Saturday, November 2, 2013

அருளுடை அன்னை சாரதா தேவியார்


பவள சங்கரி



கற்காலம் தொடங்கி, இன்றைய நவீன காலம்வரையிலும் இந்திய மண்ணில் அவதரிக்கும் பெரும்பாலான பெண்களின் நடை, உடை, பாவனைகளின் அடிப்படையில், ஆன்மிக உணர்வு நிறைந்திருப்பது வெள்ளிடைமலை. இந்த ஆன்மீக எண்ணங்களுக்கு அடிகோலுகிற, தூய்மை, பொறுமை, பக்தி, ஒழுக்கநெறி, தன்னலமற்ற அன்பு ஆகிய குண நலன்கள் பிறவியிலேயே வாய்க்கப் பெறுகிறார்கள் பெண்கள். உண்மையிலேயே நம் இந்திய வரலாற்றின் முக்கியமான பக்கங்களை நிரப்புவது இதுபோன்ற ஆத்மாக்களின் சரிதங்களையே. குறைபாடுகளைக் களைந்து தனி மனித ஒழுக்க நெறியை பின்பற்றி, அகத்தூய்மை பெறுவதே வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்தோர், வாழ்வோர் எண்ணற்றவர். நாகரீகம் வளர, வளர நம் இந்தியப் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தில் ஓரளவு மாற்றங்கள் வந்திருப்பினும், அடிப்படையில் பெரிய மாற்றங்கள் ஏதும் நிகழவில்லை என்பதே சத்தியம். சாதாரண மானிடராய் இருப்பவருக்கே இந்நிலை எனும்போது, ஒரு மகானாக அவதரித்த, தெய்வப் பிறவியான அவருக்கு வாழ்க்கைப்படும் ஒரு பெண்மணி எப்படியிருப்பார் என்று சற்றே சிந்தித்துப் பார்த்தால் புரியும்.


இயற்கையின் தத்துவம் ஆச்சரியமானது. அந்த ஆச்சரியமான ஆனந்தத்தை முற்றிலும் உணர்ந்தவர்கள் நம் இந்தியர்கள் என்றால் அது மிகையாகாது. ஆம், வெளித்தோற்றத்தில் உடல் சார்ந்ததாகவோ அன்றி குறுகிய காலமே ஆயுள் கொண்டதாகவோ இருப்பதாகத் தோன்றும் ‘பிரமன்’ என்ற அந்தப் பொருளின் அடிப்படை குணம் அதுவல்ல. ஆச்சரியமான அந்த தத்துவம், ஆன்மாவிற்கு அழிவில்லை! ஆன்மாவிற்கு ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லை. ஒவ்வொரு பிறவியிலும் தொடர்ந்து வரும் சக்தி பெற்ற ஒன்றுதான் அந்த ஆன்மா. மனித வாழ்க்கையினூடே பின்னிப் பிணைந்திருக்கும் இந்த அற்புதமான தத்துவத்தை சிவஞானபோதத்தில் மெய்கண்டார் அருளிய்தைக் காண்போம்:

ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்து எனத்
தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்தவிட்டு
அன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே.
(சூத்திரம் 8 : ஆன்ம மீட்பு)

இதற்கான விளக்கம்:

தமக்கு மட்டுமல்லாது, இந்த உலகின் அனைத்திற்கும் முழுமுதல்வனாகிய கடவுள், ஆன்மாவை நோக்கி, தன்னை அன்றாடம் வேட்டையாடுகிற, மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்களின் இச்சைகளின், வேடருடனேயே வளர்ந்ததனாலேயே, தற்பொழுது இருக்கும் இழி நிலையை அடைந்திருப்பதாகவும், தான் யார் என்பதையும், எங்கிருந்து வந்தோம் என்பதையும் அறியாது மயங்கிக் கிடப்பதாகவும் கூறுகிறார். இப்பூவுலகில் குருவாக அவதரித்து, அந்த ஆன்மாவை மீட்டெடுக்கும்பொருட்டு, அதன் துன்பங்களனைத்தையும் தவப்பயனால், தாமே ஏற்றுக் கொண்டு, ஆன்மாவிற்கு உண்மை நிலையை உணர்த்திக் காட்டுவதால், அந்த ஆன்மாவானது தம் பாவ நிலையைத் துறந்து தமக்கும் அந்த ஆண்டவனுக்கும் இடையில் உள்ள பாவமாகிய அந்த பிரிவினையை அருள்கூர்ந்து நீக்கி, மீட்கப்படுவதால் எல்லாமுமாய் நிறைந்திருக்கிற அந்த இறைவனின் திருவடியைச் சென்று அடைகிறது!

இறப்பைக் கண்டு அச்சம் கொள்ளாமல் மகிழ்ச்சியுடன் அதனை வரவேற்கும் சக்தியை அருளும் அற்புதமான பாடல் அல்லவா இது? ஆக, சுருங்கச் சொன்னால், ஆன்மாவினால் மட்டுமே ஆண்டவனை உணர முடியும். அந்த ஆண்டவனை அடையத் தடையாக இருக்கும் ஐம்புலன்களும் அதை உணரமுடியாமல் மறைக்கிறதாம். பிறந்ததிலிருந்து நம்மைத் தொடர்ந்தே வரும் அந்த சகசமலம் நீக்கப்பெற்றால் மட்டுமே அந்தச் சுமையிலிருந்து விடுபட்டு ஆன்மா ஆண்டவனைச் சென்று சேரும்!

இந்துமதம், கிருத்துவம், இஸ்லாமியம் என நம்முடைய வேதங்கள் அனைத்தும் பெரும்பாலும் இந்தத் தத்துவத்தின் அடிப்படையிலேயே ஒரு மனிதனை நல்ல நிலையில் ஆன்மீக நெறியில் வாழச்செய்யவே வழிவகுக்கிறது. அந்த உன்னத நிலையை அடைய வேண்டுமாயின் ஒருவர் செய்ய வேண்டுவதெல்லாம், மனதில் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் அனைத்து தீயவைகளையும் நீக்கி, சுயநலத்தை தூர எறிந்துவிட்டு, அன்பு என்ற ஒன்று மட்டுமே தம் வாழ்வின் நோக்கமாக எடுத்துக்கொண்டு அந்த தூய இதயத்துடன் அவன் வரவிற்காக காத்திருக்க வேண்டியதுதான். அதாவது அந்த ஐம்புலன்களின் இச்சைகளை சட்டை செய்யாமல் விட்டுவிலகி, தன்னலமற்ற சேவை, அன்பு என்ற எண்ணம் மட்டுமே கொண்டு வாழக்கூடிய துறவுநிலை பற்றி நம்முடைய வேதங்கள் அழுத்தம் திருத்தமாகக் கூறுகின்றன. நீண்ட இருண்ட காலத்திற்குப் பின்பு, இதற்கான மறுமலர்ச்சியை இவ்வுலகில் ஏற்படுத்துவதில் முதன்மையான அவதாரமாக இருந்தவர், ‘தேசப்பற்று துறவி’ என்று நம் இந்தியராலும், ‘இந்தியாவின் துறவுச் சூறாவளி’ என்று அந்நிய தேசத்தோராலும் போற்றப்பட்ட , ஸ்ரீராமகிருஷ்ணரின் பரம சீடரான, சுவாமி விவேகானந்தர்தான். ஸ்ரீ ராமரையும், ஸ்ரீகிருஷ்ணரையும் தம் உள்ளத்தே நிறைத்திருந்த ஸ்ரீராமகிருஷ்ணர் வாழ்ந்த காலம் நம் இந்திய சரித்திரத்தின் ஆன்மீகத் தேடலின், தவிர்க்கமுடியாத ஒரு பொன்னான காலகட்டமான, 1836 – 1886. ஆழ்ந்த அறிவியல் நுணுக்கம் மற்றும் ஆன்மீகத் தேடலின் ஒரு விழிப்புணர்வுக் காலமாகத்தான் இருந்தது.

வாழ்க்கையின் உன்னதமான நிலையை அடையும் விழிப்புணர்வின் வெளிப்பாடான, இந்த அற்புதமான ஆன்மீகத் தேடலின் அலை எல்லாத் திசைகளிலிருந்தும் உயிர்த்தெழத் தொடங்கின. இந்துச் சமூகம் அதன் ஆணி வேரைத் தோண்ட ஆரம்பித்தன. விறுவிறுப்பான வாழ்க்கையின் ஒரு வடிகாலாக இது அமைந்தது. நாகரீக பொருளியல் வாழ்க்கை வெடித்து பற்றிக்கொள்ளும் முன்பாக மிகப்பழமையான இந்தியப் பெண்ணியம் பளிச்சென்று பட்டொளி வீச ஆரம்பித்திருந்தது. காளி தேவியின் சக்தியின் ஆழ்ந்த தத்துவத்தை அறிந்துணரவும், அன்னையை தன்னிகரற்ற தனிப்பெரும் தெய்வமாக வழிபடவும் ஆரம்பித்திருந்தனர். காளி தேவியின் அற்புதமான அந்த சக்தியை உணர்ந்து அதன் நெறியில் வாழ்ந்து, தங்களையும் வழி நடத்திச்செல்லும் ஒரு நல்ல ஆன்மாவை நேசிக்க ஆரம்பித்திருந்தார்கள்.

அன்னை சாரதா தேவியின் வாழ்க்கை வரலாறு என்பது ஒரு பின் தங்கிய கிராமத்தின் ஒரு வங்காள பிராமணப் பெண்ணின் வரலாறு என்று மேலோட்டமான தோற்றத்தை ஏற்படுத்தினாலும், உண்மையில் அவருடைய சரிதம் ஒரு புரியாத புதிர். தலை முக்காட்டிற்குள் அன்னையின் ஆயிரம் ஆன்மீக சாகசங்கள் ஒளிந்திருக்கும். இதை பலரும் அறியமுடிவதில்லை. ஆயினும் அதை உள்ளுணர்வின் உதவி கொண்டு ஆழ்ந்து நோக்கும்போது பல உண்மைகள் தெரிய வரும் . ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் பரமானந்த நிலையில் தன்னை மறந்து தம் இதயத்திலிருந்து வெளிப்படுத்துகிற அந்த பக்திப் பெருக்கை பலரும் கண்டுகளித்துள்ளது வரலாறு கூறும் உண்மை. ஒரு சாதாரண உலகப் பிறவியின் ஆண் மகனுக்குத் தன் வாழ்க்கையை பகிர்ந்துகொண்ட ஒரு சாதாரண பெண் எங்கனம் தெய்வப் பிறவியாக கொண்டாட முடியும் என்ற ஐயம் ஒருவருக்கு எழுவதும் நியாயமே. ஆனால் அவருடைய மெய்மறந்த பணிவு நிலை, ஆழ்ந்த அமைதி, சாந்தம், கருணை மற்றும் கட்டுப்பாடற்ற, தன்னலமற்ற தாயன்பு போன்றவைகள் மூலமாக அந்த ஆனந்தத்தை உணரும் தகுதியுடைய ஒருவருக்கு அந்த இன்பம் வாய்க்கப்பெறும் என்பதிலும் ஐயமில்லை. அதற்கு ஒரு முழுமையான உதாரணமாக வாழ்ந்துகாட்டிச் சென்றவர் அன்னையார்.

நகரத்தின் நெருக்கடியும், இரைச்சலும் அமைதியைத் தின்னும் அதே வேளையில் கிராமியச் சூழலின் இயற்கை வளம் மற்றும் ஆழ்ந்த அமைதியின் வெளிப்பாட்டில், ஆன்மீக நாட்டம் கொண்ட ஒருவருக்கு அது பரமானந்த நிலையைக் கூட்டிவைக்கும் ஒரு உன்னத விசயம். அந்த வகையில் அன்னை சாரதா தேவியார் இந்த உயர்ந்த நிலையை அடைவதற்கு அவருடைய இந்த இயற்கை வரமும் ஒரு முக்கிய காரணம். பகல் முழுவதும் கடுமையான உழைப்பை மேற்கொண்டு, மாலையில் ஆன்மீக விசாரம் செய்வதிலும், ஆழ்ந்த பக்தியில் ஈடுபட்டு மனம் திறந்த பக்திப்பாடல்களைப் பாடி அதன் மூலமே தங்கள் களைப்பையும் போக்கிக் கொள்பவர்கள். தங்களின் ஏழ்மையைக்கூட பொருட்படுத்தாமல் வருடம் முழுவதும், பண்டிகைகள், திருவிழாக்கள் என்று கொண்டாடுபவர்கள். இன்றைய நாகரீக உலகில் அடுத்த வீட்டின் அவலத்தைக்கூட கண்டும் காணாமல் கிடக்கும் நிலை அந்த கிராமிய வாழ்க்கையில் முற்றிலும் இல்லாதிருந்தது. அண்டை வீட்டாரின் துக்கங்களையும், துயரங்களையும் கூட தம்மீது எடுத்துப் போட்டுக்கொண்டு அதற்குத் தீர்வு காணத் துடிக்கும் நல்லிதயங்கள் வாழும் இடம். வங்காளத்தின், பான்குரா மாவட்டத்தின் தென்கிழக்கு மூலையில் உள்ளதே இப்பேருபெற்ற ஜெயராம்பதி என்ற கிராமம். அங்கு, ராமச்சந்திர முக்கோபாத்யாய் மற்றும் சியாமசுந்தரி தேவி என்ற தம்பதியருக்குப் பிறந்த தெய்வ மகள்தான் அன்னை சாரதாதேவி. அவர்களுடைய வாழ்க்கை அத்துனை எளிதானது அல்ல. ஒரு கிராமத்துக் குருக்களின் சொற்ப நிலத்தில் உண்டு வாழ்கிற மூன்று சகோதரர்களைக் கொண்ட ஒரு ஏழ்மையான குடும்பம். ஆனாலும், அதிக ஆசையும், எதிர்பார்ப்பும் இல்லாத அமைதியான, நிறைவான குடும்பம். ராமச்சந்திராவின் குடும்பம் பணத்தேவையின் பிடியில் சிக்கி இன்னல்களுக்கு ஆளான சமயம். அவருக்கு அசரீரியாக ஒரு நல்ல காட்சி கிடைத்தது. ஆம், தங்களுக்குப் பிறக்கப்போகும் தெய்வீகக் குழந்தையால் தங்களுடைய இன்னல்கள் அனைத்தும் தீரப்போகிறது என்பதுதான் அது. சில காலத்தில், சியாமசுந்தரி தேவிக்கும் இதேக் காட்சி தெரிந்தது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரின் எதிர்பார்ப்பிற்கு இணங்க, அன்னையார் டிசம்பர் மாதம் 1853ம் ஆண்டு, 22ம் நாளில் சியாமசுந்தரியின் மூலமாக அவதரித்தார். வானத்திலிருந்து வந்த தேவதையாகவே கொண்டாடப்பட்டார் அவர்.

சாரதா, தம் இளமைப் பருவத்தில் தன் வயதொத்த மற்ற சிறார்களைப் போல இல்லாமல், மிகவும் தனித்தன்மையுடன், காளிதேவி மற்றும் லட்சுமி தேவியின் திருவுருவங்களை வைத்துக்கொண்டு தியானம், பக்தி , பெரியோர்களின் வழியில் அதே போல பாடுவது போன்ற செயல்களின் மூலம் தம்முடைய ஆழ்ந்த ஈடுபாட்டை வெளிப்படுத்தினார். குறிப்பிட்ட வயது வரும் முன்னேயே அந்த நாளைய வழக்கத்தின்படி, சிறுமி சாரதாவிற்கு வீட்டு வேலைகளின் பயிற்சி அளிக்கப்பட்டது. தன் தாயிற்கு உதவியாக வீட்டு வேலைகள் அனைத்தையும் இழுத்துப்போட்டுக் கொண்டு செய்தார். அந்தச் சிறுமி, தன் கழுத்துவரை இருக்கும் தண்ணீர்ல் நின்றுகொண்டு, பசுக்களுக்கு புல் வெட்டிவருவார். நெல் வயலில் பணிபுரிபவர்களுக்கு சாப்பாடு கொண்டுவந்து கொடுப்பார். தங்களுடைய பருத்தித் தோட்டத்தில் பருத்தி கிள்ளுவதற்காக தன் தாயுடன் சேர்ந்து செல்வார். ஒரு முறை கடும் பஞ்சம் ஏற்பட்ட நேரத்தில், தம்முடைய தந்தை பத்திரப்படுத்தி வைத்திருந்த அரிசியை எடுத்து சமைத்து, ஏழைகளுக்குப் பரிமாறி, சூடான உணவை விசிறி கொண்டு விசிறி அவர்கள் உண்பதைக்கண்டு அழகு பார்த்தார்.

ஏட்டுக் கல்வியைப் பொறுத்தவரை அவருக்கு மிக சொற்பமே படிக்க வாய்த்தது. ஆனாலும் குடும்பத்தில் புனிதமான ஒரு தெய்வீகச் சூழல் நிலவி வந்ததால், வாழ்க்கைக் கல்வியை மிக நன்றாகவே கற்றுத் தேர்ந்தார். இயற்கையோடு இயைந்து வாழ்தலும், ஆன்மீக உரைகள், வழிபாட்டுச் சுலோகங்கள், புராணக் கதைகள் என அனைத்தும் மிகச் சிறப்பாக கூடிவந்தது அவருக்கு. உண்மையான கல்வி என்பதன் நோக்கம், மனிதரின் முழுமையான திறனை வெளிப்படுத்தக்கூடிய ஒன்றாக இருக்க வேண்டியது அவசியம் என்ற வகையில் அவருடைய எதிர்காலத்தில் அது பல்வேறு வகையில் வெளிப்பட்டது. உண்மையில் அந்நாட்களில் இந்து சமுதாயத்தின் கிராமச் சூழல் மனித நற்குணங்களை கட்டமைப்பதில் முக்கிய பங்காற்றியது எனலாம். பெண்களுக்கு, குடும்பத்தில் வாழும்கலைப் பயிற்சி என்பது அவர்களுக்கு மிக முக்கியமான ஒன்றாக, குறிப்பாக நல்ல பழக்க வழக்கங்களையும், சக மனிதர்களை மதித்து, அனுசரித்துப்போகும் வழமையையும், நல்ல ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுப்பதுமாகவே இருக்கிறது. இந்த உண்மை அந்த தெய்வீக அன்னையின் வாழ்க்கையின் மூலம் உறுதிபட வெளிப்படுகிறது.

அவருடைய இளமை வாழ்க்கையில் ஒரு முக்கியமான அம்சம் அவருடைய பால்ய விவாகம்தான். அப்போது அவருக்கு ஆறு வயதுதான் ஆகியிருந்தது. இந்த வயதில் திருமணம் என்பது இன்றைய காலகட்டத்தில் நம்ப முடியாத ஒரு அதிர்ச்சியான செய்தியாகத்தான் இருக்கும். ஆனால் அந்தக் காலத்தில் இதுவே வழமையாகவும், அதற்கான நியாயங்கள் கொண்டதாகவுமே இருந்துள்ளது. இந்து குடும்ப வழக்கப்படி திருமணத்திற்குப்பின் ஒரு பெண் தன் பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீட்டில் புதிய உறவுகளுடன் இணைந்து இருக்க வேண்டும். ஒரு புதிய பிறவி எடுத்தது போன்று தோன்றும் நிலை அது. ஆறு வயதில் ஒரு சிறுமி ஒரு ஆணுடன் எந்த விதமான உறவு கொள்ள முடியும் என்பது இன்றைய நாகரீகச் சூழலில் கற்பனைக்கும் எட்டாத விசயம்! இரண்டு ஆன்மாக்கள் ஒன்றையொன்று சார்ந்து இருக்கக்கூடிய, காமமற்ற காதலை வெளிப்படுத்தும் ஒரு உன்னத நிலை என்றே கொள்ள முடிகிறது. ஒரு விதத்தில் இதுகூட சிவன் – பார்வதி திருமண பந்தம் போலத்தானோ என்ற எண்ணமே தோற்றுவிக்கக்கூடியது.

கொல்கத்தாவின் அருகில் தஷிணேசுவரில், அன்னை காளிதேவியின் ஆலயப் பூங்காவில் அமர்ந்துகொண்டு இடைவிடாமல் அன்னையை தேடித்திரிதலில் தன் உடல் நலம் முழுவதும் கெட்டுப்போனது கூட அறியாமல் மீண்டும், மீண்டும் அன்னையின் நினைவாகவேக் கிடந்தார், கதாதர். உடல்நிலை மிகவும் மோசமாக ஆனதால், மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவரை இடமாற்றம் செய்யும் பொருட்டு தன்னுடைய சொந்த கிராமமான கபர்புக்கூருக்கு அனுப்பிவைத்தனர். இங்கு வந்தபோதும் கதாதர் அவர்களின் மனம் உலக வாழ்க்கையில் சற்றும் ஈடுபடவில்லை. தன் நிலை மறந்த ஒரு நிலையிலேயே இருந்ததால் அவருக்கு திருமணம் செய்து வைத்தால் ஒருவேளை சரியாகலாம் என்ற முடிவிற்கு வந்த அவருடைய தாயார், அதற்கான முயற்சிகளை செய்யத் தொடங்கினார். அதிசயமாக கதாதர் அவர்களும் இதற்கு சம்மதம் தெரிவித்தார். பல இடங்களில் அலைந்து திரிந்தும், நல்ல பெண் அமையாமல் அவருடைய மூத்த சகோதரர் ராமேஷ்வர் அவர்கள் சலித்துப்போன நிலையில், கதாதர் அவர்கள் தன் சகோதரரை மளமளவென நான்கு மைல் தொலைவிலிருந்த ஜெயராம்பதியின், ராமச்சந்திர முகோபாத்தியாய் அவர்களின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். இந்த வீட்டில் தன் இல்லத்தரசி, தெய்வ மகள் சாரதா, அவதரித்திருப்பது எப்படி கதாதர் அவர்களுக்குத் தெரிந்தது என்பது இன்றுவரை தெய்வ இரகசியமாகவே இருக்கிறது. சில காலம் முன்பு, சிறுமி சாரதாவின், அண்டை கிராமமான சிஹூரில் நடந்த விழாவிற்குச் சென்றிருந்தபோது, தம் அன்னையின் மடியில் அமர்ந்திருந்த சிறுமி சாரதாவிடம், நீ யாரை திருமணம் செய்து கொள்ளப்போகிறாய் என்று விளையாட்டுத்தனமாகக் கேட்டதற்கு சற்றும் தயங்காமல் அங்கு இருந்த கதாதர் அவர்களைத் தன் பிஞ்சு விரல்களால் சுட்டியிருக்கிறாள் என்பதை ஒரு கதை மூலம் அறியும்போது இதெல்லாம் எங்கனம் சாத்தியம் என்று ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.



மே மாதம், 1859இல், ஜெய்ராம்பதியில், மணமகள் இல்லத்தில், கதாதர் மற்றும் சாரதாவிற்கு திருமண வைபவம் நல்லபடியாக முடிந்தது. இதைப்பற்றி அந்தப் பிஞ்சு மனம் என்ன அறிந்திருக்கும் என்று நினைத்துப் பார்க்கவும் முடியவில்லை. இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன், சாரதா மீண்டும் தன் அன்றாட வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டார். ஆனாலும் அவருடைய திருமணத்தின் தொடர்ச்சியாக நடந்த சம்பவங்கள் அனைத்தும் ஒரு சாதாரண குடும்ப வாழ்க்கையை எந்த விதத்திலும் பிரதிபலிக்கவில்லை என்பதே சத்தியம்.

டிசம்பர், 1860 வரை தன்னுடைய 14 வயது வரை சிறுமி சாரதா அவ்வப்போது மட்டுமே தன் கணவனைச் சந்திக்கும் வழமை இருந்தது. அவருடைய ஏழாவது வயது முடிந்தபோது, கதாதர் அவர்கள் சிறுமி சாரதாவைச் சந்தித்து தன்னுடைய கமர்புக்கூர் கிராமத்திற்கு அழைத்துச்சென்று சில நாட்கள் தங்க வைக்கும் வழக்கம் இருந்தது. தன் கணவன் தம் வீட்டிற்கு வந்தபோது உறவினர்கள் அனைவரும் ஒரு பரமானந்த நிலையில் அவருக்கு பாதபூசை செய்வதைக் கண்டு மிகவும் ஆச்சரியப்பட்டுப் போனதோடு, தம் கணவரின் உன்னதத்தை உணர்ந்துகொள்ள ஆரம்பித்தார் என்றே சொல்ல வேண்டும்!

மீண்டும் ஏழு ஆண்டுகால இடைவெளிக்குப்பின்புதான் அவர்கள் இருவரும் திரும்பவும் சந்தித்தனர். தன் திருமணம் பற்றிய தெளிவுடன் கமர்புக்கூர் கிராமத்தில் நுழைந்தவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அவர் ஏற்கனவே சந்தித்திருந்த கதாதர் சட்டோபாத்தியாய் சுத்தமாக மறைந்திருந்தார். அங்கு வேறு ஒரு திருநாமத்துடன் ஒரு துறவியே இருந்தார்! நித்தியத்தின் தேடலில் தன்னுடைய கடந்த ஏழு ஆண்டுகளையும் செலவிட்டிருந்தார் அவர். 1866ல் ஒரு தெளிவான நிலைக்கு வந்திருந்தார் அவர். தெய்வீக ஒளியில் முற்றிலுமாக நனைந்திருந்தார் அவர். ஆன்மீகத்தின் ஆக்கப்பூர்வமான பரிணாம வளர்ச்சியாக அங்கு அன்பு எனும் ஒரு பேரொளி மலர்ந்தது. அன்னையின் ஆணையை சிரமேற்கொண்டு அவர் சற்று ஓய்வெடுத்து சக மனிதரும் உய்யும் பொருட்டு தம் பணியைத் தொடர்ந்தார்.


                                                      ஓவியம் : திரு. ரவி

இந்த காலகட்டத்தில் கதாதர் அவர்களின் மாற்றம் குறித்த திரிக்கப்பட்ட செய்திகள் பலவும் வந்துகொண்டிருந்தன. இதுபோன்ற வதந்திகள் ஜெய்ராம்பதி மட்டுமல்லாமல் சுற்று வட்டாரம் எங்கும் பரவியது. ஒரு சிலர் சாமி சக்தி என்றும் ஒரு சிலர் மனநலம் பாதிக்கப்பட்டுவிட்டது என்றும் சொன்னார்கள். ஆனால் சாரதாவின் மனதில் எழும்பிய மற்றொரு கேள்வி, இவர் ஒரு சன்னியாசியாக மாறிவிட்ட நிலையில் தன்னை எப்படி மனைவியாக ஏற்றுக்கொள்ளப் போகிறார் என்று வருந்தினார். இதையெல்லாம் மனதில்போட்டு குழப்பிக்கொண்டு, எது எப்படி, என்ன ஆகப்போகிறதோ என்ற யோசனையிலேயே 1867 ஜூன் மாதம் தன் கணவரைச் சந்திக்க கமர்புக்கூர் வந்தார். இந்த சந்திப்பு என்னவோ அவர் மனதை லேசாக்கியது. ஸ்ரீ ராமகிருஷ்ணர் தன்னுடைய அபரிமிதமான தெய்வீகக் காதலை வெளிப்படுத்தியதன் மூலமாக சாரதாவின் இருதயம் குளிர்ந்துபோனது. சாரதா மிக ஆழ்ந்த ஈடுபாட்டுடன், தன்னுடைய குருவாக ஏற்றுக்கொண்டு தன் வாழ்க்கைப் பாதையை அவர் வழியிலேயே மாற்றிக்கொண்டு அவர்தம் ஆன்மீகச் சொற்பொழிவு என அனைத்தையும் ஆழ்ந்து தொடர ஆரம்பித்தார். அவருடைய அறிவுரைகள் அனைத்தையும் பொக்கிசமாக பாதுகாத்து அதன்படி நடக்கவும் ஆரம்பித்தார். அவருடைய அருகாமை சாரதாவை ஆனந்தத்தின் உச்சநிலைக்கே எடுத்துச்சென்றது. ஆழ்ந்த ஒரு அமைதியும், ஒரு நிம்மதியும் இதயத்திற்குள் குடிகொண்டிருந்தது. இந்த நிலை ஸ்ரீராமகிருஷ்ணர் தஷிணேசுரம் திரும்பி, சாரதா ஜெய்ராம்பதி சென்ற பின்பும் தொடர்ந்து கொண்டிருந்தது. ஆண்டுகள் பல கடந்தும் ஸ்ரீராமகிருஷ்ணர் பற்றிய எந்த தகவலும் இல்லாத போதும் சாரதா இதே மன நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் அவரை மென்மேலும் குழப்பத்தில் ஆழ்த்தினாலும் அவரும் எதையும் செவிமடுக்கவில்லை. இதுபோன்ற நேரங்களில் அப்படிப்பட்டவர்களை சந்திப்பதையே தவிர்த்துவந்தார். நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக இப்படி பொறுமையாகக் காத்துக்கொண்டிருந்தவர், இறுதியில் கணவனின் நினைவிலும், அவருக்குப் பணிவிடை செய்ய வேண்டிய ஆர்வத்திலும் உடனே சென்று ஸ்ரீராமகிருஷ்ணரைச் சந்திக்க வேண்டும் என்று முடிவெடுத்தார். தஷிணேசுவரம் சென்று அவரைச் சந்திக்க வேண்டும் என்ற அந்த எண்ணத்தை திருவருள்தான் அவருக்குக் கூட்டி வைத்திருக்கவேண்டும்.

ஒரு புனிதமான நாளில் கங்கையில் நீராடி வருவதற்காக சாரதாவின் அண்டை வீட்டார் சிலர் கிளம்பியிருந்தனர். மார்ச் மாதம் 1872இல் நடந்தது இது. அந்நாளில் போக்குவரத்திற்கான வாகன வசதிகள் அதிகமாக இல்லாதலால் வசதி குறைவாக உள்ளவர்கள் நடைப்பயணம் செய்வதே வாடிக்கையாக இருந்தது. கிட்டத்தட்ட அறுபது மைல் தொலைவு நடந்து செல்ல வேண்டிய புனித யாத்திரைக்கு திட்டமிடப்பட்டிருந்தது. சாரதா தேவியாரின் விருப்பம் அறிந்த அவருடைய தந்தையார் ராமச்சந்திரா, மகிழ்ச்சியுடன் அவரை அழைத்துச்செல்ல சம்மதித்தார். குறிப்பிட்ட நேரத்தில் பயணம் துவங்கியது. மூன்று நாட்கள் தொடர்ந்த நடைப்பயணம், சாரதா தேவியின் உடல் நிலையில் பாதிப்பு ஏற்படுத்தி, அதனால் மலேரியா காய்ச்சலும் வரவழைத்திருந்தது. வேறு வழியில்லாமல் இடையிலேயே பயணத்தை நிறுத்திவிட்டு, ராமச்சந்திரா தன் மகளை வழியில் இருந்த ஒரு தங்கும் விடுதியில் ஓய்வெடுக்கச் செய்ய வேண்டியதாகியது. தன் உடல் வேதனையைக் காட்டிலும், அன்புக் கணவரைக் காணமுடியவில்லையே என்கிற மனவேதனை அதிகமாக வாட்டியது சாரதா தேவியாருக்கு. ஆனால், இந்த நொந்துபோன மனம் மற்றும் உடலுடன் வெகு நேரம் காத்திருக்கச் செய்யவில்லை அவருக்குக் கிடைத்த அந்த அதிசயமான காட்சி!

ஓய்வு விடுதியில், தங்கும் அறையின் படுக்கையில் படுத்துக்கொண்டிருந்த சாரதா தேவியார் தன்னருகில் மிகக் கருமையான ஆனால் அற்புதமான கருணை பொங்கும் வதனத்துடன் ஒரு பெண்மணி அமர்ந்து கொண்டிருப்பதைக் கண்டார். அந்த கருந்தெய்வம் அதோடா நின்றது? இல்லையே? என்னே தவம் செய்தாரோ இந்த சாரதா தேவியார்? வலியால் நொந்து போயிருந்த தலையையும், கைகால்களையும் பக்குவமாகப் பிடித்துவிட்டுக்கொண்டிருந்தார் தம் பஞ்சு போன்ற கரங்களால். காய்ச்சலால் நெருப்பாய்க் காய்ந்த உடல் அந்த நொடியில் குளிர்ந்ததோடு, அந்த முகம் புரியாத ஒருவரின் தீண்டலால் தன் உடலில் இனம் புரியாத ஒரு இனிமை பரவுவதை உணர்ந்து ஆச்சரியத்தில் அவர் யாரென்று அறிந்துகொள்ள முற்பட்டார். அவரிடம், “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?” என்றார்.



“தஷிணேசுவரத்திலிருந்து” என்று உடனடியாக பதில் வந்தது. அந்த பெயரைக் கேட்டவுடன் அவர் உடல் ஒருமுறை குலுங்கி அடங்கியது. தன் உள்ளத்தின் ஆழத்திலிருந்து பேச்சும் வந்தது. “நானும் என் கணவரைக் காண்பதற்காகத்தான் அந்த இடத்திற்குப் போய்க்கொண்டிருக்கிறேன். ஆனால் இந்தக் காய்ச்சல் என்னைத் தடுத்து நிறுத்துகிறது” என்றார் சாரதா தேவியார். உடனடியாக அங்கு வந்திருந்தவரிடமிருந்து வந்த ஆறுதலான வார்த்தைகள் அன்னையாரை அமைதிப்படுத்தியது. “கட்டாயம் நீ விரைவில் குணமடைந்து, உனக்காகவே என் பாதுகாப்பில் வைத்திருக்கும் உன்னவரை சந்திக்கப்போகிறாய்” என்பதுதான் அது. சற்றும் எதிர்பார்க்காத இந்த ஆச்சரியமான செய்தியைக் கேட்டு அதிர்ந்து போனார் அன்னையார். முன்பின் அறியாத இந்தப் பெண் எப்படி தன்னுடைய நலனில் இப்படியொரு ஆழ்ந்த அக்கறை கொள்ள முடியும் என்று அதிசயப்பட்டார். அதே எண்ணத்துடன் அவரை நோக்கி, “ஆனால் நீங்கள் எந்த வகையில் எனக்கு உறவு?” என்று கேட்டார். மிக யதார்த்தமாக வந்த பதில், “நான் உன் சகோதரி” என்பதுதான். இந்த ஆதரவான பதில் அவரை அமைதிப்படுத்தி நிம்மதியாக உறங்கச் செய்தது. இதற்கு முன்பும் அன்னையின் வாழ்வில் இது போன்ற சில அதிசயங்கள் அவருடைய இளம் வயதிலேயே நிகழ்ந்திருக்கிறதாம். அவர் தோட்டத்தில் பசுக்களுக்காக புல் வெட்டிக்கொண்டிருந்த சமயம் தன்னைப்போன்றே இன்னொரு பெண் அதே போன்று புல் வெட்டி தனக்கு உதவி செய்ததாகவும், இன்னொரு முறை கமர்புக்கூர் சென்றபோது, நீராடுவதற்காக அருகிலுள்ள ஒரு நீர்நிலைக்குச் செல்ல முற்பட்டபோது தன் வயதொத்த எட்டுப் பெண்கள் வழிகாட்டி அழைத்துச்சென்றதாக அவரே சொல்லியிருக்கிறார்.

அடுத்த நாள் மிகத் தெளிவாக படுக்கையை விட்டு ஆனந்தமாக எழுந்ததைக் கண்ட அவருடைய தந்தையாருக்கும் நிம்மதியானது. அதற்குமேல் காத்திருக்க பொறுமையின்றி வழியில் கிடைத்த பல்லக்கில் சாரதா தேவியாரை கூட்டிச்சென்றார் அவர் தந்தை. நடந்து செல்லும் அளவிற்கு அவர் உடலில் வலுவில்லாதலால் அப்படி ஒரு வாடகைக்காக சுமந்து செல்வோரின் பல்லக்கில் போக வேண்டியதாகியது. ஒரு வழியாகத் தாம் வர வேண்டிய இடத்திற்கு இரவு ஒன்பது மணிக்கு வந்து சேர்ந்தார்கள்.

கடந்த நான்கு ஆண்டுகளாக தம் இருப்பை பற்றிய உணர்வே இல்லாத தன் கணவரைச் சந்திக்கப்போகிறோம் என்று ஒரு நடுக்கத்துடனே தஷிணேசுவரம் கோவிலுக்குள் நுழைகிறார் சாரதா தேவியார். இன்னும் தன்னை தன் அன்பு மனைவி என்ற எண்ணம் துளியாவது கொண்டிருப்பாரோ அல்லது அவர் மனதை முழுமையாக ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிற அந்த கடவுட்சக்தி தன்னை புறக்கணித்துவிடுமோ என்று அஞ்சியவாறே அடியெடுத்து வைக்கிறார் அன்னை. கமபுக்கூரில் இறுதியாகத் தாம் அவரைச் சந்தித்தபோது தம்மிடம் காட்டிய அந்த அன்பு மீண்டும் கிடைக்குமா என்று ஏங்கித்தவித்தது அப்பேதையின் உள்ளம். ஆனால் வழியில் அவர் கண்ட சில காட்சிகள் அவருக்கு நம்பிக்கையளிப்பதாக அமைந்திருந்தது.

அனைத்து துன்பங்களும் சூரியனைக்கண்ட பனியாக சுத்தமாக விலகியது ஸ்ரீராமகிருஷ்ணரின் அன்பான வரவேற்பில்! அவரைக்கண்ட அக்கணமே தனிமை எனும் கொடுமை விலகி அன்பெனும் அணைப்பில் உளம் குளிர்ந்தது சாரதா தேவியாருக்கு. கோவிலுக்குள் முதல்அடி எடுத்து வைத்த தருணம் அவருக்கு மகிழ்ச்சியளித்திருக்குமா என்ற கவலையே ஸ்ரீராமகிருஷ்ணருக்கு இருந்தது சாரதா தேவியாருக்கு ஆச்சரியமளித்தது. அதைவிட, ஆச்சரியம் தான் வந்து சேருவதற்கு ஏன் இவ்வளவு கால தாமதம் ஆனது என்ற அவருடைய ஐயம்தான். “ஓ, நீங்கள் இவ்வளவு தாமதமாக வந்திருக்கிறீர்கள்! மிகுந்த பக்தியுடன் உங்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்கக்கூடிய ஆத்மாவான மாத்தூர் பாபு (ஆலயத்தின் முந்தைய பாதுகாவலர்) இப்போது இல்லையே?” என்ற அவருடைய அன்பு மொழி சாரதா தேவியாரின் உள்ளத்தை உறுக்கிவிட்டது. இந்த கண்ணாமூச்சி விளையாட்டின் உண்மை நிலையும், அதற்கான காரணமும் புரிய ஒருவர் பல பிறவிகள் எடுக்க வேண்டுமோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

சாரதா தேவியாரின் மலேரியா காய்ச்சல் முழுமையாக குணமாகாததால், ஸ்ரீராமகிருஷ்ணர் அவரை தன் அறையிலேயே ஒரு தனிப் படுக்கையில் தங்க வைத்து, அவரை கவனித்துக்கொள்ள ஒரு பெண்ணையும் நியமித்து, காய்ச்சலுக்கான சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்தார். அவ்வப்போது தானும் வந்து அருகில் இருந்து கவனித்துக்கொண்டார். நான்கு நாட்களில் பூரணமாக குணமானவுடன் தன் மாமியாருடன் சென்று தங்கிவிட்டார் .

தன்னுடைய முதல் முறைப்பயணமாக தஷிணேசுவரம் வந்த அந்த 19 வயதேயான இளம் மங்கையைப் பார்த்து, அன்புக் கணவர் ஸ்ரீராமகிருஷ்ணர் ஒரு நாள், “நீங்கள் என்னை இந்த உலக பந்தத்தில் இழுத்துச் செல்லத்தான் வந்திருக்கிறீர்களா?” என்று கேட்டவுடன் சற்றும் தயங்காமல் “இல்லை” என்று பதில் வந்தது சாரதா தேவியாரிடமிருந்து. “நான் ஏன் உங்களை கீழே இழுக்க வேண்டும்? நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் பாதையில் மேலும் முன்னேறிச்செல்லும்பொருட்டு பணிவிடை செய்வதற்காகவே நான் இங்கு வந்திருக்கிறேன்” என்றார் தெளிவாக. அவர் சொன்னது போலவே தன் மகான் கணவருக்கு உறுதுணையாக இறுதிவரை நடந்து கொள்ளவும் செய்தார். ஸ்ரீராமகிருஷ்ணரே ஒரு முறை தன் சீடர்களிடம் சாரதா தேவியாரைப் பற்றி சொல்லும்போது, தன்னுடைய கட்டுக்கடங்காத உணர்ச்சிப் பெருக்கை, ஒரு கட்டுக்குள் கொண்டுவந்தவர் என்றும் இல்லாவிட்டால் தாம் இன்னும் எங்கெல்லாம் அலைந்து திரிந்திருப்பேனோ தெரியாது என்றாராம். ஒரு வருடம் போல தக்ஷிணேசுவரத்தில் தங்கியிருந்த நாட்களில் கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் அவர் ஸ்ரீராமகிருஷ்ணருடன் ஒரே பஞ்சணையில் உறங்கும் வாய்ப்பு அமைந்தபோதும் அவர் எப்படி தன்னை இரத்தமும், சதையும் உள்ள ஒரு பிண்டமாகப் பார்க்காமல் ஒரு தெய்வீக உறவை மட்டுமே வரித்துக்கொண்டார் என்பதைக் கண்டுணர்ந்தார் சாரதா தேவியார். இருவருக்குமான இந்த தற்சோதனை முயற்சியில் சரீர சம்பந்தமான உறவை மீறிய ஒரு பரமானந்த நிலையை எட்டியிருந்தார்கள் அந்த மகாத்மாக்கள் என்றே சொல்ல வேண்டும். இந்த வகையில் கணவர் ஒரு ஆன்மீக குருவாகவும், மனைவி ஒரு சிறந்த சீடராகவும் தம் காலம் முழுவதும் வாழும் நிலைக்கு வந்தார்கள். ஆனால் இதோடு நின்றுவிடவில்லை திருவிளையாடல்கள்!

சாரதா தேவியார், தான் முதன் முதலில் ஸ்ரீராமகிருஷ்ணரின் பாதங்களைத் தொட்டபோது அவர் என்ன நினைத்தார் என்று கேட்டபோது, சாட்சாத் அந்த காளி தேவி அன்னையின் மறு உருவமாகவே தன்னை நினைத்ததாகச் சொன்னாராம். ஸ்ரீராமகிருஷ்ணரை, ஒரு கணவனாக, துறவியாக, ஆன்மிகக் குருவாக , அனைத்திற்கும் மேலாக தெய்வீக அன்னையாகவேக் கண்டார் சாரதா தேவியார். நகாபத் நகரத்தின் தென்புறம் மியூசிக் டவர் என்னும் இடத்தில் ஒரு சிறிய வீட்டில் வாழ்ந்து வந்தார் அன்னையார். அன்றாடம் விடியலில் மூன்று மணிக்குத் துவங்கும் அவர் பொழுது, அடுத்து கங்கையில் புனித நீராடி, பின் பகல் பொழுதுவரை (சில நேரம் மதியம் 1 மணிவரை) தியானத்தில் ஈடுபட்டிருப்பாராம். கோவிலில் பணிபுரிபவர்களே அன்னை தங்கியிருப்பதை அறிவோம் ஆனால் அவரைக் கண்டதில்லை என்பார்களாம். அந்த அளவிற்கு இருக்குமிடம் தெரியாமலே வாழ்ந்திருக்கிறார். ஸ்ரீ ராமகிருஷ்ணர் போதித்திருந்த மந்திரங்களை உச்சரித்துக்கொண்டும், அவர் காட்டிய பாதையில் உதவி நாடி வருவோருக்கு உதவி செய்துகொண்டும் வாழ்ந்திருந்தார்.

ஸ்ரீராமகிருஷ்ணரின் இறுதி நாட்களில் அவர் தொண்டையில் புற்று நோய் வந்து அவதிப்பட்டுக்கொண்டிருந்தபோது, ஒரு செவிலித்தாயாக அவர் அருகிலேயே இருந்து அவரைக் கண்ணுங்கருத்துமாக கவனித்துக் கொண்டவர், அவருடைய சீடர்களுக்கும் உணவு சமைத்துக்கொடுத்துக் கொண்டிருந்தார். 1886ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஸ்ரீராமகிருஷ்ணர் இறந்தபோது மங்கலக் கோலத்தைத் துறந்து கைம்பெண் கோலத்தை ஏற்க முடிவெடுத்தபோது, தம் அன்புக் கணவர் கூறிச்சென்ற, தாம் ஒரு அறையை விட்டு மற்றொரு அறைக்குத்தான் செல்லப்போகிறார் என்பதை நினைவில் கொண்டு அந்த எண்ணத்தைக் கைவிட்டார். ஒவ்வொருமுறை அவர் அதைப் பற்றி நினைக்கும் பொழுதெல்லாம் இந்த எண்ணமே அவரை தடுத்து நிறுத்தியது. வளர்ச்சியடைந்து கொண்டிருந்த ஆன்மீக இயக்கத்தில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார் அன்னை.

கணவர் தம்மை விட்டுப்பிரிந்த பதினைந்து நாட்களில் வட இந்தியாவில் ஆன்மீகப் பயணம் கிளம்பினார். அவருடன் அவருடைய பெண் சீடர்களான, சகோதரி இலட்சுமி, கோபால் மா மற்றும் ஸ்ரீராமகிருஷ்ணரின், பணியாட்கள், முக்கியமான சீடர்கள் போன்றோரும் அவருடன் சேர்ந்து கொண்டனர். அவர்கள் காசி விசுவநாதர் ஆலயம், அயோத்யா மற்றும் பிருந்தாவனம் ஆகிய இடங்களுக்குச் சென்றனர். பிருந்தாவனத்தில் அடி எடுத்து வைத்தவுடன் அன்னைக்கு நிர்விகல்ப சமாதி நிலை அனுபவம் வாய்க்க அங்கேயே அவர் குரு என்ற நிலைக்கு வந்தார். மகேந்திரநாத் குப்தா, யோகேன் போன்ற ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடர்களுக்கு மந்திரோபதேசமும் செய்து வைத்தார்.



தன்னுடைய புனித யாத்திரையை முடித்துக்கொண்ட பின்பு கமர்புக்கூர் இல்லத்தில் சில மாதங்கள் தனியாகத் தங்கியிருந்தார். தம் இறுதிக் கால தனிமையில் சில துன்பங்களை அனுபவித்தார். இதையறிந்த ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடர்கள் அன்னையை கொல்கத்தாவில் வந்து தங்கும்படி வேண்டிக்கொண்டதோடு, சுவாமி சாரதானந்தா அவர்கள் புனித அன்னைக்காக நிரந்தரமாக ஒரு இல்லமும் கட்டினார்கள். ஜெய்ராம்பதிக்குப் பிறகு அதிக காலம் அன்னையார் தங்கியிருந்த இல்லமும் இதுதான். ராமகிருஷ்ண மடத்தின் மாதாந்திர வங்காள மொழி இதழின் பெயரால் உத்போதன் இல்லம் என்று பெயர் சூட்டப்பட்டது. இங்குதான் அன்னையின் வழிகாட்டல் நாடி பலரும் வர ஆரம்பித்தனர்.

1906ம் ஆண்டில், சாரதா தேவியாரின் தாயார் சியாமசுந்தரி தேவி இறந்தவுடன் அந்தக் குடும்பத்தின் தலைமைப் பொறுப்பும் அவருக்கு வந்துசேர அதையும் சரியாகக் கவனித்துக்கொண்டார் . ஸ்ரீராமகிருஷ்ணரின் அறிவுரைப்படி அவருடைய சீடர்கள் அனைவரும் அவரைப்போலவே அன்னையையும் கண்டனர். ஒரு அன்னையின் பரிவும் பாசமும் முழுமையாகக் கிடைக்கப் பெற்றனர் அனைவரும். அன்னையைச் சந்தித்த பின்பு பலருக்கும் பலவிதமான அற்புத அனுபவங்கள் கிடைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். அவரைப் புகைப்படத்தில்கூட முன்பின் பார்த்தறியாதவர்கள் அன்னையை  தங்கள் கனவில் கண்டதாகக் கூறுவார்கள். தனக்கு குழந்தையே இல்லாவிட்டாலும் பல நல்ல ஆத்மாக்களை தன் சொந்தக் குழந்தைகளாகவே நேசிக்கும் வரம் பெற்றவர் அன்னை சாரதா தேவியார். சுவாமி விவேகானந்தர் மேலைநாடு சென்று திரும்பியவுடன், அவரைக் காண வந்த மேலை நாட்டினர் அனைவரும் அன்னையின் தரிசனம் பெறவும் விழைந்தனர். இரவும், பகலும் பலரும் அன்னையின் தரிசனத்திற்காக காத்திருக்க ஆரம்பித்திருந்தனர்.

ஜனவரி மாதம் 1919ம் ஆண்டில் புனித அன்னையார் ஜெய்ராம்பதிக்குச் சென்று ஓராண்டு காலத்திற்கும் மேலாக அங்கு தங்கியிருந்தார். அங்கு தங்கியிருந்த இறுதிக்காலத்தின் கடைசி மூன்று மாதங்கள் அவருடைய ஆரோக்கியம் மிகவும் மோசமானது. அதனால் பிப்ரவரி 27ம் நாள் 1920ம் ஆண்டில் மீண்டும் கொல்கத்தாவிற்கு அழைத்து வரப்பட்டார். அடுத்த ஐந்து மாதங்கள் தொடர்ந்து சிரமப்பட்டார். தன் இறுதி நேரத்தில் தன் சீடர்களுக்கு அவர் சொன்ன முக்கியமான செய்தி இன்றளவும் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

“உங்களுக்கு ஒன்று சொல்கிறேன் – மன நிம்மதி வேண்டுமானால், அடுத்தவரிடம் குறை கண்டுபிடிக்காதீர்கள். அதைவிடுத்து உங்கள் தவறைப் பாருங்கள். மொத்த உலகையும் உங்கள் சொந்தமாக்கிக்கொள்ளப் பழகுங்கள். எவருமே அந்நியர் அல்ல என் குழந்தையே: இந்த மொத்த உலகமும் உங்கள் சொந்தம்!”.

இதுதான் புனித அன்னையாரின் உலக மாந்தருக்கான இறுதி உபதேசமாக இருந்தது. ஜூலை மாதம் 1920ம் ஆண்டில், விடியற்காலையில் 1.30 மணியளவில் அன்னையின் உயிர் இப்பூவுடலை விட்டு நீங்கியது. பேலூர் மடத்தில் அவருடைய இறுதிச் சடங்குகள் நடந்தன. அநித்திய உலகிலிருந்து நித்தியத்தின் பேரானந்தத்தை அடைந்தார் அன்னை சாரதா தேவியார்.

படங்களுக்கு நன்றி:

http://vedantasacto.org/photos/holy-mother-sarada-devi-photos/

2 comments:

  1. மிகப்பெரிய கட்டுரை. இருப்பினும் மிகவும் அருமையான விஷயங்கள்.

    வல்லமை தீபாவளிச் சிறப்பிதழில் வெளிவந்துள்ள மிகவும் வல்லைமை வாய்ந்தக் கட்டுரைக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete