முயல் ஆமை கதைதான் நினைவிற்கு வருகிறது. ஒரு காலத்தில், வெளிநாட்டவர் மட்டுமன்றி, வெளிநாட்டுவாழ் பெரும்பாலான இந்தியர்கள் கூட நம் இந்தியாவை அசுத்தமான நாடு என்று கேவலமாகப் பேசி அவமானப்படுத்தியதையும் மறக்கமுடியாது. நமது பிரதமர் வீடு தோறும் கழிவறை இருக்கவேண்டும், பொது இடங்களை மக்கள் கழிப்பிடங்களாக்கக்கூடாது என்று உறுதியெடுத்து தீவிரமாகச் செயல்படுத்தியதில், அதில் ஓரளவிற்கு வெற்றியும் கண்டுள்ளோம். 4, 5 ஆண்டுகளுக்கு முன்புகூட கிராமங்களிலும், நகர்ப்புறங்களிலும், பொது இடங்களை கழிப்பிடமாகப் பயன்படுத்தி வந்தது பழக்கத்தில் இருந்து வந்துள்ளது. இன்று நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளிலும் பொது இடங்களில் சிறுநீர் கழிப்பது குற்றச் செயலாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கட்டுப்பாடுகளுக்கு ஒத்துழைக்கும் நம் மக்கள் அதை எளிதாகப் பழக்கத்திற்குக் கொண்டு வந்துவிட்டனர். இன்று கொரொனா புண்ணியத்தால் பொது இடங்களில் எச்சில் உமிழ்வதும் குற்றமாக்கப்பட்டு அதுவும் பழக்கத்திற்கு வந்துவிட்டது. நமது நகராட்சி, மாநகராட்சிகளும் தூய்மையான கழிவறைகளை அமைத்துவிட்டால் தூய்மையான இந்தியாவை விரைவில் காணப்போவது உறுதி. வளர்ந்த ஐரோப்பிய நாடுகளான பிரான்சு, இத்தாலி, இசுபெயின், அமெரிக்கா, ஈக்குவேடர் போன்ற நாடுகளின் இன்றைய நிலைமையைக் காணும்போது அதிர்ச்சியாக உள்ளது. நம் இந்தியாவைப் பொருத்தவரை தற்போதைய இந்தக் கட்டுப்பாடுகளை தொடர்ந்து கடைபிடித்து வந்தாலே தூய்மையான நோயற்ற இந்தியாவாக இருப்பது உறுதியாகும்.
Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts
Thursday, April 30, 2020
கொரோனா கொடுமை 7
கொரோனா தொற்று உயிர் காக்கும் மருத்துவமனைகளின் மனிதாபிமானத்தையுமா கொன்று போட்டுவிடும்? சில நாட்கள் முன்பு ஈரோட்டின் ஒரு பெரிய தனியார் மருத்துவமனையில் இந்தக் கொடுமை நடந்துள்ளது. மேட்டூரைச் சேர்ந்த ஒரு எலக்ட்ரீசியனின் 7 வயது மகனுக்கு ஆஸ்துமா பிரச்சனை இருந்துள்ளது. கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக அந்த மருத்துவமனையில்தான் அந்தக் குழந்தைக்கு இதே பிரச்சனைக்காக மருத்துவம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் அந்தச் சிறுவனுக்கு நேற்று திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட அதே மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள். அவர்கள் மருத்துவம் பார்க்க முடியாது என்று திருப்பியனுப்பியிருக்கிறார்கள். பெற்றோர் எவ்வளவோ மன்றாடியும், கெஞ்சியும் குழந்தைக்கு மருத்துவம் பார்க்க மறுத்துவிட்டனர். பின்னர் அச்சிறுவனை வேறு ஒரு தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றபோது, வழியிலேயே உயிர் பிரிந்துள்ளது. என்ன கொடுமை இது ... இந்த அவசரமான பேரிடர் காலத்தில் அரசாங்கம் இதற்கெல்லாம்கூட பொறுப்பேற்க முடியுமா .. இவர்களெல்லாம் எதற்கு மருத்துவமனை நடத்துகிறார்கள்? சுயநலப் பேய்கள் ... திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது .
Wednesday, January 22, 2020
தாமஸ் கார்லைல் தன்னம்பிக்கை
எந்த சக்தியும் படைப்பாற்றலின் குறுக்கே தடையாக நிற்கவியலாது என்பதற்கு சிறந்த உதாரணம் - தாமஸ் கார்லைல் என்ற பிரித்தானிய வரலாற்றாசிரியர், எழுத்தாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர், தத்துவவாதி, கணிதவியலாளர். (திசம்பர், 04, 1795 - பிப்ரவரி, 05, 1881)
அவரது படைப்புகளில் மிக முக்கியமானது, பிரஞ்சுப் புரட்சி, 3 தொகுதிகள். The French Revolution, 3 vol. (1837), (1858-65)
இந்த பிரெஞ்சுப் புரட்சி நூலின் முதல் தொகுதியின் முழுமையான கையெழுத்துப் பிரதியை சிறப்பாக முடித்துவிட்ட மன நிறைவில் அதனை தனது நண்பரான தத்துவஞானி ஜான் ஸ்டூவர்ட் மில் என்பவரிடம் கருத்தைப் பெறுவதற்காகக் கொடுத்துள்ளார். அவர் அதை வாசிக்க ஆரம்பிப்பதற்குள்ளாகவே அவருடைய பணிப்பெண், அதன் மகத்துவம் குறித்து அறியாதவர், தற்செயலாக அதை வெண்ணீர் காய்ச்சுவதற்காக எரித்துவிட்டார். இதனால் மனமுடைந்து விரக்தியில் சில நாட்கள் கழிந்த பின்னர், கார்லைல் ஒரு நாள் தன் இல்லத்தின் சாளரம் வழியாக கட்டிடம் கட்டும் தொழிலாளர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவர்கள் அந்த செங்கல் கட்டிடங்களை அடுக்கடுக்காக மீண்டும், மீண்டும் அடுக்கிக் கொண்டிருப்பதைக் கண்டவரின் எண்ணத்தில் ஒரு புத்துணர்வு தோன்றியது. விரக்தியான மனநிலையிலிருந்து மீண்டு வந்தவர், முதல் பகுதியை மீண்டும் எழுதுவதற்கு முன்பு இரண்டாவது மற்றும் மூன்றாவது தொகுதிகளை புதிதாக எழுதினார். அந்தக் காலத்தின் வரலாற்று படைப்புகளில், மிகச் சிறந்ததாகக் கருதப்பட்ட இவருடைய இந்த படைப்புக்கு மிகுந்த வரவேற்பு இருந்தது.
கார்லைலின் பாணி மிகவும் வித்தியாசமாகவும், சிறப்பியல்புடையதாகவும் இருந்தது. இயல்பான நாவலாசிரியரின் அல்லது வரலாற்றாசிரியரின் பாணியில் இல்லாமல், இரண்டிலிருந்தும் வேறுபட்ட கூறுகள் இருந்தபோதிலும். அவர் கண்களுக்கு முன்பாக நிகழ்ந்த நிகழ்வுகளைப் பற்றி கருத்து தெரிவிப்பது போலவும், சில வரலாற்று கதாபாத்திரங்களை நேரடியாகவும் தெளிவாகவும் அணுகிய வகையில் எழுதினார். இதனாலேயே ஏனைய மற்ற வரலாற்றாசிரியர்களிடம் ஆழ்ந்த விரோதப் போக்கை வளர்த்துக் கொண்டார். தொழில்முறை வரலாற்றாசிரியர்களின் தனிப்பட்ட புறநிலைத்தன்மை அவருடைய எழுத்துக்களில் இல்லை என்பதே அவருடைய தனித்தன்மை மற்றும் சிறப்பு!
Tuesday, November 19, 2019
செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.
செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.யின் நினைவு நாள் இன்று.
விடுதலைப் போராட்டவீரர் உயர்திரு எஸ்.பி. வெங்கடாசலம் தமது சுயசரிதையில் ..... (”இப்படிக்கு நான்” என்ற தலைப்பில் என் எழுத்து வடிவில் )
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்கள் வெள்ளைக்காரனுக்குப் போட்டியாக ‘இந்தியன் ஸ்ட்ரீம் நேவிகேஷன் கம்பெனி (Indian Stream Navigation Company) என்று ஒரு கப்பல் கம்பெனியை ஆரம்பித்த நேரத்திலேயே, எனது பாட்டனார் திரு. சீரங்க முதலியார், 1000 ரூபாய் கொடுத்து, கப்பல் கம்பெனியின் பங்குதாரராகத் தன்னை இணைத்துக்கொண்டார். அந்தக் கப்பல்
கம்பெனி தூத்துக்குடிக்கும், இலங்கைக்குமான சுதேசிக் கப்பலை இயக்கி, வெள்ளைக்காரக் கப்பல் கம்பெனியை முடமாக்கியது. இந்த நிலையில் வ.உ.சி., சுப்ரமணிய சிவா, பாரதியார் போன்றவர்கள் திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்புப் பிரச்சாரத்தை மிகத் தீவிரமாக நடத்தி வந்தார்கள். அவர்களின் வந்தே மாதரம் என்னும் கோஷம் பட்டி தொட்டியெல்லாம் எதிரொலிக்கச் செய்தது. இதனால் ஆத்திரமடைந்த மாவட்டக் கலெக்டர் ஆஷ்துரை ராஜதுவேஷ வழக்கில் கைது செய்து இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்புக்கூற காரணமாக இருந்தார். ஒரு மனிதனுக்கு ஒரு ஆயுள்தான். ஆனால் வெள்ளை ஆட்சி இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது விசித்திரமானது. இவர்கள் சிறையில் இருக்கும்போது
இந்திய நீராவிக் கப்பல் கம்பெனியின் பங்குதாரர்களை மிரட்டி பங்குகளுக்கு அதிக பணம் தருவதாகக் கூறியும், மிரட்டியும் பெரும்பான்மையான பங்குகளை வாங்கிய பிரிட்டிஷ் கப்பல் கம்பெனி வ.உ.சி. தொடங்கிய சுதேசியக் கப்பல் கம்பெனியை மூடிவிட்டது. இந்தக் காலகட்டத்தில்தான் சீரங்க முதலியாரின் பங்குகளையும் அதிக விலைக்குக்கேட்டு, பிரிட்டிஷ் கப்பல் கம்பெனி முகவர்கள் விலை பேசினர். ஆனால் அவர் அந்த பங்குகள்
தேசபக்தியின் அடையாளச் சின்னங்கள் என்று கூறி விற்க மறுத்துவிட்டார். அந்தப் பங்குகள் நீண்டகாலம் மீனாட்சிசுந்தரம் அவர்கள் வசம் இருந்தது. . இந்த தேசபக்தி என் தந்தைக்கும், சித்தப்பாவிற்கும், என் அண்ணனுக்கும் உண்டு. அது எனக்கும் தொடர ஆரம்பித்தது. மீனாட்சி சுந்தரம் முதலியார் அவர்கள், பெரியாரோடு தொடர்பு ஏற்படுத்தி, பி.ஏ. பட்டப்படிப்பு முடித்தவுடன் காங்கிரசில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்கள்.
Saturday, June 29, 2019
அமெரிக்க மோகம்?
அமெரிக்க மோகம் இன்னும் எவ்வளவு காலம்தான் மக்களை ஆட்டிப் படைக்கப்போகிறதோ தெரியவில்லை. சால்வடார் எனும் நாட்டின், சான் சால்வடார் எனும் இடத்தைச் சேர்ந்த 25 வயதான ஆஸ்கர் ஆல்பர்டோ மார்ட்டின் ரமிரேஷ், டனியா வனீசா தம்பதியின் இரண்டு வயது மகள் வலேரியா. சொந்த வீடு வாங்க ஆசை வந்ததால் வந்த வினை அமெரிக்கா நோக்கிச் சென்று கைநிறைய சம்பாதிக்கலாம் என்ற கனவில் பக்கத்து நாடான மெக்சிகோவில் குடியேறி அங்கிருந்து அமெரிக்கா செல்ல அனுமதிக்குக் காத்திருந்து, கிடைக்காததால், கள்ளத்தனமாக மெக்சிகோ ரியோ கிராண்டே ஆற்றை நீந்திக்கடந்து அமெரிக்காவின் டெக்சாசு மாகாணம் பிரவுண்வில்லே நகரில் நுழையத் திட்டமிட்டுள்ளார். மகளை முதுகில் சுமந்தபடி நீந்தி ஆற்றைக் கடந்து வந்தவர், மகளை விட்டுவிட்டு மனைவியை அழைத்து வர எத்தனிக்க தந்தையை விட்டுப்பிரிய அஞ்சிய குழந்தை கதறியழுது, ஆற்றில் இறங்கியிருக்கிறது. குழந்தை ஆற்றில் வெள்ளத்தில் அடித்துச் செல்ல காப்பாற்ற முயன்றவர் தானும் வெள்ளத்தில் சிக்கி இழுத்துச் செல்லப்படும் கொடுமையை மறு கரையிலிருந்து பார்த்து அதிர்ந்திருக்கிறார் மனைவி .. தந்தையின் கழுத்தை இறுக்கிக் கட்டிக்கொண்டிருந்தவாறு சட்டைக்குள் இருந்த குழந்தையுடன் இருவரின் உடல்களும் கரை ஒதுங்கியிருந்த கொடுமையான காட்சியைக் கண்டு உலகே இன்று கண்ணீர் சிந்துகிறது .. சமூக வலைத் தளங்களில் வைரலாகப் பரவிக் கொண்டிருக்கும் இந்தப் புகைப்படம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது ..
இந்த ரியோ கிராண்டே ஆற்றில் இந்த ஆண்டில் மட்டும் 322 பேருக்கும் மேல் உயிரிழந்துள்ளனர். முதன் முதலாக வட அமெரிக்கா உயிரினங்களே இல்லாத பனிபடர்ந்த பிரதேசமாகத்தான் இருந்துள்ளது. சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு சீனா அல்லது சப்பான் நாட்டைச் சேர்ந்தவர்களே முதலில் குடியேறியவர்கள் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அங்கு கிடைத்துள்ள மிகப்பழமையான எலும்புக் கூட்டை ஆய்வு செய்ததில் இந்தத் தகவல் கிடைத்துள்ளது. அதன் பிறகுதான் மெல்ல மெல்ல ஆரம்பித்து இன்று அசுர வளர்ச்சி கண்டுள்ளது. இந்தியா சுதந்திரம் பெற்ற 1947 இல் இந்தியாவின் 1 உரூபாய் என்பது அமெரிக்க டாலரை விட அதிக மதிப்பு வாய்ந்ததாக இருந்தது. அதன் பிறகு 1 உரூபாய்க்கு 1 டாலர் என்றானது. இன்று கிட்டத்தட்ட 77 உரூபாய் கொடுத்தால்தான் நமக்கு ஒரு அமெரிக்க டாலர் கிடைக்கும். உழைப்பால் உன்னதம் பெற்று சொர்க்க பூமியாக அவரவர் வாழும் இடத்தையே உருவாக்குதலே நிரந்தரம் என்பதை உணர வேண்டும் ....
Monday, April 22, 2019
மக்களாட்சி?
பிரித்தானிய நாடாளுமன்ற மரபுகளை ஒட்டியே நம் இந்திய நாடாளுமன்ற நடைமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
தேசிய அரசும் உள்ள இங்கிலாந்தில், தேர்தலில் எந்தக் கட்சியும் அருதிப் பெரும்பான்மை பெறாவிட்டால், மற்ற கட்சிகளோடு இணைந்து தேசிய அரசு அமைக்கப்படும். இதில் முக்கியமான விசயம் குதிரை பேரத்திற்கு வாய்ப்பு கிடையாது. அந்தந்த கட்சிகள் வாங்கிய வாக்கு சதவிகிதத்திற்கு ஏற்ப அமைச்சரவைப் பொறுப்புகள் வழங்கப்படுகின்றன. இதிலும் தனி நபர்களை விட அந்தந்தக் கட்சியே கருத்தில் கொள்ளப்படும். இங்கிலாந்தில் போர்க்காலங்களிலும், அவசரக் காலங்களிலும் இது போன்ற அரசுகள் உருவாக்கப்படுகின்றன.
நம் நாட்டில் ஒருவேளை மக்கள் தொங்கு பாராளுமன்ற அமைப்பை விரும்பிவிட்டால் நமது அரசின் நிலை என்னவாக இருக்கும்? அதாவது எந்தக் கட்சிக்கும் அருதிப் பெரும்பான்மை வாக்குகள் கிடைக்காமல் போனால் தொங்கு பாராளுமன்றம் அமையும்! பின் குதிரைப் பேரம் தான் நடக்கும். தனிப்பெரும் கட்சியாக இருந்தாலும், அதை உடைத்தும், சிறு கட்சிகளை விலைக்கு வாங்கவும் திறமையுள்ளவர்கள் ஆட்சி அமைத்துவிடுவார்கள். இது மக்களாட்சியின் சரியான நிலையா?
#டவுட்டு
Friday, April 19, 2019
நமது நாட்டிற்கும் இது சரிவருமோ?
ஒரு அரசோ அல்லது தொழிலகமோ எந்த நிர்வாகமாகவோ இருந்தாலும் அதன் வெற்றி, தோல்வி என்பது அதன் நிர்வாகிகளின் நிர்வாகத் திறன் சார்ந்ததாகத்தான் உள்ளது. அந்த வகையில் உலகில் மக்கள் தொகை மிக அதிகமாக உள்ள சீனாவில் தொழிலாளர் தட்டுப்பாடு பிரச்சனை மிக அதிகம். அந்த நாட்டின் மிகப்பெரிய தொழிலதிபர் ஒருவர் இதனை சமாளித்து சரி செய்வதற்காக ஒரு நாளைக்கு 12 மணி நேர வேலைத் திட்டம் என்பதை தீவிரமாக சிந்தித்து செயல்படுத்த ஆரம்பித்துள்ளார்.
தமிழ் நாட்டில் திருப்பூர், கோவை, ஈரோடு, உடுமலைப்பேட்டை, பல்லடம், போன்ற தொழில் நகரங்களில் அந்தந்த தொழிலுக்குரிய தொழிலாளர்கள் கிடைக்காத பிரச்சனை பெருமளவில் உள்ளன. 50% தொழிலாளர்களை மட்டுமே வைத்துக்கொண்டு தொழிலை சரிவர நடத்த முடியாத நிலையே பெரும்பாலும் உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கங்காணிகள் மூலமாக நமது தமிழர்கள் சிலோன், மலேசியா, பர்மா போன்ற நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டது போல இன்று பீகார் மற்றும் வட மாநிலங்களிலிருந்து ஏஜண்டுகள் மூலமாக ஆட்கள் அழைத்து வரப்படுகின்றனர். அதிலும் ஆட்கள் கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு உள்ளதை சரி செய்ய முடிவதில்லை. தேவைப்படும் தொழிலாளர்களை முன்கூட்டியே பதிவு செய்து வைத்தாலும், அந்த அளவிற்கு பணியாட்கள் கிடைப்பதில்லை. அதுவும் ஹோலி போன்ற வட நாட்டுப் பண்டிகைகள் சமயங்களில் 2, 3 மாதங்கள் வேலைக்கு வராமல் சொந்த ஊர் பார்க்கப் போய்விடுவார்கள்.
இந்தியாவில் சம வளர்ச்சி, சம வேலை வாய்ப்புகளும் இன்றும் கேள்விக் குறியாகவே உள்ளது. பீகார், இராஜஸ்தான், உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம், அரியானாவின் சில பகுதிகள், போன்றவைகள் இன்றும் சரியான வளர்ச்சியடைந்த மாநிலங்களாக இல்லை. அங்குள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன அல்லது வாய்ப்புகளே இல்லை என்றுதான் கூற முடிகிறது. இந்த மாநிலத்தைச் சார்ந்தவர்கள் வேலைக்காக மகாராட்டிரத்தையும் கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டையும் சார்ந்தே இருக்க வேண்டியுள்ளது. ஆனாலும் குடும்பத்தை விட்டு அவர்களும் எவ்வளவு காலம்தான் விடுமுறை எடுக்காமலே வெளியில் தொடர்ந்து பணியாற்ற முடியும்.
சீன தொழிலதிபரின் திட்டம் போன்று நமது மேற்கு மண்டல தொழிலதிபர்களும் 12 மணி நேர வேலை என்ற திட்டம் பற்றி சிந்தித்து அதற்கான முயற்சி எடுக்கலாம். அதே சமயம் மத்திய, மாநில அரசுகளும் சம வளர்ச்சியும், சம வாய்ப்புகளும் ஏற்படுத்தக் கூடிய செயல் திட்டங்களை முன்னெடுத்தால் நலம் கூடுவதோடு நாட்டின் வளமும் பெருகும்!
Thursday, December 21, 2017
தமிழ் இசைக் கல்வெட்டு
கொங்கு நாட்டின் மிகச்சிறப்பான ஒரு விசயம் என்றால் அது உலகின் முதல் தமிழ் இசைக்கல்வெட்டு!
ஈரோடு மாவட்டம், ஈரோடு – காங்கேயம் பாதையில் 12 கல் தொலைவில், அரச்சலூரில், அவல்பூந்துருத்திக்கு அருகில் அமைந்துள்ள பாண்டியர் குழி என்ற இடத்தில் உள்ள கற்குகையில் அமைந்துள்ளது அற்புதமான இந்த தமிழ் இசைக் கல்வெட்டு . இதன் அருகில் ஒரு, ஆண், பெண் உருவங்கள் பொறிக்கப்பட்ட கல்லும் உள்ளது. இதனைப்பற்றிய ஆய்வுகளும் மேற்கொள்ளப்படவேண்டும் என்கிறார் கல்வெட்டறிஞர் புலவர் இராசு அவர்கள்.
இந்தக் கல்வெட்டை முதலில் 1961 ஆம் ஆண்டில் கண்டு பிடித்தவர் கல்வெட்டறிஞர் புலவர் இராசு அவர்கள். கி.மு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கண்டறியப்பட்ட இந்தத்.தமிழ் கல்வெட்டு தொன்மைக்கால தமிழி எனும் எழுத்து பிற்காலத்தில் வட்டெழுத்தாக உருமாற்றம் பெற்றுள்ளதையும், , இசைத்தாள வரிசையைப் பதியும் முதல் ஆவணமாகவும் திகழ்கிறது. சங்ககாலத்திலேயே தமிழர்கள் தமிழிசைக் குறியீடுகளில் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பதும் உறுதியாகிறது. இது சிலப்பதிகாரம் சொல்லும் சதுரப்பாலையைச் சார்ந்த இசைக்குறிப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது.
பல்லடம் – காளிவேலம்பட்டியைச் சேர்ந்த தூரன் சு. வேலுச்சாமி என்பவர் இதனை ஆவணப்படமாக எடுக்க முயற்சி எடுத்துக்கொண்டுள்ளதும், இவர் ஏற்கனவே பெரியார் மற்றும் ராமானுஜர் ஆகிய திரைப்படங்களுக்கு களப்பணிகள் செய்துள்ளவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. என் ‘கடைச்சங்கத்தில் கொங்கு கலாச்சாரம்’ என்ற நூல் பற்றிய சுவையான கலந்துரையாடலும் சிறப்பாக அமைந்தது.
Thursday, October 26, 2017
சூரசங்காரம்!
நேற்று பழனி மலை முருகன் தங்க மயில்வாகனனாக அற்புதக்காட்சி!
முருகப்பெருமான் தாரகாசுரனை வதம் செய்ய 18 ஆண்டுகள் தேவைப்பட்டதா? அவ்வளவு பலம் வாய்ந்தவனா அவன்? இல்லை அவன் திருந்தி நல்வழிப்பட பொறுமையாகக் காத்திருந்து அவன் திருந்தி வாழ வாய்ப்பும் அருளுகிறார் . பொறுமை கடலினும் பெரிது என்பதையும் விளங்கச்செய்கிறார்.
ஆறுமுகனின் திருவிளையாடல்களுள் ஒன்றான சூரசங்காரம் என்பது ஒரு குறியீடு. ஆணவம் எனும் அசுரனை அழித்து நம்மையெல்லாம் ஆற்றுப்படுத்தும்பொருட்டு சக்தி அம்சமாக எழுந்தருளும் முருகப்பெருமானுக்கு திருமுகங்கள் 6, படைவீடுகள் 6, வளர்த்தெடுத்த கார்த்திகைப்பெண்கள் 6 , சரவணபவ எனும் திருமந்திரமும் 6 எழுத்து.
Tuesday, December 6, 2016
சோ ராமசாமி அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்
மூத்த பத்திரிக்கை ஆசிரியர், எழுத்தாளர், அரசியல் சித்தாந்தவாதி, நகைச்சுவை நடிகர், நாடக ஆசிரியர், வழக்கறிஞர் திரு.சோ ராமசாமி அவர்கள் இன்று அதிகாலை (07/12/2016) நம்மைவிட்டுப் பிரிந்துள்ளது மிகவும் வேதனைக்குரிய விசயம். எழுத்துலகில் தனக்கென ஒரு தனிப்பாணியை உருவாக்கி மக்களை தட்டியெழுப்பிய அரசியல் சிந்தனைவாதி, உயர்திரு சோ அவர்களின் முகமது பின் துக்ளக் என்ற நாடகம் தமிழகத்தின் பட்டி தொட்டிகளெல்லாம் பரவி அரசியலில் ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியது என்றால் அது மிகையில்லை. இந்த நாடகம் பின்னர் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. அவருடைய எழுத்துகள் போலவே இந்த நாடகமும் மக்களிடையே பன்மடங்கு எழுச்சியை ஏற்படுத்தியது. பத்திரிக்கைத் துறையில் அவர் ஆற்றிய பணிக்களுக்காக 1986ஆம் ஆண்டு வீரகேசரி விருதும், 1994ஆம் ஆண்டு கொயங்கா விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அன்னாரது ஆன்மா சாந்தியடையவும், அவர்தம் குடும்பத்தாரும், இரசிகர்களும் மனம் அமைதி பெறவும் எல்லாம் வல்ல கூத்தப்பெருமானை இறைஞ்சுகிறோம்.
Thursday, July 9, 2015
தல விருட்சம்
பவள சங்கரி
அனைத்து கோவில்களிலும் தல விருட்சம் என்று இருக்கிறதே. அதன் தாத்பரியம் என்ன என்று தெரியுமா? ஆதி காலத்தில் நம் முன்னோர்கள் காடுகளில் குடில் அமைத்து கூட்டமாக வாழ்த்து வந்தனர். பெரிய கட்டிடங்கள் எல்லாம் இல்லை. அந்த காலத்தில் மரத்தினடியில் இறை உருவை எழுந்தருளச் செய்து வழிபட்டு வந்தனர். பின்னர் நாகரீக வளர்ச்சியில், காடுகள், நாடு, நகரமாகவும் மாறி, கட்டிட அமைப்புகளும் உருவாக ஆரம்பித்தன. பிரம்மாண்டமான ஆலயங்களும் உருவாயின. மரத்தடியில் இருந்த தெய்வச் சிலைகள் ஆலயங்களில், மூலத்தானத்தில் வைக்கப்பட்டபோது, ஆண்டவனுக்கு அடைக்கலமான மரங்கள் தல விருட்சங்களாக பாதுகாக்கப்பட்டு வருவதாக ஐதீகம்.... சுவையான தகவல் அல்லவா?
சிவன் கோவிலில் பெரும்பாலும் வில்வ மரங்களே தல விருட்சமாக இருக்கும்.
Subscribe to:
Posts (Atom)
பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 43
63 நாயன்மார்கள் வரலாறு – 37 கூற்றுவ நாயனார் குன்றாத புகழாளர் களந்தை வேந்தர் கூற்றுவனார் மாற்றலர்மண் கொண்டு சூடப் பொன்றாழு முட...
-
விடியற்காலை....பிரம்ம முகூர்த்த வேளை. தியானத்திற்கான அருமையான நேரம். வஜ்ராசனத்தில் பயிற்சிகள் முடித்து, சுகாசனத்தில் ப்ரணாயாமம் ..............
-
கண்ணதாசனின் ‘சேரமான் காதலி' (சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்) தமக்கென ஒரு உலகைப் படைத்துக்கொண்டு அதில் தாமே சக்கரவ...





