தலைக்குக் குளித்துவிட்டு புத்தாடை உடுத்திக்கொண்டு பட்டாசு வெடித்து முடித்து, பிறகு பலகாரங்கள் ஒரு பிடி, பிடித்துவிட்டு, அடுத்து அம்மா அக்கம் பக்கத்து வீடுகளுக்கு பலகாரம் கொடுத்தனுப்புவார்கள். மகிழ்ச்சியாக ஒடுவோம். புத்தாடையைக்காட்டி பெருமைப்பட வேண்டுமே.. அந்த மகிழ்ச்சியெல்லாம் இன்றைய பெரும்பாலான குழந்தைகளுக்கு கிடைக்காமலே போய்விட்டது. தெருவில் பாதி குடும்பம் வெளிநாட்டில். குழந்தைகள் இல்லாமல் தொலைக்காட்சி முன்பு பெற்றோர். எங்கிருந்து பட்டாசு சத்தம் கேட்கும்.. போகிற போக்கில் இந்த வாழ்க்கையே பழகிவிடும் போல் உள்ளது!

எது எப்படியோ தீபாவளி என்ற அந்த சொல் ஒரு இன்பத்தை கொடுக்கத்தான் செய்கிறது. அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் நண்பர்களே. அனைவரின் வீட்டிலும் மங்கலம் பொங்கட்டும்! எங்கள் மனமார்ந்த பிரார்த்தனைகள்.

அன்புடன்
பவள சங்கரி
திருநாவுக்கரசு

3 comments:

 1. இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. தங்களின் ஆதங்கங்கள் மிகச்சிறப்பாகவும் சரியாகவும் தான் உள்ளன.

  // நாம் விரும்பிய உடையும் பட்டாசு பங்கில் ஒரு மத்தாப்பு பெட்டி அதிகம் கிடைத்துவிட்டாலோ ஏதோ உலகமே நம் காலடியில் கிடப்பதுபோல அப்படி ஒரு பெருமை. தலை நிமிர்ந்து நடந்து செல்வோம்.// ;)

  நாம் குழந்தைகளாக இருந்தபோது இருந்த எதிர்பார்ப்பும், ஏக்கங்களும், மகிழ்ச்சிகளும் இப்போது சுத்தமாக இல்லவே இல்லை.

  எனினும் “தித்திக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்”

  ReplyDelete
 3. மங்களம் பொங்கும் திருநாளாக
  மனதினில் இந்நாள் நிலைத்திடவே
  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்
  அனைவருக்கும் என் இனிய
  தீபாவளி நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் !

  ReplyDelete